சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 26

26

ட்டுக்கடங்காத ஒரு பெருமிதமான உணர்ச்சி கமலவேணியம்மாளின் நெஞ்சில் அலை மோதுகிறது. இந்த அபரிமிதமான சந்தோஷத்தை எப்போது தாமோதரனிடமும், உஷாவிடமும் சொல்லிக் களிக்கப் போகிறோம் என்று ஆவல் துடிதுடிக்கின்றது. ஆனால், கூடவிருக்கும், மற்றவர்களிடம் சொல்ல விரும்பவில்லை. ஸ்ரீதரனைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலுடன் வரும் போதிருந்த உணர்ச்சியின் வேகமும், பார்த்த பிறகு உள்ள மனநிலைமையும் எப்படி இருக்கிறது என்கிற தாரதம்யத்தையும் ஸ்ரீதரனின் அப்பழுக்கற்ற சிறந்த த்யாகமே வடிவான மனோ உறுதியையும் கண்டு, அதைப் பற்றியே எல்லோரும் பேசிப் பேசி, ப்ரயாணத்தை முடித்து வீடு வந்து சேர்ந்தார்கள்.

ஒவ்வொருவருடைய உள்ளத்தில், ஒவ்வொரு விதமான உணர்ச்சியும், எண்ணங்களும் உண்டாகிய நிலைமையில் தம் தம் இருப்பிடம் சென்றார்கள். ஆனால் கமலவேணியம்மாள் மட்டும், உஷாவையும், அவளன்னையையும், தாமோதரனையும் அழைத்துச் சென்று, அங்கு பெரியதாக மாட்டப்பட்டுள்ள தன் கணவனின் புகைப்படத்தின் திரைச் சீலையை விலக்கி, அதைக் காட்டி, “கண்மணீ! உஷா! உஷா! ஒரு அதிசயத்தை இன்று உன் அண்ணன் அங்கு தெரிவித்தான். அதை உங்களுக்கு நான் தெரிவிக்கிறேன். இதோ இந்த உன் பிதா எங்கே மறைந்து விட்டாரோ! உயிருடன் இருக்கிறாரோ! இல்லையோ! என்று இரவு, பகல் ஏங்கித் தவித்தவாறு, என்னுடைய ஸௌமாங்கல்யத்தின் வளர்ச்சிக்காக, நான் பகவானை இடைவிடாது வேண்டிக் கொண்டிருந்தேன். அத்தகைய உங்கள் பிதா உயிருடன் இருக்கிறாராம். கொலைக் கைதியாய், அண்ணனிருக்கும் சிறையிலேயே இருக்கிறாராம். ஏதோ விபத்து அவருக்கு உண்டாகியதாம். அதற்கு அண்ணனே, அவருக்கு சிகிச்சை செய்து, தன் ரத்தத்தையும் கொடுத்து உதவினானாம். அவருக்கு அண்ணனைத் தெரியாதாம். அண்ணனுக்கு அப்பாவை நன்றாகத் தெரிந்து விட்டதாம். இந்த ரகஸியங்களைச் சொல்வதற்காகவே, நமக்கு இண்டர்வ்யூ கொடுத்தானாம். இது பற்றி விஷயம் ஏதாவது தெரிந்தால், அதையொரு சிறு கதையைப் போல் எழுதியனுப்புகிறானாம். இந்த ரகஸியம் யாருக்கும் தெரியக் கூடாதாம்…” என்று ஒரே உணர்ச்சி வேகத்தில் மூச்சுக் கூட விடாமல் சொல்வதையும் படபடப்புடன் துடிப்பதையும் கண்டும், கேட்டும் தாமோதரனும், உஷாவும் ஒரே துள்ளு துள்ளுகிறார்கள். “என்னம்மா… நம்மப்பாவா சிறையிலிருக்கிறார்… அதையா, உன் காதோடு அண்ணா தெரிவித்தது… என்ன ஆச்சரியம் … அம்மா! அவரைப் பார்க்க முடியாதா… அவருடைய விஷயம் வேறு ஒன்றுமே சொல்லவில்லையா…” என்று பதறியவாறு கேட்டார்கள்.

