6

ஒரே விதமான சிரமங்கள் உள்ளவர்கள் அவற்றைத் தீர்த்துக்கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும் அல்லது ஒரே வித மான சுகங்கள் உள்ளவர்கள் அவற்றைக் காப்பாற்றி கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும்.


பூமி தானாக அப்படி நினைத்துக் கொண்டு பதறினானே ஒழிய சித்ராவோ, அவள் சிநேகிதியோ அப்போது அவனை ஒரு சாதாரண் ஆட்டோ ரிக்ஷா டிரைவராக நடத்தவில்லை, நண்பனைப் போலவே நடத்தினார்கள், சுபாவமாகவும் சகஜமாகவும் பழகினார்கள். தங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு புத்தகங்கள் தருகிற லெண்டிங் லைப்ரரிக்காரன்தானே என்பது போல் பரமசிவத்திடம்கூட அவள் அலட்சியமாகப் பழகவில்லை என்பதைப் பூமியே கவனித்தான்.

அதிகாலையில் இருள் பிரிவதற்கு முன்பாக ஏர்க்காடு எக்ஸ்பிரசில் வந்த ஒரு சவாரியை அன்று காலையில் அந்த வீட்டில்தான் இறக்கி விட்டதைப் பற்றி அப்போது சித்ராவிடம் சொல்லலாமா வேண்டாமா என்று சிந்தித்துத் தயங்கினான் பூமி.

அப்போது நடைபெற்றுக்கொண்டிருந்த உரையாடலில் அதை வலிந்து கூறுவது இடைச் செருகலாகத்தான் இருக்கும் என்று அவனுக்கே தோன்றியது.

அப்போது, சித்ராவின் தோழி நர்ஸரி பள்ளிகளில் மாணவர்களிடம் நடக்கும் வசூல் கொள்ளையையும், ஆசிரியர்களுக்கு மாதச் சம்பளம் தருவதில் உள்ள நடைமுறை ஊழல்களையும் விவரித்துக் கொண்டிருந்தாள்.

“படிக்கிற குழந்தைகளிடம் ரசீது தராமல், பணம் கறக்கப்படுகிறது. வேலை பார்க்கிற ஆசியகைளுக்குச் சம்பளப் பட்டியலில் கண்டதைவிடக் குறைவாகப் பணம் தரப்படுகிறது: இங்கேயும் கொள்ளை; அங்கேயும் கொள்ளை.”

“மாதா மாதம் சம்பளத்தில் லஞ்சப் பணம் விட்டுக்கொடுத்தாவது. வேலையில் ஒட்டிக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிற ஆசிரியர்களாகிய நீங்களும் ஒத்துழைப்பதால்தானே லஞ்ச ஊழல் நடைபெறுகிறது?”

என்று சற்றுக் கடுமையாகவே எதிர்க் கேள்வி போட்டான் பரமசிவம்.

சித்ராவின் தோழியும் உடனே பதில் கூறினாள்;

“இதற்கு ஒத்துழைத்து அட்ஜெஸ்ட் பண்ணிக் கொள்ளாவிட்டால் யாரும் யாருக்கும் வேலையே தீரம”

“இந்த நாட்டில் இன்று வளரும் லஞ்ச ஊழல்கள் அனைத்தும் கொடுப்பவர், பெறுபவர் இருவரும் ஒத்துழைத்துத்தான் நடக்கின்றன. வாங்குபவர் மட்டுமே முழுக் குற்றவாளி என்று சொல்லி விடுவதற்கில்லை. கொடுப்பவரும் ஒத்துழைத்து ஆசீர்வதிக்கவே செய்கினர் என்பதையும் கவனித்தாக வேண்டும்.

“என்ன செய்வது? நிர்ப்பந்தம் அப்படி இருக்கிறது. இல்லாவிட்டால் உயிர் வாழ முடியாது” என்றாள் சித்ராவின் தோழி.

அந்தக் கூடத்தில் பளீரென்று மாட்டப்பட்டுச் சுவரில் பூச்சரம் அணியப் பெற்றுத் தொங்கிய ஒரு முதியவரின் படத்தில் லயித்தது பூமியின் பார்வை.

அவன் பார்வையைக் கவனித்த சித்ரா “எங்கப்பாவின் படம்” என்று அவனுக்கு விளக்கினாள். பரமசிவம் ஞாபகமாகப் பழைய பேச்சைத் தொடர்ந்தான்.

