2. செக்கிழுத்த செம்மல்
சிதம்பரனார்

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தமிழ் நாட்டின் பங்கு குறிப்பிடத் தகுந்ததாகும். அதிலும் செக்கிழுத்த செம்மல் வ.உ. சிதம்பரனார் பங்கு அளவிடற்கரியதாகும். அன்னிய ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்ததோடல்லாமல் அமைதியாகத் தமிழ் இலக்கியப் பணியினையும் ஆற்றிய பெருமை அவரைச் சாரும். தமிழார்வத்தில் தலைப்பட்டு நின்ற அவர் கடலில் கலம் செலுத்த நினைத்ததோடு நிலையான தமிழ்த் தொண்டினையும் ஆற்ற முனைந்தார். அந்நல்லுள்ளத்தின் பயனாகச் சில நற்பேறுகள் தமிழிற்கு வாய்த்தன எனலாம்.

வாழ்வு

பாண்டிநாட்டுச் சீமையில் ‘திக்கெலாம் புகழும் திருநெல்வேலி’ மாவட்டத்தில் ஒட்டப்பிடாரம் என்றோர் அமைதியான சிற்றூரில் வாழ்ந்தவர் கவிஞர் சிதம்பரம் பிள்ளை ஆவர். அவர் தம் பேரனாரே நம் பாராட்டிற் குரிய சிதம்பரனார் ஆவர். சிதம்பரனாரின் பெற்றோர் உலகநாத பிள்ளையும் பரமாயி அம்மையாரும் ஆவர். இவர் பிறந்தது 5-8-1872ல் ஆகும். இவருக்குத் திண்ணைப் பள்ளிக்கூட ஆசிரியராக வீரப்பெருமாள் அண்ணாவியாரும், பள்ளியாசிரியராக அறம் வளர்த்த நாத பிள்ளையும் அமைந்தனர். தூத்துக்குடி புனிதசவேரியார் உயர் பள்ளியிலும் கால்டுவெல் கல்லூரியிலும் கல்வி கற்று 1891ஆம் ஆண்டு ‘மெட்ரிகுலேசன்’ தேர்வில் வெற்றி பெற்று. ஒட்டப்பிடாரம் தாலுக்கா அலுவலக எழுத்தர் பணியினைச் சில திங்கட் காலம் வரை பார்த்தார்.

1894ஆம் ஆண்டில் இவருக்குத் திருமணம் நடை பெற்றது. மனைவியார் பெயர் வள்ளியம்மை என்பதாகும். அதற்கு அடுத்த ஆண்டில் திருச்சியில் கணபதி ஐயர், அரிகர ஐயர் ஆகிய இருவரிடமும் சட்டக்கல்வி பயின்று, அத்துறையில் தேர்ச்சி பெற்று, தம் சொந்த ஊரான ஒட்டப்பிடாரத்தில் வழக்குரைஞர் தொழில் செய்தார். பின்னர் 1900ஆம் ஆண்டு தூத்துக்குடி சென்று அப்பணியைத் தொடர்ந்து ஆற்றினார்.

சிதம்பரம் பிள்ளை அரசியல் துறைக்குத் தம் வாழ்வை நேரடியாகத் தீவிரமாகப் பயன்படுத்திய ஆண்டுகள் ஏறத்தாழ இரண்டே ஆண்டுகள் எனலாம். 1906ஆம் ஆண்டு சுதேசிக் கப்பல் கம்பெனி ஒன்றைத் தொடங்கினார். வ.உ.சி. 1907ஆம் ஆண்டில் சூரத் நகரில் கூடிய காங்கிரஸில் இவர் கலந்து கொண்டார். லோகமானிய திலகர் வ.உ.சி யின் அரசியல் குரு ஆவர். இவர் ஒரு தீவிரவாதி. எனவே, 1908ஆம் ஆண்டில் திருநெல்வேலியில் ‘தேசாபிமான சங்கம்’ வ.உ.சி.யின் முயற்சியால் நிறுவப்பெற்றது. சுப்பிரமணிய சிவா என்னும் பிறிதொரு தேசபக்தரோடு சேர்ந்து கொண்டு தம் சீரிய வீரப்பேச்சால் நாட்டுப் பற்றினை மக்கள் மனத்தில் கிளர்ந்தெழச் செய்த வ.உ.சி. 1908ஆம் ஆண்டு மார்ச்சுத் திங்கள் 12ஆம் நாள் திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் துரையால் சிறைப்படுத்தப்பட்டார். அந்த ஆண்டு ஜூலைத் திங்கள் 7ஆம் நாள் நீதிபதி பின்ஹே வ. உ. சி.யின் பேரில் அரசநிந்தனைக் குற்றத்திற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும், சுப்பிரமணிய சிவாவிற்கு உடந்தையாக இருந்ததற்காக இருபது ஆண்டு ஆயுள் தண்டனையும் விதித்து, இரண்டு தண்டனைகளையும் ஒன்றன்பின் ஒன்றாக நாற்பது ஆண்டுகள் அனுபவிக்க வேண்டுமெனக் கூறினார். சென்னை உயர்நீதி மன்றத்தில் இத்தண்டனை ஆறாண்டுக் காலமாகக் குறைக்கப்பட்டது. பிரிவி கவுன்சிலுக்கு அவர் நண்பர்கள் விண்ணப்பித்தபோது அந்தமான் சிறைவாசத் தண்டனை ஆறு ஆண்டுக் கடுங்காவல் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

