30

ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகு வைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பல பட்டிணத்தில் நிறையவே இருந்தன.

பூமியே மேலும் தொடர்ந்து சொன்னான்:

“பயத்துக்கு அடிப்படை சுய நலம். சுய நலமுள்ள ஒவ்வொருவனும், எதற்கும் பயந்து தானாகவேண்டும்.”

“அப்படியானால் இந்த நகரத்தினுள், முரடர்கள் ரெளடிகள், பயமே இல்லாத காலிகள் எல்லாருமே சுயநலமற்றவர்கள் என்று அர்த்தமா?”

“அவர்கள் முரடர்கள். முரடர்களைச் சுயநலமற்றவர்கள் என்று சொல்ல முடியாது. கையாலாகாதவர்கள் தங்களைப் பொறுமைசாலிகள் என்று சொல்லிக் கொள்ளும் நகரம் இது.”

“இங்கே விரோதித்துக் கொள்ள வேண்டியவர்களைக் கூட விரோதித்துக் கொள்ள அஞ்சித் தயங்குகிறார்கள."

"அப்படிப்பட்ட ஏனோதானோ மனப்பான்மைதான் அராஜகத்துக்கு இடப்படும் உரம் ஆகிறது.”

திருட்டு என்பதும் வன்முறை என்பதும் தேசியத் தொழில்களில் சில வகைகளாகவே ஆகிவிட்டன.”

“பஸ்ஸில் பார்த்த அந்த அப்பாவி மனிதரைப் போலச் சிலர் அவற்றைத் தேசியத் தொழில்களாக மதித்து அவற்றுக்குத் தலைவணங்கிப் பணிந்து நடக்கவும் ஆரம்பித்து விடுகிறார்கள்.

“முதல் மனிதனைத் தொடர்ந்து பின்பு தற்செயலாகப் பலர் செய்யும் தவறுகள் எல்லாமே இங்கே ஏற்றுக்கொள்ளப்பட்ட, வாடிக்கைகள் ஆகிவிட்டன. லஞ்சம் முதல் பதவிவெறி வரை அனைத்திற்கும் இது பொருந்தும். தீயதை அது நுழைய முயலும் முதல் எல்லையிலேயே எதிர்த்து நிற்கும் மூர்த்தண்யம் மறைந்து, “சரி தொலையட்டும்” என்று உள்ளே விட்டு விடுகிற மனப்பான்மை எங்கும் எதிலும் வந்துவிட்டது. இன்றைய சீரழிவுகள் எல்லாவற்றுக்குமே இதுதான் காரணம்”

அந்த வார இறுதியில் அவர்கள் கல்வி இலாகாவுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் அனுப்பிவைத்த புகார்க் கடிதத்தின் விளைவு தெரிந்தது. அரசாங்க அலுவலகங்களில் சித்ராவும், தேவகியும் பணி புரிந்து வந்த பள்ளியின் நிர்வாகிக்கு உளவு சொல்லக்கூடியவர்கள் இருந்தார்கள். புகார் வந்திருப்பதையும், அதில் சித்ரா, தேவகி இருவரும் கையெழுத்து இட்டிருப்பதையும் பள்ளி நிர்வாகி தெரிந்து கொண்டார்.

உடனே, அவருக்கு ஆத்திரம் மூண்டது. அவர்கள் இருவரையும் பழிவாங்கினார். ‘நடத்தைக் கோளாறு’ -- ‘சீரியஸ் மிஸ்காண்டெக்ட்’ என்று சித்ரா தேவகி இருவர் .மேலும் குற்றம் சாட்டி இருவரையும் வேலையிலிருந்து நீக்கினார் பள்ளியின் நிர்வாகி. எதிர்பார்த்ததுதான். ஆனால் ‘நடத்தைக் கோளாறு’ என்று குற்றம் சாட்டியதுதான் எரிச்சலூட்டியது.

பூமி இதைப் பற்றிச் சித்ராவிடம் விசாரித்தான்.

“தனியார் நிர்வாகத்திலுள்ள இம்மாதிரிப் பள்ளிக்கூடங்களில் பிடிக்காதவர்களை வெளியே அனுப்புவதற்கு என்ன குற்றம் வேண்டுமானாலும் சாட்டுவார்கள். நிர்வாகத்தைப் பற்றிப் புகார் செய்ய வேண்டும் என்று வற்புறுத்தி நாகேஸ்வர ராவ் பார்க்கில் உங்களைச் சந்தித்த என் தோழிகளாயிருந்த ஆசிரியைகளில் யாராவது இப்போது எனக்கு எதிராகவும் நிர்வாகத்துக்கு ஆதரவாகவும், சாட்சி சொல்லும்படி வற்புறுத்தப்படுவார்கள்.”

