சிந்தனையாளன் மாக்கியவெல்லி/அரசன் (அரசியல் நூல்)



இரண்டாம் பகுதி

நூல் சுருக்கம் : 1

அரசன் (The Prince)


(ந்நூலை பியேரோடி மெடிசியின் மகனான மாமன்னன் லாரென்சோவுக்கு நிக்கோலோ மாக்கியவெல்லி காணிக்கையாக்கியுள்ளான். அவன் லாரென்சோவை நோக்கி இப்படிக் கூறியுள்ளான்.)

ஓர் அரசனுடைய ஆதரவைப் பெற விரும்புகிறவர்கள், அவனுக்குப் பெரும் மதிப்பு வாய்ந்த பொருள்களையோ அல்லது அவனுக்குப் பெரிதும் இன்பம் கொடுக்கிற பொருள்களையோ வெகுமதியாகக் கொடுப்பது வழக்கமாயிருக்கிறது. என்னுடைய ராஜபக்தியின் சிறு அடையாளமாக ஏதாவது தங்களுக்கு வெகுமதி கொடுக்க வேண்டுமென்று நினைக்கும் போது, தற்கால நிகழ்ச்சிகளின் அனுபவத்திலிருந்தும், முற்கால நிகழ்ச்சிகளைப் பற்றிய ஆராய்ச்சியிலிருந்தும் பெரிய மனிதர்களின் செயல்களைப் பற்றிய என்னுடைய ஞானத்தைப் போல் அருமையான மேன்மையான வேறு எந்தப் பொருளும் என்னிடத்தில் கிடையாது.

நான் நீண்ட நாட்களாகப் பெரிய மனிதர்களின் செயல்களை ஆராய்ச்சி செய்து அவற்றின் சாரத்தை இறக்கித் தங்களுக்குக் காணிக்கையாக்குகிறேன். இது தாங்கள் ஏற்றுக்கொள்வதற்குரிய மதிப்புடைய பொருள் அல்ல என்றாலும், எத்தனையோ ஆண்டுகளாக எத்தனையோ இன்னல்களுக்கிடையில் நானடைந்த அனுபவத்தைச் சுருக்கித் தருகிற நூல் என்ற முறையில் மனிதாபிமானத்தோடும் ஆதரவோடும் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்ற உறுதி எனக்குண்டு. அலங்காரமான வார்த்தைகளைக் கொண்டு நான் இதை எழுதவில்லை.

என்னைப் போன்ற எளிய மனிதன் அரசர்களைப் பற்றியும் அரசாங்கங்களைப் பற்றியும் பேசவும் வழி காட்டவும் யோக்கியதை உண்டா என்று எண்ணிவிடக் கூடாது. மலையின் மேல் இருப்பவன் தான் சமவெளி முழுவதையும் அளக்க முடியும். மலையடியில் நிற்பவன்தான் அதன் அளவையும், உயர்வையும் பெருமையையும் உணரமுடியும். அதுபோல் எளியவரால்தான் அரசர்களின் தன்மையைச் சரியாக எடைபோட முடியும்.

ஆகவே, நான் எவ்விதமான உணர்ச்சியோடு இந்த வெகுமதியை அளிக்கிறேனோ அதே விதமான உணர்ச்சியோடு மேன்மை தங்கிய தாங்கள் இதை ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன். இதை நீங்கள் படித்துப் பார்த்தால் உங்கள் செல்வமும் செல்வாக்கும் மேலோங்க வேண்டுமென்ற என் பெரு விருப்பத்தைக் காண்பீர்கள்.

மேன்மை தங்கிய தாங்கள் இருக்கும் அந்த மலையுச்சியில் இருந்து இந்த எளிய இடத்தை நோக்கினால், கொடிய விதியின் காரணமாக எத்தனை பெரிய நேர்மையற்ற துன்பங்கள் என்னைத் துன்புறுத்தியிருக்கின்றன என்பதைக் கண்டுகொள்வீர்கள்.

அரசாங்கத்தின் வகைகள்

மனித இனத்தைக் கட்டியாண்டு வந்த அல்லது ஆண்டு வருகிற எல்லா இராஜ்யங்களும் அரசுகளும் குடியரசுகளாகவோ அல்லது முடியரசுகளாகவோ இருக்கின்றன. முடியாட்சிகள், நெடுங்காலமாக ஒரே குடும்பத்தினரின் வழி வழி வந்த அரசர்களையுடைய பரம்பரையுரிமையாகவோ, அல்லது அண்மைக் காலத்தில் வேரூன்றியவையாகவோ இருக்கின்றன. புதிதாக ஏற்படுத்தப்பட்ட அந்த முடியாட்சிகள் முற்றிலும் புதியனவாகவோ அல்லது, முந்திய பரம்பரைக்கு அடுத்த கிளைப் பரம்பரையைச் சேர்ந்தனவாகவோ உள்ளன. இப்படிப் புதிதாக ஏற்படுத்தப்பட்ட முடியாட்சிகள் ஏற்கெனவே ஓர் அரசனால் ஆளப்பட்டவையாகவோ, சுதந்திர அரசுகளாகவோ இருந்து, அரசனால் தானே நேரடியாகவோ, மற்றவர்களைக் கொண்டோ படையெடுத்துத் தன்னாட்சியில் சேர்த்துக் கொள்ளப்பட்டதாகவோ, அதிர்ஷ்டவசமாகவோ அல்லது அவனுடைய விசேஷத் திறமையின் காரணமாகவோ அவனடியில் வந்து வீழ்ந்ததாகவோ இருக்கும்.

பரம்பரை முடியாட்சி :

குடியரசுகளைப் பற்றி ஏற்கெனவே வேறொரு புத்தகத்தில் விரிவாக ஆராய்ந்து விட்டபடியால் இப்பொழுது அவற்றைப் பற்றிக் கூறப் போவதில்லை. இப்பொழுது முடியாட்சிகளைப் பற்றியும் அதன் வெவ்வேறு வகைகளைப் பற்றியும் அவை எவ்வாறு ஆளப்படலாம், நடத்தப்படலாம், என்பது பற்றியும் மட்டுமே ஆராயப் போகிறேன். புதிதாக ஏற்படுத்தப்பட்ட முடியாட்சிகளைக் காட்டிலும் ஒரே ராஜ குடும்பத்தினரால் பரம்பரையாக ஓர் ராஜ்யத்தை ஆண்டு வருவதில் உள்ள கஷ்டம் மிகவும் குறைவுதான். புழைய வழக்கங்களை மீறாமல் இருப்பதும், முன் கூட்டியே அறிய முடியாத சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி நடந்து கொள்வதும், ஓர் அரசன் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளப் போதுமான காரியங்களாகும். ஒரு வேளை தவிர்க்கப்பட வேண்டிய மிகுதியான நெருக்கடி ஒன்றினால் அவன் தன் நிலையிலிருந்து தாழ்த்தப்பட்டாலும், புதிதாக அவன் இடத்தில் இருக்கக் கூடியவனுடைய மிகச் சிறிய தவறுதலைக் கூடப் பயன்படுத்திக்கொண்டு அவன் திரும்பவும் தன் நிலைக்கு வந்து விடலாம்.

புதிய முடியாட்சிகள் !

புதிய முடியாட்சியில் தான் உண்மையான சங்கடங்கள் ஏற்படுகின்றன. முதலாவதாக அது முற்றிலும் புதிய ஆட்சியாக இல்லாமல் ஒன்றாகச் சேர்ந்து கலந்திருக்கிற பல ராஜ்யங்களில் ஒன்றாக இருந்தால் எல்லாப் புதிய அரசுகளிலும் ஏற்படக் கூடிய இயற்கையான கஷ்டங்களில் இருந்து அதனுடைய குழப்பங்கள் உண்டாகின்றன. ஏனெனில் மக்கள் தாங்கள் மேலும் நன்றாக வாழமுடியும் என்ற நம்பிக்கையில் தங்கள் எஜமானர்களை தாங்களே விரும்பி மாற்றிக் கொள்கிறார்கள். இந்த நம்பிக்கையில் தான் மக்கள் தங்கள் அரசர்களை எதிர்த்துப் படை திரட்டுகிறார்கள். ஆனால் அவர்கள் ஏமாற்றம் அடைந்து ஏற்கனவே இருந்ததைக் காட்டிலும் மோசமான ஆட்சியைப் பெறுகிறார்கள்.

இம்மாதிரியான அரசை ஏற்றுக்கொள்ளுகின்ற அரசனுக்கு இரண்டு வகையிலும் கெடுதல் ஏற்படுகிறது. அந்த ராஜ்யத்தை அடைவதில் யாராரைப் புண்படுத்தினானோ அவர்களையெல்லாம் பகைவர்களாக்கிக் கொள்கிறான். அவன் அதை அடைவதற்கு உதவி புரிந்தவர்களையும் திருப்திப்படுத்த முடியாமல் அவர்களுடைய நட்பை இழக்கிறான். அவர்களுடைய தயவு வேண்டியிருப்பதால் அவர்களிடம் கடுமையாகவும் நடந்து கொள்ளவும் முடியாது. தன்னை மனமுவந்து வரவேற்ற அவர்களாலேயே வெறுக்கப்படுபவனாகவும் ஆகி விடுகிறான்.

கலகப் பிரதேசங்களைத் திரும்பவும் தன் ஆட்சிக்கு உட்படுத்திய அரசன் மீண்டும் அவற்றை எளிதாக இழந்து விடுவதில்லை என்பது உண்மைதான். ஏனெனில் கலகத்திற்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்தும், சந்தேகத்திற்குரியவர்களை வெளிப்படுத்தியும், குற்றவாளிகளைத் தண்டித்தும், தன் நிலையைப் பாதுகாத்துக் கொள்ளவும், தனக்குப் பலவீனமாக உள்ள இடங்களை வலுப்படுத்திக் கொள்ளவும் அந்த அரசனுக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது.

ஏற்கனவே நிலை பெற்றிருக்கிற ஓர் ராஜ்யத்தோடு சேர்ந்திருக்கக் கூடிய ராஜ்யங்கள் ஒரே மக்களினத்தையும், ஒரே மொழியையும் கொண்டனவாக இருக்கலாம். அல்லது இல்லாமல் இருக்கலாம். அவை ஒரே மொழியும், ஒரே இனமும், நடமாடும் ராஜ்யங்களாக இருந்தால், அதிலும் சுதந்திர வாசனையே தலை காட்டாத இடங்களாக இருந்தால் அவற்றை வசப்படுத்திக் கொள்வது மிக எளிது. அந்த ராஜ்யங்களை அரசாண்ட ராஜ குடும்பத்தினர் அடியோடு ஒழிந்து போயிருந்தால் மிகவும் நல்லது. அவர்களுடைய பழைய நிலைமைக்கும் பழக்க வழக்கங்களுக்கும் குந்தகம் ஏற்படாமல் பார்த்துக் கொண்டால் அந்த மக்கள் தங்கள் புதிய அரசனுடைய ஆட்சியை மிகவும் அமைதியாக ஏற்றுக்கொண்டு விடுவார்கள்.

இப்படிப்பட்ட ராஜ்யங்களை அடைந்து அவற்றை நிலைநிறுத்திக்கொள்ள நினைக்கின்ற அரசர்கள் இரண்டு விஷயங்களை மனத்தில் நிறுத்திக்கொள்ள வேண்டும். முதலாவதாக அந்த ராஜ்யத்தின் பழைய அரசர்களின் இரத்தக் கலப்புள்ளவர்கள் யாரும் இல்லாதபடி ஒழித்துவிட வேண்டும். இரண்டாவதாக அவர்களுடைய நீதி முறைகளிலோ அல்லது வரிகளிலோ மாற்றம் செய்யக் கூடாது. இம்மாதிரியாக நடந்து கொண்டால் மிகக் குறைந்த கால அளவில் தங்கள் ஆதிக்கத்திலுள்ள எல்லா ராஜ்யங்களையும் ஒன்று சேர்த்து ஒரே ராஜ்யமாக ஆக்கிவிடலாம்.

