3. தனித்தமிழ் இயக்கங் கண்ட
அடிகளார்

தமிழ் மலையென விளங்கியவர் மறைமலையடிகள். தனித்தமிழ் இயக்கத்தின் தந்தையாய் விளங்கி, மொழிக்கு வளம் சேர்த்தவர். தமது எழுத்தாலும் பேச்சாலும் சைவ சமயத்தின் பெருமைகளை நாடெங்கும் பரப்பியவர். ஆழ்ந்த புலமையும், ஆராய்ச்சித் திண்மையும் ஒருங்கே அமையப் பெற்றவர். உரம் பாய்ந்த உடலும் உறுதி கொண்ட உள்ளமும் உடையவர். தமிழில் மட்டுமின்றி வடமொழி ஆங்கிலம் ஆகிய பிற மொழிகளிலும் புலமை நலம் சான்ற பெரியார் இவர். இவர்தம் எழுத்தும், பேச்சும், ஆய்வு நோக்கும் தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் கிடைத்த அரிய செல்வங்களாகும்.

தோற்றம்

தஞ்சாவூர் மாவட்டம், நாகபட்டினத்திற்கு அருகில் இரண்டு கல் தொலைவில் உள்ள காடம்பாடி என்ற ஊரில் 18-7-1879ஆம் ஆண்டு, சொக்கநாதப்பிள்ளை சின்னம்மை ஆகியவர்களுக்கு மகனாகத் தோன்றினார். இவருக்குப் பெற்றோரிட்ட பெயர் வேதாசலம் என்பதாகும். தனித் தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்ததன் காரணமாக இவர் தம் பெயரை மறைமலையடிகள் என மாற்றிக் கொண்டார். சூரிய நாராயண சாஸ்திரியார் ‘பரிதிமாற் கலைஞன்’ ஆனது போல, சுவாமி வேதாசலம் ‘மறைமலையடிகள்’ ஆனார்.

இளமைப் பருவம்

அடிகள் இளமையிலேயே கல்வி கற்பதில் பேரார்வம் உடையவராக விளங்கினார். தம்முடைய முதல் பள்ளி வாழ்க்கையை வெஸ்லியன் மிஷன் பள்ளியில் தொடங்கினார். ‘விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்பது போல அடிகள் பேச்சிலும், படிப்பிலும், ஒழுக்கத்திலும் இளமையிலேயே சிறந்து விளங்கினார். அடிகளுக்குப் பத்து வயது நிறைவதற்குள், அடிகளின் தந்தையார் சொக்கநாதப் பிள்ளை இயற்கையெய்தினார். ‘சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ எனப் புறநானூறு உணர்த்தும் கடமையை இவர் தந்தையார் செய்ய இயலாமற் போயினும், மகன் தந்தைக்கு ஆற்றும் நன்றியினைச் சிறப்பாகச் செய்தவர் நம் அடிகளார் ஆவர்.

அடிகளாரது இளமைக் காலத்தில், நாகை-நீலலோசனி, பாஸ்கர ஞானோதயம், திராவிட மந்திரி போன்ற பல கிழமையிதழ்கள் வெளிவந்து கொண்டிருந்தன. ‘முருகவேள்’ என்னும் புனைபெயரில் அடிகள் பல கட்டுரைகளை இவ்விதழ்களில் எழுதி வந்தார். அந்நாளில் நாகப் பட்டினத்தில் அமைந்திருந்த ‘இந்து மதாபிமான சங்க’த்திலும் சைவசமயம் பற்றிச் சொற்பொழிவுகள் ஆற்றினார். தம்முடைய பதினைந்தாவது வயதிலே பலரும் பாராட்டும் வகையில் கட்டுரை வரையும் வன்மையும், கேட்டார்ப் பிணிக்கும் தகையவான சொல்வன்மையும் ஒருங்கே அமையப் பெற்றிருந்தவர் மறைமலையடிகளார்.

வெ. நாராயணசாமிப் பிள்ளை, சோமசுந்தர நாயகர் முதலிய சான்றோர்களிடம் இலக்கிய, சமய நூல்களைக் கற்றுத் துறைபோய புலமை பெற்றார். மதுரை நாயகம் பிள்ளை அடிகளாரின் உயிரினிய நண்பர். பட்டத்திற்காகப் படிக்காமல், புலமை வேட்கைக்காகத் தமிழார்வத்தின் காரணமாகப் படித்து இளமையிலேயே பெரும் புலமை பெற்றார் நம் அடிகளார்.

