சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்/மாநில சுயாட்சித் தீர்மானம்-3

ம.பொ.சி.பதில்
3

முதல்வர் பேசியதையடுத்து தமது தீர்மானம் பற்றிய விவாதத்தை முடித்து வைத்து ம.பொ.சி. பேசியது வருமாறு:

பேரவைத் தலைவரவர்களே! நான் முன்மொழிந்த மாநில சுயாட்சித் தீர்மானத்தை பலர் ஆதரித்துப் பேசினார்கள். அவர்களுக்கு என்னுடைய நன்றியையும் பாராட்டுதலையும் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

"மாநிலங்களுக்கு ஓரளவிற்கு மேலான அதிகாரங்கள் தேவைதான்" என்று சொல்லிக் கொண்டு தீர்மானத்தை எதிர்க்கும் பாணியில் பேசினார் எதிர்க்கட்சித் தலைவர். "தீர்மானம் முழுமை பெறவில்லை. என்னென்ன கேட்கிறீர்கள்?" என்று கூறினார்கள். அது நான் காட்டிய கண்ணியம் என்று சொல்லுகின்றேன். இந்தப் பேரவையைக் கட்டுப்படுத்தி விடக்கூடிய நிலையில் தீர்மானத்தை நான் அமைக்கவில்லை.

சுயாட்சி அடிப்படையில் கூடுதலாக என்னென்ன அதிகாரங்கள் தேவை என்பதனை எதிர்க்கட்சித் தலைவர்களே கூட, திருத்தத் தீர்மானமாகக் கொடுத்திருக்கலாம்.

பாதுகாப்பு, போக்குவரத்து, அயல்நாட்டுறவு ஆகிய மூன்று அதிகாரங்களைத் தவிர மற்ற அதிகாரங்கள் மாநிலங்களுக்குத் தேவை என்று அவர்கள் திருத்தம் கொடுத்திருந்தால், அதை நான் ஏற்றுக்கொண்டிருப்பேன். ஆனால், அவர்கள் அப்படித் தரவில்லை.

எடுத்ததற்கெல்லாம் 'பிரிவினை' - 'பிரிவினை' என்று அலறுகிறார்கள். நான் மிகவும் வருத்தத்தோடும் உணர்ச்சியோடும் எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு ஒன்றைச் சொல்லிக் கொள்ளுகின்றேன்; அதாவது, தமிழரசுக் கழகத்தாராகிய நாங்கள் தேசபக்தி இல்லாதவர்களல்ல என்பதை எடுத்துக் கூற விரும்புகின்றேன்.

'தேசபக்தி' என்பது சிண்டிகேட் காங்கிரசின் சொந்தச் சொத்து அல்ல; 'தேசபக்தி' என்பது, நான் இங்கு வாயளவில் சொல்லிக் காட்டுவதன்று. 45 ஆண்டு காலமாக தேசபக்தனாக வாழ்ந்து காட்டி, அதன் பின்னர்தான் இந்தத் தீர்மானத்தை நான் இங்கு கொண்டு வந்திருக்கிறேன்.

இந்தியாவின் மீது எனக்குள்ள பக்தியின் காரணமாகத் தான் இந்தத் தீர்மானத்தை இந்தப் பேரவையில் கொண்டு வந்திருக்கிறேன். 'காங்கிரஸ் தலைவர்கள்' என்று சொல்லிக் கொள்ளும் சில சுயநலக்காரர்கள் செய்யும் தவறினால் இந்தியாவின் எதிர்காலம் இருண்டு விடுமோ என்று பயந்துதான்-அதைத் தடுத்து நிறுத்தத்தான்-இந்தத் தீர்மானத்தை நான் கொண்டு வந்திருக்கிறேன்.

எந்தத் தேசபக்தியோடு நான் விடுதலைப் போரின்போது சிறைச்சாலைக்குச் சென்றேனோ, அதே தேசபக்தியோடுதான் இந்தத் தீர்மானத்தை இங்கு முன்மொழிந்திருக்கிறேன்.

இந்தத் தீர்மானத்திலுள்ள மாநில சுயாட்சிக் கருத்துக்கூட, எனக்குச் சொந்தமானதன்று. காங்கிரசிடமிருந்து, காந்தியடிகளிடமிருந்து, பண்டித ஜவகர்லால் நேருவிடமிருந்து கற்றுக் கொண்டதுதான்.

