குழந்தைச் செல்வம்/ஒற்றுமை
54. ஒற்றுமை
ஒற்றுமையாக உழைத்திடுவோம் - நாட்டில்
உற்ற துணைவராய் வாழ்ந்திடுவோம்;
வெற்றுரை பேசித் திரிய வேண்டாம் - இன்னும்
வீணாய்ப் புராணம் விரிக்கவேண்டாம்.
1
சாதி இரண்டலால் வேறுளதோ?-ஒளவைத்
தாயின் உரையும் மறந்தீரோ?
ஆதி இறைவன் வகுத்ததுவோ?-மக்கள்
ஆக்கிய கற்பனை தான் இதுவோ?
2
வீட்டுக்குள் சண்டைகள் போடுவதேன்? - கூரை
வெந்து விழுவதும் கண்டிலிரோ?
நாட்டுக்கு நன்மையை நாடுபவர் - இந்த
நாடகம் ஆடல் நகைப்பலவோ?
3
மன்னுயிர்க் காக முயல்பவரே - இந்த
மாநிலத் தோங்கும் குலத்தினராம்;
தன்னுயிர் போற்றித்திரிபவரே - என்றும்
தாழ்ந்த குலத்தில் பிறந்தோர், அம்மா!
4