“பொய்ச்சாட்சி சொல்ல முன் வருகிறவர்கள் தங்கள் ஆத்மாவுக்கே துரோகம் செய்கிறார்கள்.”

“ஆத்மத் துரோகம், மலிவான லாபங்களுக்காக அவ்வப்போது ஆத்மாவைப் பிறரிடம் அடகுவைப்பது ஆகிய காரியங்களை வாடிக்கையாகச் செய்யும் ஈனப் பிறவிகள் பட்டிணத்தில் நிறைய இருக்கின்றன.”

“அங்கிருந்து வெளியேறி விட எனக்குச் சம்மதம்தான். ஆனால் நடத்தை கெட்டுப்போன அயோக்கியன் ஒருவன் கையால் நான் நடத்தை கெட்டவள் என்று பட்டம் வாங்கிக் கொண்டு வெளியேற விருப்பமில்லை.”

“உன்னை நடத்தை கெட்டவள் என்று கூறியதற்காக ஒரு லட்சரூபாய் மான நஷ்டம் கோரி வழக்குத் தொடுக்கலாம்.”

சித்ரா அப்படி ஒரு மான நஷ்ட வழக்குப் போடுவதற்குத்தான் தயாராயிருப்பதாகச் சொன்னாள். தேவகிக்கு வேறு ஓரிடத்தில் வேலை கிடைத்துவிட்டது. சித்ரா வேலைக்கு முயற்சி செய்யவில்லை. பரமசிவத்தின் நூல் நிலையத்தில், அரை நாளும், மெஸ்ஸில் அரைநாளுமாகப் பகுதி நேர வேலைகளைச் செய்து கொண்டிருந்தாள். அவளும் தேவகியுமாகச் சேர்ந்து தங்கள் மேல் பொய்க்குற்றம் சாட்டி வெளியேற்றிய பள்ளி நிர்வாகிமேல் மான நஷ்ட வழக்கும் போட்டிருந்தார்கள்.

இப்போது மெஸ்ஸில் லாபம் கணிசமாக வந்தது, மெஸ் இருந்த பழைய கால ஓட்டடுக்கு வீட்டுக்காரர் ஆறு மாதத்துக்கு ஒரு தரம் வாடகையை ஏற்றிச் சொல்லித் தொந்தரவு செய்து கொண்டிருந்தார். அந்தப் பழைய காலத்து வீட்டையே விலைக்கு வாங்கி விட்டால்தான் வாடகைப் பிரச்னை தீருமென்று முத்தக்காள் அபிப்ராயப்பட்டாள். பூமிக்கும் அது சரி என்றே தோன்றியது.

சென்னை நகரில் பரபரப்பான வியாபாரப் பகுதிகளில் கையகல இடமானாலும் நாலு லட்சம், ஐந்து லட்சம் என்று விலை கூசாமல் சொன்னார்கள். நெல் விளைகிற நன்செய்க்கு இருந்த விலை மதிப்பைப் போல் பத்து மடங்கு விலை மதிப்பு எதுவுமே விளைய முடியாத வீடு கட்ட முடிந்த களர்நிலத்துக்குக் கூட இருந்தது. விவசாய நிலத்துக்கு இல்லாத விலை மதிப்பு நகரங்களில் உள்ள வீடு கட்டும் மனைகளுக்கு ஏற்பட்டிருந்தது.

நகரங்களில் கால் மனையை விற்ற தொகையை வைத்து வேறு இடங்களில் ஐந்து ஏக்கர் பத்து ஏக்கர் விவசாய நிலம் வாங்கி விடலாம் போலிருந்தது. வீட்டை வாங்கி விட்டால் இடித்துக் கட்டி மாடியில் வரிசையாக நாலைந்து அறைகளைப் போடலாம் என்று முத்தக்காள் எண்ணினாள். அந்த அறைகளில் வேலை பார்க்கும் திருமணமாகாத இளைஞர்களை வாடகைக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற திட்டம் இருந்தது ஓர் அறைக்கு மூன்று கட்டில்களைப் போட்டு விட்டால் மொத்தம் பத்துப் பதினைந்து பேர் தங்க முடியும். கணிசமாக வாடகையும் வரும். இதற்காக வீட்டுக்காரருடன் பேரம் நடந்து கொண்டிருந்தது.

