31

வறுமை உள்ளவர்கள் செய்யும் திருட்டுக்களைவிட வலிமையும், வசதியும் உள்ளவர்கள் செய்யும் திருட்டுக்களே இங்கு அதிகமாக நிகழுகின்றன.

ஜப்பானிய கராத்தே வீரர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்து பூமியும், சித்ராவும் மெஸ்ஸுக்குத் திரும்பிய போது இரவு அகாலமாகியிருந்தது. முத்தக்காள் அவர்களை எதிர் கொண்டு கூப்பாடு போட்டதிலிருந்து அன்று முன்னிரவில் பூமி இல்லாத வேளையில் அங்கு ஓர் அசம்பாவிதம் நடந்திருப்பது புரிந்தது. பூமியும், சித்ராவும் அன்று அங்கே இருக்க மாட்டார் ள் என்று. தெரிந்தே அது செய்யப்பட்டிருப்பது போலும் தோன்றியது.

அன்று முன்னிரவு எட்டு எட்டரை மணி சுமாருக்கு ஏற்பட்ட ஒரு மின்சாரத் தடங்கலினால் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் லஸ் பகுதியில் இருள் சூழ்ந்திருந்த சமயத்தில் முத்தக்காள் கவனத்தையும் மீறி கேஷ் டேபிளில் இருந்து சுமார் இரண்டாயிரம் ரூபாயும் சில்லறையும் திருட்டுப் போயிருந்தது.

திடீரென்று இருண்டு போனதால், அம்மாதிரி நெருக்கடி வேளைகளில் பயன்படுத்துவதற்கென்று ஸ்டோர் ரூமில் வாங்கி அடுக்கியிருந்த மெழுகுவர்த்திக் கட்டுக்களை எடுத்து வருவதற்காக முத்தக்காள் உள்ளே போய் விட்டுத் திரும்புகிற சில நிமிஷங்களில் இது நடந்து விட்டது. திருடியே பழகிய வெளி ஆள் வந்து நடத்திய திருட்டா அல்லது உள்ளேயே இருக்கிற ஆட்களில் யாராவது ஒருவரின் வேலையா என்பது புரியவில்லை. முத்தக்காள் ஒரேயடியாகக் கூப்பாடு போட்டு அதை இன்னும் குழப்பிக் கொண்டிருந்தாள்.

“நீ போனதால் தானே இத்தனை கந்தர் கோளம் எல்லாம்? நீ பாட்டுக்கு அடிக்கடி கராத்தே, குஸ்தி, சண்டையின்னு போயிட்டா, நா ஒண்டிக் கட்டையா என்ன பண்ணுவேன் சொல்லு?” என்று பணத்தைப் பறி கொடுத்த ஆதங்கத்தில் பூமியிடம் எரிந்து விழுந்தாள் முத்தக்காள்.

“பதற்றப்படாமல் நடந்ததைச் சொல்லுங்கள்” என்று நிதானமாக விசாரித்தான் பூமி.

முத்தக்காளின் உணர்ச்சி வசப்பட்ட பதற்றம் அவனுக்குப் பிடிக்கவில்லை. அந்தப் பதற்றம் காரியத்தைக் கெடுத்து விடும் என்று எண்ணினான் அவன். படிப்பில்லாத நாட்டுப்புறத்து மத்திய தர வயது விதவை எப்படிப் பரபரப்பாக நடந்து கொள்வாளோ அப்படித்தான் முத்தக்காளும் நடந்து கொண்டாள்.

தொடர்ந்து முன்னிரவு வேளையில் மின்சாரத் தட்டங்கல் வருவதைக் கவனித்துக் கொண்டிருந்து திட்டமிட்டு இந்தத் திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்று சித்ரா பூமியிடம் கூறினாள். பூமிக்கும் அவ்வாறே தோன்றியது. பழைய அனுபவம் காரணமாக முத்தக்காள் உள்ளே இருக்கிற ஆட்கள் மீது மட்டும் சந்தேகப்பட்டாள்.

