24

ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் அவள் திருமணம் முடிந்தவுடன் அவளுடைய சொந்தத் தாய் தந்தையையும் மீதியுள்ள குடும்பத்தையும் நடுத்தெருவில், கொண்டு வந்து நிறுத்தி விடுகிற அளவு வரதட்சிணைக் கொடுமையைக் கொண்டிருக்கிறது.

வாக்களித்தவாறே கார்ப்பொரேஷன்காரர்கள் ஹோட்டலை மூட முடியாதபடி அந்த வழக்கறிஞர் ஸ்டே வாங்கிக் கொடுத்து விட்டார். பின்பு தொடர்ந்து நடந்த வழக்கிலும் பூமிக்கு வெற்றி தேடிக் கொடுத்தார். மாநகராட்சியின் ஹோட்டலை மூடும் உத்தரவு செல்லாது என்று தீர்ப்புக் கிடைத்தது. இந்த வழக்கின் மூலமும் இந்தத் தீர்ப்பின் மூலமும் அந்த வட்டாரத்தில் இருந்த எல்லா உணவு விடுதிகளுக்குமே விடிவு பிறந்தது. எல்லாருக்கும் ஓரளவு கண் திறந்தது. தைரியமும் வந்தது.

“ஒழுங்காக இல்லாதிருந்ததைக் கண்டுபிடித்து விடுவார்களோ என்ற பயத்தில் லஞ்சம் கொடுக்க இணங்கிப் பிறகு ‘லஞ்சம் கொடுத்துச் சமாளிப்பதற்கு வழி இருக்கிறது’ என்ற நம்பிக்கையிலேயே தொடர்ந்து ஒழுங்காக இல்லாமல் வாழப்பழகி விடும் மனப்பான்மை பலருக்கு வந்து விடுகிறது” என்று பூமி சித்ராவிடம் சொன்னான்.

அவனுடைய கருத்து நூறு சதவிகிதம் சரியானது என்று பரமசிவம் ஒப்புக் கொண்டார். அதிகாரிகளின் பேராசையினாலும், பொது மக்களின் சோம்பலாலுமே லஞ்சம் அசுர வளர்ச்சி பெறுகிறது என்பதுதான் சரியான கணிப்பு என்பதற்குப் பல உதாரணங்களைப் பரமசிவம் எடுத்துக் கூறினார்.

பூமியின் மேல் சித்ராவின் மதிப்பும் பிரியமும் உயரக் காரணமான பல சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்தன.

அவர்கள் வாழ்ந்த அதே மைலாப்பூர்ப் பகுதியில் வேறொரு மத்தியதர ஹோட்டல்காரரின் மகனுக்குத் திருமணம் வந்தது.

அந்த ஹோட்டல் உரிமையாளரே குடும்பத்தோடு நேரில் வந்து அழைத்துவிட்டுப் போனார். அவர் தேடி வந்தபோது முத்தக்காள், சித்ரா, பூமி மூவரும் இருந்தார்கள். மூவருக்கும் தனித்தனியே பெயர் எழுதி அழைப்பிதழ்கள் எடுத்துக் கொடுத்திருந்தார் அவர் மூவருமே திருமணத்துக்குக் கண்டிப்பா வரவேண்டும் என்று வற்புறுத்திச் சொல்லிவிட்டுப் போயிருந்தார். பூமியும் சித்ராவும் அந்தத் திருமணத்திற்குப் போய்விட்டு வரவேண்டும் என்றாள் முத்தக்காள்.

“நம்மைப் போலலே ஒரு வியாபாரி மெனக்கெட்டுத் தேடி வந்து நேரிலேயே அழச்சிட்டுப் போறாரு. நான் மட்டும் போறது நல்லா இருக்காது. நான் கலியாணம் முடிஞ்சப்புறம் ஒரு நாள் வீட்டுலே போய் விசாரிச்சுட்டு வந்துடறேன். நீங்க ரெண்டு பேரும் முகூர்த்தம் ரிஸப்ஷன் எல்லாத்துக்குமே போய்த் தலையைக் காமிச்சிட்டு வந்திடுங்க...”

“பார்ப்போம்! இன்னும் நிறைய நாள் இருக்கிறதே?” என்றான் பூமி. அப்படி அவன் கூறியதில் இயல்பான தொனி இருந்ததே ஒழியச் சுவாரஸ்யமோ, அசுவாரஸ்யமோ தொனிக்கவில்லை.

அந்தத் திருமண நாள் வந்தது. மறுநாள் காலை ஏழு மணிக்கு முகூர்த்தம் என்று ஞாபகம் வரவே சித்ரா மறுபடியும் பூமியை விசாரித்தாள்.

“காலையில் வேண்டாம்; மாலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும் பரமசிவம் அண்ணணுடைய புத்தகம் வழங்கும் கடைக்கு வந்துவிட்டால் நல்லது. தயாராக அங்கே நான் காத்திருக்கிறேன்” என்றான் பூமி. இப்படிக் கூறியதிலிருந்து அவன் முகூர்த்தத்திற்குப் போகாமல் மாலை வரவேற்புக்குப் போக விரும்புகிறான் என்று அவள் அநுமானம் செய்து கொண்டாள்.

ஆனால் மாலையில் அவள் பரமசிவம் அண்ணனுடைய நூல் வழங்கும் நிலையத்திற்குச் சென்றபோது அங்கே அவளுக்கு ஆச்சரியம் காத்திருத்தது. பூமி அங்கே வரவே இல்லை. அப்போது மாலை மணி ஐந்தரை. ஆறுமணிக்குத் திருமண வரவேற்பு. அப்போது புறப்பட்டால்தான் சரியாயிருக்கும். பூமி ஏன் இன்னும் வரவில்லை என்பது அவளுக்குப் புரியவில்லை. பரமசிவம் அண்ணனிடம் கேட்டாள் அவள்.

