44

மனித உருவில் தான் இந்தக் காலத்து ராட்சஸர்கள் திரிகிறார்கள். அவர்களை அவர்களது செயலிலிருந்துதான் மனிதர்கள் இல்லை என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது.

ரண்டொரு டீக்கடைகளைத் தவிர ஹைரோடு அமைதியிலாழ்ந்திருந்தது. கிழக்கே இன்னும் சிறிது நேரத்தில் விடிவெள்ளி முளைத்துவிடும். காற்று வைகறையின் குளிர்ச்சியைச் சுமந்து வீசத் தொடங்கியது. தெருக்கள் சந்தடியற்று உறங்கிக் கொண்டிருந்தன. பூமி நடந்து கொண்டிருந்தான்.

அந்தப் பையனை ‘மன்னாரு’ வகையறாக்கள் கொன்று புதைத்து விட்டார்கள் என்ற உண்மை கசப்பாயிருந்தது. ஒருபுறம் தாங்க முடியாத சோகமும், மறுபுறம் தவிர்க்க முடியாத வைராக்கியமுமாகப் போலீஸ் ஸ்டேஷனை நோக்கி நடந்தான் அவன்.

பையனின் அநாதைத் தாய்க்கு இந்த உண்மை தெரிந்தால் அவள் எப்படிக் கதறி அழுது தவிப்பாள் என்று நினைத்துப் பார்த்தபோது இன்று தன் தாய் உயிரோடு இருந்து தான் இப்படி ஓர் அபாயத்துக்கு ஆளாகியிருந்தால் என்ன நேரும் என்று ஒப்பிட்டுப் பார்த்தது அவன் மனம்.

அத்தனை பெரிய நகரத்தைக் கோழையாக்கி, நாகரிகத்தை நொண்டியாக்கிக் காட்டுமிராண்டித்தனம் பண்ணிக் கொண்டிருந்த ‘மன்னாரு’ கும்பலைப் பூண்டோடு வேரறுக்க வேண்டும் என்று மனத்தில் உறுதி செய்து கொண்டான் பூமி.

ஏற்கெனவே மெஸ்ஸிலிருந்து இந்தப் பையன் திடீர் என்று காணாமல் போனது பற்றிப் போலீஸில் புகார் செய்திருந்ததை ஒட்டி இப்போது மேல் விவரங்களைச் சொல்லி மன்னாருவின் அராஜகங்களுக்குக் கேந்திரமான அந்தத் தீவுக் கிராமத்தையே போலீஸ் ரோடு வளைக்க வேண்டும் என்று அவன் எண்ணினான். முன்னிரவில் தான் புறப்படும் போதே கவலையோடும், தயக்கத்தோடும் வழியனுப்பிய சித்ராவும், அந்தப் பையனின் தாயும் இப்போது உறக்கமின்றித் தவித்துக் கொண்டிருப்பார்கள் என்று தோன்றியது. போலீஸ் ஸ்டேஷனில் தகவல் தெரிவித்து விட்டு அப்புறம் சித்ராவைப் பார்க்கப் போக வேண்டுமென்று எண்ணியிருந்தான் அவன்.

ஆனால் போலீஸ் நிலையத்திலேயே அவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவன் போய்ச் சேர்ந்த போது போலீஸ் ஸ்டேஷனிலேயே சித்ரா இருந்தாள். பூமி புறப்பட்டுப் போய் வெகுநேரமாகியும் திரும்பாததால் பயந்து பதறிப் போலீக்குத் தகவல் தெரிவிக்க வந்திருந்தாள் அவள்.

“நான் என்ன காணாமல் போவதற்கோ, தொலைந்து போய் விடுவதற்கோ பச்சைக் குழந்தை என்று நினைத்தாயா சித்ரா?”

“அதுக்கில்லை? நீங்க போய் ரொம்ப நேரமாச்சு? ஒரு தகவலும் தெரியலே. தூக்கமும் வரலே. ஒரே பயம். என்னென்னவோ பயங்கரமான கற்பனைகள் வேறே.”

பூமிக்கு அவள் இதயம் புரிந்தது. அதிலிருந்த உரிமையின் ஆழமும் அன்பின் பரப்பும் புரிந்தன. ஒரு போதைப் பெண் தன் மேலுள்ள பிரியத்தின் காரணமாக அந்த அகாலத்தையும் பொருட்படுத்தாமல் போலீஸ் ஸ்டேஷனுக்குத் தேடி வந்திருப்பதை அவன் உணர்ந்தான்.

“என்னை யாரும் எதுவும் பண்ணி விடமுடியாது சித்ரா! உன் பயமும் கவலையும் அநாவசியமானவை.”

“போன காரியம் என்ன ஆச்சு”

“எல்லாம் சொல்கிறேன். முதலில் இந்த இன்ஸ்பெக்டரிடம் சில விவரங்கள் சொல்லிவிட்டு வருகிறேன். அதுவரை கொஞ்சம் பொறுத்துக் கொள்.”

