சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 27
27
ஸ்ரீதரன் மனத்தில் ஒரு புத்துணர்ச்சி எப்படியோ குடி கொண்டு, இதயத்தை நிரப்பிக் கொந்தளித்துத் தளும்புகிறது. இதற்கு என்ன காரணம் இருக்கும் என்று அவனாலேயே நம்ப முடியவில்லை. இனி கண்ணால் பார்க்கவே மாட்டோம் என்று எண்ணி கை விட்டு விட்ட தந்தையைப் பார்த்துத் தன் கையினாலேயே சிகிச்சை செய்யும் பாக்யம் கிடைத்த ஒரு சந்தோஷமாக இருக்குமா?
இன்று ஒரே சமயம் நம் பந்துக்களையும், உயிர் சினேகிதர்களையும், உதாரணமாகக் கூறக் கூடிய உஷாதேவியையும், என் தொழில் முறையில் புதிய ஜால வெற்றியைக் கொடுத்த ராதாவையும், ‘இவன் கூட திருந்துவானா?’ என்று இரவு பகல் ஏங்கிய தம்பியை, இன்று த்யாகப் பிழம்பாய் காணும் உத்தமனை… ஆக பல பேர்களையும் ஒருங்கே பார்த்த சந்தோஷம் கட்டு மீறி கரையறுத்துக் கொண்டு கும்மாளமிடுகிறதா! என் தந்தையின் ரகஸியமறிந்ததும், என் தாயாரின் உள்ளம் பூரித்த பூரிப்பைக் கண்டு என்னிதயமும் எக்காளயிடுகிறதா! ஒன்றுமே புரியவில்லையே! எதற்காக இத்தகையப் புதிய ஆநந்த உணர்ச்சி?” என்று தனக்குள் பலபலவாறு எண்ணியபடியே, அங்குமிங்கும் உலாவினான்.
ஜெயில் டாக்டர் வெளியூர் போன இடத்தில், அவரே பலமான ஜூரங் கண்டு படுத்து விட்டதால், ஸ்ரீதரனையே அடிபட்ட நோயாளிக்கு வைத்யம் செய்வதைத் துடர்ந்து செய்யச் செய்தார்கள். ஒரு கொலைகாரக் கைதிக்கு, இன்னொரு கைதி வைத்யம் செய்வதை, அங்குள்ள பலரும் குசமசவென்று, தம் தம் மனம் போனபடி எல்லாம் பேசிக் கொண்டார்கள். நோயாளிக்குக் கட்டு கட்டுவதற்காக, வார்டர் ஸ்ரீதரனை அழைத்துச் சென்றான். டாக்டர் என்ற முறையில் செல்கையில், ஸ்ரீதரன் கைதி உடையின்றி, சாதாரண உடையுடன் செல்ல அனுமதிக்கப்பட்டான். அப்போது நோயாளி சற்று தெளிந்த நிலைமையில் பாதை தாங்காமல் முனகிக் கொண்டிருந்தான். ஸ்ரீதரனுக்கு மட்டும்,கடவுளே! இவருக்கு நினைவு வராதிருந்த வரையில், நான் நிம்மதியாக வைத்யம் செய்தேன். இப்போது ஏதோ மாதிரி தோன்றுகிறதே! இத்தனை வருஷத்திற்குப் பிறகு, என்னை அடியோடு அடையாளம் தெரிந்து கொள்ள மாட்டார் எனினும், புத்திர வாத்ஸல்யம் என்கிற சக்தி இந்த ரகஸியத்தைக் காட்டிக் கொடுத்து விடுமோ! என்கிற பயம் வேறு பாதிக்கிறதே! எங்களுடைய ரகஸியத்தை வெளியிடாது காப்பாற்று!” என்று வேண்டியபடியே நோயாளியினருகில் சென்று, “என்ன! பெரியவரே! வலி எப்படி இருக்கிறது. நன்னா தூங்கினயா!” என்று கேட்டபடியே, முதலில் நாடியைப் பிடித்துப் பார்த்தான்.
