சங்க இலக்கியத் தாவரங்கள்/065-150

பிடவம்
ரண்டியா மலபாரிகா (Randia malabarica, Lam.)

‘பிடவம்’ என்பது ஒரு வலிய புதர்ச்செடி. இதன் புறத்தில் முட்கள் நிறைந்திருக்கும்: கார்காலத்தில் இதன் மலர்கள் கொத்தாகப் பூக்கும். பூங்கொத்து நிலவைப் போன்று வட்டமாகத் தோன்றும். மலரின் நறுமணம், கானமெல்லாம் கமழும்.

சங்க இலக்கியப் பெயர் : பிடவம்
சங்க இலக்கியத்தில் வேறு பெயர்கள் : பிடா, பிடவு
உலக வழக்குப் பெயர் : புதவு, புடன்
தாவரப் பெயர் : ரண்டியா மலபாரிகா
(Randia malabarica, Lam.)

பிடவம் இலக்கியம்

கபிலர் குறிஞ்சிப் பாட்டில் ‘குல்லைபிடவம் சிறுமாரோடம்’ (குறிஞ். 78) என்று இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது பிடா, பிடவு எனவும் பெயர் பெறும். தொல்காப்பியர் உயிர் மயங்கு இயலில் இதனைப் ‘பிடா’ என்று குறிப்பிடுகின்றார்.

“யாமரக்கிளவியும் பிடாவும் தளாவும்
 ஆமுப் பெயரும் மெல்லெழுத்து மிகுமே

-தொல். எழுத்து. 7 : 27

சங்க இலக்கியங்கள் இதனைப் ‘பிடவம்’ என்று கூறுகின்றன. இது ஒரு புதர்ச்செடி.இதனைக் ‘குறும்புதல்’ எனவும் ‘முடக்கால் பிடவு’ எனவும் கூறுவர்.

“குறும்புதற் பிடவின் நெடுக்கால் அலரி-அகநா. 154 : 5

இதன் அடிமரம் கதிரவன் வெம்மையில் உலர்ந்து போய் இருந்தது என்றும், கார்காலத்தில் மழை பெய்யத் தொடங்கியதும் தளிர் விட்டு அரும்பீன்றது என்றும், இப்புதர்ச் செடியின் புறத்தில் முட்கள் நிறைந்திருக்கும் என்றும் கலித்தொகை கூறுகிறது.

“தளிபெறு தண்புலத்துத் தலைப்பெயற்கு அரும்பீன்று
 முளிமுதற் பொதுளிய முப்புறப் பிடவமும்”
-கலி. 101 : 1-2

தொல்காப்பியத்தில் பிடவம், யாமரத்தோடும், தளவங் கொடியுடனும் இணைத்துப் பேசப்படுகின்றது. பிடவின் குறும் புதரின் படர்ந்த தளவின் கொடியுடன், இது கார்காலத்தில் பூக்கும் வண்டு வாயவிழ்க்க மாலையில் பூக்கும்.

இதன் வெண்ணிற மலர்கள் கொத்தாகப் பூக்கும். இப்பூங்கொத்து நிலவைப் போல, வட்ட வடிவாகத் தோன்றும். தொடுத்த கண்ணி போலவும் காணப்படும். மலர் நறுமணம் உடையது.

இதனுடைய மணம், கானம் எல்லாம் கமழும். இதன் அரும்பு கூரியது. மகளிரின் பற்களைப் போன்றது.

“பிடவம் மலரத் தளவம் நனையக்
 கார்கவின் கொண்ட கானம் ”
-ஐங். 499 : 1-2

“வண்டு வாய்திறப்ப விண்ட பிடவம்
 மாலை அந்திமால் அதர் நண்ணிய”
-நற். 238 : 3-4

“வான்பிசிர்க் கருவியின் பிடவு முகைதகைய
 கான்பிசிர் கற்ப கார் தொடங்கின்றே”
-ஐங். 461

“கண்ணகன் இருவிசும்பில் கதழ்பெயல் கலந்துஏற்ற
 தண்ணறும் பிடவமும் தவழ்கொடித் தளவமும்”

கலி. 102 : 1-2
“. . . . . . . . . . . . மாலைக்
 குளிர்கொள் பிடவின் கூர்முகை அலரி
 வண்டு வாய்திறக்கும் தண்டா நாற்றம்”

அகநா. 183 : 10-12
“. . . . . . . . . . . . நிலவு எனத்
 தொகுமுகை விரிந்த முடக்காற் பிடவின்
 வைஏர்வால் எயிற்று ஒண்ணுதல் மகளிர்”
-அகநா. 344 : 2-4

“கான்யாறு தழீஇய அகல்நெடும் புறவில்
 சேண்நாறு பிடவமொடு பைம்புதல் எருக்கி”

(எருக்கி-வெட்டி) -முல்லைப்பா. 24-25



“சிறுகரும் பிடவின் வெண்தலைக் குறும்புதல்
 கண்ணியின் மலரும் தண்நறும் புறவில்”
-அகநா. 34 : 1 -2

“வெண்பிடவு அவிழ்ந்த வீகமழ் புறவில்”-அகநா. 184: 7

“புதல்மிசைத் தளவின் இதல்முட் செந்நனை
 நெருங்குகுலைப் பிடவமொடு ஒருங்கு பிணிஅவிழ
 காடே கம்மென்றன்றே”
-அகநா. 23 : 3-5

“போதவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்த கவினிப்
 பூவணி கொண்டன்றால் புறவே”
ーஐங். 412 : 3-4

“கடத்திடைப் பிடவின் தொடைக்குலைச் சேக்கும்”
-பதிற். 66 : 17


முல்லை நிலப் பூக்களான முல்லை. காயா, கொன்றை, பிடவம், தளவம் எல்லாம் நெய்தலொடும், பூவணி செய்து கவின் கொளப் பூத்த கானம் கம்மென்று நறுமணம் கமழ்ந்தது என்பர்.

