சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 6

6

ரே சந்தர்ப்பத்தில், ஒரே இடத்தில் பல விதமான உண்மை உணர்ச்சிகளை… உலகானுபவங்களை… அறியும் சமயத்தில்தான், அதன் உண்மை ஸ்ரூபவம் நன்றாகத் தெரிவதோடு, தம்மையறியாத உணர்ச்சியை இவர்களும் அடைகிறார்கள். அதே போல், டாக்டர் ஸ்ரீதரன், துளஸிபாய் கூப்பிட்ட இடத்திற்குச் சென்று, வைத்தியம் செய்யும் இடத்தில், கணவன், மனைவி பால் கொண்டுள்ள கரை காணாத அன்பையும், மாமியார், மாமனாருடைய வாத்ஸல்யத்தையும், அப்போது பிறந்துள்ள சிசுவின் மீது மரணாவஸ்தையிலுள்ள தாயாருக்கும், எத்தனை ஆழமான அன்பு புதைந்து கிடக்கிறது என்பதையும் கண்டு உணர்ந்ததனால், தன்னையே மறந்து கண்ணீரைக் கூட உதிர்த்து விட்டான். தன்னுயிருக்கும் மேலாகத் தன் மனைவியை நேசிக்கும் கணவனின் அன்பு, ஸ்ரீதரனை ப்ரமிக்கச் செய்தது.

படுத்துள்ள நோயாளியோ, சற்று ப்ரக்ஞை வந்த சமயத்தில், முதல் முதல் தன் கணவனின் இரு கரங்களையும் சேர்த்துப் பிடித்து, முகத்திலும், இதயத்திலும், தலையிலும் பதித்துக் கொண்டு கண்ணீர் பெருக, “ஸ்வாமீ! நான் கொடுத்து வைத்தது இவ்வளவுதான். வருத்தப் படாதீர்கள்… துரத்ருஷ்டப் பிண்டம்! பிறக்கும் போதே மூதேவி போல் வந்து, தாயை உருட்டி விட்டது சனியன்!… என்று உலகத்தில் சொல்வது போல், நம் கண்மணியைச் சொல்லாதீர்கள். அவளை அறிவுச் சுடராய், அன்புப் பதுமையாய் வளர்த்து, வ்ருத்திக்குக் கொண்டு வாருங்கள். இவளுக்காக, நீங்கள் உங்கள் வாழ்நாளை சன்யாசியாய்க் கழிக்க வேண்டாம். உங்கள் மனத்திற்கிசைந்த மங்கையை மணந்து கொண்டு, இருவரும் இந்த அனாதை உருவத்தைக் காப்பாற்றுங்கள். “நீ சந்தோஷமாக வாழ வேண்டும்; அதுதான் என் ப்ரார்த்தனை”… என்று நிமிடத்திற்கு நிமிடம் சொல்வீர்களே! அத்தகைய சந்தோஷம் எனக்கு… என் ஆத்மாவுக்கு… நிரந்தரமாய் அளிப்பதாயின், இந்த சிசுவை நிராகரிக்காமல் வளர்த்து, உலகம் போற்றும் முறையில் ப்ரகாசிக்கச் செய்யுங்கள்!…” என்று சொல்வதற்குள், மறுபடியும் மயக்கம் மூடி விட்டது.

இந்தக் கண்ணராவிக் காட்சியினால், ஸ்ரீதரனின் உள்ளம் உருகியது எனினும், “உம்!... இத்தகைய ஆழமான அன்பை என்னப்பன் கீதாசாரியன் மீது வைத்தால், எத்தனை சிறப்பாக இருக்கலாம்! அளப்பரிய ஆனந்தத்துடன் வாழலாமே! கவலையே நிறைந்த கடல் போல் கொந்தளிக்கும் இதயம், சாந்தியின் சிகரத்தில் உல்லாஸமாய்ப் பறக்கலாமே! என்னப்பன் மீது இதயத்தை வைத்து விட்டால், அது சாமான்ய செய்கையையாசெய்யும்?

