சங்க இலக்கியத் தாவரங்கள்/067-150

கரந்தை
ஸ்பெராந்தஸ் இன்டிகஸ் (Sphaeranthus indicus, Linn.)

சங்க நூல்களில் காணப்படும் இப்போர் மலருக்குக் ‘கரந்தை’ என்று பெயர். ஆநிரைகளைக் கவர்ந்தவர்களிடம் அவற்றை மீட்க முனைந்தெழும் போர் வீரர்கள், இதனைச் சூடிக் கொண்டு போருக்கு எழுவர். இது ஒரு சிறு செடி. செந்நீலம், சிவப்பு, நீலம், இளஞ் சிவப்பான சிறு முட்டை வடிவான மஞ்சரித் தொகுப்பான மலர்களைச் செடியின் முடியில் கொண்ட சிறு செடியாகும்.

சங்க இலக்கியப் பெயர் : கரந்தை
உலக வழக்குப் பெயர் : சிவகரந்தை, விஷ்ணு கரந்தை, கொட்டைக்கரந்தை
தாவரப் பெயர் : ஸ்பெராந்தஸ் இன்டிகஸ்
(Sphaeranthus indicus, Linn.)

கரந்தை இலக்கியம்

கரந்தையும் ஒரு போர் மலராகும். ஆநிரைகளைப் பறி கொடுத்தோர் அவற்றை மீட்பதற்குப் போர் தொடுப்பர். அதற்கு அடையாளமாகக் கரந்தை மலரைப் போர் மரபு அறிந்தவர் வீரரது தலையிற் சூட்டுவர் என்று புறநானூறு கூறும்.

“நாகுமுலை யன்ன நறும்பூங் கரந்தை
 விரகறி யாளர் மரபிற் சூட்ட
-புறநா. 261 : 13-14

கரந்தையைச் சூடுதல் ஆநிரைகளை மீட்பதற்கு மட்டுமன்றி. யானை முதலியன கவரப்படின் அவற்றை மீட்கவும் கரந்தையைக் கண்ணியாகவும் மாலையாகவும் சூடிக் கொள்வதுண்டு.

கரந்தைச் செடி நெல் அறுத்த வயல்களில் முளைத்து நிறைந்து வளரும்.

“கரந்தைஅம் செறுவின் பெயர்க்கும்”-புறநா. 340 : 8

“கரந்தைஅம் செறுவின் வெண்குருகு ஒப்பும்”
-அகநா. 226 : 6


இதன் மலர்கள் சிறு முட்டை வடிவினவாகவும், செம்மை, நீலம், இளஞ்சிவப்பு, நீலம் கலந்த சிவப்பு நிறங்களை உடையனவாகவும் இருக்கும்.

சிறிய பால்மடிக் காம்பு போன்ற இதன் இணர்மலரில் நறுமணம் உடையதாக இருக்கும். இளஞ்சிவப்பு நிறமுடைய கரந்தையைச் ‘சிவகரந்தை’ என்பர். இதில் நறுமணம் மிகுத்து உண்டாகும். நச்சினார்க்கினியர், ‘நாறுகரந்தை’ என்றது இதுவே போலும். இதனைக் கொண்டு சிவனைப் பரவுதலைப் பட்டினத்தடிகள் கூறுவர். [1]

இதனைக் கண்ட திருமாலியத்தார் நீலங்கலந்த கரந்தையைத் திருமாலுக்குரியதாக்கி ‘விட்டுணுக் கரந்தை’ என்பர். ஏனைய கரந்தையைக் ‘கொட்டைக்கரந்தை’ என்பர்.

இக்கரந்தையில் மலரெனக் கூறப்படுவது தனி மலரன்று. இதனைக் கரந்தையிணர் என்பது பொருந்தும். சற்று நீண்ட சிறு முட்டை வடிவான கரந்தையின் இவ்விணரில் நூற்றுக்கணக்கான மலர்கள் இணைந்து கொட்டை போல இருக்கும்.

கரந்தை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : இன்பெரே (Inferae)
ஆஸ்ட்ரேலீஸ் (Asterales)
அல்லியிணைந்தவை.
தாவரக் குடும்பம் : கம்பாசிட்டே (Compositae)
தாவரப் பேரினப் பெயர் : ஸ்பெராந்தஸ் (Sphaeranthus)
தாவரச் சிற்றினப் பெயர் : இன்டிகஸ் (indicus)
சங்க இலக்கியப் பெயர் : கரந்தை
தாவர இயல்பு : ஒன்று முதல் ஒன்றரை அடி உயரம் வரை வளரும். ஓராண்டுச் செடி. செடி முழுவதும் ஒரு விதப் பசைப் பொருளைச் சுரக்கும் சுரப்பிகளைக் கொண்ட நுண்மயிர் அடர்ந்திருக்கும்.
இலை : சிறிய, பசிய, நீண்ட தனி இலை. மாற்றடுக்கில் தண்டில் அமைந்திருக்கும.
மஞ்சரி : சற்று நீண்ட முட்டை அல்லது உருண்டை வடிவான மஞ்சரி. இதனை மஞ்சரித் தொகுப்பு என்று கூற வேண்டும். இதற்கு (compound head) என்று பெயர். “.5 - .6” அங்குல அகலமுள்ள இம்மஞ்சரித் தொகுப்பு கிளை நுனியில் உண்டாகும். ஒவ்வொரு மஞ்சரியிலும் பல மலர்கள் அடர்ந்திருக்கும். இம்மஞ்சரித் தொகுப்பில், புறத்தில் பெண் பூக்களும், உட்புறத்தில் இருபாலான பூக்களும் இருக்கும். இவற்றிற்கிடையே செதில்களும் உள்ளன. பல மஞ்சரித் தொகுப்பான, இதன் நடுத்தண்டு சற்றுச் சதைப்பற்றானது. இதனைச் சுற்றியே அடுக்கடுக்காகப் பல மஞ்சரிகள் நிறைந்திருக்கும்.
பெண் மலர் : இதில் அல்லிவட்டம் குழல் வடிவானது; 2-3 நுண்ணிய விளிம்புகளை உடையது.
இருபால் மலர் : இதில் அல்லிவட்டம் புனல் வடிவமானது. புனலின் அடிக்குழல் சற்றுத் தடித்தது. மேல்மடல் 4-5 பிளவானது.
மகரந்த வட்டம் : மகரந்தப்பை அடியில் முக்கோண வடிவானது.
சூலக வட்டம் : ஒரு செல் உள்ளது. இதில் ‘அகீன்’ என்ற கனி உண்டாகும். இதுவே விதையுமாகும்.



  1. ‘நொச்சியாயினும் கரந்தையாயினும்
    பச்சிலையிட்டுப் பரவுதல் தொண்டர்’ -பதினோராந்திருமுறை