4. குழந்தை இலக்கியம்
வளர்த்த கவிமணி

மனிதன் வாழ்க்கையில் பெறும். பேறுகள் பல நல்ல மனைவி வாய்ப்பதும், பண்பு சான்ற குழந்தைகள் வாய்ப்பதும் ஒருவனுக்கு வாய்க்கும் பேறுகளுள் சிறப்பானவைகளாகும். பெறும் பேறுகளுள் சிறந்த பேறு நல்ல மக்கள் வாய்ப்பதேயாகும் என்பதனைத் திருவள்ளுவர்,

“பெறுமவற்றுள் யாமவறிவ தில்லை அறிவறிந்த
மக்கட்பேறு அல்ல பிற”

(குறள். 70)

என்று குறிப்பிட்டுள்ளார். பொருட்செல்வம், செவிச் செல்வம், கல்விச்செல்வம் முதலான செல்வங்களிலும் குழந்தைச் செல்வமே சிறப்பு வாய்ந்ததாகும். இதனையே திருவள்ளுவர்,

“தம் பொருள் என்ப தம்மக்கள்”

(குறள். 63)

என்று குறிப்பிட்டுள்ளார், ‘செல்வமற்ற ஏழைகளின் செல்வம் குழந்தைகளே’ (Children are poor Men's riches)என்றும் ‘துறக்க உலகத்தின் திறவுகோல் குழந்தைகளே, (Children are the keya of pa radise) என்றும் குழந்தைச் செல்வத்தின் மேன்மை குறிக்கப் பெறுகின்றன. நல்ல குழந்தைகளைப் பெற்றவர்கள் இவ்வுலகில் அன்றியும் மறு உலகிலும் புகழினைப் பெறுவர் என்று அகநானூறும், தவழ்ந்து விளை யாடும் குழந்தைச் செல்வத்தினைக் குறைவறப் பெறாதவர்கள் படைப்பு பல படைத்திருப்பினும், பலரோடு உண்ணும் செல்வ வளம் சிறக்கப் பெற்றிருப்பினும் பயன் இல்லை என்று புறநானூறும் [1] குறிப்பிடுகின்றன.

குழந்தை இலக்கியத்தின் தொன்மை

தொல்காப்பியம் ‘பிசி’ என்ற இலக்கிய வகையினைக் குறிப்பிடுகின்றது.

“ஒப்போடு புணர்ந்த வுவமத் தானும்
தோன்றுவது கிளந்த துணிவி னாலும்
என்றிரு வகைத்தே பிசிவகை நிலையே”

(தொல். பொருள்: 488)

தன்கண் உள்ள ஒப்புமைக் குணத்தோடு பொருந்தி வருவதும், உவமப்பொருள் ஒன்று சொல்ல ஒன்று தோன்றும் துணிவினதாகவும் பிசி இருவகைப்படும் என்று சொல்கிறது தொல்காப்பியம். இக் குறிப்புக்கொண்டு பிசி என்பது விடுகதையினைக் குறித்து நிற்கின்றது என அறியலாம். பிசி, செவிலியர்க்கு உரியது என்று பேராசிரியர் தம் உரையில் குறித்துள்ளார். குழந்தைகளை வளர்க்கும் தாய் சங்க காலத்தில் செவிலி என வழங்கப் பெற்றாள். செவிலியர் குழந்தைகளை நன்கு வளர்த்து, அவர்களை மகிழ்விக்க விடுகதைகளையும், வேடிக்கைக் கதைகளையும் கூறினர். பேராசிரியர் ‘பிசி’ என்பதற்குத் தந்துள்ள உதாரணங்களில் ஒன்று கீழ்வரும் பாட்டாகும்.

“நீராடான் பார்ப்பான் கிறஞ்செய்யான் ரோடில்
ஊராடு சிேல்காக் கை” [2]

குளிக்காத பார்ப்பனன்; அவன் நிறமோ சிவப்பு, அவன் நீரில் குளித்தெழுந்தால் காக்கையின் கரிய நிறம் கொண்டு விடு வானாம் என்ற குறிப்பு இப் பாட்டில் அமைந்துள்ளது. இப்பாட்டு பிசி; நெருப்பைக் குறிக்கின்றது. மேலும் அகநானுாற்றில் மாற்றூர் கிழார் மகனார் கொற்றங் கொற்றனார் பாடிய பாடல் ஒன்றில் வானத்தில் பவனிவரும் கோல நிலவைக் காட்டித் தன் கைக்குழந்தைக்கு உணவு ஊட்டும் தாய் ஒருத்தியைக் காட்டுகின்றார். “நிலவு எரிக்கும் முதிராத இளந் திங்களே! பொன்னாலான ஐம்படைத் தாலியை அணிந்திருக்கும் என் மகனோடு நீ இங்கு விளையாட வந்தால் உனக்கும் பால் தருவேன்” என்று

குழந்தைக்கு நிலவை வேடிக்கை காட்டிச் சோறு ஊட்டு கின்றாள்.

“முகிழ்கிலாத் திகழ் தரும் மூவாத் திங்கள்
பொன்னுடைத் தாலி யென்மகன் ஒற்றி
வருகுவை யாயின் தருகுவென் பால் என
விலங் கமர்க் கண்ணள் விரல்விளி பயிற்றி”3

என்பது அப் பாடற்பகுதி. இது பிற்காலத்திலே பல நிலாப் பாடல்களுக்கு வழிவகுத்துக் கொடுத்தது என்று நம்பலாம்.