“லஞ்சம் கொடுப்பவர்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காகக் கொடுத்ததாகச் சொல்கிறார்கள். வாங்குகிறவர்களும் ஏதோ ஒரு நிர்ப்பந்தத்துக்காக வாங்கியதாகவே சொல்கிறார்கள்; தொடர்ந்து அது ஒரு விஷ வட்டமாகவே இருந்து வருகிறது.”

“சம்பளப் பணத்தில் வற்புறுத்திப் பிடித்துக் கொள்ளுகிறார்கள். நாங்கள் விரும்பிக் கொடுப்பதாக அர்த்தம் இல்லை.”

என்று தங்கள் அநாதரவான நிலையை விளக்கினாள் சித்ராவின் தோழி. பூமி அவர்களுக்கு ஒரு யோசனை சொன்னான்.

“ஆறுபேர் ஒன்று சேர்ந்தாலே ஒரு யூனியன் ஆரம்பிக்கலாம். நகரிலுள்ள எல்லா நர்ஸரி பள்ளிகளின் ஆசிரியர்களையும் இந்த மனக்குறைகளை அடிப்படையாக வைத்து ஒன்று திரட்டினால் சில காரியங்களைச் சாதிக்க முடியும்.”

பூமியின் இந்த யோசனையைச் சித்ரா வரவேற்றுப் பாராட்டினாள். சித்ராவின் தோழி தயக்கம் காட்டினாள்.

“ரொம்பப் பேர் யூனியன்னு சொன்னாலே பயந்து ஒதுங்கிட”

“ஒதுங்கினால் பயனில்லை. ஒரே விதமான சிரமங்கள் உள்ளவர்கள் அவற்றைத் தீர்த்துக் கொள்ளுவதற்காக ஒன்று சேர வேண்டும். அல்லது ஒரே விதமான சுகங்கள் உள்ளவர்கள் அவற்றைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஒன்று சேர வேண்டும். இரண்டாவது வகையினரின் ஒற்றுமை இங்கே ஏற்கனவே ஏற்பட்டு விட்டது. நர்சரி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் என்ற பெயரில் ஒரு சங்கம் முன்பே பதிவாகிவிட்டது.”

பூமி அதைத் தெரிவித்த முறை சித்ராவுக்கு மிகவும் பிடித்திருந்தது. சிரமங்களைத் தீர்த்துக் கொள்ளுவற்காக ஒற்றுமை, சுகங்களைக் காத்துக் கொள்ளுவதற்காக ஒற்றுமை என்று அவன் அதைப் பாகுபடுத்திய, பேசிய அழகை அவள் ரசித்தாள். நாட்டில் சுகங்களைக் காத்துக் கொள்ளுவதற்கான ஒற்றுமை முயற்சிகள் சீக்கிரம் ஏற்பட்டு விடுவதும் சிரமங்களைத் தீர்த்துக் கொள்ளுவதற்கான ஒற்றுமை முயற்சிகள் ஏற்படாமலே தட்டிப் போவதும் ஏனென்று விளங்காமல் சிந்தித்தாள் சித்ரா. படித்தவர்களையும், அரை குறையாகப் படித்தவர்களையும் ஏதாவது ஓர் அமைப்பின் கீழ் ஒன்று சேர்ப்பது எவ்வளவு தூரம் சாத்தியமற்ற காரியமாக இருக்கிறது என்பதை அவள் உணர்ந்திருந்தாள்.

பேச்சு சித்ராவின் டெலிவிஷன் கலந்துரையாடலைப் பற்றித் திரும்பியது. பரமசிவம் அவளை நோக்கிக் கேட்டான்.

“டெலிவிஷன்லே உங்க கலந்துரையாடல் நல்லாத்தான் இருந்திச்சு. ஆனாலும் ஒரு கருத்தை நீங்க இன்னும் கொஞ்சம் அழுத்திச் சொல்லியிருக்கணும்! இரண்டு ரூபாய் கொடுத்து முதல்தரமான ஒரு புத்தகத்தை வாங்கிப் படிக்கத் தயங்குகிறவன் ஆறு ரூபாய் செலவழித்து மூன்றாந்தரமான ஒரு சினிமாவுக்குப் போகத் தயங்குவதில்லை. மரத்தின் தயவில் தான் வளரும் புல்லுருவியைப் போல வேறு பல கலைகளின் செலவில் வேறு பல தரமான கலைகளை நலியச் செய்து விட்டுத் தான் மட்டுமே அடித்துப் பிடித்து அசுர் வேகத்தில் வளரும் ஆதிக்கக் குணம் இங்கே சினிமாவுக்கு இருக்கிறதே...?”

