34

எல்லோருமே திருடர்களாகப் பிறப்பதில்லை. சிலர் சமூக நிர்ப்பந்தங்களால் திருடர்கள் ஆக்கப்படுகிறார்கள். வேறு சிலர் சொந்த நிர்ப்பந்தங்களால் திருடர்களாகிறார்கள்.

ன்னாருவின் ‘மாஃபியாவை’ உடைக்கும் முயற்சி. எதிர் பார்த்ததைவிடப் பயங்கரமாக இருந்தது, பூமியே இப்போது அதை உணர்ந்தான். மின்சாரத் தடை ஏற்பட்ட சமயத்தில் ஹோட்டல் கேஷில் பணம் திருடி விட்டு அகப்பட்ட மாணவன் ஒருவன் பூமியால் மன்னிக்கப்பட்டு வேலை பார்த்தானே, அவன் பூமிமைத் தனியே சந்தித்துத் தன் பயத்தைத் தெரிவித்தான்.

“இப்போ என் மேலேதான் சார் அவங்க சந்தேகப் படறாங்க! நான் இங்கே வேலை பார்க்கிறதும் நீங்க இங்கே இருக்கிறதும் அவங்களுக்குத் தெரிஞ்சிருக்கு. இரண்டு மூணு நாளா நான் எங்கே போனாலும் நிழல் மாதிரி என்னைப் பின் தொடர்ராங்க...”

“நீ எதற்கும் பயப்படவேண்டியதில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன்.

“எப்படி சார் பயப்படாம இருக்க முடியும்? இந்த ஆளுங்க கொலை பாதகத்துக்கு அஞ்சாதவங்க... என்ன வேணப் பண்ணுவாங்க.”

“நான் இருக்கிறவரை உன்னை யாரும் தொடக்கூட முடியாது. கவலைப்படாதே.”

பூமியின் இந்த உறுதிமொழிகள் கூடப் அந்தப் பையனைத் திருப்திப்படுத்தவில்லை. அவன் நடுங்கினான்.

“உண்மையில் நான் உங்களுக்கு எதையும் சொல்லலே. நீங்களாகவே இந்தக் கும்பலைக் கண்டு பிடிச்சுட்டீங்க...ஆனா நான் சொல்லிக் குடுத்துத்தான் நீங்க அவங்களைத் துரத் தறீங்கன்னு அவங்க நினைக்கிறாப்ல இருக்கு.”

“நீயாக அப்படி ஏன் கற்பனை பண்ணிக்கொள்ள வேண்டும் தம்பி?”

“கற்பனை எதுவும் இல்லை சார்! இந்தப் பாவிகளைப் பற்றி உங்களுக்கு இப்போது தெரியாது. போகப் போகத் தெரிஞ்சுக்குவீங்க” என்று அந்தப் பையன் பதறி நடுங்கிச் சொல்லிய போது கூடப் பூமி அவ்வளவு பரபரப்படையவில்லை.

ஆனால் மறு நாள் நடந்த ஒரு நிகழ்ச்சி அவனைப் பரபரப்படையச் செய்தது. கல்லூரி நேரம் போக மீதி வேளைகளில் மெஸ் வேலைகளைக் கவனித்து வந்த அந்த மாணவன் மறு நாள் காலை லஸ்ஸிலிருந்து மெஸ்ஸுக்கு வரவே இல்லை.

காலை ஐந்து மணிக்கு வந்துவிட்டு ஒன்பதரை மணிக்குக் கல்லூரி செல்லும் அந்த மாணவன் மறுபடி மாலை ஐந்து மணிக்கு மெஸ்ஸில் வேலைக்கு வந்துவிட்டு இரவு ஒன்பதரை மணிக்கு வீடு திரும்புவான். திருட்டுத் தொழிலிலிருந்து பூமி அவனை மன்னித்துத் திருத்திய பின் இதுதான். அந்த மா ண வனின் நடைமுறை வாழ்க்கையாகி இருந்தது.

