15

அழுக்குப்படாமல் ஏதாவதொரு நாற் காலியில் உட்காருவது தான். அந்தஸ்து என்றும் கைவருந்த உழைப்பது கேவலம் என்றும் நினைத்து இளைஞர்கள் முடங்கிக் கிடக்கும் அளவு இன்றைய நமது கல்வி முறை அவர்களைப் பலவீனப்படுத்தி, வைத்திருக்கிறது.

ஸ்டோரி டிஸ்கஷன் என்ற பெயரில் அங்கு அழைக்கப்பட்டிருந்தவர்களில் யாருக்கும் தீவிரமான முனைப்புடன் எதைப் பற்றியும் விவாதிக்கிற அக்கறையோ, அறிவோ இருக்க முடியுமென்று தோன்றவில்லை. ஏ. ஸி. அறையின் இதமான சுகத்தில் வம்பளந்து விட்டுக் கிடைத்ததைத் தின்று ஏப்பம்விட வந்த கூட்டமாக இருந்தது அது. தயாரிப்பாளருக்கும் பெரிய அக்கறை எதுவும் இருந்ததாகத் தெரியவில்லை.

தான் செய்ய விரும்புகிற தவறுகளைத் தன்னோடு சேர்ந்து சுலபமாக இசைந்து இணங்கி அங்கீகரிக்கும் சிலரைச் சந்தித்துப் பேசும் ஏற்பாடாகவே அவர் அதைச் செய்திருந்தார். அங்கு யாரும் எதைப் பற்றியுமே சீரியஸ்ஸாக இல்லை என்பது பூமிக்கு ஆச்சரியத்தை அளித்தது. சினிமா என்னும் கனவுலகத்தைச் சேர்ந்த அந்த மனிதர்கள் நேரத்தையும், பணத்தையும் தாராளமாக வீணாக்கினார்கள்.

அங்கே வந்திருந்த ஒரு துணை நடிகை எப்போதோ தன்னுடைய ஆட்டோவில் ஏறிப் பிரயாணம் செய்திருக்க வேண்டுமென்று பூமிக்குத் தோன்றியது. அதனால் தன்னை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கிறது என்று அவள் வந்ததிலிருந்து புலம்பிக் கொண்டிருக்க வேண்டுமென்று அவன் அநுமானித்தான்.

“அப்ப நீங்க ஹீரோவுக்குத் தோழனாக வந்து கராத்தே திறமையைக் காட்டறதாகவே வச்சுக்கலாம்"என்று இரண்டு மணி நேரத்துக்குப் பின் மெல்ல ஆரம்பித்தார் கனகசுந்தரம்.

‘அதுதான் நம்பர் ஒன் ஐடியா’ என்று எல்லாரும் உடனே ஒத்துப் பாடினார்கள், மறுபடி சாப்பிட்டார்கள். மறுபடி அரட்டையடித்தார்கள்.

பூமி தனக்கு வேலை இருக்கிறது என்று அவர்களிடம் சொல்லிக் கொண்டு புறப்பட்டான். கலை கத்திரி காய் என்ற பேரில் வீணில் உண்டுகளித்திருப்போர் கூட்டமாக இருந்தது அது. அவர்களில் யாருக்கும் பணம் பண்ணுவதையும், செலவழிப்பதையும் தவிர வேறு வாழ்க்கை இருப்பதாகத் தெரிய வில்லை. அதுவும் சுலபமாக உழைக்காமல் பணம் பண்ண விரும்பினார்கள். சுலபமாகச் செலவழிக்க விரும்பினார்கள். நோக்கமோ கொள்கையோ இல்லாத சுய நல லாப வேட்டைக்காரர்களாக இருந்த அவர்களிடம் இருந்து - விடுபட்டு விலகி வெளியேறினால் போதும் என்றிருந்தது அவனுக்கு.

