சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 11
11
தாமோதரன் வரவை அதிக ஆவலுடன் எதிர்பார்க்கும் உஷா தேவி, தோட்டத்திலேயே நின்றிருந்தாள். தாமோதரன் வரும் கார் ஓசையைக் கேட்டு, அபார சந்தோஷத்துடன் தாவி வந்து, “ஹல்லோ! மிஸ்டர் தாமோதரம்! வாருங்கள்! வாருங்கள்… என்ன கலாட்டா நடந்து விட்டதாமே! பிசாசு என்றாலே எனக்கு அஸாத்ய பயம். அதைக் கேள்விப்பட்டதும், எனக்கு எப்படித்தான் நடுங்கி விட்டது தெரியுமா! உங்களுக்கு அதனால் ஒன்றும் ஆகி விடவில்லையே? இரவு நிம்மதியாகத் தூங்கினீர்களா!” என்று கேட்டபடியே, தோட்டத்திற்குள் அவனையும் அழைத்துக் கொண்டு சென்றாள்.
லதாக்ரகத்தில் உல்லாஸமாய் அமர்ந்து பின், சிற்றுண்டிகளை வரவழைத்து இருவருமாய்ச் சாப்பிடத் துடங்கினார்கள். “மிஸ்டர் தாமோதரன்! நீங்கள் இரவு கூட சாப்பிடவே இல்லையாமே; அதனால் இரட்டைப் பங்காய் சாப்பிட வேணும் தெரியுமா! அதோடு, நீங்கள் இன்னும் சில காலம் உங்கள் வீட்டிற்கே போக வேண்டாம். நாம், எங்களுடைய க்ராமத்திற்குப் போய், 10 தினங்களாவது தங்கி விட்டு வரலாம். இன்றே புறப்படுவோம். என்ன சொல்கிறீர்கள். உங்கள் முத்தண்ணாவைக் கேட்க வேண்டுமோ!
தாமு:- சேச்சே ! என்னுடைய சொந்த சவுகர்யத்திற்காக நான் செய்யும் காரியத்திற்கெல்லாம், என் அண்ணன் குறுக்கிடவே மாட்டான்…
உஷா:- ஆமாம்! உங்களுடைய மனச் சந்தோஷத்திற்காக நீங்கள் கல்யாணம் செய்து கொண்டு, இன்பமாக வாழ்க்கை நடத்துவதற்குப் பெருந்தடை செய்யும் பெரிய மனிதன், இதற்கு மட்டும் குறுக்கே வர மாட்டாரா! இப்படி நம்பி, நம்பிதான் காலங் கடந்து கொண்டே போகிறது; இப்படியே என்றைக்கும் இருந்தால், என் தாயார் இதைப் பற்றி மிகவும் கவலைப்படுகிறாள்.
தாமோ:- இனி மேல், அதைப் பற்றி கவலையே படாதே உஷா! நான் வீணாக அண்ணன் மீதும், அம்மா மீதும் கோபித்துக் கொண்டிருந்தேன். ‘நீ இஷ்டப்பட்ட பெண்ணை, நீ மணக்க எத்தகைய ஆக்ஷேபணையும் இல்லை’ என்று அண்ணா இன்று காலையில் கூட கூறி விட்டார்; இனி கவலையே வேண்டாம். வெகு விரைவில் இதைப் பற்றி முடித்து விடலாம். ஆனால் ஒன்று, நீங்கள் இந்த ஊருக்கே புதிதானவர்களாதலால், எங்கள் சகோதரிகள், என் தாயார் முதலியவர்கள் உன் தாயாருடன் கலந்து பேசி, பொது ஜனங்களுக்கு சமாதானமாய் வழக்கப்படி, பார்ப்பது, பேசுவது, என்கிற நாடகம் நடத்தாமல் என் தாயார் இசைய மாட்டார்கள். தாயாரை, மீறி அண்ணாவும் செய்ய மாட்டார். நான் இன்றே, என் சகோதரிகளுக்குக் கடிதம் எழுதி விடுகிறேன்; அடுத்த வாரத்திற்குள், இந்த காரியத்தை முடித்துக் கொண்டே, நாம் ஹனிமூனுக்காக மேல் நாடெல்லாம் ப்ளேனிலேயே சுற்றி வரலாம் என்று நான் நினைக்கிறேன். எனக்கு இந்த பேய், பிசாசுக்கு பயமே இல்லை. திருடனோ என்றுதான் நான் பயந்தேனேயன்றி, மற்றப்படி ஒன்றுமில்லை. நீ சற்றும் கவலைப்படாதே. வெகு சீக்கிரத்தில் காரியம் நடக்க, நான் ஏற்பாடு செய்கிறேன்…” என்று கூறுவதைக் கேட்ட உஷா ப்ரமாத பூரிப்பையடைந்து குதிக்க வாரம்பித்தாள். பின்னும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த பின்னர், தாமோதரன் வீட்டிற்கு வந்தான்.
