20

தீமையைத் துணிந்து செய்கின்றவனை விட அதை எதிர்க்கத் துணியாது தயங்கி நிற்கிறவன் தான் இன்று மிகவும் மோசமானவன்.

ந்தக் கல்லூரியிலிருந்து திரும்பிச் சென்ற பூமி அன்று மாலையிலேயே சித்ராவையும் தேவகியையும் மீண்டும் சந்தித்தான். நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்ட சித்ராவுக்கும், தேவகிக்கும் ஓரளவு ஏமாற்றமாகக் கூட இருந்தது.

“நீங்கள் போய்ச் சந்தித்துப் பேசியதும், உங்களைப் பார்த்ததுமே அந்தப் பையன் திருந்தி வழிக்கு வந்துவிடுவான் என்று நினைத்தோம்."

"அது சாத்திய மில்லை! இந்தப் பையன் கொஞ்சம் முற்றிய கேஸ்! சாதுரியமாக வழிக்குக் கொண்டுவர வேண்டும். இல்லாவிட்டால் காரியம் கெட்டுப்போகும். முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் அதிர்ச்சி வைத்தியம் அளிக்க வேண்டும்.”

“என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள் நீங்கள்?” என்று தேவகியும் சித்ராவும் பூமியைக் கேட்டார்கள்.

பூமி கல்லூரியில் தனக்கும் குமரகுருவுக்கும் நடந்த உரையாடலைச் சொல்லி விவரித்தான்.

“நீங்கள் இருவரும் அந்தப் பெண்ணைக் கொஞ்சம் தந்திரமாக நடந்துகொள்ளச் சொல்லி ஏற்பாடு செய்தால் அவனுக்குப் பாடம் கற்பித்துவிடலாம்.”

“தந்திரமாக நடந்துகொள்வது என்றால் என்னதான் செய்ய வேண்டும் என்கிறீர்கள்?”

“அவனோடு பேசி அவனைத் தானே ஒரு பூங்காவுக்கு வரச் சொல்லி அவள் அழைக்கவேண்டும். அவனுக்குச் சந்தேகம் எதுவும் ஏற்படாதபடி மிகவும் கவனமாகக் கூப்பிட் வேண்டும்.”

“இது மிகவும் சிரமம். அந்தப் பெண்ணும் அவளுடைய அம்மாவும் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள். என்னவோ ஏதோ என்று சந்தேகப்படுவார்கள்.”

“சந்தேகப்பட்டுப் பயனில்லை! முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும்.”

“அவங்க ரொம்ப கெளரவமான குடும்பம். மத்தவங்களை ஏறெடுத்துப் பார்க்கவே பயப்படுவாங்க, தப்பா ஒண்ணை நடிக்கிறதுக்குக்கூடக் கூச்சப்படுவாங்க.”

“அநாவசியமான பயம், அநாவசியமான கூச்சம் எல்லாம் இந்தத் தலைமுறைக்கு ஒரு சிறிதும் ஆகாத குணங்கள். அனுவளவு கூச்சமும் பயமும்கூட இல்லாமல் சமூக விரோதிகள் எல்லாக் கெடுதல்களையும் உடனே துணிந்து செய்கிறபோது அதை எதிர்க்கவும் தடுக்கவும் வேண்டிய நல்லவர்கள் எடுத்ததற்கெல்லாம் ஒவ்வொரு விநாடியும் கூச்சமும் பயமுமாகத் தயங்கிக்கொண்டு நின்றால் எப்படி? தீமை செய்கிறவன் நாணுவதற்குப் பதில் நன்மை செய்கிறவனே நாணியும் கூசியும் பயந்து நின்றால் அப்படிப் பயந்து சாகிற சமூகம் உருப்படாது. அதனால்தான் மகாகவி பாரதி யார் புதிய தலைமுறை மனிதனுக்குச் சொல்லும்போது ‘நாணமும் அச்சமும் மடநாய்களுக்கு அன்றே வேண்டும்?’ என்று மிகவும் கடுமையாகச் சாடினார்,

தீயவற்றை எதிர்க்கக் கூசும் கூச்சமும், தயக்கமும் இந்திய சமூகத்தைப் பிடித்த புதிய தொத்து நோய்கள். நல்ல வற்றை ஆதரிக்கவும் தயங்கித் தீயவற்றை எதிர்க்கவும் தயங்கி எதற்கும் துணிய முடியாமல் நிற்கும் இரண்டும் கெட்டான் மனிதர்கள்தான் இன்று மிகப் பெரிய சமூக விரோதிகள். தீமையைத் துணிந்து செய்கிறவனைவிட, அதை எதிர்க்கத் துணியாது தயங்கி நிற்கிறவன் மோசமானவன். இப்போது கேள்வி எல்லாம் நாம் இந்தப் பிரச்னையைத் துணிந்து எதிர்த்து வெற்றி கொள்ளப் போகிறோமா இல்லையா என்பதுதான்! இதற்கு எனக்குப் பதில் தெரிந்தாக வேண்டும்.

