சதுரங்கம் விளையாடுவது எப்படி/சதுரங்க ஆட்டத்தின் வரலாறு
சதுரங்கத்தின் பெருமை
நாகரிகம் நிறைந்த நாடுகள் அனைத்திலும், நயமுறவிரும்பி ஆடப்பெறுகிற ஆட்டம் சதுரங்கமாகும்.
ஆர்வமுடன் ஆடுகின்ற மக்கள், ஆங்காங்கே எண்ணிக்கையில் குறைந்தவர்களாக இருப்பினும் இது அகில உலகப் புகழ் பெற்ற ஆட்டமாகும்.
வீறு கொண்டு ஒடி- விளையாடுகின்ற விளையாட்டுக்கள் அனைத்தும் தேகப் பயிற்சிக்கும், அமர்ந்து ஈடுபாட்டுடன் செய்கின்ற ஆசனமுறைகள் எல்லாம் யோகப் பயிற்சிக்கும் உதவுகின்றன என்றால், சதுரங்க ஆட்டம் சகலருக்கும் மதியூகப் பயிற்சியை முற்றிலும் வளர்க்க உதவுவதாகவே அமைந்திருக்கிறது
இது சுயலாபத்தை வளர்க்கும் சூதாட்டமல்ல, சொகுசாக அமர்ந்து சுகமாகப் பொழுது போக்கும் சோம்பேறி ஆட்டமுமல்ல. இது வாழ்வுக்குத் தேவையான அடிப்படை ஆதார குணங்களை, அருமையுடனும் திறமையுடனும் வளர்த்துவிடும் அரியதொரு அறிவாட்டம் என்பதே அறிஞர்களின் கருத்தாகும்.
சதுரங்க ஆட்டம் மனதை மகிழ்விக்கிறது மயக்குகிறது, மலர்ச்சியுறச் செய்கிறது. மலர்ந்த மனதைப் பண்படுத்துகிறது. பதப்படுத்துகிறது இதப்படுத்துகிறது. நெறிப்படுத்துகிறது. நிறைவுறச் செய்கிறது.
விளையாடுவோர் நினைவுகளில் அமைதியைத் தளிராடச் செய்வதுடன், கனிவான கற்பனையைக் கட்டவிழ்த்துவிட்டுக் களிப்பூட்டுகிறது.
சதுரங்க ஆட்டம் உலகப் பொது மக்களுக்குப் பொதுவானதாகும். எல்லா நாடுகளுக்கும் உரிமையானதாகும். மனித இனம் எங்கெல்லாம் முற்காலத்தில் அறிவார்த்தமாக இயங்கிக் கொண்டிருந்ததோ, அங்கெல்லாம் அவரவருக்குரிய நிலையிலே அவரவர் மனங்களுக்கிடையே முடங்கிக் கொண்டு தான் இருந்தது என்பதற்கு எத்தனை எத்தனையோ வரலாற்றுப் பின்னணிகள் உண்டு.
சதுரங்க ஆட்டத்திற்கென்றே தனியான மொழித் தன்மை உண்டு. இலக்கியம் உண்டு இசைப்பாட்டு, இன்கவிதை, இதமான உரை நடை உண்டு. ஆன்ற கலையின் அரிய மென் நடையும் உண்டு.
இத்தகைய இதமான சதுரங்க ஆட்டத்தின் பிறப்புக்கென்று பல கதைகளைப் பாருக்குத் தொகுத்துத் தந்திருக்கின்றார்கள் ஆராய்ச்சி வல்லுநர்கள். அத்தகைய வரலாற்றின் வடிவங்களைக் கவிதையிலே காணலாம். உரை நடையில் படித்து மகிழலாம். ஒவியங்களிலே பார்த்து பேரின்பம் பெறலாம்.
அமைதி தரும் ஆட்டம்
"அறிவாளிகளின் ஆட்டம் சதுரங்க ஆட்டம்" என்றே அன்றும் இன்றும் அழைக்கின்றார்கள் மக்கள்.
அறிவாளிகளின் ஆட்டம் என்று சதுரங்கத்திற்குப் புகழ் மாலை சூட்டிப் போற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இல்லாமலா இருக்கும்!
ஆண்டாண்டு காலமாய் ஆரம்ப தொட்டே, அரசர் குலப் பெருமக்களும், அவர்களுக்கு அருந்துணையாய் பணியாற்றும் அமைச்சர்களும், அவர்களுக்கு வழித் துணையாய் வாழும் குருக்களும், பக்கத் துணையிருந்து பணியாற்றும் தளபதிகளும், தத்துவ ஞானிகளும் இவர்களைச் சுற்றியேதான், சதுரங்கத்தைப் பற்றிய வரலாறுகளும், வடித்தெடுக்கப் கதைகளும் பின்னப்பட்டிருக்கின்றன.
ரேடி (Reti) என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார். "சிதுரங்க ஆட்டமானது, மூளையின் அளப்பரிய அறயின் அரிய சக்தியை தெளிவாக விளக்கிக் காட்டுகிறது. எளிய சக்தியால், வலிமை மிக்கப் பெரும் சக்தியினை வெற்றி கொண்டு விடுகிற விந்தை மிகும் ஆற்றலை அல்லவா அது வெளிப்படுத்தி விடுகிறது” என்கிறார்.
கண்டதற்கெல்லாம் அலைபாயும் மனதினைக் கட்டுப்படுத்தி, விரைந்து வரும் வெள்ளத்தைத் தடுத்து வாய்க்கால் வழியே வீடு, வயல்களுக்குப் பயன்படுமாறு செய்கிற தன்மை போலவே பொங்கி வரும் நினைவுகளை நிதானப் படுத்தி, நேரான முறையிலே, நிறைவு தரும் பயனுக்காகப் பயன்படுத்துகின்ற தன்மையிலேதான் சதுரங்க ஆட்டம் பயன்படுகிறது.
எதையாவது நினைத்துக் கொண்டு எரிச்சல் பட்டுக் கொண்டிருக்கின்ற மனம் கொண்ட மனிதரையும், சதுரங்க ஆட்டம் இதமான நினைவுகளுடன் அமர்ந்தாடச் செய்து விடுகிறது. அமைதி கொள்ளுமாறு வழி நடத்துகிறது என்று ஆடியவர்களின் அனுபவங்கள், நமக்குத் தெள்ளத் தெளியக் காட்டுகின்ற உண்மையாகும்.
வெறி கொண்டிருக்கும் மூளைக்கு, விளையாட்டுத் தனமான இன்பத்தை வாரி வாரி வழங்கும் சதுரங்க ஆட்டத்தின் பிறப்புக்குரிய சூழ்நிலைகளை விளக்கும் கதைகளை இனி காண்போம்.
நன்னெறி வழுவாமல் நீதி வழியாக நடந்து செல்ல வேண்டும் என்ற கொள்கையைக் காட்டுவதற்கென்று தோன்றிய கதைகள், சரித்திரச்
சான்றுகளுடன், வரலாறு படைத்த மன்னர்களைத் தொடர்புபடுத்தி மேற்கோள்களுடன் விளக்குகின்றன நிகழ்ச்சிகள், ஆக்ரமிக்கும் ஆவேச மனத்துடன், வெறித்தனத்துடன் விளங்கியவர்களை மென்மைப்படுத்தும் வழியாகத் தோன்றிய கதைகள் என்று சதுரங்க ஆட்டத்தின் பிறப்பை பல வகையாகப்பிரித்துக் காட்டலாம்.
உலக நாடுகளில் உலவிய பெயர்கள்
சதுரங்கம் என்ற சொல்லானது, சதுர்+அங்கம் எனப் பிரித்து நிற்கிறது, சதுர் என்றால் நான்கு என்றும், அங்கம் என்றால் பிரிவு என்றும் பொருள்படும்.
