சமதர்மம்/நாடகத்திலே மறுமலர்ச்சி

நாடகத்திலே மறுமலர்ச்சி



நாட்டிலே இதுபோல பல்வேறு துறைகளிலேயும் மறுமலர்ச்சி ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. புதியதோர் நிலைக்கு நாடு தள்ளாடித் தள்ளாடி, ஆனால் நிச்சயமாக சென்று கொண்டிருக்கிறது. புதிய நிலையை அடைந்தால் நம் நாடு, உலகிலே முன்னனியில் உள்ள நாடுகளிலே ஒன்றாக முடியும் என்ற நம்பிக்கைக் கொண்டவர்கள், இந்தத் திருப்பணியில் ஈடு பட்டிருக்கிறார்கள். இன்று எந்தத் துறையைக் கவனித்தாலும் குமுறலும் கொந்தளிப்பும் தெரிகிறது--அச்சம் சிலருக்கு, சந்தேகம் பலருக்கு, மிகமிகச் சிறுபான்மையினருக்கு மட்டுமே தெரிகிறது புதிதாக ஓர் நிலை நாட்டுக்கு உருவாகிக்கொண்டு வருகிற உண்மை. வெடித்துக் கிடக்கும் வயல், படர்ந்து போகும் நிலையில் உள்ள விளக்கு, பட்டுக் கொண்டே வரும் நிலையில் உள்ள மரம் உலர்ந்துகொண்டு வரும் கொடி, வற்றிக் கொண்டிருக்கும் குளம் -- இவைபோல, சமுதாயத்தில் நிலையும் நினைப்பும் நடவடிக்கையும் ஆகிவிடும்போது, இந்த அவல நிலையைப் போக்கியாக வேண்டுமென்ற ஆர்வமும் போக்க முடியும் என்ற நம்பிக்கையும் போக்கக் கூடிய அறிவாற்றலுங் கொண்ட ஒரு சிலர் முன் வருகிறார்கள். அறிவுப்பண்ணைக்குப் பணியாற்ற அவர்களை நாடு வரவேற்பதில்லை நையாண்டி செய்யும்! மதிப்பளிப்பதில்லை--மாச்சரியத்தை வாரி வீசும் துணை புரிவதில்லை; தொல்லை தரும்! எனினும், அந்த ஒரு சிலர் ஓயாது உழைத்து; சலிப்பு, கோபம், வெறுப்பு, பகை என்னும் உணர்ச்சிகளுக்குப் பலியாகி விடாமல் புன்னகையும் பெருமூச்சும் கலந்த நிலையில் பணி புரிந்து, பட்ட மரம் துளிர் விடும் வரை, படர்ந்து போக இருந்த விளக்கு மீண்டும் ஒளி விடும்வரையில் பாடுபட்டு, வெற்றி கண்டு மறுமலர்ச்சியை உண்டாக்கி வைக்கிறார்கள்.

உள்ளது சரியில்லை, போதுமானதாக இல்லை, அல்லது பயனில்லை, என்று தோண்றும்போது, உள்ளதைத் திருத்து கிறோம், புதுப்பிக்கிறோம், பயனுள்ள தாக்குகிறோம். இந்த சமுதாயம் திருத்தி அமைக்கக்கூடிய, திருத்தி அமைத்தால் பண்பும் பயனும் தரக்கூடிய நிலையில் தான் இருக்கிறது.

சுக்கு நூறாகி விட்டகலம், கடலடி சென்று, ஆண்டு பல ஆன பிறகும், விஞ்ஞானக் கருவிகள் மூலம் கடலடி சென்று, கலத்தின் பகுதிகளையும், அதிலிருந்த பொருள்களையும் எடுத்து வரும் பெரு முயர்ச்சியில், மேலை நாட்டவர் வெற்றிகரமாக ஈடு படுகிறார்கள் என்றால் ஒரு காலத்தில் உன்னதமான நிலைமையில் வாழ்ந்து, உலகிலே உயரிடம் பெற்று திகழ்ந்து, இடைக்காலத்திலே எத்தரின் பிடியிலே சிக்கியதால் சீரழிந்த நாட்டையும், சமுதாயத்தையும் புதுப்பிப்பது ஏன் சாத்யமாகாது? இந்தத் தளராத நம்பிக்கைத் தான் மறுமலர்ச்சி இயக்கத்திலே பணி புரிபவர்களுக்கு உள்ள பெரியதோர் துணை.