ஆனால் வெவ்வேறு விதமான மொழிகளும், பழக்க வழக்கங்களும் நீதி முறைகளும் உடைய ராஜ்யங்களைக் கட்டி ஆள்வது மிகவும் கஷ்டம். அதற்குப் பெரும் உழைப்பும் நல்ல அதிர்ஷ்டமும் வேண்டும். அவற்றைத் தன் ஆட்சியில் நிலைப்படுத்திக் கொள்வதற்குள்ள மிகச்சிறந்த வழிகளிலொன்று புதிய அரசன் அங்கேயே இருந்து விடுவது தான். அங்கேயே இருந்தால் குழப்படிகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்திலேயே அவற்றைத் தெரிந்து கொண்டு அவ்வப்போதே அவற்றைத் தீர்த்துவிடலாம். அரசன் தூரப் பிரதேசத்திலிருந்தால் அவன் அவற்றைப் பற்றிக் கேள்விப்படுவதற்கு முன்னாகவே அவை தீர்க்கமுடியாத அளவிற்கு வளர்ந்துவிடக்கூடும். தவிரவும் அதிகாரிகள் இருந்து அரசாள்வதை விட அரசனே நேரில் இருந்து ஆண்டால் குடிமக்கள் அவனுடன் நேரடித் தொடர்பு கொள்ளவும், நேசங்காட்டவும், ராஜபக்தி கொள்ளவும் வாய்ப்பாயிருக்கும். வேறுவிதமாக இருந்தால் மக்கள் அவனுக்குப் பயப்படவே பெரிதும் இடங்கொடுக்கும். அந்த ராஜ்யத்தைத் தாக்க விரும்புகின்ற வெளி ஆதிக்க சக்தி எதுவும் எளிதாக அதை அபகரித்துவிட முடியாது.

அந்த ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்குச் சிறந்த வேறொரு வழி, அந்தத் தேசத்தின் திறவுகோல் போலுள்ள இரண்டொரு இடங்களில் குடியேற்ற நாடுகளை உண்டாக்குவதுதான். ஒரு பெரிய ராஜ்யத்திற்கு ஆயுதபாணிகளான பெரும்படையை வைத்திருப்பதோ அல்லது குடியேற்ற நாடுகளைக் கொண்டிருப்பதோ மிக அவசியமாகும். இராணுவத்தை வைத்திருப்பதால் அரசனுக்கும் பெருஞ் செலவு ஏற்படும். குடியேற்ற நாடுகளால் அவனுக்குச் சிறிதுகூடச் செலவு இல்லை. ஏற்கனவே அங்கு வாழ்ந்தவர்களை ஓட்டாண்டியாக்கிவிட்டு அவர்களுடைய வீடு வாசல்களையும் நில புலன்களையும் தன் நாட்டவருக்குக் கொடுக்கப் போகிறான். ஓட்டாண்டிகளான அந்த நாட்டு மக்களோ, ஏழைகளாய், எளியவர்களாய், ஏதுமற்றவர்களாய் இருப்பதால் அவர்கள் அரசை எதிர்த்து எதுவும் செய்துவிடப் போவதில்லை. (சாதாரணமாக மனிதர்கள் சிறு தீமைகளுக்குத் தான் நம்மைப் பழி வாங்குவார்கள். பெருந்தீமைகளுக்குத் தகுந்தபடி. பழி வாங்க முடியாத நிலைமையில் அவர்கள் இருப்பார்கள்). ஆகவே அவர்கள் பழி வாங்கி விடுவார்களே என்று பயப்படத் தேவையில்லை. பட்டாளங்களை வைத்திருப்பதால் செலவு ஏற்படுகிறது. செலவுக்காக மக்களுக்கு வரி விதிக்க வேண்டியிருக்கிறது. அதனால், வரிப் பளுவைத் தாங்க முடியாத மக்கள் எதிரிகளாகி விடுகிறார்கள். எப்படிப் பார்த்தாலும் பட்டாளங்கள் வைத்திருப்பது பயனற்றது என்பதும் குடியேற்ற நாடுகளை வைத்திருப்பது பெரும்பயனுள்ளது என்பதும் புரியும்.

ஓர் அன்னிய நாட்டை அரசாளுகிறவன், அக்கம் பக்கத்தில் உள்ள வலுக்குறைந்த அரசர்களுக்குத் தான் ஒரு தலைவனாகவும், அவர்களின் பாதுகாவலனாகவும் இருக்கும்படி, தன்னை ஆக்கிக் கொள்ளவேண்டும்; வலு மிகுந்தவர்களைப் பலவீனமடையச் செய்ய முயல வேண்டும்; தன்னைக் காட்டிலும் பலக் குறைவில்லாத வேறோர் அன்னிய அரசனால் அவர்கள் ஆக்கிரமித்துக் கொள்ளப்படாதபடி அவன் எச்சரிக்கையாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். வலுமிகுந்த வேறோர் அன்னியன் படையெடுக்கும் போது வலுக்குறைந்த எல்லோரும் தன்னைச் சேர்த்துக் கொள்ளும்படி செய்து, படையெடுத்து வருபவனை அவர்கள் ஆதரவுடனும், தன் படைகளுடைய உதவியுடனும் தோற்கடித்து விடலாம். தன் உடன் சேரும் அக்கம் பக்கத்து அரசர்கள் மிகுந்த அதிகாரமும், ஆற்றலும் அடைந்து விடாதபடி சிறிது கவனமாகப் பார்த்துக் கொண்டால் போதுமானது. எப்பொழுதும் அந்த ராஜ்யங்களின் மத்தியஸ்தனாகத்தான் விளங்கவேண்டும். இந்த முறையில் தன் ஆட்சியைச் சரிவர நடத்தாதவன் பல கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாகித் தன் கைவசப்படுத்திய ஆட்சியையும் நழுவ விட்டு விடும்படி நேரிடும்.

எதிர்காலத்தில் நடக்கக் கூடிய குழப்படிகளையும் முன்னதாகவே அறிந்து, அவற்றை முளையிலேயே கிள்ளி எறிந்து விடவேண்டும். எல்லோரும் தெரிந்து கொள்ளும்படி அவை வளர்ந்துவிட இடம் கொடுத்து விட்டால் பிறகு பரிகாரம் தேடுவது அரிது.

இராஜ்யங்களை ஆக்கிரமித்துக் கொள்ள விரும்புவது இயற்கையானது; சாதாரணமான விஷயமும் கூட! வெற்றிகரமாக இதைச் செய்யக் கூடியவர்கள் செய்து முடித்தால் அவர்கள் இகழப்படுவதில்லை; எப்போதும் புகழப்படுவதே வழக்கம்! ஆனால், ஆக்கிரமிக்க முடியாத நிலையில், எப்படியானாலும் சரியென்று ஆக்கிரமிக்க விரும்புபவர்கள் தாம் தவறு செய்கிறார்கள்; பெரும் பழிக்கும் ஆளாகிறார்கள்!

இருவகை ஆட்சிகள் :

சரித்திரத்தில் காணப்படுகின்ற அரசாங்கங்கள் இரண்டுவிதமாக ஆளப்பட்டிருக்கின்றன. ஒன்று, அரசனும் அவனுடைய வேலையாட்களும் சேர்ந்து அரசாளுவது; மற்றொன்று, அரசனும் பிரபுக்களும் சேர்ந்து ஆளுவது. முதல் வகையில் அரசனுக்கடங்கிய மந்திரி பிரதானிகள் இருந்து அரசனுக்காக நாட்டையாளுவதில் ஒத்தாசை புரிகிறார்கள். அரசனுக்கே சகல அதிகாரங்களும் அந்த ஆட்சியில் உண்டு. இரண்டாவது வகையில், பிரபுக்கள் தங்கள் குலப்பெருமையையும், இரத்தச் சிறப்பையும் கொண்டு ஆளுகிறார்கள். அவர்களுக்கென்று தனிக்குடி படைகள் இருக்கின்றன. அவை அவர்களுக்கே-அவர்களுக்கு மட்டுமே அடங்குவன.

அரசனும் வேலைக்காரர்களும் சேர்ந்து ஆளுவதற்கு உதாரணமாகத் துருக்க நாட்டாட்சியையும், அரசனும் பிரபுக்களும் சேர்ந்து ஆளுவதற்கு உதாரணமாகப் பிரெஞ்சு நாட்டாட்சியையும் எடுத்துக் காட்டலாம். துருக்கர்கள் ஆட்சியைக் கைப்பற்றுவது கஷ்டம். ஆனால் ஒரு முறை கைப்பற்றி விட்டால் அதை அடக்கியாள்வது மிக எளிது. பிரெஞ்சு ஆட்சியைக் கைப்பற்றுவது எளிது, ஆனால், கைப்பற்றிய பின் அரசாள்வது மிகவும் தொல்லை பிடித்த காரியம்.

துருக்க ஆட்சியில் அதிகாரிகள் எல்லோரும் அடிமைகள். எல்லோரும் அரசனைச் சார்ந்து இருப்பவர்கள். ஆகவே அவர்களைக் கெடுப்பது அரிது. அப்படியே கெடுத்து விட்டாலும் அதனால் ஏற்படும் பயன் சிறிது. ஏனெனில் அவர்களால் மக்களைத் தங்களோடு ஒன்று சேர்த்துக் கொண்டு வர முடியாது. ஆகவே துருக்கர்களை எதிர்க்க முயலுபவர்கள் யாராயிருந்தாலும், குழப்பமுண்டாக்கி வெற்றி பெற முடியாது. அவர்களுடைய படைத் தொகைகள் அத்தனையையும் எதிர்க்கக் கூடிய வல்லமையுடையவர்களாக இருக்க வேண்டும். ஆனால், போரில் வென்றுவிட்டால் அரசகுடும்பத்தைத் தவிர வேறு யாருக்கும் பயப்படத் தேவையில்லை. அந்த அரசகுடும்பத்தையும் அழித்துவிட்டால் வேறு எவ்விதமான பயமுமின்றி அந்த சாம்ராஜ்யம் முழுவதையும் அரசாளலாம்.

பிரெஞ்சு தேசத்தைப் போன்ற ராஜ்யங்களிலோ, அந்த ராஜ்யத்தைச் சேர்ந்த சில பிரபுக்களைச் சேர்த்துக் கொண்டு வெகு எளிதாக நாட்டில் வெற்றிக் கொடியை நாட்டி விடலாம். ஆனால், ஆட்சி நடத்தத் தொடங்குகின்றபோது தான் பல தொல்லைகள் ஏற்படத் தொடங்கும். உதவி செய்தவர்களிடமிருந்தும், எதிர்த்து நின்றவர்களிடமிருந்தும் இந்தத் தொல்லைகள் ஏற்படும். அரச குடும்பத்தை அடக்கி விடுவதால் மட்டும் தொல்லை தீர்ந்து விடாது. உதவி செய்த பிரபுக்களைத் திருப்தி செய்யவும் முடியாது: எதிர்த்து நின்ற பிரபுக்களை ஒழித்துக் கட்டவும் முடியாது! ராஜ்யத்தை ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் இழந்து விடும்படி தான் நேரிடும்!

ஆசியா முழுவதும் வெற்றிக்கொடி நாட்டி உலகப் புகழ்பெற்ற மாமன்னன் அலெக்சாண்டரின் டாரியஸ் அரசாங்கம் துருக்க ராஜ்யத்தைப் போன்றது. டாரியஸ் இறந்துபோனபடியால் அந்த அரசாங்கம் அலெக்சாண்டர் வசமே பத்திரமாக இருந்தது. அலெக்சாண்டர் இறந்த பின்னும் கூட அவருடைய பின் வாரிசுகள் அந்த ராஜ்யத்தைத் தம் வசத்திலேயே வைத்திருந்தார்கள். அவர்கள் மட்டும் ஒற்றுமையாக இருந்திருந்தால் அமைதியாக அந்த ராஜ்யத்தை நீடித்து ஆண்டிருக்கக் கூடும்.