பின்ஹே அளித்த தீர்ப்பில், “பிள்ளை பெரிய ராஜத் துரோகி; அவரது எலும்புக்கூடு கூட ராஜ விசுவாசத்திற்கு விரோதமானது” என்ற குறிப்புக் காணப்படுகின்றது. மேலும் அவர், “பிள்ளையின் பேச்சையும் பாரதியாரின் பாட்டையும் கேட்டால், செத்த பிணம் உயிர்த்தெழும்; அடிமைப்பட்ட நாடு ஐந்தே நிமிடங்களில் விடுதலை பெறும்; புரட்சி ஓங்கியெழும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

வெள்ளையர் என்றால் விதிர் விதிர்த்துப் பயந்து நடுங்கிய காலத்தில் வ.உ. சி. நாட்டுப் பற்றில் தலை சிறந்த தலைமகனாய்த் தம் வாழ்வையே பணயம் வைத்துச் செக்கிழுத்துச் சிந்தை நொந்து வாடிய ஆண்டுகள்-கோயமுத்தூர்ச் சிறையிலும் கண்ணனுார்ச் சிறையிலுமாகச் சேர்ந்து துன்பப் பட்ட ஆண்டுகள்-நான்கரை ஆண்டுகள்தாம். எனினும் கூட, அவர் ‘கப்பலோட்டிய தமிழர்’ என்றும், ‘செக்கிழுத்த செம்மல்’ என்றும் தமிழ் மக்களால் போற்றப்படுகின்றார். சிறையிலே தொடங்கிய அவர் தாய்மொழிப் பணி அவர் இறக்குந்தருவாயிலும் அதாவது 1936ஆம் ஆண்டு வரை ஏறத்தாழ இருபத்தெட்டு ஆண்டுகள் தொடர்ந்து நடை பெற்றது.

வ. உ. சி. யின் அரசியல் தொண்டுகள் நாட்டு மக்களால் நினைவு கூரப்படுகின்ற அளவிற்கு அவர்தம் செந்தமிழ்ப் பணிகள் மக்களால் அறியப்பட முடியாமல் உள்ளது. காரணம். அவர்தம் செந்தமிழ்ப் பணியினையும் மீறி அவர்தம் நாட்டுப் பணி ஒளிமிகுந்ததாய் உளது எனலாம். மேலும் பாரதியார்,

“மேலோர்கள் வெஞ்சிறையில் வீழ்ந்து கிடப்பதுவும்
நூலோர்கள் செக்கடியில் கோவதுவுங் காண்கிலையோ”

என்றும் பாடியுள்ளமை கொண்டு, வ. உ. சி.யைப் பற்றி எண்ணும்பொழுது பாரதியாருக்கு முதலில் நினைவிற்கு வருவது அவர்தம் அரசியல் தொண்டே எனலாம். இதனையே அவர் பிறிதோர் இடத்தில்,

‘வேளாளன் சிறைபுகுந்தான் தமிழகத்தார்
மன்னைெ ன மீண்டான்’ என்றே
கேளாத கதைவிரைவிற் கேட்பாய்நீ
வருந்தலைஎன் கேண்மைக் கோவே!
தாளாண்மை சிறிதுகொலோ யாம்புரிவேம்
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதிநீ வாழ்தி! வாழ்தி!’

