சமதர்மம்/ஓய்வு நேரம்

ஓய்வு நேரம்


"எனக்கு ஓய்வு ஏது, இதற்கெல்லாம்--அங்கே நரம்பு முறிய வேலை வாங்குகிறான்-அலுத்துப் படுத்தால் கட்டை போலாகி விடுகிறேன் --நான் போகவில்லை, கூத்துப் பார்க்க"--என்று கூறும் பாட்டாளி--"நமக்கு ஓய்வு கிடையாது--ஆறு மாதத்துக் கணக்கு இன்னும் எழுதி முடித்தாக வேண்டும் ஒரு வரத்திலே" என்று கூறும் எழுத்து வேலைக்காரர், நிரம்பியுள்ள சமுதாயத்திலே, 'ஓய்வு நேரம்' ஆராய வேண்டிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. நமது நாட்டிவே சமூக, பொருளாதார அமைப்புகள் மாறிக்கொண்டு வருகின்றன--நல்ல விதமான வளர்ச்சி ஏற்பட்டால், 'ஓய்வு நேரம்' உண்மையிலேயே, கவனிக்கப்படவேண்டிய பிரச்சினையாகிவிடும்--தக்க திட்டங்கள்கூட தீட்டவேண்டிய நிலைமை ஏற்பட்டுவிடும். இப்போது முன்னணியிலே இருக்கும் பிரச்சினைகளை எப்படி வாழ்க்கையை நடத்துவது என்பதாகவே, பெரும்பாலான மக்களுக்கு இன்று இருக்கிறது.

எப்போது பார்த்தாலும், ஏதாவது வேலை செய்தபடி இருப்பவர்களையும் காணலாம்--வேலை ஏதும் செய்யாமல் பொழுதை ஓட்டுபவர்களையும் காணலாம். வேலை ஏதும் செய்யாமலிருப்பவர்கள் எல்லாம் ஓய்வாக இருக்கிறார்கள். என்று கூறிவிட முடியாது. வேலை ஏதும் கிடைக்காததால் அப்படி உள்ளவர்களே ஏராளம்.

'ஓய்வு நேரம்'--வேலை கிடைத்து அதிலே ஈடுபட்டு உள்ளவர்களுக்கு வேலை நேரம் போக, மிச்சமிருக்கும் பொழுது, வேலை செய்யும் நிலையில் இல்லாதவர்களின் 'காலம்' ஓய்வு அல்ல--அது ஓய்யாரம். வேலை கிடைக்காததால் வேலை செய்யாது இருப்பவர்களுக்கு கிடைத்திருப்பது 'ஓய்வு' அல்ல திகைப்பு, வேலை செய்யும் மனப்பான்மையற்றவர்கள் காலத்தைக் கொலை செய்வது 'ஓய்பு' அல்ல--அது சோம்பல், ஆக, யாராவது. ஒரு வேலையும் செய்யாது இருக்கும்போது அவர் ஓய்வாக இருக்கிறார் என்று கூறிவிடுவது கூடாது.

ஓய்வு வேறு; வேலையற்று இருப்பது முற்றிலும்வேறு.

காலை முதல் மாலைவரை பாடுபட்டு வேலை செய்து பிழைக்கும் பாட்டாளிக்கு, இரவு தெருக்கோடியில் நடைபெறும் 'கூத்து' ஓய்வு நேரம் பொழுதுபோக்காக அமைகிறது-- கூத்தாடுபவர்களுக்கோ; இரவு முழுவதும் கூத்து ஆடி அலுத்து, காலையிலே படுத்துத் தூங்கி, பகலில் விழித்தபடி புரண்டுவிட்டு மாலை நேரத்திலே வெளியே சென்றுவருவது ஓய்வு நேரம்--பொழுது போக்கு நேரம்--வேடிக்கைக்காகச் சொல்வார்கள்--ரயில் ஓடும் போது போர்ட்டருக்கு ஓய்வு--ரயில் நின்று சில நிமிஷம் ஓய்வு கொள்கிறதே அப்போது போர்ட்டாருக்கு வேலை--அதுபோல ஓய்வு நேரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம்.