“குலம்தரும் செல்வம் தந்திடும் அடியார்
படுதுய ராயின வெல்லாம்
 நிலந்தரம் செய்யும் நீள்விசும் பருளும்
அருளொடு பெருநில மளிக்கும்
 வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்ற
தாயினு மாயின செய்யும்
 நலந்தரும் சொல்லை நான்கண்டு கொண்டேன்
நாராயணா வென்னும் நாமம்”

இத்தனையும் கொடுத்து ரட்சிக்கும் நாம மகிமையை உலகம் எப்போதுதான் உணர்ந்து நல்வழிப்படும்?” என்று தன்னை மறந்த நிலையில் இவன் நினைக்கையில், இந்த நினைப்பைக் கிழித்துச் சிதறவடிக்கும் பீரங்கி த்வனியில் நோயாளியின் தாயார், “பாழுங் கடவுளுக்குக் கண்ணில்லையா? நாசமாய்ப் போன தெய்வம் எங்கே ஒழிந்து போய் விட்டது? தெய்வமும் இல்லை… தேவாதியும் இல்லை… எல்லாம் வெறும் புரட்டல்! சாமியாவது பூதமாவது? சாமி இருப்பது உண்மையாயின், என் கண்மணியைத்தான் கொள்ளை கொண்டு போகத் துணிவானா?… அவன் கோவிலிடிய! அவன் தலையில் இடி விழ!…” என்று, அப்பப்ப!… கர்ண கடூரமான வார்த்தைகளால், தன்னுடைய உள்ளத்துடிப்பை, எல்லையற்ற துக்கத்தின் பரிபவத்தை, தாங்காது கத்தியவாறு சொல்வதைக் கேட்டு, ஸ்ரீதரனின் இதயத்தில் செம்மட்டியாலடிப்பது போல் வேதனை உண்டாகியது… “ஐயோ! அறியாமையே! இதுதான் ப்ரபஞ்ச லீலையின் காட்சி போலும்!” என்று மனத்தில் வெறுப்புடன், மறுபடியும் நோயாளிக்குத் தன் சாமர்த்யம் பூராவும் காட்டிச் சிகிச்சை செய்ய வாரம்பித்தான்.

அதே சமயம், உலகமே அறியாத பச்சைக் குழந்தை பரிதாபகரமாய், ஒரு மூலையில் சீந்துவாரற்றுக் கிடக்கும் கோரக் காட்சியைக் காண, அது ஒருபுறம் பச்சாத்தாபத்தை உண்டாக்கியது. டாக்டர் துளஸியைப் பார்த்து, “டாக்டர்! இந்தக் குழந்தையைக் கவனித்துப் படுக்கையில் போடுங்கள். இப்படிக் கிடந்தால் சீதளம் மூடி விடுமே” என்றான்.

அங்குள்ள சில பெண்கள், “ஆமாம்! சீதளம் மூடித்தான் போகட்டுமே! பிறக்கும் போதே, தாயை உருட்டி விழுங்கி விட்டு, இப்பீடை எதற்கு வாழ வேண்டும் தொலையட்டுமே!'”… என்றார்கள். துளஸிபாய் குழந்தைக்குச் செய்ய வேண்டுவதைச் செய்து, தனிப் படுக்கையில் படுக்க வைத்துத் தேனை வாயில் தடவினாள்.

என்ன ஆச்சரியம்! தேனை நொட்டை கொட்டி, அந்தப் பச்சைக் குழந்தை சுவைத்துச் சாப்பிடும் அழகைக் கண்டு, உள்ளத்தில் எங்குமில்லாத ஒரு நூதன இன்பம் ஸ்ரீதரனுக்கும், துளஸிக்கும் உண்டாகியது… அன்று தன் வேலை சகலத்தையும் நிறுத்தி விட்டு, இங்கேயே இரவு வரையில் ஸ்ரீதரன் தங்கியிருந்து செய்த சிகிச்சையின் பயனாலும், கடவுளின் கருணையினாலும் நோயாளிக்குச் சிறுகச் சிறுக குணம் ஏற்பட்டு, நல்ல குறிகள் காண்பதையறிந்த டாக்டர்களின் இதயங்கள் பூரித்தன!

இரவு வெகு நேரம் வரையில், ஸ்ரீதரன் வீட்டுக்கு வரவில்லை. இங்கேயே இருந்து நிமிடத்திற்கு நிமிடம் கவனித்துப் பின், இனி உயிருக்கு பயமில்லை என்று தோன்றிய பிறகே, ஸ்ரீதரன் வீட்டிற்குக் கிளம்பினான். துளஸிபாயும், நல்ல தேர்ந்த நர்ஸைப் பக்கத்தில் இருந்து கவனிக்கும்படிச் சொல்லி விட்டுக் கிளம்பினாள்.

அந்தம்மாளுக்குக் கார் கிடையாது. ஆகையாலும், காலம் அகாலமாகி விட்டதாலும், ஸ்ரீதரன் தானே அவளைக் கொண்டு வீட்டில் விட்டு விடுவதாயும், கூட வரும்படியாயும் கூப்பிட்டான்.