“என்னங்க? அதுக்குள்ளார இப்பிடி அவசரப்படறீங்களே? இன்னும் டிஸ்கஷனே ஆரம்பிக்கலியே?” என்று அவனை மடக்கி நிறுத்தப் பார்த்தார் கனக சுந்தரம். பூமி மடங்கி நிற்கவில்லை. பிடிவாதமாகக் கிளம்பி விட்டான். சித்ரா வேறு இன்னும் வீட்டுக்குப் போகாமல் மெஸ்ஸில் அவனுக் காகக் காத்திருப்பாள். அன்றைய வரவு செலவுக் கணக்கு முடிக்க வேண்டும்.

பழைய பாலாஜி நகர் வீட்டில் இருந்திருந்தால் சித்ராவால் இவ்வளவு நேரங்கழித்துப் போக முடியாது. அவள் பக்கத்திலேயே அப்பர் சாமி கோயில் தெருவுக்கு வந்திருந்ததால் நேரத்தைப் பார்க்காமல் பூமிக்கும் முத்தக்காளுக்கும் உதவமுடிந்தது. சில நாட்களில் முத்தக்காளுக்குத் துணையாக அவள் மெஸ்ஸிலேயே தங்கும்படி கூட நேர்ந்திருக்கிறது. முத்தக்காளின் தனி அறையிலேயே அவளோடு தங்கிக்கொண்டிருந்திருக்கிறாள் சித்ரா. அப்படி ஓர் அந்யோந்யம் அவர்களுக்குள் உருவாகியிருந்தது.

ஆட்டோ -டாக்ஸி யூனியனின் பெரிய தலைவர்கள் சிலர் தலையிட்டதன் பேரில் பூமியின் பேரில் போடப்பட்டிருந்த பொய் வழக்கு வாபஸ் வாங்கப்பட்டிருந்தது. முத்தக்காளுக்கு உதவுவதற்காக நிரந்தரமாய் ஆட்டோவை ஓட்டுவதற்கு வேறு ஆள் அமர்த்தி விட்டு மெஸ்ஸில் இருந்தான் பூமி. மெஸ் முன்னைப் போல் பல மடங்கு வளர்ந்து பெருகி லாபகரமாக நடக்கத் தொடங்கியிருந்தது. பூமியும் சித்ராவும் உடனிருந்து உதவுவதால்தான் இந்த வளர்ச்சி என்பது முத்தக்காளுக்கும் புரிந்து தான் இருந்தது.

ஹோட்டல் குபேரா இண்டர் நேஷனலில் ‘ஸ்டோரி டிஸ்கஷன்’ என்ற பெயரில் கனகசுந்தரம் நடத்திய அரட்டைக் கச்சேரியிலிருந்து தப்பி மெஸ்ஸுக்குத் திரும்பிய இரவு பூமிக்கு அங்கே வேறொரு சோதனை காத்திருந்தது.

மறு நாள் காலையில் பயன்படுத்துவதற்கு இட்லி மாவரைத்து முடித்ததும் மாவரைக்கிறவர் உரலடியில் வழுக்கி விழுந்து இடுப்புப் பிடித்துக் கொண்டு விட்டது. அவரால் வேலை செய்ய முடியாதபடி ஆகிவிட்டது. காலை 4 மணிக்கு யாராவது எழுந்திருந்து வடைக்கு அரைத்தாக வேண்டும். அந்த அவசரத்தில் வேறு புது ஆள் யாரையும் தேட முடியாமலிருந்தது. சித்ரா அன்றிரவு அங்கேயே தங்கினாள். பூமி குபேராவிலிருந்து திரும்பியதும் அவனுக்கு இந்தத் தகவல் தெரிந்தது.

அந்த நேரத்துக்கு மேல் வேறு எங்கேயும் எடுத்துப் போய் அரைத்து வரவும் முடியாமல் இருந்தது. வடைக்கு அந்த மெஸ் பெயர் பெற்றது. மசால்வடையும், உளுந்து வடையும் இல்லாவிட்டால், பல டிரைவர்களுக்குக் காலைச் சிற்றுண்டியே உள்ளே இறங்காது. முத்தக்காள் மெஸ்வடை என்று நாக்கைத் தீட்டிக் கொண்டு வந்து உட்காருவார்கள். அரை டஜன் வடை, ஒரு டஜன் வடை என்று பார்ஸல்களே நிறையப்போகும். மெஸ்ஸில் வடை கிடைக்கவில்லை என்று கெட்ட பேர் ஆகிவிடக் கூடாது.

