சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 10

10

வெளியே சென்ற ஸ்ரீதரன் ஆஸ்பத்ரி வேலைகளை முடித்துக் கொண்டு, தனிப்பட்ட நோயாளிகளை வீடுகள் தோறும் சென்று பார்க்கும் வழக்கப்படி பார்க்கச் சென்றான். துரைக்கண்ணன் என்பவர் வெகு செல்வவந்தர். மிகவும் உத்தமமானவர். அவர் இரண்டு மாத காலமாய், வெகு கடுமையான நோயுடன் படுத்திருந்ததால், அவருக்கு ஸ்ரீதரனே பூர்ண குணத்தை உண்டாக்கினான். டாக்டரை தெய்வமாகவே மதித்து, அவனிடம் அஸாத்யமான ப்ரேமையைச் செலுத்தும் துரைக்கண்ணனுக்கு, சில தினங்களாய், எப்படியாவது தன் மகள் பாமாவை ஸ்ரீதரனுக்கு விவாகம் செய்து வைத்துக் களிக்க வேண்டும் என்பது அவருடைய பேராவல்; அதை ஜாடைமாடையாக, ஸ்ரீதரனிடம் தெரிவித்தும், அவனுடைய அனுகூலமான பதில் கிடைக்கவே இல்லை.

இனி நேரிடையாய், விஷயத்தை உடைத்தே சொல்லி விட வேண்டும் என்ற எண்ணத்தினால், இன்று ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார். ஸ்ரீதரனைப் பார்த்ததும், வெகு உத்ஸாகத்துடன் வரவேற்று, “ஸார்! இன்று மிகவும் சுறுசுறுப்பாயும், புதிய உத்ஸாகத்துடனும் ஆரோக்யமாயிருக்கிறது. இன்று முக்யமாய் உங்களிடம் எனது வேண்டுகோளைத் தெரிவித்துக் காணிக்கையைச் சமர்ப்பிக்கப் போகிறேன்…” என்று முடிப்பதற்குள், ஸ்ரீதரன் மகத்தான் ஸந்தோஷத்துடன்… “பேஷ் ! பேஷ்! சபாஷ்! எப்படியும் நான் பேராசை டாக்டர். பணக்காரர்களிடம் அதிகமான பணம் பறிப்பவன் என்று ஒரு சிலர் சொல்கிறார்களாம். அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. அந்த பணத்தை நான், எனக்காக உபயோகப்படுத்தி வாழ்வதில்லை. என்னால் முடிந்த மட்டும், ஏழைகளுக்கு தர்ம வைத்தியசாலை வைத்து நடத்துகிறேன். அது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். உங்கள் மனமகிழ, எத்தனை ஆயிரம் கொடுத்தாலும், கை நீட்டி சந்தோஷமாய் வாங்கிக் கொள்ளக் காத்திருக்கிறேன். கொண்டு வாருங்கள்…” என்று கையை நீட்டினான்.

இரண்டாயிரம் ரூபாய்க்கு ஒரு செக்கு எழுதியதை ஸ்ரீதரனிடம் கொடுத்து, ஸ்ரீதரனின் இரண்டு கைகளையும

பக்கம் 67

பிடித்துக் கொண்டு, ”டாக்டர்! உங்களிடம் நான் வைத்துள்ள கரை காணாத அன்பிற்கு, இந்த அல்ப துகையொரு மதிப்பேயல்ல. என்னிதய பூர்வமாய், என்னுடைய செல்வியான பாமாவை உங்கள் வாழ்க்கைத் துணைவியாகக் கொடுத்து, அவளுடன் குறைந்தது 50 ஆயிரம் ரூபாயாவது ஸ்ரீதனமாகக் கொடுக்க, என்னுள்ளம் ஆவல் கொண்டு தவிக்கிறது. சீமைக்குச் சென்றுள்ள என் மகள், அடுத்த வாரத்தில் வருவதாகக் கடிதம் வந்து விட்டது. அவளுடைய குணத்தழகையும் சரி; ரூப லாவண்யத்தின் விசேஷத்தையும் சரி! ஒரு விதத்திலும் குறை சொல்லவே முடியாது. ஏதோ! என் பெண் என்று நான் பெருமை படுவதாக நினைக்கக் கூடாது. அவளுடைய படிப்பைப் பற்றியும், நான் மிக மிகப் பெருமையுடன் சொல்லிக் கொள்ளலாம். இந்த ஜில்லாவுக்கே முதல் தரமாக M. A. பாஸ் செய்திருக்கிறாள். மேல் நாடு சுற்றிப் பார்க்கும் ஆசையினாலும், சில விஷயங்கள் ஆராய்ச்சிப் படிப்பிற்காகவும் போயிருக்கிறாள். அடுத்த வாரம் வருவதற்குள், இந்த ஏற்பாட்டை நாம் தீர்மானித்து வைத்து விட்டால், அவள் வந்ததும் காரியத்தை முடித்து விடலாம். என் வார்த்தைக்கு மறு பேச்சே பேச மாட்டாள். இக்காலத்திய சில பெண்களைப் போல் தத்தாரியாய் தாந்தோனியாய்த் திரிய மாட்டாள். அடக்கமும், மதிப்பும், பக்தியும் கொண்டவள்; ஆகையால், இதைப் பூர்த்தி செய்ய வேணும், டாக்டர்!” என்று தன்னுள் கொந்தளிக்கும் ஆர்வம் பூராவும் காட்டி, வேண்டிக் கொண்டார்.