எத்தனைதான் த்யாக அக்கினியாயிருந்த போதிலும், “ஐயோ! என் பிதாவை இந்த கதியிலா பார்க்க வேணும். இப்படியா விதி அமைந்தது… அப்பா! என்று வாயாரக் கூப்பிட்டு விடலாம் போலிருக்கிறதே, என்ன செய்வேன்? மனமே! சாந்தியை அடைந்து, சமாதானமாயிரு” என்று தனக்குள் எண்ணி தேற்றியபடியே நோயாளியைப் பார்த்தான்…
அவன் முகத்தில் தன் தம்பியின் சாயல் அப்படியே தத்ரூபமாய்ப் படர்ந்திருப்பதைக் கண்டு, உள்ளுக்குள் ஒரு விதமான சந்தோஷத்தையடைந்து, தகப்பனாரைத் தடவிக் கொடுத்தான். நோயாளி டாக்டரின் கைகளை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு… “உம்… இந்தப் பாவியைத் தடவிக் கொடுப்பதற்குக் கூட, இந்த உலகத்தில் ஒரு மனிதர் இருக்கிறாரா என்று நான் ப்ரமிப்படைகிறேன்… பழைய டாக்டருக்கு நான் கொலைகாரன் என்பது வெகு நன்றாகத் தெரியும், நீங்கள் புதிய டாக்டரல்லவா! நான் சாதாரணக் கைதியல்ல என்பதை நானே சொல்கிறேன் டாக்டர் நான் கொலைகாரன், கொலை குற்றவாளி! என்னை எதற்காகப் பிழைக்க வைத்தீர்கள். நான் வேணுமென்று தானே காலை, கோடாலியால் நசுக்கிக் கொண்டேன். அதனாலாவது சாவு வரட்டுமென்று எதிர்பார்த்தால், நீங்கள் தடையாக வந்து சேர்ந்தீர்களே!” என்று தன்னுடைய மனத்திலுள்ள வெறுப்பை அப்படியே எடுத்துக் காட்டுவது போல், பேசுவதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு வியப்பிலும் வியப்பாகத் தோன்றியது.
‘ஆதியில் எல்லாம் நல்ல நீதி நெறியுடன் இருந்து, வாழ்க்கை நடத்தாதவர்களுக்கு, ஆட்டங்கள் ஆடிப் பாடி ஓய்ந்த பிறகு, ஒரு விதமான வெறுப்பும், வாழ்க்கையே கசந்து விடுவதும் சகஜந்தானே, அந்த கோஷ்டியில் இவரும் சேர்ந்தவராதலால், இப்போது ஞானம் உதயமாகி, ஒரு சிறிது ஞானக்கண் திறந்திருக்கிறது. பாவம்…’ என்று தனக்குள் எண்ணியபடியே, “ஏம்பா! நீ பேசுவதைப் பார்த்தால், உலகத்தில் கடவுள் என்று ஒருவர் இருப்பதாகவே தெரியவில்லை—உன் கையினால் நீ சம்பாதித்த சொத்துதான் உன்னுடைய உயிரும், என்கிற மனோபாவத்தில் பேசுகிறாயே; அந்த உயிர் உன்னுடையதல்ல, கடவுளுடையது. அதைச் சில காலம் உன்னிடத்தில் கொடுத்து வைத்துப் பிறகு, அவன் சொத்தை அவன் எடுத்துக் கொண்டு போவான் என்கிற ஞானமே இல்லாமல் பேசுகிறாயேப்பா—இதோ பாரப்பா, தற்கொலை செய்து கொண்டாவது சாக வேணும் என்ற அதீதமான எண்ணத்திற்கு வரும்படி வாழ்க்கைச் சக்கரத்தை ஓட்டி விட்டாயே! அந்த ஞானத்தில் அரைக்கால் வாசியாவது ஆதியில் ஸ்திரமாகக் கொண்டிருந்தால், இந்த கதிக்கு வருவாயாப்பா!”
