சங்க இலக்கியத் தாவரங்கள்/072-150

முல்லை
ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
(Jasminum auriculatum,Vahl.)

சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பேசப்படுவது முல்லை ஆகும். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை நிலம் எனப்படும். பொருள் தேடவும், அரச ஆணையை ஏற்றும் தலைமகன் தனது தலைவியைப் பிரிவான். அவன் திரும்பி வருந்துணையும் தலைமகள் அவனது பிரிவை ஆற்றியிருப்பதைத்தான் முல்லை ஒழுக்கம் என்பர். முல்லை என்றாலே கற்பு எனப்படுதலின் கற்புமுல்லை என்ற பாகுபாடும் காணலாம். முல்லையின் பெயரால் ‘பண்’ ஒன்றுண்டு. ‘முல்லையத் தீங்குழல்’ என்றும், ‘முல்லை நல் யாழ்ப்பாண’ என்றும் ‘முல்லை’யானது குழலொடும் யாழொடும் பேசப்படும். தமிழ்க்குடிமகளின் அகவாழ்விலும், புறவாழ்விலும் இணைந்துள்ளது முல்லையாகும்.

சங்க இலக்கியப் பெயர் : முல்லை
சங்க இலக்கியத்தில் இதன் வேறு பெயர்கள் : கொகுடி, தளவம்
பிற்கால இலக்கியப் பெயர் : முல்லை, தளவம்
உலக வழக்குப் பெயர் : முல்லை, கொகுடி
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின் (Jasmin)
தாவரப் பெயர் : ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
(Jasminum auriculatum,Vahl.)

முல்லை இலக்கியம்

இனி, முல்லையைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் கூறுவனவற்றைக் காண்போம்.

செந்தமிழ் இலக்கியச் சிறப்பெல்லாம் கற்பு, வீரம், கொடை என்னும் சீரிய செம்பொருள்களை விரித்து உரைப்பதில் அடங்கும். கற்பு எனப்படுவது மலரிலும் மெல்லிய காமத்திலிருந்து விரியும். இதனைத் தொல்காப்பியம் ‘காமஞ் சான்ற’ எனத் தொடங்கும் நூற்பாவில் உணர்த்துகிறது. இத்தகைய கற்புக்கு அடையாள மலர் முல்லை. முல்லை என்றாலே அது கற்பைக் குறிக்கும். அதனால் ‘மௌவலும் தளவமும் கற்பும் முல்லை’ என்றது சேந்தன் திவாகரம் [1]. தமிழ் மக்களின் வாழ்வு முல்லையில் அரும்பும். முல்லையில் வளர்ந்து போதாகும். முல்லையில் முகிழ்த்து மலரும். ஆகவே, வாழ்வெல்லாம் முல்லையில் மணக்கும். ஆதலின், முல்லை முதலிடம் பெறுகின்றது.

தமிழ் நிலத்தைப் பாகுபாடு செய்யும் தொல்காப்பியனார்,

“முல்லை , குறிஞ்சி, மருதம், நெய்தல்
-தொல், பொருள். 104


என்று முல்லையை முதற்கண் அமைத்தார்.

இதற்கு உரை வகுத்த நச்சினார்க்கினியர் ‘கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிலிருந்து நல்லறஞ் செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின் அது முற்கூறப்பட்டது.’ என்றார்.

அங்ஙனமே இளங்கோவடிகள்[2], தொல்காப்பியத்தைப் பின் பற்றி முல்லைக்கு முதலிடம் தந்துள்ளார்.

முல்லையின் பெயரால் சங்க இலக்கியங்களில் உள்ள பாக்கள் பல: சிறப்பாக,

பத்துப்பாட்டில் முல்லைப்பாட்டு
கலித்தொகையில் முல்லைக்கலி
ஐங்குறுநூற்றில் ஐந்தாவது பகுதி-முல்லை
அகநானூற்றில் நான்கு எண்ணுள்ள பாக்கள்

(நாலு தனி முல்லை)

முல்லை என்னும் பெயர் தமிழ் நாட்டில் காடு–காடு சார்ந்த புலத்தைக் குறிப்பதோடு, முல்லைத் திணையையும் குறிக்கும். முல்லைத் திணை ஒழுக்கமாவது ஆற்றியிருத்தல். அதாவது அரசு ஆணையாலும், பொருள் ஈட்டுதல் குறித்தும் தலைமகன், தலைமகளைப் பிரிந்து செல்வான். அவன் திரும்பி வருந்துணையும் தலைமகள் ஆற்றியிருக்கும் ஒழுக்கத்தை, முல்லை ஒழுக்கம் என்பர்.

போரில் வெற்றியைக் குறிப்பது வாகைத் திணை. இதன் உட்பிரிவான துறைகள் பல. அவற்றுள் முல்லையால் பெயர் பெற்ற 12 துறைகள் குறிப்பிடப்படுகின்றன. வாகைத் திணையின் வெற்றியை, உறழ்ச்சியால் பெற்ற வாகை எனவும், இயல்பால் பெற்ற வாகை எனவும் இருவகையாகப் பேசுவர்.

இயல்பால் வெற்றி பெற்ற வாகைத் திணையில் முல்லைப் பெயர் பெற்ற துறைகள் பன்னிரண்டாவன:

 1. அரச முல்லை அரசனது வெற்றி மேம்பாடு கூறுவது.
 2. பார்ப்பன முல்லை பார்ப்பனரது நடுவு நிலைச் சிறப்பைக் கூறுவது.
 3. கணியன் முல்லை கணித்துக் கூறும் சோதிடன் புகழ் கூறுவது.
 4. மூதின் முல்லை பழங்குடி வீரத்தாயின் மன வலிமை.
 5. அவைய முல்லை அவையோர் நடுவு நிலைப் பெருமையைக் குறிப்பது.
 6. ஏறாண் முல்லை ஏறு போன்றவனால் பெற்ற குடிப் பெருமை கூறுவது.
 7. வல்லாண் முல்லை ஊர், குடி கூறி வீரனது நல்லாண்மை குறிப்பது.
 8. காவல் முல்லை அரசனது காவற் சிறப்பைக் குறிப்பது.
 9. பேராண் முல்லை அரசன் போர்க்களத்தில் காட்டிய பேராண்மையைக் குறிப்பது.
10. மற முல்லை படைவீரனது போர்த்துடிப்பைக் கூறுவது.
11. குடை முல்லை மன்னனது கொற்றக்குடையின் சிறப்புக கூறுவது.
12. சால்பு முல்லை அறிவிற் சிறந்த சான்றோரது சிறப்புப் பற்றியது.

