சமதர்மம்/சுதந்தர இந்தியாவில் வாலிபர் தேவை

சுதந்தர இந்தியாவில்
வாலிபர் தேவை


வாலிபர்கள் உரிமைப் போர்ப்படையில் ஈட்டி முனைகள். அவர் தம் உள்ளத்தில் புரட்சிப் புயலிருக்கும். வாழ்க்கை எனும் பொய்கையிலே, விசாரம் என்னும் நஞ்சு கலக்கப்படாத பருவம். பகுத்தறிவு எனும் பகலவன், ஏறிபட்டு விஷப் பூச்சிகள் போன்ற சுயநல சுகக் கருத்துக்கள் அழிக்கப்பட்டிருக்கும்; தூய்மையாண அந்த வாலிப உள்ளங்களில்.

சந்தனக் காட்டைக் கடந்து மணமும் குளிர்ச்சியும் மருவி மக்களை மகிழ்விக்க வருகிறதே தென்றல், அது போன்றது வாலிபம்.

மாயா வாதமும், மனமருட்சியும் வாலிபர்களிடம் நெருங்க நடுங்கும். வெட்டிப் பேச்சைத் தட்டி நடக்கும் தீரன் வீணரின் கொட்டத்தை அடக்கியாக வேண்டும் என்ற வீரம், ஆபத்துக்களைப் பொருட்படுத்தாமல் அநீதியைக்கண்டால் கொதித்தெழுந்து தாக்கும் பண்பு, வாலிபர்களிடயே மிகுந்திருக்கும். முடியுமா? காலம் சரியா? போதுமான பலம் இருக்கிறதா? நாளைவரை பொறுத்திருக்கக் கூடாதா? என்பனபோன்ற பேச்சுக்கள் வாலிபர்களுக்கு இனிப்பாக இரா. கேட்டாயோ இந்தக் கொடுமையை? சும்மா இருப்பதோ? நாம் என்ன சோரணையற்றவர்களோ? புறப்படு, போரிடு, அநீதி ஒழியுமட்டும் அல்லது நாம் ஒழியும்வரை போர். இந்தப் பேச்சுத்தான் வாலிபர் செவி ஏறும், வாலிபர்கள் நடமாடும் எஃகுக் கம்பிகள், அகத்திலே அருவிப்போல் ஆர்வம் முகத்திலே வீரக்களை. செயலிலே துடிதுடிப்புக் காணப்படும். தலை குணிந்து நிற்பது பெருமூச்செறிவது, நம்மால் காரியமா என்று இழுத்துப் பேசுவது, ஆகிய முறைகள் அவர்களுக்குப் பிடிக்காதன, அவர்கள் செயலாற்றும் வீரர்கள்.

வாலிபர் தமது போர்த்திறனோடு மட்டும் திருப்திப் படுபவரல்லர். இலட்சியங்கள் கொண்டவர். உலகிலே பல்வேறு நாடுகளில நலனும் நாகரிகமும் ஓங்கி, கல்வியும், தொழிலும் மிகுந்து மக்கள் இன்பமாக வாழ்கிறார்கள் என்று ஏடுகளிலே படித்தறிந்த வாலிபர்கள் தமது தாய் நாட்டிலே அடிமைத்தனமும் அறியாமையும் நெளியக் கண்டால் கொதிப்படைவார்களல்லவா? உலகெங்கும் கல்வியும் தொழிலும் வளரும்போது, இங்கு 100-க்கு 80-பேருக்குமேல் படிப்பற்று இருக்கக் கண்டால் ஆத்திரம் வரத்தானே செய்யும். உரிமைக்காகப் போராடிய உத்தமர்கள், அக்கிரமங்களை அழிக்க அனைத்தையும் அர்ப்பணித்த தியாகிகள், மக்கள் வாழ உழைத்த மாவீரர்கள், ஆகியோர் பற்றிய வரலாறு படித்தறிந்த அவர்கள் சிந்தனையிலே, நம்மாலாவதென்ன பராபரமே, என்ற பஜனைப் போக்கு ஏற்படமுடியாதல்லவா? ஆகவேதான் வாலிபர்கள் விறுவிறுப்புடன் காணப்படுகின்றனர்.