அதே நேரத்திற்கு மின்சாரத் தடங்கல் சில நாட்கள் தொடர்ந்த போது லஸ் வட்டாரத்தில் வேறு பல கடைகளிலும் இப்படித் திருட்டுக்கள் நடந்தன. எல்லாக் கடைக்காரர்களும் போலீசில் புகார் செய்தார்கள். அவர்கள் எவ்வளவோ முயன்றும் கண்டு பிடிக்க முடியவில்லை. தேசம் முழுவதும் திருடர்களை விடப் போலீஸ்காரர்கள் கெட்டிக்காரர்களாக இருப்பதற்குப் பதில் போலீஸ்காரர்களைவிடத் திருடர்கள் கெட்டிக்காரர்களாகி விட்டார்கள் என்பது போல் தோன்றியது. பறி கொடுத்தவர்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள். நாட்கள் ஓடின.

அந்தச் சமயத்தில்தான் பூமியே கேஷ் டேபிளில் அமர்ந்திருந்த ஓர் இரவில் இது நடந்தது. அன்றும் திடீரென்று மின்சாரத் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அருகில் டார்ச் இருந்தும் பயன்படுத்தாமல் வேண்டுமென்றே கேஷ் டேபிளில் இருந்து எழுந்திருந்து போவது போல் போக்குக் காட்டி விலகி நின்றான் பூமி.

அப்போது தான் அந்த ஆள் பிடிபட்டான். பூமி முத்தக்காளைப் போல் கூப்பாடு போட்டு ஊரைக் கூட்டவில்லை. விளக்கு அணைந்த சிறிது நேரத்தில் திருட முயன்ற ஆளைப் பிடித்த சுவட்டோடு உள்ளே அறைக்கு அழைத்துச் சென்று. விட்டான். அறைக்குப் போய் அரிக்கேன் லாம்ப் வெளிச்சத்தில் பார்த்தால், திருடன் ஒரு சின்ன வயசுப் பையன். பூமி அறைவதற்காக கையை ஓங்கியதுமே பயந்து அலறத் தொடங்கி விட்டான் அந்தப் பையன்.

இந்த அளவுக்கு பயந்து நடுங்குகிற அவன் இத்தனை திருட்டுக்களை எப்படி துணிந்து செய்திருக்க முடியும் என்று சந்தேகப்பட்டு அவனை அடிக்காமல் உள்ளதைச் சொல்லும்படி பூமி விசாரித்தான். பையன் ஏறக் குறையும். அழுதே விட்டான்.

அவன் கூறிய விவரங்களிலிருந்து அந்தப் பையன் ஒரு கல்லூரி மாணவன் என்றும் வசதியே அற்ற ஒரு ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றும் தெரிந்தது. தானும் தன்னைப் போன்ற பலரும் லஸ் பகுதியைச் சேர்ந்த ஒரு பேட்டை ரவுடியின் தூண்டுதலால் இதில் ஈடுபட்டதாகவும் திருடுவதை எல்லாம் அப்படியே அந்தப் பேட்டை ரவுடியிடம் கொண்டு போய்க் கொடுத்து விட்டால் அவன் கொடுக்கிற பத்தோ இருபதோ கூலியாகக் கிடைக்கும் என்றும் தெரிவித்தான்.

லஸ் பகுதியில் நடந்த அத்தனை திருட்டுக்களையும் தான் செய்யவில்லையென்றாலும், மெஸ்ஸில் இதற்கு முன்பு திருடியது மட்டும் தானே என்றும் அந்தப் பையன் ஒப்புக் கொண்டான்.

“படிக்கிற பையன்களை. இப்படிச் சின்ன வயசிலேயே கெடுத்து வைத்தால், நாடு எப்படி, உருப்படும்?” என்றாள் அருகில் இருந்த சித்ரா.

“மொளைச்சு மூணு இலை விடலே! அதற்குள்ளே இப்பிடியா தலை எடுக்கணும்?” என்று கைகளைச் சொடக்கினாள் முத்தக்காள். பூமி அதற்குப் பதில் சொன்னான்.

“என்ன செய்வது! இந்நாட்டில் ஏழைகளிலும் திருடுபவர்கள் இருக்கிறார்கள். பணக்காரர்களிலும் திருடுபவர்கள் இருக்கிறார்கள். வறுமையினால் நிகழும் திருட்டுக்களை விட, வளமையினாலும் வசதியினாலுமே அதிகத் திருட்டுக்கள் : நிகழுகின்றன!”