குழந்தைக் கவிஞர் கவிமணி

‘தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் பாடல்கள் தமிழ் மக்களுக்குக் கிடைத்த பெருஞ்செல்வம்; அரிய செல்வம்; தெவிட்டாத அமிர்தம்; ஆயுள் நாள் முழுவதுமே தமிழ் மகன் தன்னுடன் வைத்துக்கொண்டு அனுபவிக்க வேண்டிய வாடாத கற்பகப் பூஞ்செண்டு’ என்று கவிமணியின் பாடலைப் புகழ்ந்து பேசுகிறார் ரசிகமணி டி.கே சி. இக்காலக் கவிஞர் ஒருவர், 

“பகைவரென ஒருவருமே இல்லாப் பண்பு
பாலித்த கவிமணியார், நமது பிள்ளை
முகைகளெல்லாம் நலம்பெருகி மலரப் பாட்டு
மொழிந்திருந்தது இக்காலம் நமது, காலம்!”

என்று குறிப்பிட்டுள்ளார்.

“தமிழகத்தில் அரும்பெரும் நூல்கள் பல உண்டு; கன்னித் தமிழ் ஆட்சிமொழியாய் மாட்சியுற்றிருந்த காலத்தே எழுந்த இலக்கியங்களில் பல இற்றைச் சிறுவர்க்கு எளிதில் விளங்குவதேயில்லை. ஆத்திசூடியும். கொன்றைவேந்தனும் அன்றையக் குழந்தைகட்கு எளிய இனிய நூல்கள். வேற்று மொழியின் ஆதிக்கத்தால் அத்தகைய தமிழறிவைப் பலர் இழந்துவிட்டனர். இந்நிலையில் குழந்தை இலக்கியம் இன்றியமையாததாயிற்று. அக்குறையை நீக்கிக் குழந்தைகள் உளங் குளிர்ந்து பாடுவதற்கு ஏற்ற எளிய கவிதைகள் பலவற்றைத் தந்தவர் கவிமணி [3] என்று சொல்லின் செல்வர் ரா.பி. சேதுபிள்ளை குறிப்பிட்டுள்ளார்.

சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவரும் கவிமணியின் நெருங்கிய நண்பருமான பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்கள் ‘கவிமணியின் பாடல்களிற் சில சிறு குழந்தைகளின் சிவப்பூறிய மலர் வாயினின்றும் தேனினும் இனியவாய் மறித்துச் சுரக்கின்றன’ என்று கூறியுள்ளார். [4]

குழந்தை உள்ளம்

கவிமணி அவர்கள் குழந்தைகளிடம் எல்லையற்ற அன்பு கொண்டிருந்தார். தம் வீட்டுச் சுவர்களில் குழந்தைகள் பலவற்றின் படங்களைத் தொங்கவிட்டிருப்பார். அவர் வாழ்வில் அவருக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கவில்லை. ஊரில் உள்ள குழந்தைகளையெல்லாம் தம் குழந்தையாக எண்ணினார். குழந்தைகள் நெஞ்சம் உருகி நைந்தால் இவரும் உள்ளம் உருகிக் கரைவார். குழந்தைகள் அழுவதைக் காண மனம் பொறுக்க மாட்டார். எனவே குழந்தைகளின் இன்ப துன்பங்களில் பெரும்பங்கு கொண்டார். ‘மலரும் மாலையும்’ என்னும் தம் கவிதைத் தொகுதியை,

“செந்தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்
கிந்தநூ லுரியதாய் என்றும் வாழ்கவே”

என்று தம்முடைய கவிதை நூலையே தமிழ்நாட்டுச் சிறுவர் சிறுமியர்களுக்கு உரிமையாக்கினர். தம்முடைய இருபத்தைந்தாம் வயது தொடங்கிய-அதாவது 1901ஆம் ஆண்டு முதல்-தம்முடைய திருமண ஆண்டு முதல் குழந்தைப் பாடல்கள் எழுதத் தொடங்கிவிட்டார். 1917-18ஆம் ஆண்டில் “மருமக்கள் வழி மான்மியம்” என்னும் கவிதை ‘தமிழன்’ என்ற பத்திரிகையில் தொடர்ச்சியாக வெளிவந்தது. இவர்தம் குழந்தைப் பாடல்கள் 1941ஆம் ஆண்டில் ‘இளந்தென்றல்’ என்ற பெயரில் வெளிவந்தது. ‘மலரும் மாலையும்’ என்னும் கவிதைத் தொகுதியை, மழலை மொழி, இயற்கை இன்பம், காட்சி இன்பம், கதைப் பாட்டு, உள்ளமும் உணர்வும் என்னும் ஐந்து தலைப்புகளில் 46 குழந்தைப் பாடல்களைக் கொண்டுள்ளது. இது அன்பர் திரு. மு. அருணாசலம் அவர்கள் முயற்சியால் 1938ஆம் ஆண்டு வெளிவந்தது. இக்குழந்தைப் பாடல்கள் 1954ஆம் ஆண்டு ஏப்பிரல் திங்களில் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் பெயரோடு 58 பாடல்களைக் கொண்டு தனியே வெளியிடப்பட்டது. இக் ‘குழந்தைச் செல்வம்’ என்னும் நூலுக்கு 1957ஆம் ஆண்டு குழந்தை நூல்வரிசையில் சென்னை அரசாங்கக் கல்வித் துறையினர் பரிசு அளித்துப் பாராட்டினர். ‘குழந்தை இலக்கிய வரலாறு’ என்னும் நூலினை எழுதிய நண்பர் குழந்தை எழுத்தாளர் பூவண்ணன் அவர்கள் குழந்தைச் செல்வம் நூலில் உள்ள பாடல்களில் பாதி, பத்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படிப்பதற்கே ஏற்றவையாகும் என்று திறனாய்ந்து தெளிந்துள்ளார். [5] ‘குழந்தைகள் பயன் பெறுமாறு பாடிய கவி தேவி’ (தேசிக விநாயகம் பிள்ளை) என்றும், ‘தேவிக்குக் குழந்தை இல்லை, இருந்தால் குழந்தைப் பாசம் அவர்கள் அளவில் நின்றிருத்தலும் கூடும். உள்ளத்தே ஊறிச் சுரக்கும் அன்பை அழுதும் அரற்றியும் முரண்டுபிடித்தும் அக்குழந்தைகள் தடைப்படுத்தி இருக்கவும் செய்யலாம். இப்பொழுதோ தமிழகக் குழந்தைகள் அனைத்தும் அவர்கள் குழந்தைகளாகி விட்டன. அவைகளின்மீது அன்பையும் அருளையும் அள்ளிச் சொரிகின்றார்கள்.’[6] என்றும் திரு. செ. சதாசிவம் அவர்கள் கவிமணியின் குழந்தை உள்ளத்தை எடுத்து மொழிகின்றார்.

