சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 28

28

வெகு ஆவலுடன் தானே உஷா காரை ஓட்டிக் கொண்டு, அம்புஜத்தின் வீட்டை நோக்கிப் பறந்து செல்வது போல் சென்றாள். இவர்களுடைய வரவையே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அம்புஜம், இவர்களைக் கண்டதும், “வாருங்கள் வாருங்கள்! நானே நேரில் வரலாம் என்று நினைத்தேன். அதற்கு சில இடையூறுகள் இருந்ததால், உங்களையே வரச் செய்து விட்டேன். டாக்டரைப் போய் பார்த்து வந்தீர்களாமே, ஏது, அவர் கூட ஒப்புக் கொண்டது. பேசினாரா! உடம்பு ஒன்றுமில்லாதிருக்கிறாரா! என்ன சொன்னார். அப்பீல் வேண்டாம். கேஸ் விஷயமான எதுவுமே வேண்டாம் என்று சொன்னாரா… என்று அடுக்கடுக்காகக் கேள்விகளைக் கேட்டாள்.

உஷா:-ஸிஸ்டர்! அதை ஏன் கேட்கிறீர்கள். எங்களுக்கு சந்தோஷத்திற்கு மேல் சந்தோஷமாகவே, சகலமும் நடந்தது. அண்ணா எப்படித்தான் இளைத்து எலும்புக் கூடாக, இரும்புக் கம்பிக்குள் காட்சியளிப்பாரோ என்று பயந்து நடுங்கினோம். அதற்கு நேர் விரோதமாய், அண்ணா முன்னிலும் தெம்பாயும், தேறியும், சாந்தஸ்வரூபியாயும் காணப்பட்டதோடு, சாதாரணமாய் நேரிலேயே எங்களிடம் தாராளமாகப் பேசினார்; அம்மாவையும், சின்னண்ணாவையும் அப்படியே கட்டித் தழுவிக் கொண்டு, தனது அன்பு மாரியைப் பொழிந்து, பூரித்த காட்சியை நினைக்க நினைக்க, உள்ளத்தில் ஆநந்த ஊற்று சுரக்கிறது.

கமலவேணி:- நான் மக்களைப் பெற்ற பலனை இன்றுதான் பரிபூர்ணமாய் அனுபவித்தேன். புத்திரவாத்ஸல்யத்தின் வேகம் எவ்வளவு பெரியது என்பதையும், அதன் அடங்காத இன்ப வெள்ளத்தையும் இப்பொழுதுதான் உணர்ந்தேன்; அந்த ஆநந்த அலை மோதிக் கொண்டிருக்கையில், உங்களுடைய அம்ருத வாக்யங்கள் போன் மூலம் வந்ததும், எனக்கு உண்டாகிய சந்தோஷத்திற்கு எல்லையே இல்லாது பொங்கித் ததும்புகிறது. என் கண்மணியின் விஷயத்தில், என்ன அனுகூலம் கிடைத்தது. அதை தயவு செய்து, முதலில் சொல்லுங்கள்.

சுந்தரா:- தாயே! பிதாவுக்கு மேல் ஒரு படிக்கட்டு சாமர்த்தியசாலியாகிய உங்களிடம் இன்னொரு ரகஸியத்தைக் கூட நாங்கள் இப்போது சொல்லப் போகிறோம்… ஆனால், அதற்கு முன்பு நீங்கள் சொல்லி விடுங்கள்; அதைப் பிறகு, நாங்கள் சொல்கிறோம்…

அம்பு:- அதற்காகத்தானே உங்களை அழைத்தேன். நீங்கள் ஏதோ பெரியதாக—புதிதாக—கூறப் போகும் ரகஸியத்தை, நானும், அப்பாவும் ஏற்கெனவே அறிந்து விட்டோம்: அதை நானே சொல்லி விடுகிறேன்… டாக்டருடைய தகப்பனார் அதே சிறைச்சாலையில் இருக்கிறார்; அவருக்கு உண்டான திடீர் விபத்திற்கு, டாக்டரே வைத்தியம் செய்கிறார். இதுதானே நீங்கள் சொல்லப் போவது? இதையே நான் முதலில் உங்களுக்குச் சொல்வதற்காகவே வரவழைத்தேன். ஏனெனில் சிறைச்சாலையின் விஷயம் எதையும் கைதிகள் வெளியில் சொல்லக் கூடாது! என்பது பெரிய சட்டம். அதனால், இதையொரு வேளை, அண்ணன் சொல்வதற்குச் சந்தர்ப்பப்படாமல், தவித்திருப்பாரோ என்னவோ என்று, நான் எண்ணியே வரவழைத்தேன்—என்று சொல்வதைக் கேட்ட எல்லோரும் அதிக வியப்படைந்து, ‘எப்படி ஸிஸ்டர் உங்களுக்கு இது விஷயம் இதற்குள் தெரிந்து விட்டது. என்ன ஆச்சரியம்! அண்ணன் சமயம் பார்த்து, அம்மாவிடம் இந்த ரகஸியத்தைக் காதோடு சொல்லி விட்டார். அதை உங்களிடம் தெரிவித்து, எப்படியாவது அவரை நாங்களும் பார்க்கும்படிக்கு உங்களைக் கேட்க வேண்டுமென்று எண்ணினோம். இது தவிர, வேறு என்ன தகவல் கிடைத்திருக்கிறது. சொல்லுங்கள்…’ என்று தாமோதான் பதைக்கப் பதைக்கக் கேட்டான்

அம்பு:-மிஸ்டர் தாமோதரம்! உங்களுடைய ஆவலும், அன்பும் எத்தனை உச்ச ஸ்தாயியில் நிர்த்தனம் செய்கிறது என்பதை, உங்கள் முகமும், ஒவ்வொரு மூச்சும் நன்றாக எடுத்துக் காட்டுகிறது. இந்த அன்பும், ஐக்யமும் ஆதியிலேயே இருந்திருக்குமாயின், உங்கள் குடும்பம் இம்மாதிரி சிதறி சீர் குலைந்திருக்காதல்லவா… போகட்டும். இனியாவது திருந்தி விட்டதே அதுவே மிக மிக சந்தோஷம் இனி விஷயத்தைக் கேளுங்கள். சொல்கிறேன்.

எங்களைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் எங்களை என்ன சொல்வார்கள் தெரியுமா? மாயாவி, த்ருலோக சஞ்சாரி, செப்பிடு வித்தைக்காரர்கள், மந்திர மாயக் காரர்கள் என்றெல்லாம் சொல்வார்கள். அது போல், நாங்களும் பல விதத்திலும் உழைத்தால்தானே இத்தனை தூரம் வெற்றியடைந்து, பொதுமக்களின் அன்பிற்குப் பாத்திரமாக முடியும். அது போலவே, இந்த விஷயத்திலும், நாங்கள் உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசி நடித்துத் துப்பறியத் துடங்கினோம்.