பூமி இவ்வாறு பேசியதும் அதிகம் பயந்து போயிருந்த அந்த இளைஞனுக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அவன் பூமியிடம் கெஞ்சும் குரலில் மன்றாடினான்.

“கல்லூரிக்குப் போகிற நேரம் தவிரக் காலை மாலை வேளைகளில் செய்வதற்குக் கெளரவமான வேலை: ஏதாவது கிடைத்திருந்தால் இந்தப் பாவத்தில் நான் இறங்கியே இருக்க மாட்டேன் சார் என்னை மன்னியுங்கள்."

"உன்னை இந்தப் பாவத்தில் ஈடுபடுத்தி இதைச் செய்யத் தூண்டியவன் யாரென்று சொல்ல முடியுமா? உனக்கு ஒரு கெடுதலும் வராமல் நான் பார்த்துக் கொள்கிறேன்.”

“சொன்னாலோ யாரென்று காண்பித்துக் கொடுத்தாலோ நான் உயிரோடு நடமாட முடியாது சார்!”

“மிரட்டலுக்குப் பயப்படாதே! நாங்கள் எல்லாம் இருக்கும் போது உன்னை யாரும் எதுவும் செய்து விடமுடியாது.”

“இந்தக் கும்பலைப் பத்தி உங்களுக்குத் தெரியாததுனாலே அப்பிடிச் சொல்றீங்க சார்! இவங்க தங்களைக் காட்டிக் கொடுக்கிறவங்களைச் சும்மா விட மாட்டாங்க.”

“சரி தொலையட்டும்... உனக்கு நல்ல வேலை கிடைத்தால் இதை எல்லாம் விட்டு விட்டு ஒழுங்காகப் படிக்க முடியுமா? அல்லது வேலை கிடைத்த பிறகும் பழக்க தோஷத்தால் திருட்டை விட மனசு வராதா?”

“என்ன வேலை சார்? எனக்கு யார் கொடுப்பாங்க? முதல்லே என்னை நம்பணுமே?”

“நான் நம்பிக் கொடுக்கிறேன். ஆனால் நீ என் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்கிறாயோ இல்லையா என்பதைப் பொறுத்துத்தான் நான் உன்னைத் தொடர்ந்து நம்புவதோ நம்ப்பாததோ இருக்கிறது.”

சித்ராவுக்கும் முத்தக்காளுக்கும் அந்தப் பையனை அவ்வளவு விரைந்து பூமி நம்பியது பிடிக்கவில்லை; பிடிபட்ட பையனை உடனே போலீஸில் ஒப்படைக்க வேண்டும் என்று சித்ராவும், முத்தக்காளும் அபிப்ராயப் பட்டார்கள். பூமி அதற்குச் சம்மதிக்கவில்லை.

“சூழ்நிலையாலும், வறுமையாலும் தவறு செய்யத் தொடங்கி விட்ட ஒருவனைத் தொடர்ந்து தவறு செய்பவனாகவே மாற்றி விட்டுவிடுவதற்கு நாமும் உதவி செய்துவிடக் கூடாது. அவன் திருந்த ஒரு வாய்ப்புத் தந்து பார்க்கிற அந்த அளவு பெருந்தன்மையாவது நமக்கு இருக்க வேண்டியது அவசியம்.”

மற்றவர்கள் எவ்வளவோ சொல்லியும் கேளாமல் பூமி அந்தக் கல்லூரி மாணவனை மன்னித்துப் படிப்பு நேரம் போக மீதி நேரங்களில் மெஸ் வேலைகளைச் செய்ய அனுமதித்தான்.. நாளடைவில் அவன் திருந்தியும் மாறியும் ஒழுங்காகிவிட்டான். ஆனால் தன் பழைய குருவாக இருந்த ரெளடியை எண்ணி அடிக்கடி நடுங்கினான். அதைப் பற்றிப் பேச்சு எடுப்பதையும் அவன் விரும்புவதில்லை. அதை மறப்பதையே அவன் அதிகம் விரும்பினான்.