“காயா, கொன்றை நெய்தல் , முல்லை
 போதவிழ் தளவமொடு பிடவுஅலர்ந்து கவினிப்
 பூவணி கொண் டன்றால் புறவே”
-ஐங். 412 : 1-3

“நன்றே காதலர் சென்ற ஆறே
 நிலன் அணி நெய்தல் மலர
 பொலன்அணி கொன்றையும் பிடவமும் உடைத்தே”

-ஐங். 435


தலைவன் கூறிச் சென்ற கார்காலம் வந்த பொழுது, தலைவி வருந்த, தோழி ‘இது கார்காலமன்று; பட்டது வம்பு’ என்று கூறியதாக அமைந்தது பின் வரும் பாடல்.

“மடவ வாழி மஞ்ஞை மாயினம்
 கால மாரி பெய்தென அதனெதிர்
 ஆலலும் ஆலின பிடவும் பூக்தன.
 காரன்று இருளை தீர்க நின்படரே
 கழிந்த மாரிக்கு ஒழிந்த பழநீர்
 புதுநீர் கொளீஇய உகுத்தரும்
 நொதுமல் வானத்து முழங்கு குரல்கேட்டே”
-குறுந். 251

இம்மலரின் பெயரால் ஓர் ஊர் உளது. அதற்குப் பிடவூர் என்று பெயர். சோழ நாட்டில், உறையூருக்குக் கிழக்கே உள்ளது . அவ்வூர்த் தலைவன் நெடுங்கை வேண்மான். அவனால் இவ்வூர் காக்கப்பட்டு வந்தது. இச்செய்தியை நக்கீரர் கூறுகின்றார்.

“. . . .. . . .. . . . உறந்தைக் குணாஅது
 நெடுங்கை வேண்மான் அருங்கடிப் பிடவூர்”

-புறநா. 395 : 19-20


நறுமணமுள்ள இதன் மலர்க் கொத்தை மகளிர் அணிந்து கொள்வர்.

பிடஉ தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Infarae) அகவிதழ் இணைந்தது.
தாவரக் குடும்பம் : ரூபியேசி (Rubiaceae)
தாவரப் பேரினப் பெயர் : ரண்டியா (Randia)
தாவரச் சிற்றினப் பெயர் : மலபாரிகா (malabarica, Lam.)
தாவர வளரியல்பு : வறண்ட நிலத் தாவரம்.
தாவர இயல்பு : புதர்ச்செடி. அடர்ந்தும், பரந்தும், கிளைத்தும், உயர்ந்தும் வளரும். வலிய தண்டுடையது. சிறு மரம் போலத் தோன்றும். அடி முதல் நுனி வரை இலைக் கோணத்தில் முட்கள் உடையது.
இலை : 1-3 அங்குல நீண்ட இலைகள் எதிரடுக்கில் உள்ளன. பளபளப்பானது. தோல் போன்றது. கணுவிலுள்ள இரு இலைகளில் ஒன்று பெரிதும் வளர்வதில்லை. இலைக்கோணத்தில் இரு சிறு முட்கள் வளரும்.
மஞ்சரி : இலைக்கோணத்தில் ‘காரிம்ப்’ வகையான ‘அம்பல்’ எனப்படும் நுனி

பிடவம்
(Randia malabarica)

வளராப் பூந்துணர் அடர்ந்த கொத்தாக உண்டாகும். பூங்கொத்து பெரும்பாலும் வட்டமாகத் தோன்றும்.
மலர் : வெண்ணிறமானது. நறுமணம் உடையது. மலர்ச்செதில்கள் உள்ளன.
புல்லி வட்டம் : 5 பிரிவுள்ள புறவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாக இருக்கும்.
அல்லி வட்டம் : 5 அகவிதழ்கள் இணைந்து குழல் வடிவாக உள்ளது. உள்ளே நுண்மயிர்கள் உள. நுனியில் 5 பிரிவானது. இடப்புறமாகச் சுற்றிய அடுக்கானது. மேலே: மடல்கள் விரிந்துள்ளன.
மகரந்த வட்டம் : 5 தாதுக்கால்கள். இழை போன்றவை

தாதுப்பைகள் நீளமானவை.

சூலக வட்டம் : இரு சூலிலைச் சூலகம். பல சூல்கள் தடுப்புச் சுவரில் ஒட்டியிருக்கும். சூல் தண்டு மெல்லியது. சூல்முடி இரு பிளவானது.
கனி : சிவந்த ‘பெர்ரி’ எனப்படும் சதைக்கனி.
விதைகள் : ஆரஞ்சு நிறமானவை சொர சொரப்பானவை. ஆல்புமின் உள்ளவை.

மலைப்புறக் காடுகளிலும் குன்றுகளிலும் வளரும் அடித்தண்டு கருமை சார்ந்த வெளிர் நிறமானது. வலிமையுள்ளது. பெரிதும் வேலிகட்குப் பயன்படுகிறது .

இதன் குரோமோசோம் எண்ணிக்கை கணக்கிடப்படவில்லை. இப்பேரினத்தில் உள்ள பிற சிற்றினங்களின் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 ஆகும்.