"விடுதலைப் போராட்டத்தின்போது நாங்கள்கூட, 'சுயாட்சி'-'சமஷ்டி' என்றெல்லாம் சொன்னோம்" என்று எதிர்க்கட்சித் தலைவர் சென்னார். விடுதலைப் போராட்ட காலத்தில் மக்களுக்கு-மாநிலங்களுக்கு, "மாநிலங்களில் சுயாட்சியும் மத்தியில் சமஷ்டியும் அமையும்" என்று காங்கிரஸ் உறுதி மொழி கொடுத்து, விடுதலைக்குப் பின் மக்களை-மாநிலங்களை ஏமாற்றிவிட்டது என்பதனை எதிர்க்கட்சித் தலைவரே ஒப்புக் கொள்ளுகிறார். இந்தப் போக்கு நியாயம் என்று எதிர்க்கட்சித் தலைவரவர்கள் கூறுவார்களா?

விடுதலைப் போராட்ட காலத்தில் மட்டுமல்லாமல், விடுதலைக்குப் பின்னரும்கூட மாநில சுயாட்சி காங்கிரஸ் கட்சியால் வற்புறுத்தப்பட்டு வந்துள்ளது.

சுதந்திரப் போராட்டம் நடத்தப்பட்ட காலத்தில் அரிபுராவிலும், திரிபுராவிலும் காங்கிரஸ் மகாசபை நடந்தது. அந்த இரண்டு காங்கிரசிலும் மாநில சுயாட்சிக்கு உறுதி கூறும் தீர்மானம் நிறைவேற்றி வைக்கப்பட்டது. அயல் நாட்டுறவு,போக்குவரத்து, பாதுகாப்பு நீங்கலாக, மற்றவையெல்லாம் மாநிலங்களுக்கு வழங்கப்படும்-பிரிந்து வாழும் உரிமையுடன்- என்று தீர்மானம் போடப்பட்டது. இது 1938லும் 1939லும் நிகழ்ந்ததாக நினைக்கிறேன்.

1942ல் காஷ்மீருக்குச் சென்ற மனித குல மாணிக்கம் பண்டித ஜவகர்லால் நேரு அவர்கள், அங்குள்ள மக்களுக்கு உறுதிமொழி கூறும் வகையில், "நான் விரும்புவது பெடரேஷன் கூட அல்ல; கான்பெடரேஷன்" என்று சொன்னார். அதை நம்பித்தான்-விடுதலைக்குப்பின்-காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்தது. பிறகு நடந்ததென்ன?

சுதந்திரம் நெருங்கி வந்த நேரத்தில் அரசியல் நிர்ணய மன்றத்தின் முதல்நாள் கூட்டத்தில் பேசுகையில் நேருஜி என்ன சொன்னார்? "நாம் அமைக்கப் போவது, பெடரேஷன்' என்று சொன்னார். ஆம்; கான்பெடரேஷனிலிருந்து கொஞ்சம் இறங்கி, 'பெடரேஷன்' என்று சொன்னார்.

அரசியல் நிர்ணய மன்றம் அமைவதற்கு முன்பு பிரிட்டிஷ் அமைச்சரவைக் குழு இந்தியாவுக்கு வந்தது. அது, அயல்நாட்டுறவு-போக்குவரத்து பாதுகாப்பு ஆகிய மூன்றையும் மத்திய அரசு வைத்துக்கொண்டு, மற்றவற்றை மிச்ச அதிகாரங்கள் உள்பட-மாநில அரசுகளுக்குத் தரப்படவேண்டுமென்ற திட்டத்தைக் கொண்டு வந்தது. அதனை முணு முணுப்பின்றி ஏற்றுக் கொண்டுதான் காங்கிரஸ் கட்சி அரசியல் நிர்ணய மன்றத்திற்குள் சென்றது.

பின்னர், திடீரென்று ராஜதந்திர விளையாட்டு நடந்தது. அதனால் பாகிஸ்தான் பிரிவினை ஏற்பட்டது.

பாகிஸ்தான் பிரிந்து சென்ற பின்னர்-1947 ஆகஸ்டு 15ல் எஞ்சிய இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர், பிரிட்டிஷ் அமைச்சரவைத் திட்டத்தைக் கைவிட்டது காங்கிரஸ், நாடு துண்டாடப் பட்டதைக் காட்டிப் பயமுறுத்தி, இன்று நடை முறையிலுள்ள யூனியன் அரசியல் அமைப்பை ஏற்படுத்தியது.

