சங்க இலக்கியத் தாவரங்கள்/087-150

 

குடசம்–வெட்பாலை
ஹோலரீனா ஆன்டிடிசென்ட்ரிகா
(Holarrhena antidysentrica,Wall.)

‘வான்பூங்குடசம்’ (குறிஞ். 67) என்னும் கபிலரின் சொற்றொடருக்கு ‘வெள்ளிய பூவினை உடைய வெட்பாலைப்பூ’ என்று உரை கூறுவர் நச்சினார்க்கினியர். மேலும் ‘குடசம்’ என்பது ‘வெட்பாலை’ என்று அடியார்க்கு நல்லார் கூறுதலின் நச்சினார்க்கினியர் உரை வலியுறும்.

சங்க இலக்கியப் பெயர் : குடசம்
பிற்கால இலக்கியப் பெயர் : வெட்பாலை
உலக வழக்குப் பெயர் : கிரிமல்லிகை, வெட்பாலை, குடசப்பாலை, குளப்பாலை
தாவரப் பெயர் : ஹோலரீனா ஆன்டிடிசென்ட்ரிகா
(Holarrhena antidysentrica,Wall.)

குடசம்–வெட்பாலை இலக்கியம்

‘வடவனம் வாகை வான்பூங் குடசம்’ (குறிஞ். 67) என்றார் குறிஞ்சிக் கபிலர். இதற்கு ‘வெள்ளிய பூவினையுடைய வெட்பாலைப்பூ’ என்று நச்சினார்க்கினியர் உரை கண்டார். சிலப்பதிகாரத்தில்[1] புறஞ்சேரியிறுத்த காதையில் ‘குடசம்’ என்பதற்கு அடியார்க்கு நல்லார் வெட்பாலை என்றார். எனினும் ஊர்காண் காதையில் வரும் ‘குடசம்’ என்பதற்கு அவர் ‘செங்குடசம் பூ’ என்று உரை கூறுவர். ஆதலின் குடசத்தில் செம்மை வகை உண்டென அறியலாம். மேலும் ‘குரற்றலைக் கூந்தல் குடசம் பொருந்தி’[2] என்றமையால் இப்பூவை மதுரை மகளிர் குடுவர் என்பது அறியப்படும்.

 

குடசம்
(Holarrhena antídysentrica)

இடைக்காலத்தில் இதனைக் கிரிமல்லிகை என்றனர். மல்லிகைப் பெயர் பெற்ற இதனால் வெட்பாலையாம் வெண்மைக் குடசம் பூவும் சூடப்பட்டிருத்தல் கூடும். குடசம் தாவரவியலில் ‘அப்போசைனேசி’ என்னும் தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. இதற்கு ஹோலரீனா ஆன்டீடிசென்ட்ரிகா என்று பெயர். இது ஒரு சிறு மரம். எல்லாக் காடுகளிலும், 1000 மீட்டர் உயரமான மலைப்பகுதிகளிலும் வளரும். வட இந்தியாவில் மிகுதியாகக் காணப்படுகிறது. இதனுடைய சிற்றினப் பெயரை நோக்கினால், இது ‘டிசென்ட்டரி’ என்னும் சீதள வயிற்றுப் போக்குக்கு மருந்தாகும் என்று தெரிகிறது. குணபாடம்[3], இதனைக் ‘குடசப் பாலை’ என்றும், இது பேதியைக் கட்டும் என்றும் ‘வெட்பாலை’யாகிய குடசம் கசப்புடையதென்றும் கூறுகின்றது.

ஆகவே குடசம் என்னும் வெட்பாலை மரத்தின் பட்டை, நல்ல மருந்துப் பொருள் என்றும் கூறப்படும்.