கடந்த பத்தாண்டுகளிலே, நாடகத் துறையிலே ஏற்பட்டிருக்கும் மறுமலர்ச்சியைக் கூர்ந்து கவனித்தால் மறுமலர்ச்சி இயக்கத்தின் வேகமும் வெற்றியும் விளக்கமும் தெரியும்.

நாடகம்:--இன்று நள்ளிரவுச் சத்தமல்ல--நடையாலும் உடையாலும், விழியாலும் மொழியாலும், அரைத்தூக்கத்திலிருப்பவர்களுக்கு ஆனந்தம் தர முயற்சிக்கும், வெறும் ஆடல் பாடல் அல்ல! நாடகம், இன்று நாட்டுக்கு ஒரு நல்லரசனாக முன் வந்திருக்கிறது--துணிவுடன்

'ரிஸ்ட்வாச்' கட்டிய கரத்துடன் அசோக வனத்திலே அழுது கொண்டிருக்கும் சீதையை, போலோ காலர் சர்ட்டும். பொன் முலாம் பூசிய பல்லும், பாலிஸ் போட்டஸ்லிப்பரும் தங்க நிற பிரேம் போட்ட மூக்குக் கண்ணாடியும் தரித்துக் கொண்டு வரும் கோவலனையும், ஓரடி பாடிடும் அனுமானையும் இன்று நாடக மேடைகளிலே அநேகமாகப் பார்க்க முடியாது--ஏராளமான பொருட் செலவில் ஒருவரிருவர், இந்தப் பழங்கால சின்னங்களை பாதுகாத்துக் கொண்டு வருகிறார்கள்--பொதுவாகப் பத்தாண்டுகளுக்கு முன்பு பார்த்த இந்த நாடகக் காட்சிகளை இன்று பார்க்க முடிவதில்லை. இன்று நாடக மேடையிலே மனிதனைக் காண முடிகிறது, பல கோணங்களில் பல நிலைமைகளில் இந்த மகத்தான மாறுதல், நாடக உலகிலே மட்டுமல்ல, அதன் மூலம் நாட்டு மக்களிடையே பெரியதோர் மன மாறுதலை உண்டாக்கி விட்டது.

இயல், இசை, நாடகம், மக்கட்கு அறிவு வளர ஆர்வமூட்ட அகமகிழ்ச்சி பிறக்க, நன்னெறியைக் காட்டப் பயன்பட வேண்டும்.

அதிலும், நாடக மூலம், இந்தப் பலன்களை எளிதில் அடைய முடியும்--இயலிலும், இசையிலும் கருத்துரைகளைக் கேட்க மட்டுமே முடியும். நாடகத்திலேயோ, கருத்துரையைக் கேட்பதுடன் கருத்து விளக்கக் காட்சிகளைக் காணவும் முடிகிறது. எனவே, நாடக மூலம், மனதை அதிகமான அளவுக்கு வசப்படுத்த முடிகிறது. நல்ல நடிகன், நாடகத்தைக் காண்பவர்களிடம், தான் விரும்பும் உணர்ச்சியை அந்த நேரத்திலே ஊட்டிவிட முடிகிறது. மின்சாரம் பாய்ச்சப்பட்ட கம்பிகள் போல நல்ல நடிகனின் திறமை நாடகத்தைக் காண்பவர்களை உணர்ச்சி வயத்தவராக்கி விடுகிறது. எனவே, நாடகத் துறைக்கு உள்ள, வசப்படுத்தும் சக்தி அதிகம். அதிலும், சராசரி அறிவுள்ளவர்களுக்கும், அதாவது இயலை அறியவும் இசையை நுகரவும் தேவைப்படும் அளவுக்கும் குறைந்த அளவு அறிவுபடைத்த சராசரி மனிதருக்கும், நாடகம் புரியும் கருத்துக்களைப் புரியவைக்கும்; உணர்ச்சிகளைத் தூண்டிவிடும்; செயலுக்கும் தயாராக்கி வைக்கும். அவ்வளவு திறமை கொண்டது நாடகத் துறை.