என்று முடிப்பதற்குள், நோயாளி, ‘உம்… அத்தனை தெளிந்த புத்தி எனக்கிருந்தால், நான் இந்த கதிக்கு வந்திருப்பேனா! எனக்குத்தான் புத்தி மங்கிப் போச்சே! என் மனைவி … ஐயோ! இந்த நாற்ற வாயால்… அந்த உத்தமியைச் சொல்லவும், எனக்கு அருகதை இல்லை. அத்தகைய உத்தமி எனக்குப் படித்துப் படித்துத்தான் புத்தி சொன்னாள். அது மட்டுமா! நான் ஒரு தாசியை மறுமணம் செய்து கொண்டிருந்தேன். அந்த தாசி எத்தனை தூரம் புத்தி சொல்வாள் தெரியுமா! நான் அப்போதெல்லாம் மனித—ம்ருகமாய் கேடு கெட்ட நிலைமையில் இருந்ததன் பலனை, இப்போது சரியாக அறிந்து விட்டேன்.’
டாக்டர் இடைமறித்து, “ஏம்பா! ஒரு மனைவி இருக்கையிலா, மறு மனைவியைத் தேடினாய்… ஐயோ! ஒழுக்கம், உண்மை, நாணயம், சத்தியம், இவைகள் ஒன்று இருக்கிறது என்பதையே நீ நினைத்தும் பார்க்கவில்லையா! ஐயோ! பாவம். சர்வலோக ரக்ஷகியாகிய சாக்ஷாத் பராசக்தியான உமை இருக்கிறாளே! அந்த உமையை நாம் அடைவதற்கு மத்தியில், ஒரு அரண் சேர்ப்பது போல் மூன்று சுழி ‘ண்’ என்ற எழுத்தைப் போட்டுக் கொண்டு, நாம் உண்மையான மார்க்கத்தில் நடந்தால், அது உமையின் தரிசனத்திற்குக் கொண்டு விடும். அதற்கு வாழ்க்கைப் பாதையை, பக்தி என்கிற காப்புடன் நடத்த வேணும், உமையை அடைய ‘ண்’ என்பதைச் சேர்த்தது போல், பக்தி என்பதில் ‘க்’ என்ற அக்ஷரத்திற்குப் பதிலாக ‘த்’ என்பதைச் சேர்த்தால், பத்தி என்ற பதமாகும். பத்துவது என்றால், எதைத் தெரியுமா! உண்மையுடன் உழைத்து உமையின் பாதத்தைப் பத்துவதாகும். அந்த தேவியின் பாதத்தைப் பத்திய பிறகு, இனி கவலையோ, பாபமோ, துன்மார்க்க ப்ரவர்த்தகமோ உன்னை வந்து அணுகவே பயப்படுமே. இதை நீ நினைக்கவே இல்லையே…”
கிழவனுக்கு நோயின் பாதை கூட தெரியாது மறந்து விட்டது போல் ஒரு பூரிப்பு உண்டாகியது… “ஆஹாஹாஹா… என்ன அருமையான வார்த்தைகள்… உமை—உண்மை…பக்தி—பத்தி… டாக்டர்! நீங்கள் சாதாரணமான தேக நோயைத் தீர்க்கும் டாக்டரல்ல. ஆத்மாவுக்கே வைத்யம் செய்யும் வைதீச்வரன் என்று சொன்னால், மிகையாகாது… ஆகா… உமை… உண்மை, பக்தி… பத்தி. இதை இனியாவது, இந்தப் பாபி மறக்காதிருப்பானா… டாக்டர்! இத்தகைய மேதாவியான நீங்கள், இந்த சனியன் பிடித்த ஜெயிலுக்கு ஏன் டாக்டராக வர வேணும். படுபாவிகள், கொலையாளி, ப்ரம்மஹத்திக் காரர்கள். திருடர்கள், மோசக்காரர்கள்… அப்பப்ப. இனி சொல்லவே முடியாது உலகத்தில் எத்தனை விதமான துன்மார்க்கர்கள் உண்டோ, அத்தனையும் சேர்த்து வைத்து ஒரே இடத்தில் பார்க்கச் செய்யும் நரகமல்லவா இது. இந்த நாற்றக் குப்பைக்கு என் டாக்டர் நீங்கள் வர வேணும்…”
இந்த வார்த்தையைக் கேட்க, ஸ்ரீதரனுடைய இதயத்தில் ஏதோ சங்கடம் செய்து வருத்துகிறது. ‘நானும் ஒரு ஒரு கைதிதான் என்பதை உணர்ந்து விட்டால், இப்போது வைத்துள்ள மதிப்பு திடீரென்று இறங்கி விடுமல்லவா! உம் இவர் சொல்வதும் ஒரு விதத்தில் உண்மைதான். நரகம் என்றால் வேறு வேண்டாம். இதிலும் தப்பித் தவறி நிரபராதிகளும், என்னைப் போல் அகப்பட்டுக் கொண்டிருக்கலாமல்லவா!’ என்று எண்ணியபடியே நோயாளியை உற்று கவனித்தான்.