உஷாவின் தாயார் எதுவும் பேசவில்லை. படத்தைத் தொட்டு, கண்ணில் ஒற்றிக் கொண்டாள். கண்ணீர் ஆறாய்ப் பெருக, அப்படியே சோகப் பதுமை போல், நின்று விட்டாள். அவள் குலத்தில் தேவதாசியானாலும், எத்தனை ஆழமான அன்பு வேரூன்றிப் போய், இதயத்தில் பாய்ந்திருக்கிறது. என்ன ஆச்சரியம் என்று சில வினாடிகள், கமலவேணியே திகைத்தாள். தான் அக்னி சாக்ஷியாகத் தாலி கட்டிக் கொண்ட உயர் குலத்துப் பெண்ணாக இருப்பினும், தாசிக்குள்ள அளப்பரிய அன்பின் ஆழம், விசித்ரமாகவன்றோ என்னையும் விஞ்சிய நிலைமையில் இருக்கிறது! என்று தனக்குள் எண்ணி, அந்த வேகத்தில் அந்தம்மாளை அப்படியே சேர்த்துக் கட்டிக் கொண்டாள். “தங்கச்சீ! உன்னுடைய பக்திக்கும், கரை கடந்த அன்பின் ஆழத்திற்கும் நான் கூட தோற்றவளாகி விடுவேன் போல் தோன்றுகிறது. எத்தனை ஆர்வத்துடன், நீ அவரிடம் உயிரையே வைத்திருந்தாய் என்பதை இப்போது நான் அறிகிறேன். நான்தான் உரிமைக் குகந்தவள் என்கிற இறுமாப்பில், நான் ஆதியில் அவரைத் திட்டியது கூட உண்டு. எந்த தாசி வலையிலோ விழுந்து, நாசமாகிறாரே என்கிற அங்கலாய்ப்பினால் தாசிகளையும் திட்டுவேன். கேவலமான ஒரு தாசிக்கு அன்பு என்பதே இருக்க முடியாது. அவள் இதயம் பசையற்ற பாலைவனம் போன்றதாகும்; கொடிய கரடி, புலிகள் வாழும் கானகம் போன்றதாகும். அட்டையைப் போல், ரத்தத்தை உறிஞ்சும் துஷ்ட ஜந்துவின் ரகத்தைச் சேர்ந்தவர்களாகும் என்றெல்லாம் நான் எண்ணி திட்டியதுண்டு. ஆனால், இன்று என் கண்களால், உன்னுடைய அதி அத்புதமான ஆழ்ந்த அன்பைக் காணும் போது, என்னுள்ளம் என்னையே தோற்றுப் போனவள் என்று இடித்துக் காட்டுகிறது. விஷப் பூண்டு உத்க்ருஷ்டமான இடத்திலும் முளைக்கிறது; உதவாக்கரை இடத்திலும் முளைக்கிறது. அது போல் உத்தமர்கள் எந்த இடத்திலும் உதிக்கிறார்கள். சுந்தராம்பாள்! உன்னுடைய அன்பு வெள்ளத்தில், நாங்கள் இன்று திளைகின்றோம்” என்று தன் போக்காகப் பேசிப் பூரித்தாள்.