(பாரதியார் கவிதைகள் வ.உ. சிக்கு வாழ்த்து: பக். 82)

என்றும் பாடியுள்ளார்.

ஆயினுங்கூட அவராற்றிய செந்தமிழ்ப் பணிகள் நம் சிந்தை குடிகொள்ளத்தக்க சீரிய பணிகளேயாம் என்பது பின்வரும் சான்றுகளால் விளங்கும். வ.உ.சி. பிறந்த திருநெல்வேலிச் சீமை, இயல்பாகவே நாட்டுப் பற்றிற்கும் மொழிப்பற்றிற்கும் பிறப்பிடமாக என்றென்றும் விளங்கி வருவதோரிடமாகும். எனவே, தமிழ் மொழியினை விருப்போடும் ஆழமாகவும் இளமை தொட்டே பயின்ற செம்மல் சிதம்பரனார், ஆரவார அரசியல் வாழ்க்கையில் அவர் பெற்ற சிறைவாசத்தின்போது, செந்தமிழ்ப் பணியில் தலைப்படலானார்.

அவர்தம் செந்தமிழ்ப் பணிகளை நான்கு வகைப்படுத்திக் காணலாம். 1. மொழிபெயர்ப்புப் பணி; 2, படைப்பிலக்கியப்பணி; 3. உரையாசிரியப் பணி; 4. பதிப்பாசிரியப் பணி.

முதலாவது மொழி பெயர்ப்புப் பணியினைக் காண்போம்:

1. மொழிபெயர்ப்புப் பணி

ஜேம்ஸ் ஆலன் என்னும் மேனாட்டுப் பெரியாரின் கருத்துகள் சிதம்பரனாரின் நெஞ்சைப் பிணித்தன.‘அகத்திலிருந்து புறம்’ (Out from the heart) என்னும் நூலைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். கோயமுத்துார்ச் சிறைவாசத்தின் போது இந்நூல் மொழிபெயர்க்கப்பெற்று, அவர் விடுதலை அடைந்த இரண்டு ஆண்டுகளில், அதாவது 1-4-14 அன்று ‘அகமே புறம்’ என்ற தலைப்பில் வெளி வந்துள்ளது. நூலின் முன்னுரையில் வ.உ.சி. குறிப்பிடுவன

வருமாறு :

“இந்நூலைத் தமிழறிந்த ஒவ்வொரு ஆடவரும் பெண்டிரும், சிறுவரும் சிறுமியரும் கற்க வேண்டு மென்பதும். இந்நூல் நமது நாட்டில் நிலவும் பலமொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட வேண்டுமென்பதும், இந்நூல் எஞ்ஞான்றும் நின்று நமது நாட்டில் நிலவவேண்டுமென்பதும் எனது விருப்பம்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சா-3 இந்நூலிற்குச் சுவாமி சகஜானந்தர் என்பவர் அணிந்துரை வழங்கியுள்ளார். நூலின் முகப்பில் வ.உ.சி. குறித்துள்ள செய்யுளொன்று நம் சிந்தனையைக் கிளறுவதாயுளது.

“அறத்தைக் காணா அறிவே மரமாம்;
அறத்தைப் பிழைத்த அறிவே மிருகம்;
அறத்தைப் புரியும் அறிவே மனிதன்;
அறத்தைக் காக்கும் அறிவே கடவுள்.”

அடுத்து, மனத்தின் தன்மையும் வன்மையும் பற்றி அவர் மொழிபெயர்ப்பில் குறிப்பிட்டிருப்பதாவது

“மனம் தளர்ச்சியின்றி வாழ்க்கை நிலைமை
யாகிய வஸ்திரத்தை நெய்துகொண்டிருக்கிறது;
நினைப்பு நூல்; நல்ல செயல்களும் தீய செயல்
களும் பாவும் ஊடும்; ஒழுக்கம் வாழ்வாகிய
தறியில் நெய்யப்படும் வஸ்திரம். மனம் தான்
நெய்த வஸ்திரத்தால் தன்னை உடுத்துக்
கொள்கிறது.”