இனி, கவிமணியின் குழந்தைப் பாடல்களை வகைப் படுத்திக் காண்போமாக.

தாலாட்டு

தாலாட்டு என்ற இலக்கியவகை மிகப் பழமையானது. ‘நாக்குத்தான் குழந்தைக்கு மிகவும் பிடித்த விளையாட்டுக் கருவி’ என்று மொழி நூல் வல்லுநர் ஆட்டோ யெஸ்பர்சன் கூறுகிறார்.8 இந்த நாக்கு நல்ல சொற்களைச் சொல்ல முயலும் நாள்களைச் ‘செங்கீரைப் பருவம்’ என்று செப்பினர். கிலுகிலுப்பை ஒலியினைக் கேட்டு மகிழ்ந்த குழந்தையைப் பற்றிய குறிப்பு சிறு பாணாற்றுப்படையில் இடம் பெற்றிருக்கக் காணலாம். [7] தொட்டிலில் படுத்துக் கிடக்கும் குழந்தை, தன்னைப் பார்த்துத் தொட்டிலை ஆட்டிக் கொண்டு தாலாட்டுப் பாடும் தாயின் வாய் அசைவினை நோக்கித் தானும் வாய் அசைத்துப் பொருளற்ற மழலைச் சொற்களை உதிர்க்கத் தொடங்குகின்றது. பெரியவர்களைக் காட்டிலும் குழந்தைகள் அகண்ட செவிகளும் நீண்ட நாக்குகளும் கொண்டனவாய்த் துலங்குகின்றன. எனவே தாலப் பருவம் என்பது பிள்ளைப் பருவங்களில் வரும் பத்துப் பருவங்களுள் ஒன்றாகும். ‘தாலோ தாலேலோ’, ‘ஆராரோ ஆராரோ, ஆரிவரோ, ஆராரோ’ என்னும் சொற்கள் குழந்தையின் நெஞ்சில் கிளர்ச்சியை ஊட்டுவனவாகும். கவிமணி பாடிய குழந்தைத் தாலாட்டுப் பாடல்களில் சில பொறுக்கு மணிகளை இங்கே காண்போம்.

முல்லை நறுமலரோ?
முருகவிழ்க்குங் தாமரையோ?
மல்லிகைப் பூவோ?
மருக்கொழுந்தோ சண்பகமோ?

★★★

நெஞ்சிற் கவலையெலாம்
நீங்கத் திருமுகத்தில்
புஞ்சிரிப்பைக் காட்டி, எம்மைப்
போற்றும் இளமதியோ?

★★★


கண்ணுறங்கு, கண்ணுறங்கு,
கண்மணியே! கண்ணுறங்கு :
ஆராரோ? ஆராரோ?
ஆரிவரோ? ஆராரோ?

இந்தப் பாடல்களில் அமைந்துள்ள கற்பனையும் பாட்டோட்டமும் பாராட்டத் தகுவனவாகும்.

குழந்தையாக இருக்கும்பொழுதே நல்ல பழக்க வழக்கங்களைப் புகட்டிவிடுதல் நல்லது என்ற நிலையைத் தான் ‘ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது’ என்ற ஒரு முதுமொழி குறிப்பிடுகின்றது. இந்த முறையில் ஒருவருக்கு அறிவுரை கூறவேண்டுமானால் அவர் மனம் மகிழ முன்னிலைப்படுத்தி அதன் பின்னரே கூற வந்த அறவுரையை அவர் மனம் கொள்ளும்படி குறிப்பின் வெளிப்படக் குறிப்பிட வேண்டும். இவ்வாறான போக்கினைப் புறநானூற்றுப் பாடல்களில் காணலாம், அரசர்களுக்கு அமரின் இடையே அஞ்சாது அறவுரை கூறத் துணிந்த புலவர் பெருமக்கள் முதற்கண் அரசனையும் அவன் பிறந்த மரபினையும் வாழ்த்தி தாம் கூறவந்த கருத்தை எடுத்து மொழிவது வழக்கம். அம். முறையில் குழந்தையினை வைகறையில் துயில்விட்டு எழுப்ப நினைக்கும் கவிமணி அவர்கள், குழந்தையின் மனப் பாங்கினைப் உணர்ந்து தம் பாடலைப் புனைந்துள்ளார்.

அப்பா!! எழுந்திரையா!
அரசே! எழுந்திரையா!
கொக் கொக்கோ என்று
கோழி அதோ கூவுது பார்!

கா கா கா என்று
காகம் பறக்குது பார்!
கிழங்கு வெளுக்குது பார்!
கிரணம் பரவுது பார்!

இந்தப் பாடல்களில் குழந்தைக்கு வேடிக்கை காட்டிக் காலையில் கண் மலரச் செய்யும் பக்குவத்தைக் காண்கின்றோம். மேலும் அவர் குழந்தை மகிழ்வோடும் வியப்போடும் கானும் கறவைப் பசுவினையும் கன்றுக் குட்டி யினையும் காட்டி. பின்னர், பால்குடிக்க, பழம் தின்ன வேண்டும் என்று மகிழ்ச்சியூட்டி ஊடேயே பாடங்கள் படிக்க வேண்டிய அவசியத்தினையும் உரிய நேரத்தில் பள்ளிக்குச் செல்லவேண்டிய பக்குவத்தினையும் நயம்பட உரைக்கின்றார்.