அன்றியும் பருவக் காலத்தைக் குறிக்கும் முல்லையைக் கார் முல்லை என்பர்.

‘காரும் மாலையும் ‘முல்லை’ என்பது நூற்பா (தொல். பொருள். 6) ஆதலின், கார் காலத்தையும், மாலைப் பொழுதையும் குறிப்பது முல்லை மலர். இதனைப் பின்வரும் அடிகளில் காணலாம்.

“கார் நயந்து எய்தும் முல்லை ”-ஐங். 454

“எல்லை பைபயக் கழிப்பி முல்லை
 அரும்புவாய்அவிழும் பெரும்புன் மாலை”

-நற். 369 : 3-4


கற்பு முல்லை :-

மேலும், மகளிரின் கற்பு ஒழுக்கத்திற்கு அறிகுறி முல்லையாகும். கன்னியாக இருந்த ஒரு பெண் முல்லை மலரைத் தேடிய அளவாலே, அவள் கற்பு ஒழுக்கத்திற்கு உரியவள் ஆகின்றாள். அன்றி ‘கற்பின் மிகுதி தோன்ற முல்லை சூடுதல் இயல்பு’ என்பர் நச்சினார்க்கினியர். அதனால், கற்பின் சின்னம் முல்லை என்று அறிதல் கூடும். இவ்வுண்மையைச் சங்கச் சான்றோர் விதந்து கூறுப.

“முல்லை சான்ற கற்பின் மெல்லியல் ”
-நத்தத்தனார்-சிறுபாண். 30

“முல்லை சான்ற கற்பின்
 மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே”

-இடைக்காடனார்-நற். 142 : 10-11

“முல்லை சான்ற கற்பின்
 மெல்இயல் குறுமகள் உறைவின் ஊரே”

-இடைக்காடனார்-அகநா. 274 : 13-14


‘முல்லை சான்ற கற்பின்’ என்ற சொற்றொடருக்கு ஆசிரியர் நச்சினார்க்கினியர், ‘முல்லை சூடுதற்கு அமைந்த கற்பு’ என்று உரை கூறுதலின், இவ்வுண்மை வலியுறுத்தப்படும். இதனால், முல்லை என்ற சொல்லுக்கே கற்பு என்ற பொருளும் தோன்றியது போலும். இதனை,

‘மௌவலும் தளவமும் கற்பும் முல்லை’ என்று சேந்தன் திவாகரம்[3]கூறுவதாயிற்று. ஆகவே கற்பு என்ற மற்றொரு பெயரும் முல்லைக்குரியதாயிற்று.

இனி, காதல் ஒழுக்கத்திலிருந்து கற்பு ஒழுக்கத்திற்கு நடை போடும் நாடகம் ஒன்றைக் கலித்தொகையிலிருந்து காண்போம் (முல்லைக்கலி. 115).. ஓர் ஆயர் மனைக்குப் பின்புறமுள்ள அரிய கானத்தில் தலைமகன் வரவு அறிந்த தோழி தலைமகளைத் தனியே விட்டு மறைந்து நிற்கிறாள்.

களவொழுக்கத்தில் தலைப்பட்ட ஆயர் மகன் முல்லை மலரால் ஆன தொடையும் கண்ணியுஞ் சூடிக் கொண்டு, தலைவியை நாடி வருகிறான். தலைவியைக் கண்ட தலைமகன், தான் சூடியிருந்த, முல்லை மாலையிலிருந்து ஒரு பகுதியைத் துணித்து அவளிடம் கொடுக்கிறான். அவளும் அகம் மிக மகிழ்ந்து, அதனைத் தன் கூந்தலிலிட்டு மிகவும் நன்கு முடித்துக் கொண்டு, மனைக்குத் திரும்புகிறாள். அன்று மாலையில் மனையில் தலைவியின் நற்றாயும், தந்தையும் வீற்றிருக்கின்றனர். செவிலித் தாய், தலைவியின் கூந்தலை வெண்ணெய் நீவி முடிப்பதற்கு அவளது முடித்த கூந்தலை அவிழ்க்கின்றாள். முல்லை மலர்த் தொடை கீழே விழுகின்றது. அதனை எல்லோரும் காண்கின்றனர். நெருப்பைக் கையாலே தீண்டியவள் போலச் செவிலி, கையைப் பிதிர்த்துத் துடித்துப் புறம் பெயர்ந்து போகிறாள். அப்பூ வந்தவாறு எங்ஙனம் என்று வினவலும் செய்யாள்; சினத்தலும் செய்யாள்; தந்தை மருண்டார். நற்றாய் நாணுற்றுக் கவன்றாள். தலைவியோ அச்சுற்று, சந்தனம் பூசி உலர்த்தின கூந்தலை முடித்துக் கொண்டாள். நிலத்தே தாழ்ந்து கிடந்த தனது பூத்தொழில் மிக்க நீல ஆடையைக் கையாலே சிறிதேறத் தழுவிக் கொண்டாள். தளர்ந்து நடந்து பக்கத்தில் இருந்த கானகத்துள் சென்று ஒளித்துக் கொண்டாள்.

இரவெல்லாம் தமரும், ஊரவரும் கூடிப் பேசுகின்றனர். அவளை, அவனுக்கே அடை சூழத் துணிகின்றனர். இவற்றை அறிந்து கொண்ட தோழி, தலைவியைத் தேடி வருகின்றாள். தோழியிடம் தலைவி சொல்கின்றாள். ‘பிறர் காணாமல் உண்ட கள்ளின் களிப்பு, பிறர் கண்டு நடுங்கும்படியாகத் தாம் கள்ளுண்ட படியைக் காட்டிக்கொடுக்குமல்லவா? அதுபோல, யாம் மறைந்து ஒழுகிய களவொழுக்கத்தால் கையும் களவுமாகப் பிடித்துக் கொள்ளப்பட்டேன் தோழி!’ என்று கூறி நடுங்கி நின்றாள்.

அவளின் நடுக்கத்தைக் கண்ட தோழி அதற்குக் காரணம் கேட்கிறாள். தலைவி நடந்ததெல்லாம் கூறிப் புழுங்கி நிற்பவும், தோழி சொல்கிறாள். “அஞ்சற்க ஆயர் மகன் சூடிய முல்லைக் கண்ணியை நீ உன் கூந்தலில் முடித்துக் கொண்டாயாதலின், நீ அவனுக்கு உரியவளாகி விட்டாய் ஆகவே, நம் தமர் எல்லாம் கூடி, உன்னை அவனுக்கே மணம் செய்விக்க முடிவு செய்து, மண விழாவுக்கு ஆயத்தம் செய்கின்றனர். மனை முற்றத்தில் மணலைப் பரப்பித் திரையிடுகின்றனர். மணக்கோலம் புனைக!” என்று கூறி, அவளை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்துகின்றாள். இதனை.