என்ன உலக விசித்திரம்! சற்று நேரத்திற்கு முன்பு, உலகமே இருண்டு போய்த் துக்கக் கடலில் மிதந்து தவிப்பது போல், துள்ளிக் கொண்டிருந்தவர்களான நோயாளியின் தாயார், அத்தை முதலிய பெண்கள், தங்கள் மகளுக்குச் சற்று குணமாகி வருவதைக் கண்டு, எத்தனை பொங்கிப் பூரிக்கலாமோ, அத்தனையும் பூரித்தார்கள்! முதலில் கரை காணாத துக்கம்!… பிறகு நிகரிலாத சந்தோஷம்!

அதே சமயம், இந்த இரு டாக்டர்களும் சேர்ந்து போவதாகப் பேசிக் கொள்வதைக் கண்டதும், குபீரென்று கள்ளப் பார்வையும், வம்புப் பேச்சும், அநியாய எண்ணத்துடன் கூடிய வித்யாஸ நினைப்பும் உண்டாகி, குசமசவென்று பேசிக் கொள்வதையும் கூர்மையாக ஸ்ரீதரன் கவனித்துத் தனக்குள் வியப்புற்றான்.

“மக்களின் உணர்ச்சி இத்தகைய பச்சோந்தியைப் போன்றதா? துக்கத்தில் துடித்துச் சந்தோஷத்தில் திளைக்கும் போது, வம்புக்கும், கள்ளப் பேச்சுக்கும் கூட, அதே மனத்தில் எப்படித்தான் இடம் கிடைக்கின்றதோ? ஆகா! ஆச்சரியத்திலும் ஆச்சரியமல்லவா? உலகமே! நீ எத்தனை விதமான விசித்திரங்களைத்தான் கண்டு வியக்கிறாய்! உனக்கு சலிப்போ, வெறுப்போ ஒரு உணர்ச்சியும் இல்லையா?… பச்சைக் குழந்தையைப் போல் நீயும் இருக்கிறாயல்லவா? உன்னைப் பார்த்துக் கற்றுக் கொள்ள வேண்டியது எத்தனை உயர்ந்த லட்சியங்கள் இருக்கின்றன?”… என்று தனக்குள் எண்ணியபடி காரில் ஏறினான். பின் ஸீட்டில் துளஸிபாயும், வெகு வணக்கமாய் மரியாதையாய் உட்கார்ந்தாள்… "டாக்டர்! இந்த பேஷண்டிடம் நான் வெகுவாய்ப் பயந்து விட்டேன். நம்பிக்கை இழந்து போய், நடுங்கும் சமயம் பகவான் உங்களைக் காட்டி, என் கவலையைத் தீர்த்து வைத்தார்; உங்களுக்கு எப்படி நான் வந்தனம் செய்வது என்றே தெரியவில்லை… கடவுள் உங்களுக்குச் சகல மங்களங்களையும் கொடுத்து ரக்ஷிக்க வேண்டுகிறேன்” என்றாள்.

இதைக் கேட்ட ஸ்ரீதரன் சிரித்துக்கொண்டே, “அம்மணீ! இதெல்லாம் என்ன வழக்கம்? எனக்கு இந்த முகஸ்துதியோ, வீண் ஜம்பமோ பிடிக்கிறதே இல்லை. மனிதர்களுக்கு மனிதர் உதவி செய்வது ஒரு கடமையில் சேர்ந்திருக்கையில், இதற்குத் தோத்திரம் எதற்கு?…”

துளஸி:-டாக்டர் ! இம்மாதிரி சொல்கிறவர்கள், நூற்றுக்கு ஒருவர் கூட கிடைப்பதில்லை! முற்றுந் துறந்த முனிவராக இருந்தால் கூட, வெளி ஜம்பத்தில் நாட்டமும், முகஸ்துதியில் அடங்காத ஆசையும், தங்கள் புகைப்படங்களைப் பல பத்ரிகைகளிலும், புத்தகங்களிலும், துண்டு விளம்பரங்களிலும் ப்ரசுரிக்கும் மகத்தான விருப்பமும், விடாமல் இருந்து வருவதை நாம் ப்ரத்யட்சமாய்ப் பார்க்கவில்லையா? பாரபட்சமாய்ச் சிலரைப் பற்றிப் புகழ்ந்து பேசுவதும், சிலரைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டிய சந்தர்ப்பமும், கடமையும் இருப்பினும், அதை வேண்டுமென்று விட்டு விடுவதும் பெருமையாகக் கொள்கிறார்கள்! இவைகளைப் போல், உலகத்தில் பதினாயிரக் கணக்கில் நாம் பார்க்கிறோம்…