கறவைப் பசுவை அதன்
கன்று சுற்றித் துள்ளுது பார்!
பால் குடிக்க வேண்டாமோ?
பழம் தின்ன வேண்டாமோ?
பாடங்கள் எல்லாம்
படித்திட வேண்டாமோ?
சீக்கிரம் பள்ளிக்குச்
சென்றிட வேண்டாமோ?
காலையும் ஆச்சுதையா!
கண்விழித்துப் பாரையா!
அப்பா!! எழுந்திரையா!
அரசே எழுக்திரையா!

அடுத்து, கானலப்பாட்டு என்ற தலைப்பில் அமைந்த பாடலிலும் இதே விரகினைக் கையாளுவதைக் காணலாம்.

பொழுது விடிந்தது; பொற்கோழி கூவிற்று;
பூஞ்செடி பொலிவதைப் பாராய்!
பொன்னே! நீ எழுங் தோடி வாராய்!

காகம் கரைந்தது; காலையும் ஆயிற்று;
கனியுதிர் காவினைப் பாராய்!
கண்ணே! நீ எழுங் தோடி வாராய்

குழந்தைத் தோழர்கள்

குழந்தைகளுக்குக் காக்கையும், கோழியும், நாயும். கிளியும், பகவும், கன்றும் இனிய தோழர்கள் ஆவர். எனவே கவிமணியின் பாட்டு இத்துறைகளில் அமைந்திருப்பதில் வியப்பில்லை. எளிய பாடல்களில் கற்பனை நயத்தினைக் குழைத்துக் குழந்தையின் உள்ளத்தில் அறிவு வேட்கையினைக் கவிமணி அவர்கள் உண்டாக்குகின்றார். சேவற் கோழியைப் பற்றிப் பாடும்போது,

குத்திச் சண்டை செய்யவோ?
குப்பை கிண்டி மேயவோ?
கத்திபோல் உன் கால் விரல்
கடவுள் தந்து விட்டனர்!


காலை கூவி எங்களைக்
கட்டில் விட்டெ ழுப்புவாய்,
வேலை செய்ய ஏவுவாய்;
வெற்றி கொண்ட கோழியே!

என்று பாடியுள்ள திறம் மகிழ்தற்குரியது. பெட்டைக் கோழியைப் பற்றிப் பாடும் பாடலில் கவிஞரின் கழிவிரக்கப் பண்பு புலனாகக் காணலாம். ‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பது தமிழ்ப் பழமொழி. இம்முறையில் பெட்டைக்கோழியை அடைக்கும்பொழுது கூரையை விட்டு இறங்கிவரச் சொல்லி; பிள்ளைகளையும் கூட்டிவரச் சொல்லிக் கொத்திக் கொத்தித் தின்னக் குட்டை நெல்லைக் காட்டும் இரக்கம் மனம் கொளத் தக்கதாகும். சின்னக் குழந்தைகள் நெஞ்சத்தில் எளிய உயிர்களுக்கும் இரங்கும் அரிய கருணை உள்ளத்தினை இப்பாடல்களில் புகட்டி நிற்கக் காண்கின்றோம்.

கோழீ! கோழீ! வா வா;
கூரை விட்டு இறங்கி வா!
.......................................
பெட்டைக்கோழீ! வா வா!
பிள்ளைகளைக் கூட்டி வா!
குட்டை நெல்லைக் கொட்டினேன்;
கொத்திக் கொத்தித் தின்ன வா!

மேலும், இப்பாடலின் இறுதி அடிகள் வானத்தில் வட்ட மிடும் பருந்துக்குப் பெட்டைக்கோழியின் இளைய குஞ்சுகள் எங்கே வஞ்சனையால் இரையாகிப் போய் விடுமோ என்று தவிக்கும் இரக்க உள்ளத்தைக் காணலாம்.

வஞ்சமாய்ப் பருந்ததோ
வானில் வட்டம் போடுது,
குஞ்சணைத்துக் காப்பாயோ?
கூட்டில் கொண்டு சேர்ப்பாயோ?

கவிமணிக்குக் கிளியிடம் மிகுந்த பற்று. அது பற்றி எவ்வளவோ பாடியிருக்கின்றார். அவ்வளவும் உணர்ந்து பாடியவை, உண்மை நிறைந்தவை. இவ்வாறு கூறுகிறார் புலவர் செ. சதாசிவம் அவர்கள் . [8] ‘கிளியை அழைத்தல்’ என்று தலைப்புடைய பாடல்,

பச்சைக்கிளியே! வா! வா!
பாலும் சோறும் உண்ண வா!
கொச்சி மஞ்சள் பூச வா,
கொஞ்சிவிளை யாட வா!

என்று தொடங்குகிறது. இந்தப் பாடலில் அமைந்துள்ள சில பகுதிகள் தடைபடாப் பாட்டோட்டம் கொண்டு உரிய பொருளை உள்ளடக்கி நிற்கின்றன.

வட்டமாய் உன் கழுத்திலே
வான வில்லை ஆரமாய்,
இட்ட மன்னர் யாரம்மா?
யான் அறியக் கூறம்மா!
பவழக் காரத் தெருவிலே
பவழங் காண வில்லையாம்
எவர் எடுத்துச் சென்றனர்?
எனக் கறிந்து சொல்வையோ!

