43

தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவர்களும் நல்லது செய்ய முயல்பவர்களும் கூடக் கெட்டவர்கள்தான்.

வ்வளவு கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பிறகும் தமது உரிமையை நிலை நாட்ட அங்கே துணிந்து குடியிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்ட அவரே இப்போது பயப்படுகிறார் என்பது பூரிக்குப் புரிந்தது. சுற்றும் முற்றும் ஒரு முறை பார்த்துக் கொண்டு மிகவும் தணிந்த பதற்றமான குரலில் அவரே சொன்னார்:...

“நீங்கள் இந்தத் தீவிலே நுழைஞ்சது-இங்கே என்னைத் தேடிக்கிட்டு வந்தது -இப்ப இங்கே உட்கார்ந்து பேசிச்கிட்டிருக்கிறது இதெல்லாத்தையும் யாரும், கவனிக்கலேயாருக்குமே தெரியாதுன்னு நாம நினைச்சுக்கிட்டிருப்போம். ஆனா அது சரியில்லே... ... இது அத்தனையையும் எங்கேயிருந்தாவது யாராவது கவனிச்சிக்கிட்ருப்பாங்க... நீங்க தனிப்பட்ட முறையிலே என்னைத் தேடி வந்தவங்களா இல்லியான்னு இன்னும் அவங்களாலே கண்டு பிடிச்சிருக்க முடியாது அதனாலேதான் இதுவரை ஆபத்து எதுவும் வரலே.”

“கண்டு பிடித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றே வைத்துக் கொள்ளலாம். அதுக்காக நாம் ஏன் பயப்பட வேண்டும்? நாம் எந்தத் தவறான காரியத்தையும் செய்து கொண்டிருக்கவில்லையே?”

“தவறான காரியங்களையே தொடர்ந்து செய்து கொண்டிருப்பவர்களுக்கு நடுவே அவற்றைச் செய்யாமல் இருக்கிறவங்களும் நல்லது செய்ய முயல்கிறவர்களும்கூட ஆகாதவங்கதான்கிறதை நீங்க புரிஞ்சுக்கணும்.”

இப்படி அவர் கூறியது பூமிக்கு மேலே என்ன செய்வதென்று சிறிது மலைப்பாயிருந்தது. கொன்று புதைக்கப் பட்டிருக்கும் பையனே தான் தேடிவந்திருக்கும் பையனாயிருக்கலாமோ என்று சந்தேகம் தீர்வதற்கு உதவ வேண்டும் என்று அவரிடம் மன்றாடினான் பூமி. அப் பெரியவர் மறுபடியும் தயங்கினார். பூமியின் வற்புறுத்தல் தொடர்ந்தது. அவர் சொன்னார்:

“இருங்க; இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே பேசிக் கிட்டிருப்போம். நம்மை யாராவது கவனிச்சிக்கிட்டிருந்தாலும் சந்தேகம் தீர்ந்து அவங்க திரும்பிப் போகட்டும். யாரோ என் உறவுக்காரங்க வெளியூர்லேருந்து என்னைத் தேடிக்கிட்டு வந்திருக்காங்கன்னு நெனைச்சுக்கட்டும்.”

தொடர்ந்து மேலும் சிறிது நேரம் திண்ணையிலேயே அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார்கள் அவர்கள் பெரியவர் பெயர் காளத்திநாதன் என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது, கடத்தல்காரர்களின் ஆதிக்கம் ஏற்படுவதற்கு முன் அந்தத் தீவாத்தரமான கிராமத்தில் ஊர்ப் பெரிய மனிதராகவும் நாட்டாண்மைக்காரராகவும் சிறந்த அந்தஸ்தோடு வாழ்ந்தவர் என்றும் தெரிந்து கொள்ள முடிந்தது.