தோழி நாம் காணாமை உண்ட கடுங்கள்ளை மெய்கூர
 நாணாது சென்று நடுங்க உரைத்தாங்குக்
 கரங்ததூஉம் கையொடு கோட்பட்டாம் கண்டாய்நம்
 புல்லினத்து ஆயர்மகன் சூடி வந்ததோர்
 முல்லைஒரு காழுங்கண்ணியும் மெல்லியால்
 கூந்தலுட் பெய்து முடித்தேன்மன் தோழியாய்
 வெண்ணெய் உரைஇ விரித்த கதுப்போடே
 அன்னையும் அத்தனும் இல்லராயாய் நாண
 அன்னை முன் வீழ்ந்தன்று அப்பூ:
 அதனை வினவலுஞ் செய்யாள் சினவலுஞ் செய்யாள்
 நெருப்புக் கை தொட்டவர் போல விதீர்த்திட்டு
 நீங்கிப் புறங்கடைப் போயினள் யானுமென்
 சாந்துளர் கூழை முடியா நிலந்தாழ்ந்த
 பூங்கரை நீலந்தழீஇத் தளர்பு ஒல்கிப்
 பாங்கரும் கானத்து ஒளித்தேன் அதற்கெல்லா
 ஈங்கெவன் அஞ்சுவது
 அஞ்சல், அவன் கண்ணி நீ புனைந்நாய் ஆயின் நமரும்
 அவன் கண் அடை சூழ்ந்தார் நின்னை அகன்கண்
 வரைப்பின் மணல் தாழப்பெய்து திரைப்பில்
 வதுவையும் ஈங்கே அயர்ப; அதுவே யாம்
 அல்கலும் சூழ்ந்த வினை.”
-கலி. 115

கற்பு முல்லையை விளக்கும் மற்றொரு கலித்தொகைப் பாடலும் உண்டு. ஏறுதழுவும் நிகழ்ச்சிக்கு ஓர் இளைஞன் வருகின்றான். அது காண ஓர் அழகிய ஆயர் மகளும் வருகிறாள். இளைஞன் தன்னை நோக்கி வெறித்து வந்த காளையை அடக்கப் பாய்ந்தான். அவன் அணிந்திருந்த முல்லை மாலை, காளையின் கொம்பில் சிக்கிக் கொண்டது. அது துள்ளி ஓடிய அலைப்பால், மாலை பிய்த்துக் கொண்டு பூக்கள் சிதறின. முல்லைப் பூங்கண்ணி அந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஆயர் மகளின் கூந்தலைச் சென்று அடைந்தது. அவனிடம் உள்ளத்தைப் பறி கொடுத்த அவளும், தொலைத்த அப்பொருளைப் பெற்றது போலத் தலையில் அதனை முடித்துக் கொண்டாள். எனினும், அவளுக்கு அச்சம் பிறந்தது. தன் தலையில் முல்லைப் பூவைத் தாய் பார்த்தால், பூ முடிக்கத் தெரியாத உன் தலையில் ஏதிலான் கண்ணி முடித்தது யாங்ஙனம்?” என்று வினவினால், என் செய்வது என்று நடுங்கினாள். அது கண்ட தோழி, ‘அவன் கண்ணிப் பூ சூடினாய்; ஆதலின் நின் களவொழுக்கத்தைப் பிறர் அறியாதிருக்கும் பொருட்டு, உனக்குத் தெய்வமால் கொண்டது என்று கூறி, அவனுக்கே உன்னை அடை சூழ்ந்தார் எல்லாருமே’ என்று கூறி மகிழ்விக்கின்றாள்.

எனவே, களவுக்குப் பின் கற்பு ஆகலின், கற்பின் அறிகுறி முல்லையாயிற்று. இதனை, ‘முல்லை சான்ற கற்பின் மெல்லியல்’ (சிறுபாண். 30) என்றார்.

கற்பின் மிகுதி தோன்ற முல்லை மலர் சூடுதல் இயல்பாகி விட்டமையால், முல்லை என்ற சொல்லுக்கே கற்பு என்ற பொருளும் வழங்குவதாயிற்று. இதனைத் திருத்தக்க தேவர் கூறுவர்[4]. நச்சினார்க்கினியர் உரை கூறி விளக்குவர்.

முல்லைப்பூ வாழ்த்து மலருமாகும். முல்லை மலர்களை நாழி எனப்படும் மரத்தாலான படியில் நெல்லோடு கலந்து வைத்துக் கைதொழுது சான்றோரும், மங்கல மடந்தையரும் எடுத்துத் தூவி வாழ்த்துப என்று கூறும் முல்லைப்பாட்டு.

“யாழிசை இன வண்டார்ப்ப நெல்லோடு
 நாழி கொண்ட நறுவீ முல்லை
 அரும்பவிழ் அலரி தூஉய்க் கைதொழுது
-முல்லைப். 7-9

மேலும், நாள் தோறும் அந்தி மாலையில் இல்லத்தை மங்கலமாக்குவதற்கும், இங்ஙனம் முல்லை மலர்களையும், நெல்லையுங் கலந்து தூவி, விளக்கெடுக்கும் வழக்கம் இருந்தது என்பதைச் சிலப்பதிகாரமுங் கூறும்[5].

‘முல்லை நல் யாழ்ப்பாண்’ (ஐங். 478) என வருதலின், முல்லையை இசைக் கருவிகளாகிய குழலொடும்[6], யாழொடும் கொண்டு முல்லை இசையோடும் பொருந்தி, முல்லைப் பண்ணாகவும் வழங்கப்பட்டமை அறியலாம்.

