சாந்தியின் சிகரம்/அத்தியாயம் 9

9

ன் விடுதிக்குச் சென்ற ஸ்ரீதரனுக்கு மனம் நிம்மதியே அடையவில்லை; ஏற்கெனவே, தன் தொழிலின் மூலம் உண்டாகிய அலுப்புடன், இந்த தொந்தரவுகளும் சேர்ந்து தலையில் பெரிய பாரமாகத் தோன்றியதால், இருக்கை கொள்ளாமல் தவித்தான். உயிருக்கே மன்றாடிக் கொண்டுள்ள சில பேஷண்டுகளை நினைக்க பயம் வேறு நடுங்கியது.

நேரே சென்று, குளிர்ந்த ஜலத்தில் நன்றாக ஸ்நானம் செய்தான். காலை நேரத்தில் செய்ய வேண்டிய பூஜையைச் செய்யாமல், அவன் தொழிலுக்குப் புறப்படுவதே இல்லை. அதையொரு வ்ருதமாகக் கொண்டிருப்பவனாதலால், தவறாது நடத்தி வருவது போல், அன்றும் பூஜையை முடித்துக் கொண்டு, நேரே தன் தம்பியின் விடுதிக்குச் சென்றான்.

அப்போதுதான் கண் விழித்தவாறு, இரவு நடந்த விஷயத்தை எண்ணி, எண்ணி ஒன்றும் விளங்காத குழப்பத்துடன் படுத்திருந்தான். அதோடு இரவு உண்டாகிய அதிர்ச்சியினால், சிறிது ஜுரமும், தலைவலியும் உண்டாகியிருந்ததால், சோர்ந்து காணப்பட்டான். ஸ்ரீதரன் சிரித்தபடியே உள்ளே சென்று, “தம்பீ! சிறிது நேரமாவது நன்றாகத் தூங்கினாய் என்று தெரிந்தது. ஏனெனில் நான் இரண்டு, மூன்று தரம் வந்து பார்த்தேன். அயர்ந்து தூங்குவதைக் கண்டு, சந்தோஷத்துடன் சென்றேன். (அன்புடன் தம்பியைத் தடவிப் பார்க்கும் போது, சிறிது ஜூரமிருப்பதையறிந்து)… அட அசடே! இந்த அல்ப விஷயத்திற்கா உனக்கு ஜூரம் வந்து விட்டது… நான் அப்போதே சந்தேகித்தேன்; அதே மாதிரிதான் ஆய் விட்டது. இதோ பார் தம்பீ! முக்யமான விஷயத்தைச் சொல்லி, உன் பயத்தை வேரறுத்து, உன்னை மகிழ்விக்கவே வந்தேன். எழுந்து உட்காரு தம்பீ! நேற்றிரவு வந்தது பேயுமல்ல, பிசாசுமல்ல; நம்மைப் போன்ற இரண்டு கால் மனிதன்தான் என்பதை, நான் நேற்றிரவு இந்த சம்பவம் நிகழ்ந்த நிசிக்குப் பிறகு தூங்காமல், கண்டு பிடித்து விட்டுத்தான் மறு காரியம் செய்தேன்.”

தம்பி அலறியவாறு, “ஆ… கண்டு பிடித்து விட்டாயா! பேய், பிசாசு, முனீச்வரன் இல்லையா!… திருடன்தானா!” என்று வெகு ஆத்திரத்துடன் கேட்டான்.