குடசம்—வெட்பாலை தாவர அறிவியல்

தாவர இயல் வகை : பூக்கும் இரு வித்திலைத் தாவரம்
தாவரத் தொகுதி : அகவிதழ் இணைந்தவை;
பைகார்ப்பெல்லேட்டே
தாவரக் குடும்பம் : அப்போசைனேசி (Apocynaceae)
தாவரப் பேரினப் பெயர் : ஹோலரீனா (Holarinena)
தாவரச் சிற்றினப் பெயர் : ஆண்டிடிசென்ட்ரிகா (antidysentrica,Wall. )
தாவர இயல்பு : நேராக வளரும் சிறு மரம். இலையுதிர் காடுகளிலும், 1000 மீட்டர் வரை உயரமான மலைப்பகுதிகளிலும் வளர்கிறது.
 

குடசம்
(Holarrhena antídysentrica)

தாவர வளரியல்பு : மீசோபைட்
இலை : அகன்ற, பெரிய, பசிய, மெல்லிய, பளபளப்பான, நீள் முட்டை வடிவான தனி இலைகள் எதிரடுக்கில் உண்டாகும். 6–12 அங்குல நீளமும், 1.5-5 அங்குல அகலமும் உள்ளதென்பர்.
மஞ்சரி : கிளை நுனியிலும், இலைக் கோணத்திலும் நுனி வளராப் பூந்துணர் ‘காம்போஸ் சைம்’ எனப்படும்.
மலர் : வெண்மை நிறமானது. இதனால் வெட்பாலை எனப்படுகிறது. கபிலரும் வான்பூங்குடசம் என்றார். 1-2 அங்குல அகலமானதென்பர்.
புல்லி வட்டம் : 5 பிரிவான குறுகிய புறவிதழ்கள் அடியில் சுரப்பிகள் காணப்படும்.
அல்லி வட்டம் : அகவிதழ்கள் இணைந்து, மேலே தாம்பாளம் போன்றது. அடியில் அல்லிக் குழல் மெல்லியது. தாதிழைகளுக்கு எதிரில், சற்று விரிந்திருக்கும். மடல்கள் ஐந்தும் வலப்புறமாகத் திருகமைப்பில் காணப்படும்.
மகரந்த வட்டம் : அல்லிக் குழலின் அடியில் தாதிழைகள் உள்ளன. தாதுப்பை ஈட்டி வடிவானது. நுனியில் கூரியது.
சூலக வட்டம் : இரு சூலறைச் சூலகம். இழை போன்ற சூல் தண்டு குட்டையானது. சூல்முடி இரு பிளவானது. சூலறைகளில் பல சூல்கள்.
கனி : இரண்டு நீண்ட ஒரு புற வெடி கனிகள் (மெரிகார்ப்) மேலே இணைந்திருக்கும். 8-16 அங்குல நீளமும், அரை அங்குல அகலமும் உள்ளது.
விதை :
நீண்ட, குழிந்த, அரை அங்குல நீளமான விதையின் நுனியில் நீண்ட பட்டிழைகள் காணப்படும்: இவை எளிதில் உதிரும்; விதையிலை அகன்றிருக்கும்; சூல் முளை குட்டையானது; மேலானது.

இம்மரம் பெரும்பாலும் இமயம் முதல் திருவாங்கூர் வரையிலுமுள்ள காடுகளில் 3500 அடி உயரமான மலைப் பாங்கில் வளரும் என்பர். இப்பேரினத்தில் இரண்டு சிற்றினங்கள் உண்டென்றும், இவை மலாக்கா, சீலங்கா காடுகளில் வளர்கின்றன என்றுங் கூறுவர். இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 என இராகவன். ஆர். எஸ். (1959 பி) என்பாரும், தபதார்சென் (1960) என்பாரும் கூறுவர். 1. சிலப். 18:157
 2. சிலப். 14: 87
 3. “வாதம்அறும் பேதிகட்டும் மாறாத நீரிழிவும்
   காதம்போம் மேகம் கடக்குங்காண்-தீதடரப்
   பொங்கு கரப்பானும் போகா இரணமும்போம்
   இங்குக் குடசப் பாலைக்கே”
  -அகத்தியர் குணபாடம்