33

காந்தியடிகள் காலத்து அரசியலில் மக்களுக்காகத் தலைவர்கள் தியாகம் செய்தார்கள். இன்றைய அரசியலிலோ தலைவர்களுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது.


ங்கு நிலவிய சூழ்நிலை மர்மமாகவும் புதிராகவும் இருந்தது. பூமியைப் பார்த்த கண்கள் அனைத்துமே சந்தேகத்தோடுதான் பார்த்தன. அங்கிருந்தவர்கள் பயப்படுகிறார்களா பயப்படுத்தப்படுகிறார்களா என்பதைப் பிரித்துப் புரிந்து கொள்வதும் சிரமமாக இருந்தது. ஒரு சமயம் பார்த்தால் யாருக்கோ, எதற்கோ பயப்படுவது போலவும் இருந்தது. இன்னொரு சமயம் பார்த்தால் யாரையோ, எதையோ பயமுறுத்துவது போலவும் இருந்த்து.

ஒரு பியூட்டி பார்லருக்குரிய அழகு உணர்ச்சியோ, அலங்கார உணர்ச்சியோ, இங்கித நளின இதங்களோ, மென்மைகளோ அங்கு யாரிடமும் தென்படவில்லை. பூமி மிக விழிப்பாகவும், சகல விதங்களிலும் சுதாரித்துக் கொண்ட மன நிலையுடனும் எச்சரிக்கையாகவே இருந்தான்.

வரவேற்புப் பகுதியிலிருந்த பெண்மணியினுடைய வேண்டுகோளுக்குக் கட்டுப்பட்டு அவன் இருக்கையில் உட்கார்ந்ததுமே குண்டர்கள் இருவரும் அவனருகே பக்கத்துக்கு ஒருவராக வந்து நின்று கொண்டனர். பூமி பொறுமை இழக்கிற அளவுக்குக் காத்திருக்க வேண்டியதாயிற்று.

யார் யாரோ வந்தார்கள். பார்த்தார்கள். போனார்கள். ஒரு தினுசான பெண்களின் நடமாட்டம் அதிகமாயிருந்தது. கூச்ச நாச்சமின்றி அவர்கள் அங்கு நடமாடினார்கள், உடலால் மட்டுமே தாங்கள் பெண்கள் என்பதை அவர்கள் நிரூபித்தார்களே ஒழிய, பெண்மையின் உயரிய உணர்வுகள் எவையும் மருந்துக்குக் கூட அவர்களிடம் தென்படவில்லை. மறுபடியும் எழுந்திருந்து போய் வரவேற்புப் பெண்மணியிடம் தான் இன்னும் எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பூமி கேட்டான்.

“நீங்கள் விரும்புகிற வரை காத்திருக்கலாம்” என்றாள் அவள்.

“இப்படிச் சொன்னால் என்ன அர்த்தம்?”

“அர்த்தம் எல்லாம் நாங்கள் சொல்லிக் கொடுப்பதில்லை ... இங்கே வருகிறவர்கள் எல்லாம் அர்த்தமும் புரிந்துதான் வருகிறார்கள். நாங்கள் சொல்லிக் கொடுத்து அவர்கள் எதையும் தெரிந்து கொள்வதில்லை. அதற்கு அவசியமும் இல்லை, நீங்கள்தான் புரியாமல் உட்கார்ந்திருக்கிறீர்கள்.” பூமி சிந்தித்தான். குழப்பமாயிருந்தது. அவள் தன்னையும் அங்கு வருகிற வாடிக்கைக்காரனாக நினைத்து நடத்து கிறாளோ என்று தோன்றியது. மறுபடியும் அவளிடம் நினைவூட்டினான் பூமி.

“நான் மன்னாருவைப் பார்க்க வந்தேன்...”

மறுபடியும் அவள் முகம் வியப்பைப் பொழிந்தது. இண்டர்காமில் உள்ளே யாருடனோ தொடர்பு கொண்டாள். பின்பு அவனிடம் பேசாமல் அங்கே நின்ற அந்தப் புண்ணாக்குத் தடியர்களிடம் நேரே பேசினாள். அவள்:

“இந்த ஆளை உள்ளார இட்டுக்கினு போங்கப்பா! தலைவரு வரச்சொல்றாரு.”

வார்த்தைகளில் மரியாதை விரைந்து தேய்மானம் பெற்றிருந்தது. பூமி அதைக் கவனித்துக் கொண்டான். ஆனால் பொருட்படுத்தவில்லை. பச்சை நிற விளக்குகள், மஞ்சள் விளக்குகள், சிவப்பு நிற விளக்குகள் ஏராளமான இண்டர்காம்கள், காலிங்பெல்கள் என்று ஒரு பெரிய கண்ட்ரோல் ரூம் போல் இயங்கியது அந்த வரவேற்பு அறை.