ஸ்ரீதர்:- ஆமாம் தம்பீ! ஆமாம். திருடன் என்றால், வெறும் கொள்ளையடிக்கும் சோதாத் திருடனல்ல. ஐயோ பாவம் என்று நாம் பரிதாபப் படக்கூடிய விதம் அனாதையான, துரதிர்ஷ்டப் பிண்டமான உருவம். பகிரங்கமாய் வருவதற்குப் பயந்து…

தம்பி:- என்ன! என்ன! நீ சொல்வதே எனக்குப் புரியவில்லையே அண்ணா… துரதிருஷ்டப் பிண்டமாவது, அனாதையாவது…

ஸ்ரீத:- சொல்லி முடிப்பதற்குள் அவசரப்படுகிறாயே! அனாதையாயும், நிர்க்கதியாயும் தெருவில் நின்று தவிக்கச் செய்த மகத்தான பாதகம் நம்மையே சார்ந்தது தம்பீ! நம் பிதாவைப் பற்றி, உனக்கு விவரம் எதுவும் அதிகம் தெரியாது. அந்த பாபாத்மாவின் அடாத செய்கைக்குப் பலியாகிப் பாழாகிய ஆத்மாக்கள் எத்தனையோ இருக்கின்றன. அதில் ஒருத்தி, நியாயத்திற்கு பயந்து, தானே மதி இழந்து கெட்டு விட்ட மகா குற்றத்தை உணர்ந்து வருந்தி, பிழைக்க வழியின்றி, பிச்சைக்காரியாகி விட்டாள் பாவம்! அந்தக் கொடுமையில் வ்யாதிக்காரியாயும் ஆகி விட்டதால், தனக்கு வயிறு வளர்க்க மார்க்கமே இல்லாது போய் விட்டதாம்.

என்னிடம் வந்து, ஏதாவது உதவி கோரித் தன் ஒரே பிள்ளையை வாழ வைக்கலாம் என்ற உணர்ச்சியுடன் வந்தாளாம். உன் விடுதி என்று தெரியாமல், உன்னிடம் வந்து விட்டாளாம். நீ போட்டக் கூச்சலில் பயந்து போய், நமது மோட்டார் லாயத்தில் பதுங்கிக் கொண்டிருந்தாள். அவளை நான் கண்டு பிடித்துக் கள்ளனென்று எண்ணி, போலீஸில் வைக்கத் தீர்மானித்தேன். அந்தம்மாள், அழுது கொண்டே, இந்த விஷயங்களைச் சொல்லி அப்பாவின் கடிதங்கள் சிலவற்றைக் காட்டிக் கண்ணீர் வடித்தாள்.

அதைக் கண்டதும், என் மனம் இளகி விட்டது. இனி, இம்மாதிரி அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்தால், போலீஸில் வைத்து விடுவேன், ஜாக்ரதை! என்று உஷார் படுத்தி விட்டு 100 ரூபாயைக் கொடுத்துத் துரத்தி விட்டு வந்தேன். உடனே, உன்னையும் அழைத்துக் காட்டும் பொருட்டு இங்கு அப்போதே ஓடி வந்தேன். நீ நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததால், எழுப்பக் கூடாதென்று போய் விட்டேன். இச்செய்தி நம் அமமாவுக்குக் கூட தெரியாது. இதை, அம்மாவிடம் நான் சொல்வதற்கு ப்ரியப்படவில்லை. என்னவிருப்பினும், அம்மா மிகவும் நொந்து போய், வாழ்க்கையில் கசப்பையே அனுபவித்தவள் பாவம்! இந்த விஷயத்தையறிந்தால், அப்பாவின் பழய நினைவுகளால் பாதிக்கப் படுவதோடு, அவருடைய அக்ரமத்தினால் இப்படி அனாதைகள் எத்தனை பேர்கள் இருக்கிறார்களோ! என்று இன்னும் இடிந்துப் போய் விடுவாள். ஆகையினால், நீயும் சொல்லாதே…

ஒரே வியப்புடன், “என்னது… அப்பாவின் சந்ததிகள் இப்படி வேறு இருக்கிறார்களா! இதை நான் இது வரையில் கேள்விப்பட்டதே இல்லையே… அவர்களா இப்படி கொள்ளைக்காரர்கள் போலும், பேய் பிசாசு போலும் வந்தது அண்ணா ! நீ இம்மாதிரி கழுதைகளுக்கு உதவி செய்வதென்று ஆரம்பித்தால், திவாலாக வேண்டியதுதான்…”