வேலை செய்து செய்து அலுத்து, இனி வேலை செய்யவே முடியாத நிலை ஏற்பட்டால், வேலை செய்யாமல் இருப்பதை, 'ஓய்ந்து விட்டான்' என்று கூறுகிறோம். அந்த நிலையல்ல 'ஒய்வு நேரம்' வேலை செய்கிறான்-- இடையே வேலை ஏதும் செய்யாமலிருக்கிறான்--அந்த வேளை தான் 'ஓய்வு' இந்த ஓய்வு நேரம்--ஓய்வின்தன்மை, இதைக்கொண்டுதான், அந்தச் சமூகத்தின் நிலைமையை மதிக்கிறார்கள் அறிவாளிகள். பொதுமக்களில் பெரும்பாலானவர்களுக்குக் கிடைக்கும்' ஓய்வு' இருக்கிறதே, அகையே நாகரிகத்தின் அளவுகோலாகக் கொள்கிறார்கள் நல்யிறிவாளர்கள்.

உழைத்துத்தான் வாழ வேண்டும்--வாழ்வு, உரிமை, உழைப்பு, கடமை.

ஆனால் உழைப்பு, உடலும் உள்ளமும் முறிந்து போகாத அளவிலேயும் வகையிலேயும் இருக்கவேண்டும். வாழ்விற்கு வகை தேடுவதற்காகப் பாடுபடவேண்டும். ஆனால் படுகிறபாடு, உடல் வளத்தையும் உள்ள உற்சாகத்தை பாழ் படுத்திவிடுமானால், தொடர்ந்து பாடுபடும் திறன்பட்டுப் போய்விடும், வாழ்வின் சுகத்தை ருசிக்கும் திறனும் கெட்டுப்போய்விடும். உழைப்பு, உருக்குலைந்து விடக்கூடாது--உடலையும் சரி, உள்ளத்தையும் சரி, வாழ்விற்காக வசதி தேடுவதற்கு உழைத்து, அந்த உழைப்பினாலே, உருக்குலைந்து போகும் நிலை மனிதனுக்கு ஏற்படுமானால், அவன் முட்டையிட்டதும் செத்துவிடும் கோழி, அரும்புவிட்டதும் பட்டுப்போகும் செடிபோலப் பயன் காணாமலும் பயன் தாராமலும், போய்விடுகிறான்.

உழைப்பு, நம்முடைய உடலையும் உள்ளத்தையும் சிதைத்து விடவில்லை. வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளுக்கும் குடும்ப வளர்ச்சிக்கும் வளத்துக்கும் தக்கவருவாயைத் தருகிறது. இந்த வருவாயைப் பெறுவதற்காக உழைத்த நேரம் போக, மிச்ச நேரம் ஓய்வு கிடைக்கிறது, என்ற நிலைமை நாட்டு மக்களின் பெரும் பான்மையினருக்கு ஏற்பட்டால்தான். ஓய்வு நேரம். சமூகத்தின் தரத்தையும், மனப்பண்பையும் உயர்த்தக் கூடிய சக்தி பெறும்.

நமது சமூகத்திலே இன்றைய அமைப்பிலே, உழவர்கள், இயந்திரத் தொழிலாளர்கள், பல திறப்பட்ட தொழிலாளர்கள். பணிமனைகளிலே வேலை பார்ப்பவர்கள், என்று பல 'தரம்' இருக்கக் காண்கிறோம், யந்திரத் தொழிலாளர்களின் தொகை. மொத்த ஜனத்தொகையில் கால் பங்குக்கும் குறைவு. பாதிக்குமேல் உள்ளவர்கள் உழவர்கள்--பணிமனையினர், உழவர் அளவு இல்லை--அதற்கு அடுத்த நிலையினர். இந்த மூன்று வகையினருக்கும் இன்று வாழ்க்கைத் தரமும் தொழில் முறையும் அமைந்திருக்கும் நிலை, உண்மையான ஓய்வு, உள்ளத்துக்குப் புதிய உற்சாகம் தரக்கூடிய ஓய்வு கிடைப்பது கடினம், ஒரு சிலருக்குக் கிடைக்கும் ஓய்வையும், தக்க விதத்திலே பயண்படுத்திக்கொள்ள மனவளமும் குறைவு, பணபலம் அதைவிடக் குறைவு.