இந்த இரண்டு பாடல்களிலும் கவிமணியின் சந்தநய இன்பத்தினை அறிந்து மகிழலாம். கூண்டுக் கிளியைப் பார்த்துச் சிறுவன் ஒருவன் தான் பாலைக் கொண்டு தந்தும், பழம் தின்னத் தந்தும் சோலைக்கு ஓடிப்போக ஏன் வழி பார்க்கிறாய் என்றும், கூட்டில் வாழும் வாழ்வினில் குறைகள் உண்டோ என்றும் கேட்கிறான். அதற்குக் கிளி மறுமொழியாகக் கூறும் பகுதி குழந்தையின் சிந்தனைச் செல்வத்தினையும், உயரிய கொள்கைப் பிடிப்பினையும் வளர்ப்பதாகும். அப்பகுதி வருமாறு :

சிறையில் வாழும் வாழ்வுக்குச்
சிறகும் படைத்து விடுவானோ?
இறைவன் அறியாப் பாலகனோ?
எண்ணி வினைகள் செய்யானோ?

பாலும் எனக்குத் தேவையில்லை;
பழமும் எனக்குத் தேவையில்லை
சோலை எங்கும் கூவி நிதம்
சுற்றித் திரிதல் போதுமப்பா!

இது போன்றே பசுவைப் பார்த்துப் பாடும் பாலகன்,

பச்சைப்புல்லைத் தின்று, வெள்ளைப்
பால்தர, நீ என்ன
பக்குவஞ் செய்வாய்? அதனைப்
பகருவையோ பசுவே!

என்று கேள்வி தொடுக்கின்றான். அடுத்துப் ‘பசுவும் கன்றும்’ என்ற பாடல் குழந்தை இலக்கியத்தில் சாகா வரம் பெற்ற பாடலாகும். சொற்களின் எளிமையும் இனிமையும் இப்பாட்டில் ஒன்றையொன்று போட்டியிட்டு நிற்கின்றன.

தோட்டத்தில் மேயுது
வெள்ளைப்பசு-அங்கே
துள்ளிக் குதிக்குது.
கன்றுக் குட்டி

அம்மா என் குது,
வெள்ளைப்பசு-உடன்
அண்டையில் ஓடுது
கன்றுக் குட்டி

நாவால் நக்குது
வெள்ளைப்பசு-பாலை
நன்றாய்க் குடி க்குது,
கன்றுக் குட்டி.

முத்தம் கொடுக்குது,
வெள்ளைப்பசு-மடி
முட்டிக் குடிக்குது
கன்றுக்குட்டி,

விளையாட்டிலும் ஓர் எல்லை வேண்டும் என்பதனை,

கட்டும் பாண்டி யாடலாம்,
களைத்து விட்டால் நிறுத்தலாம்;
எய்யாப் பாண்டி யாடலாம்;
எய்த்து விட்டால் நிறுத்தலாம்;

என்ற பாடலில் புலப்படுத்தியுள்ளார். வில்லியம் பிளேக் என்பவர் ஆங்கிலத்தில் எழுதிய பாடலைக் குழந்தைகளுக்காகத் தமிழில் மொழி பெயர்த்த பொழுது,

கூட்டில் அடைத்திடினும்-இரையினைக்
கொண்டு கொடுத்திடினும்,
காட்டில் வளர்ந்த குணம்-புலிகளும்
காட்டா திருக்கு மோடி?

மானைப் படைத்த தெய்வம்-புலியையும்
வளர்த்து விடலா மோடி..?
தேனைப் பழித்த சொல்லாய்!-எனக்குநீ
தெரிந்துரை செய்யா யோடி?

என்ற பாடல்களில் எண்ணத்தை வளர்க்கும் இனிய வினாக்களை எழுப்பியுள்ளார்.

வெண்ணிலாப் பாட்டு

‘நிலா நிலா வா வா’ என்று குழந்தைகள் பாடி மகிழ்வது இயற்கை. இம்முறையில் சந்திரன் என்ற தலைப்பில் கவிமணி பாடியுள்ள பாடலில் பல சிறப்புகளைக் காணலாம். இந்தப் பாடலில் காட்சி இன்பமும் கருத்து இன்பமும் காந்தியக் கருத்தும் அழகுறப் பொருந்தி உள்ளதனைக் காணலாம்.

காட்சி வருணனை

மீனினம் ஓடிப் பரக்குதம்மா!-ஊடே
வெள்ளி ஒடமொன்று செல்லுதம்மா!
வானும் கடலாக மாறு தம்மா?-இந்த
மாட்சியி லுள்ளம் முழுகு தம்மா!

முல்லை மலர்ப்பந்தல் இட்டனரோ-தேவர்
முத்து விதானம் அமைத்தன ரோ?
வெல்லு மதியின் திருமணமோ?-அவன்
விண்ணில் விழாவரும் வேளையிதோ?

என்ற பாடல்களில் காட்சியின்பமும்,

அம்புயம் வாடித் தளர்ந்ததம்மா!-அயல்
ஆம்பலும் கண்டு களிக்குதம்மா!
இம்பருலகின் இயல்பிதம்மா!-மதிக்கு
இன்னார் இனியாரும் உண்டோ அம்மா?

மாற்றம் உலகின் இயற்கையென-இங்கு
மாந்தரும் கண்டு தெளிந்திடவோ,
போற்றும் இறைவன் இம் மாமதியம்-விண்ணில்
பூத்து கிலவ விதித்தனனே!

என்ற பாடல்களில் சிறந்த கருத்தும்,

கூனக் கிழவி நிலவினிலே-ராட்டில்
கொட்டை நூற்கும்பணி செய்வதை இம்
மாநிலம் கண்டு மகிழ்ந்திடவே-காந்தி
மாமதி யோங்கி வளருதம்மா!

என்ற பாடலில் காந்தியமும் அமைந்து துலங்குவதைக் காணலாம்.