இத்துணைச் சிறப்பிற்றாகிய முல்லை ஒரு படர் கொடியாகும். முல்லைக் கொடி கார் காலத்தில் வளமாக ஓங்கி வளர்ந்து, தேரூரும் நெடுஞ்சாலையில் ஓரமாகத் தாவி நிற்கிறது. அவ்வழியில், கடை ஏழு வள்ளல்களில் ஒருவராகிய பாரி வள்ளல் தேர் ஊர்ந்து வருகிறார். முல்லைக் கொடி கொழு கொம்பின்றி அவர் இவர்ந்து வந்த தேரின் மேல் உராய்ந்தது. அது கண்ட பாரி தமது தேரை நிறுத்தி, முல்லைக் கொடியைக் கூர்ந்து நோக்கினார். பற்றுக் கோடின்றித் தளர்ந்து தாவி நின்ற முல்லைக் கொடியின் பால் இரக்கம் கொண்டார். முல்லைக் கொடி தேரின் மேலேறிப் படரும் பொருட்டுத் தேரை, அவ்விடத்தே நிறுத்தி விட்டு நடந்து சென்றார். ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியினிடத்தே காட்டிய பாரியின் பரிவு புலவர் உள்ளத்தைத் தொட்டது.

“. . . . . . . . . . . . சுரும்பு உண
 நறுவீ உறைக்கும் நாகநெடு வழிச்
 சிறுவீ முல்லைக்குப் பெருந்தேர் நல்கிய
 பிறங்கு வெள்ளருவி வீழும் சாரல்
 பறம்பின் கோமான் பாரியும். . . . ”
-சிறுபா. 87-91

என்று நத்தத்தனாரும்,

“ஊருடன் இரவலர்க்கு அருளி தேருடன்
 முல்லைக்கு ஈத்த செல்லா நல்இசை
 படுமணி யானைப் பறம்பின் கோமான்
 நெடுமாப் பாரி. . . . . . . .”
-புறநா. 201 : 2-5

என்று கபிலரும் பாடுவாராயினர்.

இனி, ‘புனைகொடி முல்லை’ (புறநா. 200 : 9) எனவும். ‘பைங்கொடி முல்லை’ (அகநா. 74) எனவும், ‘நெடுங்கொடி முல்லை’ (ஐங். 422) எனவும் கூறப்படுதலின், முல்லை ஒரு பசிய நீண்ட கொடி எனவும், ‘பாசிலை முல்லை’ (குறுந். 108) (புறநா. 117 : 9) எனப்படுதலின், முல்லைக் கொடி பசுமையானதென்னும் இதன் தாவர இயல்பு கூறப்படுதல் காண்க.

இது பற்றுக் கொம்பில்லாதவிடத்துக் குன்றில் கருங்கல்லின் மேலேறிப் படரும் இதன் இயல்பைக் ‘கல்லிவர் முல்லை’ (குறிஞ். 77) ‘முல்லை ஊர்ந்த கல் இவர்பு ஏறி’ (குறுந். 275) என வரும் அடிகளில் காணலாம்.

‘செலவிடை அழுங்கல் செல்லாமை யன்றே வன்புறை குறித்த நவிற்சி யாகும்’ என்னும் தொல்காப்பிய நூற்பாவிற்கிணங்க (தொல்-கற்பியல். 14) வற்புறுத்திப் பிரிதல் வேண்டுமென்பது கொண்டு, முல்லைப் பெயரால் முல்லைப்பாட்டு என்ற நூல் எழுதினார் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார். இதற்கு உரை கூறும் நச்சினார்க்கினியர்,

‘தொல்காப்பியனார் கருத்திற்கேற்ப நப்பூதனார் செய்யுள் செய்தார் என்றுணர்க. இவ்வாறின்றி ஏனையோர் கூறும் பொருள்கள் இலக்கணத்தோடு பொருந்தாமை உணர்க’ என்றார்.

முல்லைப் பெயர் கொண்ட அள்ளூர் நன்முல்லையார், காவல் முல்லைப் பூதனார் என ஆண்பால் புலவர் பெயர் கொண்டார்.

முல்லை நகை வடிவாள் என்பது திருமகேந்திரப் பள்ளி அன்னைக் கடவுளர்க்கு அமைந்த பெயர். அங்குச் சிவபெருமான் முல்லை வன நாதர் எனப்படுவர்.

திருமுல்லைவாயில், முல்லையூர், முல்லைக்காடு, முல்லைப்பாடி எனப் பல ஊர்ப் பெயர்களில் முல்லை இடம் பெற்றது.

ஊரைச் சுற்றிலுமே முல்லை மலரும் இக்கொடி வேலியாகப் படர விடப்பட்டது என்று சங்க நூல்கள் கூறும்.

“முல்லைவேலி நல்லூரானே”-புறநா. 144 : 14

“வேலி சுற்றிய வால்வீ முல்லை”-அகநா. 314 : 19

முல்லைக்கொடி, தோன்றிக் கொடியோடு படர்ந்து, வளர்ந்து கார் காலத்தில் இவ்விரண்டும் பூக்கும் என்று நாகன்தேவனார் கூறுவர்.

“காடு கவின்எதிரக் கனைப்பெயல் பொழிதலின்
 பொறிவரிஇன வண்டு ஆர்ப்பப் பலவுடன்
 நறுவீ முல்லையொடு தோன்றி தோன்ற”

-அகநா. 164 : 4-6


இவற்றுள் முல்லை மலர் வெண்மை நிறமானது. தோன்றி மலர் குருதிச் சிவப்பு நிறமானது. இவை இரண்டும் சேர்ந்து மலரும் போது, கண் களிகூரக் கவின் தரும். இவ்விருமலர்களையும் விரவிக் கட்டிய கண்ணியை முல்லை நில மாந்தர் சூடி மகிழ்வர் என்ப.

“தண்கமழ் முல்லை தோன்றி யொடு
 வண்டுபடத் தொடுத்த நீர்வார் கண்ணியன்”

-அகநா. 94 : 6-7


மேலும், மஞ்சள் நிறமுள்ள ஞாழல் மலரையும், செந்நிறமான செங்குவளை மலரையும், வெண்மையான முல்லை மலருடன் புனைந்த கண்ணி பற்றிய செய்தியையும் அகநானூற்றில் காணலாம்.

“கடலாடு மகளிர் கொய்த ஞாழலும்
 கழனி உழவர் குற்ற குவளையும்
 கடிமிளைப் புறவின் பூத்த முல்லையோடு
 பல்லிளங் கோசர் கண்ணி அயரும்”
-அகநா. 216 : 8-11

முல்லை முகை, “மகளிரின் முத்தன்ன வெண் நகை” (பல்) யை ஒக்கும் எனப் புலவர் பெருமக்கள் பாடுவர்.

(பரி. பா. 8 : 6;: நெடுநல். 130; குறுந். 186;: புறநா. 117 : 8-9; கலி. 103 : 6; 108:15)

குளிர்ந்த கார் காலம் முல்லை முகைகளையொத்த தனது பற்களைக் காட்டி நகை செய்வதாகத் தலைவி கூறும் ஒரு குறுந் தொகைப் பாட்டு.