என் நாடு பொன்னாடு; எங்கும் இதற்கு இல்லை ஈடு என்று மார்தட்டுகிறான் வாலிப வீரன். நாட்டின் நிலை உரை வேண்டும்; வளம் பெருகவேண்டும்; செல்வம் வளர வேண்டும்; தொழில் செழிக்க வேண்டும்; ஒருவர் ஒருவரை அடக்குவது; சுறண்டுவது; மேல் கீழ் என்று பேதம் காட்டுவது. விசாரத்தோடு விண்ணை அண்ணாந்து பார்ப்பது: வாழ்வாவது மாயம்; மண்ணாவது திண்ணம் என்று வேதாந்தம் பேசுவது; பிறவாவரம் தாரும் என்று சலிப்புச் சிந்து பாடுவது ஆகிய போக்கு முறையும் மாறி "எல்லோரும் இந்நாட்டு மன்னர்' என்ற பாரதியார் சொன்னபடி அளைவரும் உரிமையுடன் உவகையுடன் வாழ வேண்டும். நாடு பூந்தோட்டமாக விளங்கி, நானிலத்தோர் கண்டு புகழும் நிலை அடைதல் வேண்டும் என்பது வாலிபர்களின் இன்பக் கனவு.

சுதந்திரம்--விடுதலை--என்றால், சட்ட சம்பந்தமான சொற்களின் மாற்றம் என்றல்ல வாலிபன் எண்ணுவது புதிய நிலை--புது அழகு--புது உருவம் புதிய மகிழ்ச்சி, நாடு புதுக்கோலம் கொள்வது என்றே கருதுகிறான் உண்மையும் அதுதான்.

"ஏன் இவ்வளவு வறுமை?"--கேள்வி.

"என்ன செய்யலாம்: அடிமை நாட்டில் இருக்கிறோம்" இதுதான் பதில்.

"ஏன் தற்குறித்தனம் தலைவிரித்தாடுகிறது?"

"அடிமைத்தனம், அன்னியராட்சி"

தொழில் வனராத காரணம்?--கேள்வி.

கூட்டிலிட்ட பறவை, பறக்குமா?--பதில்

இங்ஙனம் நாட்டிலே காணப்படும் நானாவிதமான கோணல்களுக்கும் ஒரே காரணத்தைக் காட்டி, இவ்வளவும் போக ஒரே ஒரு மருந்து உண்டு. அதுவே சுதந்தரம் என்று பன்னிப் பன்னிக் கூறப்பட்டது. வாலிபர்கள் சொக்கினர்; அந்த இன்பத்தை எண்ணி உழைத்தனர் இன்பம் காண்--ஊராருக்கும். உரைத்தனர் சுதந்திர இந்தியாவிலே,

சுகம் பிறக்கும்;
அறிவு வளரும்;
ஆளடிமையாதல் ஒழியும்;
செல்வம் கொழிக்கும்;

என்றெல்லாம்.

இத்தகைய சித்திரம், சுதந்திர இந்தியா என்பதறிந்து வாலிபர்கள், அதனைத் தீட்டத் தயாராக வேண்டும்.

சுதந்திரமடைந்து நாடு, நெடுங்காலத்துக்கு முன்பு, ஏதேதோ வர்ணங்கள் கொண்டு தீட்டப்பட்டு, காலத்தால் மங்கி, உருவம் அழிந்து, வர்ணங்கள் குழைத்தும் கலைந்தும் போய், அவ்வப்போது திருத்தப்பட்டவைகளும் தேய்ந்துபோன திரைபோலிருக்கும். துவக்கத்தில் நாலாந்தர ஐந்தாந்தர நாடகக் கம்பெனிகளிலே காணலாம். அதுபோன்ற திரைகளை.