மண வாழ்க்கை

அடிகளுக்கு பதினெட்டு அகவை ஆகும்போதே திருமணம் நடைபெற்றது. 1893-ஆம் ஆண்டு சவுந்தரவல்லி என்னும் பெண்மணியைத் திருமணம் செய்து கொண்டார். 1894-ஆம் ஆண்டில் சிந்தாமணி என்னும் பெண் மகவு பிறந்தது. இல்லற வாழ்வில் பொறுப்புகள் மிகுந்த காரணத்தால், 1894-ஆம் ஆண்டில் தம் பள்ளிப் படிப்பை நிறுத்தினார் அடிகளார்.

பள்ளிப்படிப்பை விட்டாலும், தமிழ் இலக்கியங்களைப் படிப்பதை விடாது மேற்கொண்டு வந்தார். மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளையவர்களைத் தமது ஆசிரியர் நாராயணசாமிப்பிள்ளை அவர்களின் மூலம் கண்டு உரையாடி மகிழ்ந்தார் நம் அடிகளார். 2-12-1895 ஆம் ஆண்டு பேராசிரியர் சுந்தரம் பிள்ளையவர்களிடமிருந்து ஒரு நற் சான்றிதழினையும் பெற்றார்.

ஆசிரியப் பணி

அடிகளின் ஆசிரியப்பணி முதன் முதலில் திருவனந்தபுரத்தில் இருக்கும் ஆங்கிலப் பள்ளியொன்றில் தொடங்கியது. ஆனால் இப்பணி இரண்டரைத் திங்கள் வரைதான் நீடித்தது. அடிகளின் உடல் நிலைக்குத் திருவனந்தபுரத்தின் தட்ப வெப்பநிலை ஒத்து வராததால் 1896 ஆம் ஆண்டு நாகைக்கே திரும்பிவிட்டார். நாகையில் இருக்கும்போது ‘துகளறு போதம்’ என்னும் நூலுக்கு உரையெழுதினார். ‘முதற் குறள் வாத நிராகரணம்’ என ஒரு மறுப்பு நூலெழுதினார். அக்காலத்தில் சித்தூரிலிருந்து ‘சித்தாந்த தீபிகை’ என்னும் திங்களிதழ், தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளிவரத் தொடங்கியது. சித்தாந்த தீபிகை என்பதற்கு ‘உண்மை விளக்கம்’ என்று பெயர். இவ்விதழின் தமிழ்ப் பகுதிக்கு அடிகளார் ஆசிரியராகப் பொறுப்பேற்றார். 21-6-1897இல் முதல் இதழ் வெளியாயிற்று. திருமந்திரம், சிவஞான சித்தியார், தாயுமானவர் பாடல், குறிஞ்சிப் பாட்டு ஆகியவற்றின் சில பகுதிகளுக்கு உரையும், அன்பு, அருள் என்னும் கட்டுரைகளும், ‘மூன்று கனவு’ என்னும் நான்கு (ஆங்கில) செய்யுட்களின் மொழிபெயர்ப்பும் வெளியாயின. ஐந்திதழ்கள் வரை ஆசிரியராகப் பணியாற்றினார். 9-3-1898இல் சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியராகப் பொறுப்பேற்றுக் கொண்டதால் சித்தாந்த தீபிகையின் ஆசிரியர் பொறுப்பினை விட நேர்ந்தது.

தமிழ்ப் பேராசிரியர்

சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியராக அடிகள் பணியாற்றிய காலமே அடிகளின் வாழ்க்கையில் பொன்னான காலமாகும். இக்கால கட்டத்தில் பல அரிய ஆராய்ச்சி நூல்கள் வெளிவந்தன. 1898 ஆம் ஆண்டு சென்னைக்குக் குடியேறிய அடிகளின் வாழ்க்கை 1911 வரை ஏறத்தாழப் பதின்மூன்று ஆண்டுகள் வரை நீடித்து நிலைத்தது.

சமுதாயத்திற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும் என்ற நிலைமாறி, பலனை எதிர்பார்த்துப் பணிபுரிகின்ற அளவிற்கு ஆசிரியப்பணி மாறிவிட்ட இக்காலம் போல் அல்லாமல், உண்மையான தொண்டுள்ளத்தோடு தமிழுக்கும் மாணவர்களுக்கும் தொண்டு புரிந்தவர் நம் அடிகளார் ஆவர்

பத்துப்பாட்டு நூல்களான முல்லைப்பாட்டு பட்டினப் பாலை முதலியனவற்றுக்கு அரிய ஆராய்ச்சியுரைகளை எழுதினார். அடிகளாரின் ஆய்வுரையைக் கண்ட மாணவர்கள் பெரிதும் மகிழ்ந்து தம் செலவிலே அச்சிட்டுத்தர வேண்டி அதற்குரிய பொருளையும் திரட்டித் தந்தனர். இவ்வாறு மாணவர்களின் மனங் கொள்ளத்தக்க பேராசிரியராக அடிகள் விளங்கினார்.