நான்கு வகை சேனைகளான ரத, கஜ, துரக, பதாதிகள் என்று அழைக்கப்படும் தேர்ப்படை, யானைப் படை, குதிரைப்படை, காலாட்படை எனப்படும் நால்வகை சேனைகளை மையமாகக் கொண்டு அரசர்கள் ஆடத் தொடங்கியதால்தான், இதற்கு சதுரங்கம் என்று பெயர் வந்தது.
சதுரங்க ஆட்டம் தோன்றிய காலம் எப்பொழுது என்று தெரியவில்லை. என்றாலும் தொடர்ந்து ஆடிய காலம் தெரிகிறது. கி.மு. 6000 ம் ஆண்டுகளுக்கு முன்னே, இந்த ஆட்டம் ஆடியதாகக் குறிக்கப்பட்டிருந்தாலும், உலக நாடுகள் அனைத்தும் எங்கள் நாட்டிலேதான் முதன்முறையாக சதுரங்கம் ஆடப்பட்டது என்று உரிமை கொண்டாடுகின்ற
அளவிலேதான் இன்றும் இதன் பிறப்பு பற்றிய பொதுத்தன்மை நிலவி வருகிறது.
சதுரங்கம் என்று இந்தியாவில் அழைக்கப் பெறும் இந்த ஆட்டம் உலக நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் விரவி வந்திருக்கிறது. ஆங்கிலேயர் 'செக்' (Check) என்றனர். பிரெஞ்ச் நாட்டினர் 'எஸ்க்' (Eschs) என்றனர். பாரசீகத்தினர் 'சத்ரஞ்ச்' (Shatranj) என்றனர். ரோமானியர்கள் 'லூடஸ் லேட்ரம் குளோரம்' (Ludus latrum culorum) என்றனர். சீனர்கள் 'சோங்-கி' (Chong-k) என்றனர். அயர்லாந்து மக்கள் 'பிப்த் சீயல்' (Fifth Cheall) என்றும்; வேல்ஸ் நாட்டினர் 'தாவ்ல் பர்டுடு' (Tawl burrd) என்றும். இத்தாலிய நாட்டினர் 'சாசி ஆலா ராபியோசா' (Sacci Alla Rabiosa) என்றும், ஸ்பானியர்கள் ஆக்ஸி டிரக்ஸ் டீலடிராமா' (Axe drex deladrama) என்றும் அழைத்து ஆடியதாக வரலாற்றுக் குறிப்புகள் கூறிச் செல்கின்றன.
கிரேக்கர்கள், ரோமானியர்கள், பாபிலோனியர், அராபியர், ஐரிஷ்காரர்கள், வேல்ஸ் நாட்டினர், ஹிபுரு மக்கள், சீனர்கள், பிரெஞ்ச் நாட்டினர், இந்தியர்கள் என்று எல்லா நாட்டினருமே அந்த நாள் தொட்டு ஆடிக் கொண்டு வந்தாலும், அவர்கள் தருகின்ற ஆட்டத்தின் பிறப்பு பற்றிய குறிப்புகள் எல்லாம் நமக்குக் குழப்பத்தையே கொடுக்கின்றன என்றாலும், நாம் சமாளித்துக் கொள்கிறோம்.
பல நாட்டுப் புராணங்களிலே கதைகளாக பொலிந்தும், கவிதைகளிலே கலந்தும், ஒவியங்களிலே திகழ்ந்தும், உரை நடை வரிகளிலே மிளிர்ந்தும் கிடக்கின்ற குறிப்புகளைக் கொண்டு, முன்னர் விவரித்த மூன்று தலைப்புகளிலே காணும் பல பிரிவுகளைக் கூறும் கதைகளை இனி காணலாம்.
1. நீதிபுகட்ட வந்ததாக நிலவும் கதைகள்
கிரேக்க நாட்டை ஆண்டு வந்த நெபு சாடு நேசல் என்ற மன்னனுக்கு அமல்மெரடக் என்றொரு மகன் இருந்தான். அவன் விலங்கிலும் கொடியவன். அரக்க மனம் கொண்டவன்.
என்ன காரணமோ தெரியவில்லை. பெற்ற தந்தை மீதே அவன் பெருஞ்சினம் கொண்டான். கொண்ட கோபத்தைத் தணித்துக் கொள்ள வேறு வழி காண முடியாத அவன், தன் தந்தையைக் கொன்றேவிட்டான்.
கொன்றுவிட்டதும் அல்லாமல், தந்தையின் உடலை முன்னுாறு துண்டுகளாகக் கூறு போட்டான். பறந்து வந்த முன்னுாறு பருந்துகளுக்கு விருந்தாக்கியும் மகிழ்ந்தான்.
இந்த இரக்கமிலா கொடிய நிகழ்ச்சியைக் கேள்வியுற்ற அரசவையினர் ஒன்றுகூடி, இதயமில்லா இளவரசனின் பைத்தியக்காரத்தனம் நிறைந்த வெறித்தனத்தைப் போக்க விழைந்தனர். இரவு பகலாக முயன்றனர். இறுதியில் சதுரங்கம் ஆட்டம் போன்ற ஒரு ஆட்டத்தைக் கண்டுபிடித்து, அவனை அமைதிபெறச் செய்தனர். நேர் வழியைக் காட்டினர் என்று கிரேக்க புராணம் கூறும்.
(2) அதே கருத்தினைத் தழுவிய மற்றொரு கதை பாரசீகத்தை ஆண்ட ஜூவன்லிஸ் என்ற பயங்கரவாதியான ஒரு மன்னன், தன் தந்தையைக் கொன்றுவிடுகிறான். அவனைத் திருத்தி நல்வழிப் படுத்தவே, ஜஸ்டஸ் என்ற தத்துவஞானி. இதுபோன்ற ஒரு ஆட்டத்தினைக் கண்டுபிடித்தார் என்பது ஒரு சான்று.
(3) ஒரு இந்து அரசன் தன்நாட்டு மக்களை மதிக்காமல், கொடுங்கோலனாக, கர்வம் பிடித்தவனாக, முரடனாக, முட்டாளாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தபொழுது, அவன் காலத்திலே வாழ்ந்த ஒருவர், இதுபோன்ற ஆட்டத்தைக் கண்டு பிடித்ததாகவும், அதனை அரசர் முன்னே ஆடிக் காட்டி, 'வீரர்கள் எவ்வாறு அரசனை ஆட்டத்தில் காக்கின்றார்கள். அரசனைக் காக்கும் வீரர்களை அரசன் காப்பாற்றாவிட்டால், அரசன் கதியும் அதோகதியாகி விடும்' என்று கூற, தன் நிலைமை யுணர்ந்த அரசன் தவறினை உணர்ந்து, நெறி மாறி, நீதிமானாக ஆளத் தொடங்கினான் என்பதும் ஒரு கதை.
(4) இந்தியாவிலே ஒரு அரசர் ஆண்டு வந்தார். அவர் அமைதியில் நாட்டமுள்ளவர். தன்னைப்
போன்ற மன்னர்கள் போரிட்டு இரத்தம் சிந்தி நாடு பிடிக்கும் கொடிய வழியினை அறவே வெறுத்தவர்.
ஆவேசமும், ஆக்ரமிக்கும் ஆர்வமும் உள்ள அரசர்கள் ஒன்று கூடி, இதுபோன்ற பலகையில் உள்ள ஆட்டத்தை ஆடி, பகை தீர்த்துத் தங்கள் கொள்கையை நிலைநாட்டிக் குழப்பங்களை ஒட்டி, குறிக்கோளை அடைய வேண்டும் என்று இந்த ஆட்டத்தைக் கண்டுபிடித்ததாகக் கூறுவாரும் உண்டு.