சுந்தராம்பாள் எதுவுமே பேசவில்லை. “அக்கா! உலகம் பலவிதமல்லவா! தாசி வகுப்பில் பிறந்து திலகமாய் விளங்குகின்ற எத்தனையோ பெண்மணிகளின் சரிதையை நாம் படித்து இன்புறுகிறோம். அதாவது ஏட்டுச் சுவடிதானே எனலாம். இப்பொழுது நாம் கண்ணால் பார்க்கிறோம். தாசி குலத்தில் பிறந்த ரத்னப்ரபா என்ன (பவித்திரப் பதுமை என்ற நவீனத்தின் கதாநாயகி) நிர்மலாதேவி என்ன (ஜீவியச் சுழலின் கதாநாயகி) அம்புஜம் என்ன (ராதாமணி நவீனத்தின் நாயகி), இவர்களைப் போல் உத்தமிகளை இன்று ப்ரத்யக்ஷமாய்ப் பார்க்கிறோமே, இதுவே போதாதா! இத்தகைய மாணிக்கங்களினால்தான், எங்கள் ஜாதியில் சிலராவது அழுக்கு விலகி, தூய்மை உண்டாகி, அறிவு பரவி, மானத்துடன் பிறர் கொண்டாடும் முறையில், வாழ்க்கை நடத்துகிறார்கள். அந்த முறையில், தாசி குலத்தையே மாற்றியமைத்துத் தொண்டாற்றவே, நானும் ஆதியில் கங்கணம் கட்டியும், என் விதி அதைத் தடை செய்து, என் எண்ணத்தில் மண்ணைப் போட்டு விட்டது. என் ஒரே ஒரு கண்மணிக்காக, நானே ஆடவும், பாடவும், பணம் சம்பாதிக்கவும் செய்து விட்டது ஒரு பெருங்குற்றந்தானே. தாசிதானே! சினிமாவில் ஆடினாள் என்று உலகம் சொல்லி விடுமல்லவா!” என்று வருத்தத்துடன் கூறினாள்.

இதற்குள், உஷாவும், தாமோதரனும் இதே விஷயத்தைப் பற்றி பலமாகப் பேசி யோசித்து, ஒரு முடிவு செய்து கொண்டு, கமலவேணியிடம் ஓடி வந்து, “அம்மா! நாங்கள் ஒரு யோசனை செய்திருக்கிறோம்” என்றார்கள். உஷாவே முந்திக் கொண்டு, “அம்மா! அம்மா! நான் சொல்கிறேன் கேளுங்கள். அண்ணா என்னவோ கேஸ் விஷயமாய், நாம் எந்த ப்ரயத்தனமும் செய்யக் கூடாதென்று கண்டிப்பாய்ச் சொல்லி விட்டதால், அந்த விஷயத்தில் நாம் ப்ரவேசித்தால், அவருக்கு கோபம் வரும். இன்று புதிதாகக் கேள்விப்பட்ட விஷயம், நம்முடைய குடும்பத்திற்கே முக்யமானதல்லவா! அப்பாவும், கொலைக் குற்றத்திற்காகவே தண்டிக்கப் பட்டிருப்பதால், அந்த வழக்கு விஷயமாய் நாம் ஆராய்ச்சி செய்து, அதுவே பொய்யா, மெய்யா என்று இத்தனை வருஷம் கழித்து கண்டு பிடித்து விட்ட பெருமையுடன், அவரையும் விடுதலை செய்யலாம். அந்த வ்யாஜமாக அண்ணன் வழக்கையும் ஆராயலாம். என்னதான் நம் பிதா கொடிய துஷ்டராய், துன்மார்க்கராயிருப்பினும், கையினால் கொலை செய்திருக்கவே மாட்டார் என்பதுதான் என் துணிவு…”

என்பதற்குள், சுந்தராம்பாள், "உஷா! இந்த யோசனையை நான் விரும்பவில்லை. அக்கா! நீங்கள் இதை ஆமோதிக்கிறீர்களா! அவரிடம் பல விதத்திலும் நெருங்கிய நமக்கல்லவா, அவருடைய மூர்க்கத்தனத்தின் கொடுமையும், விபரீதமும் தெரியும். அந்த அடங்காத ஆத்திரத்தில், அவர் எதை வேண்டுமானாலும் செய்திருக்கலாம் என்பது எனக்குத் தெரியும். ஒரே ஒரு உதாரணம் சொல்கிறேன் கேளுங்கள்.