அதிகாலை நாலு மணிக்கு ஆட்டு உரலில் கடமுட ஓசை கேட்டுச் சித்ராவும் முத்தக்காளும் எழுந்து வந்து பார்த்தால் முண்டா பனியனும் வேஷ்டியுமாகப் பூமியே உட்கார்ந்து மாவாட்டிக் கொண்டிருந்தான்.

“என்ன தம்பி இது நீங்களே ...”

“காரியம் நடந்தாகணும் முத்தக்கா! என்ன ஏதுன்னு பார்த்துத் தயங்கிக் கொண்டிருக்க இது நேரமில்லை.”

“நானும் அக்காவும் மாத்தி மாத்தி அரைத்துக் கொடுத்திடலாம்னு திட்டம் போட்டிருந்தோம்."-- சித்ரா

“உங்களாலே இந்தக் குழவியை அசைக்கக் கூட முடியாது”

பூமி கூறியது உண்மைதான். பழங்காலத்து இராட்சத உரல் அது. தொழில் ரீதியாக மாவரைப்பவர்கள்தான் அதை அசைத்து வேலை செய்ய முடியும், அல்லது பூமியைப் போல் தசையை இறுக்கி வலிமையாக்கிக் கொண்டவர்களால்தான் முடியும்

பூமி மிகவும் சுலபமாகவே அதை செய்து கொண்டிருந்தான். ‘அழுக்கு படாமல் நாற்காலியில் உட்காருவது தான் அந்தஸ்து என்றும் கைவருந்த உழைப்பது கேவலம் என்றும் இளைஞர்கள் நினைத்து முடங்கிக் கிடக்கும் அளவு இன்றைய கல்வி அவர்களைக் பலவீனப் படுத்தியிருக்கிறது.’ பூமி ஆரம்பத்திலிருந்தே இந்த பலவீனத்தில் சிக்கியதில்லை. சிங்கப்பூரில் சீனர்கள் ஆண்களும், பெண்களுமாகக் கடின உழைப்பு உழைப்பதைப் பார்த்து வரழ்வைக் கற்றுக் கொண்டவன் அவன். உழைப்பில் எதுவுமே கேவலமில்லை. உழைக்காமல் இருப்பதிலோ எல்லாமே கேவலம்தான்.

படித்துப் பட்டம் பெற்றிருந்தும் ஆட்டோ ரிக்க்ஷா ஓட்டத் துணிந்திருந்தான் அவன். இன்று ஒரு சவாலை நிறைவேற்றிக் காட்டுவதற்காக இந்த மெஸ்ஸை ஏற்று நடத்திக் கொண்டிருந்தான். வேர்வை மின்னிடத் தசைகள் ஏறி இறங்கிப் புடைத்துத் தணிய அவன் மாவாட்டிக் கொண்டிருந்தபோது சித்ரா --பாத்திரத்தோடு ஆட்டிய மாவை அள்ளிக் கொண்டு போக அங்கே வந்தாள்.

“நேத்துப் போனீங்களே என்ன ஆச்சு? அந்தச் சினிமாகாரர் எதுக்குக் கூப்பிட்டாராம்?”

“நான் கராத்தே சண்டை போடுவேன் என்று யாரோ சொன்னார்களாம். அதனாலே கராத்தே அடிபிடி சண்டை எல்லாம் வருகிற மாதிரி ஒரு சினிமாவிலே நடிக்க வரமுடியுமா என்று கேட்டார். இப்பொழுது மாவாட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தால் மாவாட்டுகிற மாதிரி ஒரு சினிமாவிலே நடிக்க முடியுமா என்றுகூட வந்து கேட்பார்.

சித்ரா இதைக் கேட்டு நகைத்தாள். வெளியே பொழுது புலர்ந்து கொண்டிருந்தது. முதல் வியாபாரத் தேவைக்காக இரண்டு வகை வடைக்குமாகக் கொஞ்சம் மாவை அரைத்துக் கொடுத்து விட்டு மீதியை அரைத்துக் கொண்டிருந்தான் பூமி.

