16

லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது. மக்களும் அதிகாரிகளும் போட்டி போட்டுக்கொண்டு அதை வளர்க்கிறார்கள். பாதித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இருதரப்பாராலுமே பேணி வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது.

ஞ்சம், பிடுங்கித் தின்னுதல் இவற்றைப் பிரிட்டீஷ் ஆட்சி முறை தனது பிதுரார்ஜிதங்களாக இந்நாட்டுக்கு விட்டுச் சென்றதா அல்லது இந்தாட்டு அதிகார வர்க்கமே அந்தக் கலைகளைக் கற்றுக் கொண்டதா என்பது தெரியவில்லை. அரட்டி மிரட்டி எங்கெங்கே எதை லஞ்சமாக வாங்க முடியுமோ அங்கங்கே அதை லஞ்சமாக வாங்கி வயிறு வளர்க்கும் மனப்பான்மை மக்கள் சுதந்திரம் அடைந்து முப்பதுக்கும் மேற்பட்ட ஆண்டுகள் கழிந்தும் இங்கு நீடிக்கிறது.

தொகையும் அளவும்தான் வித்தியாசப் பட்டதே ஒழிய எல்லா மட்டங்களிலும் கொடுப்பவர், வாங்குபவர் தரத்துக்கும் நிலைமைக்கும் ஏற்ப நாட்டில் லஞ்சம் தொகை உயர்ந்து கொண்டே இருந்தது. தொடர்ந்து கொண்டேயும் இருந்தது. நகரின் உணவு விடுதிகள், கார்ப்பொரேஷன் அதிகாரிகள், அலுவலர்களின் பிடியில் சிக்கி அவதிப்படுவது பற்றிப் பூமி நிறையக் கேள்விப்பட்டிருந்தான்.

இன்று தானே அந்த அநுபவத்தை அடைந்து விட்ட போது அவனுக்கு எரிச்சலாயிருந்தது. முத்தக்காள் மெஸ்ஸைப் போல் ஒரு சிறிய உணவு விடுதியில் இருபது ரூபாய் முப்பது ரூபாய்க்குச் சாப்பிட்டு விட்டுக் காசு தராமல் கையை விரிக்கிற கார்ப்பொரேஷன் அதிகாரி தன் அதிகாரத்தையும், பதவியையும் பயன்படுத்தி ஒரு தொழிலை எப்படி மிரட்டமுடியும் என்பது புரிந்தது. மிகவும் கசப்பாகவே நேருக்கு நேர் புரிந்தது.

பூமி; குறுக்கிட்டுப் பேசியதும் அவர்கள் ஆளுக்குக் கொஞ்சமாகப் பணம் போட்டு பில்லைக் கட்டி முடித்தார்கள். போகும்போது பூமியைப் பார்த்து முறைத்துவிட்டுப் போனார்கள். அவர்களுடைய பார்வையிலிருந்த ஆத்திரம் பூமிக்குப் புரிந்தது. வயிறு புடைக்கத் தின்று விட்டுக் காசு கொடுக்காமல் ஏப்பம் விட்டபடி குஷாலாக நடந்து போகும் சுதந்திரத்தை இத்தனை நாளாக அநுபவித்து விட்டு இப்போது விட்டுக் கொடுப்பது சிரமமாகத்தான் இருந்தது.

கோயில் காளைகள் போல் எங்கு வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் புகுந்து இஷ்டம் போல் மேயும் இப்படிப்பட்ட கூட்டம் சுதந்திர இந்தியாவில் இன்று எல்லாத் துறைகளிலுமே இருந்தது.

பூமி இந்தக் கோயில் காளை மனப்பான்மையை அறவே வெறுத்தான். சக இந்தியனைச் சக இந்தியனே சுரண்டும் இந்த மனப்பான்மை அவனுக்குப் பிடிக்கவில்லை. அதிகாரம் என்பதே மக்களைச் சுரண்டுவதற்காக என்ற எண்ணம் இந்திய அதிகார வர்க்கத்தினரிடம் ஒரு சித்தாந்தமாகவே வளர்ந்திருப்பதை அவன் கண்டான். நாட்பட்ட சித்தாந்தமாக அது வளர்ந்து காடு மண்டியிருந்தது.