2. வெறிமாற்ற வந்த கதைகள்
போர்முறை குறித்தே இவ்வாட்டம் தொடங்கப்பெற்றது என்பதற்கு ஆதாரமாகப் பல கதைகள் உள்ளன.
(5) இந்தியாவை சிக்ராம் (Shihram) என்றொரு மன்னன் ஆண்டு வந்தான். அவனுக்குப் போரிலே நிறைய விருப்பமும் அதிக ஈடுபாடும் உண்டு.
காலத்தையெல்லாம் போர்க் களத்திலே கழித்து முதுமை அடைந்துவிட்டா லும், மன்னருக்கு அதிலேயே மனம் லயித்துப் போய் விட்டதால், மனத்தை மாற்றிக்கொள்ள முடியவில்லை ஆனால் போரிடவும் முடியவில்லை.
மன்னரின் மன நிலையைப் புரிந்து கொண்டு, மாற்று வழி ஒன்றைக் காண விரும்பினார் அவரது மந்திரி சேஷா (Shesha) என்பவர். அவரது அருங் கண்டுபிடிப்புத்தான் இப்படி சதுரங்கமாகப் பிறந்தது என்பாரும் உண்டு.
இதனை முகமதிய வரலாற்று ஆசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள் என்றும் சரித்திரக் குறிப்புகள் கூறுகின்றன.
இந்தக் கருத்தின் அடிப்படையிலே, இன்னொரு கதையும் உலவுகிறது.
(6) இந்திய மன்னர் ஒருவர் போரிடும் ஆர்வம் பெரிதும் நிறைந்தவர். வாழ்நாள் முழுவதையும் வீரம் நிறைந்த போர்க்களத்திலேயே கழித்துவிட்டார். பகைவர் அனைவரையும் போரிலே புறங்கண்டு, வெற்றி வாகை சூடினார். எனினும் அவரது போர் வேட்கை தணியவில்லை.
வேறு யாரும் வெற்றி கொள்வதற்கு இல்லையே என்ற வெறியில் துடித்த அவர் மனம், ஏக்கத்திலும் எரிச்சலிலும் மூழ்கியது. கரை காணாத வெறி கவலையுள் ஆழ்த்தியது. அதுவே மன நோயாக மாறி மன்னரைப் படுத்த படுக்கையாக்கிவிட்டது.
நோயில் வீழ்ந்த அரசர் நோய் நீங்கி நலம் பெறவும், மறைந்துபோன மன அமைதியை மீண்டும் கொணரவும் ஒர் அறிஞர் முயற்சி செய்தார். எதிரியின் சேனைகளை எவ்வாறு வெற்றி கொள்வது என்ற முறையிலேயே சதுரங்கத்தைக் கண்டுபிடித்து மன்னரிடம் தந்தாராம்.
அரசரும் அந்த ஆட்டத்தை முறையோடு ஆட முயன்று, அது உண்மைதான் என்று அறிந்த பிறகு, தன்னுடைய முழு மனதையும் அதில் லயிக்கச் செய்து,
தன்னையே மறந்து ஆடி, மன நோய் தீர்ந்து, உடல் நலம் தெளிந்து பலன் பெற்றதாகக் கதை தொடருகிறது.
3. பொழுது போக்குவதற்காகப் பிறந்த கதைகள்.
(7) ஹன்சிங் (Hansing) என்ற சீன மன்னன் ஒருவன், சென்-சி (Shen-si) என்ற நாட்டின் மீது படையெடுத்துச் சென்றபொழுது, குளிர்காலம் தொடங்கிவிட்டது. அதனால் போர் நிகழாது தடைபட்டுவிட்டது. வீரர்கள் போரில்லாமல் கூடாரத்துக்குள்ளே உறங்கத் தொடங்கிவிட்டனர்.
எங்கே தனது படை வீரர்கள் சோம்பேறிகளாக மாறிவிடுவார்களோ என்று பயந்து போன மன்னன், அவர்களை சுறுசுறுப்பாக்கி இயங்க வைக்கும் வழி என்ன என்று யோசிக்கத் தொடங்கினான். அறிஞர்களை அழைத்து அதற்கான வழிவகைகளைக் காணுமாறும் ஆணையிட்டான்.
அவனது ஆணையை மேற்கொண்ட அறிஞர்கள், சதுரங்கம் போன்றதொரு ஆட்டத்தைக் கண்டுபிடித்தனர். அதற்கு சோக்-சூ-ஹாங்கி (Choke-Choo-Hongi) என்றும் பெயரிட்டனர். அதற்கு, போர்க்கள அறிவு நூல் (Science of war) என்பது பொருளாகும்.
போர்க்களத்தில் சேனைகள் முன்னேறுவதைப் போலத்தான். சதுரங்க ஆட்டத்திலும் காய்கள் நகர்த்தப்படுகின்றன என்று ஹன்சிங் கருதினான். சதுரங்க ஆட்டத்திற்கு இவனே மூலகாரணம் என்று சீனர்கள் கருதிப் புகழத் தொடங்கினர் என்பதும் ஒரு கதை.
போர் வீரர்களின் பொழுதுபோக்குக்காகப் பிறந்ததே சதுரங்க ஆட்டம் என்னும் கருத்தை வலியுறுத்த, கிரேக்க புராணத்திலிருந்து ஒரு கதை.
(8) கிரேக்க நாட்டு அரசன் ஒருவனது மனைவியாய் விளங்கிய கட்டழகி ஹெலன் என்பவளை, டிராய் நாட்டு இளவரசன் காதலித்தான். ஆளில்லாத நேரத்து, அவளைக் கவர்ந்து கொண்டு சென்றுவிட்டான்.
அவனை அழித்துக் கொன்று ஹெலனை மீட்க, கிரேக்கப் படைகள் டிராய் நாட்டுக்குச் சென்று பத்தாண்டுகளாக முற்றுகையிட்டுப் போர் புரிந்தன. என்றாலும், டிராய் நகரத்து வீரர்கள் நிலைகுலையவோ, பின் வாங்கவோ இல்லை.
கோட்டையைச் சுற்றிலும் கூடாரம் அடித்துக் காவல் புரிந்து, காலத்திற்காகக் காத்திருந்த கிரேக்கப் படைத் தளபதியாக விளங்கிய மன்னர்களுக்கு அலுப்பு ஏற்படத் தொடங்கியது, அவர்கள் சலிப்பையும் களைப்பையும் மாற்றி, புத்துணர்ச்சி
யூட்ட ஒரு பொழுதுபோக்கு அப்பொழுது தேவைப்பட்டது.
அதனையுணர்ந்த யுலிசெஸ் என்ற மன்னன் சதுரங்க ஆட்டத்தைக் கண்டுபிடித்து, வீரர்களை உற்சாகப்படுத்தினான் என்பது கதை. அதனை பலமடஸ் என்பவனே கண்டுபிடித்தான் என்றும் ஒரு கருத்து உண்டு.
(9) சாலமோன் மன்னன் என்பவன், தன்னுடைய பொழுதுபோக்குக்காக, சதுரங்கத்தைத் தானே கண்டுபிடித்து விளையாடினான் என்பதும்,
(10) சீனத்தை ஆண்ட காத்-சூ (Kao-Tsu) என்ற மன்னனுக்கு ஹன்சங் என்ற சீன பிரபு ஒருவரால் கண்டுபிடிக்கப்பட்டது என்றும்,
(11) பின்லாங் (Pinlang) என்ற சீன சக்கரவர்த்திக்காக கி.மு. 174-ம் ஆண்டு சதுரங்க ஆட்டம் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் வேறு பல கதைகளும்உண்டு.
