25

இரண்டு முரடர்களின் தாக்குதலுக்குப் பயந்து காதலியை விட்டு விட்டு ஓடி விடுகிற காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்தால் அதில் யுத்த காண்டமே இருக்காது.

தற்றத்தோடு சித்ரா பூமியிடம் அப்பொது கூறினாள் :

"நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் செய்கிற தவறுகளுக்கும் சேர்த்து நாம்தான் எச்சரிக்கையாகவும், நிதானமாகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது.”

“சாலைப் போக்குவரத்திற்கு மட்டுமில்லாமல் இன்றைய நமது வாழ்க்கைப் பிரச்னைகளுக்கும் கூட இதுதான் பொருந்தும். நம்மை விட வேகமாகப் போகிறவர்கள் நம்மேல் மோதி அழித்து விடாமல் நாம்தான் விழிப்பாகவும் ஜாக்கிரதையாகவும் இருக்கவேண்டியிருக்கிறது--”

“வழியில் தங்களுக்கு முன்னே போய்க் கொண்டிருப்பவர்களை மிதித்தோ மோதியோ கீழே தள்ளி விட்டாவது மேலே போய் லாபமும் பயனும் அடைய வேண்டுமென்ற அசாத்திய அவசரம் அதிகரித்திருக்கிற காலம்தான் இது!”

“சத்திய அவசரமோ சத்திய அவசியமோதான் இன்று எங்குமே அதிகமாகத் தென்படுவதில்லை.”

“உங்களைப் போன்ற சிலரிடமாவது அது இருக்கிறதே என்பதில் எனக்கு மகிழ்ச்சி, நீங்கள் மட்டுமாவது இப்படி விழிப்புடன் இருக்கிறீர்களே! உங்களுடைய ஜாக்கிரதை உணர்ச்சியால்தான் இன்று நான் உயிர் பிழைத்தேன்.”

“சாலைகளையும் தாறுமாறாக விரையும் அபாயகரமான வாகனங்களையும் பார்க்கும்போது ஒவ்வொருவரும் வீட்டை விட்டுத் தெருவில் இறங்காதவரை பத்திரமாகத்தான் இருக்கிறார்கள். தெருக்களிலும் சாலைகளிலும் நேரக்கூடிய விபத்துகளிலிருந்து விடுபட வைப்பதால்தான் வீடு என்று குடியிருக்கும் இடத்திற்குப் பெயர் வைத்திருக்கிறார்கள் என்பதாகவே புதுவிளக்கம் கூறி விடலாம்.”

“நகரங்களில் நடக்கும் விபத்துக்களைப் பார்த்தால், நீங்கள் கூறுகிற விளக்கம் பொருத்தமாகத் தான் இருக்கிறது.”

“நடக்கிறவர்களின் தவறுகளால் சில விபத்துகளும், வாகனங்களின் தவறுகளால் சில விபத்துக்களும், சாலைகளின் நெருக்கடியால் சில விபத்துக்களும், மனிதர்களின் அசுரவேகத்தால் சில விபத்துக்களும் என்று நகரங்கள் விபத்து மயமாக மாறி விட்டன. முன்பெல்லாம் வாழ்க்கையின் இடையிடையே விபத்துக்களும் இருந்தன. ஆனால் இப்போதோ விபத்துக்களின் இடையேதான் வாழ்க்கையே இருக்கிறது. அதிக ஜாக்கிரதையும் தேவைப்படுகிறது.

அவர்கள் கடற்கரையில் போய் அமர்ந்தார்க்ள், கடற்கரைச் சாலையில் விளக்குகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எரிந்து கொண்டிருந்தன. கூட்டம் அதிகம் இல்லை, சுண்டல், முறுக்கு, மிளகுவடை விற்கும் பையன்கள் பம்பரமாகச் சுற்றி வியாபாரத்துக்கு முயன்று கொண்டிருந்தார்கள்.

திடீரென்று ஒரு மூலையில் சற்றே இருட்டாக இருந்த ஓர் இடத்திலிருந்து பெண்ணின் அலறல் ஒன்று கிளம்பியது. நின்று நின்று ஒலித்த அலறல் வந்த மூலையைப் பார்த்தபோது இரண்டு மூன்று ஆண்கள் கும்பலாக நிற்பது போலிருந்தது. அவர்கள் தங்களிடம் சிக்கிய பெண்ணின் வாயில் துணியைத் திணித்துக் குரலை அடக்க முயன்றதாலோ என்னவோ அவளுடைய அலறல் மெல்ல ஒடுங்குவதும் கிளம்புவதுமாக இருந்தது.