இயற்கை நம்மைத் துரோகம் செய்துவிடவில்லை. மற்ற நாடுகளிலே உள்ளதைவிட, இயற்கை வளம் இங்குக் கண்டவர்கள் பொறாமைப்படும் அளவிற்கு இருக்கத்தான் செய்கிறது. என்றாலும் தொழில் வளம். தொழில் திறம் போதுமான அளவு பெருகாத்தால் தரித்திரம் தாண்டவமாடக் காண்கிறோம். புதிய முறைகளையும் கருவிகளையும் கொண்டு, இயற்கை வளத்தைப் பயன் படுத்துவதிலே மற்ற நாடுகளைவிட நாம், மிகப் பின்னணியில் இருப்பதால், இங்கு, சுவையற்ற, கவைக்குதவாத வாழ்க்கையை நடத்துவதற்கே மிகப் பெரும்பாலான மக்கள், மாடுடன் உழைக்கிறார்கள். மனித உழைப்பு மிக மிக அதிகமான அளவிலே செலவிடப்படுகிறது. மனிதன் பிணமாகாதிருக்க; நல் வாழ்வு பெற அல்ல முழு வாழ்வு பெறக்கூட அல்ல--சாகாமலிருக்க. ஆகவே, ஓய்வு பாட்டாளியின் வேலையின் கடினம் குறைக்கப்பட்ட பிறகுதான் பெரும்பான்மை மக்களுக்குக் கிடைக்கும். பெரும்பான்மையினருக்கு ஓய்வு கிடைத்து, அந்த ஓய்வை தக்கபடி பயன் படுத்தினால்தான் பாடுபடுபவருக்கு மேலும் தொடர்ந்து பாடுபடவும், திறமையுடன் பாடுபடவும் முடியும்--பிறகு பொதுச் செல்வம் வளரும்; சீர் உண்டாகும்; நாடு செழிக்கும். இவைகள் எல்லாவற்றையும்விட, மனித மாண்பு மலரும். உழைத்தோம், வாழ்வின் பயனைப் பெறுகிறோம் என்ற களிப்பு முதலிலே ஏற்படவேண்டும். பிறகுதான் ஓய்வைச் சுவைக்க முடியும்.

வேலை மனிதத் தன்மையை மாய்க்காத அளவு--இருக்க வேண்டும்--வேலை நேரத்தை மட்டுமல்ல குறிப்பிடுவது; வேலை முறை--தன்மை வேலை செய்பவனுக்கு வேலை நேரத்தில் வேலைக்குத் தேவையான வசதிகளைத் தருவது எல்லாவற்றையும் சேர்த்துத்தான் கூறுகிறேன். வேலை மனிதனை, தேயச் செய்துவிட்டால், பிறகு கிடைக்கும் ஓய்வு வேளை ஓய்வு தராது--பாதி மனிதரால் ஓய்வு பலனைப் பெறமுடியாது.

ஓய்வு, சீமான்களாக உள்ள சிலருக்கு மட்டும் உரிமையாக இருந்த காலம் உண்டு. நிலைமை இப்போது மாறிவருகிறது--ஓரளவிற்கு நம்பிக்கைத் தருகிற வகையில் ஓய்வு சிலருக்கும்; ஓயாத வேலைத் தொல்லை மிகப் பலருக்கும்--என்ற முறையில் சமூக அமைப்பு இருக்கும் போது ஓய்வின் விளைவுகளாக கலை, பண்பு, இவைகளை அல்ல, கருத்தற்ற களியாட்டம், வேதனை யூட்டும் வெறியாட்டம், ஆணவ ஆர்ப்பாட்டம், இவைகளையே காண முடியும்.

