21

சமூகத்தில் அந்தஸ்தினால் எவ்வளவு உயரத்திலுள்ள எந்த வசதி படைத்த அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக்கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடி மட்டத்திலுள்ள வசதியேயற்ற ஒவ்வொரு யோக்கியனுக்கும் வேண்டும்.

ல்லாமே எற்பாடு செய்திருந்தபடி நடந்தன. நாகேஸ் வரராவ் பூங்காவில் அந்தப் பெண் காமாட்சியை ரெளடியும் கல்லூரி மாணவனுமான குமரகுரு சந்தித்தபொழுது இருட்டிக் கொண்டு வந்தது. குமரகுரு தாங்கிக்கொள்ள முடியாத உற்சாகத்தோடு இருந்தான். ஒதுங்கி ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்த காமாட்சியே வெறுப்பு மாறித் தன்னை வலிய அழைத்திருந்த பெருமையில் திளைத்து அவளிடம் காதல்கனி மொழிகளைப் பறிமாறத் தொடங்கியிருந்தான் குமரகுரு. நன்றாகவே உளறத் தொடங்கியிருந்தான்.

ஆனால் உள்ளுறப் பயத்தோடும் பதற்றத்தோடும் அரு வருப்போடும் அவனருகே அமர்ந்திருந்தாள் அந்த இளம் பெண். மனத்திற்கு விருப்பமில்லாததை மேலுக்காக நடிப்பது சிரமமாயிருந்தது அவளுக்கு.

கயமை நிறைந்த விடலையும் காமுகனும், வசதியுள்ள குடும்பத்துப் பொறுக்கியுமான குமரகுருவோ தன் குலாவல் பேச்சின் மூலம் அவளிடம் எல்லை மீறி விரசத்துக்குப் போய்க் கொண்டிருந்தான்.

“கண்ணே! எந்த ஹோட்டலில் ரூம் புக் பண்ணலாம்? மெட்ராஸா? பெங்களூரா? என் உள்ளம் இப்பவே இன்பக் கனவுகளிலே திளைக்கிறது” என்று கூறிக் கொண்டே அவளைத் தோளிலும் இடுப்பிலும் தொட முயன்றான் அந்த விடலை. அவன் இஞ்சி தின்ற குரங்குபோல் பரபரப்பாயிருந்தான்.

அவ்வளவில் அவள் நெளிந்து வளைந்து விலகி அவன் தன்னைத் தீண்டவிடாமல் பாதுகாத்துக் கொண்டாள். முள் மேல் அமர்ந்திருப்பது போல் சிரமாயிருந்தது அவளுக்கு. பார்க்கில் கூட்டம் குறைந்து கொஞ்சம் அமைதி சூழட்டும் என்று பொறுத்திருந்தனர் மறைவில் இருந்த பூமி குழுவினர்.

தாங்கள் குமரகுருவுக்குப் பாடம் கற்பிப்பதற்கு முன்னர் காமாட்சியை எப்படியாவது அவனிடம் இருந்து விலகி விடை பெற்றுப் போகச் செய்துவிட வேண்டும் என்பது அவர்கள் திட்டமாயிருந்தது. அதை எப்படிச் செயற்படுத்துவது என்று தயங்கி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.

ஓர் ஆட்டோவை அனுப்பி வீரப்பெருமாள் முதலி தெருவில் வசிக்கும் தங்களுக்குத் தெரிந்த குடும்பத்துப்பெண் ஒருத்தியை வரவழைத்தார்கள். அவளிடம் சாதுரியமாக எல்லாம் சொல்லிக் காமாட்சி உட்கார்ந்திருந்த இடத்துக்கு அனுப்பினார்கள்.

அந்தப் பெண் நேரே போய் அந்தப் பூங்காவில் காமாட்சியும், குமரகுருவும் உட்கார்ந்திருந்த இடத்துக்குப் பக்கமாக நின்று, “வெளியிலே உங்கம்மா ஆட்டோவில் வந்து காத்திருக்காங்க... ஒரு நிமிஷம் இப்பிடி வந்திட்டுப் போ” என்று காமாட்சியை நோக்கிச் சத்தம் போட்டுச் சொன்னாள் :--

“நீங்க இருங்க... நான் என்னன்னு கேட்டிட்டு வந்துடறேன்” என்று குமரகுருவிடம் சொல்லிவிட்டு காமாட்சி அந்தப் பெண்ணை நோக்கி வந்தாள்.

அவள் அருகே வந்ததும், “பூமி அனுப்பிச்சாரு! நேரமாச்சு. நீ அவங்கிட்டச் சொல்லிவிட்டுக் கிளம்பிப்போய் மெஸ்ஸிலே இருக்கணுமாம். உன் கூடவே அவனும் கிளம்பிடாமே, நீங்க கொஞ்சம் இருந்து வாங்க. வெளியே எங்கம்மா காத்திருக்காங்களாம். அவங்க. நம்ம ரெண்டு பேரையும் சேர்த்துப் பார்க்க வேணாம்னு அவனிடம் சொல்லிவிட்டு வா, மத்தது தானே நடக்கும்” என்றாள் பூமியால் அனுப்பப் பட்ட பெண்.