நெடுங்காலம் அடிமைப் பிடியிலிருந்து விடுபட்டுச் சுதந்தரம் அடைந்த எந்த நாடும், அந்தத் திரைப்போலத் தான் இருக்கும். அது போதும் என்று திருப்திப்பட்டால் பயனில்லை. அங்கு கொஞ்சம் இங்கு கொஞ்சம் திருத்துவோம் என்றாலும் பயனில்லை நாலாந்தர நாடகக் கம்பெனி கதிதான். புகழ் பூஜ்யம்; வருவாயும் கிடைக்காது. திரையைத் தீட்டியவர், வர்ணஜால வரப்பிரசாதர் ஆயிற்றே அப்படிப்பட்டவர் தீட்டியதை அழித்தெழுதும் யோக்கியதை அடியேனுக்கு உண்டா, என்று உபகாரம் பேசிப் பயனில்லை அழித்தெழுதத்தான் வேண்டும். வாலிபர்களின் திறமையால் புதிய சித்திரம் தீட்டப்படவேண்டும். அதற்குத் தேவைகள் சில பல உண்டல்லவா? வித விதமான வர்ணங்கள்; அவைகளைக் கொட்டிக் கலக்கி ஊற்றிவைக்க வட்டில்கள், தீட்டுக்கோள். இவைகளையெல்லாம் விட முக்கியமாகத் தீட்டும் திறம்பெற வழி வகைகள் இவ்வளவும் வேண்டுமல்லவா? சுதந்திர இந்தியாவில் வாலிபர் செய்யவேண்டிய வேலைக்கு இத்தகைய தேவைகள், உள்ளன. போரிட்ட காலம் நாடி முறுக்கேற்றய நேரம் நல்வாக்குக் கொடுத்த வேளை--இவை தீர்ந்துவிட்டன. சுதந்திர இந்தியாவிலே, வளைவுகளை நிமிர்த்த, படுகுழிகளை மூட, பாதைகளைச் செப்பனிட, சூது மதியினரை அடக்க, சொந்த மதியற்றோருக்கு அறிவு புகட்ட, சுரண்டுபவனை அடக்க, சோர்ந்திருப்பவனுக்கு உரம் ஊட்ட, பஞ்சம் வராமல் தடுக்க, படிப்பைப் பரப்ப தொழிலை வளர்க்க, வாலிபத்தை வளமாக்க--எண்ணப்போனால் மள மளவென்று பலப் பல வேலைகள் தெரியும் மனக் கண்முன் இவைகளைச் செய்யவேண்டும். அதற்கான உறுதிவேண்டும் செய்வதைத் திருந்தச் செய்யவேண்டும். இதற்கு முழக்கங்கள்--பவனிகள் கடை அடைப்புக்கள் போதா. முறையும் திறமும், வழியும் வகையும் வேறு; நிச்சயமாக வேறுதான். வாலிபர்கள் ஆசிரியர்களாக வேண்டும். உலகத்தைக் கிராமத்தாருக்குக் காட்டவேண்டும். வாலிபர்கள் வைத்தியர்களாக வேண்டும். உடல் உள்ளம் இரண்டிலும் உள்ள நோய் தீர்க்கும் மருந்தளிக்க வேண்டும். வாலிபர்கள் பாலம் அமைக்க, நீர்த்தேக்கம் அமைக்க உழவு முறையே மாற்றப் பணி புரியவேண்டும். பழமையின் பிடியிலிருந்து மக்களைப் பக்குவமாக விடுவித்துப், புதுமையின் சோபிதத்தைக் காட்டிப் புத்துலகு அமைக்கவேண்டும் வாலிபர்கள். இதற்கான திறமும் தீரமும் தேவை. அறிவு ஆராய்ச்சி தேவை. இதற்கான வெளி உலகத் தொடர்பு தேவை. இதற்கான பண்பும் பயிற்சியும் மிக மிகத் தேவை. இந்தக் காரியத்தை முதியோர்கள் செய்யட்டும்; இவை மிக்க சோர்வளிக்கக்கூடிய காரியங்கள்; நாம் போரிட; எதிர்த்துத் தாக்க; தீயில் குளிக்க வேண்டிய காரியங்களைச் செய்வோம் என்று வாலிபர்கள் இருந்துவிடக் கூடாது. பழமையை விரும்புபவர்களைக் கொண்டு புதுமைச் சித்திரத்தைத் தீட்ட முடியாது. அவர்கள் திட்டியான பிறகு கோபிப்பது வீண்வேலை.