“இளமை பாரார் வளநசைஇச் சென்றோர்
 இவனும் வாரார் எவணரோ என
 பெயல்புறந் தந்த பூங்கொடி முல்லைத்
 தொகுமுகை இலங்கு எயிறாக
 நகுமே தோழி நறுந்தண் காரே”
-குறுந். 126

(புறந்தந்த-பாதுகாக்கப்பட்ட, எயிறு-பல்)

முல்லைக் கொடி தனது சிறு வெள்ளிய அரும்பையொத்த பற்களைக் காட்டி நகுவது போல முறுவல் கொண்டது என வினை முற்றி மீளும் தலைவன் கூறுவதாக உள்ள குறுந்தொகைப் பாடல்.

“கார்புறந் தந்த நீருடை வியன்புலத்துப்
 பல்ஆ புகுதரூஉம் புல்லென் மாலை
 முல்லை வாழியோ முல்லை நீநின்
 சிறுவெண் முகையின் முறுவல் கொண்டனை
 நகுவை போலக் காட்டல்
 தகுமோ மற்றுஇது தமியோர் மாட்டே”
-குறுந் . 162

தலைவி கூற்றாகவும், தலைவன் கூற்றாகவும் அமைந்த இவ்விருபாக்களிலும் முல்லையின் முகை, வெள்ளிய பற்களாக உருவகஞ் செய்யப்படுகின்றது. கார் காலத்தில் பெய்த மழையினால் முல்லைக் கொடி பாதுகாக்கப்பட்டு, மலரத் தொடங்கும் என்பதும் இவ்விரு பாடல்களுக்கும் பொது. கார் காலத்தில் திரும்பி வருவதாகத் தன் தலைவியிடம் கூறி விட்டுப் பொருள் வேட்கையில், இளமையையும் பாராது, அவளைப் பிரிந்து சென்ற தலைவன் பருவம் வந்துழியும் திரும்பவில்லை. அதுவரை ஆற்றியிருந்த தலைவி, கார் காலம் தனது தனிமையைக் கண்டு “நகுமே தோழி” என்று நொந்துரைப்பதையும், பிரிந்து வந்த தலைவன் கார் காலத்தில் பூத்த முல்லைக்கொடி தன்னுடைய தனிமையைக் கண்டு சிரிப்பதாக வருந்தி “இது தகுமோ” என்று வினவி, “வாழியோ முல்லை” என்று முல்லைக்கு வாழ்த்துரைப்பதையும் காணலாம்.

மற்று, முல்லை முகையினைப் பல்வரிசைக்கு ஒப்பிட்டுக் கூறுமிடத்து, இளமை நிலையாமையைக் குறிப்பிடும் கலித் தொகைப் பாடலும் ஒன்றுண்டு.

தலைவியின் இளமை எழில் நோக்காது, பொருள் தேடும் வேட்கை மிகுதியால் அவளைப் பிரிந்து போக எண்ணுகிறான் தலைமகன். பிரிவுணர்த்தப்பட்ட தோழி அவனிடம் நெருங்கிக் களவுக் காலத்தில் அவன் தலைவியின் நலம் பாராட்டிக் கூறிய மொழிகளை நினைவுறுத்துகிறாள். “ஐய! நறிய முல்லையானது தன்னில் ஒத்த முகையை ஒக்கும்படி நிரைத்துச் செறிந்த எம் பல்லினுடைய முறையினையுடைய நுகர்ச்சிக்குரிய இளமைப் பருவத்தைப் பாராட்டினாய்! அன்றி, எம் பல்லின் பறிமுறையைப் பாராட்டினையோ? அதாவது எம் பல்லின் செறிமுறையைப் பாராட்டினாய், அன்றி அவற்றின் பறிமுறையை இளமை போகப் போக எம் பற்கள் முல்லை மலர்களைப் போல முதுமையடைந்து விழுந்து விடுமென்பதைக் (முதுமையை) கருதவில்லையே” என்கிறாள்.

“நறுமுல்லை நேர்முகை ஒப்ப நிரைத்த
 செறிமுறை பாராட்டினாய் மற்றெம்பல்லின்
 பறிமுறை பாராட்டினையோ ஐய<”
-கலி. 22 : 9-11

முல்லையின் முகை காட்டுப் பூனைக்குட்டியின் பற்களுக்கு ஒப்பாய் (புறம். 017), கூரியதாய் இருக்கும். இதன் அரும்பு மாலையின் மலரும் என்பதை “முல்லை அரும்பு வாய் அவிழும் பெரும் புன்மாலை” (நற். 369) என்பர் நல்வெள்ளையார். அரும்பு கட்டவிழ்ந்து போதாகும். வண்டு போதவிழ்க்கும் (அகம் 74). முல்லைப் போது அலர்ந்து மலருங்கால், அச்சிறு பூவின் பெருமணம் கானெல்லாம் கமழும் என்பதைச் “சிறுவீ முல்லைப்பெரிது கமழ் அலரி” (நற். 361) எனவும், “பைங்கொடி முல்லை வீ கமழ் நெடுவழி” (அகம், 124 : 12) எனவும் கூறுவர்.

“அஞ்சிறை வண்டின் அரியினம் மொய்ப்ப
 மென்புல முல்லை மலரும் மாலை”
-ஐங். 489

மாலையில் நகைவாய் முல்லையின் முகை வாய் திறப்ப அஞ்சிறை வண்டினம் முல்லை மலரின் தாதினை நயந்து ஊதும் என்பதும், முல்லை மலரில் தேன் பிலிற்றும் என்பதும் காணலாம்.

“அம்சிறை வண்டின் மென்பறைத் தொழுதி
 முல்லை நறுமலர்த் தாது நயந்துஊத
 எல்லை போகிய புல்லென் மாலை”
-அகநா. 234 : 12-14

“தேம்பாய் முல்லையொடு ஞாங்கர்ப் போக்கி”
-அகநா. 391 : 5


இங்ஙனம் வண்டு வாய் திறக்கத் தாதுகுத்துத் தேன் பிலிற்றி, மணம் பரப்பும் முல்லை மலரை விழையாதார் யார்? முல்லைப் பூவைத் தனியாகவும், வண்ண வண்ணத்த பிற மலர்களை விரவிக் கண்ணியாகவும், தாராகவும், மாலையாகவும் தொடுத்து, மகளிரும் ஆடவரும் அணிவர் (பதிற். 21 : 70; கலி. 118 : 25). களவு நிலை கடந்த மகளிர் கடிமணங் கொள்ளுங்கால், சூடுவது முல்லை மலர். தொடர்ந்து கற்பு நிலையில் ஒழுகும் போது, முல்லை மலரைத் தவறாது சூட்டிக்கொள்வர் (ஐங். 408).