விளக்குகள் நிறம் நிறமாக எரிவதும் அணைவதுமாக இருந்தன. டெலிபோன் மணி உட்பட மணிகள் ஒலிப்பதும் ஓய்வதுமாக இருந்தன. நவீன உத்திகளுடனும் நவீன வசதிகளுடனும் அழகு சாதன நிலையம் என்ற அங்கீகரிக்கப் பட்ட போர்வையில் சதை வியாபாரம் நடந்து கொண்டிருந்தது அதிகம் யோசிக்க அவசியமில்லாமலே புரிந்தது.

பங்களாவின் உட்பகுதியில் பூமியை நெடுந்தூரம் சுற்றி வளைத்து அழைத்துச் சென்றார்கள் அவர்கள். அந்த வீட்டுக்குள் அத்தனை சந்து பொந்துகளும் இடுக்குகளும் இருக்க முடியும் என்று வெளியே இருந்து பார்க்கும் போது கற்பனை கூடச் செய்ய முடியாது. கதவுகளும் வாசல்களும் எங்கெங்கோ எப்படி எப்படியோ அமைந்து இருந்தன. உள்ளே நன்றாகப் பழகியவன் வழிகாட்டி, அழைத்துச் சென்றாலொழியப் போவதும் திரும்புவதும் கடினமாயிருக்கும் போல தெரிந்தது.

கடைசியாக ஏ.சி. செய்த ஓர் அறையில் அலங்கோலமான நிலையில் பல பெண்கள் புடைசூழ நல்ல குடிவெறியில் தன் நிலை தடுமாறிப் போயிருந்த மன்னாருவின் முன்னால் கொண்டு போய் விட்டார்கள். லிக்கர் நெடியும், சிகரெட் புகை நெடியுமாrக அந்த அறையை நகரமாக்கி இருந்தன.

அங்கே மன்னாருவை நேரில் பார்த்தபோது அவன் தான் கற்பனை செய்திருந்த மாதிரி இல்லை என்பதைப் பூமி புரிந்து கொண்டான். வெடவெடவென்று ஒடிந்து விழுகிற மாதிரி இருந்த அவன் முகத்தில் மீசைமட்டும் பெரிதாயிருந்தது. அம்மை வடுக்கள்... மொய்த்த முகத்தில் தெறித்து விழுந்து விடும் போல விழிகள் பிதுங்கி நின்றன.

ஆடை நழுவிப் போனது தெரியாமல் வெறும் உள்ளாடையான அரை டிராயரோடு இருந்த அவன் திடீரென்று “யார்ரா நீ? போலீஸ் ஆளா? போலீஸ் தானே உன்னை அனுப்பினாங்க?” என்று பூமியை நோக்கி முஷ்டியை ஓங்கிக் கொண்டு பாய்ந்தான்.

பூமி அவனைத் தடுக்க முயன்றதிலேயே நிலை தடுமாறித் திரும்பவும் போய் சோபாவில் விழுந்தான் மன்ருை. அதைப் பார்த்ததும் குண்டர்கள் பூமியின் மேல் பாய்ந்தார்கள்.

“தலைவர் மேலயா கையை வச்சே?” என்று அவர்கள் பூமி மேல் தாக்குதலுக்கு வந்ததும் பூமி தன் தொழிலைக் காட்டினான்.

மன்னாருவுக்கு முன் டீப்பாயில் இருந்த - பாட்டில்கள் சிதறின. பெண்கள் கூச்சலிட்டு மூலைக்கொருவராகப் பதறி ஓடினார்கள். பூமி பாய்ந்து தாக்கிய வேகத்தைக் கண்டு குண்டர்கள் அதிர்ச்சியடைந்தார்கள். ஒற்றைக் கையால் தடுத்த வேகத்திலேயே மன்னாருவைச் சோபாவில் சுருட்டிப் போட்டிருந்தான் பூமி. வெறும் சோற்று மாடன்களான குண்டர்கள் இருவரும் அவனிடம் செம்மையாக வாங்கிக் கட்டிக் கொண்டார்கள். பூமியின் சாகஸத்தைப்பார்த்து மலைத்துப் போயிருந்த மன்னாரு தன்னருகே இருந்த சுவிட்சை அமுக்கினான்.

“ஏய் மன்னாரு! இன்றைக்கு இதுபோதும். இன்னொரு நாள் மறுபடி உன்னை வந்து சந்திக்கிறேன். தயாராயிரு” என்று அவனிடம் கூறி விட்டு அறைக் கதவைத் திறந்து கொண்டு வழி தப்பிவிடாமல் ஞாபகம் வைத்திருந்தபடி வெளியேறி முகப்புக்கு வந்தான் பூமி.