27-6-1898இல் அடிகளாருக்குக் கொடிய நோய் ஒன்று, கண்டது. அதனைத் தீர்க்குமாறு திருவொற்றியூர் முருகனை அடிகள் வேண்டிக் கொண்டார். நோய் நீங்கியபின் முருகனை நினைத்து “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை” என்னும் அருள்நூலைப் பாடினார். சங்கப் பனுவல்களின் கருத்தும், நடையும் பொலிந்து விளங்கும் சிறந்த நூல் இது. தமக்குச் சைவ சித்தாந்த நூல்களை விளக்கிப் பாடம் சொன்ன சோமசுந்தர நாயகர் (22-2-1901) இயற்கை யெய்திய பொழுது. அவர் பிரிவு பொறாது “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்” என்னும் நூலை எழுதினார். அந் நூலில் தாமும் சைவவுலகும் அடைந்த துன்பத்தினைக் ‘கையறுநிலை’ ‘மன்னைக் காஞ்சி’யென்னும் பிரிவுகளாகவும், நாயகரின் வாழ்க்கைத் துணைவியார் பேதுற்ற நிலையினைத் ‘தாபத நிலையாகவும்’ அமைத்துள்ளார்.


சொற்பொழிவாளர்

கவின்மிகு கட்டுரையாற்றல் கைவரப்பெற்ற அடிகள், சுந்தரத் தமிழில் சொற்பெருக்காற்றும் வல்லமையும் பெற்றிருந்தார். அடிகளாரின் பேச்சு அனைவரையும் காந்தம் போல் ஈர்க்கும் சக்தி உடையது. பெரும் பொருள் செலவுசெய்தும் அடிகளாரின் பேச்சைக் கேட்பதற்கு மக்கள் கூடினர். பேசுவதில் சில நெறிகளைப் பின்பற்றியவர் அடிகள். தாம் பேச எடுத்துக் கொண்ட பொருளைத் தெளிவாகவும், ஆழமாகவும். அழுத்தமாகவும் எடுத்துச் சொல்லும் வல்லமை அடிகளுக்கு உண்டு. அடிகள் பேசுவதற்குச் சென்ற இடங்களிலெல்லாம், உணவு, இருக்கை முதலியவை பற்றி ஓர் ஒழுங்கைக் கடைபிடித்து வந்தார். இவர் பேச்சில் சைவப் பற்றும், தமிழ்ப்பற்றும் மிகுந்து இருக்கும். சைவத்தையும்,தமிழையும் தம் இரு கண்ணெனப் போற்றி வளர்த்தவர் அடிகள்.

இதழாசிரியர்

சொற்பொழிவிலும், கட்டுரை எழுதுவதிலும் ஈடுபட்டிருந்த அடிகள் திங்கள் இதழ் ஒன்றைத் தொடங்க எண்ணினார். 1902இல் ‘அறிவுக் கடல்’ என்னும் திங்கள் இதழ் தொடங்கப் பெற்றது. அறிவுக் கடல் தொடக்க நாளில் கொண்ட பெயர் ‘ஞானசாகரம்’ என்பதாகும். அந் நாளில் அடிகளாருக்குத் தனித் தமிழுக்கம் உண்டாகவில்லை. பின்னர் அனைத்தும் தனித்தமிழாயின; அவர் பெயர் முதற் கொண்டு அனைத்தும் தமிழாயின. அவர் எழுதிய கட்டுரைகளிலும், பேசிய பேச்சுக்களிலும் தனித்தமிழ்ச் சொற்களே இடம் பெறலாயின. அறிவுக்கடலின் உறுப்பினர்களில் கப்பலோட்டிய தமிழர் வ.உ. சிதம்பரனாரும் ஒருவர் என்ற செய்தி ஈண்டுக் குறிப்பிட வேண்டிய ஒன்றாகும்.