4. மன அமைதிக்காக மலர்ந்த கதைகள்
(12) முதல் மனிதன் ஆதாம் என்பவருக்கு காய்ன், ஏபெல் என இரண்டு குமாரர்கள் உண்டு. தன் தம்பி ஏபெல் மீது பொறாமை கொண்ட காய்ன், தம்பியை ஊருக்கு வெளிப்புறத்தில் வைத்துக் கொன்று விட்டான்.
அந்த வேதனையைத் தாங்கமுடியாத ஆதாம், தன் மனச்சுமையை இறக்கி வைத்து நிம்மதி பெற இப்படி ஒரு ஆட்டத்தைக் கண்டுபிடித்து விளையாடியதாக, பதினைந்தாம் நூற்றாண்டுக் கதை ஒன்று கூறுவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆதாமைத் தொடர்ந்து ஷாம், ஜேபட், சாலமன் மன்னன் ஆடியதாகவும் அந்தக் கதை தொடர்கிறது.
இனி முகமதிய புராணத்திலிருந்து கூறப்படும் ஒரு கதையினை காண்போம்.
(13) முதலாம் நூற்றாண்டில், ஒரு ராணி அரசாண்டு வந்தாள். அவளுக்கு ஒரே மகன், உயிருக்குயிராய் காத்து, உள்ளன்புடன் நேசித்து வந்தாள்.
அரசியின் எதிரிகள் எவ்வாறோ இளவரசனைக் கொன்று, தங்கள் வஞ்சத்தைத் தீர்த்துக் கொண்டார்கள். இந்த இறப்புச் சேதியை அரசிக்குக் கூறுமாறு, கப்ளான் (Qaflan) என்ற தத்துவ ஞானியிடம் தூது சென்றனர்.
துன்பச் செய்தியை செவி மெடுத்து தத்துவ ஞானியும் தான் துணைவருவதாகவும், வழி காட்டுவதாகவும் உறுதி கூறினார். மூன்று நாட்கள் தீவிரமாக சிந்தித்து உழைத்தபிறகு அவர் ஒரு வழியினைக் கண்டறிந்தார்.
ஒரு தச்சனை அழைத்து வரச் செய்து, தான் விரும்புகின்ற வண்ணம், ஒரு பலகையினை மாற்றி அமைத்துத் தரச் செய்தார். இதனை 'இரத்தம் சிந்தாத போர்க்களம்' என்று பெயரிட்டழைத்தார்.
இந்தப் புதிய கண்டு பிடிப்பு பற்றிய சேதி, இராணியின் செவிகளுக்கு எட்டிற்று, ஞானியையும், அவரது அரிய கண்டுபிடிப்பையும் காண இராணி உடனே விரும்பினாள்.
இராணியின் முன்னே, தன் சீடர்களைக் கொண்டு ஆட்டத்தை ஆடச் செய்தார் கப்ளான். இராணி ஆர்வத்தால் ஆழ்ந்து போய், ஆட்டத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். கப்ளானும் ஆட்டத்தைப் பற்றி விளக்கிக் கொண்டிருந்தார்.
ஆட்டம் நடந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு சீடன், 'ஷாமத்' (Shahmat) என்று வெறியுடன் கத்தினான். அதற்கு 'அரசன் இறந்து விட்டான்' என்பது அர்த்தமாகும்.
அந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, தன் மகன் இறந்த சேதியையும் ஞானி மூலம் தெரிந்து கொண்டாளாம் இராணி. அவளது அதிர்ச்சியைத்தாங்கிக் கொள்ளும் சக்தியை, அந்த ஆட்டத்தின் மூலம் இராணி பெற்றாள் என்று கதை தொடர்ந்து செல்கிறது.
'பிர்டாவசி (Firdawasi) என்ற வரலாற்று அறிஞர் ஒருவர், மேற்கூறிய கதையைப் போல கருத்தமைந்த
வேறு கதை ஒன்றையும் கண்டு பிடித்து எழுதியிருக்கிறார்.
(14) ஒரு இராணிக்கு இரண்டு குமாரர்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் வெவ்வேறு திருமணத்தில், அவளுக்குப் பிறந்த குழந்தைகள், அவர்கள் இருவரும் எப்பொழுது பார்த்தாலும், பொறாமையுடன் சண்டையிட்டுக் கொண்டேயிருந்தனர்.
வழக்கம்போல் சண்டையிட்டுக் கொண்டிருக்கும் பொழுது, ஒருவன் இறந்து விட்டான். கத்தியால் குத்தாமல் இருக்கும் பொழுதே, அவன் எப்படி இறந்தான் என்பது உயிரோடிக்கும் இன்னொரு வனுக்குத் தெரியாமலே போயிற்று.
சேதி அறிந்த இராணி, நீ தான் அவனைக் கொன்றாய், என்று இவனை குற்றம் சாட்டத் தொடங்கினாள். செய்யாத குற்றத்திற்கு இப்படி ஒரு சோதனையா என்று மனம் நொந்த அந்த மகன், தன் தாய்க்கு அவன் எப்படி இறந்தான் என்று விளக்கமாகக் கூற விரும்பினான்.
விளங்கச் சொல்லுகின்ற வழி அவனுக்கு விளங்காமற் போகவே, அரசவையில் உள்ள அறிஞர்களை நாடிச் சென்றான்.
அவர்களும் பலநாள் முயன்று, சதுரங்க ஆட்டத்தைக் கண்டுபிடித்து, அதனை அரசியின் முன்னே ஆடிக்காட்டி, இளவரசன் இப்படித்தான்
கொலை செய்யப்படாமல், சந்தர்ப்பவசத்தால் இறந்து போனான் என்று சுற்றி வளைத்துக் கூறினார்களாம்.
இராணியும் இராப்பகலாக, ஊண் உறக்கமின்றி அந்த ஆட்டத்தை ஆராய்ந்து உண்மை அறிய வேண்டும் என்று விரும்பி, தான் இறக்கும் வரை ஆராய்ச்சி செய்து, தன்னுடைய தணியாத துன்பத்தில் இருந்து விடுதலையடைந்தாள் என்றும், அன்றிலிருந்து சதுரங்க ஆட்டம் மனிதர்களுக்கு அறிவூட்டும் ஆட்டமாக அமைந்தது என்றும் குறிப்பிடுகின்றார்.
5. அனுபவம் தருவதற்காக வந்த கதைகள்
(15) ஒரு இளவரசன் தனது படைகளைப் போர் ஒன்றில் வழி நடத்திச் சென்று, வீரமுடன் போரிட வழி தெரியவில்லையே என்று அஞ்சினான். செல்லும் வழி தெரியாது குழம்பினான்.
படையை நடத்தும் அடிப்படை அம்சமே தனக்குப் புரியவில்லை என்று அவன் அயர்வடைந்த போது, போர் அனுபவங்களை நிறையத் தருகின்ற சதுரங்க ஆட்டத்தைக் கண்டுபிடித்தனர். அவனது அரசவை அறிஞர்கள் என்று ஆல்அட்லி, என்ற வரலாற்றாசிரியர் கூறுகின்றார்.
எந்த நாட்டு இளவரசன் என்று அவர் குறிப்பிட இயலாமற் போனாலும், போர் பற்றிய அனுபவம்
தரவே, இவ்வாட்டம் தோன்றியது என்பதே இக்கதையின் கருத்தாகும்.
(16) ஹஷ்ரன் (Hashran) என்னும் இந்திய நாட்டு மன்னன் ஒருவன், தன் நாட்டின் மிகச் சிறந்த அறிவாளியாக விளங்கிய கப்ளான் (Qalfan) என்பாரை அழைத்தான்.