காங்கிரஸ் தலைவர்கள் முதலில் 'கான்பெடரேஷன்' என்றார்கள். பின்னர் அதைக் கைவிட்டு, பெடரேஷன் என்றார்கள் பிறகு அதையும் கைவிட்டு 'யூனியன்' அமைத்தார்கள். 1941ல் யு.என்.ஓ.வில்.

"காஷ்மீரம் இந்தியாவிலிருந்து பிரித்தெடுக்க முடியாதபடி அதன் ஒரு அங்கம் என்று சொல்கிறீர்கள். அப்படியானால் இந்தியாவிலுள்ள வேறு மாநிலங்களுக்கு இல்லாதபடி காஷ்மீருக்கு மட்டும் தனியாக அரசியல் நிர்ணய மன்றம் அனைத்துக் கொடுத்ததேன்? அதற்குத் தனிக் கொடி கொடுத்தது எதற்காக? மற்ற மாநில
அமைச்சரவைத் தலைவர்கள் 'முதல்வர்' என்று அழைக்கப்படும் போது, காஷ்மீர் முதல்வர் மட்டும் 'பிரதமர்' என்று அழைக்கப்படுகிறாரே, ஏன்?"

என்று பாகிஸ்தான் பிரதிநிதி வினாவியபோது, அப்போது ஐ.நா. மன்றத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த சர். பி.என்.ராவ் என்ன சொன்னார்? ஆளுங் கட்சியாக இருந்த காங்கிரஸ் அரிபுரா-திரிபுரா மகா சபைகளின் தீர்மானத்தைப் படித்துக் காட்டி,

"காங்கிரஸ் கட்சியின் கொள்கை அனைத்து மாநிலங்களுக்குமே பிரிந்து வாழும் உரிமையுடன் சுயாட்சியளிப்பதுதான், முதலில் காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. நாளடைவில் மற்ற மாநிலங்களுக்கும் வழங்கப்படும்," என்று பதில் கூறியிருக்கிறார்.

ஜவகர்லால் நேரு அவர்கள், தற்போதுள்ள திட்டக் கமிஷனைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அது ஒரு 'பேரலல் கவர்மெண்ட்' (போட்டி அரசாங்கம்) ஆகிவிட்டது" என்று சொல்லியிருக்கிறார். அதன்படி நமது மாநிலம் இரண்டு மத்திய அரசின் ஆதிக்கத்தில் சிக்கியுள்ள நிலைமை இருக்கின்றது. மாநிலம் ஒவ்வொன்றின் மீதும் ஆதிக்கம் செலுத்துவது ஒரு மத்தியமல்ல; இரண்டு மத்தியம்!

எதிர்க்கட்சித் தலைவரவர்கள், 'மாநிலங்களுக்குச் சுயாட்சி கொடுப்பது, பின்னால் அவை பிரிந்து போவதற்குத்தான் இடந்தரும்' என்று சொன்னார். யாரானாலும் சரி; என்ன சொல்கிறோம் என்பதைத் தெரிந்து சொல்ல வேண்டும்.

மைசூருக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையே நதி நீர்த்தகராறு இருக்குமானால், அது மாநிலங்கள் சுயாட்சி பெறுவதனால் எப்படித் தீர்க்கப்படாமற் போகும்? மத்தியில் ஒரு ஆட்சி இல்லாதபடி-இந்தியாவின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் நிலையில் மாநிலங்களுக்கு சுதந்திரம் கேட்டால்தான் இந்த பயத்தை எழுப்பலாம். மத்தியில் ஒரு ஆட்சி-சமஷ்டி அரசு இருக்கும் நிலையில் அது மத்திய ஆட்சியாக மட்டுமல்லாமல், மாநிலங்களிடையிலேற்படும் தகராறுகளைத் தீர்த்துவைக்கும் மத்தியஸ்த ஆட்சியாகவும் செயல்பட வாய்ப்பு இருக்கும் நிலையில் மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குவதால் எப்படிக் கேடு ஏற்படும்? எதிர்க்கட்சித் தலைவர் தாம் பேசுவதின் பொருள் உணர்ந்து பேச வேண்டும்.