குறிப்பறிந்து காமாட்சி அப்படியே செய்தாள். குருட்டு மோகத்திலிருந்த அந்தப் பையனும் ஏன் எதற்கு என்றெல்லாம் கேட்கவே இல்லை. அவளை முதலில் போக அநுமதித்து விட்டுத் தான் அங்கேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தான். அவன் மனத்தில் ஒரே குஷி.

அதுதான் சமயமென்று தெரிந்த ஆளான அந்தப் பார்க் வாட்ச் மேனிடம் கூறி உள்ளே பூங்காப் பகுதிகளில் எரிந்து கொண்டிருந்த மின் விளக்குகளை அணைக்கச் செய் தான் பூமி, பார்க்கில் இருள் சூழ்ந்தது. வானில் மேகமூட்டம் வேறு. அவனும் குழுவினரும் இருளில் பாய்ந்தார்கள். ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்க முடியாத அளவு இருட்டு இருந்தது வசதியாகப் போயிற்று. ரெளடி குமரகுரு வசமாகச் சிக்கிக் கொண்டான்.

“ஏண்டா பொம்பளைப் பொறுக்கி! தெருவிலே போற பொம்பிளைங்களைச் சுத்திக்கிட்டு மிரட்டறதை இனிமேலாவது விடுவியா இல்லியா? உதை போதுமா? இன்னும் வேணுமா?”

“ஐயோ என்னை விட்டுடுங்க... கொன்னுப்புடாதீங்க...” என்று குமரகுரு பரிதாபகரமாக அலறுவது இருளிலிருந்து கேட்டது.

“நீ இப்பிடி. எத்தனை அநாதைப் பொண்ணுங்களை அலற அலறத் தொல்லைப் படுத்தியிருப்பே, இப்ப அதுக்கு வட்டியும் முதலுமாச் சேர்த்து அநுபவிடா அயோக்கிய நாயே.”

அங்கே மறுபடி பார்க்கில் வெளிச்சம் வந்தபோது மூர்ச்சையுற்றுக் கிடந்த குமரகுருவின் உடல் மேல் வால்போஸ்டர் போலப் பெரிய தாளில், ‘அபலைப் பெண்களின் பின்னால் சுற்றித் திரியும் திமிர் பிடித்த காமுகர்களுக்கு இதுதான் நேரிடும்’ என்று பெரிய எழுத்துக்களில் எழுதியிருந்தது.

வாட்ச்மேன் ஓடிப்போய்ப் போலீஸுக்குத் தகவல் தெரிவித்தான்.

கீழே’ கிடந்த உடலில் மார்புப் பகுதியை மறைத்துக் கிடந்த போஸ்டர் பரபரப்பை உண்டு பண்ணவே அந்த நேரத்திலும் ஒரு கூட்டம் கூடி விட்டது. பல்லக்குமானியம் குடியிருப்புப் பகுதிக்குத் தகவல் எட்டி அங்கிருந்து வேறு நிறைய ஆட்கள் வேடிக்கை பார்க்க வந்தார்கள்.

யாரோ பொம்பிளையை இட்டுக்கினு வந்து பேசிக்கிட்டிருந்தாரு. ஒரு அஞ்சு நிமிஷம் ஃப்யூஸ் போய் லைட்டு அணைஞ்சு போயிருந்திச்சு. அப்ப யாரோ அடிச்சுப் போட்டுட்டுப் போயிட் டாங்க” என்று வாட்ச்மேன் பட்டுக் கொள்ளாமல் போலீஸாரிடம் சொன்னான்.

அன்று அங்கே பொது இடத்தில் அடிபட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினர் பன்னீர்ச்செல்வத்தின் மகன் என்று தெரிவதற்கு சிறிது நேரம் ஆயிற்று. உடனே பாராளுமன்ற உறுப்பினர் வீட்டுக்கு ஃபோன் மூலம் தொடர்பு கொண்டார்கள். அவர் ஊரில் இல்லை என்றாலும் வீட்டிலிருந்து கார் அனுப்பப்பட்டது. அதற்குள் குமரகுருவின் உடல்மேல் பரப்பப் பட்டிருந்த சுவரொட்டியுடன் சில பத்திரிகை நிருபர்கள் அந்தக் காட்சியைப் புகைப்படம் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள்.

பொது இடத்தில் அடிப்பட்டுக் கிடப்பது பார்லிமெண்ட் உறுப்பினரின் மகன் என்று தெரிந்த பின்பும் கூடியிருந்த பொது மக்களின் கோபமும் ஆத்திரமும் மாறவில்லை. பார்க் வாட்ச்மேன் கூறியதிலிருந்தும் அங்கே மூர்ச்சையாகிக் கிடந்தவன் மேல் விரிக்கப்பட்டிருந்த போஸ்டரிலிருந்தும் நடந்ததைப் புரிந்துகொண்டிருந்த பொது மக்கள் தங்களுக்குள் ஆத்திரமாகவும் கோபமாகவும் பேசிக்கொண்டார்கள்.