காட்சி இன்பம்

ஒர் ஏழைப்பெண் தன் தாயிடம் கடிகாரம் வாங்கித் தரும்படி கேட்கிறாள். அதற்கு அந்த ஏழைத் தாய், “மகளே! நேரத்தை அறிவதற்கு இயற்கையிலேயே பல வழிகள் இருக்க நமக்குக் கடிகாரமும் வேறுவேண்டுமா?” என விடையிறுக்கிறாள். சேவற் கோழியும் காகமும், செங்கதிரும் செந்தாமாரையும், தன் நிழலும் நேரத்தைச் சரியாக உணர்த்துமே என்று அந்தத் தாய் இயற்கையின் இனிய பெற்றியை எடுத்து இயம்புகின்றாள்.

சுற்றுப் பொருளெல்லாம் உற்றுநோக்கி-அவை
சுட்டும் மணிநேரம் கண்டறிவாய்!
பெற்ற முத்தே! இந்த உண்மை அறிவோருக்குப்
பின்னும் கடிகாரம் வேண்டுமோடி?

என்று இறுதியாகக் கூறி, மனித வாழ்விற்கு இயற்கை பின்னணியாகப் பொலிவதனை எடுத்து மொழிகின்றார்.

அடுத்து, அவருடைய ‘ஸைக்கிள்’ பாட்டு குழந்தைகளுக்கு நன்கு அறிமுகமான பாட்டு.

தங்கையே பார்! தங்கையே! பார்
ஸைக்கிள் வண்டி இதுவே பார்!

என்று தொடங்கி,

ஒன்றன் பின் ஒன்றாக
உருளும்பை தாக்களைப் பார்!
அக்காளும் தங்கையும் போல்
அவைபோகும் அழகைப் பார்!

என்று குழந்தைகளுக்குப் பாட்டிலேயே ஒற்றுமை உணர்ச்சியினை ஊட்டுகின்றார்.

கதைப்பாட்டில் கருத்து

‘ஊகம் உள்ள காகம்’ ‘நெற்பானையும் எலியும்’ ‘அப்பம் திருடின எலி’ முதலிய கதைப் பாடல்கள் குழந்தைகளுக்குக் கதையின் வாயிலாக அரிய கருத்துகளை உணர்த்தி நிற்கின்றன. தண்ணிர்த் தாகத்தால்,அலைந்து திரிந்த காக்கை மண்ணாற் செய்த ஒரு சாடியின்:அடியில் சிறிது தண்ணிரைக் கண்டு, அந்தச் சாடியினுள் சிறு சிறு கற்களைப் பொறுக்கி வந்து இட்டு, தண்ணிர் மேலே வர, நீரைக் குடித்துத் தன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டது என்று கதை சொல்லி, கதையின் இறுதியில்,

ஊக்க முடையவர்க்குத்-துன்பம்
உலகில் இல்லை, அம்மா!
ஆக்கம் பெருகும், அம்மா!-இதை நீ
அறிய வேண்டும், அம்மா!

என்று கூறி, ‘ஊக்கம் உண்மை வாழ்வுக்கு ஆக்கம்’ என்பதனை உணர்த்தியுள்ளார்.

‘நெற்பானையும் எலியும்’ என்ற கதைப் பாட்டில் ஓசை நயத்தோடு மலைவீழ் அருவி போன்று சொற்கள் குதித்து வருவதையும் காணலாம்.

பாட்டியின் வீட்டுப் பழம்பானை-அங்தப்
பானை ஒருபுறம் ஓட்டையடா!
ஓட்டை வழியொரு சுண்டெலியும்-அதன்
உள்ளே புகுந்துகெல் தின்றதடா!

பாட்டி வீட்டில் ஒரு பழைய பானையில் நெல் இருந்தது. பானையின் ஒருபுறம் ஒட்டை, அந்த ஒட்டையின் வழியே உள்ளே சென்ற சுண்டெலி ஒன்று நெல் தின்றது. அளவுக்கு மீறித் தின்றதால் வயிறு புடைத்தது. எனவே உள்ளே சென்ற எலி ஒட்டை வழியே வெளியே திரும்பி வர முடியாமற் போயிற்று. மறுநாள் பாட்டி பானையின் மூடியைத் திறந்தாள். எலி வெளியே வந்தது. ஆனால் பாவம், அந்த வேளை பார்த்துப் பூனை ஒன்று அங்கே வந்து விட்டது. பூனை எலியைத் தின்று விட்டது. இந்தக் கதையைக் கூறி, இறுதியில்,

கள்ள வழியினிற் செல்பவரை-எமன்
காலடி பற்றித் தொடர்வானடா!
உள்ள படியே நடப்பவர்க்குத்-தெய்வம்
உற்ற துணையாக நிற்குமடா!

என்று கள்ள வழியில் சென்றால் காலன் விடமாட்டான்; கள்ள வழியில் சென்றால் பூனைக்கு இரையான சுண்டெலியின் கதியே நம் கதியும் என்று குழந்தைகள் கூறிக் கொள்ளும். இவ்வாறு கதையும் கருத்தும் இணைந்துள்ள இத்தகைய கதைப் பாடல்கள் குழந்தைகளின் மன வளர்ச்சிக்குத் துணை நின்று, பண்பு நிலைக்குப் படிப் படியாகக் கொண்டு செல்லும்.

அப்பம் திருடின எலி, திருட்டில் பெற்ற அப்பத்தைத் தான் மட்டுமே தின்று இறப்பது உறுதியாயிற்று என்று கூறி, அளவு கடந்தால் ஆரமுதும் நஞ்சு என்ற கருத்தையும், கிட்டிய பொருளை எட்டிய மட்டும் எல்லார்க்கும் கொடுத்து உண்ணவேண்டும் என்ற கருத்தினையும் கவிமணி புலப் படுத்தியுள்ளார்.

‘ஒளவையும் இடைச்சிறுவனும்’ என்ற பாடல், ஆழக் கற்றாலும் அடக்கம் மிகத்தேவை என்பதனையும் ‘புத்தரும் ஏழைச் சிறுவனும்’ என்ற பாடல் பிறருக்கு நன்மை செய்பவர் மேற்குவத்தார் என்றும், தீமை செய்பவர் தீண்ட ஒண்ணாதார் என்றும் குறிப்பிடுகின்றன.