“அநேகமாக அவன் இந்தத் திருமணத்திற்குப் போக மாட்டான் சித்ரா! காரணத்தை அவனே உன்னிடம் நேரில் சொல்வான். அவன் வருகிறவரை கொஞ்சம் பொறுமையாக இரு!” என்றார் அவர்...

ஆறு ஆறரை மணி சுமாருக்குப் பூமி வந்து சேர்ந்தான்.

“தாமதத்துக்கு மன்னிப்புக் கோருகிறேன். எப்படியும் சொன்னபடி வந்து விட்டேன். ஆனால் நாம் திட்டமிட்டபடி திருமண வரவேற்புக்குப் போகப் போவதில்லை. கடற்கரைக்கோ, பார்க்குக்கோ வேறு எங்காவதோ போகலாம்.”

“ஏன்? அவர் நேரில் வந்து பத்திரிகை கொடுத்து அழைத்தாரே..?”

“அழைத்தார்தான்! ஆனால் கல்யாணத்தை ஒரு வியாபாரமாக நடத்துகிறார். பெண் வீட்டாரைக் கசக்கிப்பிழிந்து பத்தாயிர ரூபாய் ரொக்கம், ஒன்றரைக் கிலோ தங்கத்துக்கு நகைகள், வரவேற்பு முதலிய செலவுகள் என்று அடித்து வைத்துப் பேரம் பேசியிருக்கிறார். நானும் பரமசிவம் அண்ணனும் பெண் விடுதலையைப் பற்றிப் பாடிய முதல் தமிழ் மகாகவி பாரதியார்மேல் ஆணையிட்டுச் சபதமே செய்திருக்கிறோம். இப்படிப்பட்ட மாப்பிள்ளை வியாபாரத் திருமணங்களுக்குப் போவதில்லை என்பதுதான் எங்கள் சபதம். பெண் ஆணைக் கணவனாக அடைய அவள் தந்தை விலை கொடுக்கிற நிலையைச் சமூகமோ மக்களோ கூடி நின்று, ஆசீர்வதிப்பதோ வாழ்த்துவதோ பெரிய பாவம் என்று நாங்கள் நினைப்பதுதான் காரணம். இந்தப் பாவங்களைச் சாஸ்திர சம்மதமாக்கி, மேளம் கொட்டி விருந்து வைத்துத் தாம்பூலம் தந்து கொண்டாடுவதைவேறு நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது சித்ரா!”

“நம்மைப் போன்ற இளைய தலைமுறையினராவது இதற்கு முடிவுகண்டாக வேண்டும் சித்ரா! ஒவ்வொரு பெண்ணின் திருமணமும் அவள் திருமணம் முடிந்தபின் தாய் தந்தையையும் மீதியுள்ள குடும்பத்தையும் திவாலாக்கி நடுத்தெருவில் கொண்டு வந்து நிறுத்துகிறது. இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். பெண்ணடிமைத்தனம் இப்படித் திருமணத்திலேயே ஆரம்பமாகிறது” என்றார் பரமசிவம்.

“சிறுமைகள் நிறைந்த திருமணத்தைப் பெரியோர்கள் நிச்சயிப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்கள்.”

அவனுடைய கொள்கை உறுதியும் பிடிவாதமும் அவளுக்கு மிகவும் பிடித்தன. பூமி ஒப்புக்காகவோ, பிறர் மெச்சவோ எதையும் செய்ய மாட்டான் என்பது அவளுக்குப் புரிந்தது. முத்தக்காள் தங்கள் ஹோட்டலின் சார்பில் அவன் அந்தத் திருமணத்திற்குப் போய் வரவேண்டும் என்று விரும்பினாள். அவனோ அந்தத் திருமணத்திலிருந்த வர தட்சிணை பேரங்களின் கொடுமையைத் தெரிந்து கொண்டு தவிர்த்து விட்டான். இருவரும் பரமசிவம் அண்ணனின் கடையில் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டுக் கடற்கரைக்குப் புறப்பட்டார்கள். எட்வர்ட் எலியட்ஸ் ரோடு திருப்பத்தில் குறுக்கே நடப்பதற்கான ஸிக்னல் கிடைத்து விட்டதை நம்பி அவள் அவசரமாகக் கிராஸ் செய்ய முற்பட்டபோது ஸிக்னலையே லட்சியம் செய்யாமல் பாய்ந்து வந்த ஒரு பல்லவன் பஸ், அவளை மோதி வீழ்த்தி விட இருந்தது. மின் வெட்டும் நேரத்தில் பூமி அவளைப் பின்னுக்கு இழுத்துக் காப்பாற்றினான்.

அவனது அந்த வலிமை வாய்ந்த கரம் அவளைத் தீண்டிய போது அவளுக்கு மெய்சிலிர்த்தது. உள்ளே இனம் புரியாத மகிழ்ச்சிகள் அரும்பின.

“பெண் விடுதலைக்குப் பாடிய மகாகவியின் பேரில் பெண்களைக் காக்க சபதம் எடுத்திருப்பதாக கூறிய மறுகணமே இப்படி என் அருகிலுள்ள ஒரு பெண்ணே அபாயத்துக்கு ஆளாகலாமா?”

“நீங்கள் அருகிலிருந்தால் எந்த அபாயத்திலிருந்தும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்ற நம்பிக்கைதான் காரணம்.”

அவளும் புன்னகையோடு. பதில் கூறினாள், பூமி அவள் முகத்தைக் கூர்ந்து நோக்கினான். அவளது அந்தப் புன்னகை அவன் மனத்தின் ஆழத்தில் பதிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/24&oldid=1029044" இலிருந்து மீள்விக்கப்பட்டது