ரோம் சாம்ராஜ்யத்திலே ஒரு விசித்திரமான அரங்கம். பள்ளத்தில் அரங்கம்--பார்வையாளர்கள் உயரத்தில் அமர்ந்திருப்பர். அரங்கத்திலே வீரப் போர் நடைபெறும். மல்யுத்தமல்ல--வாட்போர் அல்ல--பலசாலிக்கும் வலிமை சாலிக்கும் அல்ல--மனிதனுக்கும் சிங்கத்துக்கும் சண்டை--பதை பதைக்கும் மனிதன். பசியுடன் உள்ள சிங்கம்--பயங்கரமான போர், பள்ளத்தில். மேலே சீமான்கள். சீமாட்டிகள் ரசிக்க. கர்ஜனை செய்யும் காட்டரசன் வாலைச் சுழற்றித்தரையில் அடிக்கும். பயத்தால் மனிதனின் பற்கள் ஒன்றோடொன்று உராயும், மேலே சீமாட்டிகள் சிரிப்பொலியும், கைதட்டுவதால் எழும் வளையொலியும் கிளம்பும்; சீமான்கள் சொக்குவர். இரத்தம் பீறிட்டு வரும்--மனிதனுக்கு. சீமான்கள் மேலே இருந்து ஆரவரம்செய்வர்--விடாதே; விலகாதே; என்று. ஆயுதமற்ற மனிதனுக்கு உற்சாக மூட்டுபவர் பசியாற் புதிய பலம்பெற்ற சிங்கத்தைத் தாக்கும்படி காட்டரசன் கிழித்தெறிவான் மனிதனை கீழே--அரங்கத்தில்--மேலே மேட்டுக் குடியினரான மனித மிருகங்கள். ஓய்வு நேரத்தை, ரோம் நாட்டுச் சீமான்கள் பயன்படுத்திய வகைகளிலே இதுவொன்று. மனிதனை மிருகம் கொல்வது கண்டுகளிக்கும் பொழுதுபோக்கு

ஓய்வு சிலருக்கு--வேலை பலருக்கு என்ற--முறை மாறினாலொழிய ஓய்வு சமூக உயர்வுக்குப் பயன்படும் பண்பு ஆக முடியாது. வாழ்க்கைத்தரம் மட்டமாக இருக்கும் சமூகத்திலே, ஓய்வு கிடைத்துப் பயனில்லை. பொருளும் இல்லை. வேகாத பண்டத்தை வெள்ளித் தட்டிலே வைத்துத் தரும் வீண் வேலையாகும்.

நம்நாடு பட்டிக்காடுகள் அதிகமாக உள்ள இடம். பட்டிக்காடுகளோ உழவர்கள் வாழுமிடம். உழவர்களுக்கு ஆண்டிலே மூன்று மாதத்திற்காவது வேலை இருப்பதில்லை ஓய்வுதான்--இந்தச் சமயத்திலே அவர்கள் வீணாகப் பொழுதை ஓட்டுகிறார்கள். நேரம் வீணாகிப் போகிறது- என்று கூறி உழவும் தொழிலுக்கான நேரம் போக மிச்சமிருக்கும் ஓய்வு நேரத்தை, உழவர்கள் பலன் தரும் பொழுது போக்குக்கும் செலவிடவேண்டும் உதாரணமாக அவர்கள் தேனீ வளர்க்கலாம்; கோழி வளர்க்கலாம்; கூடை முடையலாம், நூல் நூற்கலாம்--சிறு சிறுகுடிசைத் தொழில் செய்யலாம்; ஓய்வு வீண் போகாது, பலனும் கிடைக்கும். வருமானமும் உண்டு என்று கூறாத நிபுணர் கிடையாது உழவர்களுக்காக இந்த யோசனை கூறப்பட்டாலும் சரி, பொதுவாக எல்லோருக்குமே சொல்வதானாலும் சரி, ஒய்வு நேரத்தைப் பணமாக்கும் வழிகளாக்கும்போது சிக்கல் நிச்சயம் ஏற்பட்டுத்தீரும். செலவிடும் நேரம், செலவிடும் உழைப்பு. இவைகளுக்கு ஏற்ற பணம் பலனாகக் கிடைக்கிறதா என்ற கேள்வி நாளா வட்டத்திலே கிளம்பித் தீரும். கிளம்பும்போது வாழ்க்கையிலே குளிர்ச்சி அதிகமாக உள்ளவர் பொழுதுபோக்குத் தொழிலிலே கிடைக்கும் ஒரு அணாவைக் கொண்டு அடையும் களிப்பு அதிகமாகத்தான் இருக்கும்--கலெக்டர் பங்களாத் தோட்டத்துக் கலாப்பழம். காலை முதல் மாலை வரையில் கழணியில் பாடுபட்டும் கால் வயிற்றுக்கும் கட்டிவரவில்லையே என்று கதறும் கந்தன் ஓய்வு வேலையில் உழைத்துப் பெறும் பலாப்பழத்தைவிட அதிக இனிப்புதான் அதிக களிப்பு தான் கிடைக்கும்.

