5

ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அநுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில் பதிவு செய்து கொள்ள வேண்டிய ஒரு புதிய பாடம்.


ற்செயலாகப் பார்க்க நேர்ந்த டெலிவிஷன் நிகழ்ச்சி பூமியின் மனத்தில் சற்றே மகிழ்ச்சியை அரும்பச் செய்திருந்தது. மகிழ்ச்சியிலிருந்து சிறிது நம்பிக்கையும் மலர்ந்தது.

டெலிவிஷன் நிகழ்ச்சியைப் பார்த்து முடித்ததும் அங்கிருந்தே பரமசிவத்துக்கு விடை கொடுத்து அனுப்பிவிட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தான் பூமி. கையோடு எடுத்துக் கொண்டு வந்திருந்த புத்தகங்களைப் படிப்பதில் மனம் செல்ல வில்லை. அதைக் கடந்து வேறு பக்கம் சென்றது மனம்.

அவன் நினைப்பு என்னவோ சித்ராவின் மேலும், அவள் அளித்த டெலிவிஷன் பேட்டியின் மேலுமே இலயித்திருந்தது. அந்தப் பேட்டியில் அவள் கூறிய ஒவ்வொரு வார்த்தையையும் மீண்டும் நினைவு கொள்ள முயன்றான் அவன். ஏதோ தவிர்க்க இயலாத ஒரு சூழ்நிலையில் தற்செயலாகச் சந்திக்க நேர்ந்து விட்ட ஓர் ஆட்டோ ரிக்‌ஷா டிரைவர் என்பதைவிடத் தன்னைப் பற்றி அவளுக்கு அதிகமாக ஏதும் ஞாபகம் இருக்க முடியாது என்றுதான் அவன் முதலில் எண்ணிக் கொண்டிருந்தான். அவள் செயலளவில் தன்னை மறக்கக்கூட சாத்தியமிருப்பதாக அவன் எண்ணினான்.

ஆனால் அவளுக்கோ அவன் ஆட்டோ ரிக்‌ஷா ஓட்டுகிறவன் என்பது நினைவில் இருந்ததைக் காட்டிலும், விருப்பத்தோடும் ஆர்வத்தோடும் தரமான புத்தகங்களைத் தேடிப் படிக்கிறவன் என்பதுதான் அதிகம் நினைவிருப்பதாகத் தெரிகிறது.

அவளுடைய நினைப்பில் தான் எப்படி எந்த ஆழத்தில் பதிந்து ஊன்றியிருக்கிறோம் என்பது புரிந்த போது பூமிக்குப் பெருமிதமாக இருந்தது. பூரிப்பாகவும் இருந்தது.

மாலையில் சித்ராவும் யாரென்று தெரியாத வேறு ஓர் இளைஞனும் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து சேர்ந்து புறப்பட்டுத் திரும்பிச் சென்றதைக் கண்டு ஏற்பட்டிருந்த எரிச்சல்கூட இப்போது அவனுள் கொஞ்சம் தணிந்து போய் அடங்கியிருந்தது.

பூமி வீட்டுக்குத் திரும்பிச் சென்ற சிறிது நேரத்துக்கெல்லாம் கன்னையன் அவனைத் தேடி வந்து சேர்ந்தான். குமாருடைய வண்டி ரிப்பேர் வேலைகள் முடிந்து ஒர்க் ஷாப்பிலி ருந்து ‘சுகமடைந்து’ திரும்பிவிட்டதாம். அதனால் அவன் சொந்த வண்டியை ஓட்டப் போகவேண்டியிருக்கும் என்றும், பூமி தன் வண்டியை மறுநாள் முதல் தானே எடுக்க முடியுமா என்று கன்னையன் கேட்டான். பூமியும் அதற்கு இசைந்தான்.

வழக்கமான வேலையைச் செய்யாமலும், மனிதர்களைச் சந்திக்காமலும் ஓரிடத்தில் அடைந்து கிடப்பதன் மூலம் துயரத்தையோ சோகத்தையோ மறந்துவிட முடியுமென்பதில் - அவனுக்கு நம்பிக்கையில்லை.

ஓர் இயந்திரம் துருப் பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் எப்படி அதன் இயக்கமின்மையும், சும்மா கிடப்பதும் காரணமாகின்றனவோ, அதுபோல் மனம் துருப்பிடிப்பதற்கும் பழுதடைவதற்கும் கூட இயக்கமின்மையும் முடங்கிக் கிடப்பதும் காரணமாகலாம் என்ற கருத்துடையவன் பூமிநாதன்.