76 பக்கமே கொண்ட இந்நூலில் ஆலன் கருத்தை அரண் செய்யத் திருக்குறட்பாக்களை மேற்கோள் காட்டியுள்ளார், எட்டனா விலையில் இந் நூலின் இரண்டாம் பதிப்பு 1916ஆம் ஆண்டு சென்னை புரோகிரஸிவ் பிரஸ்ஸில் அச்சியற்றப்பட்டு வெளி வந்துள்ளது. இலக்கிய நூல்கள் ஆயிரம் படிகள் அச்சிட்டால் விற்பனையாக நான்கைந்து ஆண்டுகள் பிடிக்கும் என்று பதிப்பாளர்கள் பயப்படும் நிலைமை இந்நாளில் இன்றும் நிலவ, வ.உ.சி. அவர்கள் இரண்டாம் பதிப்பின் பாயிரத்தில்-முன்னுரையில்-குறிப்பிட்டுள்ளன

வருமாறு :

“1914-ஆம் வருஷத்தில் வெளிவந்த இந்நூலின்
முதற் பதிப்பில் ஆயிரம் பிரதிகள் அச்சிடப்
பெற்றன. இந் நூலைத் தமிழ் மக்கள் பலரும்
விரும்பியதால் அவ்வாயிரம் பிரதிகளும்
விரைவில் செலவாய் விட்டன. அதனால் இந்
நூலை இரண்டாம் முறை அச்சிட்டு முடித்தேன்.”

மேலும் அவர்,

“இப்பதிப்பின் தமிழ் நடையைச் சென்னைப்
பச்சையப்பன் கல்லூரி சுதேசபாஷா அத்தி
யகூடிகர் ஸ்ரீமான் தி. செல்வக்கேசவராய முதலியார்
(எம்.ஏ.) அவர்கள் அழகுபடுத்தித் தந்தார்கள்.”

என்றும் குறிப்பிட்டுள்ளது கொண்டு, திருமணம் செல்வக் கேசவராய முதலியார் அவர்களிடம் வ.உ.சி. கொண்ட மதிப்பும் நூல்களைத் திருத்தமுறப் பதிப்பிக்க வேண்டும் என்று அவர் கொண்ட ஆர்வமும் புலனாகக் காணலாம்.

அடுத்து இவர் ஜேம்ஸ் ஆலனின் மற்ற நூல்களைச் ‘சாந்திக்கு மார்க்கம்’, ‘மனம்போல வாழ்வு’, ‘வலிமைக்கு மார்க்கம்’ என்ற தலைப்புகளில் வெளியிட்டுள்ளார்.

பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்களைத் தமிழ் மொழியில் தகவுடன் தர வ.உ.சி. கொண்டிருந்த வற்றாத ஆர்வத்தினை இந்நூல்கள் வழிக் காணலாம்.

2. படைப்பிலக்கியப் பணி

அறத்தின் வழிப்பிறழாத நெஞ்சினர் வ.உ.சி. திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர்; குறள் வழியே தம் வாழ்வை நடத்தி நின்றவர். அறத்தான் வருவதே இன்பம் என்று நம்பியவர். எனவே. அறத்தின் ஆற்றலை அவனிக்கு உணர்த்த விரும்பி, ‘மெய் யுணர்வு’ என்னும் நூலினைக் கண்ணனூர்ச் சிறைவாசத்தின் போது எழுதினார். அறத்தின்பால் நெஞ்சம் நெகிழும் ஓர் ஆண்மகனை ஓர் ஆசிரியன் உருவாக்கும் வகையில் இந் நூல் அமைந்துள்ளது. நூறு வெண்பாக்கள் கொண்ட இந்நூலில் வ.உ.சி.யின் கவிதை நலமும் கருத்து வளமும் பின்னிப் பிணைந்திருக்கக் காணலாம். வைகறைப் போதில் ஒருவன் செய்யத்தக்க பணிகளாக இந்நூலில் வ.உ.சி. குறிப்பிடுவன வருமாறு :

“வைகறையிற் கண்விழித்து மாசொழித்து மெய்யறங்கள்
கைவருதற் கீசனருள் கண்ணிமைப்பின் மையல்
அறுத்தற்கா நூனன்காய்ந்து யானை உர மெய்யிற்
செறுத்தற்கா நற்சிலம்பம் செய்.”

வைகறையில் துயிலெழுந்து, காலைக் கடன்களை முடித்து, ஈசனருள் பேணி, நன்னூல்களை ஆராய்ந்து கற்று, உடல் வலிமை பெறச் சிலம்பம் பயிலவேண்டும் என்று குறிப்பிடும் இவ் அரிய நூலிற்கு, அட்டாவதானம் கலியாண சுந்தர யதீந்திரர் என்னும் பெரியார் சிறப்புப் பாயிரமாம் அணிந்துரையினை வழங்கியுள்ளார்.