சித்ராவும் தேவகியும் பிரச்னைக்கு இலக்கான அந்தப் பெண்ணின் தாயிடம் எவ்வாறு இதைப்பற்றிக் கூறுவது என்று தயங்கினார்கள். அவர்களுக்குள் இப்படி வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தபோது நல்லவேளையாக லெண்டிங் லைப்ரரி பரமசிவம் அங்கே தற்செயலாக வந்து சேர்ந்திருந்தார். அவரிடம் விவாதத்தைக் கூறி யோசனை கேட்டார்கள் சித்ராவும் தேவகியும். பூமி கூறியபடி பிரச்னையை மிகவும் சாதுரியமாகச் சமாளிக்க வேண்டும் என்பதை அவரும் ஒப்புக் கொண்டார். பெண்ணிடத்திலும் அவள் தாயிடத்திலும் தானே வந்து விஷயத்தை எடுத்து விளக்கிச் சொல்வதாகப் பரமசிவம் ஒப்புக்கொண்டார். சித்ராவுக்கும் தேவகிக்கும் அதைக்கேட்டுச் சற்றே தெம்பு வந்தது.

பூமியையும் உடன் வரவேண்டும் என்று அழைத்தார்கள் அவர்கள் “பரமசிவம் அண்ணாச்சி வந்தாலே போதுமே? நான் வேறு எதற்கு?” என்று மறுத்துப் பார்த்தான் அவன். பரமசிவமே அவனும் உடன் வந்தாக வேண்டுமென்று வற்புறுத்தினார்.

அங்கே பாலாஜி நகருக்கும் லாயிட்ஸ் ரோடுக்கும் நடுவே ஓர் ஒடுக்கமான சந்தில் இரயில் கம்பார்ட்மெண்ட் போல் இருபுறமும் நீண்ட குடியிருப்புக்கள் அடங்கிய அந்த ஒண்டுக் குடித்தன ஸ்டோர் அமைந்திருந்தது.

பூமி, பரமசிவம், தேவகி, சித்ரா எல்லாரையும் சேர்த்துப் பார்த்தபோது அந்த நடுத்தர வயதுத் தாய்க்கு ஆறுதலாகவும் ஆதரவாகவும் இருந்தது.

“ஊர் ரொம்பக் கெட்டுப்போயிருக்கு. தடிமாடு மாதிரி எப்பவும் வயசுப் பெண்ணைச் சுற்றிச்சுற்றி வரான் ஒரு போக்கிரி. அதைப்பத்திப் போலீஸ்லே போய் கம்ப்ளெயிண்ட் குடுத்தா அங்க போலீஸ் அதிகாரிகளே ‘நீங்கதான் கொஞ்சம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கணும். பெரிய எடத்துப்புள்ளை. நாங்க ஒண்ணும் ‘டச்’ பண்ணிக்க முடியாது. தண்ணியில்லா காட்டுக்கு மாத்திப்பிடு வாங்கன்னு நம்மை எச்சரிச்சு அனுப்பறாங்க. என்னை மாதிரி ஏழை பாழைங்க என்னதான் பண்ண முடியும்னு தெரியலே. ஏதோ தெய்வமாப் பார்த்து உங்களை எல்லாம் இங்கே அனுப்பி வைச்சிருக்கு... நீங்கள்ளாம் பார்த்துத்தான் ஒரு வழி பண்ணணும்’ என்றாள் நிராதரவான அந்தத் தாய்.

“பயப்படாமல் என்னவோ ஏதோ என்று யோசிக்ககாமல் நீங்கள் ஒரு காரியம் செய்ய வேண்டும். அந்தத் தறுதலை உங்கள் பெண்ணைத் தேடிவரும்போது அவளே அவனிடம் நைச்சியமாகப் பேசி மயிலாப்பூரிலுள்ள நாகேஸ்வரராவ் பார்க்கில் வந்து தனியே தன்னைச் சந்திக் கும்படி கேட்கச் சொல்லுங்கள். அவன் வரச் சம்மதிப்பான். இரட்டை மகிழ்ச்சியோடு வருவான். என்றைக்கு எந்த நேரத்தில் வருகிறான் என்பதை மட்டும் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவித்து விடுங்கள். நாங்கள் பார்த்துக் கொள்ளுகிறோம்” என்றார் பரமசிவம்.