ஏற்கெனவே கன்னையனும் பேட்டை நண்பர்களும் வற்புறுத்தியதனால்தான் இந்தச் சில நாட்களாகத் தான் ஓட்டாமல் ஆட்டோவை வேறு ஒரு நண்பனிடம் விட்டிருந்தான் பூமி. வெறும் பணம் சம்பாதிக்கும் தொழில் என்பதற்காகவோ, வேறு வேலை எதுவும் கிடைக்காததாலோ மட்டும் அவன் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுக்கவில்லை. சிறுவயதிலிருந்தே மனிதர்களையும், அநுபவங்களையும் சந்திப்பதில் அவனுக்கு இருந்த ஆர்வமும் துறுதுறுப்பும் கூட ஒருவகையில் இதற்குக் காரணம்.

படித்துப் பட்டம் பெற்றும் ஆளை எதிரே பார்த்ததும் ‘இந்தத் தொழிலில் இவனா?’ என்று பார்க்கிறவனுக்கு எடுத்த எடுப்பில் ஒரு கணம் தோன்றக்கூடிய வித்தியாசமான உணர்வை உண்டாக்குகிறதோற்றமும் முகக்களையும் இருந்தும் கூட அந்தத் தொழிலை அவன் இரசித்துச் செய்து கொண்டிருந்தான். “ஒவ்வொரு மனிதனும் ஓர் உயிருள்ள புத்தகம். ஒவ்வோர் அனுபவமும் வாழ்க்கைக் கணக்கின் அநுபவப் பேரேட்டில், பதிவு செய்துகொள்ள. வேண்டிய ஒரு புதிய பாடம்” என்றே தன்னை அதற்குப் பழக்கப்படுத்திக் கொண்டிருந்தான் பூமி. கன்னையன் மிகவும் தயக்கத்தோடுதான் பூமியிடம் வந்து அதைத் தெரிவித்திருந்தான் என்றாலும், பூமி உடனே அதற்குச் சம்மதித்தான். ஒரு வார்த்தைகூடத் தட்டிச் சொல்லவில்லை.

“இரவே வண்டியைக் கொண்டு வந்து நிறுத்திவிடச் சொல்லு! என் வழக்கப்படி காலை முதல் இரயில் ஆன ஏர்க்காடு எக்ஸ்பிரசுக்குச் சவாரி தேடிக்கொண்டு போயாகணும்.”

“அத்தினி அவசரம் என்னாத்துக்கப்பா? ஆறு மணிக்குப் போனாப் போதுமே...”

“தாமதம் என்னுடைய முதல் எதிரி என்று உனக்கு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன் கன்னையா? சுறுசுறுப்பில் மனிதன் சூரியனோடு போட்டி போட வேண்டும். பொழுது புலரத் தாமதமானாலும் ஆகலாம், ஆனால் இந்தப் பூமி எழுந்திருக்கத் தாமதமாகக் கூடாது!" "அதுக்கில்லே! இது மாதக் கடைசியோன்னு கவலை வேணாம். சவாரி எப்பப் போனாலும் கிடைக்கும். அவசரம் தேவையில்லை.”

“அவசரம் வேறு, சுறுசுறுப்பு வேறு. சுறுசுறுப்பை அவசரம் என்று புரிந்து கொள்வதும் அவசரத்தைச் சுறுசுறுப்பு என்று புரிந்து கொள்வதும் சரியில்லை...”

“சரிதானப்பா... குமார் நைட் சவாரிக்காகப் புகாரியண்டே போயிருக்கான்... ஸெகண்ட் ஷோ சவாரி முடிஞ்சதும் வண்டியை இங்கே வூட்டாண்டே இட்டாந்து விட்டுடச் சொல்றேன்.”

இதைக் சொல்லிவிட்டுக் கன்னையன் புறப்பட்டுப் போய் விட்டான். பூமி மறுநாள் சவாரிக்குப் போக வேண்டும் என்ற ஞாபகத்தோடு ஏற்கெனவே சலவைக்குப் போட்டு வைத்திருந்த காக்கி யூனிஃபாரம் இருக்கிறதா என்று துணி அலமாரியில் தேடிப் பார்த்து அதை எடுத்து வைத்தான். படிக்கப் பயன்படும் புத்தகங்கள் சிலவற்றையும் அந்த உடைகளோடு அருகிலேயே எடுத்து வைத்த பின், லஸ் முனைக்குச் சென்று இரவு உணவை முடித்து வரப் புறப்பட்டான். வெளியே முகப்பில் போர்டு விளம்பரம் எதுவும் இல்லாமல் ‘மெஸ்’ மாதிரி நடத்தப்பட்டு வந்த அந்த உணவு விடுதியில் எப்போதும் அதிகக் கூட்டம் இராது. இருநூறு முந்நூறு வாடிக்கைக்காரர்களும், மிகச்சில புதியவர்களும் உண்ணவருகிற இடமாக் இருந்தது அது.