உஷா- அதென்ன ஸிஸ்டர், நீங்கள் சொல்வதிலிருந்து, நீங்கள் எதிரிகளிடம் அவர்களுக்காகத் துப்பு துலக்குவதாக ஒரு சந்தேகம் உண்டாகிறதே…

அம்பு:-பேஷ்! உஷா! உன்னைப் பற்றி அப்பா அடிக்கடி என்ன சொல்லுகிறார் தெரியுமா! டாக்டர்களுக்கு வ்யாதியின் கூறுகளை அறிவது, எப்படி முக்யமோ! அப்படி துப்பறிபவர்களுக்கு நாய் போல் மோப்பங்கூட அறியும் திறமையும், சக்தியும் வேண்டும்; உஷாவிடம் அத்தகைய சக்தி இருக்கிறது. அவளை உனக்குத் துணையாகப் பழக்கி விட வேணும் என்பார்… சரி, அதைப் பற்றி பிறகு பார்ப்போம்… எதிரிகளாகிய வெள்ளையர்களை அழைத்துக் கொண்டு, சில பிரபலஸ்தர்கள் வந்து உதவி கோரினார்கள். அப்பாவும், நானும் நன்றாக யோசித்து முடிவு செய்த பிறகு, அவர்களுக்கே உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தோம். அதன் பிறகு, அதற்குத் தக்க முறையில், அவர்களுக்கு நம்பிக்கை உண்டாக்கவே, சகல விதத்திலும் நடித்தோம். அவர்களுடனேயே சுற்றினோம். கண்ணபிரானின் உயி-

ருக்கே எமனான வெள்ளையர்களுக்குத் தங்குவதற்குச் சொந்த மனிதர் விடுதிகள் இல்லாததால், ஹோட்டலில் தங்கினார்கள். இந்த வழக்கிற்கும், தமக்கும் சம்மந்தமில்லாததால், எப்படியாவது தாம் உடனே கப்பலேறி விட வேண்டும். என்று தீர்மானித்து, மூவரும் கிளம்பினார்கள். ஆனால், இந்த வழக்கின் தீர்ப்பு முடியும் வரையில், இவர்கள் வெளியூருக்குப் போகக் கூடாதென்று சர்க்கார் திட்டமிட்டு விட்டதால், அவர்கள் ஓட்டலிலேயே தங்க நேர்ந்தது. ஊரும் புதிது; ஏதோ ஒரு மகத்தான எண்ணத்துடன் வந்தவர்களுக்கு, எதிர்பாராத விதமாய், இம்மாதிரி ஒரு நிகழ்ச்சி நிகழ்ந்து, விபரீத சம்பவத்தில் முடிந்தவுடனே, வந்த மூவரில் மருமகப் பிள்ளையின் சகோதரிக்கு, இந்த அதிர்ச்சி தாளாமல், உடம்புக்கு வந்து படுத்து விட்டாள். இந்தப் பாழும் இந்தியாவுக்கு ஏன் வந்தோம்? வந்ததும் வராததுமாய், இத்தகைய நிலைமையில் மாட்டிக் கொண்டு, ஏன் சங்கடப்பட வேண்டும். இந்தச் சனியன் பிடித்த கேஸ் எப்போது முடியும்! எப்போது நாம் கப்பலேறி நிம்மதியாய், நம் தாய் நாடு போய்ச் சேரலாம்—என்கிற கவலையால், மிகவும் பீடிக்கப்பட்டு, ஏங்கிப் போனாள். இத்தகைய சந்தர்ப்பத்தையே எதிர்பார்த்திருந்த நான், உடனே ஸர்வெண்டு போல் வேஷமணிந்து, என் கணவரும், நானும் அந்த ஹோட்டலில் அவர்களுக்கு ப்ரத்யேகமாய் வேலை செய்ய நாங்கள் அமர்ந்தோம்.

உஷா:-அடாடா! லக்ஷாதிபதியாகிய நீங்களா வேலைக்காரர்களைப் போல் அமர்ந்தீர்கள். இதென்ன வேடிக்கை… அப்புறம்… அப்புறம் என்ன நடந்தது.

அம்பு:- உம்… இதற்கேவா இத்தனை வியப்படைகிறீர்கள். எத்தனையோ இடத்தில் கஷ்டமான வழக்குகளைக் கண்டு பிடிக்க, குப்பைக்காரர்களின் வேஷங் கூட அணிந்து வேலை செய்திருக்கிறோம் உஷா! நான் வேலைக்காரியாய் அமர்ந்து, அந்தம்மாளுக்கு சிச்ரூஷை செய்வதில் முனைந்தேன். சீமையில் மிகவும் குளிரில் இருந்தவள், இங்கு வெய்யிலில் வந்ததும், இத்தகைய அதிர்ச்சி உண்டாகி விட்டதால், ஒரேயடியாய் படுத்து விட்டாள். மீன் குட்டிக்கு நீந்தவா கற்றுக் கொடுக்க வேண்டும். பால்காரனுக்கு ஜலம் விடவா பழக வேண்டும். சாதாரண மனிதர்களுக்கு உடம்புக்கு வந்தால், எப்படி இருப்பார்கள்? ஊர் மாறியவர்களுக்கு வந்தால், எப்படி இருக்கும்? இம்மாதிரி சங்கடமான நிலைமையில், திடீரென்று ஒன்றுமே புரியாத விதம் நிரபராதிகளாய் அகப்பட்டுக் கொண்டால் எப்படி இருப்பார்கள்? குற்றத்தில் மறைமுகமாகவோ, நேர்முகமாகவோ யார், யார் சம்மந்தப் பட்டிருக்கிறார்களோ, அவர்கள் எப்படியிருப்பார்கள்!-என்கிற விஷயங்களில் தண்ணீர் குடிப்பது போன்ற அனுபவம் இருப்பதால், அந்தம்மாளைப் பார்த்த உடனேயே, அவர்களுடைய இதயத்தில் குற்றத்தின் கறை படிந்து, ரத்தத்தில் கலந்து, நரம்புகளை ஆட்டி அசைத்து, சதையைக் கரைத்து வருவதை ஒரு நொடியில் அறிந்து கொண்டேன். அந்தம்மாளுக்கு சிச்ரூஷை செய்யும் நேரத்தைத் தவிர, சதா அவளுடன் பேசிக் கொண்டிருப்பது என் வழக்கம். அதிலும், பொழுது போகாமல், ஏதாவது படிக்கும்படிக்குச் சொல்வாள். பயங்கரமான கதைகள், ந்யூஸ் பேப்பரில் கொலை, களவு முதலிய விஷயங்களாகவே பார்த்துப் படித்துக் கொண்டே, அவளுடைய உணர்ச்சிகள் எப்படி இருக்கிறது என்பதை முதலில் அறிந்து கொண்டேன்.

தாமோ:- கேட்கக் கேட்க ஆச்சரியமாயிருக்கிறதே! இம்மாதிரி விஷயங்களைப் படித்தால், எப்படி அவர்களின் உணர்ச்சிகளை உணர முடியும்.