அறிவு வளர, ஆர்வம் பிறக்க, மகிழ்ச்சி தோன்ற, மக்களை நன்னெறியிலே புகவைக்க, நற்பண்புகள் உள்ளத்திலே குடிபுக-- இப்படிப்பட்ட நற்காரியங்களுக்கு, முத்தமிழ் அதிலும் முக்கியமாக நாடகம், பயன்படல் வேண்டும். என்பது அடிப்படை உண்மை; இதைக் காலம் மாற்றது. மாற்றினால், சீர்கேடுதான் விளைவு--எனவே, இந்த அடிப்படை உண்மைகளை அல்ல, மறுமலர்ச்சி இயக்கம் கூடாது என்று கூறுவது. மறுமலர்ச்சி என்பது மாண்புகளை மாய்த்திடும் நஞ்சு அல்ல--மாண்புகளை மாய்க்கும் நச்சுப் பூச்சிகளை அழித்திடும் முறை!

அறிவு வளர்ச்சிக்கு நாடகம் பயன்படவேண்டும். இதை மறுமலர்ச்சி இயக்கம் மறுக்கவில்லை--அறிவு வளர வேண்டும் என்பது சரி--ஆனால் எத்தகை அறிவு? என்ற கேள்வியைக் கேட்கிறது, மறுமலர்ச்சி இயக்கம்! லோகம் மாயை காயம் என்பது அநித்தியம்--இது ஒருவித அறிவு தான்! சேலைகட்டிய மாதரை நம்பாதே!--இதுகூட ஒருவகையான அறிவுதான். ரெண்டு பிள்ளைகள் இரவல்; உன்னைப் பெற்றெடுத்த தாய்மாரும் இரவல். இதுவும் அறிவிலே ஒருவகை தான்! நாடக மேடை மூலம் எத்தகைய அறிவு பெறுவது! கீழே ஏழு, மேலே ஏழு எனப் பதினான்கு லோகங்கள் கொண்டது பழங்கால பூகோள அறிவு! இதையா, நாடகம் தரவேண்டும், அட்லாஸ் பிரசுரமான பிறகும்! தேரை ஓட்டிக்கொண்டு வரும் சூரிய பகவானையா நாடக மேடையில் காண்பது. விஞ்ஞான வகுப்பிலே சூரியனைப் பற்றிய பாடம் கேட்ட பிறகும், அறிவு தேவைதான்! அறிவு வளரச் செய்வது; நாடக நோக்கத்திலே ஒன்றுதான்--மறுமலர்ச்சி இயக்கத்தினர் இதை மறக்கவில்லை. ஆனால், நாடகத்தை அறிவு வளர்ச்சிக்குப் பயன்படுத்தும் போது, எவ்விதமான அறிவு இப்போது மக்களுக்குத் தேவை என்பதைக் கண்டறிந்து, அவ்விதமான அறிவு கிடைக்கும் விதமான கருத்துரைக்கும், காட்சி அமைப்புக்களும் கொண்ட நாடகங்களை நடத்தவேண்டும் என்று கூறுகின்றனர்.

மறுமலர்ச்சிக்கான முயற்சி துவக்கப்படு முன்பு வரை நாடக மூலம்; நாட்டவர் மனதிலே புகுத்தப்பட்ட கருத்துகள் பலதிறப்பட்டன என்ற போதிலும், அவைகளை எல்லாம் பிரித்துத் தொகுத்து, ஜலித்து எடுத்தால், மூன்று முக்கியமான கருத்துக்களையே தந்திருக்கின்றன என்பதை அறியலாம்.