நல்வினை, தீவினை இவைகளால் மனிதர்கள் எவ்வாறு அலைக்கழிக்கப்படுகின்றார்கள் என்பதை சித்தரிக்கும் வண்ணம், ஒரு விளையாட்டை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டான்.
சூதாட்டத்திற்குப் பயன்படும் பகடைக்காய் ஆட்டம்போல் ஒன்றை உருவாக்கி, விதியால் மனிதன் விளையாடப் படுகிறான் என்பதைக் காட்டும் ஆட்டத்தைக் கண்டுபிடித்துத் தந்த பொழுது, மன்னன் மகிழ்ந்தான்.
இந்தக் கதையின் தொடர்ச்சியாக மேலும் ஒரு கதை பிறந்து, தொடர்ந்து துணை புரிகின்றது.
(17) “பால் கெய்ட்” (Bal hait) என்ற அரசன், அவனுக்கு பிரமன் (Brahman) என்னும் அமைச்சன். அமைச்சன் அரசனுக்குமுன் கதையில் கூறிய கருத்தை விளக்கி, நமது மதக் கொள்கைகளுக்கு இது முற்றிலும் மாறுபட்டதாகவும் முரண்பட்டதாகவும் அமைந்திருக்கின்றது என்று கூறவே, அரசனும் தேவைக் கேற்றபடி, கொள்கை முறையுடன்
ஆட்டத்தைப் மாற்றியமைத்துத் தருமாறு கேட்டுக் கொண்டான்.
சூதாட்டத் தன்மையும், விதியை நம்பி அதன் வழியே இயங்கும் மனப்போக்கையும் கொண்ட ஆட்டத்தின் அமைப்பினை மாற்றி 'முன்னறிவும், விடாமுயற்சியும், செட்டும் சிக்கனமும் நிறைந்திருந்தால், விதியையும் மதியால் வெற்றி பெறலாம்' என்ற அடிப்படையில்தான் இந்த சதுரங்க ஆட்டத்தினை அவர் தொடங்கினார் என்பதும் ஒரு கதை.
போரினை அடிப்படையாகக் கொண்டுதான் பிரமன் அமைத்தார். ஆட்சித் திறன், முன்னுணரும் அறிவு, வலிமை, எச்சரிக்கையுடன் இருத்தல், வீரமுடன் செயல்படுதல், சிறந்த முடிவினை எடுத்தல் எல்லாம் போர் செய்வது மூலமே அனுபவம் பெறமுடியும். அறிவினைக் கொள்ள முடியும் என்பது அவருடைய கொள்கையாகும்.
இந்த புராணங்கள், கிறித்துவக் கதைகள், முகமதிய கதைகள் மற்றும் கிரேக்க புராணங்கள் அனைத்திலிருந்தும் சதுரங்க ஆட்டத்தின் தொடக்கத்திற்காக தொகுக்கப்பட்ட கதைகளைத் தான் நாம் இதுவரை படித்தோம். இனி வரலாற்றுக் குறிப்புகளைக் காண்போம்.
6. வரலாற்று நிகழ்ச்சிகள்
டாக்டர் ஸ்பீசர் (Dr. A.E. Speiser) என்பவர் தனது ஆராய்ச்சிக் குழுவினருடன் சேர்ந்து ஆராய்ந்து பல அரிய செய்திகளை நமக்குத் தொகுத்துத் தந்திருக்கின்றார்.
கி.மு. 6000ம் ஆண்டுகளுக்கு முன்னதாக மெசபடோமியா என்னும் இடத்திலே, இந்த ஆட்டம் ஆடப்பட்டதாக டாக்டர் ஸ்பீசர் கூறுகிறார்.
சுமார் கி.மு. 5550-ம் ஆண்டுகளுக்கு முன், இராக்கின் வடபாகத்தில், இது போன்ற ஆட்டம் ஆடப்பட்டதாகக் குறிப்புகள் கூறுகின்றன.
கி.மு. 1200-ம் ஆண்டுகளுக்கு முன்னே எகிப்து நாட்டினை ஆண்ட டுட் அங்க் ஆமன் (Tut Anhk Amen) என்ற மன்னனது கல்லறையில், சதுரங்க ஆட்டத்திற்குப் பயன்படும் ஆட்டப்பலகையும் அதற்குரிய காய்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக 1930 ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்று கூறுகின்றது.
கிரேக்கத்தில்தான் சதுரங்கம் முதன்முதலாகத் தொடங்கியது என்றும், அங்கிருந்து முகமதிய நாடுகளுக்குப் பரவியது என்பாரும் உண்டு. பிளேட்டோ எழுதிய நூல்களில் இந்த ஆட்டம் பற்றிய குறிப்புக்கள் கிடக்கின்றன என்றும், அரிஸ்டாட்டில் ஹிப்போகிராட்ஸ், கேலன்
போன்றவர்களும் சிறந்த ஆட்டக்காரர்களாக இருந்தார்கள் என்று ஆதாரம் காட்டுவாரும் உண்டு.
சீனமே சதுரங்கத்தின் தாயகம், எகிப்தே இதன் பிறப்பிடம், அரேபியாவில்தான் ஆரம்பம் என்று ஆதாரம்காட்டுவதற்கு வரலாற்றாசிரியர்கள் எத்தனை பேர் முன் வந்தாலும், இந்தியாதான் எல்லா நாட்டினருக்கும் முன்னதாக இதை ஆடி வந்திருக்கிறது என்பதற்கான ஆதாரம் இருக்கிறது என்று வரலாற்று வல்லுநர்கள் கட்டிக்காட்டுகின்றார்கள்.
இந்தியாவே தாயகம்
'சதுரங்கத்தின் வரலாறு என்ற நூலை எழுதிய ஜே.ஆர்.முரே (J.R. Murray) என்பவர் சதுரங்கமானது இந்தியாவின் வடமேற்குப் பகுதியில் ஹரிஸ் (Huris) என்பவரின் காலத்தில்தான் உருவானது என்கிறார். அதன் காலத்தை கி.பி.445-543 எனவும் குறிப்பிடுகின்றார்.
கி.மு. 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த சிந்துச்சமவெளி நாகரிகம் பற்றி, அகழ்ந்தெடுத்துக் கண்டெடுத்த ஹாரப்பா, மொகஞ்சோதாரா பகுதிகளில் சதுரங்கம் பற்றிய காய்கள் கண்டெடுக்கப் பட்டிருக்கின்றன என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
ஆகவே, பண்டைய நாள் தொட்டே, சதுரங்க ஆட்டம் இந்திய மக்களிடையே பழக்கத்தில் இருந்து
வந்திருக்கிறது என்றே வரலாற்று அறிஞர்கள் நம்புகின்றனர்.
பாரசீகப் பெருங்கவிஞன் பிர்தாசி எழுதிய ஷாநாமா (Shahnamah) என்னும் நூலில், கன்னோஜ் நாட்டை ஆண்ட மன்னன் ஒருவன் முதலாம் குஸ்ரூ நெளஷர்வன் என்ற பாரசீக மன்னனுக்கு (கி.பி.521-576) அனுப்பிய பரிசுகளில் சதுரங்க ஆட்டத்திற்குரிய பொருள்களும் அடங்கியிருந்தன என்று குறித்திருக் கின்றார்.
பாரசீகத்திலிருந்து ஸ்பெயின், மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு முகமதியர்கள் தான் இந்த ஆட்டத்தைப் பரப்பியிருக்க வேண்டும் என்று கருத இடமுண்டு.
'எட்வர்டு யங்' என்னும் ஆசிரியர் சதுரங்கம் பற்றிய தனது நூலில் குறிப்பிடுவதாவது : சற்றேறக் குறைய கி.பி. 600ம் ஆண்டுகளில் இந்தியாவில் இந்த ஆட்டம் கண்டுபிடிக்கப்பட்டு, விளையாடப் பெற்று வந்தது என்று கூறுகிறார். இங்கிருந்துதான், இது பாரசீகத்திற்கும் மற்றைய ஆசிய நாடுகளுக்கும் பரவியது என்கிறார்.