இன்று என்னுடன் சேர்ந்து மாநில சுயாட்சி கேட்கும் தி.மு.கழகத்தினர் முன்பு நாட்டுப் பிரிவினை கேட்டார்கள் என்கிறார் எதிர்க்கட்சித் தலைவர். காங்கிரஸ் கட்சி கூடத்தான் முதலில் பிரிட்டிஷ் அரச விசுவாசிகளின் ஸ்தாபனமாக இருந்தது. அப்போது, பிரிட்டிஷ் ஆதிக்கத்திற்குட்பட்ட டொமினியன் ஸ்டேட்ஸ் (குடியேற்ற நாட்டு அந்தஸ்து) தான் கேட்டது. கால வளர்ச்சியிலே பரிபூரண சுதந்தரக் கோரிக்கைக்கு காங்கிரஸ் தன்னை அர்ப்பணித்துக் கொண்டது.

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்கள், "நாங்கள் பிரிவினை கேட்பதைக் கைவிட்டாலும், அப்படிக் கேட்டதற்கான காரணங்கள் போகவில்லை" என்று சொல்லுகிறார்கள். அதிலே தவறு (பிரிவினைக்கான உள் நோக்கம்) இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. மத்திய அரசு மாநிலங்களை நடத்தும் போக்கில் அதிருப்தி கொண்டு-மாநில சுயாட்சி கேட்டால் கிடைக்காது என்ற அவநம்பிக்கை காரணமாக, முன்பு அவர்கள் பிரிவினை கேட்டார்கள்.

இன்று மாநிலந்தோறும் மக்கள் மனோநிலை மாறி வருகிறது. சில மாநிலங்களில் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு உடன்பாடுடைய கம்யூனிஸ்டுக் கட்சி சில மாநிலங்களிலே ஆட்சிக்கு வருகிற நிலை ஏற்பட்ட பின்னர், நாட்டின் அரசியல் சூழ்நிலை மாறிவிட்டது. அத்துடன், இந்தியாவைச் சுற்றிலும் பகை உணர்வு இருக்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது. அதனால், இன்றைய மாறுபட்ட சூழ்நிலையில் பிரிவினை தேவையில்லை என்பதனை உணர்ந்து, மாநில சுயாட்சி கேட்கிறது தி.மு.க.

எதிர்க்கட்சியினருக்கு உண்மையான தேசபக்தி இருக்குமானால், இந்த மனமாற்றத்தை இரு கைகளையும் கொடுத்து வரவேற்று இருக்க வேண்டும். மாநில சுயாட்சிக் கோரிக்கை அடிப்படையில் சமரசப் பேச்சைத் தொடங்கியிருக்க வேண்டும்.

திரு. கருத்திருமன்: 'தேசபக்தி இருக்குமானால்...' என்று சொன்னால் நான் தேசபக்தி இல்லாதவனா?

பேரவைத் துணைத் தலைவர்: நீங்கள் பேசும்போது அப்படிச் சொல்லவில்லையா?

ம.பொ.சி. அப்படி நான் கருதியிருந்தால், 'தேசபக்தி இல்லாதவர்' என்று முற்றுப்புள்ளி வைத்தே சொல்லியிருப்பேன். ஆனால், நான் கமா போட்டு, அவர் (எதிர்க்கட்சித் தலைவர்) எழுந்து, தனக்குத் தேசபக்தி இருப்பதாகச் சொல்லட்டும்; விவாதத்திற்குக் கொஞ்சம் சுவை யூட்டட்டும் என்றுதான் நிறுத்தி வைத்தேன். அவருக்கு தேசபக்தி இருக்கிறது என்பதை ஏற்றுக் கொள்ளுகிறேன்.

எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு ஒரு நிகழ்ச்சியை நினைப்பூட்ட விரும்புகிறேன்; தஞ்சை பிரகதீசுவரர் கோயில் தமிழ் நாட்டைச் சேர்ந்தது- தமிழ் மன்னரால் கட்டப்பட்டது. அந்தக் கோயிலிலே- அதைக் கட்டிய மன்னனின் சிலையை வைக்க இந்த மாநில ஆட்சி ஒரு சிறப்பான இடத்தைத் தேர்ந்தெடுத்துச் சொன்னால், அதை மத்திய அரசு ஏற்கவில்லை. கோயிலைக் கட்டியவனுடைய-அதற்கு மானியம் விட்டவனுடைய உருவச் சிலையை, காவல்காரனைப் போல, கோயிலின் நுழைவாயிலிலே வைக்கவேண்டும்; உள்ளே வைக்கக்கூடாது" என்று மத்திய அரசு கூறுகிறது.