மூன்று வழிகள் :

தங்கள் சொந்த நீதி முறைகளைக் கொண்டு சுதந்திரமாக வாழ்ந்து வந்த ராஜ்யங்களை ஆக்கிரமிக்க நேர்ந்தால், அவற்றை நிலையாக ஆளுவதற்கு மூன்று வழிகள் இருக்கின்றன. முதலாவது வழி, அவற்றைக் கொள்ளையடித்து விடுவது. இரண்டாவது வழி, அரசனே அந்த ராஜ்யத்தில் தங்கி வாழ்வது. மூன்றாவது வழி, அரசனிடம் நட்புப் பாராட்டக் கூடிய சிலரைக் கொண்டு ஓர் ஆட்சிக் குழுவை ஏற்படுத்தி அவர்களைத் தங்கள் சொந்த நீதி முறைகளின்படி வாழவிட்டு, அவர்களிடமிருந்து கப்பம் பெற்றுக் கொள்வது. இந்த அரசாங்கம், அரசனால் ஏற்படுத்தப்பட்டதாகையால் அது அவனிடம் நட்புப் பாராட்டாமலும், அவனுடைய பாதுகாப்பைப் பெறாமலும் வாழ முடியாது. ஆகவே அந்த நட்பை நிலை நிறுத்த அது எல்லா வகையாலும் பாடுபடும்.

இந்த வழியில் வெற்றிபெற வாய்ப்பில்லாவிட்டால் முதலாவது வழியைக் கடைப்பிடிக்க வேண்டியதுதான். ஒரு சுதந்திரமான நகர ராஜ்யத்திற்கு அரசனாக வருபவன் அதை அழிக்காவிட்டால், அதனால் தான் அழிக்கப்படுவதை எதிர்பார்க்க வேண்டியது தான்.

இடையில் செலவழித்த காலத்தையோ, அரசனால் பெற்ற பலன்களையோ எண்ணிப் பாராமல், பழம் பெருமைகளையும், சுதந்திரத்தின் அருமைகளையும் முன்னிட்டே எப்போதும் கலகம் ஏற்படலாம். அங்கு வாழ்பவர்கள் பிரிக்கப் படாமல் அல்லது கலைக்கப்படாமல் ஒன்று சேர்ந்திருக்கும் வரையிலே தங்கள் பழமையையும் பெருமையையும் மறக்கவே மாட்டார்கள். ஆனால், ஓர் அரசனின் கீழ் வாழ்ந்தவர்களாக அந்தக் குடிமக்கள் இருந்தால், தங்கள் ராஜகுடும்பம் அழிந்து போய் விட்டால், கீழ்ப்படிந்தே பழக்கப் பட்டமையாலும் தங்களை ஒன்று சேர்க்கும் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய ராஜவமிசத்தினர் யாரும் இல்லாமையாலும், சுதந்திரமாக வாழ்ந்து பழக்கமில்லாததாலும் புதிய அரசன் அவர்களுடைய மனப்பான்மையை எளிதாகத் தன் வசப்படுத்தி விடலாம். ஆனால் குடியரசுகளில் உயிர்ப்பும், வெறுப்பும், பழிவாங்கும் துடிப்பும் மிக அதிகமாக இருக்கும். அவர்கள் தங்கள் முந்திய சுதந்திர வாழ்வின் நினைப்பை மறக்கவே மாட்டார்கள். ஆகவே, அவர்களுடைய ராஜ்யத்தை நிலையாக ஆளுவதற்குரிய வழி அவர்களுடைய நகரங்களைப் பாழடித்து விடுவதுதான் அல்லது அரசனே அந்த ராஜ்யத்தில் சென்று குடியிருப்பதுதான்!

திறமையால் கிடைத்த புதிய அரசுகள் :

(மனிதர்கள் தங்களுக்கு முந்தியவர்களின் செயல்களையே பாவனை செய்து பின்பற்றி அவர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே எப்பொழுதும் செல்கிறார்கள்) மற்றவர்களை எப்பொழுதும் சரியாகப் பின்பற்ற முடியாததாலும், தாங்கள் யாருடைய செயல்களைப் பின்பற்றுகிறார்களோ அவர்களளவு காரியங்களைத் திறம்படச் செய்ய முடியாததாலும், புத்திசாலியான ஒருவன் எப்பொழுதும் மிகப்பெரிய மனிதர்கள் அடிவைத்துச் சென்ற பாதையிலேயே போகவேண்டும்: மிகத்திறமையுடையவர்களின் செயல்களையே பின்பற்ற வேண்டும். அப்படிச் செய்வதால் அவன் அவர்களுடைய பெருமையைத் தான் அடைய முடியாவிட்டாலும் அதில் ஒரு சிறு அளவையாவது அடையமுடியும். கெட்டிக்காரர்களான வில் வீரர்கள், மிகத்தூரத்தில் உள்ள ஒரு பொருளை எய்ய விரும்பும்போது, தங்கள் வில்லினால் எவ்வளவு தூரம் எய்ய முடியும் என்பதைத் தெரிந்து கொண்டு, அந்தக் குறிக்கும் மேலான உயரத்தில் உள்ள ஓர் இடத்தைக் குறிவைத்துக் கொண்டு அம்பெய்வார்கள். அவ்வளவு உயரத்திற்குத் தங்கள் அம்பு செல்லாது என்றாலும், அதற்குக் கீழான தாங்கள் விரும்புகின்ற குறியை எய்வதற்கு இந்த முறை பயன்படும். அதுபோல்தான் (மனிதர்கள் மிகப் பெரிய மனிதர்களைப் பின்பற்ற முயல வேண்டும்)

ஒரு புதிய அரசன் இருக்கக் கூடிய புதிய அரசுகளை, ஏறத்தாழ அவனுடைய திறமைக்குத் தகுந்தபடி தன் பிடியில் வைத்திருப்பது எளிதாக இருக்கும். மிகத் திறமையுள்ளவன் மிக எளிதாகவும். குறைந்த திறமையுள்ளவன் சாதாரணமாகவும் அவற்றைத் தன் பிடியில் வைத்திருக்கலாம். தனிப்பட்ட மனிதன் ஒருவன் அரசனாகும்போது அவனிடம் பெருந்திறமையோ அல்லது நல்லதிர்ஷ்டமோ இவற்றில் ஏதாவதொன்றோ இருக்குமானால் பல கஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். நல்லதிர்ஷ்டம் குறையாக உள்ளவர்கள் கூடத் தங்கள் ராஜ்யங்களைச் சிறப்பாக நடத்தியிருக்கிறார்கள். அரசன் அந்த ராஜ்ய எல்லைக்குள்ளேயே தங்கினால் காரியம் மேலும் இலகுவாகும்.

சந்தர்ப்பங்கள் மனிதர்களுக்கு வாய்ப்பை அளிக்கின்றன. அவர்களுடைய பெரும் பண்புகள் அவற்றைக் கொண்டு அவர்கள் பலன் அடைய உதவுகின்றன. இதனால் அவர்களுடைய நாடு வளப்பட்டு அதன் செல்வங்கள் வளர்ச்சியடைகின்றன.

தங்கள் திறமையைப் பயன்படுத்தி அரசர் ஆனவர்கள். தங்கள் ராஜ்யங்களை அடையும்போது தான் கஷ்டப்படுகிறார்களே தவிர, அவற்றை எளிதாக நிலைப்படுத்திக் கொள்கிறார்கள். தங்கள் ராஜ்யங்களைத் தேடிக் கொள்கின்ற காலத்தில் அவர்கள் அடையும் கஷ்டங்களும், அவர்கள் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக நுழைக்கின்ற புதிய சட்ட திட்டங்களில் இருந்து ஓரளவு உண்டாகின்றன. புதிய நடை முறைகளைப் புகுத்தி நடைபெறச் செய்வதைப் போல் அதிகமான கஷ்டமோ, அதன் வெற்றியில் ஏற்படுகின்றதைப் போல் அதிகமான சந்தேகமோ, அல்லது அதைக் கடைப்பிடிப்பதைப் போல் அதிகமான ஆபத்தோ வேறு எதுவும் இல்லை என்பதை அறியவேண்டும். பழைய நடைமுறையால் பயனடைந்த எல்லோரும் சீர்திருத்தக்காரனுக்கு எதிரிகளாகி விடுவார்கள். புது நடை முறையால் நன்மை கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்ற எதிராளியின் கையில் இருக்கின்ற சட்டத்திற்கு அஞ்சுகின்ற மனிதத் தன்மையில் நம்பிக்கையில்லாத அசமந்தப் பேர்வழிகள்தான். இந்தப் புதுச் சட்டங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கக்கூடியவர்கள். இவர்களுக்கும் புதுமையில் அதை அனுபவத்தில் காணும்வரை உண்மையில் எவ்விதமான நம்பிக்கையும் இருப்பதில்லை. எதிர்ப்பவர்கள் வேகமாக எதிர்க்கவும், ஆதரிப்பவர்கள் அரைகுறை மனத்தோடு ஆதரிக்கவும் இதற்கிடையிலே சீர்திருத்தம் புகுத்துகின்றவன் அடைகின்ற ஆபத்து மிகப் பெரிது. புதுமையைப் புகுத்துகின்றவர்கள் தன்னந்தனியாகவோ அல்லது பிறருதவியைக் கொண்டு கட்டாயப்படுத்தும் முறையில் செயலாற்றுகிறார்களா என்பதைப் பொறுத்திருக்கிறது. அவர்களுடைய வெற்றி தோல்வி தன்னந்தனியாக அவர்கள் முயற்சி செய்வதாயிருந்தால் அவர்கள் வெற்றி மோசமாகத்தானிருக்கும்.

தங்கள் சொந்த பலத்தையும் படைபலத்தையும் உபயோகப்படுத்தக் கூடுமானால் அவர்கள் அந்த விஷயத்தில் தோல்வியடைவது அபூர்வம். இதனால்தான் படைபலம் படைத்த தீர்க்கதரிசிகள் எல்லோரும் வெற்றியடைந்து இருப்பதையும், படை பலமற்றவர்கள் தோல்வியடைந்து இருப்பதையும், நாம் காணுகிறோம். மக்களை ஒரு விஷயத்திற்கு இணங்கச் செய்வது என்பது எளிதான காரியமல்ல. அவர்கள் தாமாக நம்பாத காரியத்தைப் படைபலத்தைக் கொண்டு தான் நம்பச் செய்ய வேண்டும்.

இவ்வாறு தங்கள் திறமையைக் கொண்டு மேலோங்கி வந்தவர்கள், தங்களுக்குக் கீழ்ப்படியாதவர்களை அடக்கியும், தங்கள் மீது பொறாமை கொண்டவர்களை ஒடுக்கியும் ஒரு முறை மேலோங்கி வந்து விட்டால் அவர்கள் பத்திரமும் பாதுகாப்பும் வல்லமையும் உடையவர்களாய் மதிப்பிற்குரியவர்களாய் மகிழ்ச்சியுடன் நிலைத்து இருக்க ஆரம்பித்து விடுகிறார்கள்.

அதிர்ஷ்ட வசத்தால் அல்லது பிறர் ஆற்றலால்
கிடைத்த புதிய அரசுகள்

தனிப்பட்ட குடிமக்களாக இருந்து வெறும் அதிர்ஷ்டத்தால் அரசரானவர்கள். அவ்வாறு அரசராகும் போது எளிதாக உயர்ந்து வந்துவிட்டாலும், அந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்வதற்குள் பெரும் பாடுபட்டுப் போகிறார்கள்.

அரசைப் பெறுகின்ற பாதையில், அவர்கள் அப்படியே பறந்து வந்து விடுகிறபடியால், எவ்விதமான கஷ்டத்தையும் அடைவதில்லை. ஆனால் அவர்கள் நிலைபெறக் கூடிய சந்தர்ப்பத்தில் தான் எல்லாக் கஷ்டங்களும் உண்டாகின்றன. பணத்திற்காகவோ அல்லது ஓர் அரசனுடைய தயவினாலோ இராஜ்யங்களைப் பெற்றவர்கள் இருக்கிறார்கள். சில மன்னாதி மன்னர்கள் பட்டாளத்தினருக்கு இலஞ்சம் கொடுத்து வந்தவர்களாய் இருந்திருக்கிறார்கள். இப்படி அரசுரிமை பெற்றவர்கள் எப்பொழுதும் தங்களைத் தூக்கிவிட்டவர்களின் நல்லெண்ணத்தையும், அவர்களுடைய அதிர்ஷ்டத்தையும் முழுக்க முழுக்கச் சார்ந்திருக்க வேண்டியவர்களாய் இருக்கிறார்கள். அவர்கள் சார்ந்திருக்கக் கூடிய அந்த இரண்டு விஷயங்களுமே நிலையற்றவை; உறுதியற்றவை! அவர்களுக்குத் தங்கள் அந்தஸ்தை எப்படிக் காப்பாற்றுவதென்றும் தெரியாது; எப்படி நிர்வகிப்பதென்றும் தெரியாது! ஒரு சாதாரணக் குடிமகனாக இருந்து அரச பதவிக்கு வந்தவன் மிகப் பெரிய திறமைசாலியாய் இருந்தாலொழிய, எப்படி ஆதிக்கம் செலுத்துவதென்பது தெரியாதவனாகத் தான் இருப்பான். அப்படிப்பட்டவர்கள் தங்கள் நிலையைத் தாங்களாகவே நிலை நிறுத்திக்கொள்ள முடியாதவர்களாயிருப்பார்கள். ஏனென்றால் தங்களிடம் நட்பும் விசுவாசமும் உடைய படைகள் அவர்களிடம் இருப்பதில்லை.

