19

இன்றைய சமூகத்தின் எந்த மூலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன் வருகிறவர்களைவிட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்கி ஒடுங்கி விடுகிறவர்களே அதிகம்.

சித்ராவும் தேவகியும் வந்து கூறிய விவரங்களிலிருந்து பெரும்பாலான இந்நாட்டு இளைஞர்களைப் பற்றிக் கவலையும் பரிதாபமும் கொண்டான் பூமி. தங்களை விரும்பாத பெண்களைத் தாங்கள் விரும்புகிற கழிசடைகளாகக் காமுகர்களாய், முன்னேறுகிற ஒரு சமுதாயத்தில் வெறும் ‘நியூஸென்ஸ் வால்யூ’ மட்டுமே உள்ளவர்களாய் இன்றைய இளைஞர் சக்தி சிதறுண்டு போவதை அறிந்து வருந்தினான் பூமி.

படிக்கிற வயதில் அடுத்தவன் வீட்டுப்பெண் பிள்ளையைச் சுற்றுகிற இளைஞனைப்போல் சமூகவிரோதி வேறொருவன் இருக்க முடியாது. ஆண் துணையில்லாத ஓர் அநாதைக் குடும்பத்துப் பெண்ணுக்கு இப்படித் தொல்லை கொடுத்தால் அந்தக் குடும்பம் என்னதான் செய்யும்?.

‘இப்படி ஊர் வம்புக்கெல்லாம் வரிந்து கட்டிக் கொண்டு அலைய நாம்தானா அகப்பட்டோம்?’ என்று ஒருகணம் தோன்றியது. ஆனால் அடுத்த கணமே அந்த எண்ணம் மாறியது. ‘எல்லாருமே எல்லாவற்றிலும் சுயநலமாக மாறிவிட்டால் அப்புறம் மனிதனாக வாழ்வதில்தான் என்ன பெருமை இருக்கிறது?’ என்று எண்ணியபோது அவன் மனத்தில் பழைய கருணையும், இரக்கமுமே மேல் எழுந்துமிகுந்து நின்றன.

சித்ராவும் தேவகியும் தேடி வந்து வேண்டியதற்காக இந்த வம்பிலும் தானே தலையிடுவது என்று துணிந்தான் அவன். பதவியும், அதிகாரமும், பணமும் உள்ளவர்களிடம் மோதுவது எவ்வளவு சிரமமான காரியம் என்று அவன் யோசிக்கவில்லை. தயங்கியபடி அதைத் தள்ளிப் போடவுமில்லை. உடனே துரிதமாக அந்த அநாதைக் குடும்பத்துக்காகப் பரிந்துகொண்டு போக வேண்டுமென்றுதான் முனைப்பாயிருந்தது.

என்ன காரணத்தினாலோ தெரியவில்லை. பொதுக் காரியங்களில் இப்படி ஒரு முனைப்பையும் சுறுசுறுப்பையும் அவனால் தவிர்க்க முடியவில்லை. இந்த முனைப்பு அவனுடைய இரத்தத்தோடு கலந்து போயிருந்தது. இது அபாயம் தருவது. இது தனக்கு கேடு சூழ்வது என்று பிறர் நலனுக்காகவும் பொது நலனுக்காகவும் பாடுபடும்போது எந்த விநாடியும் எதற்கும் தயங்கி ஒதுங்க முடியாதது தன் பலமா பலவீனமா என்று பலமுறை அவன் தனக்குத்தானே சிந்தித்திருக்கிறான்.

காலையில் கல்லூரி தொடங்குகிற நேரத்துக்குப் பூமி அங்கே போய்விட்டான். அந்தக் கல்லூரியின் முதல்வர் ஒரு நடுத்தர வயதைக் கடந்த முதியவர். கல்லூரி மாணவர்கள், படிப்பு, இளைஞர் மனப்போக்கு ஆகியவை பற்றி மிகவும் கசப்பான உணர்ச்சியோடு இருந்தார். எதிலும் நம்பிக்கையோடு பேசவில்லை. அவர். ‘ஏதோ காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறேன்’ -என்கிற தோரணையில் அலுத்துக்கொண்டார். விதியையும் தலை எழுத்தையுமே நிறைய நம்பினார்.

“உங்கள் கல்லூரியில் உங்கள் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் படிக்கிற மாணவன் இப்படி ஒரு தவறு செய்தால் நீங்கள் கூப்பிட்டுக் கண்டிக்க வேண்டாமா? ஆண் துணையற்ற குடும்பத்து ஏழைப்பெண் ஒருத்தியைச் சுற்றிக்கொண்டு துரத்துவது என்பது படிக்கிற பையனுக்கு அழகில்லையே?” என்று பூமி பேச்சைத் தொடங்கினான். அவர் பதிலுக்குப் பூமியை நோக்கிச் சுரத்து இல்லாத குரலில் கூறலானார்.