வழக்கமாக அந்த வேளையில் --அவன் பில்லுக்குப் பணம் வாங்கிப் போடுகிற வேலையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அன்று மாவரைக்கிற காரணத்தால் சித்ராவைக் கேஷில் உட்காரச் சொல்லியிருந்தான்.

அதிகாலை வியாபாரம் ஆரம்பமாகியிருந்தது. பெரும் பாலும் காலை வேளைகளில் டாக்ஸி ஆட்டோ டிரைவர்கள் - கார்பொரேஷன் மேஸ்திரிகள் இந்த மாதிரி ஆட்கள்தான் அதிகம் சாப்பிட வருவார்கள். மற்றவர்கள் வர ஏழு மணிக்கு மேலே ஆகும். நேரம் ஆக ஆகப் பார்ஸல் கட்டிக் கொடுக்கிற வேலை அதிகமாகும். பார்ஸல் பில்களுக்கு வேறு சரி பார்த்துப் பணம் வாங்கிப் போட வேண்டியிருக்கும். வெளியே ‘பிஸி’ ஆவதற்குள் தானே மாவரைத்து முடித்து விட்டுக் கேஷுக்குப் போய் விடலாம் என்ற நம்பிக்கையுடன் வேலையில் முனைந்திருந்தான் பூமி.

அவனுக்கு அந்த வேலை அதிகச் சிரமமாயில்லை. ஒரு புது விதமான உடற்பயிற்சி போலவே அமைந்திருந்தது. சிறிது நேரத்திற்குள்ளேயே பழகியும் விட்டது. அவன் மாவை அரைத்து முடித்து வழித்துப் போட இருந்த போது சித்ராவின் குரல் வெளியே யாருடனோ உரத்து வாதிடுவது கேட்டது. விநாடிக்கு விநாடி வாக்குவாதம் வலுப்பது குரல்கள். மூலம் உட்புறம் பூமிக்குக் காதில் விழுந்தது. அப்படியே மாவு வழித்த கையுடன் பூமி முன் பக்கம் விரைந்தான்.

கார்ப்பொரேஷனைச் சேர்ந்த அதிகாரிகள் என்று அனுமானிக்கத்தக்க ஓர் ஏழெட்டுப் பேர் கேஷ் டேபிள் முன்னால் நின்று கொண்டிருந்தனர். சித்ரா அவர்களிடம் ஏதோ இரைந்து கொண்டிருந்தாள்.

“ஒண்ணு ரெண்டுன்னா பரவாயில்லே சார்! சுளையா இருபது ரூபாய்க்கு மேலே பில் ஆகிறது! எப்படி சார் விட முடியும்?”

“கார்ப்பொரேஷன் ஆளுகளைப் பகைச்சுகிட்டீங்கன்னா இருபது ரூபாய்க்கு பதில் இருநூறு ரூபாய்க்குச் செலவு வச்சிடுவோம்! நாளைக்கே சானிடரி இன்ஸ்பெக்டரும் ஹெல்த் ஆபிஸரும் வருவாங்க, ஹோட்டல்லே சுகாதாரம், சானிடரி கண்டிஷன் எதுவுமே சரியில்லேன்னு ரிப்போர்ட் எழுதி உங்க ஹோட்டலை இழுத்து மூடும்படி பண்ணிடுவோம்.”

காக்கி அணிந்த ஒரு தடித்த ஆள் சித்ராவிடம் மிரட்டிக் கொண்டிருந்தான்.

“முடிந்தால் நீங்கள் அதைச் செய்து கொள்ளலாம். உங்கள் பேரைக் கொஞ்சம் சொன்னால் விஜிலன்ஸ் அண்ட் ஆண்டி கரெப்ஷன்ஸ்லே ரிப்போர்ட் செய்ய எங்களுக்கும் வசதியாயிருக்கும்” என்று பூமி முன்னால் போய் நின்றான்.

அவனை ஏற இறங்கப் பார்த்து விட்டுத் தங்களுக்குள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள் அந்தக் கார்ப்பொரேஷன் அலுவலர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/15&oldid=1028943" இலிருந்து மீள்விக்கப்பட்டது