ஒரு நாள் பிற்பகலில் அந்தப் பையன் மெஸ்ஸில் சர்வ் செய்து கொண்டிருந்த போது நாலைந்து பேர் சூழ உள்ளே சாப்பிட வந்த ஒரு முரட்டு ஆளைப் பார்த்ததும் பயந்து உள்ளே ஓடிவிட்டதைப் பூமியே கண்டுவிட்டான்.

உள்ளே பின் தொடர்ந்து போய், “ஏன் இப்படிப் பயந்து ஓடி ஒளிகிறாய்? யார் உன்னை என்ன செய்து விடுவார்கள்?” என்று பூமி அந்தப் பையனைக் கேட்டான்.

“ஹாலில் ஒரு கும்பல் டிபன் சாப்பிட வந்திருக்கிறது. அந்தக் கும்பல் எழுந்திருந்து வெளியேறும் வரை நான் அந்தப் பக்கம் வர முடியாது” என்று நடுங்கினான் பையன்.

பூமிக்கு ஆத்திரம் மூண்டது. பையன் வந்து அடையாளம். காட்டாவிட்டாலும் அந்த ரெளடிக் கும்பலையும் அதன் தலைவனையும் பூமி அடையாளம் புரிந்துகொண்டு விட்டான். கும்பலோடு வந்திருந்த ஓர் ஆளிடம் மிகவும் மரியாதையாக விசாரிப்பது போல் ‘தலைவர் யாருங்க’ என்று. அந்த முரடனைப் பற்றிப் பூமியே விசாரித்தான். விவரம் தெரிந்தது. தெரிந்த விவரம் பூமியை ஆச்சரியப்பட வைத்ததை விட அதிகமாக அதிர்ச்சியடைய வைத்தது. 

32

இன்றைய சமூகத்தின் மிகப் பெரிய பலவீனம் என்னவென்றல் நல்லவர்களை விரோதித்துக் கொள்ள எல்லாருமே தயாராயிருக்கிறார்கள். தீயவர்களை விரோதித்துக்கொள்ள யாருமே தயாராயில்லை. தீமை கிளை பரப்பி வளர்கிறது. நன்மை சிதைந்து நலிகிறது.

வ்வொரு, சமூக விரோதக் கூட்டத்திற்கும் பின்னணியில் ஒரு செல்வாக்குள்ள பணவசதி படைத்த தலைமை இருந்தது. ஒவ்வொரு பெரிய நகரத்திலும் ‘மாஃபியா’ கும்பலுக்கு இப்படி ஒரு சூத்திரதாரி இருந்தான்.

சாதாரணமான கொச்சை மனிதர்கள், அடியாட்கள்தான் முன்னால் தெரிந்தார்களே ஒழிய அவர்களுக்கு ஆணிவேராக இருந்த நாசூக்கான அயோக்கியர்கள் முன்னால் தெரியாமல் மறைந்து பின் நின்றார்கள்.

பூமி மெஸ்ஸில் பார்த்த மனிதனைப் போல் பல மனிதர்களைக் கட்டி ஆளும் வேறொரு பெரிய மனிதன் இருப்பது தெரிந்தது. அந்தப் பெரிய மனிதன் மாநிலத்தில் செல்வாக்கோடு இருந்த ஓர் அரசியல் கட்சியின் வட்டாரத் தலைமையையும் பெற்றிருந்தான். கள்ளச் சாராயம், கொலை, கொள்ளை, திருட்டு, எதில் கைவைத்தாலும் அது அவனில் போய் முடிந்தது. அவனே அனைத்துக்கும் மூலாதாரமாக இருந்தான்.

பூமி மெஸ்ஸில் வேலைக்குச் சேர்த்துக் கொண்டிருந்த பையன் யாரைப் பார்த்துப் பயந்தானோ அவனைப்போல் பல அடியாட்களுக்குத் தலைவனாக அந்த அரசியல் பிரமுகன் இருந்தான். முன்பு ஒரு தடவை மெஸ்ஸில் நன்கொடை வசூலுக்கு வந்து கலாட்டா செய்து சேதம் விளைவித்ததுகூட இந்த ஆளின் ஏவலால்தான் என்பது தெரியவந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/31&oldid=1029078" இலிருந்து மீள்விக்கப்பட்டது