என்னுடைய சொந்த மாமன் வ்யாபார நிமித்தம் வெளியூருக்குச் சென்று, பல வருடங்கள் அங்கு தங்கி விட்டார். அவர் பிறகு, தாய் நாடு திரும்பிய போது, என்னைப் பார்க்க வந்திருந்தார். அப்போதுதான் நான் இவரை மணந்து, இன்ப வாழ்வு உலகில் ப்ரவேசித்த சமயம். என் தாய் மாமனை நான் வெகு சிறு ப்ராயத்தில் பார்த்தது கூட நினைவில்லை. அவர் மிகவும் அழகாய், கம்பீரமாயிருப்பார். அவர் என்னுடன் வெகு அன்பாக உள்ளவர் என்னைப் பார்க்க வந்தார்; அவருடன் நான் பேசிக் கொண்டிருந்தேன்.

இவர் வந்தார். வந்தவருக்கு என் மாமனை அறிமுகப்படுத்த, நான் வெகு உத்ஸாகத்துடன் ஆரம்பிப்பதற்குள், அவரை யாரோ அன்னிய புருஷன். வித்யாஸ புத்தியுடன் வந்திருக்கிறார். அவரிடம் நான் கள்ளத் தனமாய்ப் பழகுகிறேன்… என்றெல்லாம் கணக்கு வழக்கற்ற சந்தேகங்களுக்கும், குயுக்திக்கும் இதயத்தில் இடத்தைக் கொடுத்து, எதையும் தீர, ஆற விசாரிக்காமல், ம்ருகத்தை விட மோசமான ஆவேசத்தையடைந்து, என்னை அவரெதிரில் தாறுமாறாகத் திட்டி, அடித்ததுடன் அவர் மீது பாய்ந்து, மென்னியையே பிடித்துக் கொல்ல முயற்சித்த பயங்கரத்தை, இப்போது நினைத்தாலும், என்னுள்ளம் நடுங்குகிறது. எனக்கு எப்படித்தான் யானை பலம் வந்ததோ, தெரியவில்லை. இவரை இழுத்து வெளியில் தள்ளி விட்டு, என் மாமனைக் கெஞ்சிக் காலைப்பிடித்துக் கொண்டு, வெளியே போய் விடும் படியாய்த் துரத்தினேன்; என் மாமனுக்கு வந்த கோபத்தில், பதிலுக்கு இவரையே நசுக்கியிருப்பார். என்னுடைய முகத்திற்காக விட்டு விட்டுச் சென்றவர், மறுபடி என்னைப்பார்க்கவே இல்லை. அவருடைய உறவே விட்டு விட்டது. இவருடைய விஷயம் விபரீதமாகி, என்னைப் பிரிந்து ஓடி விட்ட பிறகுதான், மாமா என் வீட்டிற்கு வந்து என்னையே திட்டினார். பிறகு, என்ன செய்ய முடியும். இத்தகைய கதி வரும் என்று நான் நினைத்தேனா; குழந்தையுடன் நான் திண்டாடும் சமயம், என்னுடைய மக்கள், மனிதர்கள் அத்தனை பேரும் திட்டுவதோடு, பரிகஸித்து இளப்பம் செய்தார்கள். அத்தனை பேர்களையும், நான் வெறுத்து, வைராக்யமாய் வாழ்க்கையை நடத்தவே துணிந்து, தனித்து வந்து விட்டேன். ஸங்கீதக் கலையும், நடிப்புக் கலையும் எனக்குத் துணை புரிந்தது. உஷாவை ஒரு புதுமைப் பெண்ணாக்கி விட, என் தாயுள்ளம் துடித்தது; இப்போதும் புதுமைப் பெண்ணாகத்தான்—கண்ணகி, மணிமேகலை, ஔவை முதலிய உத்தமிகளைப் போல் வாழ திட்டமிட்டு விட்டாள்… போனது போகட்டும்… என்று நாம் பேசாமலிருக்க வேண்டுமேயன்றி, இந்த பழைய குப்பையைக் கிளறினால், அண்ணனுடைய புகழுக்கு ஹானிதான் உண்டாகும்; இன்னாருடைய மகன் என்பது தெரியமல், பூடகமாய்ப் பிழைக்கும் நாம் எதற்காக விதிப் பழத்தை, விலை கொடுத்து வாங்கி, சங்கடப்பட வேணும்! பகவான் வைத்த உறவு முறையின் கடமை படிக்கு, முக்யமான விபத்துக் காலத்தில் மகனே உதவி செய்து விட்டது பெரும் பெருமையாகி விட்டது. உண்மையிலேயே, அவர் கொலை செய்திருந்தால், நாம் வீண் ப்ரயத்தனப்பட்டு, நம் மதிப்பைக் குலைத்துக் கொண்ட நிலைமையில்தானே வருவோம். ஆகையால், இதைப் பற்றிப் பேசாமலிருப்பதுதான் சகல அம்சத்திற்கும் நன்மையாகும். அண்ணனே ஒரு கதை போல், விஷயம் எழுதியனுப்புவதாகச் சொல்லி இருப்பதால், அதை நாம் ஆவலுடன் எதிர்பார்க்கலாம். அதை விட்டு, நாம் வேறு வழியில் செல்வது தகாது. உஷா! நீ அவசரப்பட்டு, எதையும் செய்யாதேம்மா… தாமூ! நீயும் இது விஷயத்தை, நம்மைத் தவிர பிறருக்குத் தெரிவிக்கவே வேண்டாம். ஆண்டவனிருக்கிறன். நம்மைக் கை விட மாட்டான்.”