தான் போகும் அவசரத்தில், பெட்டியைத் திறந்தே போட்டு விட்டுச் சென்றது, பின்னர் வந்து பார்த்த போதுதான் நினைவுக்கு வந்தது. அண்ணன் எழுதிய கடிதமும், தனது ப்ரத்யேகமான ப்ரேமைக் கடிதங்களும் காணாததால், முதலில் திடுக்கிட்டு, முற்றிலும் தேடிப் பார்த்தான்; தன் பெட்டியில், மற்றவைகள் அப்படியே இருப்பது கண்டு, இதை வேண்டுமென்று அண்ணனே வந்து எடுத்துக் கொண்டு போய் விட்டதாக, மறுபடியும் அண்ணன் மீதே அடங்காத கோபம் உண்டாகியது. எனினும், இதே கடிதத்தைத் தான் திருட்டுத்தனமாய் அபகரித்ததால், இதை எப்படி பகிரங்கமாய் அண்ணனிடம் கேட்பது என்கிற யோசனையும் உண்டாகியது. தன் தாயாரிடம் கேட்கலாமென்றால், அவளுக்கும் இது விஷயத்தில், எப்படி இக்கடிதம் தன் கையில் கிடைத்ததாகச் சொல்வது என்ற குழப்பம் வந்து விட்டது. அதோடு முதல் நாள் நடந்த சம்பவத்தின் செய்தியை அறிந்த இவனுடைய சினேகிதர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் விசாரிப்பதற்காக வந்து கொண்டிருந்ததால், இவனுக்கு எதுவும் செய்ய முடியாது போய் விட்டது. சினேகிதர்களுடன் வெளியிலேயே போய் விட்டான்.
கமலவேணியின் நிலைமைதான், திருடனுக்குத் தேள் கொட்டியது போல் ஆகி விட்டது. ரிஜிஸ்தர் ஆகாத கடிதத்தை வைத்துக் கொண்டு, அவன் என்ன செய்ய முடியும் என்கிற ஞானம் இல்லாமல், ஏதேதோ அசட்டு யோசனையில், விபரீதமான காரியத்தைச் செய்து, நானே பெருத்த குழப்பத்தைத் தேடிக் கொண்டேனே! வெளியில் சென்ற ஸ்ரீதான் இன்னும் வரவில்லை. தாமோதரனும் என்ன செய்கிறானோ! எங்கு சென்றானோ தெரியவில்லையே! என்று கவலையே வடிவாய், ஆகாரமும் பிடிக்காமல், அயர்ந்து போய் படுத்திருந்தாள்.
அச்சமயம் தாமோதரன் மெல்ல தன் தாயாரிடம் வந்தான்; பெத்த தாயின் பாசம் உச்சத்தை எட்ட, எழுந்து உட்கார்ந்து “தம்பீ ! சாப்பிட்டாயா! இன்னும் உன் பயம் தெளியவில்லையா! முகம் ஏதோ மாதிரி இருக்கிறது!” என்று பரிவுடன் கேட்டாள்.
தாமோ:- அம்மா! நான் தனிமையில் உன்னிடம் பேசுவதற்காக வந்தேன்—என்று சொல்லும் போது, கமலவேணியம்மாள் கிழித்துப் போட்டிருந்த காகிதத் துண்டுகள் அவன் கண்களில் சடக்கென்று பட்டு விட்டதுதான் தாமதம். உடனே பாய்ந்தெழுந்து சென்று, காகிதத் துண்டங்களைச் சேர்த்துக் கொண்டு வந்து, தாயாரின் முன் காட்டி, வெறிக்க வெறிக்க பார்த்துக் கோபக்கனல் ஜ்வலிக்க, ‘அம்மா! இது நீ செய்த காரியந்தானே?’ என்று பெருத்த ஆத்திரத்துடன் கேட்டான்.
முதலில் சில வினாடிகள் கமலவேணி ப்ரமித்து விட்டாள். பிறகு சமாளித்துக் கொண்டு, “தம்பீ! பெத்த தாயின் கடமைக்குள் பட்ட சகல காரியத்தையும் செய்ய எனக்கு அதிகாரமுண்டு என்கிற முறையில், இக்கடிதத்தை நானே உன் பெட்டியிலிருந்து எடுத்துக் கிழித்தெறிந்தேன்; குடும்பம் கட்டுகோப்பாய், சீரும், சிறப்புமாய் ஒன்றுபட்டு இன்பமாக வாழ வேண்டும் என்ற நல்ல நோக்கத்துடன் செய்தேன்”—என்று அவளை அறியாத தைரியத்துடன் எப்படித்தான் சொன்னாளோ, அதுவே தெரியாமல் சொல்லி விட்டாள்.