“சொன்னேன். ஆனால் ரிஹர்ஸல்லே சொல்றப்பவே டெலிவிஷன் ப்ரொட்யூஸர் அதைச் சொல்லக் கூடாதுன்னு தடுத்துவிட்டார். நாங்க டி. வி. லே ‘கான்ட்ரவர்ஸி ‘எதுவும் வராமப் பார்த்துக்கணும் அம்மா! ‘வாரத்துக்கு ரெண்டு முறை சினிமா வேறே ஒளிபரப்பறோம். சினிமாக் காரங்கள்ளாம் சண்டைக்கு வந்திடுவாங்க” -- ன்னு சொல்லிக் கெஞ்சினார்.

"சரிதான்! இப்படியே போனா, கள்ளக் கடத்தல்காரங்க சண்டைக்கு வந்துடுவாங்களோன்னு பயந்து கடத்தல்காரங்களை விமரிசனம் பண்ணி டி. வி. யிலே எதுவும் சொல்ல முடியாது. சமூக விரோதிகளான திருடர்கள், கொள்ளை லாபக்காரர்கள், கொலை, கற்பழித்தல் குற்றங்களைத் தொழிலாகக் கொண்டவர்கள் ஆகிய யாரையும் எதிர்த்து டி. வி. யில் எதுவுமே பண்ண முடியாது.”

“என்ன சார் பண்றது! சர்க்கார் நிர்வாகத்தின் கீழ் இயங்கும் கலை, இலக்கியச் சாதனங்கள் எல்லாமே அப்படித் தான் இருக்கின்றன” என்று குறைப்பட்டுக் கொண்டாள் சித்ரா. தன் தோழியைப் பூமிக்கும் பரமசிவத்துக்கும் அறிமுகம் செய்து வைத்தாள்.

“இவள் என் சிநேகிதி; தேவகி. என்னுடன் சக ஆசிரியையாக அருள்மேரி ‘கான்வென்டில்’ இவளும் வேலை பார்க்கிறாள். திருவல்லிக்கேணியிலே இருக்கிறாள்.

பேச்சுவாக்கில் சித்ரா பரமசிவத்திடம் வேறு ஓர் உதவியை வேண்டினாள்.

“அப்பா இருக்கிறப்பவே. இந்த வீட்டுக்காரர்கள் காலி பண்ணச்சொல்லித் தொந்தரவு பண்ணினாங்க. அப்பா போயாச்சு, என்னாலே தன்னந்தனியா, இவங்களோட இங்கே சண்டை போட முடியாது. காலி பண்ணிடலாம்னு நினைக்கிறேன். மயிலாப்பூர், மந்தைவெளி, ராஜா அண்ணா மலைபுரம்-எங்கேயாவது கொஞ்ச வாடகையிலே ஒரு போர்ஷன் அல்லது சின்ன அவுட் ஹவுஸாப் பார்த்தால் தேவலை.”

“நீங்க சொல்ற ஏரியா எல்லாம் பூமிக்குத்தான் நல்லாப் பழக்கம். பூமியிடம் சொல்லுங்க, நாளைக்கே நல்ல இடமாய் பார்த்து முடிச்சுத் தந்துடலாம்” என்றான் பரமசிவம்.

காலையில் எங்க நெருங்கின உறவுக்காரர் ஒருத்தர் சேலத்துலே இருந்து அப்பா. போனதுக்காகத் துக்கம் கேக்க வந்திருந்தார். அவசர அவசரமாத் துக்கம் கேட்டானதும் மத்தியானம் வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸில் மறுபடி ஊர் திரும்பிப் போயிட்டார். அவரோட அபிப்பிராயம், நான் மாம்பலத்திலேயே ஸ்கூலுக்குப் பக்கத்திலே இடம் பார்த்து குடியேறிட்டாப் போக்குவரத்துச் செலவாவது மிச்சப்படும் என்கிறதுதான்.”

“அதுவும் நல்ல யோசனைதான்!”

“ஆனால் எனக்கென்னவோ வேலைபார்க்கிற இடத்துக்குப் பக்கத்திலே குடியிருக்கப் போறது அவ்வளவாகப் பிடிக்கலே. அதே ஏரியாவிலே குடியிருந்தா, ஈவினிங் ஸ்கூல் விட்டதும் டியூஷன் எடுக்கணும்பாங்க. டியூஷனுக்காக வாங்கற பணத்திலே கால் பங்குகூட நமக்குத் தரமாட்டாங்க. அதுக்கு பதிலா நாமே நாலு இடத்திலே தனியா டியூஷன் எடுத்தாவீட்டு வாடகையாவது தேறும்...”