பூமி இன்ஸ்பெக்டரிடம் எல்லா விவரங்களையும் சொன்னான். இன்ஸ்பெக்டர் காரியத்தின் அவசரத்தை உணர்ந்து கிரைம் பிராஞ்சுக்கும், கண்ட்ரோல் ரூமுக்கும் தொடர்பு கொண்டு மேலதிகாரிகளிடம் பேசினார். பூமியிடம் விவரங்களை எழுதி வாங்கிக் கொண்டார். காலை 6 மணிக்குப் பூமியை மறுபடி. அங்கே வருமாறு கேட்டுக் கொண்டார்.

அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்த சித்ரா காணாமல் போன பையன் கொலை செய்யப்பட்டு விட்டான் என்பதை அந்த உரையாடலிலிருந்து ஒருவாறு புரிந்து கொண்டு விட்டாள். அதனால் இருவருமாக ஸ்டேஷனிலிருந்து வெளியே வரும்போது அவள் பூமியைக் கேட்டாள்.

“இவ்வளவு அரும்பாடுபட்டு அலைந்தும் இப்படியா ஆச்சு? ரொம்பப் பரிதாபம். அந்த ஆயாகிட்டே இதை எப்பிடிப் போய்ச் சொல்றது?”

அந்தப் பையனே அவர்கள் தன்னைக் கொன்றுவிடப் போவதாகப் பயந்து நடுங்கினான். அவன் பயந்தபடியே நடந்து விட்டது. நான் எவ்வளவோ முயன்றும் அவனைக் காப்பாற்ற முடியவில்லை சித்ரா.

“அந்த ஆட்கள் ராட்சஸர்களா, மனிதர்களா?"

"மனித உருவில்தான் இந்தக் காலத்து ராட்ஸ்சர்கள் திரிகிறார்கள். அவர்களைச் செயலிலிருந்துதான் மனிதர்கள் இல்லை என்று கண்டுபிடிக்க வேண்டியிருக்கிறது...”

“இப்ப என்ன செய்யிறது? அந்தக் கிழவி கிட்ட உள்ளதைச் சொல்லிவிட வேண்டியதுதானே?”

“சொல்ல வேண்டியதுதான்! கொஞ்சம் பக்குவமாகப் பார்த்துச் சொல்ல வேண்டும். அல்லது சிறிது காலம் சொல்லாமல் பிறகு பொறுத்துச் சொல்ல வேண்டும்.”

பூமி முதலில் சித்ராவை அவள் வீட்டில் கொண்டு போய் விட்டான். வீட்டுக்காரர் தூக்கக்கிறக்கத்தோடு வந்து கதவைத் திறந்தவர் பூமியையும் அந்நேரத்தில் அவளோடு சேர்த்துப் பார்த்ததும் ஒரு தினுசாகச் சிரித்தார். அந்தச் சிரிப்பு விஷமத்தனமாயிருந்தது.

இப்போது அந்த அம்மாளிடம் பையன் கொலையுண்டதைச் சொல்லாதே! இங்கேயே அழுது புலம்பி மற்றவர்கள் முன்னால் கதறப் போகிறாள்! உன்னுடைய ஹவுஸ் ஓனர் அதைப் பார்த்துச் சத்தம் போட்டாலும் போடுவார். நான் பகலில் திரும்ப வருகிறேன். என் வீட்டுக்கு அவளை அழைத்துச் சென்று பக்குவமாக அதைச் சொல்லிக் கொள்ளலாம். அதோடு சிறுது காலம் அந்தம்மாள் நம்முடனேயே இருக்கட்டும் என்று சித்ராவின் காதருகே கூறி அனுப்பினான் பூமி.

மப்டியில் அந்தத் தீவுக் கிராமத்துக்குப் போக இருந்த போலீஸ் பார்ட்டியோடு பூமியும் போக இருந்தான். முந்திய இரவு தன்னோடு வந்த நண்பர்களை அவன் இன்றும் தொந்திரவு செய்ய விரும்பவில்லை. ஆட்டோ ஓட்டுகிறவரும் மானத்தைக் கெடுத்துக் கொண்டு அவர்கள் தன்னோடு அலைய வேண்டாம் என்று கருதி வீட்டுக்குப் போய் அவர்களை எழுப்பிக் காபி சிற்றுண்டி வாங்கிக் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விட்டுப் பூமி மீண்டும் போலீஸ் ஸ்டேஷனுக்குப் போன போது காலை ஆறு மணியாகி விட்டது.