அவனைக் கண்டிக்க நான் கிளம்பினால் என் வேலைக்கே ஆபத்தாக முடிந்துவிடும். அந்தப் பையனோட அப்பா ஆளும் கட்சியிலே செல்வாக்குள்ள பார்லிமெண்ட் மெம்பர், காலேஜ்போர்டு சேர்மன் அவர் சொல்றதைக் கேட்கக்கூடியவர். தவிர ஒரு பையன் காலேஜுக்குள்ளே தப்பாவோ, தாறுமாறாவோ நடந்தாலே எங்களாலே கண்டிக்க முடியலே. காலேஜுக்கு வெளியே அவன் எப்போ எந்தப் பெண்ணை துரத்திக்கொண்டிருக்கான்னு நாங்க வாட்ச் பண்றதோ கண்டிக்கிறதோ நடக்காத காரியம். இப்போ எல்லாம் நாங்க மாணவர்களுக்கு எதையும் சொல்லிக் கொடுக்க முடியற காலமில்லே சார். அவங்கதான் எங்களுக்குக் கற்பிக்கிறாங்க. நாங்க படிக்கிறோம் என்று கையை விரித்து விட்டார். பிரின்ஸிபால்.

இன்றைய சமூகத்தின் எந்த முலையிலும் ஒழுங்கற்று இருக்கிற ஒருவனைக் கண்டிக்க முன்வருகிறவர்களைவிட அவனுக்குப் பயந்து பணிந்து ஒதுங்குகிறவர்களும் ஒடுங்குகிறவர்களுமே அதிகம் தென்படுவது புரிந்தது.

தான் இனிமேல் அவரிடம் முறையிட்டுக் கொண்டிருப்பதில் பயனில்லை என்றெண்ணி விளையாட்டு மைதானத்துக்கு வந்தான் பூமி. கல்லூரி விளையாட்டு மைதானம் கலகலப்பாக இருந்தது. வகுப்புக்களில் இருந்ததைவிட அதிக மாணவர்கள் மைதானத்தில் இருந்தார்கள். வகுப்புக்கள் அவர்களைக் கவர வில்லை. மைதானமே கவர்ந்திருந்தது. அங்கிருந்த கல்லூரி அலுவலக ஊழியன் ஒருவனை அணுகி,

“இங்கே பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் படிக்கிறதாய்ச் சொன்னார்களே? அந்தப் பையனை எங்கே பார்க்கலாம்?” என்று பூமி கேட்டான்.

அந்த ஊழியன் ‘கல்லூரி லேபரேட்டரி’ என்று பெரிதாக எழுதிய ஒரு கட்டிடத்தின் முகப்பில் இருந்த மகிழ மரத்தடியைச் சுட்டிக் காட்டி, “பொம்புளைப்புள்ளைங்களுக்கான டே ஸ்காலர்ஸ் லஞ்ச் ரூம் வாசல்லே பாருங்க. அங்கே தான் யாருகிட்டவாவது வம்படிச்சுக்கிட்டிப்பாரு, ‘குமா குரு’ ன்னு சொல்லி விசாரியுங்கள். அதுதான் அந்தப் பையனோட பேரு” என்றான்.

உடனே பூமி லேபரேட்டரி முகப்புக்கு விரைந்தான்.

நயமாக வாய் வார்த்தையாகப் பேசி எடுத்துச்சொல்லி அதற்குக் கட்டுப்படாவிட்டால் தான் உடல் வலிமையைக் காட்ட வேண்டும் என்பது பூமியின் தீர்மானம். கல்லூரிக் காம்பவுண்டிற்குள் உலகத்தைப் பற்றியே நினைவு இல்லாமல் எதிர்காலச் சிந்தனைகளை அறவே தவிர்த்துவிட்டு அரட்டையும் சிரிப்பும், கேலியும் கிண்டலும், கும்மாளமுமாக இந்நாட்டு இளைய தலைமுறை வளைய வளைய வந்துகொண்டிருந்தது. கவலை இல்லாத கோவில் காளைகள் போல் எல்லா அரசியல் கட்சிகளுக்கும் ‘எடுப்பார் கைப் பிள்ளை’ யாகி யாராலும் தட்டிக் கேட்கப்படாமல் எவராலும் கண்டிக்கப்படாமல், அங்கே மாணவர்கள் மதமதத்துக் கொண்டிருந்தனர்.