இயற்கையிலேயே, அவனும் புத்திசாலியாகவே இருந்திருக்க வேணும் என்றும், செயற்கையின் மோகத்தில், இத்தகைய கதிக்கு வந்து விட்டதாயும் எண்ணினான். எந்த விதமாவது அப்பா! என்று அழைக்கும் தோரணையில் தான் பேசி இன்புறவே, இவன் உள்ளம் பறந்தது. “அப்பா! இதோ பாரு, உன் வார்த்தையின் நியாயப்படியே பேசுகிறேன். பசி எடுத்தவனுக்கு ஆகாரமும், வெயிலில் தவிப்பவர்களுக்கு நிழலும், நோயாளிகளுக்கு வைத்தியனும், மருந்துகளும், அனாதைகளுக்கு ஆதரவளிக்கும் தயாளர்களும் வேணுமேயன்றி, இதற்கு எதிர் முறையாய், புறம் பட்டதற்குத் தேவையில்லையல்லவா?
இந்த இடத்தில் வந்துள்ளவர்களுக்குத்தானேப்பா கண் திறக்கச் செய்துத் தாங்களும் மனிதர்கள்தான், மிருகமல்ல என்பதை உணர்த்த வேண்டும்.ஏதோ வைத்தியம் செய்தபடியே, இதையும் செய்தால் நல்லதல்லவா! இங்குள்ள டாக்டர் ஊருக்குப் போயிருப்பதால், நான் இங்கு தற்காலிகமாய் வந்திருக்கிறேன். நான் ஊருக்குப் போய் விடுவேனப்பா… இந்த சிறையில் உனக்கு வைத்யம் செய்யவே, நான் வந்தது போலாகி விட்டது. ஆமாம் நீயாகக் காலில் கோடாலியைப் போட்டுக் கொண்டதாகச் சொன்னாயே, எதற்காகப்பா?”
இதற்குள் நோயாளியின் கால்களுக்கு மருந்து போட்டுக் கட்டியாயிற்று. ஊசி குத்த மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கையில், நோயாளி மீண்டும் பேசத் தொடங்கி, “உம் நான் நினைப்பதும், செய்வதும் எதுவுமே பலிக்கிறதில்லையே டாக்டர்! எங்கிருந்தோ நீங்கள் வந்து முளைத்திரா விட்டால், ஏதோ ஒருவாறு பலித்திருக்கலாம். நான் என்னுடைய கதையைச் சொல்ல ஆரம்பித்தேன். அதற்குள் நீங்கள் ஏதேதோ பேசி, என்னுடைய இருண்ட இதயத்தில் ஒரு ஜோதியை எழுப்பினீர்களே! அதனால், என்னுடைய எண்ணமே மாறி விட்டது. என்னுடைய குப்பைத் தொட்டி புராணத்தை, இனி வாயினால் சொல்லவும் வெட்கப் படுகிறேன். நான் பாவி, த்ரோகி, கட்டிய… பெற்ற மக்களை நிர்கதியாக்கி விட்டுச் சிற்றின்பச் சேற்றில் விழுந்து, புரண்டு நோயாளியாகி, படாத பாடுபட்டு, எல்லோராலும் வெறுக்கப்பட்டு, கேவலம் நாயைப் போல், எனக்கே நான் காணப்பட்டேன். அதனால், என்னையே நான் வெறுத்துக் கொண்டு, என்னையும் மீறி, என் வாழ்நாளில் நானே வியக்கும்படி ஒரு த்யாகத்தைச் செய்து, கொலைகாரக் கைதியாக இங்கு வந்து சேர்ந்து விட்டேன்.”