இவர் இயற்றியுள்ள சுய சரிதை நூல் இவர் நுண்மாண் நுழைபுலத்தினை விளக்கும். மதுரைத் தமிழ்ச் சங்கத் தேர்வில் தேர்ச்சிபெற்ற வ.உ.சி. தம் முதல் மனைவி வள்ளியம்மை குறித்து எழுதுவன காண்க :

“என்னுடைய நேயர்களும் ஏழைபர தேசிகளும்
என்னுடைய வீடுவந்தால் ஏந்திழைதான்-தன்னுடைய
பெற்றோர்வந் தார்களெனப் பேணி உபசரிப்பாள்
கற்றோரும் உள்ளுவக்கக் கண்டு.”

சிறையிலிருந்துகொண்டு தம் அன்னை, ஆருயிர்த் துணைவி, நண்பர்கள் முதலியோருக்கு இவர் எழுதிய கவிதை மடல்கள் நெஞ்சையுருக்கும் நீர்மையன; செந்தமிழ் நலம் தோய்ந்த சீர்மையன.

‘மெய்யறம்’ என்னும் பெயரிய நூல் மாணவவியல், இல்வாழ்வியல், அரசியல், அந்தணவியல், மெல்லியல் என்னும் ஐந்தியலும் நூற்றிருபத்தைந்து அதிகாரமுமாக முடிந்த நூலாகும். இந் நூலினைத் திருக்குறளின் வழிநூல் எனலாம். எண்வகை வனப்பில் ‘தோல்’ எனும் வனப்புக் கொண்டு, முதுமொழிக் காஞ்சி போன்று திட்ப நுட்பஞ் செறிந்திலங்குவதாகும்.

இந்நூலினைப் பற்றித் திரு. தி. செல்வக்கேசவராய முதலியார்,

“தமிழ்ப் புலவரேயன்றி இங்கிலீஷ் படித்த புலவரிற்
பலரும் இந்நூலின் திறத்தை மெச்சுவர் என்பது
துணிபு. ஒரு முறை கண்ணுறுவோர்க்கு இந்நூலின்
அருமை தானே புலப்படுமாதலால், அதனை இங்கு
விரிப்பது மிகையாம். இந்நூல் நின்று நிலவுக
என்பது என் வேண்டுகோள்.”

என்று குறிப்பிட்டுள்ளார்.

‘பாடற்றிரட்டு’ என்னும் நூல் இரு பாகங்கள் கொண்டது; சிறை வாசத்திற்கு முன் பாடிய பாக்கள் முதற்பாகமாகவும். கோயமுத்துார் கண்ணனூர்ச் சிறைவாச காலத்தில் பாடிய பல தனிப்பாக்கள் இரண்டாம் பாகமாகவும் சேர்க்கப்பட்டுள்ளன. பாடல்கள் எல்லாம் நவின்றோர்க்கினிய நன்மொழிகளால் விழுமிய பொருள் பயக்குமாறு இனிய ஓசை கொள்ள யாக்கப்பட்டுள்ளன. நீதி போதனைச் செய்யுள்கள் பண்டைக்கால நீதி நூற்களோடொப்பத் திட்ப நுட்பங் கொண்டுள்ளன. தம் மனைவியார் வள்ளியம்மை குறித்து இவர்

குறிப்பிடும் பகுதி வருமாறு :

“மகராசி என்னும் வள்ளி யம்மையை
நன்மனை அறங்களை நன்கு வளர்த்திட
முன்மனை யாக மொய்ம்பொடு கொண்டேன்
.........................................................................
எனதொரு வடிவும் எனக்குறு தொண்டுமே
கனவிலும் நனவிலும் கண்டவள் நின்றவள்
என்னைப் பெற்றோர், என்னொடு பிறந்தோர்
என்னை நட்டோர் யாவரும் தன்னுடை
உயிரெனக் கருதி ஊழியம் புரிந்த
செயிரிலா மனத்தள்; தெய்வமே அனையள்.”

இப்பாடல் வழி வ.உ.சி.யின் தெள்ளுதமிழ் அகவல் நடையின் அழகினையும் மாண்பினையும் உணரலாம்.