ஓய்வு என்ற பெயரால் புதிய உழைப்பு--அந்த உழைப்பின் மூலம் கிடைக்கும் வருவாய் வாழ்க்கைச் செலவிற்கு பயன்பட வேண்டும், என்ற நிர்பந்தம் இருந்துவிட்டால் அது, ஓய்வுமல்ல பொழுதுபோக்கு மாகாது. எனவே கிராம மக்களுக்காகக் கூறப்படும் யோசனைகள். ஒய்வையும் உழவனுக்குப் புதிய எஜமானாக்கி விடுகிறது, நண்பனாக்கவில்லை.

ஓய்வு--உயர்ந்த பண்புள்ள நண்பன் மூலம் நாம் என்ன பெறமுடியுமோ அவ்விதமான மனமகிழ்ச்சியைத் தருவதாக அமைத்துக் கொள்ளவேண்டும், அது இன்றுள்ள சமூக. பொருளாதார அமைப்பு முறையில், சாத்தியமாகுமா என்பது மிகமிகச் சந்தேகம்.

ஓய்வு நேரத்தை, உல்லாசமாகக் கழிக்க வேண்டுமானால் அதற்காகச் செலவிட வகை கிடைக்கவேண்டும்--செலவு பெரும்பாலான மக்களின் வாழ்க்கைத் தரத்துக்குப் பொருத்தமானதாக இருக்கவேண்டும், ஓய்வின் சுவையைப் பருகி--வேலைக் கலைப்பைப் போக்கிக் கொள்ள வேண்டும். களைப்பைப் போக்கிக் கொள்ள வெப்ப நாட்களில் குளிர்ந்த பானமும், குளிர் நாட்களிலே சூடான பானமும், எல்லா நாட்களிலும் இனிய முகமும், அன்பு மொழியும், கொண்ட குடும்பமும் தேவை--இது கிடைத்தான பிறகு, ஓய்வைக் கழிக்கும் முறையைக் கண்டறியும் போது அறிவும், அறிந்தபிறகு அந்த முறைப்படி பொழுது போக்கும் வசதியும் ஏற்படவேண்டும்.

ஓய்வு நாட்களிலே, படகு வீட்டிலே தங்கி காஷ்மீர் காட்சியைக் கண்டு களிக்க வாருங்கள் குடும்பத்துடன்--என்ற விளம்பரத்தைக் காணும் ஆபீஸ் அலுவலவர்கள், கதையிலே நந்தனார் பாடுவதாகச் சொல்வார்களே, அதைப் போல, நாளைப் போகாமலிருப்பேனோ நான்--என்று பாடி அழ முடியுமே தவிர, வேறென்ன செய்வது?