கேஷ் டேபிள் அருகே நின்று அந்தக் கார்ப்பரேஷன் ஆட்கள் போவதைப் பார்த்துக் கொண்டிருந்த சித்ரா பூமியைக் கேட்டாள்.

“நீங்களோ நானோ இல்லாத சமயம் பார்த்து வந்து. இவர்கள் அப்பாவி முத்தக்காளை மிரட்டப் போகிறார்கள். அப்படி நடந்தால் என்ன செய்வது?”

“நடந்தால் அதை எதிர்கொண்டு சமாளிப்போம்! இந்தத் தேசத்தைப் பிடித்த துரதிர்ஷ்டம் அது. மக்களின் வரிப் பணத்தில் நடக்கும் மாநகராட்சி, மக்களை மிரட்டுவதற்காகவேதான் இருப்பதாக எண்ணுகிறது. மக்களின் வரிப் பணத்தில் சம்பளம் வாங்கும் அதிகாரிகள் மக்களை அரட்டி மிரட்டி தர்பார் செய்யவே தாங்கள் அதிகாரத்தில் இருப்பதாகக் கருதுகிறார்கள். மக்களைக் காப்பாற்றவும் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும் ஏற்பட்ட போலீஸார் சில சமயங் களில் வேலியே பயிரை மேய்வது போல் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள்.”

“இந்நாட்டின் பெருவாரியான மக்களும் அவற்றுக் கெல்லாம் அடங்கித்தானே போகிறார்கள்?”

“உண்மைதான்! அடக்குகிறவனுக்கு மட்டுமே அடங்குவது அன்பாகவும், பண்பாகவும் நடந்து கொள்கிறீலனை உதாசீனம் செய்வது போன்ற குணக்கேடுகள் இந்நாட்டு மக்களிடமும் உண்டு. ஜனநாயகத்துக்கு ஆகாத குணக்கேடுகள் இவை.”

அவனும் சித்ராவும் இவ்வாறு உரையாடிக் கொண்டிருக்கையில் முத்தக்காள் அங்கே வந்தாள்,

"என்ன சத்தமாயிருந்திச்சு இங்கே?”

“ஒண்ணுமில்லே! யாரோ கார்ப்பொரேஷன் ஆட்கள்னு இருபது ரூபாய்க்குமேலே தின்னுப்புட்டு பில் கொடுக்காமல் போகப் பார்த்தாங்க. இவரு வந்து சத்தம் போட்டப்புறம் பில்லுக்குப் பணம் குடுத்திட்டு முறைச்சிட்டுப் போறாங்க.”

“ஐயையோ, அவங்க கிட்டப் போய் ஏன் பில் கேட்டடீங்க...? கார்ப்பொரேஷன் ஆட்கள், விற்பனை வரி ஆளுங்க இவங்க கிட்ட எல்லாம் நான் பில்லுக்குப் பணம் கேட்கிறதை விட்டு ரொம்ப நாளாச்சும்மா! அஞ்சு ரூபா பில்லைக் குடுத்திட்டு அதைக் குடுத்திட்டமே என்ற எரிச்சலில் அப்பாலே போயி ஐநூறு ரூபாய்க்குச் செலவு வச்சிடுவாங்க...”

“இங்கே இப்படிப் பரஸ்பரமான பயத்திலும், அட்ஜஸ்ட் மெண்டிலுமே நாம் லஞ்சத்தைப் பேணி வளர்த்து வருகிறோம்.”

“என்னப்பா செய்யறது; அங்கே இங்கே அலையச் சொல்லி நோட்டீஸ் குடுத்திட்டாங்கன்னா நான் ஒருத்தி கடையைக் கவனிப்பேனா? கார்ப்பரேஷன் ஆபீஸுக்கும் கமர்ஸியல் டாக்ஸ் ஆபீசுக்கும் அலஞ்சிக்கிட்டிப்பேனா?”