3. உரையாசிரியப் பணி

நாளும் தமிழ்ப் பணியில் கருத்தூன்றிய சிதம்பரனார் தம் வாழ்வின் இறுதிக்காலத்தில் சிவஞான போதத்திலும், கைவல்ய நவநீதத்திலும் பெரிதும் ஈடுபட்டார். சிவஞான போதத்திற்கு ஓர் உரை கண்டு வெளியிட்டார். சித்தாந்தப் புலமையும் வேதாந்த வித்தகமும் விளங்க அவர் கண்ட உரை, நயம் பயப்பதாகும். உரைப்பாயிரத்தின் இறுதியில்,

“இறைவனையும் உயிரையும் பற்றிப் பேசும்
இவ்வருமையான நூலைத் தமிழ் மக்களெல்லாம்
படித்தல் வேண்டும். படிக்க முன்வர வேண்டும்
என்ற ஒரே நோக்கத்துடன் நான் இவ்வுரையை
இயற்றியுள்ளேன். எனது நோக்கம் இனிது
நிறைவேற எல்லாம் வல்ல இறைவன் துணை.”

என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இவர் ‘விவேகபாநு,’ எனும் தமிழ் இதழின் ஆசிரியராக இருந்து பணியாற்றிப் பல்வேறு பயனுறு கட்டுரைகளை அதில் எழுதியுள்ளார் என்பது ஈண்டு நெஞ்சில் நிறுத்தத் தக்கதாகும்.

4. படிப்புப் பணி

பழந்தமிழ் நூற் பதிப்புப் பணியில் தமிழில் முதலில் ஈடுபட்டவர் இச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இளங்கலை (பி.ஏ.) பட்டம் பெற்ற யாழ்பாணத்தைச் சேர்ந்த சி.வை. தாமோதரம்பிள்ளை அவர்கள் ஆவர். சங்க நூல் முதற்பதிப்பாசிரியர் என்று போற்றப் பெறுபவர் அவராவர். வ.உ.சி. தமிழ் இலக்கிய இலக்கணத்தை அடிநாள் தொட்டே நன்கு கற்றவர். சங்க நூற்றேர்ச்சி மிக்கவர். தொல்காப்பியத்தை நல்லாசிரியரிடம் தம் வாழ்நாள் எல்லாம் பாடங்கேட்டவர். பேராசிரியர் திருமணம் செல்வக்கேசவராய முதலியார், ச. சோமசுந்தர பாரதியார், எஸ். வையாபுரிப்பிள்ளை, சி. சுப்பிரமணிய பாரதியார், திரு.வி.க., மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர் முதலியவர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்டவர். மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்.

வ.உ.சி. அவர்களுக்குத் தொல்காப்பியம், திருக்குறள், சிவஞான போதம், ஆலன் நூல்கள் முதலியவற்றில் நிரம்ப ஈடுபாடு உண்டு. தொல்காப்பியத்தை 1910ஆம் ஆண்டு சிறையில் படிக்கத் தொடங்கினார். வ.உ.சி. கூறுவன வருமாறு :

“அதன் பொருளதிகாரத்தை யான் படித்தபோது அதில் வேறு எம்மொழி இலக்கணத்திலும் காணப்படாத நிலப்பாகுபாடு, நிலங்களின் மக்கள் ஏனைய உயிர்கள், மரங்கள், செடிகள், மாக்கள்.

மக்களின் ஒழுக்கங்கள், பழக்கவழக்கங்கள் முதலியன கூறப்பட்டிருக்கக் கண்டேன். இவ்வொப்புயர்வற்ற நூலைத் தமிழ் மக்கள் படியாததற்கு ஒரு காரணம், இந் நூலிற்கு ஆன்றோர் இயற்றியுள்ள உரைகளின் கடின நடையென்று உணர்ந்தேன், இந்நூலைத் தமிழ் மக்கள் யாவரும் கற்கும்படி எளிய நடையில் ஓர் உரை எழுதவேண்டுமென்று நினைத்தேன். உடனே எழுத்ததிகாரத்தின் முதற் சில இயல்களுக்கு உரையும் எழுதினேன்......... (பின்னர்) இளம் பூரணத்தை யான் படித்தபோது, அதன் உயர்வும் சிறப்பும், எளிய நடையும் தொல்காப்பியத்திற்கு உரை எழுதுவது மிகையென்று நினைக்கச் செய்தன.”*