இம்மாதிரி விஷயம் ஒன்றை இவர் கேட்கப்போகிறார் என்று, ஸ்ரீதரன் சொப்பனங்கூட காணவில்லை. இந்த கேள்வி இவனுக்கு ப்ரமாதமான வியப்பைக் கொடுத்தது. இது போல், இன்னும் பல பேர்கள் இவனைக் கேட்டிருக்கிறார்கள்; ஏன்! சில இடங்களில், இவனால் வைத்யம் செய்துக் கொள்ளப்பட்ட பெண்களே இவனை மணக்க ஆசை கொண்டு, வலுவில் கேட்டிருப்பதையும் இவன் கண்டு, வெறுத்தும் இருக்கிறான். இத்தகைய செய்கைகளினால் உலகானுபவம் அதிகமாகப் பெற்றுள்ள இவனுக்கு இந்த இடத்தில் இவர் கேட்டது வியப்பாக இருந்தது. என்ன பதில் சொல்வதென்றே தோன்றாமல், சற்று நேரம் திகைத்தான்.

பிறகு சமாளித்துக் கொண்டு, “ஸார்! மிகவும் சந்தோஷத்துடன் வந்தனம் செய்கிறேன். உங்களுக்கு உடம்பு பூர்ணமாய் குணமாகி, பழைய ஸ்திதி உண்டாகட்டும். பிறகு, கல்யாணப் பேச்சைப் பற்றி எடுக்கலாம். அதோடு என்னைப் பற்றி, நீங்கள் சற்றும் எதிர்பார்க்க வேண்டாம். நான் விவாகத்தைப் பற்றி சிந்திப்பது கூட கிடையாது. ப்ரம்மசரியத்தை தைரியமாய், திறமையுடன் அனுஷ்டித்து ஜெயித்து, இன்புறுவதற்கு நான் மிகவும் ஆசைப்படுகிறேன். அதற்கான முறையிலேயே என்னுடைய வாழ்க்கைப் பாதையை அனுஷ்டித்து செப்பனிட்டு வருகிறேன்…”

துரைக்கண்:-என்ன! என்ன! ப்ரம்மசரிய வாழ்க்கையா ?… இதென்ன விஷப் பரிக்ஷை ஸார்! இம்மாதிரி பேசிய வீரர்களை நான் எத்தனையோ பேர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன் அத்தனை தூரம் போவானேன். நான் கூட காலேஜில் படிக்கும் போது எனக்கு சில வேதாந்த உபாத்யாயர்களும், சில மாணவர்களும் அபார சினேகிதர்களானார்கள். நாங்கள் ப்ரதி தினம் இரவு சமுத்திரக் கரைக்குச் சென்று இந்த விஷயமாகவே வெகு நேரம் ஆராய்ச்சி செய்து பேசுவோம். ப்ரம்மசரியம் அனுஷ்டிப்பது கஷ்டமே இல்லை. மனத்தைப் பரிபக்குவம் செய்து விட்டால், எதையும் சமாளிக்கலாம்; மனிதனால் ஆகாத காரியம் உண்டா! என்றெல்லாம் வீராப்பு நானே பேசி மார் தட்டினேன். அதோடு நில்லாமல், என் சினேகிதர்களையும் கிளறி விட்டு, “நாம் எல்லோரும் ஒன்று சேர்ந்து ப்ரம்மசரிய வ்ருதம் அனுஷ்டிக்கும் முறையை தீவிரமாகப் பழக வேண்டும். அதோடு ஒரு கழகம் வைத்து நடத்த வேண்டும்” என்று பெரிய முஸ்தீப்புகள் போட்டேன்.