“அம்மா! நீ உன் கடமையையா செய்தாய்? இல்லை; மடமையினால் பக்ஷபாதமே காட்டி விட்டாய். அண்ணா எனக்குச் சகல சொத்துக்களையும் எழுதிக் கொடுத்து விட்டதானது, உனக்கு வயிற்றெரிச்சலாகி விட்டது. உன் பெண்களுக்குக் கொடுக்கவில்லையே என்கிற பொறாமையினாலும், நான் சந்தோஷமாய் வாழ்வது உனக்குப் பொறுக்காமையினாலும் இவ்வாறு செய்திருக்கிறாய் என்பது நன்றாக விளங்கி விட்டது. பெற்ற தாயாருக்கு ஒரு கண் வெண்ணையும், ஒரு கண் சுண்ணாம்புமாக இருப்பதை உலகத்தில் பார்க்கவே முடியாது…”
என்று ஆத்திரத்துடன் அதிர்ந்து விழுந்து, இறையும் போது கமலவேணியம்மாள் மெல்லச் சமாளித்துக் கொண்டு, “தம்பீ! பதறாதே ஆத்திரத்திற்கு இடங் கொடுத்து விட்டால், அனைத்தும் சிதறி விடும். உன்னுடன் கூட பிறந்த அண்ணன் சாந்தியின் சிகரத்தை எட்டப் பாடு படுகிறான். நீயோ சாந்தியைக் குலைத்துக் குடும்பத்தைக் குட்டிச் சுவரடித்துக் குழப்பத்தை உண்டாக்கக் கங்கணங் கட்டிக் கொண்டிருக்கிறாய். என்னவிருப்பினும், நீ இம்மாதிரி தரிதலைத் தாண்டவம் செய்யக் கூடாது; உன் அண்ணனைப் போன்ற உத்தமன் உனக்கு ஒரு போதும் கிடைக்கவே மாட்டான். அழ அழச் சொல்லுவார் தன் மனுஷ்யாள், சிரிக்கச் சிரிக்கச் சொல்லுவார் பிற மனுஷ்யாள் என்பது பழமொழி; இதன் தத்துவம் நீ அறியாமல், உன்னிடம் உயிரையே வைத்து, உன்னுடைய நலத்திற்கே பாடு படும் உத்தமனை நீ நன்கறியாமல், கலகக்காரர்களின் வார்த்தையைக் கேட்டு, நீயும் கெட்டுப் போகிறாய்; குடும்பத்தையும் குலைத்துப் பிறர் சிரிக்கச் செய்கிறாய். உனக்கு முதலில் கல்யாணத்தைச் செய்து விட்டுத்தான் மறு காரியம் அவன் பார்ப்பதாக, நேற்று இரவு என்னோடு சண்டை செய்து, என்னிடம் வாக்கும் வாங்கிக் கொண்டான். நம் ஜாதி வழக்கத்தின் படியும், குடும்ப கண்ணியத்தின் படியும் மூத்தவனுக்கு முதலில் விவாகத்தைச் செய்ய வேண்டிய முறையைக் கூட விட்டு விட்டு, உனக்குச் செய்ய சகல ஏற்பாடுகளும் செய்து விட்டான்…”
என்று சொல்லிக் கொண்டிருக்கையில், வெளியில் சுற்றி அலுத்துப் போய், மனத்தில் புதிய குழப்பத்துடன், தன்னறைக்கு வந்து சேர்ந்த ஸ்ரீதரன் தாயாரின் விடுதிக்குத் தற்செயலாய் வரும் போது, தம்பியும் தாயாரும் கடும் சினத்துடன் பேசுவதைக் கேட்டு, வெகு சாந்தத்துடன் உள்ளே வந்து, தம்பியின் தோள்களைப் பிடித்து அன்புடன் ஆட்டி, அவனை உட்காரச் செய்து, பின், “அம்மா! நீயும் ஏன் ஆத்திரத்துடன் பேசி, அவன் மனத்தைக் கலக்குகிறாய்! இந்தக் கடிதத்தினால்தானே இத்தனை விபரீதங்களும் உண்டாகி விட்டன. இதோ! ஆண்டவன் க்ருபையில், நாம் இருவரும் க்ஷேமமாய், அன்பாய் இருந்து நம் தாயாரின் இதயம் பூரிக்கும்படி நடந்தால் போதும்.