அந்தப் பணியினை வாலிபர்கள் புரியும்போது, பழமை பயங்காட்டும்; வைதீகம் மிரட்டும்; ஜாதி எதிர்க்கும்; சம்பிரதாயம் சீறும்; குருட்டுக் கோட்பாடுகள் முரட்டுப் பிடிவாதங்கள், அர்த்தமற்ற பற்று பாசங்கள், இவைகளெல்லாம் இருண்ட மண்டபத்திலே வட்டமிடும் வௌவால்கள் போலக் கிளம்பும். உற்றார் உறவினர் அண்ணன் தம்பி, பெற்றோர் பெரியவர்கள், எங்கெங்கிருந்தோ, எதிர்பாராத இடத்திலிருந்தெல்லாம் எதிர்ப்புக்கிளம்பும். இவைகளைக் கண்டு அஞ்சாமல் அயராமல், பணி புரியும் பண்பு வாலிபருக்குத் தேவை. அதற்குத் தெளிவு வேண்டும். எங்கெங்கு இவைகளை எப்படி எப்படி எல்லாம் செய்திருக்கிறார்கள் என்று அறிந்து செய்யவேண்டும். அதற்கு வெளி உலகத் தொடர்பு வேண்டும். இவைகளைச் செய்கையில் ஏற்படக்கூடிய தொல்லைகள் பலப் பல. அவைகனைச் சரி செய்யும் பொறுமைக் குணம் கலந்த நெஞ்சு உரம் வேண்டும். இவைகளுக்காக மனப் பாங்கு வாலிபர்களுக்குத் தேவை.

எதிரி ஓர் மாயாவி, கண்ணுக்கே தெரியமாட்டான் தெரியத் தொடங்கும் போதும் ஒரு உருவில் அல்ல, பல உருவங்களிலே தோன்றுவான். "அடுக்குமடா இந்த அக்கிரமம்?' என்று சீறிக் கேட்கும் ஆசிரியர் ரூபத்திலே. "மகனே !...... ஏனோ இப்படி எங்களை வதைக்கிறாய்?" என்று அழுதக் கண்களுடன் நின்று கேட்கும் அன்னை. உருவில், பாபி, என் முகத்தில் விழிக்காதே" என்று ஆத்திரத்துடன் தந்தை உருவில், "சே, தறுதலையாகி விட்டான் இந்தப் பயல்" என்று வெறுத்துப் பேசும் பெரியவர் ரூபத்தில், "மகாப் பெரிய மேதாவி" இவர் புதிதாக் கண்டுபிடித்துவிட்டார் என்று கேலி பேசும் நண்பர் உருவிலே. இப்படியெல்லாம் காட்சி அளிப்பான் அந்த மாயாவி--அதாவது பழமை. அதை எதிர்த்துப் போரிட, உறவு கொண்டாடி ஆசைமொழி கூறுமானால், அதிலே மயங்காதிருக்க வாலிபர்களுக்குத் திறமை தேவை.

நம்மைச் சுற்றி என்ன காண்கிறோம் இன்று. அதோ மெருகு குலையாத மோட்டார் ஓடுகிறது. நாகரிகத்தின் சின்னம். உண்மை உள்ளே உல்லாசச் சீமான். செல்வம் சுகம்; சுகத்துக்காகச் செல்வம்; சுகப்பட்ட செல்வவான் சரி, மோட்டார் ஓடட்டும்; அதோ எதிர்ப்புறம் காண்பதென்ன? மாட்டுக்குப் பதில் மார்பு உடைய இழுக்கிறான் பாரவண்டியை ஏழ்மை உழைப்பு; உழைப்பவன் ஏழை. உல்லாசச் சீமான் மோட்டாரில் செல்கிறான். சல்லாபியின் வீட்டுக்கோ--இல்லை-- ---சாம்பமூர்த்தி சன்னதிக்கோ.