மத்திய காலங்களில், அரேபியர்கள் சிறந்த நாகரீகத்தில் விளங்கியபோது, சதுரங்க ஆட்டத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததாகவும் அவர்கள் பல நாடுகளின் மேல் படையெடுத்து வெற்றி கொண்ட பொழுது அங்கெல்லாம் இந்த ஆட்டத்தைப் பரப்பி
வந்தனர் என்றும் கூறுகிறார். அதன் படியேதான் ஸ்பெயின், இத்தாலி, பிரான்சூ மற்றும் ஐரோப்பா கண்டம் முழுவதும் சதுரங்கம் பரவியது என்றும் எழுதுகிறார்.
அறிவாளிகளின் ஆட்டம்
ஆரம்பகாலத்தில் இருந்தே, சதுரங்க ஆட்டத்தின் தோற்றத்திற்கும் தொடக்கத்திற்கும் காரண கர்த்தாக்களாக, முன்னே கூறிய கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் எல்லாமே அரசர்கள், அரசிகள், அமைச்சர்கள், அரசவை அறிஞர்கள், மதகுருக்கள், தத்துவ ஞானிகள், தளபதிகள் என்றுதான் இருக்கின்றனர்.
அரச பரம்பரையுடன் அதிகத் தொடர்பு கொண்டவர்களாலும், மேல் மட்டத்தில் வாழ்ந்தவர்களாலுமே மிக விரும்பி ஆடப்பட்டதால், இதற்கு அரச பரம்பரையின் ஆட்டம் என்றும், அறிவாளிகளின் ஆட்டம் என்றும் புகழ் பெற்று வந்திருக்கிறது.
இதன் பெருமைக்காக, எல்லா மதத்தினருமே ஆடி வந்தார்கள் என்ற குறிப்பையும் நாம் காணுகின்றோம். முகமது நபியே சதுரங்க ஆட்டத்தை ஆடியதாக ஒரு குறிப்பு கூறுகின்றது. முதல் மனிதன் ஆதாம் ஆடியதாக ஒரு குறிப்பு. கிருஷ்ணனும் ராதையும் சதுரங்கம் ஆடி மகிழ்வதாக, ஜெய்ப்பூரில் காணும் ஒவியம் ஒன்று காட்டுகிறது.
ஆகவே, எல்லா மதத்தினரும் ஈடுபாடும், ஆடுவதற்கு இதில் நிறைந்த ஆர்வமும் கொண்டிருந்தனர் என்பது நமக்கு விளங்குகின்றது. அத்துடன், ஒரு பெரிய பட்டியலையே ஒருவர் நமக்கு தொகுத்துத் தருகிறார்.
ஆதிகால முதல்மனிதன் ஆதாம், அறிவில்வல்ல சாலமன், ஞானஒளி பெற்ற முகமது நபி முதலியவர்களிலிருந்து கிரேக்க தத்துவஞானிகள் பிளேட்டோ, சாக்ரடீஸ் இவர்களில் தொடங்கி, சக்கரவர்த்தி நெப்போலியன், உட்ரோவில்சன், லெனின், ஜார்ஜ் வாஷிங்டன், டால்ஸ்டாய் போன்ற மேதைகள் வரை எல்லோருமே பெரிதும் மகிழ்ந்து விரும்பி ஆடினார்கள் என்று சரித்திரம் பறைசாற்றுகின்றது.
ஆட்டத்தின் வளர்ச்சி
ஆட்டத்தில் ஆடப் பயன்படுகின்ற அமைப்புக்களைப் பார்க்கும் பொழுது, பெரும் சக்தி உள்ளவர்களாக அரசரும், அவருக்கு அடுத்த நிலையில் அமைச்சரும் தான் முதலில் குறிக்கப்பட்டு இருந்தனர்.
இந்நிலையில், அரசருக்கு அடுத்தநிலை அமைச்சருக்கா, அல்லது இராணிக்கா என்பதிலே எழுந்த போட்டி, அரசியல் வரையிலும் நீடித்து நிலைத்து நின்றிருக்கிறது.
ஆரம்ப காலத்திலிருந்து 12-ம் நூற்றாண்டுவரை, அரசருக்கு அடுத்து அமைச்சரே சக்தியுள்ளவராக வைக்கப்பட்டிருந்தார். ஆட்டத்தில் அமைச்சரை அகற்றி விட்டு, இராணியே இருக்க வேண்டும் என்ற நிலை எவ்வாறு எழுந்தது என்று இனி காண்போம்.
அரேபியா போன்ற முகமதிய நாடுகளில் அரசருடன் போருக்குச் சென்று, உடனிருந்து பணியாற்றியவர்கள் அமைச்சர்கள் தான். அதனால், அமைச்சர் என்பவர் அரசருக்கு அடுத்த நிலையில் ஆட்டத்திலிருந்தார்.
இங்கிலாந்து நாட்டில் எழுந்த ஒரு புதிய கழ்நிலையால், ராணி மேரியின் புகழ் பெருகியதால் தான் இந்த நிலை உருவானது. அதேபோல், வட இத்தாலியிலும் ஒரு நிகழ்ச்சி நடந்தது.
கேதரினா சபோர்சா (Caterina Saforza) என்ற மங்கை, இத்தாலியை ஆண்ட இளவரசனுக்குத் திருமணம் செய்விக்கப்பட்டாள். இளவரசனோ ஆட்சிப் பொறுப்பேற்று நடத்தும் ஆற்றலின்றி இருந்தான்.
நிலையுணர்ந்த கேதரினா, நிதானமிழக்காமல், நெடுமூச்செறிந்து கணவனைப் பழிக்காமல், காரியம் அற்றத் துணிந்தாள். போருடை அணிந்தாள். படைகளை நடத்திச் சென்று போரிட்டாள். வெற்றி பெற்றாள்.
வரிகளை வசூலித்தாள். மக்களைக்காத்தாள், அதோடு மன்னன் மானத்தையும் காத்தாள்.
இராணியின் செல்வாக்கே ஓங்கியிருந்ததால், அமைச்சருக்கு அங்கு உரிய இடம் வழங்கப்படவில்லை. ஆகவே, சதுரங்க ஆட்டத்திலும் அமைச்சரை நீக்கிவிட்டு, இராணியை வைத்து விட்டார்கள். இது 15-ம் நூற்றாண்டில் நிகழ்ந்த நிகழ்ச்சியாகும்.
அரசகுலத்திற்கும் சதுரங்க ஆட்டத்திற்கும் இவ்வளவு நெருக்கமும் நிறைந்த விருப்பமும் இருக்க, இன்னும் பல காரணங்களும் இருந்தன.
அரச குலத்திற்கு மட்டுமே உரிய ஆட்டமாக இதுகட்டிக் காக்கப்பட்டது. கண்காணிக்கப் பட்டது. பொதுமக்கள் இதனை ஆடக்கூடாது. மீறி விளையாடியவர்கள் தண்டிக்கப்பட்டனர் என்றும் வரலாறு கூறுகின்றது.
அரசவையில் இசை வல்லுநர்களும் விகடகவிகளும் இருந்தது போலவே, சதுரங்க ஆட்டத்தில் தேர்ந்த வல்லுநர்களும் அரச குடும்பத்தினருக்குப் பயிற்சி அளிப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அரச குலப் பெண்களுக்கு அவர்கள் பயிற்சியளித்தார்கள். இவ்வாறு ஆணும் பெண்ணும் ஆடிக்கொண்டிருக்கும்பொழுது, காதல் ஏற்படவும் வழி வகைகள் அமைந்திருந்ததால், இந்த
t
ஆட்டத்திற்கு இன்னும் அதிக வரவேற்பும் செல்வாக்கும் இருந்தது.