போலீஸ் என்று அடையாளம் தெரியாத ஒரு லாரியில் அவர்கள் தீவுக் கிராமத்துக்குப் புறப்பட்டனர். எண்ணூரிலிருந்து தீவுக்குப் போவதற்கு வசதிகள் நிறைந்த சுங்க இலாகாவின் விசைப்படகு ஒன்றைப் போலீஸ்காரர்கள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தனர். போலீஸ் உயர்தர அதிகாரிகள் இந்தக் கேஸில் உண்மையாகவே ஆர்வம் காட்டியதாகத் தோன்றியது. போகும் போது அவர்களிடம் பேசிப் பார்த்ததிலிருந்து இதில் வெற்றியடைவதன் மூலம் சிலர் தங்களுக்குப் பிரமோஷனைக் கூட எதிர்பார்ப்பதாகத் தெரிய வந்தது.

முதலில் கிராமத்துப் பெரியவர் காளத்திநாதனைப் பார்த்து அவரை வழிகாட்டச் சொல்லி அழைத்துச் சென்று மயானத்தில் அந்தப் பையனின் பிணத்தைத் தோண்டி எடுத்துப் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விட வேண்டுமென்ற முடிவுடன் தீவில் போய் இறங்கினார்கள் அவர்கள். ஆனால் தீவு வெறிச்சோடிக் கிடந்தது.

முகப்புக் குடிசை அருகே ஆட்களைப் பார்த்ததும் “மீன் வாங்க வந்தீங்களா?” என்று தெலுங்கில் கேட்டுக் கொண்டு, எதிர்ப்படும் வழக்கமான மீனவப் பெண்ணைக் கூட. அன்று அங்கே காணவில்லை. குடிசையில் எட்டிப் பார்த்தால் அதுவும் காலி செய்யப்பட்டு மணல் தரை சுத்தமாகத் தெரிந்தது.

அதைக் கண்டு பூமிக்கு ஆச்சரியமாயிருந்தது. இரவு 2 மணிக்குப் பின் காலை ஏழரை மணிக்குள் அவசர அவசரமாக உஷாராகி அவர்கள் தப்பியிருக்க வேண்டும் என்று தோன்றியது. காளத்திநாதனுடைய ஓட்டடுக்கு வீடும் பூட்டியிருந்தது. அவர் எங்கே போயிருப்பார் என்பது தான் பூமிக்குப் புரியாத புதிராயிருந்தது.

“என்ன மிஸ்டர் பூமிநாதன்! ராத்திரி ஏதாவது கனவு கினவு கண்டீர்களா? அல்லது இதெல்லாம் நிஜமாக நடந்ததா? நீங்கள் சொன்னபடி எதுவுமே இங்கே இல்லியே?!” என்று மப்டியிலிருந்த போலீஸ் இன்ஸ்பெக்டரும்’ கிரைம் பிரிவு அதிகாரியும் பூமியைக் குத்தலாக வினவினார்கள்.

"நான் சொன்னதெல்லாம் நிஜம்தான்! ஆனால் எப்படியோ போலீஸ் வரப்போகிறது என்று மோப்பம் பிடித்து ஆட்கள் தான் தப்பி விட்டார்கள், மயானத்திற்குப் போய் டெட்பாடியைத் தோண்டி எடுத்தால் எல்லாம் வெட்ட வெளிச்சமாயிடும்” என்று கூறித் தனக்கு நினைவில் இருந்த பாதையில் அவர்களைத் தீவின் மயானத்துக்கு அழைத்துச் சென்றான் பூமி.

அவசரம் அவசரமாகப் புன்னைமரப் புதரைக் கடந்து ஞாபகமாய் அடையாளத்தோடு நினைவு வைத்திருந்த சிலுவைக் குறியோடு கூடிய இடத்தைத் தரையில் தேடினால் அங்கே அப்படி எதுவுமே இல்லை.

அங்கே வரிசையாகச் சால் பிடித்துப் பாத்தி கட்டிப் பத்து பன்னிரண்டு வாழைக் கன்றுகளை நட்டுத் தண்ணீர் பாய்ச்சியிருந்தது. அந்தப் பழைய சமாதியையோ மண் மேட்டையோ சிலுவை அடையாளத்தையோ அங்கே அப்போது காண வில்லை.

உடனே பூமி பதற்றத்தோடு, “இதையும் மாத்திட்டாங்க சார்” என்று இன்ஸ்பெக்டரிடம் சொல்ல, இன்ஸ்பெக்டர், “எப்பிடி: சார் மாத்த முடியும்? நீங்க இடத்தை மறந்துட்டீங்களோ என்னவோ?” என்று பதிலுக்குக் கேட்டார்.

அவருக்குப் பதில் கூறாமல் பூமியே வாழைக் கன்றுகளைப் பிடுங்கி எறிந்து விட்டு அந்த இடத்தைத் தோண்டத் தொடங்கினான். தயாராக மண்வெட்டியுடன் வந்திருந்த போலீசும் பிறரும் அவனோடு சேர்ந்து தோண்டினார்கள். நிறைய ஆழம் தோண்டியும் பலனில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/44&oldid=1029091" இலிருந்து மீள்விக்கப்பட்டது