இரவு பன்னிரண்டு மணிக்கு மேல் கடல் அலைகளின் தூரத்து ஒலியும் காற்று சுழற்றிச் சுழற்றி அடிக்கும் ஓசையுமாக இருந்த ஒரு சூழலில் அவர்கள் வீட்டிலிருந்து புறப்பட்டார்கள். அதிக ஸெல்கள் போட முடிந்த ஒரு நீளமான டார்ச்சுடன் காளத்திநாதன் வழிக்காட்டிச் செல்லப் பூமியும் நண்பர்களும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். கடற்கரை காயற்பகுதியாயிருந்ததனால் நிலம் சொத சொத என்று ஈரமாயிருந்தது. விரைந்து நடப்பதற்கு முடியவில்லை.

சில சமயங்களில் பகலில் தரை தெரிகிறாற் போலிருக்கும். அந்தப் பகுதி நிலப்பரப்பில் இரவில் முழங்கால் ஆழத்திற்கு உப்பு நீர் நிரம்பி மறுபடி விடிந்ததும் வடியும்” என்றார் காளத்திநாதன்.

இவர்கள் அதிர்ஷ்ட்மோ என்னவோ அன்று அவ்வாறு தண்ணீர் நிரம்பவில்லை. ஆனாலும் நடப்பது சிரமமாகத்தான் இருந்தது. அடுத்த அடி எடுத்து வைப்பதற்காகக் காலைத் தூக்கினால் செருப்புத் தரையோடு பசை போட்டு ஒட்டின மாதிரிச் சிக்கிக் கொண்டு வர மறுத்தது.

தாழம்புதரும், புன்னை மரங்களுமாக அடர்ந்திருந்த ஒரு பகுதியைக் கடந்ததும் சில மேடுகள் சிலுவை, கோபுர அடையாளங்களோடு கட்டப்பட்டுக் கடற்காற்றில் உப்புப் பரிந்த சமாதிக் கட்டிடங்கள் தென்பட்டன.

“இங்கே எல்லா ஜாதி ஜனங்களுக்கு ஒரே மயானம் தான்! வேறு இடம் கெடையாது.” “இங்கேயாவது அப்படி இருக்கிறதே?” என்று கேட்டு விட்டுச் சிரித்தான் பூமி.

“இங்கே எரிக்கிறதுக்கு வசதி குறைவு. ராவுல தண்ணி ஏறிச் சிதையை அவிச்சிடும்கிற காரணம் வேற எரிக்கிறத்துக்கு இடைஞ்சலா இருக்கு! விறகு கட்டைக் கடைன்னு எதுவும் இங்கே கிடையாது."

இனிமேல் இந்தத் தீவுக்கு மயானம் கூடத் தேவை இல்லை பெரியவரே! இங்கேதான் யாருமே குடியிருக்கலியே? கடத்தல்காரங்க மட்டுந்தானே வந்து போறாங்க. அதுக்காக ஒரு தனி மயானம் எதுக்கு?”

“சொல்லப் போனாக் கடத்தல்காரங்க வந்தப்பறம்தான் இந்த மயானத்துக்கே உபயோகம் நெறைய ஆகியிருக்கு....இயற்கையாச் சாகிறவங்களை விட அவங்களாலே சாகடிக்கப் படறவங்கதான் இப்ப அதிகம்! கேள்வி முறையில்லாம அடிச்சுக் கொன்று புதைச்சிட இந்தத் தீவு வசதியா இருக்கு.”

கூறிக்கொண்டே ஒரு குறிப்பிட்ட பகுதியில் டார்ச் ஒளியைப் பாய்ச்சினார். காளத்திநாதன். புதிதாக மூடப்பட்ட ஈரமண் மேட்டில் புன்னை மரக் கொம்பினாலேயே சிலுவை மாதிரி ஒடித்துக்கட்டி வைத்திருந்தது. சிலுவை நுனியில் உட்கார்ந்திருந்த பெரிய ஆந்தை ஒன்று வெளிச்சத்தைப் பார்த்ததும் சிறகடித்து எழ முயன்றது. அதன் குரூரமான கண்கள் டார்ச் ஒளியில் பளிரென மின்னின.