ஆடுவோரிடைய காதல் கவிதைகள் தோன்றின. ஆட்டத்திற்கிடையே ஆனந்தமான சொற்களும் அன்பைக் காட்ட உதவின. எனவேதான். ஆட்டத்தைப் பற்றிய அக்கறையும் அதில் இதய நெகிழ்ச்சியும் ஏற்படக்கூடிய இனிய சூழ்நிலை அமைந்திருந்தது. அதன் காரணமாக ஆட்டமும் மேலும் மேலும் வளர்ச்சியடைந்தது.
ஆட்டக் காய்கள்
அந்தந்த நாடுகளில் அவரவர்கள் விருப்பத்திற்கேற்ப, ஆட்டக் காய்களையும், வடிவத்தையும் அமைத்துக் கொண்டு ஆடினர்.
இந்தியா மற்றும் இதர நாடுகளும், மனித உருவம், விலங்குகள் போன்ற உருவ அமைப்பில் காய்களை அமைத்து ஆடியதாகச் சான்றுகள் உள்ளன. முகமதிய நாடுகள், அவர்களின் மத சம்பிரதாயத்திற்குப் புறம்பாக போக இயலாமல், மரபுபடி விளையாட வேண்டியிருந்ததால், மனிதன் விலங்கு உருவ அமைப்பினைத் தவிர்த்துவிட்டு, கோண வடிவமாய் அமைந்த முக்கோணம், கூம்பு, வட்ட வடிவம் (Geometrical shapes) போன்றவற்றின் வடிவமாய் காய்களை உருவாக்கி ஆடினர்.
இந்தியாவில் காய்களை உருவாக்கும் அமைப்பு முறையில் சிறிது மாற்றமும் முன்னேற்றமும் ஏற்பட்டது.
கி.பி. 17-ம் நூற்றாண்டு காலத்தில்தான், இந்த முறை வளர்ந்தது மணிக் கற்களினால் ஆட்டக்காய்கள் செய்யப்பட்டன. வைரக் கற்களும் மற்றும் மணிக் கற்களும் விளையாட்டுக்கு காய்கள் அமைத்திட உதவின
தங்கம், வெள்ளி போன்ற உலோகங்களிலும் காய்களை அமைத்தார்கள். யானைத் தந்தங்களிலும் சந்தனக் கட்டைகளிலும் காய்களை உண்டாக்கி அதில் அழகான சித்திர வேலைப்பாடுகளைச் செதுக்கி ஆடி மகிழ்ந்தனர்.
காலங்கடந்த போதும், மற்ற விலையுயர்ந்த கற்கள் மாறிப் போனாலும், தந்தமும் சந்தனமரமுமே நிலைத்து நின்றன. இப்பொழுது பிளாஸ்டிக்கில் கூட ஆட்டக் காய்களை செய்து ஆடுகின்றனர்.
மனிதக் காய்கள்
இவைகளை விட, ஆச்சரியமான ஆட்டக்காய்கள் முகலாயர் ஆட்சிக்காலத்தில் இருந்திருக்கின்றன என்றும் கூறுகின்றனர். அவைகள் தான் மனிதக் காய்கள்.
கி.பி. 16-ம் நூற்றாண்டின் இறுதியிலும் கி.பி 17-ம் நூற்றாண்டின் தொடக்கத்திலும், இந்தியாவை
ஆண்ட முகலாய மன்னர்கள் சதுரங்க ஆட்டத்தில் அதிக ஆர்வமும் நேயமும் நிறைந்தவர்களாக விளங்கினர்.
அரண்மனைத் தரையிலே கற்களின் மீதே சதுரங்கக் கட்டங்கள் பெரிது பெரிதாக அமைக்கப்பட்டிருந்தன.
பெரும்பாலும் ராணியும் அரசருமே இருந்து ஆடுவார்கள், அந்தந்தக் கட்டங்களுக்குரிய காய்களை வைக்காமல், அந்தக் கட்டங்களுக்குரிய காய்களின் அமைப்பைப் போல. தங்கள் தலையில் அணிகலன் அணிந்து பணியாட்கள் உரிய கட்டங்களில் நிற்பார்கள். காய்களை தாங்கள் நகர்த்துவதற்குப் பதிலாக ஆட்களை நகரச் சொல்லி ஆடுவார்கள் அவர்கள் விரும்புகின்ற கட்டம் நோக்கிச் சென்று அவர்களும் நிற்பார்கள்.
இப்படி ஆடியதாக வரலாறு எடுத்துரைக்கின்றது. அரசர்களின் அரசவைதானே ஆட்டத்தை நலிவுறாமல் காத்து வந்திருக்கிறது!.
ஆட்டப் பலகை : ஆட்டப் பலகையானது ஆதிமுதலாகவே கட்டங்களின் அமைப்பிலே தான் அமைந்திருந்தது. முற்காலத்தில், எல்லாக் கட்டங் களும் ஒரு வண்ணக் கட்டங்களாகவே இருந்து வந்திருக்கின்றன!
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் தான், இரு வண்ணங்கள் அமைந்த கட்டங்களாக ஆட்டப்
பலகை மாற்றம் பெற்றது. சிவப்பு பச்சை வண்ணம் உள்ள கட்டங்கள் அல்லது கறுப்பு வெள்ளை அல்லது வெளிர் மஞ்சள் நிறம் உள்ளனவா அமைந்திருந்தது.
இப்பொழுது, கறுப்பு வெள்ளை என்ற இரு வண்ணக் கட்டங்களே உள்ளன. ஆட்டக்காய்களும் அவ்வாறே நிறம் மாறி, தற்போதும் கறுப்பு வெள்ளைக் காய்கள் என்றே இறுதி வடிவம் பெற்றிருக்கின்றன.
காய்களில் கற்பனை நயம்
சதுரங்க ஆட்டம் ஆடுவதற்கு இருவர் தேவை. அவர்கள் எதிரெதிலே அமர்ந்திருக்க, நடுவில் சதுரங்க அட்டை இருக்கும். ஆளுக்கொரு வெள்ளை காய்களடங்கிய அல்லது கறுப்புக் காய்களடங்கிய மொத்தப் பகுதியை தேர்ந்தெடுத்துக் கொண்டு ஆடுவது தான் வழக்கம்.
இவ்வாறு கறுப்புக் காய்களில் உள்ள ராஜாவையும், வெள்ளை நிறக் காய்களில் உள்ள ராஜாவையும் எதிரிகள் போலவே எண்ணிக் கொண்டு, கற்பனை நயம் மிளிர காய்களை அமைத்து அந்நாளில் ஆடியிருக்கின்றனர்.
இங்கிலாந்தை எதிர்த்து இந்தியா போர்க் கோலம் பூண்டிருந்த 18-ம் நூற்றாண்டு சமயத்தில் அவர்கள் தளபதியையும் இந்தியத் தளபதி போல உருவம் அமைத்து ஆடினர்.
ஒரு பக்கம் ஆங்கிலேயர்கள், இன்னொரு பக்கம் இந்தியர்கள், என்ற உருவகம் கொண்டு ஆடிமகிழ்ந்தனர்.
ஒரு புறம் கம்யூனிஸ்ட்டுகள், மறுபுறம் முதலாளித்துவ பிரதிநிதிகள் என்றும், சதுரங்கத்தில் அரசியலும் சில சமயம் புகுந்திருந்தது.
மதத்தின் அடிப்படையிலே கதைகள் பிறந்திருந்தன அல்லவா!
