சங்க இலக்கியத் தாவரங்கள்/073-150

செம்மல்—சாதிமுல்லை
ஜாஸ்மினம் அஃபிசினேல்
(Jasminum officinale,Linn.)

செம்மல் என்னும் மலர் குறிஞ்சிப்பாட்டில் மட்டுமே ‘சேடல் செம்மல்’ (குறிஞ். 82) எனக் கூறப்படுகிறது. இதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘செம்மல் - சாதிப்பூ’ என்றார். இது முல்லை இனத்தைச் சார்ந்தது. சாதி முல்லை என்றும், சாதிப்பூ என்றும் உலக வழக்கில் உள்ளது. ஆகவே, செம்மல் என்பது சாதி முல்லை என்று தெளியலாம். சாதி முல்லைக் கொடியை ஆய்ந்து இதன் தாவரப்பெயர் Jasminum officinale, Linn. என்று அறுதியிட்டு, கோவை தாவர ஆய்வியல் மையத்தின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இதுவும் முல்லையைப் போல ஏறுகொடியே. எனினும் முல்லைக் கொடியினின்றும் வேறுபட்டது. முல்லையின் இலைகள் தனியிலைகள். செம்மலின் இலைகள் கூட்டிலைகள். மேலும், இது முல்லையைக் காட்டிலும் மிகுதியாகக் கிளைத்துப் படரும் இயல்பிற்று. இதன் மலரும் முல்லை மலரைப் போலவே வெண்ணிறமுடையதாயினும், அரும்புகள் சற்று நீண்டும் மெல்லியனவாகவும் இருக்கும். முல்லையைக் காட்டிலும் மிக்க மணமுள்ளது. எனினும் முல்லைக்கொடி பூப்பது போல அத்துணை மிகுதியான மலர்கள் உண்டாவதில்லை.

செம்மல்-சாதிமுல்லை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : ஓலியேசி (Oleaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஜாஸ்மினம் (Jasminum)
தாவரச்சிற்றினப்பெயர் : அஃபிசினேல் ( officinale, Linn.)

செம்மல்
(Jasminum officinale)

சங்க இலக்கியப் பெயர் : செம்மல்
உலக வழக்குப் பெயர் : சாதி முல்லை, சாதிப்பூ
ஆங்கிலப் பெயர் : ஜாஸ்மின்
தாவர இயல்பு : பல்லாண்டு வளரும் புதர்க் கொடி
தாவர வளரியல்பு : மீசோபைட்
உயரம் அல்லது நீளம் : 20 முதல் 40 அடி நீளம் வரை நன்கு கிளைத்துப் படரும் ஏறுகொடி
வேர்த் தொகுதி : ஆணிவேரும் பக்க வேர்களும்
தண்டுத் தொகுதி : மெல்லிய கம்பி போன்றது. வன்தண்டு அமைப்புடைமையின் வலிமையானது
கிளைத்தல் : இலைக்கோணத்தில் உள்ள குருத்து கிளைக்கொடியாக வளரும்.
இலை : கூட்டிலைகள்: எதிரடுக்கில் 5-7 சிற்றிலைகள், இறகு வடிவில் உள்ளன.
சிற்றிலை அடியில் உள்ளவை : நீளம் 10-12 மி. மீட்டர். அகலம் 6-8 மி. மீட்டர்.
இலை நுனியில் உள்ள சிற்றிலை : நீளம் 20-25 மி. மீட்டர் அகலம் 10-12 மி. மீட்டர் வடிவம் நீள் முட்டை
மஞ்சரி : நுனிக்கிளைகளில் உள்ள இலைக் கோணத்தில் பூவடிச் செதிலின், கோணத்தில் தனி மலர் செதில் இலை போன்றது. பூவடிச் செதில் முட்டை வடிவானது. 5-8 மி.மீ. நீளமானது.
மலர் : வெண்மையானது. நறுமணமுள்ளது 5 மடல்கள்.
புல்லி வட்டம் : பசுமையானது. 5 புல்லிகள் அடியில் இணைந்து குழல் வடிவாகவும், 8-10 மி. மீட்டர் நீளமாகவும் இருக்கும். நுனியில் 5 பிரிந்த இழை போன்ற புல்லிகள் 5-9 மி.மீட்டர் நீளமானவை.
அல்லி வட்டம் : வெண்மையான 5 இதழ்கள் அடியில் குழல் வடிவாக இணைந்து 20-25 மி.மீ
நீளமாகவும், நுனியில் மடல் விரிந்து 10–12 இதழ்கள். அடியும், நுனியும், குறுகி, நடுவில் அகன்று மிக மெல்லியதாக இருக்கும்.
மகரந்த வட்டம் : மகரந்தத் தாள்கள் 2 அல்லிக் குழலுள் அடங்கி இருக்கும். அல்லி ஒட்டியவை. ஒவ்வொன்றிலும் இரு மகரந்தப் பைகள்.
சூலக வட்டம் : சூற்பை 2 அறைகளையுடையது. ஒவ்வொன்றிலும் 2 சூல்கள் தலை கீழானவை. சூல்தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிரிவுள்ளது. சூலிலை நீள்வட்டமானது.
காய்/கனி : இதன் பேரினத்தின் சதைக்கனி அருகி உண்டாகும் என்பர். ஆனால், இதில் கனி காணப்படவில்லை.
விதை : சூலிலை ஒவ்வொன்றிலும் ஒன்று. தட்டையானது. விதையுறை மெல்லியது. வித்திலை குவிந்தது. முளை சூழ்தசை இல்லை.
கரு : நேரானது.
முளை வேர் : கீழ் மட்டமானது.
மகரந்தச் சேர்க்கை : வண்டினத்தால்.
பயன் : இதன் மலர் நறுமணம் மிக்கதாகலின், கண்ணி, மாலையாகத் தொடுத்துச் சூடிக் கொள்வர். விழாக்களில் அலங்காரப் பொருளாகப் பயன்படும். மலர்களில் இருந்து ‘ஜாஸ்மின் ஆயில்’ எனப்படும் நறுமண எண்ணெய் எடுக்கப்பட்டுப் பலவாறாகப் பயன்படுத்தப்படுகிறது. மலருக்காக இக்கொடி, பெரும் அளவில் மலர்த் தோட்டங்களில் பயிரிடப் படுவதோடு, வீட்டுத் தோட்டங்களிலும், திருக்கோயில் மலர் வனங்களிலும் வளர்க்கப்படுகிறது.