ஸ்ரீதர:- அம்மணீ! உலகம் ஒரு பெரிய போதனை சாலையல்லவா? அதனிடம் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள் அனந்தம் இருக்கின்றன. அவைகளைப் பொறுக்கி எடுத்து நாம் கற்றுக் கொண்டால், எத்தனையோ உபயோகமாயிருக்கும். பெரியோர் இவைகளை அறியாமலா, “போற்றினும் போற்றுவர் பொருள் கொடாவிடில்  தூற்றினும் தூற்றுவர் சொன்ன சொற்களை  மாற்றினும் மாற்றுவர் வன்க ணாளர்கள்  கூற்றினும் கொடியவர் புலவ ராவரே” என்று பாடியிருக்கிறார்கள்? பொருள் கொடுப்பதாயின், புகழ்ந்து போற்றுவார்கள். இல்லையேல், சகலமும் இல்லையாகி விடுகிறது! அது மட்டுமல்ல; மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இம்மூன்று ஆசைகளையும் விட்டதாக மேல் பூச்சு பூசிவிட்டுப் பெண்ணாசையை வேண்டுமாயின் ஓரளவு மறந்து, மற்ற இரண்டு ஆசைக்கும் அடிமையாகும் குணமுடைய சாமியார்கள், நீங்கள் சொல்வது போல், விளம்பரத்திற்குதானே ஆசைப்படுவார்கள்! உண்மையில் சொல்கிறேன். சாமியார்களைக் கண்டாலே, எனக்கு அவ்வளவு பிடிப்பதில்லை. நூற்றுக்கு 99 பேர்கள் போலிச் சாமியார்கள்தான். வெளி வேஷத்தைக் கண்டு உலகம் மயங்குகிறது.

துளஸி:-டாக்டர்! சாமியார்கள் விஷயத்தில் என் அபிப்ராயமும், உங்கள் அபிப்ராயமும் அப்படியே இருக்கிறதே! என் தாயாருக்குச் சாமியார்கள் என்றால், சற்று பக்தி உண்டு. ஆனால், எனக்கு பக்தியும் இல்லை. அவர்களிடம் நம்பிக்கையுமில்லை. இதென்ன காரணமோ, எனக்கே புரியவில்லை.

ஸ்ரீதர்:- தாயே ! புரியாத மர்மங்கள். சிலவற்றை அறிந்து, உலகமும் உலக மக்களும் பாவனமடைகிறார்கள். பின்னும் சிலவற்றால், நாசமடைகின்றார்கள். இதைப் பற்றி விளக்கிப் பேசினால், பயித்தியக்காரன் என்றும், ஏதோ உளறுகின்றான் என்றும் ஜனங்கள் பரிகஸிக்கிறார்கள். ஏன்? என்னையே பலர் பரிகஸித்துப் பேசுவதை நான் அறியாமலில்லை. வீண் வம்புக்கும், விதண்டாவாதத்திற்கும், உலகத்தை நாசமாக்கும் ஆசாபாசங்களுக்கும் மக்கள் தயங்குவதில்லை! அத்தனை தூரம் போவானேன்? இப்போது நாம் பார்த்த இடத்தில், எத்தனை வித உணர்ச்சிகளை ஒரு க்ஷணத்தில், ஒரே மனிதரிடம் பார்த்தோம். உங்களை நான் காரில் வரும்படி அழைத்ததும், நீங்கள் வந்து ஏறினதும் கண்ட அதே இடத்தில், அதே மனிதர்கள் பேசியதையும், உணர்ச்சி மாறியதையும் நீங்கள் கவனிக்கவில்லையா?… இதுதான் உலகானுபவத்தைப் போதிக்கும் பாடசாலை என்று சொன்னேன் —என்ற போது, துளஸிபாயின் வீடு வந்து விட்டது.

துளஸிபாய் மரியாதையாய் இறங்கித் தனது வந்தனத்தை மறுபடியும் கூறிப் பின், “டாக்டர்! தயவு செய்து நாளைக்கும் வந்து பார்க்க வேண்டும்” என்றாள். “நீங்கள் சொன்னாலும், சொல்லா விட்டாலும், அந்தப் பேஷண்டைப் பார்க்காமலிருக்க மாட்டேன். அவள் தன் குழந்தையை மடியில் வைத்துக் கொஞ்சவும், அதை அவள் கணவன் கண்டு பூரிக்கவும் அவைகளைக் கண்டு பகவான் சந்தோஷப்படும் வரையில் அங்கு வருவேன்… குட் நைட்!”… என்று கூறி விட்டுக் காரைத் திருப்பினான். காற்றுப் போல் காரும் பறந்தது!