கடைசியில் என்னவாயிற்று தெரியுமா! கழகமும் ஆரம்பித்தோம். மூன்று வருஷ காலம் ஒரு மாதிரியாய் நடந்தது. முதலில் வெகு வீராப்புடன் வந்து சேர்ந்த வாலிப வீரர்கள் ஒவ்வொருவராக, மணவாழ்க்கையில் ஈடுபட்டு கழகத்தை விட்டு வெளிஏறினார்கள். ஏதோ சில பேர்கள்தான் ஊசலாடிக் கொண்டிருந்தோம். கழகத்தின் வருஷாந்திர விழாவுக்குத் தலைமை வகிக்க, ஒரு சிறந்த அறிவாளியை அழைத்திருந்தோம். தலைமை வகிக்க வரும் போது, என் மன உறுதியைக் குலைத்து, என் கொள்கையில் நான் படுதோல்வி யடையும்படியான ஒரு பெரிய சோதனை சக்தியாகிய, அவருடைய பெண்ணைக் கூட அழைத்து வந்து, என்னைக் கலக்கிப் பாழாக்கி விட்டார்.

இனி இதற்கு மேல், வார்த்தை எதற்கு டாக்டர்? நான் படு தோல்வியடைந்தேன். அந்த மாதரசியை மணம் செய்து கொண்டு, பலருடைய நகைப்புக்குப் பாத்திரமாகி விட்டேன். ஏதோ சந்தோஷமாக வாழ்க்கை நடந்தது. ஒரே ஒரு பெண் பிறந்தாள்; அதி செல்வமாய், நாகரீகமாய், புத்திசாலியாய் வளர்கிறாள். அவளுக்குத் தகுந்த மணாளனை நான் சில வருஷங்களாகவே தேடி வருகிறேன். அவளுக்குத் தக்க கணவராகவே, பகவான் உங்களைத் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருக்கிறார் என்றே நான் தீர்மானித்து விட்டேன்…

ஆம்… முக்யமானதைச் சொல்ல மறந்து விட்டேனே; நான் முதலில் அனுஷ்டிக்க ஆரம்பித்த வ்ருதம் என் மனைவி மறைந்த பிறகு, செவ்வனே நடந்து வருகிறது. தாயற்ற பெண்ணுடன், நான் சந்தோஷமாக இருக்கிறேன். அத்தகைய தாயற்ற பெண்ணுக்கு, நீங்கள் அன்புடன் ஆதரவளித்துக் காக்க வேண்டும். நான் வெகு வெகு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்…”

என்று அவர் சொல்வதை எல்லாம் கேட்கக் கேட்க, ஸ்ரீதரனின் உள்ளத்திலும் சிறிது பயமும், அதிர்ச்சியும் உண்டாகியது. இதென்ன அதிர்ச்சியான விஷயம். அசைக்க முடியாத சித்த உறுதியுடன் இருந்தவரையா அசைத்து விட்டது. இது உண்மையாக இருக்க முடியுமா! என்னுடைய இரும்பு உள்ளத்தையுமா, இந்த அற்ப தூசிக்குச் சமமான சிற்றின்பப் பேய் அசைத்து விடும்… என்று நினைத்தபடி ப்ரமை பிடித்து நிற்கையில், டெலிபோன் மணியடித்தது.

உடனே, துரைக்கண்ணன் டெலிபோனில் பேசச் சென்றார். பூண்டி பேட்டையிலுள்ள ஒரு ப்ரபலஸ்தர் வீட்டில் காய்ச்சலால் ஒருவர் மகத்தான கஷ்டப்படுவதால், உடனே ஸ்ரீதரனை அனுப்பும்படி சொல்லியதைக் கேட்டதும், இவரே ஸ்ரீதரனை அனுப்பும்படியான அவசரம் உண்டாகி விட்டதால், அரை மனத்துடன் விஷயத்தைக் கூறி அனுப்பினார்.

நாளை வருவதாகக் கூறி, ஸ்ரீதரன் சென்றான். இங்கு கேட்ட விஷயமே, இவன் மனத்தில் ஆழமாகப் பதிந்து, வேலை செய்யத் துடங்கியது. தன்னுடைய ஆழமான உறுதிக்குக் கூட பங்கம் வந்து விடுமோ! என்கிற பயம் அவனை அறியாமல், ஒரு பெரிய பீதி வந்து, மனத்தில் புகுந்து கொண்டுக் கிளறவாரம்பித்தது.