42

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், கடத்தல்காரர்கள , கறுப்புப் பண முதலைகள், கள்ள மார்க்கெட் பேர் வழிகள் எல்லோருமாகச் சேர்ந்து நாட்டில் நிரந்தரமாக ஓர் எதிர் அரசாங்கமே நடத்தி வருகிறார்கள்.

டில்லிபாபு கொடுத்திருந்த இரகசியத் தகவலின்படி மன்னாருவின் ஆள்கடத்தல் கும்பலைத் தேடித் தாங்கள் செல்வதைக் கட்டு மரத்து ஆட்களிடம் பூமி தெரிவிக்கவில்லை. காசிச்செட்டி சந்து ஆட்களுக்கு கடத்தல் பொருள்களை மொத்தமாக எடுத்து விநியோகிக்கும் ஒரு புள்ளியும் அவருக்கு வேண்டியவர்களுமாகப் பூமியும் அவனுடன் இருந்தவர்களும் அவர்களால் புரிந்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

கட்டு மரத்து ஆட்களோ மற்றவர்களோ எது கேட்டாலும் தன்னுடன் இருந்தவர்கள் எதுவும் பதில் பேசக் கூடா தென்றும் தானே எல்லாருக்கும் பதில் சொல்லியும், சொல்லாமலும் சமாளிக்க முடியுமென்றும் பூமி கூறியிருந்தான். இரவில் கட்டு மரத்தில் பயணம் செய்வது சிலிர்ப்பூட்டும் அநுபவமாயிருந்தது. அந்தப் பகுதி கடலும் மனிதர்களும் கடத்தல்காரர்களுடனும், கடத்தல் படகுகளுடனும், கடத்தல் பண்டங்களுடனும், கடத்தல் பணத்துடனும் நெருங்கிய தொடர்பு கொண்டிருப்பது வெளிப்படையாகவே தெரிந்தது. மன்னாருவுக்கும் அதில் பங்கு இருக்குமோ என்று பூமி அப்போது எண்ணினான்.

கடற்சிலந்திபோல மன்னாருவின் கைகள் எத்தனை திசைகளில் எத்தனை வகையாக நீண்டிருக்கும் என்பதை அநுமானிக்க முடியாமல் இருந்தது. உப்பங்கழியான காயல் பகுதியாக இருந்ததனால் அவர்கள் பயணம் செய்த கடற் பகுதியில் அதிகக் கொந்தளிப்போ அலைகளோ இல்லை. கட்டுமரங்களைவிட்டு இறங்கியவுடன் டாக்ஸிக்கோ ஆட்டோவுக்கோ கணக்குத் தீர்க்கிற மாதிரித் தீர்த்து விடமுடியாது. திரும்பும் பயணமும் முடிந்து கரைபோய்ச் சேர்ந்த பின் கட்டு மரக்காரர்கள் ஒரு பெருந்தொகை எதிர்பார்க்கிறார்கள் என்பது அவர்களிடம் கொஞ்சம் பேச்சுக் கொடுத்துப் பார்த்ததிலிருந்து பூமிக்குப் புரிந்தது.

எண்ணிக்கையில், அவர்கள் இருவர், தாங்கள் மூவர் என்ற நம்பிக்கை தெம்பளித்தது. அவர்களால் கெடுதலோ வம்போ வருமானால் சமாளிக்க முடியுமென்றே பூமி நம்பினான். உடன் அழைத்து வந்திருந்த இருவரும் நன்கு உதவக் கூடியவர்கள் என்பது பூமியின் கணிப்பாக இருந்தது.

திருடர்கள், கொள்ளைக்காரர்கள், கொலைக்காரர்கள், கடத்தல்காரர்கள், கறுப்புப் பண முதலைகள், கள்ள மார்க்கெட் பேர்வழிகள் எல்லாருமாகச் சேர்ந்து நாட்டில் நிரந்தரமாக ஓர் எதிர் அரசாங்கம் நடத்திக் கொண்டிருப்பது தெரிந்தது. இந்த எதிர் அரசாங்கத்தில் தேர்தல், ஜனநாயகம், மக்கள் நம்பிக்கை இவையெல்லாம் இல்லாமலே பலர் தொடர்ந்து வெற்றிகரமாக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அசல் அரசாங்கமே சில இடங்களில் இந்த எதிர் அரசாங்கத்தின் தயவில் காலந்தள்ளிக் கொண்டிருந்தது. எதிர்ச் சக்திகள் அத்தனை வலுவாக இருந்தன.

மிகமிக மத்த கதியிலான ஒரு மணி நேரப் பயணத்திற்குப் பிறகு சில . குடிசைகள். தாழ்வான ஓட்டடுக்கு வீடுகள்’ தென்பட்ட ஒரு கரையில் அவர்களை இறக்கி விட்டார்கள் கட்டுமரக்காரர்கள். அவர்கள் கரையிலேயே தங்கிக் : கொண்டார்கள். ஊருக்குள் வரவோ பூமிக்கும் அவனது நண்பர்களுக்கும் வழிகாட்டவோ அவர்கள் தயாராயில்லை. வெறிச்சோடிக் கிடந்த அந்தத் தீவில் வழி காட்டுவதற்கு அதிக அவசியம் இருப்பதாகவும் தோன்றவில்லை.