என்று பெரிய ப்ரஸங்கம் போல் சொல்வதைக் கேட்டு, கமலவேணி பூரித்துப் போனாள். விஷயமே அறியாத உஷாவும், தாமோதரனும் தாம் ஏதோ பெரிய காரியத்தை ஸாதித்து விட்டதாக எண்ணி, அபரிமிதமான உத்ஸாகத்துடன் தெரிவித்த காரியம், உடனே தோல்வியடைந்து விட்டதால், மன அதிர்ச்சி உண்டாகி, ஒரு மாதிரியாகி விட்டது. பிறகு ஆழ்ந்து யோசித்துப் பார்த்த பிறகுதான், சுந்தராம்பாள் சொல்வது முற்றிலும் சரியானது என்று தோன்றியது. மறுபடியும் கமலவேணியம்மாள், சுந்தராம்பாளின் அன்பைக் கண்டு வியந்தாள்.

“அம்மா! அண்ணனின் மனங் கோணாதபடி நாம் வேலை செய்து, எப்படியும் அண்ணன் நிரபராதி என்பதைக் காட்ட வேண்டும். அதற்கு எந்த வழியில் வேலை செய்யலாம்” என்று உஷா வருத்தத்துடன் கேட்டாள்.

“கண்ணூ! மனித ப்ரயத்தனம் என்பது ஒரு வ்யாஜமேயன்றி, பகவானின் நாமத்தை விட வேறு ஒரு மார்க்கம் இருக்கிறதா! அதைத்தான் நன்றாக விளக்கி, பாமர மக்களின் உள்ளத்தில் ஊடுருவிப் பாய்ந்து, பக்திக் கனலை வளரச் செய்யும் பொருட்டு, ஸ்ரீபுரந்தரதாஸர் ஒரு பாட்டில், நீ எதற்கு? உன் பிருதுகள் எதற்கு? உனது அட்டகாஸங்கள் எதற்கு! உன்னுடைய நாமம் ஒன்றே எனக்குப் போதும்! என்று ஆணித்தரமாய்ப் பாடி இருக்கிறார். அந்த வழியை நாமும் பின்பற்றி, சதா நாம பஜனை வேண்டுவோம். அந்த திவ்ய நாமமே நமக்குத் துணை புரிந்து, தனது சக்தியையும், பக்தியின் சிறப்பையும் காட்டி, அண்ணனுக்கு அவன் விரும்புகிறபடி, சாந்தியின் சிகரத்தில் ஒரு தனி பீடத்தைக் கொடுத்து, ரக்ஷிக்கட்டும். ஆகையால், பூஜை, பஜனை, த்யானம் முதலியன செய்து நாமும் க்ருதார்த்தமடைவோம், இதைத் தவிர, வேறு மார்க்கமே இல்லை. நாம் கனவில் கூட நினைக்காத விதம், அந்தக் கடவுள் உன் பிதா உயிருடனிருப்பதைக் காட்டி, எங்களுக்கு ஸௌபாக்யத்தை வளரச் செய்தாரே, அவர் இதையும் செய்யாமல் விட மாட்டார். ஆகையால் பயப்படவோ, கவலைப்படவோ வேண்டாம்!” என்றாள்.