நம் நாட்டின அரசியல் சட்டத்தை வரைந்த அறிஞர்கள் எப்படியெல்லாம் அதனை வரைந்தனர் என்பது பற்றிக் கூறியுள்ளனர். அதனை அரசியல் நிர்ணய மன்ற நடவடிக்கைப் புத்தகத்தில் காணலாம். அமெரிக்க அரசியல் சட்டம், பிரிட்டிஷ் அரசியல் சம்பிரதாயம், ஸ்விட்சர்லந்து அரசியல் சட்டம் ஆகியவற்றையெல்லாம் அராய்ந்து பார்த்து அவற்றிலுள்ள நல்லவற்றையெல்லாம் எடுத்துக் கொண்டார்கள் என்று தெரிகிறது.

அவர்கள் எடுத்துக் கொள்ளத் தவறிய நல்லவை இன்னுமுண்டு; அவற்றையும் நம்முடைய அரசியல் அமைப்புச் சட்டத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றுதான் சொல்லுவேன்.

அமெரிக்கா, ஒரு 'கான்பெடரேஷன்'-பெடரேஷன் 'என்று வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள்! யு.எஸ்.ஏ (யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆப் அமெரிக்கா) என்ற அதன் பெயரே, அது ஒரு பெடரேஷன் என்பதனைக் காட்டுகிறது. ருஷ்யா, (யு.எஸ்.எஸ்.ஆர்.) (யூனியன் ஆப் சோவியத் சோசலிசக் குடியரசுகள்) என்ற தனது பெயராலேயே தான் ஒரு பெடரேஷன் என்பதனைக் காட்டுகிறது.

'இந்தியா' ஒரு சமஷ்டி நாடு என்பதை அதன் அரசியலைத் தயாரித்தவர்கள் காட்டத் தவறி விட்டார்கள்.

எனது தீர்மானத்தில் 'தமிழக சுயாட்சி' என்றெல்லாம், 'மாநில சுயாட்சி' என்றுதான் சொல்லியிருக்கிறேன். தமிழரசுக் கழகமும் தி.மு.கவும் மாநிலக் கட்சிகளாக இருக்கலாம். ஆனால், இந்தக் கழகங்கள் இந்திய தேசிய ஒருமைப்பாட்டை ஐயத்திற்கிடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளன. அதனால், அகில இந்திய நோக்குடன் இந்தப் பிரச்னையை அணுகி, அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி கோருகின்றன. மாநில நோக்குடன் தமிழகத்திற்கு மட்டும் சுயாட்சி கோரவில்லை. ஆனால், அப்படித்தான் கோருகிறோம் என்ற ஒரு தவறான எண்ணத்தைக் கற்பிக்க நினைக்கிறார்கள்.

அனைத்து மாநிலங்களுக்கும் சுயாட்சி என்பது அகில இந்தியக் கொள்கை. இந்த அடிப்படையில் 'தமிழக சுயாட்சி' என்பது கோரிக்கை. ஆக, அகில இந்திய ரீதியிலான கொள்கைக்கும் மாநில அளவிலான கோரிக்கைக்குமுள்ள உடன்பாட்டை எதிர்க்கட்சித் தலைவரவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அமெரிக்காவை எடுத்துக் கொண்டால், 18 ராஜ்யங்களோடு அமெரிக்க சமஷ்டி ஆரம்பமானது. மாநிலங்களுக்கு பரிபூரண சுயாட்சியும்-பிரிந்து வாழும் உரிமையும் (ஆரம்பத்தில்) கொடுக்கப்பட்டன. ஒவ்வொரு ராஜ்யத்திற்கும் தனிக் கொடியும் தனியாக ராஜ்ய கீதமும் வைத்துக்கொள்ள உரிமை வழங்கப்பட்டன. அதனால், ஆரம்பத்தில் சமஷ்டியில் சேர மறுத்த-மாநில உரிமை பறிக்கப் படுமோ என்று சந்தேகங் கொண்ட ராஜ்யங்கள்கூட, பின்னர் வலுவில் வந்து சமஷ்டியிலே இணைந்து கொண்டன. அதனால், 51 ராஜ்யங்களைக் கொண்ட பெரிய பெடரேஷனாக இன்று விரிவடைந்திருக்கிறது அமெரிக்கா.