அடிகளாரை ஆசிரியராகக் கொண்டு ‘அறிவுக் கடல்’ ஆற்றிய தமிழ்ப்பணி அளப்பரியது. அறிவுக் கடல் ஆற்றிய அளப்பரிய தமிழ்ப்பணிக்கு அதன் முதல் இதழின் பொருளடக்கமே சான்று. அப்பொருளடக்கம் வருமாறு -

“சகளோபாசனை - தமிழ் வடமொழியினின்றும் பிறந்ததா? தமிழ்ச் சொல்லுற்பத்தி - சைவம் - சைவ நிலை - காப்பியம் - தொல்காப்பியப் பரிசீலனம் - உள்ளது போகாது இல்லது வாராது - தொல்காப்பிய

முழு முதன்மை-கேநோபநிடத மொழிபெயர்ப்பு—சமயப்பெருமை-இலக்கண ஆராய்ச்சி-நெஞ்சறிவுறுத்தல்-தமிழ் மிகப் பழைய மொழி-இறைய னாரகப் பொருளுரை வரலாறு - ஆநந்தக் குற்றம்—மாணிக்கவாசகர் கால நிருணயம்-மெய்ந்நல விளக்கம்-தமிழ் வேத பாராயணத்தடை மறுப்பு-நாலடியார் நூல் வரலாறு-முனிமொழிப் பிரகாசிகை-பரிமேலழகர் ஆராய்ச்சி முதலியன.”


சைவ சித்தாந்த மகா சமாசம்

சைவ சமய உண்மைகளை நாட்டிலே பரப்பச் ‘சைவ சித்தாந்த மகா சமாசம்’ என்னும் கழகத்தை 7-7-1905இல் தொடங்கினார் அடிகள். அறிஞர் பலர் இம் மகா சமா சத்தில் உறுப்பினர்களாக இருந்தனர். அடிகள் தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றுச் சிறக்கப் பணிபுரிந்தனர். முதலாண்டு நிறைவு விழா 1906ஆம் ஆண்டு சிதம்பரத்தில் கொழும்பு ஆனரபிள் இராமநாதன் துரை அவர்கள் தலைமையிலும், இரண்டாம் ஆண்டு விழா சிதம்பரத்திலே, மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் பாண்டித்துரைத் தேவர் தலைமையிலும், மூன்றாம் ஆண்டு விழா நாகையில் ஜே. எம். நல்லசாமிப் பிள்ளை அவர்களின் தலைமையிலும், நான்காம் ஆண்டு விழா திரிசிரபுரத்தில் யாழ்ப்பாணம் ஆணரபிள் கனக சபையவர்கள் தலைமையிலும் அடிகளின் பெருமுயற்சியால் சிறப்புற நடை பெற்றன.

‘அறிவுக் கடல்’ இதழைத் தமிழில் நடத்திய அடிகள் ஆங்கிலத்திலும் ஓர் இதழைத் தொடங்க எண்ணினார். அடிகளின் எண்ணப்படி கீழ் நாட்டு மக்கள் வசியம் எனப்

சா—4 பொருள்படும் ‘ஓரியண்டல் மிஸ்டிக் மைனா’ (The Oriental Mystic Myna) என்னும் ஆங்கில இதழை 1898இல் தொடங்கினார். ஆனால் இவ் ஆங்கில வெளியீடு பன்னிரண்டு இதழ்களுடன் நின்றுவிட்டது.

சாதி, மத, பேதமகற்றி அன்பின் அடிப்படையில் வள்ளலார் வழியில் இறைவனைக் காணுதல் வேண்டும்—கண்டு வாழுதல் வேண்டும் என்னும் நோக்கத்துடன் 22-4-1911 ஆம் நாள் சமரச சன்மார்க்க சங்கத்தைத் தோற்றுவித்தார் அடிகள். இச்சங்கமே பின்னாளில் ‘பொது நிலைக்கழகம்’ எனப் பெயர் பெறுவதாயிற்று.

துறவு

சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி ஆசிரியர் பணியிலிருந்து 30-4-1911இல் விலகிய அடிகள் 1-5-1911 முதல் பல்லா வரத்தில் தமது வாழ்க்கையைத் தொடங்கினார். சுய சிந்தனையும் நாட்டுக்கு உழைக்கும் நல்லுள்ளமும் சைவ சமயப் பணிக்குத் தம்மை ஆட்படுத்திக் கொண்ட தகவுங் கொண்ட அடிகள், அரசியலில் ஈடுபடாமல் தமிழராக இருந்து நாட்டுக்கும் சமயத்திற்கும் தொண்டு புரிய வேண்டும் என்னும் தன்னலமற்ற தொண்டுள்ளம் கொண்டார். 27-8-1911, முதல் துறவு வாழ்வை மேற்கொண்டார் அடிகள். அன்று முதல் “மறைமலையடிகள்” எனவும் “சுவாமி வேதாசலம்” எனவும், ‘சமரச சன்மார்க்க நிலைய குரு’ எனவும் அழைக்கப் பெற்றார்.