இந்த சொத்துக்களைப் பற்றி நீ கவலையே படாதே; எனனுடைய சகலமான சொத்தும் உனக்கில்லாது வேறு யாருக்குப் போகப் போகிறது? உன்னுடைய துணைவி உனக்கு வந்த பிறகு, ஊதாரிச் செலவோ, தாந்தோனித் தனமோ, ஆடம்பரமோ இல்லாது அமரிக்கையாய் குடும்பம் நடத்தும் விதரணையைப் பார்த்துக் கொண்டு, சகல சொத்தையும் உன்னிடமும், அந்த உத்தமியிடமும் ஒப்படைத்துத் தருகிறேன். என்னைப் பற்றிக் கவலையில்லை. என் கைத்தொழில் எனக்குக் கஞ்சி வார்க்கும்; உன்னிடம் இப்போதே சொத்துக்களைக் கொடுத்து விட்டால், உன் சினேகிதர்களால் அதற்கு ஆபத்தே உண்டாகும். ஆகையால், நீ பயப்படாதே. உன்னை நான் காலையில் கேட்டபடி, பதில் சொல்லு. உனக்காக அம்மாவைத் தகுந்த பெண் பார்க்கச் சொல்லட்டுமா! அன்றி நீயே ஏதாவது பார்த்திருக்கிறாயா! முதலில் கல்யாணம்; பிறகு பாக உரிமை, சரிதானா? முதலில் விஷயத்தைச் சொல்லு. நான் அதற்குள் இதை முடித்து விடுகிறேன். அம்மா! வீணாக, நீ அவனிடம் அதிகம் மனஸ்தாபப்பட்டுப் பேசாதே,” என்று வெகு நிதானமாயும், உரிமையுடனும் கூறினான்.
இதைக் கேட்ட தாமோதரனுக்கு முதலில் ஒன்றுமே தோன்றாது, சற்று அதிர்ச்சியுடன் நின்று விட்டான். பிறகு, தன்னைத் தானே சமாளித்துக் கொண்டு, “அண்ணா! நீ சொல்கிறபடி எல்லாம், நான் நம்பிக்கையுடன் கேட்கிறேன். ஆனால், சொன்னதை சொன்னபடி நடத்திக் கொடுக்கத் தவறினால், எத்தகைய விரோதம் உண்டாகும் என்று சொல்ல முடியாது” என்பதற்குள், “தம்பீ ! ஏன் உனக்கித்தனை பயம். நான் கட்டாயம் கொடுத்த வாக்கின்படி செய்து தீருவேன். முதலில் கல்யாண விஷயத்தைப் பற்றிச் சொல்லு. எனக்கு நேரமாகிறது” என்றான்…
தாமோ:-அண்ணா! நீ அதிகப் படிப்பாளி. உன் படிப்பினால், உழைப்பினால் அபாரமான வருவாயைப் பெறக் கூடியவன். நானோ அதிகப் படிப்பில்லாதவன். அதனால், சொல்ப உத்யோகத்தைத்தான் பெற முடிந்தவன்; ஆகையால், நீ சொல்லியபடி சொத்துக்களின் விஷயத்தில் உறுதியாக நீ நடக்க வேண்டும் என்பதை இப்போதே, மறு முறையும் சொல்லி விட்டேன். என் கல்யாண விஷயத்தில், நானே என் மனத்திற்கு ஏற்ற பெண்ணைத் தீர்மானித்திருக்கிறேன்; அதையே, நீயும், அம்மாவும் பார்த்து முடித்து விடுங்கள்; திருபுரஸுந்தரிபுரம் பூமா விலாஸ் பங்களாவிலிருக்கிறாள்; மிக்க செல்வவந்தர் வீட்டுப் பெண்; நன்றாகப் படித்தவள்; மிகவும் அழகுடையவள்.
ஸ்ரீதா:- தம்பீ ! இவ்வளவு போதும். அம்மா! நான் இப்போதே சகோதரிகளுக்கு தந்தியடித்து, வரவழைத்து விடுகிறேன்; உடனே எல்லோருமாக நேரில் சென்று பார்த்து முடித்து விடுவோம்; மனப் பொருத்தத்திற்கு மிஞ்சியதுதான் ஜாதகமும், மற்றதும். ஆகையால், ஜாதகத்தைப் பற்றிய பேச்சே எடுக்க வேண்டாம். அவன் இஷ்டப்பட்டதே போதும். குறுக்கே பேசாதேம்மா… தம்பீ இனி, நீ கவலையற்று நிம்மதியாக இரு. அம்மாவிடம் நீ மனங் கோணும்படி நடக்காதே”—என்று எச்சரித்து விட்டுத் தனக்கு ஜோலியிருப்பதால், சென்று விட்டான்.
இதற்கு மேல், தாமோதரனால் எதுவும் பேச இடமில்லாது போய் விட்டதால், தன் விடுதிக்குச் சென்று, உடனே இந்த சந்தோஷமான விஷயங்களை டெலிபோனில் உஷா தேவியிடம் சொல்லிப் பூரித்தான். அதுவே அவனுக்குப் பேரானந்தமாயிருந்தது