முகப்பிலும் சில குண்டர்கள் அவனை வழிமறித்தனர். அவர்களைச் சமாளித்துத் தெருவில் நின்றிருந்த ஒரு டாக்ஸியில் பாய்ந்து ஏறி டிரைவரை. விரைந்து ஓட்டச்சொல்லிப் பூமி அங்கிருந்து மீண்டான். பின்னால், யாரோ மோட்டார் சைக்கிளில் துரத்துவதாகத் தோன்றியது. திரும்பி பார்த்தான். மன்னாருவின் ஆட்கள் இருவர் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து துரத்தி வந்துகொண்டிருந்தார்கள்

முந்தவோ ஓவர்டேக் செய்யவோ அவர்கள் முயலவில்லை. ஒரு சீராகப் பூமியின் டாக்ஸியைப் பின்பற்றினர். தான் எங்கே இறங்குகிறோம் என்பதைப் பார்க்கவே அவர்கள் பின்தொடர்வதாகப் பூமிக்குத் தோன்றியது. அவர்களை மேலும் குழப்பமடையச் செய்ய வேண்டுமென்ற திட்டத்துடன் லஸ்ஸில் இறங்காமல் கச்சேரி ரோடு போலீஸ் ஸ்டேஷன் முன்னால் போய் நிற்குமாறு டாக்ஸி டிரைவரிடம் சொன்னான் பூமி. போலீஸ் ஸ்டேஷன் என்றதும் டாக்ஸி - டிரைவர் கொஞ்சம் பதற்றம் அடைவது புரிந்தது.

ஆள்கட்டும் பணவசதியும் இருந்தால் அரசியல் என்ற ஒரு போர்வையையும் போர்த்திக்கொண்டு எவ்வளவு அக்கிரமங்கள் செய்ய முடிகிறது. மன்னாரு இதற்குப் பிரத்தியட்சமான உதாரணமாயிருந்தான். முதல் இல்லாமல் முதலீடும் இல்லாமல் மன்னாரு கோடிக் கணக்கில் பணம் புரட்டினான். அவனுக்கு எல்லா அரசியல் கட்சிகளும் பயந்தன. அவன் ஆட்சிக்கு வருகிற கட்சிகளின் அடியாளாகவும், பண உதவியாளனாகவும் மாறினான். அவனைச் சீண்டுகிற யாரும் தப்ப முடியாத நிலைமையை அவனது அரசியல் செல்வாக்கு அவனுக்கு அளித்திருந்தது. அவனும் அவனுடைய ‘அண்டர் வோர்ல்ட்’ நடவடிக்கைகளும் ஒவ்வோர் அரசியல் கட்சிக்கும் தேவைப்பட்டன.

பூமி மன்னாருவின் வலிமையைக் குறைத்து மதிப்பிடவில்லை. பழைய காந்திகால அரசியலில் மக்களுக்காகத் தியாகம் செய்பவர்கள்தான் தலைவர்களாக இருந்தார்கள். இன்றைய மன்னாருவின் அரசியலில் மக்களைத் தியாகம் செய்ய வைத்துத் தாங்கள் வசதிகளை அனுபவிப்பவர்கள் தான் தலைவர்களாகி இருந்தார்கள். இந்த வித்தியாசம் பூமிக்கு மிக நன்றாகப் புரிந்திருந்தது.

மன்னாருவை எதிர்க்கத் துணியும்போதே எதை எதை எதிர்க்க வேண்டியிருக்கும், எங்கெங்கிருந்து எல்லாம் சிரமங்கள் தன்னைத் தேடிவரும் என்பதை எல்லாம் அவன் அது மானித்தே வைத்திருந்தான். சுயநலம் எதுவுமில்லாத அவன் அதன் காரணமாகவே நிர்ப்பயமாக இருந்தான். இழப்பதற்கு எதுவுமில்லாத துணிவில்தான் அவன் நிமிர்ந்து நின்றான்.

கச்சேரி ரோடு போலீஸ் நிலைய முகப்பில் டாக்ஸியை நிறுத்தி மீட்டரைப் பார்த்து அவன் கணக்குத் தீர்த்துக் கொடுத்துக் கொண்டிருந்தபோது, அந்த மோட்டார் சைக் கிளிலே பின்தொடர்ந்தவர்கள் அதைப் பார்த்துக் கொண்டே நேர்கிழக்கே சாந்தோம் ஹைரோட்டை நோக்கி விரைந்தனர். பூமியும் அவர்களைக் கவனித்தான். அவர்களும் அவனைக் கவனித்தார்கள், தான் அபாயங்களில் வலுவிலே போய்ச் சிக்கிக்கொள்கிறோம் என்பது பூமிக்குப் புரிந்துதான் இருந்தது. அதற்காக அவுன் கலங்கவோ, பயப்படவோ இல்லை. மற்றவர்கள் சேதப்படாமல் தடுக்க யாராவது ஒருவர் முதலில் தைரியமாக முன் சென்று சேதம் பட்டுத்தானே ஆகவேண்டும் என்று துணிந்திருந்தான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/33&oldid=1029080" இலிருந்து மீள்விக்கப்பட்டது