ருஷ்யாவில் ஜார் ஆட்சி காலத்தில் மாநிலங்களுக்கு சுயாட்சியில்லை. ருஷ்ய மொழி அந்த மொழி வழங்காத மாநிலங்களின் மக்கள் மீது திணிக்கப்பட்டது. ஏறக்குறைய இந்தியா இன்றுயிருக்கக்கூடிய நிலையில் ஜார் ஆட்சி காலத்தில் ருஷ்யா இருந்தது.

பின்னர், இந்த நிலை மாறியது. சோவியத் சோசலிச ஆட்சியிலே, மாநிலங்களுக்கு பிரிந்து வாழக்கூடிய உரிமையோடு சுயாட்சியும் தனிக் கொடியும் வழங்கப்பட்டன. மாநில மொழிகளின் காப்புக்கு உத்தரவாதமளிக்கப்பட்டது. அதன் விளைவாக, ஜார் ஆட்சி காலத்தில் இருந்ததைவிட, இன்றைய சோவியத் ருஷ்யா நிலப் பரப்பில் விரிவடைந்திருக்கிறது. அண்டையிலுள்ள ஹாலந்து, ருமேனியா ஆகிய நாடுகளோடு ஜார் ஆட்சிக் காலத்தில் சேர்க்கவிட்டுப் போன பகுதிகளும் திரும்பவும் சோவியத் ருஷ்யாவோடு இணைக்கப்பட்டு, மாபெரும் ருஷ்யா உருவாகியிருப்பதைப் பார்க்கிறோம்.

மாநிலங்களுக்குச் சுயாட்சி கொடுத்ததன் விளைவாக எந்த சமஷ்டி நாட்டிலாவது பிரிவினை ஏற்பட்டதுண்டா? உண்டென்றால், எதிர்க்கட்சித் தலைவர் எடுத்துக் காட்டட்டுமே!

பாகிஸ்தானை எடுத்துக் கொள்வோம். அங்கு மொழிவழி மாநிலங்கள் ரத்து செய்யப்பட்டன. மேற்கு பாகிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் என இரண்டு மாநிலங்களையே வைத்து அந்த மாநிலங்களுக்கும் சுயாட்சி கொடுக்க மறுத்தார் ராணுவ ஜனாதிபதியான அயூப்கான். அவருக்குப் பின் வந்த அதிபர் யாகியாகான் அயூப்கானின் கொள்கையையே பின்பற்ற முயன்று முடியாமற் போகவே, இன்றையதினம் சுயாட்சியுடைய மொழிவழி ராஜ்யங்களை அமைத்துக் கொள்ள அனுமதித்துள்ளார். இதைப் பார்க்கும்போது, இராணுவ ஆட்சியாலேயே சாதிக்க முடியாத ஒன்றை ஜனநாயக ஆட்சியிலே நீங்கள் (எதிர்ப்பாளர்கள்) சாதிக்க முடியும் என்று நினைப்பதுதான் எனக்கு அச்சத்தைத் தருகின்றது. இது, நாட்டை எங்கு கொண்டு போகுமோ என்று அஞ்சுகின்றேன்.

இங்கு பேசியவர்கள், "மாநிலங்களுக்குச் சுயாட்சி வேண்டுமென்று கேட்டால், கிராம சுயாட்சி கேட்பார்களே" என்று சொன்னார்கள். அவர்களுக்குச் சொல்லுகிறேன். நான் காந்தியத்தை ஓரளவு புரிந்து கொண்டவன், ஆகவே, நான் கிராம சுயாட்சியை மறுப்பவனல்லன். ஆனால், அதை மாநில சுயாட்சிக்கு எதிர்வாதமாக வைக்க வேண்டாம். கிராம சுயாட்சியின் தொடக்கமாகத்தான் பஞ்சாயத்து யூனியன்கள் நிறுவப்பட்டுள்ளன. கிராம சுயாட்சி வளர்ந்துகொண்டுதான் வருகின்றது. ஆனால், நாடு சுதந்தரம் பெற்றபின்னுள்ள 23 ஆண்டு காலத்திலே-அரசியல் அமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர்- மாநிலங்களுக்கு மத்தியிலுள்ள அதிகாரங்கள் பிரித்துத் தரப்பட்டள்ளனவா? மத்தியிலுள்ள அதிகாரங்களில் ஒன்றாவது மாநிலத்திற்கு மாற்றப்பட்டதுண்டா? மாறாக, மாநிலத்திலுள்ள அதிகாரங்களில் சில மத்திய அரசுக்குச் சென்றிருப்பதைக் கண்டிருக்கின்றோம்.