அதாவது; விதி; மேல் உலக வாழ்வு; குலத்துக்கோர் நீதி; மக்களின் வாழ்வுக்கும் தாழ்வுக்கும், சந்தோஷத்துக்கும் சஞ்சலத்துக்கும், பிறப்புக்கும் இறப்புக்கும், செல்வ வாழ்வுக்கும் வறுமையால் செல்லரித்துப்போன வாழ்வுக் கும், மாடமாளிகையிலே கூத்தாடும் களிப்புக்கும் குடிசையிலே கொட்டும் வாட்டத்துக்கும்--எதற்கும் நாடகமேடை (கதை, காட்சி மூலம்) எடுத்துரைத்த காரணம் என்ன விதி: யாரை விட்டதுகாண் விதிவசம், எவரை விட்டது காண்: பாடுவார் நடிகர் ராமச்சந்திரர், மர உரிமைத்தரித்து வேடத்தில் சீதாபிராட்டியரிடம். எதிரே இருந்து காட்சியைப் பார்ப்பவன், மில்லிலே மார்புடையப் பாடுபட்டுவிட்டு, மாகாளி கோயில் குங்குமத்தை நெற்றியிலே அப்பிக்கொண்டுள்ள அரைவயிற்றுக்கு ஆலாய்ப் பதிக்கும் ஆலைத் தொழிலாளி.

நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த உழைத்தும், கையே தலையணையாய், கட்டந்தரையே படுக்கையாய், காய்ந்த வயிரே தோழனாய்க் கொண்டு கஷ்டப்படும் பாட்டாளி முன்பு, விறகுவெட்டி வேதனைப்பட்ட சத்தியவான், ராஜ்யமிழந்து சுடலைகாத்த அரிச்சந்திரன், பெற்ற குழந்தைகளைக் கிணற்றில் தள்ளிய நல்லதங்காள் இவர்களைக் காட்டி, எத்தகைய அறிவை வளர்க்க முடியும்! விதி--விதி என்று அவனை விம்ம வைக்கத்தானே முடியும். இந்தத் தேன் கடிக்குப் பிறகு, ஒரு தேன் சொட்டு அவனுக்கு--அதாவது மேல் உலகக் காட்சி--அங்கு கற்பக விருட்சம், காமதேனு! இந்த 'அறிவு' அல்ல இன்று தேவைப்படுவது! அது போலவே, வெற்றி வீரனான மன்னன், குலகுருமுன் மண்டியிடும் காட்சி, நடத்திக் காட்டப்படும்; என்ன அதன் பொருள்?

பதினைந் தாண்டுகளுக்கு முன்பு, நாடக மேடை ராஜ தர்பாரே ஜாதி முறை போதனை விளக்கமாகத்தான் இருக்கும்!

ஆலயங்களிலே அந்தணர்கள் பூஜைகளைச் செய்து
        வருகிறார்களா?
ஆமாம், அரசே! ஆறுகால பூசையும் நடந்து
        வருகிறது!
வைசியர்கள் செல்வ விருத்திக்கான காரியத்திலே
        ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்களா?

ஆமாம், அரசே! வைசியர்கள் வியாபாராதி காரியங்
           களிலே ஈடுபட்டு வருகிறார்கள்!
சூத்திரர்கள், தங்கள் கடமையைச் செய்து
          வருகிறார்களா?
ஆமாம், அரசே!

இதுதான் 'தர்பார்' பேச்சு! அரசனை ஆசீர்வதிக்கும் குரு, மனுநீதி தவறாது அரசாளும்படி தான், மன்னனுக்கு உபதேசம் செய்வார் !

இது, மனுவை மறுக்கும் காலமட்டுமல்ல. மன்னர்களை வீட்டுக்கனுப்பிய காலம்.

நாடக மேடை மாற வேண்டாமா, இதற்கு ஏற்றபடி! அதுதான் மறுமலர்ச்சி.

விதி, மேலுலகம், குலத்துக்கொரு நீதி, என்னும் மூன்று கருத்துக்களை உள்ளடக்கியே நாடகங்கள் அமைவது வாடிக்கை--இடையிடையே பத்தினியின் துயரம், அதைப் பகவான் துடைப்பது--அடியாருக்குச் சோதனை கடைசியில் ஐயன் காட்சிதருவது, இவை இருக்கும்.

மறுமலர்ச்சி இயக்கத்தினர் நாடகமேடை மூலம் தரப்பட்டுவந்த இந்த கருத்துக்கள், இன்று தேவையற்றன, தீமை பயப்பன, நீதியற்றன, நேர்மையற்றன, சமுதாயப் பொது நலனுக்கு ஊறுதருவன என்று கண்டறிந்து, புதிய எண்ணங்களை, புது உலகுக்குத் தேவையான எண்ணங்களைக் கொண்ட கருத்துகளை, நாடகமேடைகள் தரவேண்டும் என்று கூறினர்--குறிப்பிடத்தக்க வெற்றியும் பெற்றுள்ளனர்.