ஆரம்பத்தில் வெகு வேகமாக வளர்ச்சியடைந்த எதுவும் ஆழத்திற்கு வேரூன்றிவிட முடியாதாகையால், முதற் புயல் அடிக்கும் போதே வீழ்ந்து விடுவதுபோல, எளிதாக அடைந்த இராஜ்யங்களும் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஆட்டங் கண்டுவிடக் கூடும். ஆனால், அப்படித் திடீரென்று அரசனாகக் கூடியவன் பெருந் திறமையுடையவனாக இருந்தால், அவன் தனக்கு அதிர்ஷ்டவசமாகக் கிடைத்த அந்த உயர்ந்த நிலையைக் காப்பாற்றிக் கொள்ள எவ்விதமான தீமை நேர்ந்தாலும் அவ்வவ்வற்றிற்குத் தக்கபடி அவசரமான காரியங்களை மேற்கொண்டு அவற்றைத் தடுத்து ஒழித்துவிட்டுப் பிறகு தன் அடிப்படையை வலுப்படுத்திக் கொண்டு விட முடியும்.

அதிர்ஷ்டவசத்தாலோ பிறர் உதவியாலோ அரசரானவர்கள் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளக் கீழ்க்கண்ட முறைகளைப் பின்பற்ற வேண்டும்.

பகைவர்களிடமிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். நண்பர்களை உண்டாக்கிக் கொள்ள வேண்டும். படைபலத்தாலும் சூழ்ச்சித் திறத்தாலும் ஆட்சி நடத்த வேண்டும். குடிமக்கள் தன்னை நேசிக்கவும் தனக்குப் பயந்து நடக்கவும் செய்ய வேண்டும். இராணுவ வீரர்கள் தன் சொற்படி நடக்கவும், தன்னிடம் பயபக்தி காட்டவும் செய்யவேண்டும். தனக்குத் தீமை செய்யக் கூடியவர்களை ஒழித்துக் கட்ட வேண்டும். பழைய பழக்க வழக்கங்களிடையே புதுமையைப் புகுத்த வேண்டும். தன் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டவர்களிடம் கண்டிப்பாகவும், அன்பாகவும், மகத்துவமுடையவனாகவும் உதார குணமுடையவனாகவும் இருக்க வேண்டும். பழைய ராணுவத்தை ஒடுக்கிப் புதிய இராணுவத்தை உண்டாக்க வேண்டும். அக்கம் பக்கத்திலுள்ள அரசர்களும் மன்னர்களும் தனக்கு உதவி செய்ய மகிழ்ச்சியோடு முன் வரும்படியும் ஊறு செய்ய அஞ்சும்படியும் ஆன நிலையில் அவர்களுடன் நட்புறவு கொண்டாட வேண்டும். இப்படிப்பட்ட செயல்களில் கவனம் செலுத்தக் கூடிய அந்தப் புதிய அரசன் தன் அரசபீடத்தை நிச்சயமாகக் காப்பாற்றிக்கொள்ள முடியும்.

கொடுஞ் செயல்கள் மூலம் அரசர் ஆதல் :

அதிர்ஷ்டவசமாகவோ அல்லது திறமையினாலோ அரசராவது தவிர இன்னும் இரண்டு வழிகள் இருக்கின்றன. அவை துரோகம் அல்லது கொடுஞ் செயலின் மூலம் அரசர் ஆதலும் அல்லது உடன் வாழும் குடிமக்களின் ஆதரவால் அரசர் ஆதலும் ஆகும்.

படைத் தலைமை வகிக்கும் சிலர் திடீரென்று ஆட்சிக் குழுவினரையும் முக்கியமானவர்களையும் ஒரேயடியாகக் கொன்றுவிட்டுத் தாங்கள் ஆட்சித் தலைமையைக் கைப்பற்றிக் கொள்கிறார்கள். ஒருவன் தன் உடன் வாழும் குடிமக்களைக் கொன்று குவிப்பதும், தன் நண்பர்களுக்கு இரண்டகம் பண்ணுவதும் உண்மை. இரக்கம், மனிதாபிமானம் முதலியவை இல்லாமல் இருப்பதும், அறமல்ல! இப்படிப்பட்ட கொடியவழியில் ஒருவன் அதிகாரத்திற்கு வேண்டுமானால் வரலாமேயொழிய கீர்த்தியும் புகழும் அடைய முடியாது.

இப்படிப்பட்ட எல்லையில்லாத கொடுமையும் துரோகமும் சதியும் புரிந்தவர்கள் சிலர், வெளிப் பகைவர் படையெடுத்த காலத்திலும் தங்களைக் காப்பாற்றிக் கொண்டு, தங்கள் குடிமக்களால் எவ்வித சூழ்ச்சியும் சதியும் செய்யப்படாமல் எப்படி நெடு நாளைக்குத் தங்கள் ஆதிக்கத்தை நிலைநிறுத்திக் கொள்ளுகிறார்கள் என்று சிலர் ஆச்சரியப்படக் கூடும். எத்தனையோ பேர் சமாதான காலத்திலேயே தங்கள் கொடுந்தன்மையின் காரணமாகத் தங்கள் நிலையைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் திண்டாடிப் போயும் இருக்கிறார்கள். போர்க்களத்தில் அப்படிப்பட்டவர்களின் நிலைமையைப் பற்றிப் பேசவே வேண்டியதில்லை. ஆனால் ஒரு சிலர் இதற்கெல்லாம் ஆட்டங்கொடுக்காமல் நிலைத்திருக்கிறார்களே என்று கேட்டால், அது அவர்கள் செய்கின்ற கொடுஞ் செயலின் தன்மையைப் பொறுத்தது என்றே சொல்லவேண்டும். தங்கள் கொடுஞ் செயலைப் பூரணமாக நிறைவேற்றி முடித்தவர்கள் பின்னால் தங்கள் நிலைமையைக் காப்பாற்றிக்கொள்ள முடியும். அரைகுறையாக விட்டு வைத்தவர்களால் அது முடியாது.

ஓர் ராஜ்யத்தை அடையும்போது அதற்காகச் செய்ய வேண்டிய கொலை முதலிய கொடுமைகளையெல்லாம் ஒரேயடியாக உடனடியாகச் செய்துவிட்டால் பிறகு, மேற்கொண்டு எவ்விதமான கொடுமையும் செய்யாமல் மக்களுக்கு நன்மை செய்து வருவதன் மூலம் அவன் தன் நிலைமையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். கோழைத் தனத்தினாலோ, சரியான யோசனையில்லாததினாலோ ஒரே மூச்சில் தான் செய்ய வேண்டிய கொடுமைகளைச் செய்து முடிக்காதவன், தினந்தோறும் பாக்கியிருக்கின்ற கொடுமைகளைச் செய்வதற்காக வாளுங்கையுமாக இருந்து கொண்டே இருக்க வேண்டியிருப்பதால், அவன் மக்களுடைய அன்பைப் பெறமுடியாது. தனக்குத் தடையாயிருப்பவர்களை யெல்லாம் ஒரேயடியாக ஒழித்துக் கட்டிவிட்டு பிறகு கொஞ்சங்கொஞ்சமாக மக்களுக்கு நன்மைகளைச் செய்து வந்தால், அவற்றைப் படிப்படியாக அனுபவித்து வரக் கூடிய அவர்கள் பழைய பாதகத்தை மறந்து விடுவார்கள். மக்களோடு ஒன்றி வாழுகிற அரசனை எந்த நல்ல அல்லது தீய நிகழ்ச்சிகளும் சாய்த்து விட முடியாது.

மக்கள் ஆதரவால் அரசர் ஆதல்:

கொலை அல்லது கொடுமையால் அரசராவது தவிர மக்கள் ஆதரவால் அரசர் ஆவதும் ஒரு வழியாகும். முழுத்தகுதியோ அல்லது நிறைந்த அதிர்ஷ்டமோ இருந்தால் மட்டும் இந்த நிலையை அடைந்து விட முடியாது. அதிர்ஷ்டத்துடன் தந்திரமும் இருக்க வேண்டும்!

ஒவ்வொரு நகரிலும் இரண்டு கட்சிகள் ஏற்படுவது இயல்பு. ஒன்று மேன்மக்களுடைய கொடுமையைத் தவிர்க்க நினைக்கும் பொதுமக்கள் கட்சி. மற்றொன்று பொதுமக்களை ஒடுக்க நினைக்கும் மேன்மக்கள் கட்சி. இந்த இரு கட்சிகளின் மோதுதலின் விளைவாக ஓர் அரசனைக் கொண்ட முழுமையான அரசாங்கம் அல்லது மக்களின் சுயாதீனம் அல்லது கட்டுக்கடங்காத நிலை ஆகிய மூன்றில் ஒன்று ஏற்படும். முதலாவதாகச் சொன்ன முழுமையான அரசாங்கம் ஏற்படுகின்ற பொழுது நாட்டில் எந்தக் கட்சி ஓங்கியிருக்கிறதோ அந்தக் கட்சி தன் இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்காகத் தங்கள் கொள்கையை ஆதரிக்கக் கூடிய ஒருவனை நாட்டின் அரசனாக்கி விடுவார்கள்.

மேன்மக்கள் ஆதரவால் அரசன் ஆனவன், பொதுமக்கள் உதவியால் அரசன் ஆனவனைக் காட்டிலும் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்வதற்கு அதிகக் கஷ்டப்பட நேரிடும்.

மேன்மக்கள் ஆதரவால் அரசனானவனைச் சுற்றி இருப்பவர்கள் அவனைத் தங்களுக்குச் சமதையானவனாகக் கருதுபவர்களாக இருப்பதால் அவன் அவர்களை ஏவவோ தான் விரும்புகிறபடி அவர்களுக்குக் கட்டளைகள் பிறப்பிக்கவோ முடியாது. ஆனால், குடிமக்களால் அரசனானவனுக்கு அடங்காதவர்கள் இருக்கமாட்டார்கள்; இருந்தாலும் வெகு சொற்பமாயிருப்பார்கள். தவிரவும். பிரபுக்களைத் திருப்திப் படுத்துவதைக் காட்டிலும் மக்களைத் திருப்திப்படுத்துவது சுலபம். பொது மக்கள் விரும்புவதெல்லாம் தாங்கள் ஒடுக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பது தான். பொது மக்கள் அரசரின் பகைவராயிருந்தால் அவனை விலக்க மட்டுமே நினைப்பார்கள். பிரபுக்களோ, தங்களுக்குப் பிடிக்காத அரசனுக்குப் பல சூழ்ச்சிகள் செய்வார்கள். அவர்கள் தந்திரத்திலும் முன்னறிவிலும் தேர்ந்தவர்களாகையால் தங்களுக்கு அனுசரணையாக வரக்கூடிய ஒருவன் பக்கம் மாறுவார்கள். மக்களுடன் அரசன் நிலைத்து இருக்க முடியும்; பிரபுக்களுடன் அது முடியாது பிரபுக்கள் எப்பொழுதும் தம் நலத்தையே நாடுபவர்கள் ஆகையால் அவர்களை இரகசியப் பகைவர்களாக எண்ணி அரசன் எப்போதும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

மக்கள் ஆதரவால் அரசன் ஆனவன் அவர்களுடைய நட்பை எப்போதும் காப்பாற்ற வேண்டும். இது எளிது. ஏனெனில் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் தாங்கள் அடக்கி ஒடுக்கப்படக் கூடாது என்பதுதான். பிரபுக்கள் ஆதரவுடைய அரசன் கூட மக்கள் ஆதரவைப் பெறுவது நல்லது. தங்களுக்குத் திமை செய்யக் கூடியவன் என்று எதிர்பார்க்கப்பட்டவன் நல்லவனாக இருப்பதைக் கண்டால் அவர்கள் அவனுக்குத் தங்கள் பேராதரவைக் காட்ட முன் வருவார்கள். எந்த அரசனும் மக்கள் நட்பைப் பெற வேண்டியது இன்றியமையாதது என்று நான் கூறுவேன். இல்லாவிட்டால் அவனுக்கு ஆபத்துக் காலத்தில் தஞ்சமடைவதற்கு ஓரிடமும் இருக்காது.