நான் சொல்ல விரும்புவது, ஒரு அரசியல் நிர்ணய மன்றம் அமைத்து இந்தப் பிரச்னையைத் தீர்க்க வேண்டும் என்பதுதான். இப்போதுள்ள பிரச்னை அரசியல் அமைப்புச் சட்டத்தை மாநிலங்களுக்குச் சுயாட்சி வழங்கக்கூடிய வகையில் எப்படித் திருத்துவது என்பதுதான். இங்குள்ள நாம் அரசியல் அமைப்புச் சட்டப்படி நடப்பதாகப் பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளோம். நான் தெய்வத்தின் பேரில் பிரமாணம் செய்துள்ளேன். ஒரு வேளை எதிர் வரிசையில் இருப்பவர்களின் (தி.மு.க. வினரின்) தெய்வ நம்பிக்கையை எதிர்க்கட்சித் தலைவரவர்கள் சந்தேகித்தாலும் என்னைப் பொறுத்தவரையில் அவ்விதம் சந்தேகிக்க மாட்டார் என்று நம்புகின்றேன்.

அரசியல் சட்டத்தின் 368ஆவது விதிப்படியே அந்த அரசியல் சட்டத்தை நாம் திருத்தியமைக்க முடியும். சில திருத்தங்களுக்கு நாடாளு மன்ற உறுப்பினர்களில் மூன்றிலிரண்டு பங்கினர் ஆதரவு வேண்டும். அதன்படித்தான் நேற்றுகூட நாடாளுமன்றம் அரசியல் சட்டத்தில் ஒரு திருத்தம் செய்திருக்கிறது. அதுபோல், அரசியல் அமைப்புச் சட்டத்தைத் திருத்துவதற்கு மத்திய அரசு ஒரு மசோதா கொண்டு வருமானால், இன்றுள்ள அரசியல் சட்டத்திற்கு உட்பட்டே நாம் கோருகிற மாநில சுயாட்சியை அடைய முடியும்.

நக்சல்பாரிகளை ஒடுக்க இந்திரா அரசு எதுவுஞ் செய்யவில்லையே என்று சிண்டிகேட் காங்கிரசார் சொல்லுகிறார்கள். இன்றுள்ள அரசியல் சட்டத்தின்மீது ஏற்பட்டுள்ள அவ நம்பிக்கையின் அகோர வடிவம்தான் நக்சலைட்ஸ். இன்று படித்த இளைஞர்கள்-பட்டதாரிகள் நக்சலைட்ஸ்களாக மாறிக்கொண்டு வருகிறார்கள். அவர்களின் எண்ணிக்கை பெருகும்படி விடாதீர்கள்!

உறுப்பினர் திரு. கோதண்டராமையா (சுதந்திரா) அவர்கள், இந்தத் தீர்மானத்தை இப்போது நிறைவேற்ற வேண்டாம். வேண்டுமானால், 1972க்குப் பின் பார்த்துக் கொள்ளலாம்– என்றார். எந்த நம்பிக்கையில் அவர் அவ்விதம் கூறினார் என்பது எனக்குப் புரியவில்லை. நான் உறுதியாகச் சொல்லுகிறேன். 1972க்குள் மாநில சுயாட்சிக்கு உத்தரவாதம் தரப்பட வில்லையானால், 72க்குப் பிறகு இந்தியா அமைதியாக இருக்கும் என்று யாரும் உத்தரவாதம் கொடுக்க முடியாது.

முன்பொரு சமயம் 'அஸாம் அஸாமியருக்கே' என்ற குரல் எழுந்தது. 'அதுபற்றி உங்கள் கருத்தென்ன? என்று காந்தியடிகளிடம் கேட்டபோது, அவர் கூறினார்.