தமிழ்க் குடும்பம்

அடிகளாரின் குடும்பம் பெரியது. அடிகள் துறவு நிலையைடைந்தாலும் மனைவி மக்களை விட்டுப் பிரியவில்லை. அடிகள் மேற்கொண்டது. சமுதாயத்தில் கடமைகளைச் செய்து கொண்டே அதன் பலனில் பற்று வைக்காத உயர்ந்த இல்லறத் துறவு நிலையாகும். அடிகளாரின் இல்லத் துணைவியார் சவுந்தரவல்லி அம்மையார் மனைத் தக்க மாண்புடையவர். இவ் இருவருக்கும் முறையே 1894இல் சிந்தாமணி என்ற பெண் மகவும், 1903இல் நீலாம்பிகை என்ற பெண் மகவும், 1904இல் திருஞான சம்பந்தன், 1906இல் மாணிக்கவாசகன், 1907இல் திருநாவுக்கரசு. 1909இல் சுந்தரமூர்த்தி என்னும் ஆண் மக்களும், 1911இல் திரிபுரசுந்தரி என்ற பெண்மகவும் பிறந்தனர்.

இலங்கைப் பயணம்

அடிகளாரின் சொற்பொழிவுத் திறன் இலங்கையிலும் ஒலிக்கத் தொடங்கியது. 1914 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் முதன் முறையாகக் கொழும்பிற்குச் சென்றார் அடிகள். அவர்தம் சொற்பொழிவு இலங்கை மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. அடிகளுக்குப் பெரும் பொருளும் கிடைத்தது. இலங்கைப் பயணத்தினால் அடிகளுக்குக் கிடைத்த மிகப் பெருஞ் செல்வம் திருவரங்கனாரின் நட்பாகும். பின்னாளில் அடிகளாரின் மகளார் நீலாம்பிகையாரை மனந்தவரும். சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தை நிறுவிய பெருமைக்குரியவரும் இத் திருவரங்கனாரே யாவர். இரண்டாம் முறையாக 1917 ஆம் ஆண்டு மேத்திங்கள் கொழும்புக்குச் சென்றார். மூன்றாம் முறையாக 16-12-1921 இல் கொழும்பு சென்று பல்வேறு இடங்களில் சொற்பொழிவாற்றிவிட்டு 20-1-1922இல் பல்லாவரம் திரும்பினார்.

இலங்கை சென்று, சொற்பொழிவின் மூலம் திரட்டி வந்த பெரும் பொருளும், தமிழ் நாட்டில் சொற்பொழிவின் மூலம் கிடைத்த பொருளும் சேர்ந்து பொது நிலைக் கழக மாளிகையாக உருவாயிற்று. பொதுநிலைக் கழகத்தின் இருபதாண்டு நிறைவு விழா 1931 ஆம் ஆண்டு பிப்ரவரித் திங்கள் இரண்டாம் நாள் கொண்டாடப்பெற்றது. பொது நிலைக் கழக விழா மூன்று நாட்கள் நடைபெற்றது. அவ் விழாப் பேரவையில் முடிவு செய்த பல சீர்த்திருத்தங்கள், அடிகளாரின் சீர்திருத்த மனப்பான்மையைக் காட்டும். அடிகளாரின் சமய மறுமலர்ச்சிச் சிந்தனைகள் பின் வருமாறு :

1. மடத்தலைவர்கள் எல்லாக் குலததவர்க்கும வேற்றுமையின்றிச் சமயக் கிரியைகள் கற்பிக்க முயற்சி செய்தல் வேண்டும்.

2. கோயில்களில் வேற்றுமையின்றித் திருநீறு முதலியன பெறவும் நிற்கவும் கோயில் தலைவர்கள் இடஞ்செய்தல் வேண்டும்.

3. பழந்தமிழ்க் குடிமக்கள் (தீண்டாதார்) எல்லோரையும் தூய்மையாகத் திருகோயில்களிற் சென்று வழி பாடாற்றப் பொதுமக்களும், கோயில் தலைவர்களும் இடந்தரல் வேண்டும்.