மணலிலும் தாழம்புதர்கள் புன்னை மரங்களின் நடுவிலுமாகச் சிறிது தூரம் நடந்து செல்ல வேண்டியிருந்தது. திசை தடுமாறி விடாமல் இருப்பதற்காகத் தங்கள் கைவசமிருக்கும் டார்ச்லைட்டைக் கால்மணி நேரத்துக்கு ஒருமுறை அடித்துக்காட்டுவதாகக் கட்டுமரக்காரர்கள் கூறியிருந்தார்கள். கடத்தல் நடை முறைகள் கட்டுமாக்காரர்களுக்குக் கூட இந்த டார்ச் லைட் ஏற்பாட்டைக் கற்றுக் கொடுத்திருந்தன.

பூமி நண்பர்களிடம் சொன்னான்: இங்கே ஈ காக்கை தென்படவில்லையே என்று மெத்தனமாக இருக்காதீர்கள்; நடக்கும் ஒவ்வோர் அடியையும் உஷாராக எடுத்து வையுங்கள். இது கடத்தல்காரர்களின் சொர்க்க பூமி, அதிக கவனமாயிருக்க வேண்டும்."

அங்கே முதலில் தென்பட்ட கீற்றுக் குடிசையினருகே ஒரு மீனவப் பெண் கூடையோடு நின்று கொண்டிருந்தாள். அந்த அகாலத்தில் அவள் யாரையோ எதிர்பார்த்து நிற்பது போல் தான் தோன்றியது. பூமியையும் நண்பர்களையும் பார்த்ததும் அவள் தெலுங்கில் ஏதோ கேட்டாள். இவர்களுக்கு என்ன பதில் சொல்லுவதென்று தெரியவில்லை. தயங்கினார்கள். அவள் இவர்களை ஏற இறங்கப் பார்த்துவிட்டு ஒரு விநாடி கூடத் தயங்காமல் உடனே குடிசைக்குள் ஓடிவிட்டாள்.

பூமி துணிந்து அவளைப் பின் தொடர்ந்து குடிசைக்குள் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். உள்ளே ஏராளமான அட்டைப் பெட்டிகள் கட்டி முடிந்து வைக்கப்பட்ட பாலிதின் பைகள் என்று குவிந்திருந்தன. அவ்வளவும் கடத்தல் சாமான்களாக இருக்க வேண்டும். தடிமன் தடிமனாக நாலைந்து ஆட்களும் இருந்தார்கள். பதுங்கிக் கொண்டிருந்தார்கள். அவசர அவசரமாக உள்ளே எட்டிப் பார்த்த வேகத்தில் பூமி. தலையை வெளியே இழுத்துக் கொண்டு விட்டான்.

“ஒரு தாக்குதலைச் சமாளிக்கத் தயாராயிருக்குமாறு நண்பர்களுக்கு ஜாடை காட்டினான். ஆனால் அவன் நினைத்தபடி நினைக்கவில்லை. குடிசைக்குள்ளிருந்து யாரும் இவர்கள் மேல் பாயவில்லை. கடத்தல் சரக்கை வாங்க வந்த மொத்த வியாபாரி என்று தங்களை அவர்கள் முதலில் நினைத்திருக்க வேண்டும் என்று பூமிக்குத் தோன்றியது.

அந்த மீனவப் பெண் கூறிய தெலுங்கு வார்த்தைக்கு ஏதோ ஒரு பொருத்தமான பதில் வார்த்தை இருக்க வேண்டும். என்றும் அது தங்களுக்குத் தெரியாமல் தாங்கள் விழித்துக் கொண்டு நின்றதனால்தான் தாங்கள் சரக்கு எடுக்க வந்த ஆட்கள் இல்லை என்று அவர்கள் சுலபமாகவே முடிவு செய்து கொண்டிருக்க வேண்டும் என்றும் அநுமானிக்க முடிந்தது. தாங்களாகவே உள்ளே புகுந்து சண்டைக்கு இழுக்காத பட்சத்தில் அவர்கள் சண்டைக்கு வரத் தயாராயில்லை என்று தெரிந்தது. அவர்கள் வெளியே எதிர்பார்த்துச் சிறிது நேரம் தாமதித்தபின் ஏமாற்றத்தோடு மேலே நடந்தார்கள். சூழ்நிலை மர்மமாயிருந்தது.

சிறிது தொலைவில் கடல் ஓலமிடும் ஓசை வேறு அந்த மர்மமான சூழ்நிலைக்குச் சுருதி கூட்டியது. நெடுநேரம் அலைந்து திரிந்த பின் தணிவான பெரிய திண்ணையோடு கூடிய ஓர் ஓட்டடுக்கு வீடு தென்பட்டது. திறந்திருந்த ஒரே சன்னல் வழியாக மங்கிய அரிக்கேன் லாந்தர் வெளிச்சம் தெரிந்தது. உள்ளே பேச்சுக் குரலும் கேட்டது.