அம்பு:- அதுதான் சாமர்த்தியமும், அனுபவமும் கொண்டு செய்யும் வேலையாகும். ஏன்! நீங்கள் கூட இது விஷயத்தைப் பரீக்ஷித்துப் பார்க்க வேண்டுமானால், படிக்காமல், பேச்சிலேயே பார்க்கலாமே! எவர் மீதாவது ஏதாவதொரு சந்தேகம் தட்டினால், அதே விஷயம் போன்று, வேறு இடத்தில் நடந்ததாயும், பிறர் பார்த்து சொன்னதாயும், கயிறு திரித்துக் கற்பனை செய்துப் பேசிப் பாருங்கள். அவர்களுடைய முகம் போகும் மாதிரியும், சரீரத்தில் உண்டாகும் மாறுதல்களையும், படம் பிடித்தது போல் பார்க்கலாமே! அதே போலத்தான் இதுவும். எனது செய்கைகளின் மூலம், அந்தம்மாளின் உள்ளத்தில் கொந்தளிக்கும் பலவித உணர்ச்சிகளையும், அவ்வப்போது படமெடுப்பது போல் எடுத்துக் கொண்டேன்.

என்னைப் பற்றியும், என் வரலாற்றைப் பற்றியும் அந்தம்மாள் ஒரு நாள் கேட்டாள். அதற்குச் சரியான ஜோடனையுடன், ஒரு கதை தயாரித்து வைத்திருந்தேன். அதாவது, என்னைப் பெற்ற தாயார் சிறு வயதிலேயே செத்து விட்டதாயும், என்னுடைய அத்தைக்கு ஒரு மகன் இருந்தான். அவனை, நான் என் மனப்பூர்வமாய் காதலித்தேன். அவனுக்காக, நான் என்னுயிரையும் த்ருணமாக எண்ணி, அன்பு கொண்டிருந்தேன். அதே மனிதனை, இன்னொரு இள நங்கை காதலித்தாளாம். அது எனக்குத் தெரிந்திருந்தால், நானே அவனை த்யாகம் செய்து, அவளுக்கு மணமுடித்திருப்பேன்; அது தெரியாது போயிற்று.

என் அத்தை மகனுக்கு, என்னிடம்தான் ப்ரீதி அதிகம்: அவளிடம் இல்லை என்பதை அந்தப் பாவி உணர்ந்து, மனமும், மெய்யும் துணிந்து, என் அத்தானை விஷ மருந்தினால், கபடமாகக் கொன்று விட்டாள். அத்தான் இறந்த துக்கத்தில், நான் மயக்கம் போட்டு விட்டேனாம். அந்தப் படுபாவிக்கு உடனே இந்த அதிர்ச்சி தாங்காது, பயித்தியம் பிடித்தது போலாகி விட்டதுடன், நோயும், பாயுமாகி விட்டாள். அத்தான் சாதாரணமாக செத்ததாகவே, எல்லோரும் எண்ணி இருந்தோம். அந்தச் சண்டாளிக்கு, இதயம் பலவீனப்பட்டுத் தான் செய்த கொலைக்குத் தானே தாள மாட்டாது வெடித்து விடும் போலாகி விட்டதால், தன்னுயிர் இனி நிற்காது என்று தெரிந்து கொண்டு, அத்தானின் சமாதியருகில் தன்னைக் கொண்டு போகச் செய்து, அங்கு தானே தன் வாயினால், சகலமான விஷயங்களையும் சொல்லிக் கதறி, கர்த்தனிடம் மன்னிப்புக் கோரினாள். அசரீரியாக கர்த்தனும், “மன்னித்தேன். இனி யாரும் இம்மாதிரி உயிரைக் கொண்டு போகும் காரியத்தை மட்டும் செய்யாதீர்கள். அம்மாதிரி செய்கிறவர்கள் கணக்கற்ற கஷ்டங்களை அனுபவிப்பார்கள். ஏதோ ஆத்திரத்தினால் மூளை குழம்பி செய்து விட்ட போதிலும், கடைசி காலத்திலாவது தம் குற்றத்தை, என்னிடம் நேரில் வாயார முறையிட்டு விட்டால், நான் மன்னித்து ரக்ஷிக்கக் காத்திருக்கிறேன்” என்று இன்னும் ஏதேதோ சொல்லிய அதிசயத்தை, நானே கூடவிருந்து, காதால் கேட்டேன். அடுத்த நிமிஷமே, அந்தப் பெண்ணைக் கைது செய்ய எண்ணியதற்குள், அவளுடைய ஆவி பறந்து விட்டது. அன்று முதல், நான் என் அத்தானின் சமாதிக்கு நமஸ்காரம் செய்வதும், இப்படி வேலை செய்து வயிறு வளர்ப்பதுமாக, என் காலத்தைக் கடத்தி வருகிறேன்.”

என்று கூறும் போது, கரை காணாத துக்கத்துடன், புலம்பித் துடிப்பது போல், ப்ரமாதமாய் நடித்தேன். அந்த நோயாளியின் நிலைமையை அடாடா! அப்போது பார்க்க வேண்டுமே! வர்ணிக்கவே முடியாதபடி, தவித்துப் பெருமூச்செறிந்துத் துடித்தபடியே, ‘ஐயோ பாவம்! காதல் த்யாகம் செய்தவளா! நீ’ என்று என்னை மார்புறத் தழுவிக் கொண்டு தேற்றினாள்.

என்ன ஆச்சரியம்! அவளுடைய சொக்காய்களுக்கு உள்ளுக்குள்ளே, ஏதோ ஒன்று உறுத்திய ரகஸியத்தை அறிந்தேன். சதா சட்டைக்குள் மறைத்து வைக்கும் ஏதோ ஒரு ரகஸியப் பொருள்தான் இது என்பது எனக்கு நன்றாகத் தெரிந்து விட்டதால், அதை எப்படிப் பார்ப்பது என்ற யோசனையிலாழ்ந்தேன். அன்றிரவு நன்றாக மயங்கித் தூங்கும்படியான மருந்தை, பாலில் கலந்து கொண்டு வந்து கொடுக்கும்படி, பட்ளராகிய என் கணவருக்கு ரகஸியமாய்த் தெரிவித்தேன்.

அப்படியே இரவு பாலைச் சாப்பிட்டதும், அயர்ந்து தூங்கி விட்டாள்.சட்டைக்குள் புகுந்திருந்த வஸ்துவை எடுத்துப் பார்த்தேன். என்ன ஆச்சரியம். என்னாலேயே என்னை நம்ப முடியவில்லை. கொலையான ப்ரபுவுக்கு, ஏதோ விஷ மருந்து குத்தப்பட்டிருப்பதாகவும், அந்த புட்டி கீழே போட்டிருந்ததாகவும் முன்பு சாட்சி ஏற்படவில்லையா? அதே விஷ மருந்து பாட்டில் சிறியது இரண்டும், அதோடு சில கடிதங்களும் இருந்தன.

