சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 5

5

டிதத்துடன் சென்ற தாமோதரனுக்கு இன்னதென்று விவரிக்க இயலாத ஒரு தனி உணர்ச்சியும், வேகமும் ஒன்று கூடிக் கொந்தளிக்கின்றதால், அவன் திரும்பத் திரும்பக் கடிதத்தைப் படிக்கிறான். ரகஸியமாய்ப் பதுக்கி வைத்துக் கொள்கிறான். “இக்கடிதத்தில் கண்டபடி, அண்ணா சகலத்தையும் எனக்குக் கொடுத்து விட்டதால், நான் சாமான்யப் பேர்வழியல்ல! பல லக்ஷங்களுக்கு நானே அதிகாரி! இனி என்னைப் பற்றிய புகழ்கள் உச்சத்தையளாவி ப்ரகாசிக்கும்! அதற்கான வழியில், முதலில் சில காரியங்களை மட்டும் செய்து விட வேண்டும். அதாவது, எனது முக்யமான சினேகிதர்களைக் கொண்டு சில பத்திரிகைக்காரர்களையும் பார்க்கச் செய்து, ஒரு பெரிய தேனீர் விருந்தளித்து, சடக்கென்று சில ஸ்தாபனங்களுக்கு சில ஆயிரம் ரூபாயைக் கொடுத்து உதவி விட்டால், பிறகு என் புகைப்படங்களுடன் விஷயம் ப்ரமாதமாய் ஆகாயத்தை அளாவிப் பறக்கும்! அதன் பிறகு விடிந்தால், அஸ்தமித்தால் என்னைக் காண வரும் ப்ரபுக்களும், சீமாட்டிகளும் கணக்கிடமுடியாது. பெண் கொடுப்பதற்கும், கோடிஐச்வர்யர்கள் போட்டியிடுவார்கள். இன்று தொழிலின் மேன்மையினால், அண்ணாவைப் புகழும் ஜனங்கள் என்னைக் கொடை வள்ளல், கலை வள்ளல், தர்மதாதா என்று வானளாவக் கொண்டாடுவர். உடனே வரப் போகும் தேர்தலில், எதிர்ப்பு இல்லாமலேயே நான் பெரிய சட்டசபைக்கும் தேர்ந்தெடுக்கப்படுவேன்! அதன் பிறகு கேட்க வேண்டுமா? அண்ணா பல ஸ்தாபனங்களில் அங்கத்தினராயிருப்பது போல், நானும் அனேக ஸ்தாபனங்களில் அங்கம் வகிக்கலாம். நிர்வாகஸ்தன், ஆலோசனையாளன், பார்வையாளன், பொறுப்பாளி, தர்மகர்த்தா முதலிய பல பல பதவிகளை வகிக்கலாம். என் புகழை எண்ணிப் பார்க்கும் போதே, என்னுள்ளம் தேன் குடித்தது போல் தித்திக்கின்றது” என்று தனக்குள் பலவிதமான எண்ணங்களில் மூழ்கிக் கற்பனை உலகில் சஞ்சரித்துத் தன்னையே மறந்திருந்தான்!

அச்சமயம் மெல்லத் தட்டித் தடுமாறிக் கொண்டு, கமலவேணி அங்கு வந்து பின்புறத்து ஜன்னலருகில் மறைந்து நின்று மகனைக் கவனித்தாள். அவனுடைய கற்பனையுலக சஞ்சாரத்தின் மகிமையில், இவளைக் கவனிக்கவே இல்லை. அவனுடைய செய்கையிலிருந்து இவளால் எதையுமே கண்டு கொள்ளவும் முடியவில்லை. தான் திடீரென்று படுத்து விட்டதனால், அதைப் பற்றி யோசிக்கிறானோ? என்றுதான் தோன்றியது. உடனே மெல்ல அவனிடம் சென்று, “தாமோதரா!… என்னப்பா ப்ரமாதமான யோசனையிலாழ்ந்திருக்கிறாய்? நான் எங்கே செத்து விடுவேனோ என்கிற பயத்தினால் கலங்கி யோசிக்கிறாயா? உம்!… அந்த பயம் இனி எதற்கு? கல்லுப் போல் பிழைத்துக் கொண்டேன், கவலைப்படாதே!” என்றாள்.

முகத்தில் அசடு வழிய ஏதோ கள்ளனைப் போல், திக்கு முக்காடிக் கொண்டே,“ஆமாம்மா! அப்போதிலிருந்து என்னுள்ளம் படும் வேதனையைக் கடவுள் தானறிய வேண்டும்! சற்று முன்பு நன்றாகப் பேசிக் கொண்டு திடமாயிருந்த உனக்கு, திடீரென்று இத்தகைய பேராபத்தான நிலைமை எவ்விதம் வந்து விட்டது? என்று எனக்குத் தெரியவே இல்லை… உம்! தெரிவதென்ன இருக்கிறது? அதிக ப்ரஸங்கித் தனமாய் அண்ணாதான் ஏதோ செய்திருக்க வேண்டும்! இதில் சந்தேகமே இல்லை…”

என்று முடிப்பதற்குள், “என்ன! என்ன! அண்ணன் ஏதோ செய்திருக்க வேண்டுமா? ஐயோ! அநியாயமாய்ப் பேசாதே தம்பீ! உங்களிருவரையும் சமமாக என்னுயிர் போல் பாவிக்கும் அன்பின் ஆழம் தெரியாமல் பேசாதே. அவனுடைய உத்தம குணத்தைப் பற்றி நீ அநியாயமாய்க் குறை கூறுவதை நான் சகிக்கவே மாட்டேன்." என்றாள்.