களவொழுக்கத்தில் மணம் புரிந்த ஒருவன் அணிந்திருந்த முல்லைக் கண்ணியின் நறுமணத்தை அவளும் பெற்றாள். பெற்ற அம்மணத்தின் தன்மையை அவள் விவரிக்கும் குறுந்தொகைப் பாட்டைப் பாடியவர் அரிசில் கிழார்.

“. . . . . . . . . . . .பகுவாய்த் தேரை
 தட்டைப் பறையிற் கறங்கும் நாடன்
 தொல்லைத் திங்கள் நெடுவெண் ணிலவின்
 மணந் தனன்மன் என் தோளே
 இன்றும் முல்லை முகை நாறும்மே”
-குறுந். 193 : 2-6

மணம் புரிந்து கொண்ட அவ்விருவரும் நகர்ப்புறத்தில் இல்லறம் நடத்துகின்றனர். அவளுடைய மனைக்குச் சென்ற தோழி “நீ வரையும் நாள் வரையில் நின் நலம் கெடாமல் நன்கு ஆற்றினை” என்றாள். அது கேட்ட தலைவி “அஃது என் வலியன்று, சென்ற திங்களில் நெடிய வெண்ணிலாவின் கண் அவன் என் தோள்களைத் தழுவி மணந்தான். அவன் அணிந்திருந்த முல்லை மலரின் மணம், இன்று வரை என் மேனியில் மணந்து கொண்டே இருக்கிறது” என்று கூறி மகிழ்கின்றாள்.

இத்துணைச் சிறப்புக்கும் உரியதாகிய முல்லை மலர் சூடப் படாத காலமும் உண்டு. கணவனைப் பிரிந்த மகளிர் முல்லையைச் சூடுவதில்லை. துக்க காலத்திலும் முல்லை சூடுவதில்லை.

பெருஞ்சாத்தன் என்னும் குறுநில மன்னன் ஒல்லையூரில் வாழ்ந்து வந்தான். அவன் போரில் இறந்து போனான். அவன் மாய்ந்த பின்னர், அவனது நாட்டில் முல்லை மலர் பூத்தது வழக்கம் போல். யாரும் இதனைப் பார்க்கவில்லை. அதனைப் பயன்படுத்தவுமில்லை. அப்போது அம்மன்னனிடம் பெருங் கிழமை கொண்ட புலவர் குடவாயில் கீரத்தனார் அங்கு வருகிறார். பூத்த முல்லையைப் பார்க்கின்றார். தாம் அடைந்த அவல நிலையில் “முல்லையே! அருமையானவன் இறந்தான் என நினையாமல், நீயும் பூத்துள்ளாயே, அவனை இழந்து நான் உயிரோடு இருப்பது போல் நீயும் பூத்தியோ” என்று ஓலமிடுகின்றார்.

“இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
 நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
 பாணன் சூடான்; பாடினி அணியாள்
 ஆண்மை தோன்ற ஆடவர்க் கடந்த
 வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
 முல்லையும் பூத்தியோ, ஒல்லையூர் நாட்டே”
-புறநா. 242

என்பதே அப்பாடல்

ஆகவே, பண்டைத் தமிழில் ஐம்புல மக்களின் வாழ்வியல் மலராகக் கருதப்பட்டது முல்லை மலர். களவியலிலும், கற்பியலிலும், மறவாழ்விலும், புறவாழ்விலும் ஏறத்தாழ பதினேழு வகையாகப் பாடப்பட்டுள்ள தனி மலர் முல்லை. சங்க இலக்கியங்களில் மிகுதியாகப் பாடப்பட்ட மலர் முல்லை. அகத்துறையில் இதனைப் பாடிய புலவர் பெருமக்கள் முல்லை மலரைக் கொண்டே இளமை நிலையாமை, செல்வம் நிலையாமை, யாக்கை நிலையாமை ஆகிய பேருண்மைகளை இயைய வைத்துத் தாவர இயல் உண்மைகளைத் தாம் கண்டவாறே பேசுந் திறம் வியந்து போற்றற்பாலது. மேலும், வாழ்வாங்கு வாழ்ந்த வள்ளல் பாரிக்கு, ஓரறிவுயிராகிய முல்லைக் கொடியிடத்துப் பிறந்த கருணையைக் காட்டி, தமிழ் மக்களின் அருள் வெள்ளத்தை அழகுறத் தீட்டி, உலகமெல்லாம் உணர வைத்த புலவர் புகழ் ஓங்குக.

முல்லை தாவர அறிவியல்

தாவரவியலார் முல்லைக் கொடியை ஓலியேசி என்ற தாவரக் குடும்பத்தில் சேர்த்துள்ளனர். இக்குடும்பம் ஓலியாய்டியே, ஜாஸ்மினாய்டியே என்ற இரு துணைக் குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஜாஸ்மினாய்டியே என்ற துணைக் குடும்பம், ஜாஸ்மினம் முதலான மூன்று பேரினங்களையுடையது. இப்பேரினத்தில் முல்லையும், முல்லை வகைகளும், மல்லிகையும், மல்லிகை வகைகளும் அடங்கும். பொதுவாக, முல்லைக் கொடியிலும், முல்லை வகைச் செடி, கொடிகளிலும் இலைகள் கூட்டிலையாக இருக்கும். மல்லிகைக் கொடி, மல்லிகை வகைச் செடி, கொடிகளில் இலைகள் தனி இலையாக இருக்கும். முல்லைக் கொடி முல்லை நிலத்தில் வளர்தலின், முல்லைப் புலத்தைச் சார்ந்ததாயினும், பிற புலங்களிலும் காணப்படுகின்றது.