உதக மண்டலத்து வனப்பு, கொடைக்கானல் குளிர்ச்சி குற்றாலக் கவர்ச்சி, இவைகளைக் கண்டு களிக்கும் பொழுது போக்கு--ஓய்வு--எவ்வளவு பேருக்குக் கிடைக்கமுடியும்? வாழ்க்கைத் தரம் பொதுவாக உயர்ந்தாலொழிய இத்தகைய 'உல்லாசம்' சிலர் சொல்லப் பலர் அதிசயிக்கும் பேச்சளவாகத்தான் இருந்து தீரும். வாழ்க்கைத்தரம் உயருவதுடன் உதகமண்டலம், குற்றாலம், கோடைக் கானல் புதிது புதிதாக அமைக்க வேண்டும்--அதாவது ஓய்வு இடங்கள், பொழுது போக்குமிடங்கள் புதிது புதிதாக ஏற்படுத்தவேண்டும். அந்தந்த வட்டாரத்து மக்களின் பணக்கண்ணுக்குத் தெரியக் கூடிய தொலைவில், தமிழ் நாட்டிலே பல இடங்கள் இப்படி ஏற்பாடு செய்ய முடியும் பொது முயற்சியால்--துரைத்தனத்தாரின் திட்டத்தால்.

ஓய்வு நேரம்--மேலே வானத்திலே நிலவு, நட்சத்திரம் காண்கிறோம். களிப்புத்தான்--ஆனால் எவ்வளவு நேரம் காண முடியும்--அந்த ஊர் நகராட்சி மன்றத்தாரோ பொதுநலக் கழகத்தாரோ, ஒரு அருமையான டெலஸ் கோப்பை, தக்க முறையிலமைத்து பொழுது போக்குபவர்கள் காண வரலாம் என்று ஒரு ஏற்பாடு இருந்தால் விண்ணைக்கண்டு களிப்பது, எவ்வளவு சுவையான பொழுது போக்காக மாறும், நம்மையும் அறியாமல், எவ்வளவு பயனுள்ள அறிவும் நமது உள்ளத்திலே குடி ஏறும். பொழுது போக்கு, வீணாகவும் கூடாது, விவேக சிந்தாமணி' பாடம் படிக்கும் பள்ளிக்கூடமுமாகி விடக்கூடாது--சிரமமோ, சிக்கலோ, இன்றி நமக்கு, அறிவானந்தம் தருவதாய் அமைய வேண்டும். பொதுமக்கள் மனதிலே கலைப்பண்பு ஊற்றெடுக்கும் வகையான பொழுது போக்குகள் திட்டமிட்டு, மிகமிகக் குறைந்த செலவிலே ஏற்படுத்தலாம் நகராட்சியினர். கண்காட்சிகள் இவ்விதமான முயற்சிகளிலே ஒன்று-- முயற்சி என்று மட்டுமே கூறமுடியும்--வெற்றி அல்ல--ஏனெனில் பெரும்பாலான அக்காட்சிகள் கடை வீதிகளாகவே காட்சி தருகின்றன. பயன் இல்லை--சில அக்காட்சிகளிலே, மிருக உணர்ச்சியும் சூதாட்ட உணர்ச்சியும் தூண்டும் முறைகளில் உள்ளன--தீமையே உண்டாகிறது. ஆனால் கண்காட்சி, பொழுது போக்குக்கு அரிய சாதனம்--அறிவானந்தம் பெறமுடியும்.

உலகத்தைத் திடுக்கிடச் செய்த மாவீரன் நெப்போலியனைப் பற்றிப் பெருமையாகப் பேசும்போது சொல்லுவார்கள் தூங்கவும் நேரம் இடையாது--களத்திலே, எங்கேனும் ஓர் இடத்திலே, குதிரைமீது அமர்ந்தயடியே கண்மூடிச் சில நிமிஷநேரம் தூங்குவான்--அவ்வளவுதான் முடியும்-- நெப்போலியனுக்கு அவ்வளவு வேலை? ஓயாத உழைப்பு--என்று பெருமையாகக் கூறுவார்கள்.

உண்மைதான் தூங்கவும் நேரமின்றித்தான் போரில் ஈடுபட்டிருந்தான் அந்த மாவீரன். ஆனால் ஓய்வு கிடைக்கவில்லையே அழகான அருவிலே குளித்துவிட்டுச் சிங்காரச் சோலையிலே உலவி வேல்விழிமாது பாடிடும் தோன்மொழி சிந்துக் கேட்டுக் களித்திட, நமக்கு ஓய்வில்லையே, என்ன தொல்லையான வாழ்க்கை இது. ஓய்வு துளியுமில்லையே எப்போதும் உழைப்பு--என்ன சுகம் காண்கிறோம்--ஓய்வின்றி உழைக்கிறோம் என்று நெப்போலியன் மனம் நொந்துக் கொண்டானா? இல்லை.

