சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 7

7

முதலில் கடிதத்தை எப்படியாவது சின்ன மகனிடமிருந்து வாங்கிக் கிழித்துப் போட்டாலன்றி, கமலவேணிக்கு நித்திரையே கொள்ளாது போய்த் தவிக்கிறாள். “யாரோ தாம்பூலம் வைத்து அழைத்தது போல், இந்த விருந்தாளியை யார் வரச் சொல்லியது? எனக்கு தர்ம சங்கடமாகி விட்டதே?" என்று கவலையுடன் படுத்தும் புரளுகிறாள். வந்த மனுஷியோ, இந்தம்மாளுக்கு ஏதோ உடம்பின் பாதைதான் தாங்காமல் தவிக்கிறாளோ என்று எண்ணி, “கமலம்! ஏம்மா இப்படி புரளுகிறாய்? உடம்புக்கு என்ன செய்கிறது? ஸ்ரீதரனும் இன்னும் வரக் காணவில்லையே! வேறு எந்த டாக்டரையாவது கூப்பிடச் சொல்லட்டுமா?” என்று அந்தம்மாள் கேட்ட போது, கமலவேணியம்மாளுக்குத் தாங்க மாட்டாத எரிச்சலே வந்தது… இனித் தான் கை,கால்களைக் கூட அசைக்காமல் அப்படியே படுத்திருந்து தூங்கி விட்டது போல் நடித்தால்தான், இந்தம்மாளும் நம்மைச் சும்மா விடுவாள் போலிருக்கிறது… என்று எண்ணியபடியே, “அம்மணீ ! எனக்குத் தூக்கம் அஸாத்யமாய் வருகிறது. என்னைத் தொந்தரை செய்யாதீர்கள். ஸ்ரீதரன் எப்போதுமே நேரங் கழித்துத்தான் வருவான். நீங்கள் ஹாலிலுள்ள மற்றொரு விடுதியில் படுத்துக் கொள்ளுங்கள். எனக்குக் கூட யாராவது இருந்தாலே, தூக்கம் வராது. நீங்கள் பயப்பட வேண்டாம். எனக்கு எத்தகைய உடம்பும் இல்லை.” என்று அழுத்தமாய்க் கூறி விட்டுப் போர்வையை இழுத்துப் போர்த்துக் கொண்டு படுத்தாள்.

மேல்கொண்டு ஏதும் பதில் சொல்ல முடியாமல், அந்தம்மாள் வேறு அறைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். ஆனால் தூக்கம் என்னவோ பிடிக்கவில்லை. அரை மணிக்கொரு தரம் எழுந்து வந்து, கமலவேணியைப் பார்த்துக் கொள்வதில் நாட்டமாயிருந்தாள்.

மணி 11 அடித்தது. ஸ்ரீதரன் லேடீ டாக்டரை இறக்கி விட்டு, நேரே வீட்டிற்கு வந்ததும், தாயாரின் விடுதிக்கு ஆவலே வடிவாய் ஓடி வந்தான். கமலவேணி தூங்குவது போல் படுத்திருந்ததால், சற்று தூர நின்று பார்த்து விட்டு “சரி!… நல்ல தூக்கமே சிறந்த அவுஷதமாகும். பூர்ண ஓய்வும் மிகவும் நல்லதுதான்” என்று எண்ணியபடியே சென்றான்.

தன் மகன் வந்து விட்டான் என்பதையறிந்த கமலவேணியும், பேசாமல் மவுனமே ஸாதித்தாள். அவளுடைய எண்ணம் பூராவும் அக்கடிதத்தின் மீது இருந்ததேயன்ன்றி, தூக்கமும் பிடிக்கவில்லை. எப்படியும் கடிதம் சின்ன மகனிடந்தான் இருக்க வேண்டுமன்றி, எங்கும் போயிருக்க முடியாது. இக்கடிதத்தை அவன் அசட்டுத்தனமாய்ப் பிறருக்குக் காட்டி, நம் குடும்பத்தின் குட்டை வெளியிடுவதற்கு முன்பு இதை எப்படியாவது நாம் கொண்டு வந்து விட வேண்டும் என்ற அதிதீவிரமான எண்ணம் இதயத்தில் புயலடிப்பதால், அந்த வேதனையும், நினைவும் ஒன்று கூடி, எப்படியோ ஒரு அசுர தைரியத்தைக் கொடுத்தது.