“அவசரத்திலே சரியாக் கூட மூடிட்டுப் போகலே” என்று கீழே குனிந்து இரத்தக் கறை படிந்த சட்டை ஒன்றை மண் குவியலிலிருந்து எடுத்தான் பூமியோடு இருந்த நண்பன் ஒருவன்.

சட்டையை வாங்கி அதன் தோள்பட்டைப் பகுதியைப் பார்த்த பூமிக்குத் திக்கென்றது. அதில் முத்தக்காள் மெஸ் சர்வர்களும், வேலையாட்களும் பயன்படுத்துகிற் ‘யூனிஃபாரத்'தின் அடையாள எழுத்துக்களாகிய ‘எம்.எம்’ என்ற ஆங்கில முதல் எழுத்துக்கள் இருந்தன.

தனது வியப்பையோ திகைப்பையோ வெளிக்காட்டிக் கொள்ளாமல் அந்தச் சட்டையை மடித்து வைத்துக் கொண்டான் பூமி. ‘பையனை இங்கே கொண்டு வந்து காதும் காதும் வைத்தாற்போல் இரகசியமாகக் கொன்று புதைத்து விட்டார்கள்’ என்று அவனுடைய உள் மனத்துக்குத் தோன்றியது. அவன் காளத்திநாதனிடம் கூறினான்.

"சந்தேகமாகத்தான் இருக்கிறது. ஆனால் நாமே இப்போது இதைத் தோண்டிப் பார்ப்பதை விடத் தக்க போலீஸ் ஏற்பாட்டோடு வந்து முயற்சி செய்வதுதான் நல்லது” என்று அவன் கூறியதை அவரும் ஒப்புக் கொண்டார்.

“நாம் தோண்டறது நல்லதில்லே. பாதி தோண்டிக்கிட்டிருக்கறப்பவே மன்னாரு ஆளுங்க கூட்டமா வந்து நம்மை உதைச்சாலும் உதைப்பாங்க. போலீஸ் வந்தாக் கூட மப்டிலே வந்தாத்தான் முடியும்! இல்லாட்டி முதல்லேயே உஷாராயிடுவாங்க” என்றார் அவர்.

தாங்கள் வந்தது போனது எல்லாவற்றையுமே இரகசியமாக வைத்துக்கொள்ளுமாறு காளத்திநாதனிடம் கூறிவிட்டுப் புறப்பட்டார்கள் அவர்கள் காளத்திநாதனிடம் அவர்கள் விடைபெற்ற பின் மீனவப்பெண் இருந்த குடிசைவாசலில் குண்டர்கள் ஐந்து பேர் வந்து வளைத்துக் கொண்டார்கள். அவர்களது விசாரணையே தடித்தனமாய் இருந்தது.

“யாருடா நீங்கள்ளாம்? என்ன வேலையா இந்நேரத்துக்கு இங்கே வந்தீங்க...?”

பூமி இதைக் கேட்டதும் முதலில் குமுறினான், இவர்களை அடித்து உதைத்து விட்டுத் தப்ப முடியும் என்றாலும் அதனால் மறுகரையிலும் ஆபத்துக்கள் தொடருமே என்று பின்பு தந்திரமாக யோசித்தான் பூமி. இவர்களோடு சண்டையிடுவதைக் கட்டுமரக்காரர்கள் பார்த்துவிட்டால் தங்களை மறுகரைக்குத் திரும்பக் கொண்டு போய்ச் சேர்க்க அவர்கள் மறுப்பார்களோ என்ற சந்தேகம் வேறு வந்துவிட்டது. எனவே தாங்களும் அவர்களுடைய நண்பர்களே என நிரூபிக்க ஏற்ற வகையில் நடித்துத் தப்புவதே சிறந்ததென்று தோன்றியது.