கணவனை இழந்த நடுத்தர வயதுப் பெண்மணி ஒருத்தி அதே போன்ற நிராதரவான பெண்கள் சிலரையும் வேறு உதவியாட்களையும் வைத்துக்கொண்டு அந்த மெஸ்ஸை நடத்தி வந்தாள். பூமியைப் போன்ற ஆட்டோ, டாக்ஸி டிரைவர்களும், வேறு பலரும் அந்த மெஸ்ஸை ஆதரித்து வந்தார்கள்.

மயிலாப்பூர் வட்டாரத்தில் சாதாரண டாக்ஸி டிரைவராக வாழ்வைத் தொடங்கிப் பின் உழைப்பால் முன்னேறிச் சொந்தத்தில் இரண்டு மூன்று டாக்ஸிகளை விட்டு வளர்கிற அளவுக்கு மேலே வந்து திடீரென்று ஒரு விபத்தில் இறந்து போன டிரைவர் ஒருத்தருடைய மனைவிதான் அந்த மெஸ் சொந்தக்காரி. ‘முத்தக்காள்’ என்று பெயர். ஆட்டோ டாக்ஸி டிரைவர்கள் மத்தியில் ‘முத்தக்காள் மெஸ்’ என்று சொன்னால் சகஜமாகப் புரியும்.

உணவை முடித்துக்கொண்டு பணம் கொடுக்கிற இடத்தில் வந்து பணத்தைக் கொடுத்துவிட்டு, “என்ன முத்தக்கா! செளககியமா? என்று விசாரித்துவிட்டு நிமிர்ந்து பார்த்தால், “இங்கே அரசியல் பேசுவதோ விவாதங்கள் செய்வதோ கூடாது” என்று புதிதாக ஒரு போர்டு அங்க தொங்கியது.

பூமி அந்த போர்டை நிமிர்ந்து பார்த்துப் படிப்பதைக் கவனித்து விட்ட முத்தக்காள், “ரெண்டு நாளைக்கு முன்னே சாப்பிட்டு விட்டுப் போறப்போ யாரோ நாலுபேர் அரசியல் சர்ச்சையில் இறங்கி அது. தீவிரமாகி இங்கேயே ஒருத்தரைக் கத்தியாலே குத்திப்பிட்டாங்க....... போலீஸ் விசாரணை, சாட்சி, அது இதுன்னு எல்லாத் தலைவலியும் முடிஞ்சு இன்னிக்குத்தான் இங்கே நிம்மதியா உக்காந்திருக்கேன் தம்பீ!” என்று அந்தப் போர்டு அங்கே வந்த காரணத்தை அவனுக்கு விளக்கினாள் முத்தக்காள். நெற்றியில் வெளேரென்று திருநீற்றுப் பூச்சும், வெள்ளைப் புடவையுமாக முத்தக்காளைப் பார்த்ததும் ஒரு விநாடி காலஞ்சென்ற தன் தாயின். நினைவு வந்தது அவனுக்கு.

“ஜாக்கிரதையாகத்தான் இருக்க வேண்டும் முத்தக்கா! பேச ஆரம்பித்தாலே அது கத்திக்குத்திலோ, கலகத்திலோதான் போய் முடியும் என்கிற அளவு இந்நாட்டு அரசியல் இன்று மிகவும் கேவலமாக மாறிவிட்டது” என்று அவளிடம் கூறிக்கொண்டே அங்கிருந்து வெளியேறியிருந்தான் பூமி.

இரவு இரண்டு மணிக்குக் குமார் வந்து எழுப்பி வண்டியை வெளியே விட்டிருக்கிற விவரம் சொல்லிச் சாவியைக் கொடுத்துவிட்டுப் போனான்.

"பகல்லே ‘ஸ்லோஸ்பீட்’ அட்ஜஸ்மெண்ட் சரியில்லே... சரி பார்த்தப்புறம் இப்ப தேவலாம்"என்று சொல்லி வசூல் கணக்கு பண விவகாரங்களை ஒப்படைத்த குமாரிடம் அந்த அகால வேளையில் பூமிக்குப் பேச ஏதுமிருக்கவில்லை.

பூமியைப் பொறுத்தவரை மறுநாள் என்பது அடுத்த ஒன்றரை மணி நேரத்திலேயே பிறந்துவிட்டது. மூன்றரை மணிக்கு எழுந்ததிலிருந்து வழக்கமான தேகப்பயிற்சி, யோகாசனம் எல்லாம் முடிந்து அவன் தன் ஆட்டோவை மயிலாப்பூரிலிருந்து கிளம்பியபோது மணி நாலரைகூட ஆகியிருக்க வில்லை.