கடவுளை எல்லாம் வேண்டிக் கொண்டாள். மெல்ல எழுந்து, ஒரு கறுப்புப் போர்வையை எடுத்துத், தன் கால் முதல் தலை வரையில் மூடி முக்காடிட்டுக் கொண்டு, அஸல் பயங்கரக் கள்ளனோ ? அன்றி பேயோ! பிசாசோ! என்று நடுங்கும்படியான விதம் மூடிக் கொண்டு, அவ்விடத்தை விட்டு சின்ன மகன் படுத்துள்ள விடுதிக்குச் சென்றாள். மணி சரியாக 12 அடிக்கும் சமயமாயிருந்தது. தாமோதரன் அயர்ந்து தூங்குவதைக் கவனித்தாள். ஓசை செய்யாமல், அவனுடைய ஜேபியிலிருந்து பெட்டி சாவியை எடுத்துக் கொண்டாள். தன் வாழ்நாளில், என்றுமே இத்தகைய செய்கையைச் செய்தறியாதவளாதலால், சரீரம் கிடுகிடு என்று நடுங்குகிறது.. எப்படியாவது கடிதத்தை எடுத்துக் கொண்டு போய் விட்டால் போதும்… என்கிற எண்ணத்துடன் பெட்டியை ஓசை செய்யாமல் திறந்து, சத்தம் செய்யாமல் கடிதங்களைப் புரட்டிப் பார்த்தாள்.

முதல் முதல் பார்க்கும் போதே, இவள் நாடி வந்த கடிதம் கிடைத்து விட்டதோடு, இன்னும் இரண்டு மூன்று கடிதங்களும் அதில் பத்திரப்படுத்தி இருந்ததையும் எடுத்துக் கொண்டு, பெட்டியை ஓசை செய்யாமல் பூட்டி விட்டுச் சாவியைத் தலையணையின் மீது வைக்கும் போது, தாமோதரன் சற்றுப் புரண்டு படுத்தவன், தற்செயலாகக் கண்ணை, விழித்துப்பார்த்தான்.

கறுப்பு முகமூடி போன்று கால் முதல் தலை வரையில் போர்த்தியபடி உருவம் நிற்பதைக் கண்டதும், குடல் நடுங்கிப் போய் தாங்க முடியாத பயத்துடன், “கூ…கூ”வென்று வாய் குழறி, அலறிப் புடைத்துக் கொண்டு எழுந்தான்.

தான் அகப்பட்டுக் கொள்ளாமல் எப்படியாவது ஓடி விட வேண்டுமே என்ற பயத்துடன், கடுமையான பயங்கரம் நிறைந்த த்வனியில் சத்தம் செய்து, டுர்ர்ர்… கர்ர்ர்… என்று கூவிக் கொண்டே கம்பிகள் இல்லாத ஜன்னலால் ஏறிக் குதித்து, அரை நிமிஷத்தில் தன்னறைக்கு ஓடி வந்து, கறுப்புப் போர்வையைத் தன் படுக்கைக்குள் மறைத்து விட்டுச் சடக்கென்று படுத்து விட்டாள்!

