சவ்வாதுப் புலவர் தனிப்பாடல்கள்
5 பாடல்கள்
நூலில் பக்கம் 66 & 67
- இவை தனிப்பாடல் திரட்டு நூலில் இடம்பெற்றுள்ள பாடல்கள்
- சேதுபதி ரகுநாயகன்
- விசயானந்த ரங்கன்
- பிரம்பூர் ஆனந்த ரங்க துரை
- முத்து கிருஷ்ணன்
- கச்சி செல்லப்பன்
ஆகிய வள்ளல்களை இவர் பாடியுள்ளார்
1-5
தொகு- கிளையாளன் சேதுபதி ரகுநாயகன் கிஞ்சுகவாய்
- இளையார் கலவியிடத்து நம்மீசரிடத்து மென்றும்
- வளையாத பொன்முடி சற்றேவளையு மகுடமன்னர்
- தளையாடிய கையிற் காளாஞ்சி யேந்துஞ் சமயத்துமே. (1)
- சேதுபதி ரகுநாயகன் மிகுதியான சுற்றத்தாரை உடையவன். இவன் தன் பொன்முடி சூடிய தலையை வளைத்துச் சாய்க்கும் காலம் மூன்று மட்டுமே. ஒன்று, கிளி போன்று சிவந்த வாயினை உடைய தன் மனைவியைக் கூடும்போது. இரண்டு, சிவபெருமானை வணங்கும்போது. மூன்று, கைவிலங்கு பூட்டப்பட்ட மன்னர் கை கூப்பித் தன் காலில் விழுந்து வணங்கும்போது.
- பானுகிரணம் பார்க்கும் பங்கேருக நிலவு
- தானும்வரப் பார்க்கும் சகோரங்கள் – வானமரும்
- மையைப் பார்க்கும் மயில்கண் மாவிசயானந் தரங்கன்
- கையைப் பார்க்கும் புலவோர் கண். (2)
- பானு என்னும் சூரியன் தன் ஒளியைப் பார்த்துக்கொண்டிருக்கும். பங்கு பட்டு வளரும் நிலவுகூட (சூரிய) ஒளியைப் பார்த்துக்கொணிருக்கும். சகோரம் என்னும் வானம்பாடிப் பறவைகள் வான் மேகத்து நீர்த்துளிகளைப் பார்க்கும். மயில்களும் அம் மழைமேகத்தைப் பார்க்கும். புலவர்கள் விசயானந்த ரங்கன் கையைப் பார்ப்பார்கள் (கொடைக்காக).
- பாலையிலாள் பின்னங்காற் பஞ்சுளியென்றே சுளிப்பாள்
- பாலையிலாள் பின்னென் படுவாளோ- சோலையிலே
- ஆடுமயிற் பிரம்பூ ரானந்த ரங்கதுரை
- நாடுதனில் என்னிள மின்னாள். (3)
- மயில்கள் ஆடும் சோலைகள் உடையது பிரம்பூர். பிரம்பூரில் இருந்துகொண்டு ஆண்டவன் ஆனந்த ரங்க துரை. அவன் நாட்டும் பெண் (கொண்டுதலைக் கழிதல் என்று சொல்லப்படும் காதலனுடன் ஓடிப்போகும்) பாலைத்திணை ஒழுக்க நிலையில் இருப்பவள். (காதலனைப் பிரிந்திருக்க ஒவ்வாதவள்) அவள் தன் பின்னங்கால் பஞ்சு உளி என்று முகம் சுளித்துக்கொள்வாள் (பஞ்சு போன்ற மென்மையான அடியை நிலத்தில் ஊன்றும்போது உளி போல் குத்துவதாக உணர்வாள்) (கணவனைப் பிரியும்) பாலை ஒழுக்கம் வரின் என்ன ஆவாளோ? - இப்பாடல் ஆனந்த ரங்க துரையின் மனைவியைப் புகழ்ந்து பாடியது.
- அலையான் கவடுபடான்ஆருடனும் காயான்
- இலையென்ப தோர்நாளு மில்லை- கலைதேர்ந்த
- சாலைமுத்து கிருஷ்ணனருள் சற்குண சிந்தாமணியைச்
- சோலையென்று சொன்னவரார் சொல். (4)
- முத்து கிருஷ்ணன் மனைவி பெயர் சோலை (இக்காலத்தில் சோலையம்மாள் எனப் பெயரிட்டுக்கொள்வர்) அவள் நல்ல குணவதி. தலையில் சூடிக்கொள்ளும் சிந்தாமணி போல மேன்மையான பாங்கினை உடையவள். சாலை என்னும் ஊரில் வாழ்ந்த முத்து கிருஷ்ணனோ அலையான் (யாரையும் துன்புறுத்த மாட்டான். கவடுபடான் (யாரையும் பிரித்து வைக்காத ஒப்புரவாளன்) யார்மீதும் சினம் கொள்ளமாட்டான். இவன் தன்னிடம் ஒன்றும் இல்லை என்று சொல்லிப் பிறருக்கு வழங்காமல் இருக்கும் நாள் ஒன்றுகூட இல்லை. இந்த நற்பண்புகளுடன் பல கலைகளிலும் வல்லவன்.
- செல்லப்பன் கச்சியிலே சேர்ந்த தற்பினா மணிகள்
- நல்ல தருமேக நவநிதியம்- சொல்லவே
- முட்டின்றி யொன்றிரண்டு மூன்றுநான் கைந்தாறேழ்
- எட்டொன் பான்பத் தானவே. (5)
- கச்சி என்னும் காஞ்சிபுரத்தில் வாழ்ந்த வள்ளல் செல்லப்பன். இவனைச் சேர்ந்த பின் நமக்கு ஆவது நவநிதியம். இந்த நவ நிதியமும் ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு, ஐந்து, ஆறு, ஏழு, எட்டு, (ஒன்பது = நவம்), பத்து என்று பெருகும்.