தொல்காப்பியம் கூறும் ஐம்புலங்களில் ஒன்றாகிய முல்லை நிலத்தில் வளரும் பசிய கொடி முல்லை ஆகும். தாவர இயலார் இதனை ‘ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்’ என்பர். ஜாஸ்மினம் என்னும் இப்பேரினம் ஓலியேசி (Oleaceae) எனும் தாவரவியல் குடும்பத்தைச் சேர்ந்தது. இப்பேரினத்தில் ஏறக்குறைய 200 சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் ஒன்று ‘ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்’ எனப்படும் முல்லை ஆகும். சங்க இலக்கியத்தில் முல்லை நூற்றுக்கணக்கான இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. முல்லையுடன் தளவம், கொகுடி, செம்மல் என்ற பெயர்களும் காணப்படுகின்றன. இவற்றுள் ‘தளவம்’, ‘செம்முலலை’ எனவும், ‘கொகுடி’ ஒரு வகை முல்லை எனவும், ‘செம்மல்’ சாதிப்பூ

முல்லை
(Jasminum auriculatum)

எனவும் (நச்) சாதிமுல்லை எனவும் கூறப்படுகின்றன. பிற்கால இலக்கியத்தில் காணப்படும் ‘தவளம்’ என்பதை வெண்ணிற முல்லை என்பர். மேலும் கொடி முல்லை. ஊசி முல்லை என்பன வழக்கில் உள்ளன.

முல்லையைச் சேர்ந்த மல்லிகைச் செடியும், ஜாஸ்மினம் என்ற பேரினத்தையே சேர்ந்ததாகும். சங்கவிலக்கியத்தில் பரிபாடலில் மட்டும் மல்லிகை மலர் குறிப்பிடப்பட்டுள்ளது. பத்துப்பாட்டில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் இறுதி வெண்பாவில் மல்லிகை கூறப்படுகிறது. அன்றி, குறிஞ்சிப் பாட்டிலும், பிற சங்கப் பாடல்களிலும் குளவி என்ற மலர்ப்பெயர் காணப்படுகின்றது. இதனை நச்சினார்க்கினியர் ‘காட்டு மல்லிகை’ என்று கூறுவர். இதற்குத் தாளிப்பூ என்று பரிபாடல் பழைய உரை கூறும். ஐந்து முதல் எட்டு அடுக்கு அகவிதழ்களைக் கொண்ட மிக மணமுள்ள அடுக்கு மல்லிகைச் செடியும் இதில் உண்டு. குறிஞ்சிப் பாட்டில் காணப்படும் அதிரல் என்பதற்குப் ‘புனலிப்பூ’ என நச்சினார்க்கினியரும், ‘காட்டு மல்லிகை’யெனச் சிலப்பதிகார அரும்பத உரை ஆசிரியரும் கூறுப.

மற்று, ஓலியேசி என்ற இத்தாவரக் குடும்பத்தில் நிக்டாந்தெஸ் (Nyctanthes) என்ற பேரினமும் உண்டு. இப்பேரினத்தைச் சார்ந்த பவழமல்லிகையை நிக்டாங்தெஸ் ஆர்பார்டிரிஸ்டிஸ் என்பர். இது பவழக்கால் மல்லிகை எனவும் பாரிசாதம் எனவும் வழங்கும். சங்க இலக்கியத்தில் இது ‘சேடல்’ என்று பேசப்படுகின்றது. மேலும், இக்குடும்பத்தில் மிராபிலிஸ் என்ற மற்றொரு பேரினமும் உண்டு. மாலையில் மலரும் பல்வேறு வண்ண மலர்களுடைய அந்தி மல்லிகை, மிராபிலிஸ் ஜலாபா எனப்படும்.

மரமல்லிகை எனப்படும் நறிய மலர் குலுங்கும் மரம், மில்லிங் டோனியா ஹார்டென்சிஸ் எனப்படும். இது பிக்னோனியேசி என்ற தாவரவியல் குடும்பத்தைச் சார்ந்தது. ‘நாகமல்லிகை’ என்ற குறுஞ்செடி வெள்ளிய நறிய மலர்களையுடையது. இதற்கு ரைனகாந்தஸ் கம்யூனிஸ் மான்டானா (Rhinacanthus ccommunis var. montana) என்று பெயர். இதன் மலரியல்புக்கு ஏற்ப இது அக்காந்தேசி (Acanthaceae) என்ற குடும்பத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.

ஆகவே முல்லை, மல்லிகைகளைப் பட்டியலிட்டுக் காண்போம்.

முல்லை

முல்லையும், மல்லிகையும் கொண்ட ஓலியேசி என்ற தாவரவியல் குடும்பம் :

முல்லை Jasminum auriculatum (Oleaceae)
தளவம்-வெண்ணிறமுல்லை Jasminum auriculatum . . . .
செம்மல்-சாதிமுல்லை Jasminum officinale . . . .
தளவம் (செம்முல்லை) Jasminum grandiflorum . . . .
கொகுடி (காட்டு முல்லை) Jasminum sambac . . . .
ஊசி முல்லை Jasminum cuspidatum . . . .
கொடி முல்லை Jasminum sambac Var. heyneanum
மயிலை Jasminum sambac var. florae-manoraepleno
மல்லிகை Jasminum pubescens (Oleaceae)
அடுக்கு மல்லிகை Jasminum arborescens . . . .
குளவி (காட்டு மல்லிகை, மலை மல்லிகை) Jasminum griffithii . . . .
அதிரல் (காட்டுமல்லிகை, மோசி மல்லிகை) Jasminum angustifolium . . . .
மனை மல்லிகை Jasminum sessiflorum . . . .
சேடல்-பவள மல்லிகை Nyctanthes arbor-tristis . . . .
அந்தி மல்லிகை Mirabilis jalapa . . . .
மர மல்லிகை Millingtonia hortensis (Bignoniaceae)
நாக மல்லிகை Rhinacanthus communis var montana
அந்தி மல்லிகை Mirabilis jalapa (Nyctaginaceae)

இக்குடும்பத்தை ஆலிவ் (Olive) குடும்பமென்பர். இக்குடும்பத்தில் 22 பேரினங்களும், ஏறக்குறைய 400 சிற்றினங்களும் உள்ளன. இவை ஆசியாவிலும், கிழக்கிந்தியத் தீவுகளிலும், குளிர்ச்சியான அல்லது மித வெப்பமான இடங்களிலும் காணப்படுகின்றன.

ஜாஸ்மினாய்டியே என்னும் சிறு குடும்பத்தில் ஜாஸ்மினம், மெனடோரா, நிக்டாந்தெஸ் என்ற மூன்று பேரினங்களே உள்ளன எனினும், ஜாஸ்மினத்தில் மட்டும் ஏறக்குறைய 200 சிற்றினங்கள் உள்ளன.

1945-ஆம் ஆண்டில் டெய்லர் என்பவர் செல்லியல் அடிப்படையில் இக்குடும்பத்திலுள்ள பேரினங்களை மாற்றிப் பாகுபாடு செய்தார். எனினும், இக்குடும்பத்தை வேறு குடும்பங்களுடன் இணைத்துக் காட்ட முயலவில்லை. ஹாலியர் இக்குடும்பம் (ஓலியேசி) ஸ்கிராபுலேரியேசி என்னும் குடும்பத்திலிருந்து தோன்றியிருக்கலாம் என்று கூறி, இக்குடும்பத்தைத் தமது டூபிபுளோரே (Tubiflorae) என்னும் தாவரக் குடும்பத் தொகுதியுள் சேர்த்துள்ளார்.