ஏதோ ஒரு விநோதமான புது ரக மிருகக் காட்சிச் சாலைக்குள் நடந்து போவது போல உணர்ந்தான் பூமி. ஜீன்ஸும் பெல்பாட்டமும் சஃபாரியும் டி ஷர்ட்டும் விதம் விதமான நவ நாகரிக உடைகளுமாக அணிந்து இளமையின் பலவிதமான பிம்பங்கள் மனிதத் தன்மையின் அடையாளங்களே அற்ற மிருகத்தனமான உற்சாகத்தில் திளைத்திருந்தன. அவர்களுக்கு மனிதத்தன்மையைக் கற்பிப்பதற்கு .நியமிக்கப்பட்டிருந்த முதல்வரும் பேராசிரியர்களும் விரிவுரையாளர்களும், டெமான்ஸ்டிரேட்டர்களும் அந்தப் புதிய நாகரிக விலங்குகளிடம் அடிபடாமலிருக்கவும், கடிபடாமலிருக்கவும், நடுங்கிப் பயந்து பயந்து அந்த வளாகத்திற்குள் ஏதோ சிரமஜீவிகளாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தெரிந்தது.

அந்த மாணவன் குமரகுருவைச் சுற்றி ஜீன்ஸும், பல விதமான வக்கிரவாச்கங்கள் அச்சிட்ட. பனியன்களும் அணிந்த மாணவிகள் சிலர் நின்றிருந்தனர், வெடிச் சிரிப்பலைகள் கிளம்பி ஓய்ந்து கொண்டிருந்தன, ஒரே அட்டைதான்.

பூமி அருகே தென்பட்டதும் அவனை யாரென்று அறியும் முன்னரே சைகையான கேலிகளை அவர்கள் தங்களுக்குள் பரிமாறிக் கொண்டனர். பூமி தன் அநுமானத்தில் இவன்தான் குமரகுருவாயிருக்க வேண்டும் என்று எண்ணி அவனிடம், “நீங்கதானே மிஸ்டர் குமரகுரு? பார்லிமெண்ட் மெம்பர் பன்னீர்ச் செல்வத்தினுடைய சன்...?”

“ஆமாம்! சுருக்கமா இங்கே ‘குரு'ன்னு சொன்னாலே எல்லாருக்கும் புரியும். இந்தக் ‘காம்பஸ் ‘லே நான்தான் அத்தினிபேருக்கும் குரு.”

பூமி இதைக் கேட்டுப் புன்னகை புரிந்தபடியே, “ஒண்ணும் புரியலேயே? நீங்கள் இங்கே படிப்பதாக அல்லவா சொன்னார்கள்? உண்மையில் படிக்கிறீர்களா? அல்லது கற்பிக்கிறீர்களா?”

“அப்படிக் கேளு சொல்றேன்...படிக்கிறேன்னுதான் பேரு. ஆனா இங்கே சுத்திக்கிட்டிருக்கிற வாத்தியானுவ நிறைய எங்கக்கிட்டக் கத்துக்கிட்டுத்தான் பெறவு சும்மா கம்னு இருக்கப் பழகிக்கிட்டாங்க...”

கழுத்து முட்ட நிரம்பிய தடித்தனத்தில் வார்த்தைகள் வெளி வந்தன. பூமிக்குக் குமட்டியது.

“மிஸ்டர் குமரகுரு! உங்ககிட்டத் தனியாகக் கொஞ்சம் பேசணுமே!...”

இப்படிப் பூமி கூறியதைக் கேட்டு அவன் இடி இடியென்று சிரித்தான்.

சிரிப்பு ஓய்ந்ததும் தன் அருகே நின்றிருந்த ஜீன்ஸ் மாணவிகளைச் சுட்டிக் காட்டியபடி, “நான் இவளுக மாதிரிப் பொம்பளைக் கிட்டத்தான் தனியாப் பேச்சு வழக்கம். நீங்க... என்னடான்னா ..."

பூமிக்கு உணர்ச்சி நரம்புகள் புடைத்தன. அடக்கமாக இருக்க முயன்றான். கல்லூரி காம்பவுண்டிற்குள் கலகம் விளைவிக்கலாமா கூடாதா என்ற தயக்கம் வேறு தடுத்தது. தந்திரமாக நடந்து குமரகுருவை அடக்க விரும்பினான்.

“அப்போ உங்களிடத்தில் தனியாப் பேசணும்னாப் பொம்பளைங்க கூப்பிட்டாத்தான் வருவீங்களாக்கும்...”

“ஷ்யூர்! நிச்சயம் வருவேன்.”

“அப்படியானால் முறைப்படி அழைப்பு வரும்! வாருங்கள். சத்திக்கலாம் என்று பூமி கூறிவிட்டுப் புறப்பட்டான்.

“அதுசரி! நீ யாரு என்னன்னு சொல்லாமலே போறியேப்பா?” என்று மீண்டும் உற்சாகமான ஏகவசனத்திலேயே பூமியை மடக்கினான் குமரகுரு.

“இப்போது வேண்டாம்! அப்புறம் நீயே தெரிந்து கொள்ளலாம் வாத்தியாரே” என்று அதே ஏக வசனத்தில் அவனுக்குப் பதில் கூறிவிட்டு அங்கிருந்து விரைந்தான் பூமி.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/19&oldid=1028947" இலிருந்து மீள்விக்கப்பட்டது