“என்ன! என்ன! த்யாகத்தைச் செய்து, நீயே மாட்டிக் கொண்டாயா! அதென்னப்பா! நிரம்ப ஸ்வாரஸ்யமான கதை போலிருக்கிறதே. இப்போதே தயவு செய்து சொல்லப்பா… நானும் போக வேணும்.” என்று கூறி விட்டு, ஜெயிலரின் முகத்தைப் பார்த்தான்.நேரமாகி விட்டதென்று முகத்தைச் சுளிக்கிறாரா! அல்லது பேசாமலிருக்கிறாரா என்று அறியவே, அப்படிச் செய்தான். ஜெயிலர், ஸ்ரீதரனிடத்தில் அளவு கடந்த மதிப்பு வைத்திருப்பதால், அவனிடம் வெகு நம்பிக்கையே கொண்டு, “ஸார்! இந்த மனிதனின் பொய்ப் புராணங்களை, இந்த ஜெயிலின் சுவர் முதல் கம்பிகள் வரை கேட்டு வெறுத்தாயிற்று. ஆனால், ஒருவரிடம் சொல்லியபடி ஒருவரிடம் சொன்னதில்லை. உம்மிடம் என்ன வருகிறதோ வரட்டும், கேளும் கேளும்!” என்று குத்தலாகக் கூறி, ஏளனமாய் நகைத்தார்.
நோ:- அவர் சொல்வது ரொம்ப சரி டாக்டர்| எனக்கு நல்ல பயன்படக் கூடிய வழியில், கற்பனைகளை உருவாக்கி, உலகிற்கு உதவும் பாக்யமில்லை எனினும், கற்பனையில் மிக மிக ருசி உள்ளவன். நான் இங்கு கணக்கற்ற கைதிகளின் சரித்திரங்களைக் கேட்ட பிறகு, அந்த கற்பனை பின்னும் விஸ்தாரமாய் வளரத் தொடங்கியது. நான் ஒரு ஆசிரியனாக இருந்தால், என் சரிதையையே, ஒரு பெரிய கதைப் புத்தகமாய் எழுதி விடலாம். வெறும் ம்ருக மனிதன்… அல்ல; ஆசைக்கு அடிமையாகி, அவதியுற்ற மனிதன்… அதனால்தான், என் மனம் போனபடி பொய் சொல்லி, அதில் ஒரு த்ருப்தியடைந்தேன். இப்போது சொல்லப் போவது பொய்யேயல்ல! ஸத்தியமான வார்த்தைகளாகும், அப்பழுக்கற்ற உண்மையாகும். சுருக்கமாய்ச் சொல்கிறேன்… என்னுடைய ஆபாஸ நடத்தையினால், என்னையே நான் நாய் போல் வெறுத்தேனல்லவா! அச்சமயம் மகா உத்தமியான என் மனைவி, மக்களைப் பார்க்கவும் அவர்களிடம் மன்னிப்புக் கோரவும் நான் ஆசைப்பட்டேன்.