பூமியும் நண்பர்களும் அந்த வீட்டு வாசலில் சிறிது தயங்கி நின்றார்கள். அடுத்த கணமே உள்ளேயிருந்து ‘யாரது?’ என்று. கனமான குரலும் அதையொட்டிக் கதவு திறக்கப்படும் தாழ்ப்பாள் ஓசையும் கேட்டன. கையில் அரிக்கேன் லாந்தரைப் பிடித்தபடி, தாடி மீசை நெற்றியில் காலணா அகலக் குங்குமப் பொட்டுடன் ஒரு முதியவர். வெளிப்பட்டார்.

“நீங்கள்ளாம் யாருங்க”

பூமிக்கு அவரிடம் உண்மை பேச வேண்டுமென்று தோன்றியது. தங்களைப் பற்றிய விவரங்களைக் கூறி, வந்த காரியத்தையும் சொன்னான்.

“அதானே பார்த்தேன்? கடத்தல்காரர்களைத் தவிர வேற யாரும் இங்கே இந்த நேரத்தில் தட்டுபடறது வழக்கமில்லையே?” என்று முதியவர் வியந்தார்.

பூமி அவரிடம் அவருக்கு நம்பிக்கை ஏற்படுகிற விதத்தில் தொடர்ந்து பேச்சுக் கொடுத்துப் பார்த்தான். கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது.

“எவ்வளவு நேரந்தான் நின்னுகிட்டுப் பேசறது? வாங்க... திண்ணையில் உக்காருவம்” என்று அவர்களை அழைத்தார் முதியவர்.

திண்ணையில் போய் உட்கார்ந்ததும் அவரே தொடர்ந்தார்.

"நீங்க கடத்தல் வேலையா வராம வேற வேலையா வந்த ஆளுங்கன்னு தெரிஞ்சிருந்தாக் கட்டு மரத்து ஆளுங்களே உங்களை இந்நேரத்துக்கு இங்கே இட்டாரச் சம்மதிச்சிருக்க மாட்டாங்க. நீங்களும் கடத்தல் வேலையா வந்திருக்கீங்கன்னுதான் இங்கே இட்டாந்தாங்க... இந்தத் தீவு இதுக்கு வர்ரதுக்கும் திரும்பறத்துக்குமான போக்குவரத்து வசதிங்க எல்லாமே கடத்தல்காரங்க கண்ட்ரோல்லே போயிடிச்சு. தீவுல காலடி வச்சதும் மீன் விக்கிறவமாதிரி யாராவது ஒருத்தி வந்து மீன் வாங்க வந்தீங்களா'ன்னு தெலுங்கில் கேட்பா. பதில் சரியாக் கிடைச்சா உள்ளே இட்டுக்கினு போய்ச் சரக்கைக் காமிப்பாங்க... இல்லாட்டி... ஆள் தப்ப முடியாது! அநேகமாக எல்லாருமே ஊரைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க... நான் ஒருத்தன்தான் துணிந்து காலந் தள்ளிக்கிட்டிருக்கேன். என் சம்சாரம் பசங்களுக்கெல்லாம் கூடப் புடிக்கலே. இங்கேயிருந்து போயிடணும்னுதான் அவங்கள்ளாம் நெனைக்கிறாங்க. இங்கேயிருந்தா மன்னாரு வகையறா என்னிக்காவது கொலை கூடப் பண்ணிருவாங்கன்னு பயப்படறாங்க.”

“போலீஸ் கம்ப்ளெயிண்டு கொடுத்து இதை ஒழிக்க முடியாதா?”

“முடியாதுங்க! சில வேளைகளிலே ‘பூனைக்கும் காவல் பாலுக்கும் தோழன்'கிற பழமொழி மாதிரி ஆயிடுது! நேத்துப்பாருங்க... இந்த மன்னாரு: கோஷ்டிக்குத் துரோகம் பண்ணிட்டான்னு நல்ல வயசுப்புள்ளையாண்டான் ஒருத்தனை இங்கே கொண்டாந்து கொலை பண்ணி ஜூரத்தினாலே செத்தான்னு புளுகிப் புதைச்சிட்டாங்க?”

இதைக் கேட்டுப் பூமிக்குத் திக்கென்றது. உடனே உஷாராகி அவன் அவரைக் கேட்டான்.

“நிஜமாவா? அது நேத்தா நடந்திச்சு?”

“ஆமாங்க! இந்தத் தீவாந்தரத்திலே கேள்வி கேப்பாரே இல்லே. யார் போய் இதைப் புகார் பண்ணப் போறாங்க?"

"எங்கே புதைச்சாங்க? ஏன் எரிக்கலே..?”

“அதென்னமோ தெரியலீங்க...?” ஒரு வேளை சட்டைக் காரப்பையனோ என்னமோ?”

“எங்கேன்னு காட்ட முடியுமா பெரியவரே?”

“வம்பு பிடிச்ச வேலை... போனவன் பிழைச்சு வரப் போறதில்லை... வேண்டாம் வுட்டுடுங்க... ஆபத்தாயிடும்” என்று பதறி மெல்ல நழுவினார் பெரியவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/42&oldid=1029089" இலிருந்து மீள்விக்கப்பட்டது