“என்னப்பா நம்ம ஆட்களே. நம்ம ஆட்களை முறைக்கிறீங்க?” என்று தொடங்கி மன்னாரு ஒரு வேலையாகத் தங்களை அங்கே அனுப்பியதாகப் பொய் கூறினான் பூமி. குண்டர்கள் விடவில்லை.

அது என்ன அப்பிடி எங்களுக்குக் கூடத் தெரியாத காரியம்?” என்று அவர்களில் ஒருவன் பூமியை மடக்கினான். பூமி அவனை மட்டும் தனியே அழைத்து அவன் காதருகே சொன்னான்.

“நேற்று புதைத்த பிணத்தருகே ஒரு தடயம் சிக்கிப் போச்சு, கொஞ்ச நேரத்திலே இங்கே போலீஸ் வந்தாலும் வரலாம். அதுக்குள்ளே தடயத்தை எடுத்துக்கிட்டு வந்துடணும்னு எங்களை மன்னாரு அனுப்பிச்சாரு. நீ வீணா நேரமாக்கினியோ எல்லாருமே மாட்டிக்குவோம். நாங்களும் உடனே போயாகணும்! நீங்களும் பதுங்கற இடத்திலே போய்ப் பதுங்கிக்கணும். ஒழுங்கா வழிவிடு.”

இந்தத் தந்திரம் உடனே பலித்தது. அவர்கள் பூமியை மன்னாருவினால் அனுப்பப்பட்ட ஆளென்று நம்பிவிட்டார்கள். மிகவும் வேண்டிய ஆளாயிருந்தாலொழிய இவ்வளவு பெரிய இரகசியத்தை மன்னாரு அவனிடம் சொல்லியிருக்க முடியாதென்றும் அவர்கள் நினைத்துக் கொண்டார்கள். அதோடு போகாமல் கட்டுமரம் வரை உடன் வந்து “இவர்களைச் சீக்கிரமாகக் கரையில் கொண்டு போய்ச் சேர்க்கணும். பெரிய முதலாளி அனுப்பி வச்சிருக்காங்க... ஜல்தி” என்று அவர்களுக்கு உத்தரவும் போட்டுவிட்டுப் போனான் ஒரு குண்டன். கட்டு மரத்தில் ஏறி உட்கார்ந்த பின்பே பூமிக்கும் நண்பர் களுக்கும் நிம்மதியாக மூச்சு வந்தது.

கரையில் இறங்கியதும் கட்டுமரக்காரர்களுக்குப் பணம் கொடுக்கப் பூமி மணிபர்ஸைத் திறந்ததும், “வேண்டாங்க...காசு! வாங்கினதாகத் தெரிஞ்சாப் பெரிய முதலாளி தோலை உரிச்சிடுவாரு” என்று பயந்து ஒதுங்கினார்கள் அவர்கள்.

சிறிது காலமாக அந்தத் தீவே கடத்தல்காரர்களின் முழு ஆதிக்கத்துக்கு வந்துவிட்டது என்று பெரியவர் காளத்திநாதன் கூறியதன் அர்த்தம் பூமிக்கு இப்போது புரிந்தது. கரையில் இறங்கியதும் வேறு சில தகவல்களை விசாரித்துத் தெரிந்துக் கொண்டு பூமியும் நண்பர்களும் ஆட்டோவில் மைலாப்பூர் திரும்பியபோது அதிகாலை மூன்று மணி ஆகியிருந்தது. அந்த இரவு சிவராத்திரி ஆகிய களைப்பில் நண்பர்கள் அயர்ந்துபோயிருந்தார்கள். அந்த நண்பர்களைத் தன் வீட்டிலேயே உறங்கச் சொல்லிய பின் பூமி ஒருவித வைராக்கியத்தோடு வீட்டிலிருந்து வெளியேறி ஹை ரோடுக்கு வந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/43&oldid=1029090" இலிருந்து மீள்விக்கப்பட்டது