“உங்களுக்கு மாம்பலம். போறதுக்குப் பிடிக்கலேன்னா வேண்டாம். நான் இங்கேயே பார்த்து ஏற்பாடு செய்கிறேன். நாளைக்குச் சாயங்காலம் ஸ்கூல் விட்டதும் நேரே புறப்பட்டு, வந்து லஸ் முனையில் நாகேஸ்வரராவ் பார்க் முகப்பில், அஞ்சரை மணிக்கு நில்லுங்கள். நான் அங்கே வந்து என் ஆட்டோவிலேயே அழைத்துச்சென்று வீடு காண்பிக்கிறேன்.”

“சரியாக அஞ்சரை என்று உறுதி சொல்ல முடியாது. பஸ் கிடைக்கணும். அஞ்சரையிலிருந்து ஆறு மணிக்குள் என்று வைத்துக் கொள்ளலாம்"என்றாள் சித்ரா.

பூமியும் அதற்குச் சம்மதித்தான்.

“நல்ல வீடாகப் பார்த்துக் குடுப்பா"என்று பரமசிவம் மீண்டும் சிபாரிசு செய்தான். சிறிது நேரத்தில் இருவரும் சித்ராவிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார்கள்.

மறுநாள் சொல்லியபடி ஐந்து மணிக்கெல்லாம் லஸ்ஸில் போய் நின்றுவிட்டான் பூமி. தெரிந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் சொல்லி ஆட்டோவை அங்கே நிறுத்திவிட்டு வீட்டிற்குப்போய் வழக்கமான காக்கி யூனிஃபார்மிலிருந்து விடுபட்டு மாறுதலான, உடையுடன் நாகேஸ்வரராவ் பூங்கா அருகே போய்க் காத்திருந்தான் அவன். சித்ரா இன்னும் வரவில்லை.

சித்ரா ஐந்தே முக்காலுக்குத்தான் வந்தாள். முதலில் அவன் நின்று கொண்டிருந்ததை அவள் கவனிக்கவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று --காக்கியூனிஃபார்ம் இல்லாமல் அவன் சாதாரண உடையில் நின்றது, இன்னொன்று ஆட்டோவை பங்க்கில் நிறுத்திவிட்டு அவன் மட்டும் தனியாக வந்து நின்றது. பூமிதான் முதலில் அவளருகே சென்று பேச்சுக் கொடுத்தான்.

“போகலாமா? ஆட்டோவை எதிர்ப்பக்கம் பெட்ரோல் பங்க்கில் நிறுத்தியிருக்கிறேன். எடுத்துக்கொண்டு வருகிறேன் அதுவரை இங்கேயே நில்லுங்கள்.”

“ஓ? நீங்களா! அடையாளமே தெரியவில்லையே இந்த உடையில் இப்போது உடனே புறப்பட வேண்டாம், ஆறரை மணி வரை நல்ல நேரம் இல்லை. இங்கேயே பார்க்கில் உட்கார்ந்து, ஆறரை வரை நேரத்தைக் கடத்திவிட்டு அப்புறம் புறப்படலாம்"என்றாள் சித்ரா.

அவள் தனியாக இருக்க விரும்புகிறாளா, தன்னையும் உடன் கூப்பிடுகிறாளா என்று புரியாததால் பூமி தயங்கினான்.

“வாருங்கள்! உள்ளே உட்கார்ந்து பேசிக்கொண்டிருக்கலாம்"அவளே அவனைக் கூப்பிட்டாள்.

பூங்காவில் அதிகக் கூட்டமில்லாத புல்வெளிப் பகுதியில் போய் உட்கார்ந்தார்கள் அவர்கள். நர்ஸரி பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க ஒரு சங்கம் அமைப்பது பற்றிய பேச்சை மீண்டும் அவளே ஆரம்பித்தாள். தொடர்ந்து பல விஷயங்களைப் பேசினார்கள். இருவரும் இடம் விட்டு விலகித்தான் அமர்ந்திருந்தார்கள். ஆனால் அப்போது பேசிய கருத்துக்களில் இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் இருந்தது. அந்த நெருக்கத்தை அவர்களே உணர்ந்திருந்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/6&oldid=1028934" இலிருந்து மீள்விக்கப்பட்டது