களத்திலே கடும் போரிட்டபடி இருந்து வந்ததால் தூங்கவும் நேரம் கிடைக்காமல், ஓய்வு துளியுமின்றி இருந்து வந்து நெப்போலியனுடைய நிலையுடன், எல்பா தீவிலே, கைதியாக்கப்பட்டு, ஒரு வேலையுமின்றி, இருபத்தி நான்கு மணிநேரமும் ஓய்வாக இருக்கும் வசதிபெற்ற நெப்போலியனுடைய நிலையை ஒப்பிட்டுப் பாருங்கள். களத்திலே ஒய்வு கிடையாது. ஆனால் அவன் கண்முன் வெற்றிக்கொடிகள். அவன் செவியில் வீரமுழக்கம்--மண்டலங்கள் அவன் காலடியில் மணிமுடிகளைச் செண்டுகளாக்கி விளையாடிக் கொண்டிருந்த வீரன். ஓய்வின்றி இருந்தபோது. ஓய்வு நாள் முழுவதும் வேலை துளியும்கிடையாது--எல்பா தீவில்--ஆனால் அந்தக் கைதி நெப்போலியனுக்கு. அந்த ஓய்வு இனிப்பையா தந்திருக்கும். அந்த ஓய்வு, அவனுக்கு, பெருமையோ, பூரிப்போ தந்ததா-- தருமா--பிணத்தின் மீது தூவப்படும் மல்லிகை தானே அந்த ஓய்வு?

நம் நாட்டிலே, பெரும்பாலான மக்களுக்கு, இப்படிப் பட்ட ஓய்வு கிடைக்கிறது. எல்பா தீவுக்குத் துரத்தப் பட்ட நெப்போலியன்கள் இங்கு ஏராளம்--வாழ்க்கை களத்திலே தோற்றுவிடுபவர்களெல்லாம், எல்பா தீவுக்குத் துரத்தப்பட்ட நெப்போலியன்கள், அவர்கள் பெற்றிருப்பது ஓய்வு அல்ல--அவர்கள் இன்னமும் வாழ்வே பெறவில்லை.

மாளிகையிலே 'சோம்பேறிகள்' இருந்தால்--கண்டனம் பிறக்காது, கொடுத்துவைத்தவர், அவருக்கு என்ன நிம்மதியான வாழ்க்கை--என்று களியுரை தரப்படும். அவர் மான் வளர்ப்பார் பொழுது போக்குக்கு--மீன் வளர்ப்பார் அழகுக்கு--ஓய்வு அவருக்கு ஒராயிரம் சேட்டைகள் செய்ய இடந்தரும். புகழ்வர். நாள் முழுவதும் பாடுபட்டு பிழைக்கவேண்டிய ஓயாத உழைப்பாளியின் நிலை வேறு கடிகாரத்தைப் பார்த்து வேலை செய்து விட்டு, காலண்டரைப் பார்த்துச் சம்பளம் வாங்கும் பேனா ஓட்டும் நண்பர்கள். கிடைக்கும் ஓய்வை திரட்டக் கூடிய வசதியைப் பயன்படுத்திக் கொண்டு அறிவானந்த மான செயலுக்குப் பொழுது போக்குப் பயன்படுத்துகிறார்களா?

இயற்கை, தன் அழகை வாரி வீசுகிறது--கவனிப்பாரற்றுக் கிடக்கிறது--எழில்மிக்க விதவையைப்போல.