“மக்களை அடிப்படையாகக் கொண்டு எதையும் எழுப்புபவன் சேற்றின்மீது எழுப்புபவனாகிறான்”. என்ற பழமொழியை கொண்டு யாரும் என் வாதத்தை மறுக்க முயல வேண்டாம். தனிப்பட்ட மனிதர்களைப் பொறுத்தவரை அது சரிதான். தனிமனிதன் பகைவர் கையிலோ, அதிகாரிகள் கையிலோ அகப்பட்டால், பொதுமக்கள் தன்னை விடுவிப்பார்கள் என்று எதிர்பார்ப்பது ஏமாற்றமாகத் தான் முடியும். ஆனால் மக்கள் நட்பின் அடிப்படையிலே தன்னை நிலை நிறுத்திக் கொள்ளக் கூடியவனும், அதிகாரம் செலுத்தக் கூடிய ஆண்மையும் ஆற்றலும் உடையவனும், இடுக்கண்ணுக்கஞ்சாத இயல்புடையவனுமாகிய ஓர் அரசன் மக்களால் ஏமாற்றப்படவேமாட்டான்; தான் சரியான அடிப்படையிலேயே காலூன்றியிருப்பதைக் கண்டு கொள்வான்.

அரசன் தானே நேரடியாக ஆட்சி செய்யாமல். அதிகாரிகளைக் கொண்டு ஆட்சி செய்வது பேராபத்தானது. அதுவும் ஆபத்துக் காலங்களில் இந்த அதிகாரிகள் படு மோசம் செய்து விடுவார்கள். அவனுக்கெதிராகவோ அல்லது அவன் கட்டளைக்குக் கீழ்ப்படியாமலோ அவனை நிலை குலையச் செய்துவிடுவார்கள். குடிமக்களும் இந்த அதிகாரிகளிடமே உத்தரவுகளைப் பெற்றதும் அவர்களுக்கே அடங்கி நடந்தும் பழக்கப்பட்டுப் போய் விடுகிறபடியால் அவர்களையும் அரசன் தனக்கு இடுக்கண் வந்த காலத்தில் நம்ப முடியாது. ஆகவே புத்திசாலியான ஓர் அரசன் எப்போதும் மக்களுக்கு நண்பனாகயிருக்கவே முயல்வான். அவர்களும் அவனுக்கு எந்தக் காலத்திலும் உண்மையாக இருப்பார்கள்.

(குடிதழீஇக் கோலோச்சும் நில மன்னன்
அடிதழீஇ நிற்கும் உலகு.

-திருக்குறள்.)

ராஜ்யங்களின் பலத்தை அளப்பது எப்படி? :

பலமான பாதுகாப்பையுடைய நகரத்தையுடையவனும், மக்களால் வெறுக்கப்படாதவனுமாகிய ஓர் அரசன் எப்போதும் தாக்குதலுக்குள்ளாக மாட்டான்; அப்படியே தாக்கப்பட்டாலும் அவனைத் தாக்கியவன் தான் அவமானப்பட்டுத் திரும்பிப்போக நேரிடும்.

ஜெர்மனியில் உள்ள நகரங்கள் பெருங்கோட்டைகளுடன் மிகப் பாதுகாப்பாக விளங்கின. மக்கள் எந்தச் சமயத்திலும் சக்கரவர்த்தியின் ஆணைக்குக் கீழ்ப்படியத் தயாராய் இருந்தனர். கோட்டைகளுக்குள்ளேயே ஓராண்டு காலத்திற்கு வேண்டிய உணவுப் பொருள்கள் இருப்பு இருந்து கொண்டேயிருக்கும். ஆனால், ஒருவருடம் வரை எந்தப் படையெடுப்பும் நடந்து கொண்டேயிருப்பதென்பது நடக்கக்கூடிய காரியமல்ல.

கோட்டைக்கு வெளியே மக்களின் சொத்துக்கள் இருக்குமானால், தங்கள் பொருள்கள் சொத்துக்கள் எரிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டு மக்கள் சும்மாயிருக்க முடியாது. அவர்கள் பொறுமை எல்லை மீறி விடும். அவர்களுடைய சுயநலம் அரசனைப் பற்றிய எண்ணத்தையே அடியோடு மறக்கடித்து விடும்.

ஆற்றலும் தைரியமும் உள்ள அரசன், பகைவர் செய்யும் தீமைகள், அழிவுகள் நெடுநாளைக்கு நிலைக்காது என்று குடிமக்களுக்குத் தைரியம் சொல்லிக் கொண்டேயிருக்க வேண்டும். உண்மையில் எதிரி எல்லாவற்றையும் எரித்து அழித்துக் கொண்டு வருவானானாலும், மக்கள் தங்களையாவது காப்பாற்றிக் கொள்ள எண்ணியிருப்பார்கள். சிறிது காலத்திற்குப்பிறகு, இந்த விஷயம் ஆறிப்போனபிறகு அவற்றைத் தவிர்க்க எவ்வித வழியும் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டு மக்கள் தங்கள் சொத்துச் சுதந்திரங்கள் எல்லாம் அழிந்துபோய் விட்டபடியால் மீண்டும் தங்களைக் காப்பாற்ற வேண்டியவன் அவனே என்று அவனிடம் வந்து ஒட்டிக்கொள்வார்கள்.

புத்திசாலியான ஓரரசன் தன் நாடு படையெடுப்புக்கு ஆளாகும் ஆரம்பக்கட்டத்திலும், படையெடுப்பு நடக்கும் சமயத்திலும் தன் குடிமக்களின் தைரியத்தை ஒன்று சேர்க்க முனையும் விஷயத்தில் கஷ்டப்படவேண்டியதேயில்லை. அவன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வழியும் உணவுப் பொருள்களும் உடையவனாக இருந்தால் போதுமானது.

மதச் சார்பான அரசுரிமை :

ஒரு மதத்தைக் காரணமாகக் கொண்டு அரசுரிமை அடைவதில் நிறையக் கஷ்டங்கள் இருக்கின்றன. இவ்வாறு அரசுரிமை அடைவதற்குத் திறமையோ அல்லது அதிர்ஷ்டமோ வேண்டும். ஆனால், அதை நடத்துவதற்கு இவற்றில் எதுவும் தேவையில்லை. ஏனெனில் அவை பழைய மத ஆசாரங்களினாலேயே நிலைநிறுத்தப்பட்டு விடுகின்றன. அந்த மத ஆசாரங்கள் மிகுந்த ஆற்றலும், தன்மையும் உடையனவாக இருப்பதால், இப்படிப்பட்ட மத அரசுகளின் அரசர்கள் எப்படிப்பட்ட வாழ்க்கை நடத்தினாலும் என்றும் ஆதிக்கத்தில் நிலை நிற்க முடிகிறது. இந்த மத ராஜ்யங்களின் அரசர்கள் மட்டுமே பாதுகாக்கத் தேவையில்லாத ராஜ்யங்களைப் பெற்றிருக்கிறார்கள்; ஆளப்படவேண்டிய இல்லாத குடிமக்களை அடைந்திருக்கிறார்கள். அவர்களுடைய ராஜ்யங்கள் பாதுகாக்கப் படாதவையாகையினாலே அவர்களிடமிருந்து பறிக்கப்படுவதுமில்லை; அவர்களுடைய குடிமக்கள் ஆளப்படுவதில்லையாகையினாலே, அவர்கள் இந்த அரசர்களிடம் பகைமை பாராட்டுவதுமில்லை. ஆகவே இந்த உலகத்தில் இந்த மத ராஜ்யங்களின் அரசர்கள் மட்டுமே பத்திரமாகவும் பாதுகாப்பாகவும் இன்பமாகவும் ஏற்றமாகவும் இருக்கிறார்கள். இந்த அரசாங்கங்கள் இறைவனாலேயே உயர்த்தப்பட்டும் நடத்தப்பட்டும் வருவதால் இவற்றை ஆராய்பவன் அகம்பாவமும் மூடமதியும் உள்ளவனாகிவிடுவான்.

ஆனால், திருச்சபை (Church) இவ்வளவு பெரிய லௌகிக ஆதிக்கத்தை எப்படியடைந்தது என்று கேட்கலாம். படை பலத்தாலும் பண பலத்தாலும் தான் இந்த அரசு நிலை நிறுத்தப்பட்டது என்பதைச் சரித்திரம் நமக்குத் தெள்ளத் தெளியக் காட்டுகிறபடியால் அதைப் பற்றிப் பேசுவது அதிகப் பிரசங்கித்தனமாகாது என்றே எண்ணுகிறேன். நான்காவது அலெக்சாண்டர் போப்பாவதற்கு முன்னால் போப்பாண்டவர்களின் பாடு திண்டாட்டமாகவே இருந்தது. எதிர்ப்பு சக்திகளை அடக்க முடியாமல் திணறிக் கொண்டிருந்தார்கள். நான்காவது அலெக்சாண்டர்தான் இந்த லௌகிக பதவியைக் காப்பாற்றப் படைபலத்தையும், பண பலத்தையும் உபயோகிக்கலாம் என்று செய்து காட்டினார். அவர் வாலென்டைன் கோமகனைத்தான் உயர்த்தப் பாடுபட்டார் என்றாலும் அது திருச்சபையின் மேம்பாட்டில் வந்து முடிந்தது. பிறகு வந்த போப் ஜூலியால் திருச்சபையின் ஆதிக்கத்தைப் பலவகைகளிலும் பலப்படுத்தினார். புனித போப் பாண்டவர் பத்தாவது லியோ இந்தக் குருபீடத்தை மிகுந்த அதிகாரம் நிறைந்த நிலை பெறச் செய்தார். மற்ற போப் பாண்டவர்கள் படைபலத்தை நாடினார்கள். இவரோ நல்ல குணத்தினாலும் வேறுபல நன்னெறிகளாலும் இந்தக் குருபீடத்தை மேன்மையுடையதாகவும் போற்றத் தகுந்ததாகவும் ஆக்கினார்.

கூலிப்படைகள் :

அரசு முறைகளைப்பற்றி ஆராய்ந்து விட்டோம். இப்போது அவை கையாளக் கூடிய படையெடுப்பு முறைகளைப் பற்றியும் பாதுகாப்பு வழிகளைப்பற்றியும் காண்போம். ஓர் அரசன் தன்னுடைய அடிப்படையைச் சரியாக அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும் இல்லாவிட்டால் அவனுக்கு நிச்சயம் அழிவு வரும் என்றும் நாம் முன்னரே தெரிந்து கொண்டிருக்கிறோம். எல்லா அரசாங்கங்களுக்கும் முக்கியமான அடிப்படைகள் நல்ல நீதிமுறைகளும் நல்ல படையமைப்பும் தாம். நல்ல படையமைப்பைப் பெறாத நாட்டில் நல்ல நீதிமுறை இருக்க முடியாது. நல்ல படையமைப்புள்ள நாட்டில் நல்ல நீதி முறைகள் இருக்கும். இப்போது நாம் படைகளைப் பற்றிப் பேசுவோம்.