பெரியோரைப் போற்றுதல்

குழந்தைகளுக்குப் பெரியோர்பால் பேரன்பும் மதிப்பும் பெருக வேண்டும் என்பதனைச் சில பாடங்களில் கவிமணி வற்புறுத்துகின்றார். ஒளவைக் கிழவியின் அருமையினை,

கூழுக் காகக் கவிபாடும்
கூனக் கிழவி அவளுரையை
வாழும் வாழ்வில் ஒருநாளும்
மறவோம் மறவோம் மறவோமே!

என்றும், திருவள்ளுவரை,

சாதி ஒன்றேயாம்-தமிழர்
சமயம் ஒன்றேயாம்
நீதி ஒன்றேயாம்-என்று
நிலைநிறுத்தி நின்றோன்

என்றும், கம்பனை,

ஆரியம் நன்குணர்ந்தோன்-தமிழின்
ஆழம் அளந்துகண்டோன்;
மாரி மழைபோலக்-கவியின்
மழைபொழிந் திடுவோன்

என்றும், அமரகவி பாரதியினை,

ஊரறிய நாடறிய உண்மை யெல்லாம்
ஒருவரையும் அஞ்சாமல் எடுத்து ரைத்தோன்
ஆரமுதம் அனையகவி பாடித் தந்தோன்
அமரகவி யென்றெவரும் புகழ்ப் பெற்றோன்

என்றும் பாடியுள்ளார்.

வாழ்க்கை நீதிகள்

வளரும் இளம்செடிக்கு உரம் ஊட்டிக் களை களைந்து நீர்பாய்ச்சி காவல் செய்தால் கதிரவன் ஒளியின் துணையுடன் அப் பயிர் நன்கு செழித்து வளரும். இம்முறையில் இளம் நெஞ்சில் உயரிய கருத்துகளை எளிய சொற்களால் புகுத்தி, அரிய வாழ்க்கைத் தத்துவங்கள் வெளிப்படுத்தியுள்ளார். வாழ்க்கைத் தத்துவங்கள் என்ற தலைப்பமைந்த கவிதையில், ‘நாமே நமக்குத் துணையானால், நாடும் பொருளும் நற்புகழும், தாமே நம்மைத்தேடிவரும்’ என்றும் ‘நெஞ்சிற் கருணையும் நேயமும் விஞ்சும் பொறுமையும் கொண்டவர்க்கு வெல்லும் படைகள் வேறு வேண்டா’என்றும், உள்ளம் பொருந்தி ஊக்கம் பெருக உழைத்தால் தடைகள் பொடியாகிப் பள்ளம் உயர்மேடாகும் என்றும் கூறி, இறுதியில்,

கால நதியின் கதியதினில்
கடவுள் ஆணை காண்பீரேல்
ஞால மீது சுகமெல்லாம்
நாளும் அடைந்து வாழ்வீரே!

என்றும் தெய்வ நம்பிக்கையை, கடவுள் ஆணையை வற்புறுத்துகின்றார்.

‘தைப்பொங்கல்’ என்ற கவிதையில், பொங்கல் பொங்கி முடிந்த பிறகு கடவுளுக்கு, முதலிலும் காகத்துக்கு அடுத்தும், பின்னர் உடன் இருந்தோர்க்கும் வழங்கி ஒக்க உண்டு மகிழும் பாங்கினையும் எடுத்து மொழிகின்றார்.

கவிமணி காட்டும் உவமை நலமும் நகைச்சுவைத் திறனும்

கவிமணி கையாளும் உவமைகள் எளியன; இனியன. ‘பூமகளின் புன்னகைடோல் பூத்திடுவோம்’ என்றும், ‘கம்பன் பாமணக்கும் தமிழினைப்போல் பரிமளிப்போம்’ என்றும் பாடும் பாடல்களில் உவமையின் எளிமையைக் காணலாம்.

‘தீபாவளிப் பண்டிகை’ என்ற பாட்டில்,

இட்டிலி வீரர்தென் னிந்தியராம்-என்பது
இன்று காம் காட்டி விடுவோம், அடா!
சட்டினி நண்பன் துணை யிருக்க-அதில்
சந்தேகம் உண்டோ? நீ சொல்வாய், அடா!

என்ற பாடலில், நகைச்சுவை கொப்பளித்து வருவதனைக் காணலாம்.

உழைப்பும் உடல் கலமும்

‘உழைப்பின் வாரா உறுதிகள் உளவோ?’ என்பர் பெரியர். கவிமணியும், ‘ஆக்கம் வேண்டுமெனில், நன்மை அடைய வேண்டுமெனில், ஊக்கம் வேண்டுமப்பா, ஓயாது உழைக்க வேண்டுமப்பா எள்று கூறுகிறார்.

கூழைக் குடித்தாலும் குளித்தபிறகு குடிக்க வேண்டு மென்றும், ஏழையே ஆனாலும் இரவில் நன்றாய் உறங்க வேண்டுமென்றும் அறிவுறுத்துகின்றார். நூறு ஆண்டுகள் வாழ்வதன் ரகசியத்தைப் பின் வருமாறு கூறுகின்றார்:

தூய காற்றும் கன்னிரும்
சுண்டப் பசித்த பின் உணவும்
நோயை ஒட்டி விடும், அப்பா!
நூறு வயதும் தரும், அப்பா!

அடுத்து,

காலை மாலை உலாவிகிதம்
காற்று வாங்கி வருவோரின்
காலைத் தொட்டுக் கும்பிட்டுக்
காலன் ஓடிப் போவானே!

என்று கூறுகிறார். இங்குக் கவிமணியின் சொல்லு முறை (the technique of expression)நயம்பட அமைந்துள்ளது.