அந்த மருந்து சீமையில்தான் கிடைக்கும். இங்கு எளிதில் கிடைக்காது. அந்த மருந்து விஷயத்தில்தான், அப்பா முற்றிலும் கவனத்தைச் செலுத்தி, ஆராய்ச்சி செய்து வருகிறார். இது போன்ற மருந்துகளை ஸ்ரீதரனே ரகஸியமாகத் தருவித்து வைத்திருப்பதாக எதிரிகள் முடிவு கட்டி விட்டார்கள். அதுவும் தவிர, அதோடு கூட, இருந்த கடிதத்தில் இன்னும் முக்யமான விஷயங்கள் எனக்குக் கிடைத்து விட்டது,

அதாவது கொலை நடந்த அன்று அந்த கண்ணபிரான் எழுதிக் கொடுத்த உயிலை, அந்த கலபையில் வெள்ளைக்காரன் மறைத்து விட்டு, தனக்குத் தெரியாதென்று சாதித்த விஷயம் உங்களுக்கு நினைவிருக்கிறதா!… அதே வில்லை உடனே கிழித்தெறிய முடியாமல், நிஜார் பேக்கட்டுக்குள்ளே திணித்து விட்டால், ஒரு வேளை தன்னை சோதனை போட்டால், எங்காவது கிடைத்து விடப் போகிறதோ, அதுதானே ப்ரதானம் என்பதால், அதை இவளிடம் கொடுத்து மறைக்கச் செய்தார்களாம். இவள் அந்த வீட்டிலேயே, எங்கயோ பதுக்கி விட்டாளாம். அதைப் பிறகு, அதே வீட்டில் நடு நிசியில் ரகஸியமாகச் சென்று, டார்ச்சு மட்டும் போட்டுக் கொண்டு தேடியதாயும், கிடைக்கவில்லை என்றும், நீ எங்குதான் பதுக்கித்து வைத்தாய் என்றும், அவளுடைய அண்ணன் ரகஸியமாய்க் கேட்டு எழுதியுள்ள கடிதம் அவள் சட்டைக்குள் இருந்தது

உஷா:- ஏம்மா!.இது போல விஷயங்களை நேரில் கேட்காமல், எழுதி வைத்தால், பிறர் கையில் கிடைத்து விட்டால், என்ன செய்வது என்கிற பயம் இருக்காதா? அப்படிச் செய்வார்களா?

அம்பு:- அப்படிக் கேளம்மா… நமக்கு அனுகூலத்திற்கு இடம் இருப்பதனால்தான், இப்படி நடந்தது. கொலை நடந்த உடனே வெள்ளைக்கார புருஷர்களையும் கைது செய்திருந்தார்கள்; பிறகு பெயிலில் விட்டார்களல்லவா! அப்போது அவர்களைச் சுற்றி, யாராவது காவல் இருப்பது போல் சுற்றிக் கொண்டிருந்ததால், இது விஷயத்தில், உரக்கப் பேச முடியவில்லை. எழுத்து மூலம் பேசிக் கொண்டார் பாவம். எப்படியாவது அக்கடிதத்தைத் தேடிப் பிடித்தாலன்றி, தமக்கு அபஜெயம் நிச்சயம் என்று தெரிந்து விட்டது. அதற்காக எழுதிய கடிதம் அது. அது கிடைத்தது. ஆனால் வில் மட்டும் கிடைத்ததா இல்லையா என்று எனக்குத் தெரியவில்லை.

இவர்கள் இரவில், அந்த வீட்டில் தேடியதை, பிசாசு என்று பாராக்காரனும், போலீஸ்காரனும் எண்ணி நடுங்கி விட்டார்கள் பாவம்! அது மட்டுமின்றி, அதே ஜோபியில், சீமையிலிருந்து இவர்களுக்கு வந்திருந்த மற்றொரு கடிதமும் இருந்தது. அந்தக் கடிதத்தின் மூலம், இந்த கூட்டம் பூராவும் ஒரு மட்டமான கூட்டம்; இந்தியாவிலிருந்து வருகிறவர்களில் சிலரை ஏமாற்றி, மோசம் செய்வதே இவர்களின் தொழில் என்பதும், அதைப் பற்றிய இக்கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் எழுதியிருந்ததில், நன்றாகப் புலனாகியது. அது வேறு நமக்குப் போதிய ஆதாரமாகக் கிடைத்து விட்டது. எனக்குண்டாகிய சந்தோஷம் சொல்லி முடியாது. மறுபடியும், கடிதங்களை அப்படியே வைத்து விட்டு, நானும் என் படுக்கையில் படுத்தபடியே தூங்காது விழித்திருந்து, இவள் மயக்கம் தெளிந்ததும், என்ன செய்கிறாள் பார்க்கலாம் என்று கவனித்தேன்.

நடு நிசி சமயத்திற்குத்தான் அவளுக்கு தூக்கம் தெளிந்தது. கண் விழித்த உடனே, அலறியவாறு தன் மார்பில், கையை வைத்துப் பார்த்துக் கொண்டாள்; இதே போல், இவள் தினம் பார்த்துக் கொள்வாள். அப்போது நான் இதன் ரகஸியம் தெரியாததால், ஏன் இப்படி செய்கிறாள் என்று மட்டும் யோசிப்பேன், அதன் உண்மை ரகஸியம் இப்போது தெரிந்தது. இன்னும் என்ன செய்கிறாள் என்று பார்ப்பதற்காக, நான் பேசாமல் படுத்திருந்தேன். அந்த கடிதங்களை மறுபடியும் எடுத்துப் பார்த்தாள். உடனே பழையபடி வைத்து விட்டுப் படுத்தாள். மீண்டும் எழுந்து, எழுந்து உலாவினாள். அதே க்ளப்பில், மற்றொரு அறையில் அவள் கணவன் என்பவன் படுத்திருந்தான். அவன் தற்செயலாக எழுந்து வந்தான். இவளும், அவனும் ஏதோ குசமசவென்று ரகஸியமாய்ப் பேசிக் கொண்டார்கள். என் காதுதான் பாம்புச் சுழி போன்றது. அதிலும் கேட்காதபடி பேசிக் கொண்ட முதல் வார்த்தைகள் காதில் விழவில்லை: இடை இடையே, ஒவ்வொரு வார்த்தை மட்டும் காதில் பட்டது. அதைக் கொண்டு நான் ஊகித்தது என்னவெனில், அந்த உயிலை நாம் தேடிப் பிடிக்கா விட்டால், ஆபத்து நிச்சயந்தான். உன் அண்ணனாக நடிப்பவன், சொல்லாமல் கப்பலேறி, அமெரிக்கா முதலிய இடங்களுக்குப் போய் மறைவாய்த் திரியப் போவதாக ஒரு தீர்மானம் செய்கிறான். நானும் அப்படியே போனாலும், போய் விடலாம். ஜாக்ரதையாய் அந்த உயில் விஷயத்தில், நாம் நாளையே மறுபடியும் போய்ப் பார்க்க வேணும். கேஸ் விஷயம் பலமாகிக் கொண்டு வருகிறது. நாளை இரவு நாம் சினிமா போவதாகக் கூறி, அந்த இடத்திற்கு மறுபடியும் போக வேண்டும் என்று எச்சரித்தது போல், பொருள் விளங்கியது.