ஓர் அரசன் தன் உடைமைகளைப் பாதுகாத்துக் கொள்ள உபயோகிக்கின்ற படைகள் ஒன்று அவனுடைய சொந்தப் படைகளாயிருக்கவேண்டும் அல்லது கூலிப்படைகளாகவோ, உதவிப்படைகளாகவோ அல்லது எல்லாங்கலந்த கலப்புப் படைகளாகவோ இருக்க வேண்டும். கூலிப்படைகளும் உதவிப்படைகளும் பயனற்றவை மட்டுமல்ல ஆபத்தானவையும் கூட கூலிப்படைகளின் துணையை நாடுகிற அரசன் நிச்சயமாகவும் உறுதியாகவும் நிலைத்திருக்க முடியாது.

கூலிப் படைகளிடம் ஒற்றுமையிருப்பதில்லை. பேராசையே நிறைந்திருக்கும். இராணுவ ஒழுங்கு முறையிருக்காது. உண்மை விசுவாசம் இருக்காது. நேசப்படைகள் எதிரில் வீரங்காட்டும்; எதிரிப்படைகள் முன்னிலையில் கோழைத்தனத்தை நிலை நாட்டும். கடவுள் நம்பிக்கையும் இருப்பதில்லை. மனிதர்களுக்கும் நம்பிக்கையாக நடப்பதில்லை. படையெடுப்பை ஒத்திப்போடுகின்ற கால அளவுக்கே அழிவையும் ஒத்திப்போடலாமேயன்றி இவற்றால் ஒருவனுக்கு அழிவே நிச்சயம் உண்டாகும். அமைதிக் காலத்தில் இந்தக் கூலிப்படைகளாலும், போர்க்காலத்தில் எதிரிகளாலும் அரசன் சீரழிக்கப்படுகிறான். இதற்குக் காரணம் என்னவென்றால் அவர்கள் சம்பளத்திற்கு வேலை செய்கிறார்களேயன்றி நாட்டுப்பற்று, ராஜபக்தி ஆகிய வெற்றிக்காகவும் வேலை செய்வதில்லை. அந்தச் சம்பளம் அவர்களைத் தன் அரசனுக்காக உயிரைக் கொடுக்கக் கூடிய தன்மையைக் கொடுத்து விட முடியாது. போர் நடைபெறாதவரையிலே அவர்கள் அரசனிடம் வேலை பார்த்துக் கொண்டிருக்க விரும்புவார்கள். போர்வந்து விட்டாலோ ஓடி விடுவார்கள் அல்லது கலைந்து போய்விடுவார்கள்.

இந்தக் கூலிப்படைகளின் தலைவன் சாமர்த்திய முடையவனாயிருந்தாலும் கெடுதல், இல்லாவிட்டாலும் கெடுதல். அவன் சாமர்த்தியசாலியாயிருந்தால் அரசனையோ அல்லது அரசனுடைய நோக்கத்திற்கு மாறாக மற்றவர்களையோ அடக்கித் தன்னுடைய உயர்வையே நிலைநாட்டிக் கொள்ளவே எப்பொழுதும் முற்படுவான். சாமர்த்தியமில்லாதவனால் ஏற்படக் கூடிய தீமைகளைப் பற்றிச் சொல்லவே தேவையில்லை. இந்தத் தீமைகளைத் தவிர்ப்பதற்கு நான் சொல்லக் கூடிய யோசனை என்னவென்றால், படை நடத்திச் செல்வதற்கு அரசனே நேரிற் போகவேண்டும். குடியரசாயிருந்தால், அந்தக் குடியரசு தன் சொந்தக் குடிமக்களையே நேரில் அனுப்ப வேண்டும். இப்படித் தாமே நேரில் சென்று, நடத்துகின்ற படைகளினால் தான் எந்த அரசாங்கமும் பெரிய முன்னேற்றத்தைக் காணமுடியும். கூலிப்படைகளால் கெடுதலைத் தவிர வேறு காணமுடியாது.

உதவிப் படைகள் :

ஓர் அரசன் தன் அருகாமையிலுள்ள ஒரு வல்லமை மிக்க அரசனைப் படைகளுடன் வந்து தன் நாட்டைக் காக்கும்படி கேட்டுக் கொண்டால், அப்படி வரும் படைகளுக்கு உதவிப்படைகள் என்று பெயர். இந்த உதவிப்படைகள் கூலிப் படைகளைப் போலவே பயனற்றவை. இந்தப் படைகள் தங்களைப் பொறுத்தவரையில் நல்லவையே. ஆனால், அவற்றின் உதவியை நாடுகிறவனுக்கு எப்போதும் ஆபத்தானவை. போரில் அவை பின் வாங்கினால், உதவி பெற்றபின் தோற்க நேரிடும்; போரில் அவை வெற்றி பெற்றாலோ, உதவி பெற்றவன் அவற்றிடம் சிறைப்பட்டுவிட நேரிடும்.

ஆகவே எந்த வகையிலும் தான் வெற்றியடைய வேண்டாமென்று நினைக்கக்கூடியவர் தான் இந்தப்படைகளின் உதவியை நாடவேண்டும். இந்தப்படைகள் கூலிப்படைகளைக் காட்டிலும் கொடுமையான ஆபத்துடையவை. இவை என்றும் ஒன்று சேர்ந்து ஒரே தன்மையில் இயங்கக்கூடிய படைகள் ஆகையால், இவற்றிடம் அகப்பட்டுக் கொண்டவனுக்கு அழிவு நிச்சயம். கூலிப்படைகளோ ஒன்றாகச் சேர்ந்தேயிருப்பது இல்லை. அதுவும் தவிர, அந்த அரசனிடம் சம்பளம் வாங்குவதால், அவனுக்கு எதிராக ஒன்று கூடுவதில்லை. ஆகவே, மூன்றாவது. ஆளொருவன் கூலிப்படைகளின் துணையால் அவற்றின் உதவியைப் பெற்ற அரசனுக்குக் கேடு செய்ய முயல்வது என்பது சாதாரணமாக நடக்கக் கூடிய காரியமல்ல. ஒரே வார்த்தையில் விளக்கமாகச் சொன்னால் கூலிப்படைகளால் ஏற்படக்கூடிய பேராபத்து அவற்றின் கோழைத்தனத்தினால் ஏற்படுகிறது. ஆனால், இந்த உதவிப் படைகளால் ஏற்படக்கூடிய பேராபத்தோ அவற்றின் தைரியத்திலேயே இருக்கிறது.

மொத்தத்தில் தன் சொந்தப்படைகளின் உதவியால்தான் ஒரு மன்னன் பாதுகாப்பாக இருக்கலாம் என்று முடிவாகச் சொல்வேன். இல்லாவிட்டால் இடுக்கண் வருங்காலத்தில் அவன் நம்பியிருப்பதற்கு எந்தவிதமான ஏதுவுமில்லாததால் அவன் விதியை நம்பியிருப்பது தவிர வேறு வழியில்லை. தன் குடிமக்களையும் தன்னைச் சார்ந்தவர்களையும் கொண்ட சொந்தப்படைதான் ஓர் அரசனுக்கு என்றும் உதவியாயிருக்கும் மற்றவற்றால் என்றும் நன்மையில்லை.

அரசன் கடமை - போர்ப் பயிற்சி :

ஓர் அரசன் போரைப் பற்றியும், அதற்கு வேண்டிய படையமைப்பைப் பற்றியும், அந்த அமைப்பின் ஒழுங்கைப் பற்றியும் தவிர வேறு எதையும் குறிக்கோளாகக் கொள்ளவோ, நினைக்கவோ கூடாது. வேறு எதையும் தன் ஆராய்ச்சிக்குரிய பொருள்களாகக் கொள்ளக்கூடாது. ஏனெனில் ஆதிக்கஞ்செலுத்தக்கூடிய ஒருவனுக்குத் தேவையான கலை போர் ஒன்றுதான்! அரசரால் பிறந்தவர்களை அந்தத் தகுதியில் நிறுத்தி வைக்கக்கூடிய அறநெறியாக மட்டுமல்லாமல், தனிப்பட்ட மனிதர்களையும் அந்தத் தகுதியுடையவர்களாகச் செய்யக்கூடிய கலை போர் ஒன்றே!

படையெடுப்பைக் காட்டிலும் இன்பக் கேளிக்கைகளைப் பற்றியே அதிகமாக எண்ணக்கூடிய அரசர்கள் வெகு சீக்கிரத்தில் தங்கள் ராஜ்யத்தை இழந்து விடுவார்கள்.

ஆயுதந்தரித்த மனிதனுக்கும் ஆயுதமற்ற மனிதனுக்கும் இடையிலே ஒப்புமை காட்டக்கூடிய விஷயம் ஒன்றுமேயில்லை. ஆயுதபாணியான ஒருவன் ஆயுதமற்ற ஒருவனுக்கு மனதாரக் கீழ்ப்படிந்து நடப்பான் என்று எதிர்பார்ப்பதில் அர்த்தமே இல்லை. ஆயுதமற்ற ஒருவன் ஆயுதபாணிகள் இடையில் பத்திரமாக இருப்பான் என்று எதிர்பார்ப்பதிலும் அர்த்தமேயில்லை. ஏற்கனவே சொல்லப்பட்ட பல குறைபாடுகளோடு. இராணுவ அறிவும் இல்லாத அரசன் தன் படை வீரர்களால் மதிக்கப்படவும் மாட்டான்; அவர்களிடம் அவன் நம்பிக்கை வைத்திருக்கவும் முடியாது!

ஆகவே, எந்த அரசனும் என்றும் போர்ப் பழக்கத்தைத் தவிர வேறு எதிலும் நாட்டங் கொள்ளவே கூடாது. சமாதான காலத்திலும் கூட அவன் தன் போர்ப்பயிற்சியை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். செயல் மூலமாகவும், படிப்பின் மூலமாகவும் இதை அதிகப்படுத்திக் கொள்ளலாம். செயல் மூலமாகத் தன் பயிற்சியை நடத்துவதற்கு அவன் தன் படை வீரர்களைத் தினமும் பயிற்சிபெறச் செய்தும், ஒழுங்கு முறையுடன் இருக்கச் செய்தும் வருவதோடு அடிக்கடி வேட்டைக்குச் சென்று தன் உடலைக் சுடின உழைப்பிலே பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும். வேட்டைக்குச் செல்வதால் அவன் நாட்டையும், நாட்டில் உள்ள காடு மலைகளின் அமைப்பையும் பற்றிய அறிவைப் பெறுகிறான். இவ்வாறு ஒரு நாட்டுப் புறத்தின் அமைப்பைப்பற்றிய இயற்கையறிவையறிந்த ஒருவன் புதிதாகக் காணக்கூடிய வேறொரு நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றி எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். நாட்டின் இயற்கையமைப்பைப் பற்றிய அறிவு நிரம்பிய அரசன்தான் எதிரியை எவ்வாறு கண்டு பிடிப்பது. எவ்வாறு களம் அமைப்பது, எவ்வாறு படை நடத்துவது, எவ்வாறு போர்த்திட்டம் வகுப்பது, எவ்வாறு கோட்டை பிடிப்பது என்பன போன்ற விஷயங்களை நன்றாகத் தெரிந்து செயலாற்றுவான்.

ஓர் அரசன் தன் மனப்பயிற்சியை வளர்த்துக் கொள்வதற்கு சரித்திரமும் படிக்க வேண்டும். முற்காலத்துப் பெரும் வீரர்களின் செயல்களைப் பற்றியும், அவர்கள் போர்களில் நடந்து கொண்ட முறைகளைப் பற்றியும் அவர்களின் வெற்றி தோல்விகளைப் பற்றியும் ஆராய்ச்சி செய்து வெற்றி வீரர்களின் நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

கீர்த்தியும் புகழும் வாய்ந்தவர்களுடைய அருஞ்செயல்களைப் பற்றிப் படித்துச் சமாதான காலத்தைப் பயனுள்ளதாகக் கழிக்க வேண்டும். அந்த அறிவைப் பயன்படுத்திக் காலம் மாறுகின்ற பொழுது எதிரிகளைத் தாக்குவதற்கும், அவர்களிடமிருந்து தன் ராஜ்யத்தைக் காப்பாற்றுவதற்கும். இடுக்கண்களை அடுக்காக தடுப்பதற்கும் ஆயத்தமாயிருக்க வேண்டும்.

கூற்றுடன்று மேல்வரினும் கூடி எதிர்நிற்கும்
ஆற்ற லதுவே படை.