இப்பகுதி கொண்டு வ.உ.சி. தமிழுக்கு-தமிழருக்குச் செய்ய நினைத்த தொண்டும், உரையாசிரியர் எனப் பண்டையோரால் சிறப்பித்துக் குறிப்பிடப்பெறும். இளம்பூரணரிடத்து அவர் கொண்டிருந்த மதிப்பும் புலனாகும். 1935ஆம் ஆண்டில் அதாவது தாம் இறப்பதற்கு ஓர் ஆண்டிற்கு முன்னர்த் தொல்காப்பியம் இளம்பூரணத்தினை இவர் வெளியிட்டார். ஆயினும், 1920இல் இவர் தொடங்கிய தொல்காப்பிய அகத்திணையியல், புறத்திணையியல், இளம்பூரணர் உரைப்பதிப்பு 1928ஆம் ஆண்டு கோவில் பட்டியில் இவர் இருந்தபொழுது வெளியிட்டுள்ளார். அடுத்து 1933ஆம் ஆண்டில் இளம்பூரணம் களவியல், கற்பியல் பொருளியல் பதிப்பு வெளிவந்தது, இதனையடுத்து 15-1-1936 தேதியிட்டு இளம்பூரணம் மெய்ப் பாட்டியல், உவம இயல், செய்யுளியல், மரபியல்கள் பதிப்பு வெளியாகியுள்ளது. இப்பதிப்புப் பணிக்குப் பேருதவி புரிந்தவர் சென்னைப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் ச. வையாபுரிப்பிள்ளை என்பது.


“இவ்வேழு இயல்களுக்குப் பெயரளவில் பதிப்பாசிரியன் நான். உண்மையில் பதிப்பாசிரியர் திரு. வையாபுரிப்பிள்ளை அவர்களே. அவர்கள் செய்த நன்றி என்னால் என்றும் உள்ளற்பாலது”

என்று குறிப்பிட்டுள்ளமை கொண்டு அறியலாம்.

இதனால் வ.உ.சி.யின் செய்நன்றியறிதலின் திறமும், அடக்கப் பண்பும் புலனாதல் காணலாம். இளம்பூரணத்தின் பெரும் பகுதியினைப் பதவுரையுடன் வெளியிட்ட சிறப்பு வ.உ. சி.யைச் சாரும்.

“The book represent the fruitful results of his (V.O.C.) ardous labours in the field carried on for more than three decades.”

என்று தொல்காப்பியம் மெய்ப்பாட்டியலின் பதிப்புரையின் நூல் வெளியீட்டு நிறுவனத்தார் திரு. வெங்கடேச சாஸ்துருலு குறிப்பிட்டுள்ளார்.

அடுத்து, பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான “இன்னிலை”க்கு எளிய இனிய உரையெழுதிப் பதிப்பித்துள்ளார்.

திருக்குறளில் நெஞ்சம் தோய்ந்தவர் வ.உ.சி. என்பதனை முன்னரே கண்டோம். ‘அகமே புறம்’ எனும் ஜேம்ஸ் ஆலன் நூலின் மொழிபெயர்ப்பில் திருக்குறளை மேற்கொள் காட்டியுள்ளார் என்பது எண்ணற்பாலது. திருக்குறள் மணக்குடவர் உரையை அறத்துப் பாலிற்கு மட்டுமான உரையை-முதன் முதலில் பதிப்பித்த பெருமை வ.உ.சி.யைச் சேரும். அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்றே இவர் வழங்குவர். பரிமேலழகர் உரையோடு இவர் பலவிடங்களில் மாறுபட்டு நிற்கின்றார். மேலும், வ.உ.சி. அறத்துப்பாவின் சில பகுதிகளுக்குத் திண்மையாக உரை விளக்கம் கண்டுள்ளார். இவ்வுரை நயம் போற்றத் தக்கதாம். பாயிரம் திருவள்ளுவரால் எழுதப்பட்டிருக்க முடியாது என்று இவர் முதல் முதலில் காரணங்காட்டித் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு வ.உ.சி. அவர்கள் அரசியல் வானில் ஒளிவீசும் சுடர்த் தாரகையாகத் திகழும் அதே நேரத்தில் தமிழ் மொழிக்குத் தம் வாழ்நாள் முடியும் எல்லை வரையில் பல்வேறு துறைகளில் பாங்குற ஈடுபட்டு அயராது உழைத்த அறிஞர்-செந்தமிழ்ச் செம்மலார்-நூலோர் என்பது இது காறும் கூறியவாற்றான் தாமே போதரும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/2&oldid=1017392" இலிருந்து மீள்விக்கப்பட்டது