7

புரட்சியையும் சமூக மாறுதலையும் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பிற்போக்கு வாதியைவிட அதைப்பற்றி அரைகுறையாகவும் மேலோட்டமாகவும் மட்டுமே தெரிந்த நடுத்தர வர்க்கத்து முற்போக்கு வாதியே மிகவும் அபாயகரமானவன்

ளவுக்கு அதிகமான கருத்து ஒற்றுமையிலும் ஒரு சிநேகிதம் வளர முடியாது. அளவுக்கு அதிகமான கருத்து வேற்று மையிலும் ஒரு சிநேகிதம் வளர முடியாது. அளவான கருத்து ஒற்றுமைகளும் அளவான கருத்து வேற்றுமைகளும் சேர்ந்துதான் ஒரு நல்ல சிநேகிதத்தை வளர்க்க முடியும் என்பது பூமியின் கருத்து.

அப்போது அவனுக்கும் சித்ராவுக்கும் இடையில் இருந்த நெருக்கம் இடைவெளியோடு கூடிய நெருக்கமாகத்தான் இருந்ததே ஒழிய இடைவெளியற்ற நெருக்கமாக இல்லை. இடைவெளியற்ற நெருக்கத்தில் எதுவுமே வளரமுடியாதென்ற அநுபவ உண்மை பூமிக்கு வாழ்வில் பலமுறை புரிந்திருந்தது. இந்த நெருக்கம் வளர இடம் விட்டு ஏற்பட்டிருக்கிறது என்பதே ஒரு நல்ல முன்னடையாளமாக இருந்தது.

அப்பர்சாமி கோயில் தெருவில் நாலைந்து குடித்தனங்கள் இருக்கும் ஒரு பெரிய வீட்டில் ஒரு போர்ஷன் கிடைத்தது. ஒரு சமையலறை; அதற்குள் நுழைவதற்கு முன் பகுதியாக ஒரு சிறிய கூடம், இவ்வளவுதான் அந்த போர்ஷன். சமையலறையையும், முன் பகுதியையும் இணைக்க நிலைப்படி இருந்தது. கதவு இல்லை. முன் பகுதியில் சுவர்களில் இரண்டு அலமாரி, மேலே ஒரு பரண் ஆகிய வசதிகள் இருந்தன. தண்ணீர், குளியலறை வசதிகள் எல்லாம் வீட்டில் கீழ்ப்பகுதியில் இருந்த அத்தனை போர்ஷன்காரர்களுக்கும் பொதுவாக அமைந்திருந்தன. வீட்டுக்காரர் மாத வாடகை ரூபாய் நூற்றைம்பது வீதம் ஆறு மாத முன் பணம் கேட்டார். அந்த இடம் ரூபாய் நூற்று இருபதுதான் பெறும் என்று பூமி அபிப்பிராய்ப் பட்டான்.

தனியாகக் குடி இருக்கப் போகிற தன்னைப் போன்ற ஒரு திருமணமாகாத பெண்ணுக்குப் பல குடும்பப் பெண்கள் சேர்ந்திருக்கும் அந்த வீடு மிகவும் ஒத்து வரும் என்பதால் சித்ராவுக்கு அதை விட்டுவிட விருப்பமில்லை. அட்வான்ஸை மட்டும் மூன்று மாதமாகக் குறைத்தால் தேவலை என்று வீட்டுக்காரரிடம் பேசி பார்த்தாள் அவள். வீட்டுக்காரர் மிகவும் பிடிவாதமாக இருந்தார். கடைசியில் வேறு வழியில்லாமல் வீட்டுக்காரர் சொன்ன நிபந்தனைக்கெல்லாம் சம்மதித்து முன் பணம் எழுதிக் கொடுப்பதற்காகக் கைப்பையிலிருந்து அவள் செக் புத்தகத்தை எடுத்தாள்.

“செக் வாங்கிக்கிற வழக்கமில்லை! ரொக்கம்தான் வேணும். பரவாயில்லே, நீங்க நாளைக் கலம்பரக் குடுத்தாக் கூடப் போதும்” என்று வீட்டுக்காரர் ‘செக்’ வாங்கிக்கொள்ள மறுத்து விட்டார்.