அந்த வாரம் பிரபலமான ஜப்பானியக் கராத்தே வீரர் ஒருவர் பம்பாய் செல்கிற வழியில் சென்னையில் இறங்கி இரண்டு நாள் தங்குவதாக இருந்தது. மாநில உடற்பயிற்சிக் கழகம் அவருக்குச் சென்னையில் வரவேற்பு அளிக்க முடிவு செய்திருந்தது. அந்த ஜப்பானியக் கராத்தே வீரர் சிங்கப்பூர்' வந்து அங்கிருந்து விமானம் மூலம் சென்னை வழியாகப் பம்பாய் செல்ல இருந்தார்.

சிங்கப்பூரில் இருந்த பூமியின் நண்பர்கள் இது பற்றிப் பூமிக்கு எழுதியிருந்தார்கள். பூமி தானும் தன்னால் கராத்தே கற்பிக்கப்பட்ட சீடர்களுமாகச் சென்று அவரை விமான நிலையத்தில் வரவேற்க முடிவு செய்திருந்தான். மெஸ் இருந்த வீட்டை விலைக்கு வாங்க முயன்று கொண்டிருந்த சமயத்தில் நடுவில் இந்த வேலை சேர்ந்தது.

சென்னை விமான நிலையத்தில் கராத்தே வீரருக்கு வரவேற்பு அளிக்கும் ஏற்பாடுகளைக் கவனிப்பதில் சித்ரா அவனுக்கு உதவியாயிருந்தாள். வேறொர் ஆளிடம் ஓட்டுவதற்குக் கொடுத்திருந்த தன் ஆட்டோவையே கேட்டு வாங்கி மீட்டரைத் துணியினால் கட்டி விட்டுத்தானே ஓட்டிச் சென்று நண்பர்களை எல்லாம் சந்தித்துக் கராத்தே உடையிலேயே அவர்கள் எல்லோரும் விமான நிலையம் வந்து சேருமாறு தெரிவித்தான் பூமி.

தான் செய்த இந்த ஏற்பாடு புதுமையாகத்தான் இருக்கும் என்பது அவன் கருத்து. உண்மையில் அது புதுமையாகத்தான் இருந்தது. ஒரே விதமான கராத்தே உடையில் இருபது முப்பது பேரை விமான நிலையத்தில் கூட்டமாகப் பார்த்ததும் வந்த விருந்தினருக்கே வியப்பாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது. பூமி தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு அவருக்கு மாலையணிவித்தபோது அருகிலிருந்த சித்ராவைச் சுட்டிக் காட்டி ‘உன் மனைவியா?’ என்று அந்த ஜப்பானியக்கராத்தே வீரர் உற்சாகமாக விசாரித்தார்.

பூமி, ‘இல்லை’ என்றான்.

“அப்படியானால் காதலியா?” என்று அவரே மீண்டும் கேட்ட போது, ‘இவள் என் சிநேகிதி’ என்று சிரித்துக் கொண்டே பதில் சொன்னான் பூமி. “ஆமாம்! சில சமயங்களில் காதலியை விடச் சிநேகிதி தான் உயர்ந்தவள்” என்று பூமிக்கு அவர் புன்னகையோடு மறுமொழி கூறினார். பூமியும் சித்ராவைப் பார்த்துப் பொருள் நயம் பொதிந்த புன்னகை புரிந்தான்.

அங்கே வந்திருந்த கராத்தே நண்பர்களை ஒவ்வொருவராக அவருக்கு அறிமுகப்படுத்தினான். பூமி. சிங்கப்பூரில் நண்பர்கள் பூமியைப் பற்றிச் சிறப்பாக கூறியதை எல்லாம் அவர் பூமியிடம் விவரித்தார். அவரை அவர் தங்க ஏற்பாடாகி இருந்த ஹோட்டலில் கொண்டு போய் விட்டு விட்டுத் மெஸ்ஸுக்குத் திரும்பினார்கள் பூமியும் சித்ராவும்.

அவன் மெஸ்ஸுக்குத் திரும்பிய சிறிது நேரத்திலேயே முத்தக்காள் எதிர்பாராத விதமாக அவனிடம் வந்து சத்தம் போட்டுச் சண்டை பிடிக்கத் தொடங்கினாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/30&oldid=1029077" இலிருந்து மீள்விக்கப்பட்டது