“எல்லாருமே திருடர்களாகப் பிறப்பதில்லை. சிலர் சமூக நிர்ப்பந்தங்களால் திருடர்கள் ஆக்கப்படுகிறார்கள். வேறு சிலர் சொந்த நிர்ப்பந்தங்களால் திருடர்களாகிறார்கள். சமூக நிர்ப்பந்தங்களால் வேறுவழியின்றித் திருடர்கள் ஆனவர்களை நாம் முயன்றால் திருத்தலாம். இந்தப் பையனை இன்று நான் மன்னித்து இங்கே வேலைக்குச் சேர்த்துக் கொள்கிறேன் என்று நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவனால் நமக்கு எந்தக் கெடுதலும் வராது. சமூக ஆதரவும் வேலை உத்தர வாதமும் இல்லாத காரணத்தால்தான் இதுவரை இவன் தவறு செய்திருக்கிறான். மிகுந்த ஏழைமையால் செய்யப்படும் தவறுகள்; மிகுந்த வசதியால் செய்யப்படும் தவறுகள் என்று. இன்றைய சமூகக் கோளாறுகள் இரண்டு வகையில் அடங்கும். அந்த இரண்டில் ஏழைமையால் செய்யப்படும் தவறுகளை நாம் மன்னித்துத் திருத்துவதற்குத் தயாராயிருக்க வேண்டும்.”

என்று பூமி அந்தப் பையனை வேலைக்குச் சேர்த்துக் கொள்ளும் போது கூறியிருந்த விளக்கம் முத்தக்காளைத் திருப்திப்படுத்தவில்லை என்றாலும், அவள் அவனைக் தடுக்கவில்லை. பையன் வரவில்லை என்றவுடன் ஓடிவிட்டான் என்று முடிவு. கட்டிவிட்டாள் முத்தக்காள்.

பூமி அப்படி நினைக்கவில்லை. ‘மன்னாரு’ குழுவினரால் .. பையனுக்கு ஏதாவது நேர்ந்திருக்கக்கூடும் என்று பூமிக்குத் தோன்றியது: பையனின் வீட்டுக்கே தேடிப்போய் விசாரித்து விட எண்ணினான். அவனும் சித்ராவும், முத்தக்காளும் இதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் போது லெண்டிங் லைப்ரரி பரமசிவத்தின் தம்பி ஸ்கூட்டரில் அங்கு வந்தான்.

“வீட்டுக்கே வீடு தேடிச் சென்று புத்தகங்கள் பத்திரிகைகள் வழங்கும் பிரிவு ஒன்றைப் புதிதாக ஏற்படுத்த அதற்காகத் தன் தம்பிக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிக்கொடுத்திருந்தார் பரமசிவம். இந்த ‘டோர் டு டோர் லெண்டிங் ஸ்கீமை'ப் பரமசிவம் தொடங்கியபோது பூமியும் சித்ராவும் தனித்தனியே அதில் சந்தா கட்டி அங்கத்தினராகி இருந்தார்கள்.

இப்போது பூமிக்குப் புத்தகங்கள், பத்திரிகைகள் கொடுப்பதற்காக வந்திருந்த பரமசிவத்தின் தம்பியை உள்ளே சிற்றுண்டி காபி சாப்பிடும்படி சொல்லி அனுப்பிவிட்டு அவனுடைய அநுமதியுடன் அதே ஸ்கூட்டரில் சித்ராவோடு புறப்பட்டான் பூமி, பத்து நிமிஷத்தில் காணாமல் போன அந்தப் யைனின். வீட்டில் போய் விசாரித்துவிட்டு திரும்பி வந்து விடலாம் என்பது பூமியின் திட்டமாயிருந்தது. தன்னுடைய கற்பனைகள் எல்லாம் தப்பாயிருந்து அவன் உடல் நலக்குறைவினால் வீட்டிலேயே இருந்தாலும் இருக்கலாமே என்று பூமிக்கு உள்ளுற ஒரு சந்தேகம் இருந்தது.

போய்ப் பார்த்ததில் அந்தச் சந்தேகமும் தீர்ந்து விட்டது.

“அவன் நேத்து ராத்திரியே வீடு திரும்பலீங்க. ஹோட்டல்லியே வேலை அதிகமாயிருந்து தங்கியிருப்பானோன்னு நான் நெனைச்சுக்கிட்டிருக்கேன்” என்று அவன் தாய் பதில் சொன்னாள்.

அவன் மெஸ்ஸை விட்டு இரவு ஒன்பதரை மணிக்கே வீடு திரும்பிவிட்டான் என்ற தகவலை இவர்கள் தெரிவித்ததும் அந்தத் தாய் பதறி அழத் தொடங்கி விட்டாள்.