நீர் வீழ்ச்சி--சித்திரச்சோலை--ஆறு உற்பத்தியாகும் இடம்--மலை உச்சி--சந்தனக்காடு--சிந்து பாயும் சிற்றாறு--பறவை இனங்களின் பாட்டு மொழி--புள்ளிமான்கள் துள்ளியோடும் காட்சி--யானைக்கன்றை அழைத்துச் செல்லும் கனவு. தேசிங்குக்கோட்டை சேர்வராயன்மலை பார்த்ததுண்டா என்று கேளுங்கள். கோபம் பிறக்கும்--நான் என்ன சீமானா--சம்பளம் எனக்கு 150 சார்; நூற்று ஐம்பதுதான், உல்லாச யாத்திரை செய்யவேண்டும் என்று எதிர் பார்க்கிறீர் என்று கண்டித்துப் பேசுவார்.

ஆனால் மிகக் கஷ்டப்பட்டு நான்கு நாட்கள் லீவு பெற்றாலும் குழந்தைக்கு மொட்டையடிக்க திருப்பதிக்கோ. அம்மா சிரார்த்தத்துக்குக் காவிரிக்கோ, புத்திர சந்தான் நிமித்தம் ராமேஸ்வரமோ போயிருப்பர், அதற்குப் பணம் எப்படிக் கிடைத்தது என்று கேட்டாலோ கோபம் கொதித்து வரும். இலக்கியம் எப்படி வளரும்? கலை மணம் எங்கிருந்து கமழும்? ஓவியக்கலை எவ்வண்ணம் ஓங்க முடியும்? நல்லிசை எங்கிருந்து பிறக்கும் ? இயற்கை தரும். களிப்பைக் கண்டு மனதிலே கலையுணர்ச்சியைப் பெறாவிட்டால் வசதியுள்ள மிகமிகச் சிறு கட்டமும், ஓய்வு நேரத்தைத் தக்கபடி பயன்படுத்தி தருகிறது.

அலுத்துத் தூங்கும் அந்த ஆலைத் தொழிலாளி, காலையிலே எழுந்ததும், கதிரவனைக் கண்டு களித்திடும் கமலத்தைக் காணப் போவதுமில்லை. இரவு நிலவின் அழகினைக் களித்து விட்டுப் படுத்தவனுமல்ல--அதோ சற்று தொலைவாகப் படுத்திருக்கும் மாது--அவன் தர்ம பத்தினி அவளிடம் உதிர்ந்த கண்ணீரைத் தான் இரவு படுக்கும் போது பரிசாகம் பெற்றான். அந்தப் பரிசும் சுலபத்திலே அவனுக்குக் கிடைத்து விடவில்லை. காலை முதல் ஆலையில் பாடுபட்டு அலுத்துப்போன கரத்துக்கு வேலை கொடுக்கி றோமோ என்ற எண்ணமுமின்றி அம்மையை அறைந்தான் முதுகில், கன்னத்தில்--தன் தலையிலும் அடித்துக்கொண்டான்--பிறகு தான் கண்ணீரைக் காணிக்கை யாக்கினாள், பத்தினி--காலையிலே ஆலைச்சங்கு அலறுவதற்கு முன்பு அழுகுரல் இவன் காதைத் துலைக்கக் கூடும், இந்தத் தோழனிடம் ஓவ்வின் உயர்வைப் பற்றி பேசுவது ஓய்வை எப்படி பயன்படுத்துவது என்று கூறுவது, மாளிகையிலே திமிர்பிடித்து உலவும் நாய்,பணியாளைக் கடித்தது. கண்டு சீமான் இன்ன மருந்து சாப்பிட்டால் நல்லது; ஆபத்து இராது என்று பணியாளுக்கு யோசனை கூறுவது போன்றதாகும். உழைப்பாளியை உருக்குலையச் செய்யும் தொழில் முறையை மாற்றி, சக்திக்கேற்ற உழைப்பு' தேவைக்கேற்ற வசதி என்ற திட்டத்தை வெற்றியுடன் நடத்திக் காட்டினாலொழிய, ஓய்வு பற்றி ஆராய்ச்சி செய்வது அறிவையும், அலட்சிய சுபாவத்தையும் ஆதாரமாகக் கொண்டு நடத்தும் நாகரிக உலகத்து நயவஞ்சக நாடகம் என்றே சொல்ல வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சமதர்மம்/ஓய்வு_நேரம்&oldid=1638703" இலிருந்து மீள்விக்கப்பட்டது