அவன் போன பிறகு, மறுபடியும் அவள் ஏதோ நடமாடினாள்: படுக்கையில் படுத்தாள். என் பெயர் மேரி என்று வைத்திருந்தேன். ‘மேரி மேரி’ என்று அழைத்தாள். உடனே அலறிப் புடைத்துக் கொண்டு, எழுந்திருப்பது போல் எழுந்து ஓடி வந்தேன். குடிப்பதற்கு ஏதாவது கொஞ்சம் பானம் வேண்டும்..ஏதோ மயக்கமாயிருந்ததாகவும், கண்களில் ஏதோ மாதிரி சோர்வு உண்டாகித் தூக்கம் கலைந்து விட்டதாயும் கூறினாள்.

உடனே சுடச்சுட கோகோ போட்டுக் கொடுத்தேன். அதைக் குடித்த பிறகு, சற்று மவுனமாக இருந்தாள். எதையோ எண்ணியவள் போல், “மேரி! உன்னுடைய கதையைக் கேட்டது முதல், எனக்கு மனது மிகவும் கஷ்டப்படுகிறது. இத்தனை வைராக்யமாயிருக்கும் உனக்கு, நான் எங்கள் நாட்டில் ஏதாவது உதவி செய்துக் காப்பாற்ற வேண்டுமென்று ஆசை அடித்துக் கொள்கிறது. உனக்குத்தான் மக்கள், மனுஷ்யாள் இல்லை என்கிறாய். நீ என்னுடனேயே வந்து விடுகிறாயா? உன்னை நான் உயர்ந்த நிலையில் வைத்துக் காப்பாற்றுகிறேன்”—என்றாள்.

நான் முதலில் சற்று தயங்குவது போல் நடித்தேன். அழுதேன், யோசித்தேன். மீண்டும் அவள் என்னை வேண்டினாள். உடனே அவளுடன் வருவதாக வாக்குக் கொடுத்து விட்டேன்; மறுபடியும் என்னைக் கட்டிக் கொண்டு, என் கைகளைக் குலுக்கினாள். “என்னை நீ பரிபூர்ணமாய் நம்புகிறாய்; நானும் உன்னை பரிபூர்ணமாய் நம்பலாமா!” என்றாள். கட்டாயம் நம்பலாம் என்று உறுதி கொடுத்தேன். இவளிடம் வேஷம் போட்டு நடிக்க நான் வந்திருக்கையில், என்னிடம் நாடகம் நடிக்க அவள் ஆரம்பித்து… “மேரீ! இப்போது நன்றாகத் தூங்கினேன் பாரு, அப்போது ஒரு அத்புதமான கனவு வந்தது. அந்த கனவில் தெய்வ மாது ப்ரத்யக்ஷமாகி ஒரு இடத்தைக் குறிப்பிட்டு காட்டி, அதில் போய் இப்போதே பாரு, ஒரு புதையல் கிடைக்கும். அதை நீ கொண்டு உபயோகப்படுத்திக் கொள். உனக்கு அதிருஷ்ட காலம் வந்து விட்டது… என்று சொல்லி மறைந்தாள். நீ என்னுடன் சகாயமாய் வா! நாம் போய் பயப்படாமல் புதையலைக் கண்டெடுத்து வந்து நாம் இருவருமே பகிர்ந்து கொள்ளலாம்” என்று கூறினாள். உடனே நான் இசைந்தேன்.

அதே நடுநிசியில், என்னை அழைத்துக் கொண்டு, தைரியமாய்க் கிளம்பினாள். நான் குழாயருகில் போய் வருவதாகக் கூறி விட்டு, என் கணவரிருக்குமிடம் சென்று, அவரிடம் விஷயங்களைக் கூறி, எங்களைப் பின் துடரும்படிக்குக் கூறி விட்டு, இவளுடன் புறப்பட்டேன். அந்த உயிலுக்காகத்தான் இவள் கிளம்புகிறாள் என்பது எனக்கு வெட்ட வெளிச்சமாகி விட்டது. ஒரே உயிலுக்கு, இவளும், இவள் கணவனாக நடிக்கும் சோதாவும் சண்டை இடுவதாகத் தெரிந்தது. கிடைத்து விட்டால், அதை வைத்துக் கொண்டே, ஒருவரிடம் ஒருவர் பணம் பறிக்கலாம் என்று உள்ளுக்குள் இருப்பதையும் நான் ஊகித்தறிந்தேன்.

நான் நினைத்தபடியே, தோட்டத்துப் புறமாக ஏறி குதித்து, கண்ணபிரானின் பங்களாவையே அடைந்து, அவள் தேடவாரம்பித்தாள். இதே சமயத்தை, நானும் எதிர் பார்த்திருந்ததால், நானும் அவளுடன் தேடுவது போல் பார்த்து, எங்கெல்லாம் காகிதக் குப்பை கூளங்கள் இருந்ததோ, அதை எல்லாம் நான் கிளறிப் பார்த்தவாறு, தரையில் தட்டி, தட்டி புதையல் இருக்கும் ஓசை கேட்கிறதா என்று பார்ப்பதாக, அவளிடம் நடித்து வந்தேன்.

பாவம் வாசலில் காவலிருக்கும் டாணாக்காரன் பயந்து நடுங்கி ஓடுவதையும், நான் ஜன்னல் கண்ணாடியால் பார்த்துக் கொண்டு தானிருந்தேன். எப்படியும், காரியம் ஜெயமாகி விட்டால் போதும் என்ற எண்ணத்துடன், வெகு மும்முரமாகப் பார்த்தேன். அதே ஹாலில் ஒரு சாக்கடை பூமிக்குள் போவதும் அதன் மேல் கடப்பைக் கல் மூடியிருப்பதும், என் கண்ணில் பட்டது. நான் அவளுக்குத் தெரியாமல், கடப்பைக் கல்லை காலாலேயே புரட்டி, சாக்கடைக்குள் காலை வைத்துக் காலாலேயே துளாவினேன். சில காகித குப்பைகள் அதில் எலியோ, பெருச்சாளியோ இழுத்துத் தள்ளியிருந்தது தெரிந்தது; உடனே அவைகளைக் காலாலேயே எடுத்து, என் ஜோபிக்குள் அடைத்துக் கொண்டு, கடப்பைப் பாறையைத் தள்ளி விட்டு, அவளிடம் ஓடி வந்து, “அதோ ஒரு கடப்பைப் பாறை மூடியிருக்கும் இடத்தில் புதையல் இருக்குமோ பாருங்கள், நான் இங்கு காவல் இருக்கிறேன்” என்று அதனிடம் அவளையனுப்பிவிட்டு, மறைவான இடத்தில் டார்ச்சு விளக்கில், இந்த கடிதங்கள் குப்பை காகிதமா? சரியான புள்ளியா என்று கவனித்தேன். என்ன ஆச்சரியம்! கண்ணபிரானின் கையெழுத்து பளிச்சென்று தெரிந்தது; தேதியை முதலில் பார்த்ததும், கொலை நடந்த தேதியே ப்ரதானமாய்த் தெரிந்ததும், நான் துள்ளி குதித்து மகிழ்ந்து, கடவுளை எல்லாம் வணங்கி, மானஸீகமாய் டாக்டருக்கு ஆசி கூறினேன். எந்த மனுஷியை சந்தேகித்தேனோ, பாவம் அவளே வந்து உண்மையைக் காட்டியது போலாகி விட்டது.”