பக்கம் 35

“ஆமாம்! நீ எப்படி சகிக்க முடியும் அம்மா? என்னைப் பற்றி கவலை இருப்பதாக வாயளவில் சொல்கிறாயேயன்றி…”

“தம்பீ! நிறுத்து! என்ன தானிருப்பினும், ஒரு குடும்பத்தின் கண்ணியத்தைச் சிதைக்காமல் பாடுபட்டுக் காக்கும் பொறுப்பு, குடும்பத் தலைவிக்குத்தான் பெரும்பாகமும் என்று, ஆடவர்கள் எண்ணித் தாம் விலகி இருப்பது அழகல்ல. அண்ணனின் புகழ் நாளுக்கு நாள் வளர்பிறைச் சந்திரன் போல் வளரும் சமயம், அதை நீ சிதைப்பது போல் ஆத்திரப்பட்டுப் பேசி விடுவது மிகவும் வெட்கக்கேடான விஷயமாகும். சற்று பொறுமையாயிரப்பா! தம்பீ! நான் இந்த நிலைமையில் இங்கு எதற்கு வந்தேன் தெரியுமா? பொய் சொல்லாமல் ஒளிக்காமல் சொல்லு. என் கையில் ஒரு கடிதம் வைத்திருந்தேன். அது என்னையறியாமல் நழுவி விழுந்து விட்டது. அதை நீ எடுத்திருந்தால், தயவு செய்து, என்னிடம் கொடுத்து விடு. அக்கடிதம் என் உயிரினும் பெரியது…” என்று முடிப்பதற்குள், “என்ன! என்ன! கடிதமா? உன் கையிலிருந்ததா? இதென்ன குண்டு வீசுவது போல் கேட்கிறாய்? எனக்கு ஒன்றுமே தெரியாதே… யார் எழுதிய கடிதம்?… அப்பா எங்கிருந்தாவது எழுதினாரா? அல்லது… அண்ணனுக்கு யாராவது பெண் கொடுப்பதாக எழுதியிருக்கிறார்களா?” என்று முற்றிலும் ஒன்றுமே தெரியாதவன் போல், நாடகம் நடிப்பதைக் கண்ட கமலவேணியம்மாளுக்கு, “உண்மையில் கடிதம் யார் கையில் கிடைத்திருக்கும்?… ஒருகால், அந்த பெரிய டாக்டரிடமே கிடைத்திருக்குமா? அன்றி நர்ஸிடம் கிடைத்திருக்குமா? ஒன்றும் விளங்கவில்லையே; வேலைக்காரர்களிடம் கிடைத்திருக்குமா? ஐயோ! இந்தப் பாழும் மயக்கம் எனக்கேன் வந்தது? இந்தக் குடும்பத்தின் மானம் ஏன் கெட்டுக் குட்டிச்சுவராக வேண்டும்?” என்று எண்ணியபடியே, சில வினாடிகள் தம்பித்து நின்றாள்.

பிறகு மறுபடியும் மகனை நோக்கிச் சற்று கடுமையான கரகரத்த குரலில், “தாமூ! கத்த வித்தையை பெத்த தாயிடம் காட்டாதே! நான் விளையாட இப்போது வரவில்லை. மிகவும் தீவிரமாய்க் கேட்கிறேன். கடிதத்தை இப்படிக் கொடுத்து விடு. நீ உன் தாயாரைச் சத்தியமாய் மதிக்கிறாய் என்றால், அந்த மதிப்பை இப்போது காட்டி விடு; கடிதத்தை உடனே கொடு; வீணான ஆட்டம் ஆடாதே… அங்கு உன்னைத் தவிர, வேறு யாரும் வரவில்லை…” என்று முடிப்பதற்குள்… “அம்மா! அனாவசியமாய்ப் பேசி என் கோபத்தைக் கிளறாதே; என்ன? எனக்கு எந்தக் கடிதமும் தெரியாது” என்று கண்டிப்பாய்ச் சொல்லும் போது, கமலவேணியின் சொந்தக்காரர்கள் அவளுக்கு திடீரென்று நேர்ந்த உடம்பின் விவரத்தை எப்படியோ அறிந்து, பார்க்க வந்து விட்டனர்.

அந்தத் தகவலை அறிந்த கமலவேணி, வேறு வழியின்றித் தன் படுக்கையில் போய் படுக்கவும், வந்தவர்களை வரவேற்றுப் பேசவும் கட்டாயம் உண்டாகி விட்டதால் மனக்குறையுடன் சென்றாள். அவள் எண்ணம் பூராவும் கடிதத்தின் மீதே சென்று போராடுகிறது. வந்தவர்களோ, சடுதியில் எழுந்து போகும் வழியைக் காணவில்லை. அவர்களுடன் பேசவும் பிடிக்கவில்லை. “பாவம்! பெண்கள் சகாயமில்லாத நிலைமையில், இந்தச் சமயம் உங்களைத் தனிமையில் விட்டுச் செல்ல மனமில்லை. நான் இரண்டு நாட்கள் இருந்து, உதவி செய்து விட்டுப் போகிறேன்" என்று சொல்லிக் கொண்டே, ஒரு அம்மாள் அங்கேயே தங்கி விட்டாள். மற்றவர்கள் சென்றார்கள். உதவி செய்வதாய் வலிய வந்து ஒரு மாது நின்றது, தற்போது கமலவேணிக்கு மிகவும் வெறுப்பாயும், துன்பமாயுங் கூடத் தோன்றியது என்றாலும், எப்படி மறுத்துக் கூற முடியும்? உள்ளே ஒரு உணர்ச்சி, வெளியே ஒரு பேச்சாக நடித்தாளேயன்றி, உண்மையன்பு மறைந்தே போய்க் கசப்புத் தன்மையே தலை தூக்கி நின்றது.