புகழும் இகழும் :

ஓர் அரசன் நல்ல குணங்கள் எல்லாவற்றையும் உடையவனாயிருப்பது போற்றுதலுக்குரியதே. ஆனால், மனித இயற்கை அவை எல்லாவற்றையும் கடைப்பிடிக்க அனுமதிப்பதில்லை. ஆனால் முன்யோசனையுள்ள அரசன் தன்மீது எவ்விதமான பழிச் சொல்லும் ஏற்படாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தேவைக்குத் தகுந்தபடி நல்லவனாகவும் கெட்டவனாகவும் நடந்து கொள்ளவும் அவன் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

தாராள மனப்பான்மையும் கருமித்தனமும் :

தாராள மனப்பான்மை பற்றி உலகம் கொண்டிருக்கிற உத்தமமான முறையில் அறவழியில் கையாண்டால் அதுவெளியில் தெரியப்போவதுமில்லை; மேற்கொண்டு அதனால் அவமானமும் மாறுபட்ட பயனும்கூடக் கிடைக்கும். ஓர் அரசன் தான் தாராளமானவன் தருமவான் என்று பெயர் எடுக்க விரும்பினால் அதற்கு நிறையப் பொன்னும் பொருளும் வேண்டும். இந்தப் பொன்னையும் பொருளையும் பெறுவதற்கு அவன் வரி விதிக்க வேண்டிவரும். வரிப்பளுவைத் தாங்க முடியாத மக்கள் அவன் உதாரகுணத்தைப் புகழ்வதற்குப் பதிலாக வரிக் கொடுமைக்காகப் பழி தூற்றிப் பேசுவார்கள். பலரின் மனம் நோவச் சிலருக்குத் தான் கொடை கொடுப்பதைவிட அவன் கருமியாக இருப்பதே மேலானது.

கொடுங்கோலன் என்று பெயர் எடுப்பதைக் காட்டிலும் ஈயாத லோபி என்று பெயரெடுப்பதைப் பற்றிப் புத்தியுள்ள எந்த அரசனும் வருத்தப்படமாட்டான். தன் மக்களைச் சுரண்டாமலும் தான் ஏழ்மையடையாமலும், கொள்ளைக்காரனாகப் பிரியப்படாமலும் இருக்கும் அரசன் தான் ஒரு கருமி என்று பெயர் எடுப்பதைப் பற்றிக் கவலைப்பட மாட்டான்.

சில அரசர்கள் தங்கள் படைவீரர்களிடம் மிகத் தாராளமாக நடந்து கொண்டு பெரும் பெரும் காரியங்களைச் சாதித்திருக்கிறார்கள் என்று சொல்லலாம். அரசன் தன் கைப்பணத்தைச் செலவழிப்பதாயிருந்தாலும் தன் குடிமக்களின் பணத்தைச் செலவழிப்பதாயிருந்தாலும் தான் கேடுண்டாகும். ஆனால், பிறருடைய பணத்தைத் தாராளமாகச் செலவிடுவதிலே எவ்விதமான நஷ்டமோ அல்லது கஷ்டமோ அவன் அடையப்போவதில்லை. தன் படைகளுடன் எப்பொழுதும், கொள்ளையடிப்பதும், ஆட்களைப் பிடிப்பதும், அவர்களிடம் மீட்புத் தொகை கேட்பதும் இப்படியாகத் தன் வாழ்வை நடத்துகிற அரசனுக்குத் தாராள மனப்பான்மை மிகமிக அவசியமானது. அந்த மனப்பான்மையில்லையானால், படை வீரர்கள் அவனைத் தொடர்ந்து திரிய மாட்டார்கள். தன் பணமும் இல்லை, தன் குடிமக்களின் பணமும் இல்லை ...... யாரோ பகைவர்களுடைய பணம் தன் தாராளத்திற்குப் பயன்படுகிறதென்றால், யாராயிருந்தாலும் மிகத் தாராளமாகத்தான் இருப்பார்கள்.

வெறுப்பையும் பழிப்பையும் உண்டாக்கக் கூடிய கொள்ளைக்காரன் என்ற பெயரை அடைவதைவிட வெறுப்பு இல்லாத பழிப்பை மட்டும் பெறக்கூடிய கருமி என்ற பெயரைப் பெறுவது வரவேற்கத் தக்கதாகும்; அதுவே புத்திசாலித்தனமுமாகும்.

கொடுந்தன்மை :

ஒவ்வோர் அரசனும் தான் கொடுந்தன்மையுடையவனாக மதிக்கப்படுவதைவிட அருளுடையவனாக நினைக்கப்படுவதையே விரும்ப வேண்டும். ஆனால், அவனுடைய அருளுடைமையைத் தவறான முறையில் பயன்படுத்தாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

தன் குடிமக்களை உண்மையுள்ளவர்களாகவும் ஒற்றுமையுள்ளவர்களாகவும் இருக்கச் செய்வதற்காக ஓர் அரசன் கொடியவன் என்று குற்றஞ்சாட்டப்படுவதைப் பற்றிக் கவலைப் பட வேண்டியதில்லை. கொடியவன் என்று பெயர் எடுக்கக் கூடியவன் உண்மையில் இளகிய உள்ளம் படைத்தவர்களைக் காட்டிலும் கருணையுள்ளவன் என்று மெய்ப்பித்துக்காட்டலாம். எவ்வாறெனில் இளகிய உள்ளம் படைத்தவர்களின் கருணைக் குணத்தினால், நாட்டிலே ஒழுங்கின்மையும் குழப்பங்களும் ஏற்பட்டு அதனால், பலர் இரத்தஞ் சிந்த வேண்டிய கட்டங்கள் ஏற்படக் கூடும். இதனால், சமூகம் முழுவதுமே துயர்ப்படுவதைக் காட்டிலும், குறிப்பிட்ட தனிப்பட்ட மனிதர்களுக்கு மட்டும் மரண தண்டனை விதிக்கக் கூடிய அரசன் கருணையுள்ளவன் என்று தானே குறிப்பிடப்பட வேண்டும். எல்லா அரசர்களிலும் புதிதாக அரசரானவர்கள் கொடியவர் என்ற குற்றச்சாட்டுக்குத் தப்புவது அரிது. ஏனெனில், புதிய ராஜ்யங்களில் இயற்கையாகவே எப்பொழுதும் ஆபத்துக்கள் நிறைந்திருக்கும்.

ஓர் அரசன் நம்பிக்கை வைப்பதிலும், செயலாற்றுவதிலும் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதற்காக அவன் தன் நிழலையே கண்டு பயப்பட்டு விடவும் கூடாது. அதிகமாக நம்பிக்கை வைத்து எச்சரிக்கையாக இல்லாமல் போய்விடவும் கூடாது. அதிகமாகச் சந்தேகப்பட்டுத் திறமையற்றவனாகிவிடவும் கூடாது.

அரசன் அன்பிற்குரியவனாக இருக்க வேண்டுமா அஞ்சுதலுக்குரியவனாக வேண்டுமா என்று கேட்டால், அஞ்சப்படவும் வேண்டும் அன்பு செய்யப்படவும் வேண்டும் என்று தான் பதிலளிக்க வேண்டும். ஆனால், இரண்டு நிலைமைகளையும் ஒருங்கே அடைவது முடியாதே; இவற்றில் ஒன்றைத்தானே அடைய முடியும் என்று கேட்டால், அன்பிற்காளாவதை விட அச்சத்திற்காளாவதே மிக்க பாதுகாப்பானாது என்று கூறுவேன்.

(தங்களை அன்பு காட்டச் செய்கின்றவனுக்குக் குற்றமிழைப்பதைக் காட்டிலும் அச்சமுறச் செய்கின்றவனுக்குக் குறைவாகவே குற்றமிழைப்பது மனிதர் இயல்பு.) காரணம் என்னவென்றால்; அன்பு மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழுவது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகின்றவரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் அறுந்து போகும். ஆனால் தண்டனைக்குப் பயப்படுவதால் ஏற்படக் கூடியதாக இருப்பதால், எப்பொழுதும் அவர்கள் உள்ளத்தை விட்டுப் போகாமல் நிலைத்து நிற்கும்.

தான் மக்கள் அன்பைப் பெறாவிட்டாலும் அவர்கள் வெறுப்பதைத் தவிர்க்கக் கூடிய வகையிலே ஓர் அரசன் தனக்கு அவர்கள் அஞ்சும்படி செய்துகொள்ள வேண்டும். அரசன் ஒருவனுடைய உயிரை எடுத்துவிட வேண்டுமென்று எண்ணினால், அதற்குத் தகுந்த காரணமும் நியாயமும் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்குமானால் அவன் உடனே குறிப்பிட்ட அந்த மனிதனுடைய உயிரைப் பறித்துவிடலாம். ஆனால், எக்காரணத்தைக் கொண்டும் பிறருடைய சொத்துக்களை மட்டும் எடுத்துக்கொள்ளவோ பறித்துக்கொள்ளவோ கூடாது. ஏனெனில் தங்கள் தந்தை. இறந்ததை எளிதாக மறந்துவிடுவது மக்கள் இயல்பு, ஆனால் தங்கள் பிதிரார்ஜித சொத்தை இழப்பதை மட்டும் அவர்கள் மறக்கவும் மாட்டார்கள்; பொறுக்கவும் மாட்டார்கள்!

தன் ஆதிக்கத்தில் ஏராளமான போர்வீரர்கள் அடங்கிய படையை வைத்து நடத்துகின்ற ஓர் அரசன் தான் கொடியவனாக எண்ணப்படுவதைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல் இருக்க வேண்டியது பெரிதும் அவசியமாகும். இந்தப் பெயரெடுக்காத அரசன் ஒரு படையை ஒற்றுமையாகவோ அல்லது எந்தக் கடமையையும் சரிவரச் செய்யக் கூடியதாகவோ வைத்திருப்பது முடியாத காரியம்.

மனிதர்கள் தங்கள் சொந்த விருப்பத்தின் பேரில் அரசனை நேசிக்கிறார்கள். ஆனால் அரசனுடைய விருப்பத்தின் பேரில் அவனுக்கு அஞ்சுகிறார்கள். புத்திசாலியான ஓர் அரசன் தன் வசம் இருக்கக் கூடிய ஒன்றைத்தான் நம்பியிருக்க வேண்டுமேயொழிய, பிறர் வசம் இருக்கக் கூடிய ஒன்றை நம்பியிருக்கக் கூடாது. ஆகவே அன்பு செய்யப்படுவதைக் காட்டிலும் அச்சப்படச் செய்வது விரும்பத்தக்கது.

அரசன் எப்படி உண்மையைக் காப்பாற்ற வேண்டும்?

(போரிடுவதில் இரண்டு முறைகள் உண்டு. ஒன்று அற வழியில் நின்று போரிடுவது. மற்றொன்று பலத்தைக் கொண்டு மட்டுமே போரிடுவது. முதல் வழி மனிதர்களுடையது. இரண்டாவது வழி மிருகங்களுடையது) முதல் வழி போதுமானதாக இல்லாததால் இரண்டாவது வழியிலும் செல்ல வேண்டியதாயிருக்கிறது. ஆகவே ஓர் அரசன் இரண்டு முறைகளையும் கையாளத் தெரிந்து வைத்திருக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

(மிருகங்களைப் போல் நடந்துகொள்ள விரும்புகிற அரசன் குள்ள நரியையும் சிங்கத்தையும் பின்பற்ற வேண்டும். சிங்கத்திற்கு வலைகளிலிருந்து தப்பிக்கத் தெரியாது. குள்ள நரிக்கு ஓநாய்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ளத் தெரியாது. ஆகவே ஓர் அரசன் சதி, சூழ்ச்சி ஆகிய வலைகளை அறிந்து கொள்ளும் குள்ள நரியாகவும், ஓநாய்களை அச்சுறுத்தும் சிங்கமாகவும் இருக்க வேண்டும்).