“லஞ்சம் என்கிற ராட்சஸக் குழந்தை இரட்டை மடங்கு சத்துணவுடன் இங்கு வளர்க்கப்படுகிறது. மக்களும் அதிகாரிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு அதை வளர்க்கிறார்கள். பாதித்தவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இரு தரப்பாராலுமே வளர்க்கப்படும் அபூர்வக் குழந்தை அது”

இதைக் கேட்டுச் சித்ரா சிரித்தாள். முத்தக்காளுக்கு இது புரியாததனாலோ என்னவோ அவள் கவலையோடு நின்று கொண்டிருந்தாள். அவள் முகத்தில் பயத்தின் சாயல் தெரிந்தது. பயமும், சுய நலமும் உள்ளவரை லஞ்சமும், சுரண்டலும் போக முடியாதென்று பூமி எண்ணினான். இந்திய ஜனத்தொகையில் தொண்ணூற்றைந்து சதவிகிதம் பயமும் சுய நலமும் நிறைந்தது. அதனால்தான் அவர்கள் சுமாரானவர்களை ஆளத் தேர்ந்தெடுக்கிறார்கள். மிகவும் சுமாரானவர். களாலேயே அதிகாரம் செய்யப்படுகிறார்கள். சுயமரியாதையும் தன்மானமும் இல்லாத மக்களுக்கு, சுய மரியாதையும் தன்மானமும் இல்லாத சுமாரான அரசாங்கம்தான் கிடைக்கும். சுய நலமும் பயமும் உள்ள மக்கள் தொகையைச் சகலவிதத் திலும் சுரண்டுவது மிகமிகச் சுலபம். தங்களுக்கு என்னென்ன உரிமைகள் உண்டு என்றே புரியாத மக்களை யார் வேண்டுமானாலும் மிரட்டி அதிகாரம் செய்யலாம். யார் வேண்டுமானாலும் மிரட்டிப் பணம் பறிக்கலாம். அதுதான் நடைமுறையில் இருந்தது.

முத்தக்காளே கார்ப்பொரேஷன் அதிகாரிகள் ஓசியில் சாப்பிட்டுவிட்டுப் போவது அநியாயம் என்று நினைக்கவில்லை. போனால் போகட்டும்! அவர்களால் வர முடிந்த கெடுதல் வராமல் இருந்தால் சரி என்றே நினைத்தாள். நியாயம் நேர்மைகளை விட அவ்வப்போது காரியம் நடக்க எது எது பயன்படுமோ அந்த முறைகளைக் கடைப்பிடித்துச் சமாளித்துக் கொண்டு எப்படியேனும் வாழ்வது என்ற நிர்க்கதியான நிராதரவான நிலைக்கு மக்கள் வந்து விட்டார்கள் என்று தோன்றியது.

ஒரு கணம் எதையோ நினைத்து மறுபடியும் பூமி தயங்கினான். முத்தக்காளுக்குத் தன்னால் நேர்ந்த சிரமத்தைச் சரி செய்வதற்கே இவ்வளவு பாடுபாட வேண்டியதாயிற்று. இனியும் புதுப் புதுச் சிரமங்கள் ஏற்பட வழி வகுக்கலாமா, கூடாதா என்ற முன்னெச்சரிக்கையோடு சிந்தித்தான் பூமி.

பொதுவாழ்க்கை இன்றுள்ள குழப்புமான நிலையில் அளவற்ற நேர்மையும், ரோஷமும் தன்மானமும் குற்றங்கண்டு, கூசும் மன நிலையும் உள்ள ஒருவன் ஒதுங்குதல், அல்லது ஒதுக்கப்படுதலுக்கே ஆளாகிறான். தானும் அப்படி ஆகி விடுவோமோ என்று பயமாகக் கூட இருந்தது அவனுக்கு. ஆனாலுமே அந்த நிராதரவான விதவையோடு அங்கே உடனிருந்து போராடி நியாயங்களைக் காத்தே ஆக வேண்டுமென்ற, பிடிவாதத்தையும் அவனால் விட்டுவிட முடியவில்லை.

அந்தப் பெரிய நகரில் அதிகாரத்திற்கும் மிரட்டலுக்கும் முன்னால் எல்லாருமே முத்தக்காளைப் போல அநாதரவான விதைகள் ஆகி விடுகிறார்களோ என்று சந்தேகமாக இருந்தது அவனுக்கு. கணவனை இழக்கிறவள் போல் தன் மானத்தை இழக்கிறவனும் ஒருவிதத்தில் விதவைதானே என்று எண்ணினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/16&oldid=1028944" இலிருந்து மீள்விக்கப்பட்டது