சங்க இலக்கியத் தாவரங்கள்/088-150
நந்தி–நந்தியாவட்டம்
எர்வட்டாமியா கோரோனேரியா
(Ervatamia coronaria,Stapf.)
குறிஞ்சிப்பாட்டில் (91) கபிலர் கூறும் ‘நந்தி’ என்பதற்கு நச்சினார்க்கினியர் ‘நந்தியாவட்டப் பூ’ என்று உரை கண்டார். நந்தியாவட்டம் ஒரு புதர்ச்செடி.பல்லாண்டு வாழும் இயல்பிற்று.
சங்க இலக்கியப் பெயர் | : | நந்தி |
பிற்கால இலக்கியப் பெயர் | : | நந்தியாவட்டம், நந்தியாவர்த்தம் |
உலக வழக்குப் பெயர் | : | நந்தியாவட்டை, வலம்புரி |
தாவரப் பெயர் | : | எர்வட்டாமியா கோரோனேரியா (Ervatamia coronaria,Stapf.) |
நந்தி இலக்கியம்
குறிஞ்சிப் பாட்டில் கபிலர் இதனை ‘நந்தி’ என்று குறிப்பிடுகின்றார்.
“நந்தி நறவம் நறும்புன் னாகம்”-குறிஞ். 91
‘நந்தி’ என்பதற்கு உரை கூறிய நச்சினார்க்கினியர் ‘நந்தியா வட்டப் பூ’ என்றார். பிங்கலம்,
“வலம்புரி நந்தியா வர்த்த மாகும்”[1]
என்று கூறி வலம்புரி என்னும் இன்னொரு பெயரையும் இதற்கேற்றும். இதன் மலரின் அகஇதழ்கள் ஐந்தும் அடியில் இணைந்திருப்பினும் மேலே மடல் விரிந்து ஒன்றிற்கொன்று நந்தாமல் வலப்புற வட்டமாக அமைந்துள்ளமையின் ‘நந்தியாவட்டம்’ என்ற பெயர் பெற்றது. எனினும், தாவரப் பேரறிஞர் ‘காம்பிள்’ இப்பேரினத்தில் 3 சிற்றினங்கள் தமிழ் நாட்டில் வளர்கின்றன எனவும், இவற்றின் அகவிதழ்கள் (அல்லி வட்டம்) வலமாகவோ, இடமாகவோ சுழலடுக்கில் அமைந்திருக்குமெனவும் கூறுவர்.
இது, பல்லாண்டு வாழும் புதர்ச் செடி. இது கொத்தாகப் பூக்கும். மலர்கள் வெண்ணிறமானவை. சிவபூசைக்குரிய எண்மலர்களில் இதுவும் ஒன்றென்பர்.
“நந்தி வட்டத்தொடு கொன்றை வளாவிய
நம்பன்[2]
என்று சிவபெருமானை நாவுக்கரசர், பாடுகின்றார். மேலும் ‘நந்தியா வர்த்தாமன்’[3] என்று இதனைச் சூடாமணி நிகண்டு கூறும். இதனை முல்லை நிலப்பூ என்பர். சங்க இலக்கியத்தில் வேறெங்கும் இதன் பெயர் காணப்படவில்லை.
நந்தி தாவர அறிவியல்
தாவர இயல் வகை | : | பூக்கும் இரு வித்திலைத் தாவரம் |
தாவரத் தொகுதி | : | பைகார்ப்பெல்லேட்டே (அகவிதழ் இணைந்தவை) |
தாவரக் குடும்பம் | : | அப்போசைனேசி (Apocynaceae) |
தாவரப் பேரினப் பெயர் | : | எர்வட்டாமியா (Ervatamia) |
தாவரச் சிற்றினப் பெயர் | : | கோரோனேரியா (coronaria, Stapf.) |
தாவர இயல்பு | : | புதர்ச் செடி. பல்லாண்டு வாழும். 2-2.5 மீ உயரமாகவும், கிளைத்தும், அடர்ந்து வளரும். |
தாவர வளரியல்பு | : | மீசோபைட் |
இலை | : | தனி இலை. எதிரடுக்கில், இலைச் செதிலுடையது. இலைக் கோணத்தில் பல நுண்ணிய சுரப்பிகள் உள்ளன. |
மஞ்சரி | : | கிளை நுனியில் நுனி வளராப் பூந்துணர். |
மலர் | : | வெண்மை நிறமானது. தாம்பாள வடிவானது. வட்டமாகத் தோன்றும். அழகானது. அகவிதழ்கள் அடியில் இணைந்து, குழல் வடிவாயிருக்கும். |
புல்லி வட்டம் | : | 5 பசிய புறவிதழ்கள் சிறியன; அடியில் சுரப்பியுண்டு. |
அல்லி வட்டம் | : | 5 இதழ்கள் அடியில் இணைந்து, நீண்ட குழல் வடிவாக இருக்கும். 2-3 மி.மீ. நீளமானது. மேலே மடல் விரிந்து, ஒன்றையொன்று தழுவியிருக்கும். சுற்றடுக்கு முறை. காம்பிள் என்பவர் இவை இடமாகத் தழுவியிருக்கும் என்றும், வலமாகத் தழுவியிருப்பதை எர்வட்டாமியா காடேடா என்றும் கூறுவர். இதில் அடுக்கு நந்தியாவட்டம் என்ற மலரும் உண்டு. இதில் 5 அகவிதழ்களைக் கொண்ட மூன்றடுக்குகள் உள்ளன. |
மகரந்த வட்டம் | : | 5 மகரந்தத் தாள்கள் குட்டையானவை. மகரந்தப் பைகள் நீண்டு கூரியன. |
சூலக வட்டம் | : | 2 சூலக அறைகளைக் கொண்டது. பல சூல்கள் விளையும். இழை போன்ற சூல் தண்டு நீளமானது. சூல்முடி இரு பிளப்புடையது. |
கனி | : | ஒரு புற வெடி கனி போன்ற 2 மெர்ரி கார்ப்பஸ் உண்டாகும். 3-6 விதைகள். |
இம்மலர் கண் நோய்க்கு நல்ல மருந்தென்பர். இது முன்னர் டாபர்னமோன்டானா கோரோனேரியா (Tabernaemontana Coronaria, willd .) எனப்பட்டது. இதன் குரோமோசோம் எண்ணிக்கை 2n = 22 எனப் பதக் முதலியோரும் (1949) மாங்கிநாட். எஸ்., மாங்கிநாட். ஜி., (1958, 1962) என்போரும் கூறுவர்.