என்றதைக் கேட்டதும், எல்லோரும் ஆனந்தமாய்க் குதித்தார்கள். தன்னை மீறிய உணர்ச்சியுடன், தாமோதரன் அப்படியே அம்புஜத்தின் காலில் விழுந்து நமஸ்கரித்து, “தாயே! நீங்கள்தான் எங்கள் குல தெய்வம்! இதற்கு மேல், எங்களால் சொல்லவே தெரியவில்லை!” என்றான்.

“எல்லாம் ஸ்ரீகீதாசாரியன் செயல்; என்னால் என்ன இருக்கிறது. இத்தனை சுலபமாய் இந்த வெற்றி கிடைத்து விடும் என்று நான் நினைக்கவே இல்லை. நான் இருட்டில் நகர்ந்தவாறு சென்று, கடிதங்களை என் கணவரிடமே கொடுத்து பத்திரப்படுத்தி, அவரை எங்கள் வீட்டிற்குப் போய் விடும்படிக் கூறி விட்டு உடனே நான் இங்கு வந்தேன். அதற்குள் அவள் சாக்கடையைக் கையினால் கிளறிப் பார்க்கையில், அவளுக்குப் போதாக் காலக் கொடுமையினால், ஒரு சிறிய தேள் கையில் கொட்டி விட்டது. திருடனுக்குத் தேள் கொட்டியது போல… என்கிற பழமொழி சரியாகி விட்டதால், அவள் ஒரு துள்ளு துள்ளியவாறு, “ஐயோ ! மேரி… போய் விடலாம், வா…” என்று கூறியபடியே, எப்படியோ நோயைப் பொறுத்துக் கொண்டு, ஒட்டமாக வீதியை அடைந்து, டாக்ஸி வைத்துக் கொண்டு, ஓட்டலை யடைந்தோம்.

தேள் கொட்டிய உபத்திரவம் தாங்காமல், அவள் அலறத் தொடங்கினாள். நான் எனக்குத் தெரிந்த ஏதேதோ மருந்துகளைப் போட்டேன், ஒன்றுக்கும் கேட்கவில்லை. டாக்டரைக் கூப்பிட வேண்டாமென்று கத்தினாள். நான் செய்வதறியாது தவிப்பது போல், பாசாங்கு செய்தவாறு, மறுபடியும் மயக்க மருந்தையே அவளுக்குக் கொடுத்து விட்டு, நான் நேரே என் வீட்டிற்கு ஓட்டம் பிடித்தேன்.

உடனே என் கணவரும், நானும் அந்தக் கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்துப் பூரித்துப் போனாம். அப்பா இது விஷயமாகத்தான் வெளியே போயிருந்தார். அவர் வரவுக்காகவே, இரண்டு நாள் காத்திருந்தோம். நேற்று அவர் வந்த உடனே, அவரிடம் இதைக் காட்டினோம். இன்னொன்று முக்யமானதைச் சொல்ல மறந்து விட்டேனே… சிறைச்சாலையில், உங்கள் பிதா கைதியாயிருப்பதும், ஸ்ரீதரனே வைத்தியம் செய்வதையும் எப்படியோ அறிந்து அதை ரகஸியமாக இவளுக்கு எழுதியிருந்த ஒரு கடிதமும் இவள் பையில் கண்டெடுத்தேன். அதனால்தான், இவ்விஷயத்தை முதலில் உங்களிடம் சொல்ல ஆரம்பித்தேன். வழக்கு விஷயத்திலேயே பேச்சு மாறி விட்டது. இதற்குள், உங்களுக்கும் வெற்றிகரமான இண்டர்வ்யூ கிடைத்தது. பல வருஷங்களாக மறைந்து கிடந்த ரகஸியமும் வெளியாகி விட்டது. எல்லாம் நன்றாகவே முடிந்தது. இந்த வழக்கு விஷயத்தை நீங்கள் யாரும் வெளியிடவேண்டாம். அப்பாவே, அதற்குத் தகுந்த சமயம் பார்த்து வெளியிடுவார்கள். உங்களுக்கு இந்த சந்தோஷம் தெரிந்தால், நலமாயிற்றே என்று சொன்னேன்.”

என்று சகல விஷயங்களையும் சொல்லி, ஒருவாறு முடித்தாள். இதைக் கேட்ட கமலவேணியம்மாளுக்கு உண்டாகிய பெருமிதமான ஆநந்தத்தில், அப்படியே அம்புஜத்தைத் தூக்கிக் கொண்டு குதிக்கும்படி எங்கிருந்தோ பத்து யானை பலம் வந்து விட்டது. “என் கண்மணியின் மீது படவிருந்த அழுக்கைத் துடைத்து, சத்தியத்தையும், தர்மத்தையும் நிலை நாட்டி, அவனை வாழ வைத்த செல்வீ! என் வயிற்றில் பாலை வார்த்த கற்பகமே ! “கடவுள் ஒருவன் இருப்பது உண்மையாயின், அவனை நம்பிய பக்தர்களை அவன் ரக்ஷிக்கக் கடமைப் பட்டிருக்கிறான் என்பதை அவன் உலகறியச் செய்ய வேண்டாமா? நான் நிரபராதி என்பதை அவனே காட்டட்டும், நீங்கள் எத்தகைய ப்ரயத்தனமும் செய்ய வேண்டாம்…” என்று தத்வோபதேசம் செய்து விட்டு, என் செல்வன் சென்ற போது, என் வயிற்றில் எத்தகைய சங்கடம் செய்தது தெரியுமா? நல்ல ப்ராணனாக இருந்தால், அப்படியே போயிருக்க வேண்டும். அனுபவிக்கவே பிறந்த கட்டையாகையால், போகவில்லை என்று கூட நான் வெறுத்தேன். இப்போது இந்த நிமிஷம், என்னுடைய அதே உள்ளம் என்ன நினைக்கிறது தெரியுமா… தன் செல்வ மகன் கொலைகாரன் என்கிற படாப் பழியைக் கேட்ட உடனே, அந்தக் கலக்கக் கறையுடன் சாவது மகத்தான பாபமாகும்; அவன் நிரபராதி என்று கேட்டு, பேராநந்தமடைந்த பிறகு, சாவதுதான் பாக்யமாகும்.நீ சரியான புண்யவதி என்று இப்போதுதான் வெளியாகிறது என்று பறை சாற்றுகிறது. இதற்குக் காரணம் நீங்களும். உங்கள் பிதாவுமல்லவா? இப்போது என் மனக்களிப்பின் வேகத்தில், நான் எப்படித்தான் உங்களைக் கொண்டாடிப் பேசுவது என்றே தெரியவில்லை. எங்கள் குல விளக்கு மங்கி அணைந்து போகும் தருவாயிலிருந்ததைச் சுடர் விட்டெரியும்படி ஏற்றி வைத்து, மாசுமருக்களைக் களைந்தெறிந்த புண்யாத்மாக்கள் நீங்கள் என்றால் மிகையாகாது. என்ன பரோபகாரம், என்ன த்யாக உழைப்பு! இந்த வழக்கிற்காக நீங்கள் ஒரு கேவலமான கபட வேஷதாரியிடம், இத்தனை நாட்கள் வேலைக்காரியாயிருந்த ஒரு செய்கையை எண்ண, எண்ண எங்களுக்கு மயிர்க் கூச்செறிகிறது…”