கவிமணி உணர்த்தும் தேசியம்

பாரதியாரின் கவிதை வெறியையோ தேசிய ஆவேசத்தையோ கவிமணியிடம் காண்பதற்கு இல்லை. எனினும், கவிமணியின் கவிதைத் திறன் போல் தேசிய உணர்ச்சியும் நம் பாராட்டுக்கு உரியதே.

கைத்திறன் பாட்டிலே ‘நாடிய சீர் நாடடைய’ என்று தொடங்கும் பாடலை அனுபவித்த குமரன் வாசகர்களில் சிலர், தேசிக விநாயகம் பிள்ளையைத் தேசிய விநாயகம் பிள்ளை என்றும் வாய் குளிரக் குறிப்பிடலாயினர்.

பாரதியையும் கவிமணியையும் ஒப்பு நோக்கிய ராஜாஜி பின்வருமாறு கூறியுள்ளார். ‘பாரதி காட்டுப் புளியமரம் போன்றவர்; காடு முரடு, உயிர் இருக்கும்; புளிப்பு உரம் இருக்கும். கவிமணியின் கவிதையில் நகாசு வேலை மிகுந்திருக்கும். பிறகு அன்பு மிளிரும். அத்தகைய கவி தேசிக விநாயகம் பிள்ளை;”[9] இது ஓரளவு உண்மைதான்.

மேற்காட்டிய பகுதிகள் கவிமணியின் தேசியப் பற்றை உணர்த்தும். ‘தாயிற் சிறந்ததப்பா பிறந்த தாய் நாடு’ என்று தாய்நாட்டுப் பற்றை ஊட்டி, “பேணி நம் சந்தத் தமிழ் வளர்ப்போம், தாய் நாட்டுக்கே உழைப்போம்” என்று. தமிழ்ப் பற்றையும் நாட்டுப் பற்றையும் விளக்கி, ‘காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய்வோம்’ என்று சொல்லி, பாரில் உயர்ந்த இமயமலையையும், அதன் சிகரத்தில் பறக்கும் தேசக் கொடியையும் காட்டி,

மானம் உருவாக வந்தகொடி - இதை
மாசுறச் செய்வது பாவம், பாவம்!
ஊனில் உயிருள்ள கால மல்லாம்-மிக
ஊக்கமாய் கின்று.நாம் காத்திடுவோம்

என்று நாட்டுப் பற்றுணர்வோடு நவில்கின்றார். ‘உத்தமனாம் அந்தணனைக் காந்தி அடிகளை அன்போடு சிந்தனை செய் நெஞ்சே தினம்’ என்று காந்தியடிகளைப் போற்றுகின்றார். இறுதியில், உலகமெல்லாம் ஒரு குடும்ப மாக வாழ வேண்டும் என்பதனை,

உலக மக்களெலாம்-அன்போடு
ஒரு தாய் மக்களைப் போல்
கலகமின்றி வாழும்-காலம்
காண வேண்டுமப்பா!

என்ற பாடலில் கவிமணி சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். கவிமணியின் கதர்ப்பற்றும் காந்தியப்பற்றும் நாடு அறிந்தவை.

முடிவுரை

கவிமணி குழந்தைகளின் மனத்தை நன்கு அறிந்தவர்,குழந்தைகளின் பேச்சில் மகிழ்பவர், அவர்களோடு உரையாட விரும்புவர்.

“அவர்(கவிமணி) குழந்தைகளின் மனத்தை நங்கு அறிந்தவர்; குழந்தைகளோடு இனிமையாகப் பேசுவதில் ஆசை உடையவர்; குழந்தைகளுடைய பேச்சையும் அவற்றின் இடையிடயே தோன்றும் பளிச்சென்று தோன்றும் உவமைகளையும் எண்ணி மகிழ்பவர்.”[10] இவ்வாறு திரு.பெ.நா. அப்புசாமி அவர்கள் குறிப்பிடுகின்றார்.

‘கவிமணி’ என்னும் பட்டம் சென்னை மாகாணத் தமிழ்ச் சங்க அன்பர்களால் சென்னை பச்சையப்பன் கல்லுரியில் தமிழவேள் உமாமகேசுவரன் பிள்ளை அவர்களால் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 24 ஆம் நாள் தரப்பட்டது. கவிமணி என்ற தம் பெயருக்கு ஏற்ப நல்ல கவித்துவத்தோடு மணியான கவிதைகளைத் தமிழ் நாட்டுச் சிறுவர் சிறுமியர்க்காக வழங்கிய பெருமை தேசிக விநாயகம் பிள்ளையைச் சாரும். பாரதியார் முப்பெரும் பாடல்வழி எப்போதும் தமிழ் மக்களால் நினைவு கூரப்படுவது போல, கவிமணி அவர்களும் தாம் இயற்றிய குழந்தை பாடல்களால் தமிழ்கூறு நல்லுலகத்தால் என்றென்றும் நினைவுகூரப் பெறுவர் என்பது உறுதி.

  1. புறநானூறு, 188
  2. அகநானூறு, 54:17-20.
  3. சுடர், கவிமணி மலர், பக்கம். 35.
  4. தமிழ்ச்சுடர் மணிகள்-ப. 423
  5. குழந்தை இலக்கிய வரலாறு, ப. 27.
  6. செ. சதாசிவம், கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை,ப-118
  7. சிறுபாணாற்றுப் படை ; 55-61
  8. கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை, ப. 120. சா-5
  9. பி ஸ்ரீ. நானறிந்த தமிழ் மணிகள் ப. 52.
  10. சுடர்: கவிமணி மலர். 1965, தில்லித் தமிழ்ச் சங்கம்-ப.49
"https://ta.wikisource.org/w/index.php?title=சான்றோர்_தமிழ்/4&oldid=1017794" இலிருந்து மீள்விக்கப்பட்டது