என்று ஆத்திரத்துடன் கூறுவதைத் தடுத்துச் சமாதானம் செய்து… “தம்பீ ! நமது தகப்பனாரின் அட்டூழியச் செய்கையின் பலனால், பாபப்பிண்டங்களாகி நாம் பரிதவிப்பதை விட, ஏதோ கஷ்டப்பட்டு அலையும் ஆத்மாக்களைக் காப்பாற்றினால், புண்ணியமாவது உண்டாகும் என்பதனால்தான் கொடுத்தனுப்பினேன்… அது கிடக்கட்டும் தம்பீ! நீ இனி, இந்த பிசாசு பயத்தை அடியோடு விட்டு விடு. நான் என் தொழில் நிமித்தமாய், மேல் நாடுகளுக்குச் சென்று வரலாம் என்று உத்தேசம்; அது எப்போது நேரிடுமோ, இன்னும் நாள் குறிக்கவில்லை. இதைப் பற்றி அம்மாவிடமும் சொல்லவில்லை. சொன்னால் என்னைப் பிரிவதற்கு வருந்தி, உத்திரவு கொடுக்க மறுப்பாள்; அதனால்தான் சொல்லவில்லை. இந்த அபிப்ராயத்தினால்தான், நான் விவாகம் செய்துக் கொள்ளவில்லை. இந்த காரணங்களையும் நான் அம்மாவிடம் சொல்ல விரும்பவில்லை. நான் முதலில் உனக்கு விவாகத்தைச் செய்து விட்டு, பொறுப்பு பூராவும் உன்னிடம் ஒப்பித்து விட்டு, நான் போகப் போகிறேன். இப்போ இவைகளை எல்லாம் தீர்மானமாய்ப் பேசி, முடிவு கட்டுவதற்குத்தான் வந்தேன். தெரியுமா! உன் விவாக விஷயத்தில், நான் தடையாய் குறுக்கே நிற்பதாயும் அல்லது கவனிப்பதே இல்லை என்றும் நீ எண்ணி இருக்கிறாய்! எனக்கத்தகைய எண்ணம் கனவிலும் இல்லை. உனக்கு விவாகத்தைச் செய்து, அதன் மூலம் நம் தாயாரின் மனம் மகிழ்ந்து, அவளுடைய துக்கத்தை மறந்து, இன்புற்றிருக்கச் செய்ய வேண்டும்.

தம்பீ! நான் பகிரங்கமாய்க் கேட்கிறேன். உனக்காக, அம்மாவைப் பெண் பார்க்கச் சொல்வதா! அன்றி நீயே

தற்காலத்து நாகரீகப்படிக்கு யாரையாவது குறி வைத்திருக்கிறாயா! அதையும் அம்மாவிடம் சொல்லி விடு. உடனே, நான் அதை முடித்து விட்டு, மறு காரியம் பார்க்கிறேன்… எனக்கு நேரமாகிறது. ஆஸ்பத்ரிக்குப் போக வேணும்… சாயங்காலம் நான் வந்து, மறுபடி உன்னைப் பார்க்கிறேன். இன்று நீ அதிகம் அலையாது, பூர்ண ஓய்வு எடுத்துக் கொண்டு, நன்றாக யோசனை செய்து முடிவு கூறு. இந்த பிசாசு விஷயம், பிசாசாகவே இருக்கட்டும். இந்த வெட்கக்கேடான விஷயத்தை வெளியில் சொல்லாதே” என்று மடமடவென்று கூறி விட்டு, நேரே தன் தொழிலை நோக்கிச் சென்றான்.