ஆனால், என் மனைவி எப்படியோ சாமர்த்தியமாய், என்னுடைய குழந்தைகளைப் படிக்க வைத்து, முன்னுக்குக் கொண்டு வர ப்ரயத்தனப் படுவதையும், பெண்களுக்கு வரனும் தேடி, விவாகத்தைச் செய்து விட நினைப்பதாயும் அறிந்தேன். கெட்டு அலைந்த மகா பாவி எங்கேயோ கண் காணாது ஓடி விட்டான்; துலைந்து விட்டான் என்கிற ஒரே எண்ணத்தில் என்னை மறந்தும், என்னால் ஏற்படக் கூடிய களங்கத்தை நீக்கியும், முன்னுக்கு வர ப்ரயத்தனப்படும் சமயம், நான் ஊரே வெறுக்கக் கூடிய நிலைமையில் அங்கு போனால், மிக மிக விபரீதந்தான் உண்டாகி விடும்; குழந்தைகளின் எதிர் கால வாழ்க்கை பாழாகி விடும். என்னால் ஒரு நிமிஷமாவது இன்பமடையாத குடும்பத்தில், ஆயுள் பூராவும் ஒரு களங்கத்தை உண்டாக்கிப் பாழாக்க வேண்டாம் என்கிற ஒரு ஆவேசமும், உறுதியும் எப்படியோ வந்து விட்டது. என் மூத்த மகனாகிய ஸ்ரீதானை ஒரு முறை பார்க்க மனம் துடித்தது.
என்று சொல்லும் போது, டாக்டரின் இதயம் கனவேகமாக அடித்துக் கொண்டது. எங்கே உண்மை, எந்த விதமாகவாவது வெளியாகி விடுமோ என்கிற பயத்தினால், தலை சுற்றியது. மெல்ல சமாளித்துக் கொண்டு… “உம்! அப்புறம் பாத்தியா இல்லையா! சீக்கிரம் சொல்லு” என்று தானே சமாதானத்துடன் கேட்டான்.
“உம், பார்த்தேன். அவன் சினேகிதர்களுடன் உல்லாஸமாய் செல்கையில் பார்த்து விட்டு, உடனே மனத்தை முறித்துக் கொண்டு சென்றவன்தான், மறுபடி ஒருவர் கண்ணிலும் படாமல் இருப்பதற்கு எந்த இடம் சரியானது என்று யோசித்தேன். சிறைச்சாலைதான் சரியானது என்று தீர்மானமாய்த் தோன்றி, இரும்புப் பிடியாக என்னை மாற்றி விட்டது. என்னை அக்கினி சாக்ஷியாய் மணந்து, அடிமை போல் பக்தி கொண்டு வாழ்ந்த க்ருகலட்ச்மியின் இதயத்தையும், எதிர்கால வாழ்வையும் முறியடித்த பாவிக்கு இதுதான் சரியான சிக்ஷை; சரியான ப்ராயச்சித்தம், என்று தோன்றியது; இதற்கும் சரியான சமயம் வர வேண்டாமா!
ஒரு ஏழைச் சிறுவன், பாவம்! தன்னுடைய தாயாருக்கு ஆபத்தான நிலைமை உண்டாகி விட்டதால், கையில் காலணா காசு கூட கிடைக்காமல் தவிக்கும் சமயம், அவன் வேலை செய்யும் எஜமானன் வீட்டிலேயே, அவன் துணிந்து 500 ரூபாயைத் திருடிக் கொண்டு, சுவரேறி குதித்தான். இவன் குதித்த இடத்தில், ஒரு ரிக்ஷாக்காரன் சீக்கினால் படுத்திருந்தான்: அவன் மீது குதித்து விட்டான். கையிலிருந்த சில நோட்டுகளும் சிதறி விட்டது. அதே சமயம் ரிக்ஷாக்காரன் கூகூவென்று கத்தினான். நான் இவைகளை தற்செயலாகப் பார்த்து விட்டேன்.
அந்தச் சிறுவனிடம் உள்ள நோட்டுகளுடன் அவனை ஓட விட்டு விட்டு, நானே அங்கு சில நோட்டுகளைப் பொறுக்கிக் கொண்டு, அகப்பட்டுக் கொண்டேன். என் நல்ல காலத்திற்கு, ரோந்துக்காரர்கள் வந்தார்கள். உடனே சந்தோஷமாகப் பிடிபட்டு விட்டேன். நான் தாடியும், மீசையும் வளர்த்துக் கொண்டு, பெயரையும், ஊரையும் மாற்றிக் கொண்டே திரிந்ததால், வெகு சுலபமாய்ப் பிடிபட்டு விட்டேன்.