அதுவே எல்லோருக்கும் சரி என்று தோன்றியதால், அதையே எல்லோரும் ஆமோதித்தார்கள். அச்சமயம், டெலிபோன் மணி அடித்தது. உடனே உஷாவே ரீஸீவ் செய்தாள். “ஹல்லோ… யார் பேசறது.. நான் உஷாதேவி… ஆமாம். தாமோதரன் வீடுதான், அவர் இதோ இருக்கிறார். நீங்கள் யாரு… அம்புஜமா… நாயுடுவின் மகளா! வெகு சந்தோஷம் ஸிஸ்டர்! என்ன விசேஷம்… என்ன என்ன அண்ணனின் வழக்கில் அனுகூலமான விஷயங்கள் கிடைத்திருக்கிறதா… அடாடா! இதைக் கேட்கும் போதே, மனது துள்ளிக் குதித்துத் தாண்டவமாடுகிறது ஸிஸ்டர்! சற்று இருங்கள். அம்மா, பெரியம்மா… சின்னண்ணா.. அண்ணாவின் வழக்கில் அனுகூலமான விஷயங்கள் கிடைத்திருக்கிறதாம்.ஸ்ரீ அம்புஜம் சொல்கிறார்… ஹல்லோ… எங்கண்ணன் நிரபராதி என்றதை நாயுடு ஒருவரால்தான் விளக்க முடியும் என்று அன்றே நான் சொன்னேன்… மேலே என்ன ஸிஸ்டர்! நாங்கள்தானே… இப்போதே வருகிறோம்… இப்பதான் ஜெயிலில் போய் அண்ணனைப் பார்த்து விட்டு வந்தோம்; சவுக்யமா யிருக்கிறார்… அவரைப் பார்த்தால், ஒரு கைதி என்றோ, சாமான்ய மனிதன் என்றோ நினைக்கவே முடியவில்லை… சரி… இப்போதே வருகிறோம்…”

என்று சந்தோஷச் சிறகடித்துப் பறக்கும் பறவை போல் உஷா, ஒரே பூரிப்புடன்… “சின்னண்ணா! இப்பவே புறப்படுங்கள்… பெரிய அம்மா நீங்களும் வருகிறீர்களா! அம்மா! நீயும் வாம்மா…” என்று எல்லோரையும் அழைத்துக் கொண்டு, கட்டு மீறிய வாஞ்சையும், ஆத்திரமும் கொண்டு, தானே காரை ஓட்டிக் கொண்டு கிளம்பினாள். “கண்ணூ! பகவந் நாமத்தின் மகிமையைப் பார்த்தாயா! நாமம் ஒன்றே நமக்குத் துணை என்று எண்ணித் தீர்மானித்த உடனேயே, எத்தகைய நல்ல செய்தி கிடைத்தது பாரு. நினைத்த மாத்திரம், இத்தகைய நன்மையைச் செய்யும் என்னப்பன் கருணாமூர்த்தியை நம்பி, பஜித்தால் கை விடவே மாட்டான்” என்று மறுபடியும் சுந்தராம்பாள் சொல்லிய போது, அந்த உணர்ச்சி உஷாவின் இதயத்தில் இன்னும் ஆழமாகப் பதிந்தது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".