அந்தத் தாய் கொஞ்சம் தயங்கினாள்.

“ஏதாவது ஏடாகூடமாக நடந்துவிட்டால் என்ன செய்வது?”

கோளாறாக எதுவும் நடக்காது! பார்க்கிலே அந்த நேரத்துக்கு முந்தியிருந்தே நாங்க தயாரா காத்திருப்போம். இப்போ நாங்க அவனுக்குக் கற்பிக்கிற பாடத்துக்கு அப்புறம் உங்கள் பெண் இருக்கிற திசைப்பக்கம் அவன் தலைவைத்துக்கூட படுக்கமாட்டான்” என்றார்கள் அவர்கள்.

“சொல்றபடி கேளுங்கம்மா! வேற யாரும் இந்த விஷயத்திலே நமக்கு உதவி செய்யமாட்டாங்க...” என்று சித்ராவும் தேவகியும் அந்த அம்மாளிடம் மன்றாடுவது போன்ற குரலில் கூறினார்கள்.

நீண்ட யோசனைக்குப் பிறகு அந்த அம்மாள் சம்மதித்தாள்.

இரண்டு தினங்களுக்குப் பின் மறுபடி சித்ராவும் தேவகியும் பூமியைத் தேடி மெஸ்ஸுக்கு வந்தார்கள்.

“நாம் விரித்த வலையில் அந்தக் கரடி விழப் போகிறது. நாளைக்கு மாலை ஏழு மணிக்கு அவனை நாகேஸ்வர ராவ் பூங்காவில் தன்னை வந்து சந்திக்கும்படி கேட்டுச் சம்மதிக்கச் ‘ செய்துவிட்டாள் அந்தப் பெண்” என்றாள் சித்ரா.

“அவுன் நேரே பார்க்குக்கு வரட்டும். அவனைச் சந்திப்பதற்கு அரை மணிக்கு முன்னால் அவளை அழைத்துக்கொண்டு நீ மெஸ்ஸுக்கு வா; அவளுக்கு விவரங்கள் சொல்லிப் பூங்காவின் எந்த இடத்தில் சந்திப்பு நிகழ வேண்டுமென்றெல்லாம் காட்டி ஏற்பாடு செய்து விடலாம்” என்றான் பூமி.

சித்ராவும் தேவகியும் அதற்கு இணங்கினர்.

மறுநாள் மாலை ஐந்து மணிக்கே அந்தப் பெண்ணுடன் சித்ராவும் தேவகியும் மெஸ்ஸுக்கு வந்து விட்டார்கள். அவளுக்கு எல்லா ஏற்பாடுகளையும் விவரித்தபின், பூமி, சித்ரா, தேவகி ஆகிய மூவரும் அவளோடு கூடவே பூங்கா வுக்குச் சென்றனர்.

பூமி ஏற்கெனவே சொல்லி ஏற்பாடு செய்திருந்தபடி பரமசிவமும் வேறுசில நண்பர்களும் பார்க்கில் பல இடங்களில் தனித்தனியே பரவலாகக் காத்திருந்தனர். புதரடர்ந்து மறைவாயிருந்த ஒரு பகுதியில் அந்தப் பெண் காமாட்சி அதுதான் அவள் பெயர். ரெளடி மாணவன் குமரகுருவை எதிர்ப்பார்த்துக் காத்திருந்தாள்.

ஆறேமுக்கால் மணிக்குச் சரியாக ஒளிமங்கி இருள்கவியும் நேரத்துக்கு குமரகுரு அங்கே வந்தான். பூமியும் மற்றவர்களும் உஷாரானார்கள். ஏற்பாட்டின்படி அவன் சிறிதுநேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்த பின் திடீரென்று அவர்கள் திடும் பிரவேசமாக அங்கே எதிர்ப்பட்டு அவனை மடக்க வேண்டும். அவனும் அவளும் பேசத் தொடங்கியதும் அவர்கள் மறைந்து நின்றபடி கவனித்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/20&oldid=1028948" இலிருந்து மீள்விக்கப்பட்டது