பூமி எதையோ தனக்குத்தானே அநுமானித்தவனாக அந்தத் திசையில் பாய்ந்தான். சித்ராவும் பின் தொடர்ந்தாள். கடற்கரையில் கூட்டம் அதிகமில்லை. மேற்குப் பக்கம் இருந்த மெரீனா சாலையிலோ, கீழேயே மணற்பரப்பில் பரவலாக அங்கங்கே அமர்ந்திருந்த ஒரு சிலருக்கோ அந்தப் பெண்ணின் குரல் கேட்கவில்லை என்று சொல்ல முடியாது. கேட்டிருக்கும் தான். அந்தக் குரலிலிருந்த அபயம் கேட்கும் தொனியும் கூட அவர்களில் ஓரிருவருக்குப் புரிந்துதான் இருக்கும்.

ஆனால் யாரும் துணிந்து எழுந்திருந்து குரலுக்குரியவளைக் காப்பாற்ற விரைந்து விடவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்க ஆசைப்பட்டு ஓடும் ஆவலைக் கூட யாரும் காண்பிக்கவில்லை. அளவு கடந்த ஆவலில் ஓடிப்போய்த் தங்களை அபாயத்தில் சிக்க வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சுயநலமான தற்காப்பு உணர்ச்சிதான் காரணமாயிருக்க வேண்டும். இப்படிப்பட்ட சுயநலமான தற்காப்பு உணர்ச்சியால்தான் பட்டினத்தில் பலர் மரத்துப் போயிருந்தார்கள். இப்படி மாத்துப் போவதைப் பூமி அறவே வெறுத்தான். இதற்கும் ஆண்மையற்ற பேடியாக மாறுவதற்கும் அதிக வித்தியாசமில்லை என்பது அவன் கருத்தாயிருந்தது.

கொடி போல் அவர்கள் கையில் சிக்கிக் கசங்கிக் கொண்டிருந்த அந்தப் பெண்ணை விடுவிக்க வந்த பூமியின் மேல் கத்தி யோடு பாய்ந்தான் ஒரு முரடன். இன்னொருவன் கையில் பிளேடுடன் பூமியைக் கீறி விட முயன்றான்.

பூமி அவர்களை அருகில் நெருங்காமலே கால் பாதங்களால் தாக்கி நிராயுதபாணிகளாக்கினான். பிளேடும் கத்தியும் மணலில் போன மூலை தெரியவில்லை. முதலில் ‘ஒல்லியாக யாரோ ஓர் ஆள்தானே?’ - என்று பூமியை அலட்சியமாக நினைத்த அந்த முரடர்கள் கராத்தே அடி வாங்கியதும் திரும்பிப் பாராமலே ஓட்டம் பிடித்தனர். சிறிது தொலைவு பின்பற்றித் துரத்திக்கூடப் பூமி அவர்களைத் தாக்கினான்.

இதற்குள் அபாயத்துக்குள்ளான அந்த இளம் பெண்ணை ஆசுவாசப் படுத்திப் பக்கத்தில் இருந்த விளக்குக் கம்பத்தருகே வெளிச்சத்துக்கு அழைத்துச் சென்றாள் சித்ரா.

அந்தப் பெண் ஒன்றுமே பேசாமல் விசும்பி விசும்பி அழுதாள். பூமியும் திரும்பு வந்த பின் அவளை அழைத்துச் சென்று மணலில் உட்காரச் செய்து தாகத்துக்கு அவர்கள் ஒரு சோடாவும் வாங்கிக் கொடுத்தார்கள்.

பேச ஆரம்பித்தாலே அழுகை வந்தது அவளுக்கு. நீண்ட நேர முயற்சிக்குப் பின் பூமிக்கும் சித்ராவுக்கும் அவளிடமிருந்து பின் வரும் விவரங்கள் தெரிய வந்தன.

அந்தப் பெண் திருவல்லிக்கேணியில் ஒரு மத்திய தரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். பெயர் சாவித்திரி. குயின் மேரீஸ் கல்லூரியில் படிக்கிறாள். தன்னைக் காதலிக்கிறான் என அவள் நம்பிய ஓர் இளைஞனோடு கடற்கரைக்கு வந்திருக்கிறாள். முரடர்கள் வந்து கத்தியைக் காட்டியதும் அந்த இளைஞன் பயந்து போய் அவளை விட்டுவிட்டு ஓடிவிட்டானாம்.

“காதற் பெண்கள் கடைக்கண் பணியில் காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் என்று பாடினார் பாரதியார். பயந்தாங் கொள்ளிகளைக் காதலிக்கக்கூடாது அம்மா” என்றான் பூமி.

“அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய மகாகவியும் கற்பின் கனலாக எழுந்து ‘தேரா மன்னா’ என்று பாண்டியனை நியாயம் கேட்ட கண்ணகியும் சிலைகளாக இதே கடற்கரையில்தானே நிற்கிறார்கள்?”

“வாழ்வில் யார் யாரைக் கடைப்பிடிப்பது சிரமமோ அவர்களை எல்லாம் நடுத்தெருவில் சிலைகளாக நிறுத்தி வைத்துவிடுவதுதான் தமிழ்நாட்டு வழக்கம் சித்ரா.”