ஒவ்வொருவருடைய தனி விடுதிக்கும் இடையில் வெகு தூரம் இருப்பதால், இவன் கூக்குரலையும், குளறலையும் கேட்டு வேலைக்காரன்தான் முதலில் வந்து “என்ன! என்ன!” என்று கேட்டுப் பதறினான். அதே சமயம், கறுப்புப் போர்வையில் மூடப்பட்ட உருவம் கர்ஜித்தபடியே, ஜன்னலால் குதிப்பதைப் பார்த்த இவனும் சேர்ந்து “திருடன்! திருடன் ! பேயோ ! பிசாசோ!”… என்று ப்ரமாதமாய்க் கத்தினான். எல்லோரும் விழித்துக் கொண்டு ஒரே ஒட்டமாய், “என்ன! என்ன விஷயம்? ஒன்றும் புரியவில்லையே?”… என்று கூட்டமாக ஓடி வந்தார்கள். கமலவேணியம்மாளும், வியர்க்க விறுவிறுக்க, “என்னடா தாமோதரா?… என்னடா! என்ன நடந்தது?”… என்று மகனைக் கெட்டியாய்ப் பிடித்துக் கொண்டு கேட்டாள்.

இதற்குள் வேலைக்காரர்கள் பங்களா முற்றும் சுற்றிப் பார்த்தனர். எங்கும் போட்ட கதவு போட்டபடியே இருக்கிறது. திருடனாயிருந்தால், எப்படியாவது கதவைத் திறந்து கொண்டோ, கன்னம் வைத்தோ வந்திருக்க வேண்டும். ஏதாவது பொருள் களவு போயிருக்க வேண்டும். சகல சாமான்களும் அப்படியே இருப்பதால் இது நிச்சயமாய் ஏதோ பேயோ, பிசாசோ, முனீச்வரனோ, காட்டேரியோ ஏதோ ஒரு துர்த்தேவதைதான் வந்திருக்க வேண்டும்—என்று வேலைக்காரர்கள் தீர்மானமாய் முற்றுப்புள்ளி வைத்துச் சொல்லி ஊர்ஜிதப்படுத்தியதோடு, “அம்மா! புழக்கடை சாமிக்குப் பொங்கலிட்டு பூசை போட்றேன்னு வேண்டிக்கங்க!… சின்னையாவுக்கு மந்திரக்காரனைக் கூப்பிட்டு மந்திரிச்சுடுங்க!”…என்று அபிப்பிராயம் வேறு சொல்லத் தொடங்கினார்கள்.

ஸ்ரீதரனும் வீடு பூராவும், ஒரு முறை சுற்றிப் பார்த்து விட்டு, நிச்சமாய்க் கள்ளனில்லை என்று தெரிந்ததால், தம்பியிடம் வந்து அவனைச் சமாதானப்படுத்தினான். “டேய்! பேயாவது, பிசாசாவது?… இதெல்லாம் சுத்தப் பொய்ப் புரட்டு. மனிதனைப் பார்த்து பிசாசு பயப்பட்டு நடுங்கும் என்பது ப்ரத்யட்சம். பகவானையே சதா நம்பியுள்ள எந்த மனிதனையும், பிசாசு மட்டுமல்ல, எமன் கூட கிட்டே அணுக மாட்டான். பக்தி என்ற பெரிய ரட்சை ஒவ்வொரு மனிதனையும் கட்டிக் காக்கும் தம்பீ! காறித் துப்பி விட்டு, முகத்தை நன்றாகக் கழுவிக் கொண்டு வந்து பகவானை ஸேவித்து, ப்ரார்த்தனை செய்து விட்டுப் படுத்துக் கொள்; பயப்படாதே. பகவன்னாமத்தை விட சிறந்த துணை வேறெதுவுமே இல்லை” என்று தைரியங் கூறித் தானே அழைத்துச் சென்று, முகத்தில் ஜில்லென்று குளிர்ந்த ஜலத்தை விட்டுக் கழுவச் செய்து, அழைத்து வந்து பூஜாக்ரகத்தருகில் சென்று, அவனை வணங்கும்படியாகச் செய்து, “தம்பீ! பயப்படாதே! பயத்தை எல்லாம் போக்கக் கூடிய சர்வசக்தனை மனதாரத் துதித்து வணங்கு. ப்ரார்த்தனை செய்து கொள்!… வா!… உடல் நடுங்க வேண்டாம்! ”—என்று, தானே சகலத்தையும் செய்து, தம்பியை அழைத்து வந்து படுக்க வைத்தான்.