எந்தெந்த விஷயம், எப்படி எப்படி எல்லாம் மாறி எப்படி முடிந்தது! என்கிற வியப்பொரு புறம்; தன் பிதாவின் ஆதி லீலைகளால், இத்தகைய குடும்பம் வ்ருத்தியாகியிருப்பது உண்மையாயிருக்குமா! என்கிற ஆச்சரியம் ஒரு புறம். பலவிதமான குழப்பத்துடன் படுத்திருக்கும் தாமோதரனுக்கு ஒன்றுமே தோன்றவில்லை. தன் அண்ணன் சொல்லியதெல்லாம் உண்மையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி; என் விவாகத்தை முதலில் செய்வதற்கான வழி பிறந்ததே போதும் என்கிற எண்ணமும், ஆவலும் தலை தூக்கி நின்று, புதிய உணர்ச்சியைக் கொடுத்தது.

அதே நிலையில், ஏதேதோ எண்ணி கற்பனை உலகில் சஞ்சரிக்கும் போது, முதல் நாள் கண்டெடுத்தக் கடிதத்தின் நினைவு பளிச்சென்று வந்ததும், முதலில் பெட்டியைத் திறந்து பார்த்தான். அதே சமயம், இவனுக்கு ஒரே ஆனந்தத்தைக் கொடுக்கக் கூடிய உஷாவிடமிருந்து, கடிதத்தை ஒரு பையன் கொண்டு வந்து கொடுத்தான். உடனே நினைவு இதில் மாறி தாவி விட்டதால், பெட்டியை அப்படியே வைத்து விட்டு, இக்கடிதத்தைப் படிக்கவாரம்பித்தான்.

“அன்புள்ளள தாமூ! காற்றினும் கடிய வேகத்தில், இச்செய்தியை நான் உங்கள் வேலைக்காரர்கள் மூலம் அறிந்து, மிகவும் பயந்து நடுங்கிக் கவலைப்படுகிறேன். உங்கள் வீட்டில் நேற்றிரவு பிசாசு வந்து, உங்களை மிரட்டியதாம். உங்கள் வீடே அல்லகல்லோலமாகி விட்டதாம். அந்த பயங்கர அதிர்ச்சியினால், உங்களுக்குக் காய்ச்சல் கண்டிருக்கிறதாம். உங்கள் அண்ணன் கூட வந்து, தடபுடல் உபசாரம் செய்தாராம். இப்போது உங்களுக்கு உடம்பு எப்படியிருக்கிறது? எனக்கு அங்கு வந்து பார்க்க வேண்டுமென்று ஆசைதான்; ஆனால் இத்தனை நாட்கள் உங்கள் தாயார், அண்ணன், முதலியவர்கள் என்ன சொல்வார்களோ என்ற அச்சத்தினால் வராமலிருந்தேன். இப்போதோ, பிசாசு என்ற பதத்தைக் கேட்டதுமே, உடலே நடுங்குகிறது. ஆகையால், நான் இதை எழுதுகிறேன். நீங்கள் தயவு செய்து, இங்கே வந்து விடுங்கள். அந்த வீட்டுப் பக்கமே கொஞ்ச நாளைக்குப் போக வேண்டாம். இங்கேயே இருக்கலாம். அல்லது எங்காவது வெளியூர்களுக்குப் போய், சுற்றி விட்டு வரலாம். ஆகையால், உடனே வரவும். உங்கள் பரிய உஷாதேவி”

இதைப் படித்ததும் ஒரு முறை சிரித்துக் கொண்டான். என்ன அன்பு. எத்தனை உருக்கமாய் எழுதி, நம்மை அழைத்திருக்கிறாள்! உடனே நாம் நேரில் சென்று, இந்த ரகஸியத்தைச் சொல்லி விட்டு வர வேண்டும். எப்படி மறைக்கப் பார்த்தாலும், நமக்கு முன், வேலைக்காரர்கள் மூலம் புசல் போல் பரவி விட்டதே… என்று தனக்குள் எண்ணியபடி, சடக்கென்று வெளியே சென்று விட்டான். இப்புதிய உத்ஸாகத்தின் வேகத்தில், சகலத்தையும் மறந்து விட்டான் என்றால், மிகையாகாது. Script error: No such module "Custom rule".