இந்தப் பதினைந்து ஆண்டுகளின் நாடக உலக வரலாற்றை ஆராய்ந்து பார்ப்பவர்களுக்கு, ஒரு அதிசயமான உண்மை புலனாகும். இந்தப் பதினைந்து ஆண்டுகளில், புதிதாக அரங்கேற்றப்பட்ட புராண நாடகங்கள் ஒன்று அல்லது இரண்டுக்கு மேல் இல்லை. புராணங்கள் இல்லாததால் அல்ல. ஏடுகளிலே புராணக் கதைகள் இரண்டு தலைமுறைகளுக்குத் தேவையான அளவு உள்ளன எனினும், நாடக மேடைகளிலே வரவில்லை. மாறாக மனிதன், இன்ஸ்பெக்டர், வேலைக்காரி, வேலைக்காரன், வாழமுடியாத வர்கள், முள்ளில் ரோஜா, மணமகன், கைதி, அந்தமான் கைதி, எதிர்பாராதது, பலிபீடம், தொழிலாளி, சிறைச்சாலை, மறுமணம் இப்படிப் புதிய புதிய நாடகங்கள் எல்லாம், மனித இயல்புகளை நிலைமைகளைப் படம் பிடித்துக்காட்டும் புதுமை நாடகங்களாக நடத்தப் படுகின்றன! பத்தாண்டுகளுக்கு முன்பு, பத்தினிப் பெண்ணின் பண்பை விளக்க, அவள் மாண்டு போக வேண்டும், நாடகத்தில்--இப்போது தவறி விட்டாள் ஒருத்தி என்றால், ஏன் என்று அனுதாபத்துடன் ஆராய்கிறான் கணவன் நாடகத்தில்!--நான் குறிப்பிடுவது ஒன்று புராணம், மற்றொன்று சமூக நாடகம் கூட அல்ல, இரண்டும் சமூக நாடகங்களே. இரண்டும் ஒரே நாடகக் கம்பெளியாருடைய நாடகங்கள்! பத்தாண்டுகளுக்கு முன்பு, பத்தினிப்பெண் மாள்கிற முறையிலே கதை அமைத்தால் தான் முடியும் நாடகம் நடத்த--அதற்குமேல் ஜீரணமாகாது! எனக்கு நன்றாகக் கவனமிருக்கிறது, அந்தக் கதையைப் பற்றி. நடிக நண்பருடன் பேசிக் கொண்டிருந்தது-- ஏன் அந்தப் பெண் இறந்து பட வேண்டும்--வாழட்டுமே, வாழ்ந்து காதலை மதிக்கத் தெரியாத கயவனுக்குப் புத்தி புகட்டட்டுமே, அதுபோலக் கதை இருந்தால் என்ன என்று கூறினேன்--நாடு ஏற்குமா, ஏற்காதா என்பதல்ல பிரச்சினை அவரே அதை ஏற்கத் துணியவில்லை. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கம்பெனியில் சூழ்நிலையால் தாக்கப்பட்ட தையலின் துயரக் கதையை நடத்திக் காட்டும் வாய்ப்புக் கிடைத்தது. இப்போது சாவு அல்ல--மன்னிப்பு--அதுவும் கணவனால்--அதிலும் அவன் தேவன் என்பதால் அல்ல--மனிதன் ஆகையால்!

இவ்வளவு மகத்தான மாறுதல் நாடக மேடையில்.