அப்போது வேறு எதுவும் செய்ய முடியாததால் மறுநாள் காலை பாங்கு திறக்கிற நேரம் வரை காத்திருந்து பணம் எடுத்துக் கொண்டு போய் அட்வான்ஸ் கொடுக்க வேண்டியதாயிற்று. அட்வான்ஸ் கொடுக்கிற நேரத்துக்குப் பூமியும் உடன் இருக்க வேண்டும் என்று சித்ரா முதல் நாளே கூறியிருந்ததனால் கடற்கரை எஸ்டேட்டில் ஒரு சவாரியை இறக்கி விட்டுக் காலை பத்தே முக்கால் மணி சுமாருக்கு அப்பர் சாமி கோயில் தெருவுக்குப் போனான் பூமி. கடற்கரை எஸ்டேட்டிலிருந்து லஸ்ஸுக்கோ, மயிலாப்பூருக்கோ சவாரி எதுவும் கிடைக்காததால் காலியாக ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வர வேண்டியிருந்தது.

பூமிதான் முதலில் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்திருந்தான். நிறையப் பேர் வந்து பார்த்துவிட்டுப் போய் இருப்பதாகவும், காலை பதினொரு மணிக்குள் யார் வந்து வாடகை முன் பணம் கொடுக்கிறார்களோ அவர்களிடம் வாங்கிவிடப் போவதாகவும் பூமியிடம் பயமுறுத்தினார் வீட்டுக்காரர்.

நல்ல வேளையாகச் சித்ரா பத்தே முக்காலுக்குள்ளேயே வந்து விட்டாள். அவள் தனியாகவே வருவாள் என்று பூமி எதிர்பார்த்ததற்கு நேர்மாறாக அன்று பரமசிவத்தின் லெண்டிங் லைப்ரரியிலிருந்து அவளோடு சிரித்துப் பேசிக் கொண்டு சென்ற அந்த சஃபாரி சூட் இளைஞனையும் உடன் அழைத்துக்கொண்டு வந்திருந்தாள்.

சவாரி தேடுவதையும் விட்டுவிட்டு அத்தனை சிரத்தையோடு சரியான நேரத்துக்குத்தான் அங்கே வந்திருக்க வேண்டாமோ என்று இப்போது பூமிக்குத் தோன்றியது. அவளை அவனோடு சேர்த்துப் பார்க்க நேர்ந்ததால் இப்படி ஒரு விரக்தி தனக்குள் ஏற்படுவதைத் தவிர்க்க முயன்றான் பூமி. தவிர்ப்பது சிரமமாயிருந்தது. காரண காரியவாதங்களையும் மீறி நின்றது அந்த விரக்தி.

முழுமையாகத் தொளாயிரம் ரூபாயை வாடகை முன் பணமாக வாங்கிக்கொண்டு ரூபாய் நோட்டுக்களை ஒரு முறைக்கு இருமுறை கவனமாக எண்ணிப் பார்த்தபின், “என்னிக்கு வர்ரதா உத்தேசம்?” என்று சித்ராவை நோக்கி கேட்டார் அந்த வீட்டுக்காரர்.

“வர்ர முதல் தேதியிலிருந்து கணக்கு வச்சுக்கலாம்” என்றாள் சித்ரா.தயக்கத்தோடு அவள் மேலும் கேட்டாள்.

“ரசீது...?”

“வழக்கமில்லை ...”

எதுதான் வழக்கம் என்று. அவரிடம் திருப்பிக் கேட்டு விடலாமா என்பதாகப் பூமியின் நாக்குத் துடித்தது. கட்டுப் படுத்திக் கொண்டான்.

“இவன் என்னோடு கல்லூரியில் படித்த சிநேகிதன், புதுக்கவிதை எல்லாம் எழுதுவான், புனைப்பெயர் புரட்சிமித்திரன், சொந்தப் பெயர் நரசிம்மன். ‘தீவிரம்’ என்று ஒரு மாதப் பத்திரிகை நடத்துகிறான் என்பதாகத் தன் சிநேகிதனைப் பூமிக்கு அறிமுகப்படுத்தி வைத்தாள் சித்ரா.

உடனே பூமிக்குமுன் பாய்ந்து ‘நைஸ் டு மீட்யூ’ என்று சம்பிரதாயமாகக் கைகுலுக்கினான். புரட்சிமித்திரன். பூமிக்கு அவன் செயல்கள் எல்லாமே கொஞ்சம் மிகையாகப் பட்டன.

“என்ன செய்கிறீர்கள்...”