இனி கேட்க வேண்டுமா? நான் திருடிக் கொண்டு வந்ததை, ரிக்ஷாக்காரன் பார்த்துப் பிடிக்க வருகையில், ரிக்ஷாக்காரனை அடித்துக் கொன்று விட்டதாக வழக்கு வெகு ஸ்வாரஸ்யமாய் ஜோடனையாகி விட்டது. ரிக்ஷாகாரன் ஏற்கெனவே சீக்காளி எனக்கு தெரியும். அவன் மீது குதித்த வேகத்தில், அவன் சில நிமிஷங்களுக்குள்ளேயே இறந்து விட்டான். அதுவே எனக்கு அனுகூலமாயிற்று. ஜம்மென்று மரண தண்டனையில், சிறை புகுந்தேன். பிறகு, ஆயுள் தண்டனையாக மாறியது. அந்தமான் முதல் பல ஊர் சிறைகளைப் பார்த்தேன். சிறையை விட்டுப் போகாமலேயே, ஸ்திரமாயிருப்பதற்கு நான் துன்மார்க்கனாகவே நடந்து கொண்டு, என்னுடைய தண்டனையை ரெட்டிப்பாக்கிக் கொண்டு, வெளியாருக்கு துஷ்டனாயும், என் அந்தரங்க வாழ்க்கையில் நாம பஜனையும் செய்து கொண்டு, காலத்தைக் கடத்துகிறேன். சிறையில் உழைக்க தேகத்தில் சக்தி இல்லை. உழைக்காதிருப்பதற்கு வழியில்லை. அதனால், விறகு பிளக்கையில், நானே உயிரையும் பிளந்து கொள்வதற்காக, இந்த காரியத்தை செய்து விட்டேன். இதிலும் நான் எதிர் பார்க்கும் சந்தோஷ நிம்மதி உண்டாகாது தவிக்கும்படி நீங்கள் செய்து விட்டீர்களே…”
என்று முடிப்பதற்குள், ஆயாஸம் மேலிட்டு அயர்ந்து போய் விட்டான். இதற்கு மேலும் பேசினால், தனது குடும்ப ரகஸ்யங்கள் எங்கே வெளியாகி விடுமோ என்கிற பயத்தினால், அவனுக்கு ஆகாரத்தைக் கொடுத்து, களைப்பைத் தீர்த்து வைத்துப் பின், “இதோ பாரப்பா! எத்தனையோ பேரிடம், எத்தனையோ விதமாய் உன் சரித்திரத்தைச் சொல்லியதாக நீயே சொல்கிறாய். என்னிடமும் ஒரு தினுஸாய், ரஸமாய் சொல்லி விட்டாய்-ஒரு ஏழை சிறுவனுக்காக, நீ செய்த காரியம் உண்மையாயிருந்தால், உன்னுடைய முந்திய பாவத்திற்கு ஒரு அளவு பரிகாரத்தை நீ செய்த புண்ணியத்தால் பெற்றாய். இந்த உலகத்தை விட்டு, நாம் அங்கு போயும் என்ன செய்யப் போகிறோம் என்று எண்ணுகிறாய். இந்த ஜென்மத்தில் செய்துள்ள பாபங்களை அங்கு நரகத்தில் அனுபவித்தும், அதிலும் தீராமல், மறுபடியும் ஒரு பாவ ஜென்மம் பூச்சியோ, புழுகோ, நாயோ, பேயோ… எடுத்து, இதை பூராவும் தீர்த்த பிறகுதான் முடிவு ஏற்படும் தெரியுமா? ஆகையால், நீ அதை உணராமல், மேலும், மேலும் பாதகத்தைச் செய்து, பாவத்தைக் கட்டிக் கொள்ளாமல், பகவானை பஜனை செய்…” என்று ஒரு மாதிரியான உணர்ச்சியுடன் கூறி விட்டுச் சடக்கென்று போய் விட்டான்.