என்று கட்டு மீறிய களிப்புடன் சொல்வதைக் கேட்ட சுந்தராம்பாளின் உள்ளம், ஆநந்தத்தினால் புளகிதமுற்றது. “அம்மணீ! எப்படியும் எங்கள் குடும்பத்துடன் நீங்களும் கலந்து விட்டீர்கள். ஆகையால், உங்கள் சகோதரியைப் போல, உஷாவை எண்ணிக் கொண்டு, அவள் வாழ்நாள் வீணாகாதபடி, அவளையும் உங்கள் தொழிலில் பழக்கி, பொது ஸேவை செய்யும்படிக்குச் செய்ய வேண்டும்” என்று கேட்டுக் கொண்டாள்.

இதற்குள் அம்புஜம் வந்தவர்களுக்கெல்லாம் டிப்பன், காப்பி முதலியன கொடுத்து, “சந்தோஷமாக சாப்பிடுங்கள். கூடிய சீக்கிரத்தில் உங்கள் குமாரருடன் கூடவே சாப்பிடலாம்; அடுத்தது, அவருடைய விவாகத்தின் விருந்தும் நடக்கலாம்,” என்று சொல்லும் போது, நாயுடுகாரு வெகு குஷியுடன் உள்ளே வந்தார். “பேஷ்! எல்லோரும் இங்கேயே இருக்கிறார்களா, பலே! அம்புஜம் நீசொல்லிய விஷயங்களுக்கெல்லாம் சிகரம் வைத்தது போல், இன்னொரு சந்தோஷ விஷயத்தை நான் சொல்லப் போகிறேன் தெரியுமா…”

என்று முடிப்பதற்குள் அம்புஜம் சிறு குழந்தையைப் போல் குதித்துக் கொண்டு, “விடுதலையாகி விட்டாராப்பா! கடிதத்தை தாக்கல் செய்து விட்டீர்களா!” என்று கேட்டாள்.

நாயுடு :- உம்! இதென்னம்மா ப்ரமாதம்; இது தன்னைப் போலாகும் காரியமல்லவா! நானும் இப்போது பல இடங்களில் சுற்றி, பல உண்மைகளைக் கண்டு பிடித்து விட்டு, ஸ்ரீதரனிருக்கும் சிறைக்கு ஒரு காரியமாய்ப் போயிருந்தேன். நானே கனவிலும் கருதாத விதமாய் ஒரு விஷயம், தானாக வலுவில் கிடைத்தது. அதாவது ஸ்ரீதான் இருக்கும் ஜெயிலரை சில காரணங்களுக்காகப் பார்க்கப் போனேன்; அவர் ஜெயிலில் இல்லை. வீட்டிலிருப்பதாகச் சொன்னார்கள்.

உடனே வீட்டிற்குப் போனேன். அங்கு நான் கண்ட காட்சியை வர்ணித்தே கூற முடியாது: அத்தனை வியப்பும், திகைப்புமாகி விட்டது. அதாவது ஸ்ரீதரனின் பிதாவே, அங்கு கைதியாக இருக்கிறாராம்; அவருக்கு ஸ்ரீதரனே வைத்யம் செய்தாராம். அப்போது, அவர் பிதா தனது சரிதையைப் பூராவும் சொல்லித் தான் ஒரு சிறுவனின் பொருட்டு, த்யாகம் செய்து கொலை வழக்கில் மாட்டிக் கொண்டதாகவும், தனது பாலிய லீலைகளின் பரிபவத்தை உணர்ந்து, தான் உலகத்தில் யார் கண்ணிலும் படாது, சிறை யிலிருப்பதோ, தூக்கு மரம் ஏறுவதோ ஒன்றை வலுவில் வரவழைத்துக் கொள்ள வேண்டுமென்று தீர்மானித்ததாயும், அப்படியே செய்ததாகவும் டாக்டரிடம் சொல்லக் கேட்டதும், ஜெயிலரின் இதயம் வெடித்து விடும் போலாகி விட்டதாம்: அவருக்கு ஆகாயமும், பூமியும் ஒன்றாகச் சுற்றியதால், உடனே ஸ்ரீதரனை அனுப்பி விட்டுத் தான் வீட்டிற்கு ஓடி வந்து படுத்தாராம்.

அப்போதுதான், நானும் போய்ச் சேர்ந்தேன். அந்தக் கைதி எந்த ஒரு சிறுவனுக்காக த்யாகம் செய்தானோ, அந்தச் சிறுவன்தான் இன்று நன்றாகப் படித்து, வ்ருத்தியாகி ஜெயிலர் உத்யோகத்திற்கு வந்து, பல ஊர் ஜெயில்களில் இருந்ததாயும், தனது சிறு பிராயத்து சம்பவத்தை அறவே மறந்திருந்தாராம் என்றாலும், எந்த உத்தமனோ ஒருவனால்தானே நாம் இந்த நிலைமைக்கு வந்தோம். அவன் யாரோ எங்கிருக்கிறானோ; அந்த இருட்டில் ஆளைக் கூட பார்க்கவோ, தெரிந்து கொள்ளவோ முடியாது போய் விட்டது. பாவம் அவன் என்னவானானோ என்று எப்போ தாவது எண்ணி வருந்துவாராம்.