அவளுக்கு ஆறுதல் கூறிக் தேற்றிப் பையனை எப்படியும் தேடி அழைத்து வருவதாக உறுதி கூறிவிட்டுப் பூமியும் சித்ராவும் அங்கிருந்து புறப்பட்டார்கள். சித்ரா கூறினாள்;

"என்னமோ நடந்திருக்கிறது? எனக்குப் பயமாயிருக்கிறது.”

“என்ன நடந்திருக்கும்? கைப்புண்ணுக்குக் கண்ணாடியா வேண்டும்? மன்னாரு கோஷ்டி அவனைக் கடத்திக் கொண்டு போயிருப்பார்கள். நான் பயப்படவில்லை, ஆனால் யோசிக்கிறேன். பயம் பிரச்னைகளைத் தீர்க்காது” என்றான் பூமி.

அன்றைக்கு முந்திய இரவு பையன் மெஸ்ஸிலிருந்தே வீடு திரும்பவில்லை என்பதால் இரவு வீடு திரும்புவதற்கு முன்பே அவன் கடத்தப்பட்டிருக்க வேண்டும் என்று தெரிந்தது.

“அவனாகவே பயந்து ஸரண்டர் ஆகி மறுபடி மன்னாருவிடம் போயிருப்பான் என்றும் அநுமானிக்க வழி இருக்கிறதே” என்றாள் சித்ரா.

பூமி தான் அப்படி நினைக்கவில்லை என்றான்.

அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்த அந்தப் பகுதி குறுகிய சந்து பொந்துகள் கொண்டதாயிருந்தது. ஓரிடத்தில் ஒரு டீக்கடை வாசலில் நாலைந்து பேர் கும்பலாக நின்றிருந்தார்கள். ஸ்கூட்டர் அந்த டீக்கடையைக் கடப்பதற்கு முன் அந்தக் கும்பலிருந்து ஒருவன் குறுக்கே ஓடிவந்து சாலையை மறித்தான்.

உடனே ஸ்கூட்டரை வேகம் குறைத்து மெதுவாக்கிய பூமி, “பரர்த்துப் போ அப்பா” என்று சாலையை மறித்தவனை நோக்கிச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே இன்னும் இருவர் அதே போல ஒடிவந்து சாலையில் மீதிமிருந்த இடத்தையும் மறித்துத் தடுத்தனர்.

அடுத்து வந்தவனிடம் இரண்டு மூன்றடி நீளத்திற்கு ஓர் இரும்புக் குழாய் கையிலிருந்தது. பூமிக்கு ஒரு விநாடி கூடத் தாமதமின்றி விஷயம் புரிந்து விட்டது. தான் காணாமல் போன பையனின் வீட்டைத் தேடிக் காலையில் வரக்கூடும் என்பதை எதிர் பார்த்து மன்னாருவே ஒரு கும்பல் அடியாட்களை அங்கே நிறுத்தி வைத்திருப்பதைப் பூமி விரைந்துஉணர்ந் தான்.

ஸ்கூட்டரை நிறுத்தி ஸ்டாண்டைப் போட்டுவிட்டு “நீ ஸ்கூட்டர் பக்கத்திலே இங்கேயே நின்று கொள்!” என்று சித்ராவின் காதருகில் கூறிவிட்டு அவர்களை எதிர் கொள்ளத் தயாரானான் பூமி.

அவர்களுக்குத் தான் எப்படிப்பட்டவன் என்பதைப் புரிய வைக்கலாம் என்ற உற்சாகத்தில் திளைத்திருந்தது அவன் மனம்.

“மாட்டிக்கிட்டியா வாத்தியாரே?” என்று பல்லிளித்தபடி இரும்புக் குழாயை ஓங்கி வந்தவனிடமிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் அதைப் பற்றிக் கொண்ட பூமி -

“யார் யாரிடம் மாட்டிக் கொண்டார்கள் என்பதைச் சீக்கிரமே புரியவைக்கிறேன் அப்பா!” என்று அட்டகாசமாகச் சிரித்தபடி அவர்களுக்கு மறுமொழி கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/34&oldid=1029081" இலிருந்து மீள்விக்கப்பட்டது