ஜாஸ்மினம் எனும் பேரினத்தின் பண்புகள் :

நேரான அல்லது ஏறுகொடியாக உள்ள குறுஞ்செடிகள். இவற்றின் இலைகள் எதிர்அடுக்கில் அமைந்தவை. மாற்றடுக்கிலும் காணப்படும். தனி இலையாகவோ, மூன்று சிற்றிலைகளைக் கொண்ட கூட்டிலைகளாகவோ காணப்படும். பெரிதும் நுனி வளராப் பூந்துணர் காணப்படும். தனி மலரைக் காண்பது அரிது. மலர்கள் அழகானவை; நறுமணம் உள்ளவை; தண்டின் உச்சியிலோ, இலைக் கோணத்திலோ உண்டாகும். பூவடிச் செதில்கள் மெல்லிய முட்டை வடிவானவை; சிலவற்றில் இதழ் போன்றிருக்கும். புல்லிகள் குழலாகவும், புனல் வடிவாகவும் அல்லது மணி வடிவாகவும் இருக்கும். 4-9 புல்லியிதழ்கள் மெல்லியவை. அல்லிக் குழல் குறுகலாகவும், நீண்டும் 4-10 இதழ்கள் அடியில் ஒட்டியும், மேலே மடல்கலாகவும் இருக்கும். மகரந்தத் தாள்-2 வழக்கமாக அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். மகரந்தப் பைகள் நீள் சதுரமாகவும், இணைந்துமுள்ளன. சூலகம் இரு அறைகளை உடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள் அடி ஒட்டியிருக்கும். சூல்தண்டு நூல் போன்றது. நீண்டு அல்லது குட்டையாக இருக்கும். சூல் முடி இரு பிளவானது. கனி ஒரு சதைக்கனி. சூலிலைகள் உருண்டை, நீள்வட்டம் அல்லது நீண்டு இருக்கும். ஒவ்வொரு சூலிலையிலும் ஒரு விதை காணப்படும். அரிதாக 2 இருப்பதுண்டு. விதையின் முளைசூழ் தசையிலை வித்திலைகள் குவிந்தும், தட்டையாயும் காணப்படும். முளை வேர் கீழ்மட்டமானது.

தாவரப் பெயர் : ஜாஸ்மினம் ஆரிகுலேட்டம்
தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஒலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆரிகுலேட்டம் (auriculatum)
தாவர இயல்பு : பல்லாண்டு வளரும் புதர்க் கொடி.
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20 முதல் 30 மீட்டர் நீளம் படர்ந்து வளரும் ஏறுகொடி
வேர்த் தொகுதி : ஆணி வேரும், பக்க வேர்களும்
தண்டுத் தொகுதி : மெல்லியது, பசுமையானது, வன்தண்டின் இயல்புடைமையின் வலிமையானது.
கிளைத்தல் : இலைக்கோணத்தில் உள்ள குருத்து கிளைத்து வளரும்.
இலை : கூட்டு இலைகள் எதிரடுக்கில் அமைந்தவை.
வடிவம் : நீள்முட்டை
விளிம்பு : நேரானது
நுனி : நேர்கோணமானது.
தனிமை : மெல்லியது
இலையடிச் செதில் : இல்லை
மஞ்சரி : நுனி வளரா சைமோஸ் மஞ்சரி
மலர் : ஈரடுக்கு (Biseriate) மலர் இருபாலானவை, ஒழுங்கானவை.
பூவடிச் செதில் : சிறியது. மெலிந்தும் முட்டை வடிவிலும் இருக்கும்.
புல்லி வட்டம் : 4-9 புறவிதழ்கள், மெல்லிய, சிறிய, பசுமையான அடியில் இணைந்த இதழ்கள்.
அல்லி வட்டம் : 4-10 திருகு இதழமைப்பு அகவிதழ்கள் புனல் வடிவில் இணைந்திருக்கும். வெண்மையானவை.
மகரந்த வட்டம் : மகரந்தத்தாள்கள் 2 அல்லிக் குழலுள் அடங்கியிருக்கும். அல்லியின் மேல் நிலையில் ஒட்டியவை. இரு மகரந்தப் பைகளிலும் தாது விளைகிறது.
சூலக வட்டம் : சூற்பை 2 அறைகளையுடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல் தலைகீழானவை. சூல்தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிளவுடையது. சூலிலை நீள்வட்டமானது.
காய்/கனி : சதைக்கனி
விதை : ஒவ்வொரு சூலிலையிலும் ஒரு விதை நேராகக் காணப்படும். வித்திலைகள் குவிந்தும், விதை தட்டையாகவும் காணப்படும். விதையில் முளை சூழ் தசை இல்லை. விதையுறை மெல்லியது.
கரு : நேரானது
முளைவேர் : கீழ்மட்டமானது.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால், நறுமணம்.
பயன் : தமிழ் மக்களின் அகத்துறை, புறத்துறை ஆகிய வாழ்வியலில் பெரிதும் இயைந்த மலர். நல்ல நறுமணம் உடைமையின், மக்களுக்குப் பெரிதும் பயன்படுகிறது. இதில் மணமுள்ள எண்ணெய் எடுக்கப்படுகிறது. அதற்கு ‘ஜாஸ்மின் ஆயில்’ என்று பெயர். இதனைப் பலவகையிலும் பயன்படுத்துகின்றனர்.


  1. சேந்தன் திவாகரம் : மரப்பெயர் :197
  2. சிலப்: பதிகம்: அடியார்க்கு நல்லார் உரை
  3. சேந்தன் திவாகரம்: மரப்பெயர்: 197
  4. ‘தானுடை முல்லை எல்லாம் தாதுகப் பறித்திட்டாளே’-சீ. சிந், 686. இவ்வடிக்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘சீவகனையே கூடுவன் என்றலின் முல்லை – கற்பு’ என்பார்.
  5. “அகநகர் எல்லாம் அரும்பவிழ் முல்லை
     நிகர் மலர் நெல்லொடு தூஉய்ப் பகல் மாய்த்த
     மாலை மணி விளக்கம் காட்டி”-சிலப் 9 : 1-8

  6. “முல்லையந்தீங்குழல்” -சிலப். 17 : 21