சென்ட்ரலில் ஏர்க்காடு எக்ஸ்பிரஸ் லேட் ஆகாமல் சரியான நேரத்துக்கு வந்தால் 4-45க்கு வந்துவிடும்.

இராயப்பேட்டை நெடுஞ்சாலையில் அஜந்தா ஹோட்டல் எதிரே அப்போதுதான் திறந்து ஐயப்பன் படத்துக்குச் சாம்பிராணிப் புகை காட்டிக்கொண்டிருந்த ஒரு மலையாளி டீக் கடையின் முன் ஆட்டோவை நிறுத்தி டீ குடித்தான் பூமி.

அப்புறம் சரியாக நாலு நாற்பதுக்கு அவன் சென்ட்ரலில் இருந்தான். ஏர்க்காடு எக்ஸ்பிரஸ் சரியான நேரத்துக்கு வந்தது. கணவனும் மனைவியுமாக் ஒரு கைக்குழந்தையுடன் அதிகம் மூட்டை முடிச்சு இல்லாமல் ஒரு சவாரி கிடைத்தது.

“எங்கே சார் போகவேண்டும்?”

பூமியின் பேச்சுத் தமிழ் காரணமாகச் சென்னை ஆட்டோ டிரைவர்கள் பேசும். கொச்சையிலிருந்து விடுபட்டுச் சற்றே மெருகேறியதாக இருப்பதை வியந்துகொண்டே, ‘பாலாஜி நகர்’ என்று பதில் சொன்னார். ஏர்க்காடு எக்ஸ்பிரஸில் வந்தவர். உடனே அவர் மனைவி குறுக்கிட்டு, “சித்ரா இத்தனை . சீக்கிரம் எங்கே எழுந்திருக்கப் போற?... முதல்லே மயிலாப்பூர் போயிட்டு அப்புறம் வேணாப்போயி அவளைப் பார்க்கலாமா?...” என்றாள்.

“இல்லே! நாம் ஏர்க்காட்டில் வர்ரது சித்ராவுக்குத் தெரியும்...” என்று மனைவிக்குச் சொல்லிவிட்டுப் பூமியின் பக்கம் திரும்பி, “நீ பாலாஜி நகருக்கே விடுப்பா...பரவாயில்லை” என்றார் அவர்.

‘எந்தச் சித்ரா?’ பூமியின் மனத்தில் வியப்புடன் ஓர் இனிய சந்தேகம் எழுந்தது. ஆட்டோ கிளம்பிற்று.

சவாரியைப் பாலாஜி நகரில் இறக்கி விட்டபோது கூடப் பூமியினால் அதைத் தெரிந்துகொள்ள முடியவில்லை. இறங்கியதுமே சவாரி வாடகையும் கொடுத்து அதற்கு மேலும் ஒரு ரூபாய் போட்டுத் தந்து கணக்குத் தீர்த்துவிட்டார்... “பரவாயில்லை! இனாம் வேண்டாம்” என்று ஒரு ரூபாயைத் திருப்பிக் கொடுத்துவிட்டான் பூமி. ஆனால் புறப்படுகிறவரை புதிர் விடுபடவில்லை.

பிற்பகல் 3 மணிக்கு அவன் பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரிக்குப் போனபோது பரமசிவமே சித்ராவைப் பார்க்கப் போக வேண்டும் என்று பூமியைக் கூப்பிட்டான். இருவரும் ஆட்டோவிலேயே அங்கு போனபோது காலையில் தான் சவாரி இறக்கிவிட்ட அதே வீடுதான் சித்ராவின் வீடு என்று பூமிக்குத் தெரிந்தது.

அவனும் பரமசிவமும் உள்ளே போனபோது சித்ராவுடன் அவள் வயதை ஒத்த வேறு ஒரு பெண் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தாள். அவளோடு வேலை பார்க்கும் சக ஆசிரியையாக இருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தது.

முகமலர்ச்சியோடு வரவேற்று பரமசிவத்தையும், பூமியையும் உட்காரச் சொல்லி உபசரித்தாள் சித்ரா, சிநேகிதிக்கு இவர்களை அறிமுகப்படுத்தினாள்.

அவளே காபி கலந்துகொண்டு வந்து தந்தாள். தான் காக்கி யூனிஃபார்மில் இருந்ததால் பூமிக்கு என்னவோ போல் இருந்தது. சித்ரா வித்யாசமில்லாமல் பழகுவதாகத் தோன்றினாலும் அவனுள் மட்டும் ஏதோ ஒரு குறுகுறுப்பு நிலவியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/5&oldid=1028933" இலிருந்து மீள்விக்கப்பட்டது