இத்தனை வருஷ காலமாய், இதே சிறையில் இதே மனிதனைப் பார்த்துப் பழகி, பல தரம் கண்டித்து, தண்டனையும் கொடுத்துப் பின்னும், பாவியாகி விட்டோமே—இவன்தான் அன்று என் தாயாரின் உயிரைக் காத்து, என் வாழ்வை உயர்த்திய உத்தமன் என்று தெரிந்ததும், எனக்கு இதயமே நின்று விடும் போலிருக்கிறதே. கொலையாளியும், குற்றவாளியும் நானாக இருக்க, நான் இராஜபோகத்தை அனுபவிக்கவும், எனக்காக அந்த மனிதன் இப்படித் திண்டாடுவதும் எத்தனை பாவம்! இவனுடைய மகன்தான் ஸ்ரீதரன் என்கிற ரகஸியமும் தெரிந்து விட்டது. என்ன செய்வது?’—என்று தனது குற்றத்தைத் தானே என்னிடம் கூறி, கண்ணீர் விட்டுக் கதறினார். தானே பழைய குற்றவாளி என்று சர்க்காரிடம் வெளியிட்டு விடட்டுமா! என்றும் கத்தினார். நான் அவரைச் சமாதானப்படுத்தி, “ஸார்! ஸ்ரீதரன் நிரபராதி என்பது சரியான காரணங்களுடன் ருஜுவாகி விட்டது; ஆகையால், அவரை சீக்கிரமே, விடுதலை செய்து விடுவார்கள். அதைப் பற்றி, உம்மிடம் பேசவே வந்தேன். நடந்தது என்னவோ நடந்து விட்டது. இனி நீர் குற்றவாளி என்று காட்டினாலும், அதனால் உமக்கு அந்த பாதகம் விட்டுப் போகப் போவதில்லை. நீர் எப்படியாவது, சர்க்காரிடம் ப்ரயத்தனப்பட்டு, அந்த மனிதன் மிகவும் நல்லவனாகித் திருந்தி விட்டான். இனி அவனை புது வருஷ நன்னாளில், விடுதலை செய்து விடலாம் என்று சிபார்சு செய்து, விடுதலை செய்து, மகனிடமே அனுப்பி விடும். அதுவே போதும். ஸ்ரீதரனை நான் பார்த்துப் பேச வேணும். அதற்கு சற்று அனுமதித்தால் எனக்கு நல்லதாகும்” என்று கேட்டேன்.

உடனே அந்த மனிதன், என்னை ஸ்ரீதரனிடம் அழைத்துச் சென்று, நான் தாராளமாகப் பேச விட்டார். கொலை நடந்த அன்றைய சம்பவத்தைப் பற்றிக் கேட்க வேண்டியதைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஜெயிலரின் உதவியினால், ஸ்ரீதரனின் பிதாவையும் தனிமையில் பார்த்தேன். இதே மனிதரை ஆதியில் அவர் படாடோபமான உத்யோகத்தில் இருக்-

237

சாந்தியின் சிகரம்

கையில் பார்த்திருக்கிறேன். அவரிடம் நான் தனிமையில் பேசுகையில், ஸ்ரீதரன், ஜெயிலர் இருவரும் இருந்தார்கள்.

ஜெயிலரின் சோகம் கட்டு மீறி விட்டது. அவர் துக்கத்தைத் தாளமாட்டாது, கைதியின் கைகளைப் பிடித்துக் கொண்டு கதறியவாறு, ‘ஐயா எந்த ஒரு சிறுவனுக்காக நீங்கள் த்யாகம் செய்தீர்களோ, அந்தப் பாவி நான் தான்’ என்று சகல வரலாற்றையும் சொல்லி, மன்னிப்பும் கோரியதுடன், ‘இதோ இவர் யாருமில்லை. துப்பறியும் நிபுணர் ராஜாராம் நாயுடுகாருதான்! இவர் இதோ இருக்கிறாரே டாக்டர், இவர் யார் தெரியுமா? சாக்ஷாத் உங்கள் மகன் டாக்டர் ஸ்ரீதரன் இவர்தான்’ என்று சொல்லி வாய் மூடு முன், அந்த மனிதனின் ஆனந்த உணர்ச்சி இருந்த நிலைமையை வர்ணிக்கவே முடியவில்லை. அப்படியே… ‘ஹா… என் கண்மணி ஸ்ரீதரனா… என்னருமை செல்வன் ஸ்ரீதரனா…’ என்று கட்டித் தழுவினார். அடுத்த நிமிஷமே, ஜெயிலரை நோக்கி, ‘அப்பனே! உன் தாயார் சவுக்யமாய்ப் பிழைத்தாளா? ஒன்றுக்கும் உதவாக்கரைக் கட்டையாகிய நான் எப்படியானால் என்ன? அந்த சமயம் கடவுள் உன்னைக் காப்பாற்றி, இத்தனை உயர்ந்த பதவியில் இருக்கும் படிக்குச் செய்தாரே! நான் ஆதியில் செய்துள்ள மகத்தான பாவத்திற்கு, இந்த ஒரு சிறிய உதவியாவது என்னால் செய்ய முடிந்ததே என்று நான் பூரிக்கின்றேன். என் மகனைச் சந்தித்த சந்தோஷத்தை விட, உன்னைக் கண்ட சந்தோஷமே எனக்குப் பொங்கித் ததும்புகிறது. போனது போகட்டும்; இனி மேல், இந்தப் பாவியின் ஆதி குப்பையைக் கிளறாதே! நீ எந்த ரகஸியத்தையும் வெளியிட்டு எதுவும் செய்ய வேண்டாம். என்று நான் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். என் செல்வனை இங்கு கண்ணாரப் பார்த்ததே, என் மனது நிம்மதியான சாந்தியின் சிகரத்தில் அமர்ந்து விட்டது,’ என்று கூறி விட்டு ஸ்ரீதரனை நோக்கி, ‘என் கண்ணே! கமலவேணி சவுக்யமா? இந்திரா, சந்திரா, தாமு எல்லோரும் சவுக்யமா?’ என்று கேட்டு, அவனை மீண்டும் தழுவிக் கொண்டார்.

அம்பு! அந்தக் காட்சி என்னால் மறக்கவே முடியாது. அத்தனை உருக்கமாயிருந்தது. மூவரும் ஏதேதோ பேசிப் பின், கடைசியில் ஜெயிலர் இவரை எப்படியாவது விடுதலை செய்து, அனுப்பி விடுவதாயும், அவர் மறுக்காமல் வெளியே வந்து விடுவதாயும் தீர்மானிக்கப்பட்டது. ஸ்ரீதரன் ஒரே ப்ரமிப்புடன் அப்படியே பதுமை போலாகி விட்டார். வெகு சீக்கிரத்தில் விடுதலையாகி விடும். என்று நான் சொல்லி விட்டு, இந்த ரகஸியம் நம் மூவரைத் தவிர வேறு யாருக்குமே தெரிய வேண்டாம். என்று சொல்லி விட்டு, நான் நேரே போலீஸ் கமிஷனரிடம் பேசி விட்டு, சர்க்காரிடம் எல்லாவற்றையும் தாக்கல் செய்து விட்டு, ஓடோடி வந்தேன். எப்படி இருக்கிறது கதை பார்த்தீர்களா! அனேகமாய் இன்னும் வெகு சீக்கிரத்திலேயே, ஸ்ரீதரன் வந்து விடுவார். அடுத்த மாதம் புது வருஷமல்லவா? அதை முன்னிட்டு அவரும் வந்து விடலாம்” என்றார்.

இந்த அதி அத்புதமான விஷயத்தைக் கேட்டதும், எல்லோரும் அப்படியே ஆனந்த மயமாய்க் கூத்தாடினார்கள். பின்னும், வெகு நேரம் பேசிக் கொண்டிருந்த பிறகு, எல்லோரும் விடை பெற்றுச் சென்றனர். எல்லோருடைய இதயமும், நாயுடுவையும், அம்புஜத்தையுமே வாழ்த்தியது. Page வார்ப்புரு:Custom rule/styles.css has no content.Script error: No such module "Custom rule".