“பெண்களைத் துரத்துகிற காமவெறியன் ஒவ்வொருவனுக்கும் இப்படி உறைக்கிற விதத்தில் ஒரு பாடம் கற்பித்தாக வேண்டும். அப்பொழுதுதான் விடலைகளுக்குப் புத்தி வரும்” என்றார் ஒருவர்.

“நக்ஸலைட்டுகள்தான் இப்படி எல்லாம் தாக்கிவிட்டுப் பக்கத்தில் எழுதியும் போடுவார்கள்.”

“இதை அவர்கள் செய்திருந்தால் இதற்காக அவர்களுக்கு ஒரு பாராட்டு விழாவே நடத்த வேண்டும். சமூகத்தின் அந்தஸ்தில் எவ்வளவு உயரத்தில் எவ்வளவு வசதியுள்ள அயோக்கியன் தவறு செய்தாலும் அதைத் தட்டிக் கேட்க முடியுமானால் தண்டிக்கிற உரிமை அதன் அடிமட்டத்தில் உள்ள வசதியேயற்ற ஒவ்வொரு யோக்கிய னுக்கும் வேண்டும்.

“இன்றைய நிலையில் சட்டமும், நீதி மன்றங்களும், வக்கீல் களும், நீதிபதிகளும் தவறு செய்கிறவர்களை உடனே தண்டிக்கவோ, கண்டிக்கவோ விடாமல் தடுக்கும் அல்லது தள்ளிப்போட உதவும் சாதனங்களாகவே பயன்படுகின்ற நிலைமைதான் நீடிக்கிறது.”

“பெயில் ஜாமீன் ரிட் ஸ்டே என்ற பெயரில் சமூக விரோதிகளும் சுரண்டல் பேர்வழிகளும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள உதவும் ஓட்டைகள் நமது சட்டங்களில் நிறையவே இருக்கின்றன.

என்றெல்லாம் கூடியிருந்த மக்கள் பேசிக் கொண்டார்கள். யாரும் அடிபட்டு விழுந்தவனுக்காக இரக்கப்படவில்லை. பொது உணர்ச்சி அப்போது அவனுக்கு எதிராகவே இருந்தது.

பூமியும் நண்பர்களும் நாடகம் போல இதை நடத்தியிருந்தார்கள். தாங்கள் யாரும் நேரடியாக இதில் சம்பந்தப்பட்டதாக காட்டிக் கொள்ளவில்லை. காரியம் முடிந்ததும் மெஸ்ஸில் காத்திருந்த சித்ராவிடமும் தேவகியிடமும் அந்தப் பெண் காமாட்சியைப் பத்திரமாக ஒப்படைத்திருந்தான் பூமி சித்ரா மட்டும் சிறு சந்தேகத்துடன் பூமியை ஒரு கேள்வி கேட்டாள்.

“இவளோடு பேச இங்கே பார்க்குக்குத் தேடிவந்ததனால் தான் இப்படி எல்லாம் நடந்ததென்று வன்மம் வைத்துக் கொண்டு அந்தப் பையன் மறுபடி இவளைத் தேடிப் பழி வாங்கக் கிளம்பினால் என்ன செய்வது?”

“கனவில் கூட இனிமேல் இந்தப்பக்கம் தலைவைத்துப் படுக்க மாட்டான். ஒரு வேளை கொழுப்பு எடுத்துப் போய் மறுபடியும் வாலாட்டினால் மறுபடி பாடம் கற்பிப்போம்” என்று பூமி சிரித்துக் கொண்டே பதில் கூறினான்."

சித்ராவும் தேவகியும் அவனுக்கு நன்றி தெரிவிக்க முற்பட்டார்கள். அவன் குறுக்கிட்டுத் தடுத்தான்.

“நெருங்கிப் பழகறவங்க ஒருத்தருக்கொருத்தர் நன்றியே சொல்லக் கூடாது. நல்ல காரியத்தை யாராவது செய்தால் அவங்களை அளவு கடந்து பாராட்டறதும் கூடச் செயற்கையான எல்லைவரை போயிடுது. நல்லது செய்யறதே அபூர்வம்னு நினைக்கிற அளவுக்கு அது அதிகமாகப் பாராட்டப் படுகிறது இங்கே. நல்லதுதான் செய்யணும் - செய்ய முடியும் - செய்யப்பட வேணும்னு - இயல்பான நினைப்பே வர்றது இல்லை.”

பூமி சொல்லியதில் இருந்த நியாயம் சித்ராவுக்குப் புரியச் சிறிது நேரம் பிடித்தது. புரிந்தவுடனே இதைச் சொல்லியதின் மூலம் அவன் எவ்வளவிற்கு உயர்ந்தவன் என்பதும் சேர்த்தே புரிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/21&oldid=1028949" இலிருந்து மீள்விக்கப்பட்டது