இந்தக் காட்சி சுதந்திர இந்தியாவில் இருந்துதான் தீருமா? அதோ ஓர் கூட்டம்; ஜிவாத்மாவுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்புப் பற்றிய பிரசங்க பூஷ்ணம் பேச்சானந்தர் சரமாரியாகப் பேசுகிறார் பேசட்டும் காண்பதெல்லாம் மாயை, பூண்பதெல்லாம் மாயையேகாண் பாடுகிறார், கல்யாணி ஆலாபணம் கைவிரவிலே கவனியுங்கள், ப்ளூ ஜாகர் வைரம், பக்கத்திலே வெள்ளிச் செம்பு, கற்கண்டு பொடி போட்டுக் காய்ச்சிய பசும்பால் உள்ளே. பேசும் பொருள் கவனமிருக்கிறதோ? மாயா வாதம்.

சுந்தர இந்தியாவிலே இது இருக்குமா?

சீமான் ரசித்தார், மாயாவாதப் பிரசங்கத்தை--வீடு வந்தார்--வேலையாள் அவருடன் வந்தவன், ஒரு அடி பாட்டிலே கற்றுக்கொண்டான். மெல்லிய குரலிலே பாடுகிறான்.

"காயமே இது பொய்யடா," என்று.....எஐமானர் காதிலே இது விழுகிறது. அவர் உரத்த குரலிலே கூப்பிட்டுக் கட்டளையிடுகிறார்.

"கதவை இழுத்துச் சாத்தடா" என்று. சுதந்திர இந்தியாவிலேயும் இது இருக்குமா? அடே அப்பா, கொஞ்சம் விலகு, மேலே படாதே, எட்டி நில். இதுவும் இருக்குமா?

என் குலம் என்ன, கோத்திரம் என்ன? அந்தஸ்து என்ன? என் மகளை, அந்தப் பயலுக்கா கொடுக்க முடியும்? நான் என்ன ஜாதி? அவன் என்ன ஜாதி? இந்தச் சீற்றம் இருக்குமா, சுதந்தர இந்தியாவில் இன்று காணப்படும் சகலமும் அங்ஙனமே இருப்பதற்காக அல்ல வாலிபர்கள் பாடுபட்டது. சுதந்திரம் என்றால், இத்தகைய கோரங்கள் ஒழிக்கப்பட்ட நிலை என்பதே முழுப்பொருள். இதற்கான பணிபுரிவதற்கு நெஞ்சில் உரம் தேவை வாலிபர்கட்கு. மனிதன் மனிதனாக வாழ வழி கண்டுபிடிக்கும் மகத்தான வேலை, வாலிபர்கள் முன் இருப்பது. நாட்டின் இயற்கை வளத்தையும், மக்களின் மன வளத்தையும் பெருக்கும் பெரும் வலி இருக்கிறது. புதிய வாழ்வு அமைக்கும் பொறுப்புள்ள வேலை. இதற்குப் பல பொருள் பற்றிய அறிவும் எதையும் பகுத்தறியும் தன்மையும், காரணம் கண்டே எதையும் ஏற்றுக் கொள்ளும் போக்கும் அறிவுடன் தொடர்பு கொண்ட ஆற்றலும், மக்களிடம் மட்டற்ற அன்பும், அவர்களை வாழச் செய்ய முடியும் என்ற நம்பிக்கையும், அவர்கள் அனைவரும் வஞ்சிக்காமல், சுரண்டாமல், அடக்கி ஆளாமல், அடிமைப்படாமல் வாழ்க் கூடிய வீதத்தில் நாட்டின் வளத்தையும் முறையையும் புதுப்பிக்க முடியும் என்ற எண்ணமும், பழையன கழிதலும், புதியன புகுதலும் வழுவல என்ற எண்ணமும், வாலிபர்களுக்குத் தேவை. சிற்பியிடம் கற்பாறை தரப்படுகிறது. அவன் வேலைக்கான மூலப் பொருள்--இனி அவனுக்குத் தேவை சிறிய உளியும், பெரிய உள்ளமும் சுதந்தர இந்தியாவிலே. இதுபோலவே, வாலிபர்களுக்குப் பகுத்தறிவும், சுயமரியாதை உணர்ச்சியும் தேவை--புது வாழ்வு பெற--முழு வாழ்வு பெற.