“நானும் நிரபராதியாயிருந்து, சிறையில் தவிக்கிறேன், என் பிதாவும் நிரபராதியாயிருந்து, இத்தனை துன்பங்களைப் படுவதா…என்ன உலகம். என்ன விதியின் வலிமை… ஆகா! கடவுளே! உன் மாயா விசித்திரமே விசித்ரம்,” என்று பல விதமான எண்ணத்தினால் மோதப்பட்டு நடந்தான். பிறகு ஒரு ஆவேசத்துடன், ஜெயிலரை நோக்கி, “ஸார்! என்னை எப்போது மாற்றப் போகிறீர்கள். எனக்கு இங்கு பிடிக்கவே இல்லை. தயவு செய்ய வேணும்,” என்றான்.
ஜெயி-டாக்டர்! என்னால் முடிந்ததை நான் கட்டாயம் செய்கிறேன். டாக்டர்! ஒரு சமாசாரம்! தயவு செய்து, என்னுடைய தனி விடுதிக்கு வர வேணும்; நான் உம்மிடம் சில நிமிஷங்கள் தனிமையில் பேச வேண்டும்… என்று ஒரு பீடிகை போட்டார்.
இதைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு, மிக மிக ஆச்சரியமும், அதிர்ச்சியும் சேர்ந்து உண்டாகியது. உடனே ஜெயிலரை நிமிர்ந்துப் பார்த்து “சார்! உங்களுக்குப் புண்ணியமாய்ப் போகிறது. என்னுடைய வழக்கு விஷயத்தில், அப்பீல் சம்மந்தமாகத்தான் பேசப் போகிறீர்கள் என்று தெரிகிறது. அது மட்டும் வேண்டாம். என்னைப் படைத்த ஆண்டவன் இருக்கிறான், இதைப் பற்றித் தீர்ப்பு செய்வதற்கு; தாங்கள் தயவு செய்து, இது விஷயத்தில் தலையிடக் கூடாது…” என்று சொல்வதைத் தடுத்து, ஜெயிலர் ஸ்ரீதரனை ஒரு கைதி என்றும் பாராமல் கையைப் பிடித்துக் கொண்டு, “டாக்டர்! நான் அப்பீல் விஷயமாய்ப் பேசக் கூப்பிடவில்லை. எனக்கு ஜோசியம் சிறிது தெரியும். அது விஷயமாய்ப் பேசவே கூப்பிடுகிறேன். உங்களை நான் வெளியூருக்கு மாற்றி விட்டால், நீங்கள் உங்கள் தகப்பனாரைப் பார்க்க முடியாமல் போய் விடுமே; இப்போது பயந்து, பயந்து ரகஸியமாய்ச் செய்யும் சிகிச்சையும், பாதியில் விட்டுப் போய் விடுமே…” என்று ஜெயிலர் சொல்லும் திடீர் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீதரனுக்கு, ஆகாசமும் பூமியும் ஒரே சுற்றாகச் சுற்றி, அவனே மூர்ச்சை போட்டு விழுந்து விடுவான் போலாகி விட்டது. சில வினாடிகளுக்குப் பிறகு சற்று சமாளித்துக் கொண்டு “சார் ! உங்களுக்கு” என்று ஆரம்பித்த உடனே, ஜெயிலர் அவனை அப்படியே பிடித்து நடத்தித் தன்னறைக்குக் கொண்டு போய், நாற்காலியில் உட்கார வைத்து, “டாக்டர்! அதிர்ச்சி வேண்டாம். எனக்கு ஒருவாறு சகலமும் விளங்கி விட்டது. மிகவும் பரிதாபப் படுகிறேன். என்னுடைய உள்ளத்தில், இப்போது எப்படி சங்கடம் செய்கிறது என்பதை என்னாலேயே விவரிக்க முடியவில்லை. இதோ! இக்கடிதத்தைப் பாரும்,” என்று ஒரு கடிதத்தை ஜேபியிலிருந்து எடுத்தார். இதற்குள் ஸ்ரீதரனின் உணர்ச்சி அதிகரித்த வேகத்தில், அப்படியே மூர்ச்சித்து சாய்ந்து விட்டான்: ஜெயிலரின் உள்ளம் இதைக் கண்டு துடிதுடித்தது.