4. கோயில்களிற் பொதுமாதர் திருப்பணி செய்தல் கூடாது.

5. வேண்டப்படாதனவும், பொருட்செலவு மிக்கனவும் சமய உண்மைக்கு முரண்பட்டனவும், அறிவுக்குப் பொருத்த மற்றனவும் ஆகிய திருவிழாக்களையும். சடங்குகளையும் திருக்கோயில்களிலே செய்தல் முற்றும் கூடாது; தூயதும் வேண்டப்படுவதுமான சடங்குத் திருவிழாவும் குறைந்த செலவிலே செய்தல் வேண்டும்.

6. சாரதா சட்டத்தை உடனே செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

7. கைம்பெண்களைத் தாலியறுத்தல், மொட்டை யடித்தல், வெண்புடவை யுடுத்தல், பட்டினி போடல் முதலியவை நூல்களிற் கூறியிருப்பினும் வெறுக்கத்தக்க இச்செயல்களை நீக்குதல் வேண்டும். கைம்பெண் மணம் முற்காலத்திலும் இருந்திருப்பதாலும், நூல்களில் ஒப்புக் கொண்டிருப்பதாலும் அதனைச் செயல் முறைக்குக் கொணர்தல் வேண்டும்.

8. சாதிக் கலப்புமணம் வரவேற்கத்தக்கது.

9. தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்களில் தமிழுக்குத் தலைமை தருதல் வேண்டும்.

10. தமிழைத் தனிப்பாடமாக பி.ஏ. ஹானர்ஸ் வகுப்புக்கு ஏற்படுத்தல் வேண்டும்.

நூல்கள்

அடிகளாரின் எழுத்துப்பணி, தமிழ் இலக்கியத்தில் மறு மலர்ச்சியை ஏற்படுத்தியது. சமயம், தமிழாராய்ச்சி,நாடகம், நாவல் போன்ற பல்வேறு துறைகளிலும் தம் ஆளுமையைச் செலுத்தியவர் அடிகள். “திருவொற்றி முருகர் மும்மணிக் கோவை.” “சைவசித்தாந்த ஞான போதம்.” அம்பலவாணர் திருக்கூத்தின் உண்மை,” “சைவ சமயத்தின் நெருக்கடியான நிலை” என்பன சமய நூல்களாகும். “மாணிக்கவாசகர் வரலாறுங் காலமும்,” “பழந்தமிழ்க் கொள்கையே சைவ சமயம்,” “கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா,” “சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்,” “தமிழர் மதம்,” “சோம சுந்தரக் காஞ்சியாக்கம்,” “சாகுந்தல நாடக ஆராய்ச்சி,” “முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை,” “பட்டினப்பாலை ஆராய்ச்சியுரை,” “வேளாளர் நாகரிகம்,” “இந்தி பொது மொழியா,” “சிந்தனைக் கட்டுரைகள்” முதலியன அவர்தம் ஆராய்ச்சி நூல்களாகும்.

“கோகிலாம்பாள் கடிதங்கள்,” “குமுதவல்லி அல்லது நாக நாட்டரசி,” “சாகுந்தலம்” ஆகிய படைப்பிலக்கியங் களும், “தொலைவில் உணர்தல்,” “பொருந்தும் உணவும் பொருந்தா உணவும்” ஆகிய அறிவியல் நூல்களும் தமிழுக்கு வளம் சேர்த்தவையாகும்.

இறுதி வாழ்க்கை

அடிகள் இறுதிக் காலத்தில் பொதுநிலைக் கழக ஆசிரியராகவும். மற்றும் பல்வேறு நூல்களின் ஆசிரியராகவும்,கவிஞராகவும், சொற்பொழிவாளராகவும் சிறப்புற வாழ்ந்தனர். இவற்றிலிருந்து கிடைத்த வருவாயே அடிகளின் குடும்பச் செலவிற்குப் பயன்பட்டது.

எழுத்தாலும், பேச்சாலும் சைவத்தையும் தமிழையும் வளர்த்த அடிகளின் வாழ்வு 15-9-1950 ஆம் நாள் மாலை 3-30 மணிக்கு முடிவுற்றது. அடிகளின் தனித் தமிழ்ச் சிந்தனையும், அகன்ற ஆராய்ச்சிப் புலமையும், அழகு நடையும் இன்றும் ஆய்வாளர்களுக்கு வழிகாட்டியாய் நின்று ஒளிவீசி வருதலைக் காண்கிறோம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/3&oldid=1017393" இலிருந்து மீள்விக்கப்பட்டது