இதற்கு அவன் பதில் சொல்வதற்குள் சித்ராவே முந்திக் கொண்டு பூமிக்குப் பதில் சொல்லத் தொடங்கினாள். “இப்போதைக்குத் ‘தீவிரம்’ நடத்தறதும், புதுக்கவிதை எழுதறதும் இவனோட முழுநேர வேலைன்னு சொல்லணும்! ஃபாதர் பெரிய பைனான்ஷியர், ‘களக்காடு சிட்பண்ட்ஸ் ‘னு ஒரு சிட்பண்ட்ஸ் நடத்தறார். இவன் ரொம்பவும் புரொக்ரஸிவ் வியூ உள்ளவன்! சமூக அமைப்பையே தீவிரமாக மாற்றும் ஆசை உள்ளவன்.”

உடனே கைப் பையைத் திறந்து நாலைந்து ‘தீவிரம்’ இதழ்களை எடுத்துப் பூமியிடம் அவசரமாக நீட்டினான் புரட்சிமித்திரன். பூமி அவற்றை அமைதியாக வாங்கிக் கொண்டான்.

“புரட்சித் தீயை மூட்டினாலொழிய இந்தச் சமூகத்தின் தீமைகள் வெந்து தணிய வழி இல்லை.”

இதற்குப் பதில் எதுவும் கூறாமல் அந்தப் பத்திரிகை இதழ்களை மெல்லப் புரட்டத் தொடங்கினான் பூமி.

அதில் உள்ள பதினாறு பக்கங்களிலும் புரட்சி மித்திரனின் புதுக் கவிதைகளே நிரப்பப்பட்டிருந்தன. எல்லாக் கவிதைகளிலும் சமையலுக்குத் தாளிதம் செய்தது போல அக்னி புஷ்பங்கள், ரத்த நாளங்கள், புரட்சிக்கனல் என்று நாலைந்து வார்த்தைச் சேர்க்கைகள் அங்கங்கே அள்ளி தெளித்துத் தாளிக்கப்பட்டிருந்தன. அதைத் தவிர ஆழமாக எதுவும் இல்லை.

மிகவும் அரை வேக்காட்டுத் தனமானதும் மேலோட்டமானதுமான வெற்று ஆர்வம் மட்டுமே அதில் தெரிந்தது. உண்மையான, ஆழமான அழுத்தமான புரட்சிக்காரனுக்குத் தன்னை ஒரு புரட்சிக்காரனாக முன் நிறுத்திக் காட்டிக் கொள்ள வேண்டுமென்ற சுய முனைப்பை விடப் புரட்சியைச் சாதிக்க வேண்டும் என்ற இலட்சிய முனைப்பே அதிகமாக இருக்க வேண்டும். புரட்சிக்காரனை விடப் புரட்சிதான் முக்கியமானது. பணக்காரக் குடும்பத்து இளைஞர்கள் சிலர் தாழ்வு மனப்பான் மையாலும், புதுப்புது ஃபேஷன்கள், வார்த்தைகளில் ஏற்படுகிற கற்றுக் குட்டித்தனமான காதலினாலும் சிலவற்றை ஆரம்ப சூரத்தனத்தோடு மோகிப்பது உண்டு. அது போலத்தான் புரட்சி மித்திரனின் தீவிர மோகமும் இருந்தது. ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் என்பது புரட்சியின் மேல் இவர்களுக்கு ஏற்படுகிற திடீர் மோகத்துக்கும் அவசர ஆசைக்கும் கூடப் பொருந்தும். புரட்சியையும் சமூக மாறு தலையும் பற்றி ஒன்றுமே தெரியாத அப்பாவிப் பிற்போக்குவாதியைவிட அதைப்பற்றி அரை குறையாகவும், மேலோட்டமாகவும் மட்டும் தெரிந்த, நடுத்தர வர்க்கத்து முற்போக்குவாதியே மிகவும் அபாயகரமானவன் என்பது பூமியின் கருத்து ஆக இருந்தது.

“வாங்க சார்; லெட் அஸ் ஹேவ் ஸம் டீ” என்று பூமியையும் சித்ராவையும் தன்னுடன் அழைத்தாள் புரட்சி மித்திரன்.