பூமியும் சித்ராவும் அந்தப் பெண்ணுக்கு நிறைய அறிவுரைகள் கூறினார்கள்.

“அரும்பு மீசையும் சுருட்டைத் தலைமுடியும் உள்ள ஆண் பிள்ளைகள் எல்லாருமே ஆண் தன்மை உள்ளவர்கள் என்று நம்பிவிடாதே! ஆண் தன்மையே அற்ற பேடிகள் பலர் இன்று ஆண்களின் தோற்றத்தோடு நடமாடுகிறார்கள். கண்ட வேளையில் தனியாகக் கடற்கரைக்கு வராதே! கண்ணகி சிலையின் நிழலடியில் கூடக் கற்புக்கு ஆபத்து வரலாம். ஆயிரக்கணக்கான சினிமாக்களும், பத்திரிகைத் தொடர்கதைகளும், நாடகங்களும் பெண்களை வெறும் போகப் பொருளாக மட்டுமே விளம்பரப்படுத்தி வைத்திருக்கின்றன. எப்படி எப்படி எங்கெங்கே ‘ஈவ் டீஸிங்’ சாத்தியம் என்பதைச் சினிமாக்கள் கற்றுக் கொடுத்திருக்கின்றன. இந்த வயதில் வீணே கெட்டுப் போகாதே. படிப்பில் கவனம் செலுத்து.பெற்றோர் அறிவுரைகளைக் கேள்.

வீடு திரும்புகிற போது அந்தப் பெண் சாவித்திரியை அவள் வீடு இருந்த தெருமுனை வரையில் கொண்டு போய் விட்டுவிட்டுப் பூமியும் சித்ராவும் மறுபடி வந்து ஐஸ்ஹவுஸ் அருகே பஸ்ஸுக்காக நின்றபோது பிளாட்பாரத்தில் ஒரு பூக்காரி பூ விற்றுக்கொண்டிருந்தவள் பூமியிடம் வந்து பூ வாங்கச் சொல்லித் தொண தொணத்தாள்.

அப்போது தன் அருகே நிற்கும் சித்ராவைப் பார்த்து விட்டுத்தான். அவள் அப்படித் தொண தொணக்கிறாள் என்று புரிந்து கொண்ட பூமி சிரித்தபடியே அவளுக்குப் பூ வாங்கிக் கொடுத்தான்.

“கலியாணத்திற்குப் போவதென்றுப் புறப்பட்டு வந்தவள் வெறுந்தலையோடு வந்திருக்கிறாயே! இந்தா பூ வைத்துக் கொள்” என்று கூறிக்கொண்டே பூமி பூச்சரத்தை நீட்டியபோது சித்ராவுக்கு மகிழ்ச்சியாயிருந்தது.

“கலியாணத்திற்குத்தான் போவதில்லை என்று முடிவு செய்து விட்டோமே!”

“போகாவிட்டால் என்ன? பூ வைத்துக் கொள்ளக் காரணமா வேண்டும்.”

“இல்லை! வைத்துக்கொள்ளாமல் இருக்கத்தான் காரணங்கள் வேண்டும்.

“என்னோடு கூட வரும்போது நீ பூ வைத்துக் கொண்டு மகிழ்ச்சியாயிருப்பதற்குத்தான் காரணம் இருக்கிறது.

உண்மை ! ஒப்புக்கொள்கிறேன்!”. சித்ரா பூவைத் தலையில் சூடிக்கொண்டாள்.

“பார்த்தாயா சித்ரா! இன்றைய இளைஞனின் காதல் எப்படிப் பட்டதாயிருக்கிறது என்று? ஏதாவது மோதினால் உடனே உடைந்து சிதறிவிடுகிற பிளாஸ்டிக் காதலாயிருக்கிறது. இரண்டு முரடர்களுக்குப் பயந்து காதலியை விட்டு விட்டு ஓடிவிடுகிற இந்தக் காதலனின் காலத்தில் இராமாயணம் நடந்தால் யுத்த காண்டமே அதில் இருக்காது! இராவணன் போரிடாமலே ஜெயித்து விட்டிருப்பான்...”

“முரடர்கள் இராவணர்களோ இல்லையோ, சாவித்திரியின் காதலன் நிச்சயமாக இராமன் இல்லை.”

“பெண்ணரின் உடம்பை மட்டும் காதலிப்பவர்கள்தான் இன்று அதிகம்...”

“அதை இன்றைய கதைகளும் சினிமாவும் அப்படி அவர்களுக்குச் சொல்லிக் கொடுத்திருக்கின்றன. என்ன செய்யலாம்.

இந்த உரையாடலால் சித்ரா மிகவும் பெருமிதப்பட முடிந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/25&oldid=1029045" இலிருந்து மீள்விக்கப்பட்டது