பாவம்! ஆடு திருடிய கள்ளன் போன்றும், திருடனுக்குத் தேள் கொட்டியது போலவும், கமலவேணியம்மாள் தான் செய்து விட்ட காரியத்தின் விளைவால் நேர்ந்துள்ள நிலைமையைக் கண்டு தவிக்கிறாள். சொல்லவும் முடியாது, சமாளிக்கவும் முடியாது தத்தளிக்கிறாள். “குடும்பத்தின் கண்ணியம் குலையாதிருப்பதற்காகச் செய்யப் புகுந்த செய்கை இப்படியாகி விட்டதே, இதனால் மகனுக்கு ஒன்றுமில்லாதிருக்க வேண்டுமே!" என்று உள்ளுக்குள் நடுங்குகிறது.

தாமோதரனுக்கு உண்மையில் இதயத்தில் ஒரு பயங்கரமும், நடுக்கலும் உண்டாகி, மவுனத்திலேயே ஆழ்த்தி விட்டது. யாருடனும் பேசவில்லை. ப்ரமை பிடித்தவன் போலவே, படுக்கையில் படுத்தான். அண்ணன் சொல்லும் வார்த்தைகளிலும் நம்பிக்கை கொள்ளவில்லை. ஆனால், எதிர்த்துப் புறக்கணித்துப் பேசவும் தோன்றவில்லை. சகலமான கதவுகளும் சாத்திப் பூட்டியபடி இருக்கையில், என் படுக்கையருகில் மட்டும் அந்தப் பயங்கரக் கருப்புக் கவசம் போன்ற போர்வையைப் போர்த்த பிசாசு எப்படி வரும்? எதற்காக வரும்? இது வரையில், இந்தப் பக்கத்தில் பிசாசு என்கிற பெயரைக் கூடக் கேட்டதில்லையே. இன்று இதென்ன வேடிக்கையாக இருக்கும்?—என்கிற எண்ணமும், கருப்பு உருவமுமே அவன் மனக் கண்ணில் தோன்றி வட்டமிட்டுக் கொண்டிருந்தன.

கமலவேணியம்மாளின் உடல் நிலையின் பயங்கரம் மறந்தே போய், அவள் சாதாரண மனுஷியாகி, தாமோதரனின் பக்கலில் வெகு நேரம் உட்கார்ந்திருந்து, ஏதேதோ தேறுதல்கள் சொல்கிறாளேயன்றி, மனத்திற்குள் சங்கடம் செய்கிறது. தன் செய்கையே அவளைக் குத்திக் காட்டி ஏதோ வருத்துகிறது. “நான்தான் அப்படிச் செய்தேன்” என்று சொல்லி, அவன் பயத்தைத் தீர்த்து விடலாமா?… “இந்த பயத்தின் ப்ராந்தியால், ஏதாவது ஆபத்தாக முடிந்து விடுமோ” என்றும் தோன்றுகிறது. அம்மாதிரி சொல்லி விட்டால், தன் மீது அளவற்ற ஆத்திரமும், த்வேஷமும் உண்டாகி விட்டால், என்ன செய்வது? இதையிப்படியே அடக்கி விடுவதுதான் சரியான காரியம்… என்று இவள் தனக்குள் எண்ணமிட்டவாறு, உட்கார்ந்திருக்கிறாள். மகன் நிம்மதியாய்த் தூங்கிய பிறகே, தான் போக வேண்டும் என்று முடிவு செய்து கொண்டாள்; ஸ்ரீதரன் எத்தனை சொல்லியும், அவள் போக மறுத்து விட்டதால், அவன் தன் விடுதிக்குச் சென்றான். கடிகாரமும் தன் கடமையில் கண்ணாய் ஓடிக் கொண்டு, மணி மூன்றடித்தது!