அப்பர் சாமி கோயில் தெருவில், போதிய இடமில்லாததால் தன்னுடைய கப்பல் போன்ற சவர்லே இம்பாலா காரை இராயப்பேட்டை நெடுஞ்சாலையிலேயே நிறுத்திவிட்டு வந்திருந்தான் புரட்சி மித்திரன்

"இன்னொரு நாள் பேசலாம்! நான் சவாரி தேடிப் போகணும்” என்று வெளியே நின்ற தன் ஆட்டோவைச் சுட்டிக் காட்டினான் பூமி. அதுவரை ஒன்றும் சொல்லாமல் இருந்த சித்ரா, “இவர் செல்ஃப் எம்பளாய்மெண்ட் ஸ்கீம்லே தானே ஒரு ஆட்டோ வாங்கி ஓட்டறாரு. இந்த நகரிலுள்ள ஒரே பட்டதாரி ஆட்டோ டிரைவர்...” என்று பூமியைப் பற்றி விவரித்தாள்.

“பரவாயில்லை! ஆட்டோ இங்கேயே நிற்கட்டும். நாம் மூணு பேரும் என் காரிலேயே ஹோட்டல் சோழா வரை போய்விட்டு வந்துடலாம்” என்றான் புரட்சிமித்திரன்.

“மன்னிக்கணும்! இங்கே மெயின் ரோடிலேயே நிறைய ரெஸ்டாரெண்டெல்லாம் இருக்குதே?”

“ஐ ஹேட் தெம் லைக் எனிதிங்! தெருவோரத்து ஹோட்டல்களிலே ஒரே அழுக்கு மயமா இருக்கும்! பரிமாறுகிறவங்களும் பக்கத்திலே உட்கார்ந்து சாப்பிடறவங்களும் டர்ட்டியா இருந்தா எனக்குக் குமட்டிக்கிட்டு வரும் சார்!”

அழுக்குகளையும் அழுக்கு நிறைந்தவர்களையுமே வெறுத்து ஒதுங்குகிற, ஒதுக்குகிற அந்த சவர்லே இம்பாலா புரட்சிக்காரனை விநோதமாகப் பார்த்தான் பூமி. அவனுக்கு ஏளனமாய் இருந்தது. “டீயோ காபியோ குடிக்கலாம்! ஆனால் ஒரு. நிபந்தனை.! நீங்களும், சித்ராவும் என் ஆட்டோவிலே உட்கார்ந்தால் நானே அழைத்துப் போய் டீ வாங்கிக் குடுத்து இங்கே திருப்பிக் கொண்டு வந்து விட்டு விடுவேன்” என்றான்

“எங்கே?” என்றான் புரட்சிமித்திரன்.

“எனக்குப் பிடித்த ஹோட்டலுக்கு” என்றான் பூமி. ‘வா நரேஷ்! போகலாம்’ என்று அவனையும் வற்புறுத்தினாள் சித்ரா. அவனை அவள் புரட்சிமித்திரன் என அழைக்காமல் நரசிம்மன் என்ற பெயரைச் சுருக்கினாற் போல் நரேஷ் என்றே அழைத்தாள். சித்ரா தன் பக்கம் பேசியது பூமிக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது..

"ஒரு கண்டிஷன்! ஏ, ஸி, உள்ள ரெஸ்டாரெண்டா இருந்தா நல்லது.”

பூமிக்குச் சிரிப்புப் பொத்துக் கொண்டு வந்தது. இவனுடைய நாட்டில் புரட்சி வருவதாயிருந்தால் கூட ஏ. ஸி. செய்த இடத்தில்தான் அது வரவேண்டும் என்பான் போலிருந்தது.

சித்ரா அவளை அதிகம் பொருட்படுத்தவில்லை. ஒரு கோமாளியிடம் பழகுகிற மாதிரியே அவனிடம் பழகுகிறாள் என்பதைச் சிறிது நேரத்திலேயே பூமி அறிந்து விட்டான்.

அவர்கள் இருவரையும் தன் ஆட்டோவிலேயே அழைத்துச் சென்று ஒரு டீக்கடையில் டீ வாங்கிக் கொடுத்த பின் மீண்டும் இம்பாலா நின்ற இடத்தருகே கொண்டு வந்து டிராப் செய்தான் பூமி. “புது வீட்டுக்குக் குடி வந்த பின் உங்களை அடிக்கடி பார்க்கலாம், பக்கத்துப் பேட்டையில் தானே இருக்கிறீர்கள்?” என்று புன்னகையோடு அவனை நோக்கிக் கை கூப்பினாள் சித்ரா.

"https://ta.wikisource.org/w/index.php?title=சாயங்கால_மேகங்கள்/7&oldid=1028935" இலிருந்து மீள்விக்கப்பட்டது