தவறிவிடும் மனைவி, துரோகமிழைக்கும் நண்பன் இப்படிப் பட்டவர்களுக்கெல்லாம் மன்னிப்புத் தருவது தான் மறுமலர்ச்சி என்று நான் கூறுவதாகக் கருதி விட வேண்டாம். அப்படிப்பட்ட மனிதர்களை-- குடும்ப நிகழ்ச்சிகளைக் காட்டி, சமுதாயச் சூழ்நிலையை விளக்கும் நாடகங்கள் இன்று நாட்டிலே நடத்தப் பட்டு பொதுமக்களின் பேராதரவைப் பெறுகின்றன என்றால், அதன் பொருள் என்ன என்று சிந்திக்குப்படி கேட்டுக் கொள்கிறேன். நாடக மேடையிலே மனிதனைக் காண விரும்புகிறார்கள். மகேசன் மகரிசி மன்னன் மந்திரவாதி அவதாரங்கள், அடியார்கள் இவர்களைக் கண்டு கண்டு, கண்களுக்கும் கருத்துக்கும் சலிப்பு மிகுந்து விட்டது. அந்தக் கதைகளிலே உள்ள கருத்துக்கள் சில புளித்து விட்டன; சில பொய்த்துப்போய் விட்டன. வேறு சில உலக மன்றத்திலே கேலிக்குரியனவாக்கப்பட்டு விட்டன; பெரும்பாலானவை நடைமுறைக்கு ஏற்றனவாக இல்லை. வாழ்க்கைப் பிரச்சினைக்கு விளக்கம் தருவதாகவோ, வாழ்க்கைச் சிக்கல்கனைப் போக்கக் கூடியதாகவோ இல்லை. இப்போது தன்னைப் போன்ற மனிதன் எந்தெந்தச் சூழ் நிலையில் எப்படி எப்படி ஆகிறான்; என்னென்ன செய்கிறான் எதை எதை எண்ணுகிறான் என்று காண விரும்புகிறார்கள்.

எலும்பைப் பெண்ணுருவாகக் கண்ட கண்கள் இப்போது பெண் எலும்புரு ஆகும் அளவுக்குக் குடும்பத்திலே ஏற்படும் கொடுமைகளைக் காண விரும்புகின்றனர்! கண் இழந்தவனைக் காண விரும்புகிறார்கள்; நண்பனுக்காக, குடும்பத்துக்காக, நாட்டுக்காக வறுமையால், கொடியவர் செயலால், இப்படி ஏதேனும் ஒன்றினால் கண்ணிழந்தவன் இருக்கிறானே அவனுடைய கதையைக் காண விரும்புகிறார்கள். உழைத்து உருக்குலைபவன் உழைக்காமல் வாழும் வழி கற்றவன். மேட்டுக்குடி வாழ்வு காட்டு ராஜா முறை வேட்டையாடப்படும் மனிதன். விருப்பம் வெதும்பியதால் நொந்து போனவன், வாழ்க்கை வெற்றிக்காக எதையும் செய்பவன், இப்படிப் பலரைக் காண விரும்புகிறார்கள். தந்தை மகன் உறவு, அண்ணன் தம்பி உறவு இந்த உறவுக்கு வரும் ஊறுகள், அதற்கான காரணங்கள் இவைகளைக் காண விரும்புகிறார்கள். ஒருவன் ஏன் நல்லவனாக இருந்தவன் கெட்டவனாகி விடுகிறான், என்ற சூழ்நிலை விளக்கத்தைக் காண விரும்புகிறார்கள். இவற்றுடன், எல்லோரும் இன்புற்று வாழ, ஒருவரை ஒருவர் சுரண்டாமல் வாழ மனிதன் மிருகமாகாமலிருக்க, என்ன வழி என்பதை அறிய விரும்புகிறார்கள்.

இந்தச் சமுதாயம் கலனான கட்டடம் என்பதை மறுப்பவர் இல்லை புதுப்பிக்க வேண்டும் என்று பேசாத அறிவாளர்கள் இல்லை எனினும்; சமுதாய நிலைமைகளை, ஜாதி உயர்வு தாழ்வுகளை. அதனால் நிகழும் விபரீதங்களை விளக்கும் நாடகங்களை, ஜாதித்துவேஷ, வகுப்புத்துவேஷ மூட்டுகின்றன என்று கூறி ஒரு மூட நம்பிக்கையினால் விளையும் கேடுகளையும், புரட்டர்களால் பாமரர் அடையும் அவதிகளையும் விளக்கி புத்தறிவு பரப்புவதற்காக நாடகங்கள் நடத்தினால் அவை மூலம் நாத்தீகம் பரவுகிறது என்று சொல்லவும், பயங்கரமான பொருளாதார பேதத்தால், சமுதாய அடிப்படையிலே பிளவு ஏற்படுகிறது. வாழ்வு என்பது அனைவருக்கும் உள்ள உரிமை. இதைப் பறிக்கும் முறையில் உள்ள அமைப்புக்கள் அழிக்கப்பட வேண்டியன என்பதை விளக்கும் நாடகம் நடத்தினால் இது பொது உடைமைப் பூதத்துக்குச் செய்யும் பூஜை என்று கூறவும் இந்த நாட்டிலே, இந்தநாளிலே சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களின் மூலம், நாடகத்துறை மறுமலர்ச்சிக்குக் குந்தகம் ஏற்படுகிறது.

