சட்டமன்றத்தில் சுயாட்சிக் குரல்/மாநில சுயாட்சி ம.பொ.சி.யின் படைப்பு!

மாநில சுயாட்சி
ம.பொ.சி.யின் படைப்பு!

மேலவை உறுப்பினர்கள் பேச்சு!

ட்ட மேலவையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தின் மீது 25-4-74 அன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்து கொண்டு முஸ்லிம் லீக் உறுப்பினர் திரு.எம். எம். பக்கர் பேசியபோது தலைவர் ம.பொ.சி. பற்றிக் குறிப்பிட்ட பகுதி வருமாறு:

திரு எம்.எம். பக்கர்

"ம.பொ.சி. அவர்கள் காட்டிய வழியில் முதலமைச்சர் அவர்கள் செல்கிறார்கள்" என்று சொல்லுகிறார்கள். இப்படி ஒரு பேச்சு; இதிலே என்ன தவறு? தான் பிறந்த பொன்னாட்டுக்காக, அதன் சுதந்திரத்திற்காகத் தடியடி பட்டவர், சிறை சென்றவர், பல தியாகத் தழும்புகளை ஏற்றவர். அதுமட்டுமல்லாமல், நாடு சுதந்திரம் அடைந்தவுடனே, தமிழ்நாட்டின் எல்லையைக் காப்பதற்காகத் தன்னுடைய வாழ்க்கையில் பல தியாகங்களைச் செய்தவர்; தன்னுடைய நாட்டின் மொழியை பிறமொழி ஆதிக்கத்தில் இருந்து காப்பதற்காகவும் பல தியாகங்கள் செய்தவர்- இப்படி இந்தத் தமிழ் நாட்டின் மானத்தைக் காப்பதற்காக வரிந்து கட்டிக்கொண்டு பாடுபட்டு வருகிறவர் தமிழ்ப் பெருமகன் சிலம்புச் செல்வர் ஆவார்.

அவரிடம் யோசனை கேட்காமல், தலைவன் என்று வேஷம் போட்டுக் கொண்டு, தரங்கெட்ட முறையில் பேசி வருகின்றவர்களிடமா முதல்வர் யோசனை கேட்கவேண்டும்? இப்படிப் பேசுவது விவரம் தெரியாத பேச்சு ஆகும்.

திரு.எம். சங்கரலிங்கம்

மேலவை தி.மு.க. உறுப்பினர் திரு. எம். சங்கரலிங்கம் அவர்கள் 25-4-74ல் மேலவையில் பேசுகையில் ம.பொ.சி. பற்றிக் குறிப்பிட்டது வருமாறு:

சுதந்தரம் பெறுவதற்கு முன்பு காங்கிரஸ் சமஷ்டி பற்றித்தான் சொல்லி வந்தது. இதைப்பற்றித் துணைத்தலைவர் (ம.பொ.சி.) அவர்கள் விளக்கமாகச் சொல்வார்கள். அவர் காங்கிரஸ் கட்சியிலிருந்து, அந்த இயக்கத்தை வளர்த்து, விடுதலையையும் கொண்டு வந்து, இந்தச் சுயாட்சிக் கருத்தையும் முதிய தலைவர்களின் பேராதரவோடு சொல்லி வந்தார்கள். அவர்கள் அதைப்பற்றி விளக்கமாகச் சொல்லுவார்கள்.

நான்கூட திராவிட முன்னேற்றக் கழகத்தில் பின்னால் வந்து சேர்ந்தவன்தான். நான் நமது துணைத் தலைவர் (ம. பொ. சி.) அவர்களோடு தமிழரசுக் கழகத்திலும், அதற்கு முன்னால் காங்கிரசிலும் இருந்தவன். 1942-ல் சிறைச்சாலை சென்றவன். வைக்கம் போராட்டத்தில் என்னுடைய தந்தையார் பெரியார் ஈ. வே. ரா. அவர்களோடு சிறை சென்றார்கள். நானும் பல போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவன். 1946க்குப் பிறகும் கன்னியா குமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைகிற போராட்டத்தில் சிறை சென்றவன்.

நான் தெளிவாகச் சொல்லுவதாக இருந்தால், திராவிட முன்னேற்றக் கழகம் பிரிவினையை சொல்லுகிறபோது, அதை வன்மையாக நான் எதிர்த்தவன். 1962ல் அவர்கள் பிரிவினையை விட்டு விட்டு சீனப் போரில் இந்த நாட்டினுடைய எல்லாத் தேசிய சக்திகளுக்கும் மிஞ்சி நின்று தேசிய ஐக்கியத்தைக் காப்பாற்றிய பிறகு என்னுடைய கருத்தையெல்லாம் அது ஏற்றுக் கொண்டது.

நம்முடைய துணைத் தலைவர் ம.பொ.சி. அவர்களைப் போல திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பலமாக எதிர்த்தவர்கள் யாரும் இல்லை என்று சொல்லலாம். அவருக்கு தனிப்பட்ட வகையில் தி.மு.க. தலைவர்கள் மீது காழ்ப்பு இல்லை. பிரிவினைக் கொள்கையில் அவருக்கிருந்த கடுமையான எதிர்ப்பே அதற்குக் காரணம். இன்று பிரிவினைக் கொள்கை விடப்பட்டதென்றால், அது அரசியல் தந்திரம் அல்ல; உண்மையாக உணர்ந்துதான், நாட்டினுடைய ஐக்கியத்தைக் காக்க வேண்டுமென்ற உணர்வோடு அவர்கள் அந்தக் கொள்கையை கைவிட்டதன் காரணமாகத்தான் திரு. ம. பொ.சி. அவர்கள் அந்த அணியில் நிற்கிறார். 'மாநில சுயாட்சி' என்பது, அவர் அர்ப்பணித்தது. அந்தக் கருத்துத் தேசிய முகாமில் பிறந்து, தேசியத்தில் வளர்ந்தது.