'அசாம் அசாமியருக்குத்தான். அதை மறுக்க முடியாது. ஆனால் அதற்கொரு நிபந்தனையுண்டு' என்றார். அதாவது, "இந்திய நாட்டின் ஐக்கியத்தை அசாமியர் ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றார்.

"இந்தியாவுக்கு எத்தகைய சுதந்திரத்தை நான் விரும்புகிறேனோ, அதே சுதந்திரத்தை அசாமியர்களுக்கு மட்டுமல்ல; எல்லா மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்."

"அதிகாரம் கோயில் கோபுரம் போல அடிப்புறம் அகன்றும் நுனிப்புறம் குறுகியும் அமைய வேண்டும்" என்று அடிகள் கூறியுள்ளார்.

திரும்பவும் சொல்லுகின்றேன்; அரிபுரா, திரிபுரா காங்கிரஸ் மகாசபைகளின் தீர்மானத்திலும், அரசியல் நிர்ணய சபையின் முதல் நாள் கூட்டத்தில் பண்டித நேரு நிகழ்த்திய சொற்பொழிவிலும், காங்கிரஸ் மகாசபையால் ஏற்றுக் கொள்ளபட்ட பிரிட்டிஷ் அமைச்சரவைத் தூதுக்குழுவின் திட்டத்திலும் டீசென்ட்ரலைஸேஷன் (அதிகாரப் பரவல்) என்பது ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

திரு.கே.அனுமந்தையா அவர்கள் தலைமையில் இயங்கிய நிர்வாகச் சீர்த்திருத்தக் கமிஷன் சிபாரிசிலும் மத்தியில அதிகாரங்கள் குவிந்துகொண்டே போகிறதென்றும், அது நாட்டுக்கு நன்மை தராதென்றும் கூறப்பட்டுள்ளது என்பதனை எதிர்க்கட்சித் தலைவரவர்களுக்கு நினைப்பூட்டுகின்றேன்.

இறுதியாக ஒன்றைச் சொல்லி எனது பேச்சை முடிக்க விரும்புகிறேன்.

மொழிவழியே தமிழ் மாநிலம் வேண்டுமென்று நான் கோரியதுபோது, அது "காட்டுமிராண்டிகள் கொள்கை" என்றார் ஒரு பெரியவர். அதை அப்போது நான் சகித்துக் கொண்டேன்.

வடக்கெல்லைப் பகுதிகளை-தெற்கெல்லைப் பகுதிகளை தமிழகத்துடன் சேர்க்கக் கோரியபோதும், அது 'சின்னப் புத்தி' என்றார்கள். அதையும் சகித்துக் கொண்டேன்.

இன்று நாம் காண்பதென்ன? மொழி வழி தமிழ் மாநிலம் அமைந்துவிட்டது. வடக்கெல்லைப் பகுதிகளும் தெற்கெல்லைப் பகுதிகளும் ஓரளவு கிடைத்திருக்கின்றன.

'தமிழ்நாடு என்று பெயர் வைக்க நான் கோரியபோது, அது சோறு போடுமா?' என்று கேலி பேசினார்கள். அதோடு நில்லாமல், தமிழரசுக் கழகத் தோழர்களில் 1700 பேர்களை நடிகர் உள்பட-சிறையில் அடைத்தார்கள். ஆனால், 'தமிழ் நாடு' பெயர் தீர்மானம் இந்தப் பேரவையில் வந்தபோது, எதிர்க் கட்சியாகி விட்ட காங்கிரசும் ஆதரித்து வோட்டு போட்டதைக் கண்டோம். காங்கிரஸ்காரர்கள் 'தமிழ்நாடு வாழ்க' என்று கோஷித்ததையும் கேட்டோம்.

அன்று நாங்கள் (தமிழரசுக் கழகத்தார்) முதலில் சொன்னபோது அதனை எதிர்த்தவர்கள், பின்னர் ஆதரித்தார்கள். அதுபோல, இதையும் (மாநில சுயாட்சியையும்) காங்கிரஸ்காரர்கள் ஆதரிக்கும் காலம் வரும் என்று நம்பி, முதலமைச்சர் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க எனது தீர்மானத்தை வற்புறுத்தாமல் விடுகிறேன்.