வகுப்புவாதம், நாத்தீகம், பொதுவுடமைப், புரட்சி இவை நாடக மூலம் புகுத்தப்பட்டுவிடும் என்று பயப்படுவது அறியாமை. உண்மையாகவே அந்தப் பயம் மறுமலச்சி இயக்கத்தின் எதிரிகளுக்கு இருக்குமானால், வகுப்பு அநீதிகளும், வகுப்பு பேதங்களும் நிச்சயம் ஒழியும்; கள்ளிகாளான் அழியும்; நஷ்டமா அது? மூடத்தனம் முறியடிக்கப்படும் மூலமா அதனால் முறிந்து போகும்! எல்லோரும் இன்பம் எய்திடும் வழி கிடைக்கும். பொருளாதாரத் துறையில் இது போற்றத் தக்கதுதானே! இந்த விளக்கமும் நெஞ்சு உரமும் கொண்டு, நாடகத்துறையில் உருவாகிக் கொண்டிருக்கும் மறுமலர்ச்சியை ஆதரித்து ஊக்கமளிக்க வேண்டும் ஊராள்பவர்கள். கருத்திலே தெளிவற்றவர்கள் கலக மூட்டுவது போல, நாடகத்துறையிலே பூத்துள்ள மறுமலர்ச்சி, ஒழுக்கக்கேட்டை உண்டாக்காது. ஒழுக்கம் என்பது எது என்பதை விளக்கமாக்கிவிட்டு, ஒழுக்கத்தை வளர்த்துச் செல்லும், நீதி நேர்மையை அழிக்காது நீதி எது என்று கண்டறிந்து நிலை நாட்டும்!

ஜவஹர் சொன்னார், சென்ற திங்கள், பெங்களூரில். வில் அம்பு வைத்துக் கொண்டு பழங்காலத்திலே சண்டை செய்தார்கள் என்பதற்காக இன்று ராணுவத்துக்கு அந்த ஆயுதமா தர முடியும்! அல்லது தான் பழங்காலத்தின் படி பெங்களூரிலிருந்து டெல்லிக்கு மாட்டு வண்டியிலா பயணம் செய்ய முடியும்! இப்படி யாரும் யோசனை கூற மாட்டார்கள். ஆனால் சமுதாய சம்பந்தமான பிரச்சினைகளிலே நம்மவர் பலருக்கு, மாட்டு வண்டிக் கால மனப்பான்மை இன்றும் இருக்கிறது என்று சொன்னார் சோகத்துடன்.

இருபதாம் நூற்றாண்டு வாழ்க்கை வசதிகள் அவ்வளவையும் ஒன்று விடாமல் அனுபவிக்கிறோம். சமுதாய அமைப்பு, விக்கிரமாதித்யன் காலத்ததாக இருப்பது பொருந்துமா! ஆட்டுக் குட்டியை ஏற்றிச் செல்லவா ஆகாய விமானம்!

சமுதாயத்திலே புதிய துறைகள். அதன் அமைப்பிலே புதியதோர் மாற்றம் தேவை. அந்தப் புதிய உருவத்தை உருவாக்கும் உயரிய பணிதான் மறுமலர்ச்சி. அதன் அவசியத்தை மிகப் பெரும்பாலான மக்களுக்கு உணர்த்துவிக்க நாடகமே. நல்ல கருவி. எனவே நாடகத்தில் மறுமலர்ச்சி மிக மிக முக்கியமானது, நாட்டின் விழிப்புக்கு அது நல்லதோர் அளவுகோல், நாளை நாம் எப்படி இருப்போம் என்பதற்கு அதுவே அறிகுறியாகும்.