மதத்தின் அடிப்படையிலே கதைகள் பிறந்திருந்ததனால், அதனடிப்படையிலும் காய்களை அமைத்து நம் இந்தியர்கள் ஆடியிருக்கின்றார்கள்.
ஒருபுறம் ராமனை ராஜாவாகவும், மறுபுறம் இராவணனை ராஜாவாகவும் கொண்டும்; ராமன் சிப்பாய்களை அனுமான் போலவும், இராவணன் சிப்பாய்களை சைத்தான் (Demon) போலவும் அமைத்து விளையாடியிருக்கிறார்கள்.
கேரள நாட்டிலே புதுமாதிரிக் காய்களை அமைத்து ஆடியதாக வரலாறு ஒன்று விரித்துரைக்கின்றது.
ராஜாவுக்குப் பதிலாக ராமனையும் ராணிக்குப் பதிலாக சீதையையும், யானைக்கு பதிலாக வினாயகரையும், குதிரைக்குப் பதிலாகக் கல்கியையும், ரதத்திற்குப் பதிலாக கோபுரத்தையும்,
சிப்பாய்களுக்குப் பதிலாக அனுமாரையும் உருவகமாக அமைத்து ஆடினார்களாம்.
இவ்வாறு பல நூற்றாண்டுகளாக பலகோடி மக்களால் பெரிதும் விரும்பி ஆடப் பெற்ற ஆட்டத்திற்குரிய விதிகளை, ஏறத்தாழ 1800 ஆம் ஆண்டுக்குப் பிறகே ஒழுங்குபடுத்தி அமைத்தார்கள் என்று வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
மக்களை மயக்கும் சதுரங்கம்
மக்கள் சதுரங்க ஆட்டத்தை விரும்பியதற்கு அடிப்படை காரணங்கள் இருக்கத்தான் இருந்தன.
போட்டிமிகுந்த போராட்ட உணர்வு என்பது வாழ்க்கைக்குத் தேவை. அத்தகைய போட்டி மனப்பான்மையையும் போராட்ட குணத்தையும் வளர்த்து, அவற்றிற்கு நல்ல வடிகாலாக விளங்குகிறது சதுரங்க ஆட்டம்.
எதிர்பாராமல் இடைப்படுகின்ற தடைகளை, இடர்படுகின்ற துயர்களை, வழிமறிக்கின்ற வலிய சக்திகளையெல்லாம் எளிய முயற்சியுடனே சமாளித்து, வெற்றி பெறும்போது உண்டாகின்ற மகிழ்ச்சிக்கு அளவேது? அத்தகைய அளவில்லா ஆனந்தத்தை சதுரங்க ஆட்டத்தை ஆடும்போது ஆட்டக்காரர்கள் உணர்வதால்தான், மக்கள் இதனை மிகவும் விரும்பி ஆடுகின்றனர்.
ஆட்டப் பலகையில் உள்ள காய்களின் மீதே ஆட்டக்காரர்களின் மனதை ஈடுபடுத்தி, புறக் கண்களை அப்புறம் இப்புறம் போகவிடாது. அகக்கண்களை அகலாமல் ஆழ்த்தி, ஆழ்ந்த நினைவுடன் செயல்படச் செய்து, சுற்றுப்புறத்தையும் சுகதுக்கத்தையும் மறக்கச் செய்வதால்தான், சதுரங்க ஆட்டம் சந்தடியும் சங்கடமும் நிறைந்த இந்த நாட்களில் பெருவாரியாக மக்களால் வரவேற்கப்படுகிறது.
சதுரங்கத்தைச் சாட வேண்டும் என்ற ஆசையுடன் ஒரு அறிஞர் கூறிய உவமையையும் காண்போம். பைபிளிலே காணும் ஒரு நிகழ்ச்சியை ஒரு ஆசிரியர் அவர் கருத்தினுக்கு ஏற்ப பொருத்திக் காட்டுகிறார்.
“யோபு என்பவனது ஆழ்ந்த பொறுமையைச் சோதிப்பதற்காக, சைத்தான் பல தந்திரங்கள் செய்தான். சாகச வேலைகளைச் செய்யச் சொன்னான். சாகசங்களை ஏற்கச் சொன்னான். என்றாலும் யோபுவை அவனால் பொறுமையை இழக்கச் செய்ய முடியவில்லை. சைத்தான் தோற்றுப் போனான்.
அந்த முட்டாள் சைத்தான், ஒரு முறை அவனை சதுரங்க ஆட்டம் ஆடச் சொல்லியிருந்தால், நிச்சயம் அவன் சிறிது நேரத்திற்குள்ளேயே பொறுமை இழந்து தோற்றுப்போயிருப்பான்' என்பதே அவர் கூற்றாகும்.
ஜார்ஜ் பெர்னாட்ஷா, "பதினோரு முட்டாள்கள் ஆடுகின்றார்கள். பதினோராயிரம் முட்டாள்கள் வேடிக்கைப் பார்க்கின்றார்கள்." என்று கிரிக்கெட் ஆட்டத்தைப் பற்றிக் கேலியாகப் பேசவில்லையா! அது போலவேதான், சதுரங்க ஆட்டத்தைப் பற்றியும் அந்த ஆசிரியர் குறிப்பிட்டார்.
பொறுமையை சோதிக்கின்ற, பொன்னான நேரத்தை வீணடிக்கின்ற, சோம்பலை வளர்க்கின்ற ஆட்டம் என்று ஒருபுறம் துற்றினாலும், சகல வசதிகளும் நிறைந்த அரச பரம்பரையினர், பிரபுக்கள் வம்சத்தினர் ஆடுகின்ற ஆட்டம் என்று காலம் பறைசாற்றினாலும், அறிவுள்ள எவரும் ஆடலாம் என்று இக்காலத்தில் சதுரங்கம் நிலை இறங்கி வந்திருக்கிறது. ஆனால் அதன் தரம் இறங்கிவிடவில்லை.
விளையாடுவதற்கென்று பரந்த இடம் தேவையில்லை. வெயில், மழை பனி குளிர் என்று காய்ந்து உலர்ந்து நலியவும் அவசியமில்லை. விளையாட்டுப் பொருள் வாங்க வசதியில்லையே என்று வாட்டமுற்று வேதனைப்படவும் வேண்டிய தில்லை.
ஒருமுறை வாங்கிவிட்டால், நெடுங்காலம் இருந்து, பயன்படும் ஆட்டப் பொருள்கள் அடங்கிய சதுரங்கம், ஒரு சிறந்த ஆட்டமாகும்.
அமர்ந்த இடத்திலேயே இருந்து ஆடிடச் செய்யும் உடலைக் கட்டுப்படுத்துகின்ற வலிய மனத்தையும், மேய்கின்ற கண்கள் வழியே மாய்கின்ற நினைவுகளுடன் அல்லாடுகின்ற மனநிலையை மாற்றவும், - தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும், சக்திக் கேற்றவாறுதான் செயல்பட முடியும் என்பதை விட, நுணுகி யோசனையுடன் அணுகினால் எக்காரியத்திலும் வெற்றிபெறலாம் என்ற நம்பிக்கையைப் பெறவும் சதுரங்கம் வழி வகுக்கிறது.
ஆடியோர் பெற்ற அனுபவங்கள் எல்லாம் அதனைத்தான் கூறுகின்றன. ஆடுவோரும் அத்தகைய அரிய உணர்வையே நாளும் பெறுகின்றனர். நாடிய நாமும் நிச்சயம் பெறலாம்.
இனி, சதுரங்க ஆட்டத்தில், ஆட்டத்திற்குரிய காய்களை எவ்வாறு நகர்த்தி ஆடுவது என்ற முறைகளைக் காணுவோம்.