உண்மையாக அல்லது நேர்மையாக நடந்துகொள்ளக் கூடிய அரசன் தன் நன்மைக்கே கேடு விளைவித்துக் கொள்பவனாகிறான். மனிதர்கள் எல்லோரும் நல்லவர்களாய் இருந்துவிட்டால், இந்த வார்த்தை தவறானதாக இருக்கலாம். ஆனால் அவர்கள் தீயவர்களாக இருப்பதனாலும், தாங்கள் பிறரிடம் நேர்மையைக் கடைப்பிடிக்காதவர்களாக இருப்பதனாலும், அவர்களிடத்தில் உண்மையாயிருக்க வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. இதற்குச் சான்றாக, குள்ளநரிச் செயல் புரிந்தவர்களின் கூட்டமே மிகச் சிறந்த வெற்றியை அடைந்திருக்கிறார்கள் என்பதை மெய்ப்பிக்க வரலாற்றிலிருந்து எத்தனையோ எடுத்துக்காட்டுகளைக் காட்ட முடியும்.

புதிதாக அரசனான ஒருவன் தன் ராஜ்யத்தைக் காப்பாற்ற உண்மைக்கு மாறாகவும், தயாள குணமில்லாமலும், மனிதத் தன்மைக்கு விரோதமாகவும், மதத் துரோகமாகவும் கூட நடந்துகொள்ள வேண்டி நேரிடும். அவன் இதைப்பற்றியெல்லாம் கவலைப்பட முடியாது (காற்றடிக்கிற திசையில் வளைந்து கொடுத்துத் தன் காரியத்தை முடித்துக்கொள்ள வேண்டும்)

எந்த அரசனும் தான் எவ்வளவு நியாய விரோதமாக நடந்துகொண்டாலும், அருளும், உண்மையும், நேர்மையும், மனிதத் தன்மையும் மனிதாபிமானமும் உடையவன் போலக் காட்டிக்கொள்ள வேண்டும். ஏனெனில் பெரும்பாலான மனிதர்கள் தங்கள் கண்களால் ஒன்றை மதிப்பிடுவார்களே தவிரக் கையினால் மதிப்பிடுபவர்களாக இல்லை. எல்லோராலும் ஒன்றைக் காண முடியும். ஒரு சிலரால் தான் உணர முடியும்! ஒருவன் தோற்றத்தைக் கொண்டே ஒவ்வொருவரும் அவனை மதிப்பிடுகிறார்கள். மிகச் சிறுபான்மையினர்தாம் அவன் உண்மையில் எப்படிப்பட்டவன் என்பதை அறிந்து கொள்கிறார்கள்.

தற்காலத்தில் ஓர் அரசர், (அவர் பெயரைக் குறிப்பிட நான் விரும்பவில்லை) நேர்மையையும், சமாதானத்தையும் பற்றிப் பஜனை செய்வதைத் தவிர வேறு எதுவும் செய்வதில்லை. ஆனால் உண்மையில் இவை இரண்டுக்கும் நேர் எதிரி-பெரும்பகைவர் அவர். அவர் மட்டும் இந்த இரண்டில் ஒன்றைக் கையாளுபவராக இருந்தாலும் எந்தெந்தச் சந்தர்ப்பத்திலோ தன் ராஜ்யத்தையோ அல்லது தன் கீர்த்தியையோ இழக்க வேண்டி நேர்ந்திருக்கும்!

(பொய்மையும் வாய்மை யிடத்து புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்.

-திருக்குறள்)

வெறுக்கப்படுவதையும் பழிக்கப்படுவதையும் விலக்கிக்கொள்ள வேண்டும்:

ஓர் அரசன் தன்னை வெறுக்கும்படியும் பழிக்கும்படியுமான காரியங்களை விலக்கிக் கொள்வதில் வெற்றி பெற்றுவிட்டால், வேறு எவ்விதமான தீமையும் அவனுக்குக் கேடு செய்ய முடியாது. கொள்ளைக்காரனாகவும் தன் குடி மக்களுடைய சொத்துக்களையும் பெண்களையும் சூரையாடுபவனாகவும் இருக்கக் கூடிய அரசன்தான் வெறுக்கப்படுவான். அவன் அவ்வாறு செய்யாவிட்டால் மக்கள் மனத் திருப்தியோடிருப்பார்கள். அவன் ஒரு சிலருடைய பேராசையை மட்டுமே எதிர்த்துப் போராட வேண்டியிருக்கும். அவர்களை எத்தனையோ வகைகளில் தீர்த்துக் கொள்ளலாம்.

ஓர் அரசன் தீர்மானமில்லாதவனாகவும், அடிக்கடி மாறக் கூடியவனாகவும், அற்ப குணமுடையவனாகவும், கோழைத்தனமும் அச்சமும் உடையவனாகவும் இருந்தால் அவன் நிச்சயம் நிந்தனைக்காளாவான். அவனுடைய செயல்களில் பெருந்தன்மையும், ஊக்கமும், கவர்ச்சியும், ஆண்மையும் இருக்கவேண்டும். அவனுடைய குடிமக்களின் அரசாங்கத்தில் அவனுடைய வார்த்தைக்கு மறுப்பு இருக்கக் கூடாது. அவன் தன் முடிவுகளைக் கடைசிவரை உறுதியாகக் கொள்ள வேண்டும். அவனை ஏமாற்றி விடலாமென்றோ அல்லது மோசம் செய்துவிடலாம் என்றோ யாருக்கும் எண்ணந் தோன்றும்படி உறுதியற்றவனாய் இருக்கக் கூடாது.

தன்னைப் பற்றி ஒரு நல்லெண்ணத்தை உண்டாக்குகிற அரசன் பெருங்கீர்த்தியடைகிறான். பெருங் கீர்த்தியுள்ள அரசன் தன் குடிமக்களால் போற்றப்படுவான். ஆகையால் அவனுக்கு எதிராக சதி செய்வதும், சண்டை புரிவதும் எளிய காரியமல்ல. ஓர் அரசனுக்கு இருக்கக்கூடிய பயமெல்லாம் இரண்டே வகையானவை தாம். ஒன்று தன் குடிமக்களிடையே தனக்கெதிராகச் சதி செய்யப்படுவது; மற்றொன்று, அயலரசர்களால் தாக்கப்படுவது. நல்ல படையமைப்பையும் நல்ல நண்பர்களையும் உடைய அரசன் வெளித்தாக்குதலுக்கு அஞ்சத் தேவையில்லை. சூழ்ச்சிகள் தவிர்க்கப்படுவதற்குச் சரியான வழி மக்கள் கூட்டத்தால் தான் வெறுக்கப்படாமல் செய்வதேயாகும்.

சாதாரணமாகச் சதியில் இறங்குபவன் எவனும் என்ன நினைப்பானென்றால், அரசனைக் கொன்றுவிட்டால் தான் மக்களைத் திருப்தியடையச் செய்துவிடலாம் என்றுதான்! ஆனால் அதே காரியத்தைத் தான் செய்தால், மக்களுக்கு குற்றம் செய்வதாக இருக்குமானால், எவனும் சதி செய்யப் பயப்படுவான்.

சதி செய்கிறவன் மனதில் அச்சமும், சந்தேகமும், பொறாமையும், எப்பொழுதும் குறுகுறுக்கச் செய்து கொண்டிருக்கும். தண்டனை பற்றிய பயமுமே குடி கொண்டிருக்கும். அரசனிடத்திலோ, மிகப் பெரிய அரசாங்கமும், நீதி முறைகளும், நண்பர்களின் பாதுகாப்பும், ராஜ்ய பாதுகாப்பும் எல்லாம் இருக்கின்றன. இத்துடன் மக்களின் நல்லெண்ணமும் சேர்ந்துவிட்டால் எவருக்கும் சதி செய்ய வேண்டுமென்ற எண்ணமே தோன்ற மார்க்கமில்லை. சதி செய்பவன் ராஜவிசுவாசமுள்ள மக்களையும் தன் எதிரிகளாக மதிக்க வேண்டிய நிலை இருப்பதால், சதி கண்டு பிடிக்கப்பட்டுத் தண்டனையடையும் சமயத்தில், புகலடையும் இடமில்லாமல் முடிவை ஏற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆகையால் சதியைப் பற்றி நினைக்கவேமாட்டான்.

மக்கள் ஒழுங்காக வாழ்க்கை நடத்தும் காலத்தில் எந்தவிதமான சதியைப் பற்றியும் அரசன் கவலைப்பட வேண்டியதேயில்லை. ஆனால் மக்கள் அரசனை எதிரியாக நினைத்து வெறுக்கும்படியான நிலையிருக்குமானால், அவன் ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும் பயந்து கொண்டேயிருக்க வேண்டும். நல்ல நிலையில் உள்ள ராஜ்யங்களும், புத்திசாலியான அரசர்களும் ஆறுதலற்ற நிலைக்குப் பிரபுக்களை அடித்தோட்டிவிடாமலும், மக்களை மன நிறைவோடு வைத்திருக்கவும் மிகவும் கவனமாக முயற்சி எடுத்துக் கொள்வதுண்டு. ஏனெனில் ஓர் அரசன் கண்காணிக்க வேண்டிய மிகவும் முக்கியமான விஷயங்களிலே இதுவும் ஒன்று.

கோட்டைகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும்!

தங்கள் உடைமைகளைப் பத்திரமாய்க் காப்பாற்றிக் கொள்வதற்காகச் சில அரசர்கள் தங்கள் குடி படைகளை நிராயுத பாணிகளாக்கியிருக்கிறார்கள். சிலர் குடிமக்களின் நிலங்களை பல பகுதிகளாகப் பிரித்து வைத்திருக்கிறார்கள். வேறு சிலர் மக்களுக்குள்ளேயே பகைமைகளை வளர்த்து விட்டிருக்கிறார்கள். சிலர் தங்கள் ஆட்சியின் தொடக்க காலத்தில் சந்தேகத்திற்குரியவர்களாயிருந்தவர்களைத் தங்கள் வசப்படுத்த முயன்றிருக்கிறார்கள். சிலர் கோட்டைகளை எழுப்பியிருக்கிறார்கள். வேறு சிலர் அவற்றையிடித்துத் தரைமட்டமாக்கியிருக்கிறார்கள். இந்த விஷயங்களைப் பற்றி ஆராயுமுன் அந்தந்த அரசின் நிலைமைகளைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டால் தான் சரியான முடிவு சொல்ல முடியும். இருந்தாலும் கூடுமானவரை பொதுப்படையாகப் பேசலாம்.

ஒரு புதிய அரசன் தன் குடி படைகளை நிராயுதபாணியாக்கியதே கிடையாது. அவன் அவர்களை ஆயுதபாணியாக்குவதன் மூலம் அவர்களைத் தன் வைரிகளாக்குகிறான். சந்தேகத்திற்குரியவர்கள் இந்தச் செயலினால் நம்பிக்கைக்குரியவர்களாக மாறுகிறார்கள். நம்பிக்கைக்குரியவர்களோ, அதே நிலையில் இருக்கிறார்கள். ஒருவன் தன் குடிமக்கள் எல்லோரையும் ஆயுதபாணிகளாக்க முடியாது. சிலரையே ஆயுதபாணிகளாக்க முடியும். இவ்வாறு செய்வதால் மற்றவர்களுடன் மிகவும் பாதுகாப்பாகத் தொடர்பு கொள்ளலாம்.

ஓர் அரசன் தன் குடிமக்களை நிராயுத பாணிகளாக்கினால் அவர்களிடம் தன் உறுதியின்மையாலோ அல்லது கோழைத்தனத்தினாலோ அவர்களிடம் தன் நம்பிக்கையின்மையைக் காட்டிக் கொண்டவனாகிறான். இதனால் அவர்கள் வெறுப்புக்காளாகிறான்.

ஆயுதபாணிகள் இல்லாமல் ஓர் அரசன் ஒரு நாட்டை ஆள முடியாதாகையால், கூலிப் படைகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அவற்றின் தன்மையை நாம் முன்னே அறிவோம். அந்தக் கூலிப்படைகள் நல்லவையாக இருந்தால் கூட ஆற்றல் மிகுந்த பகைவர்களிடமிருந்தும் சந்தேகப்படக் கூடிய குடிகளிடமிருந்தும் அரசனைக் காப்பாற்ற முடியாது. ஆகவே, புதிய அரசிலுள்ள எந்தப் புதிய அரசனும் தன் குடிபடைகளை எப்பொழுதும் ஆயுதபாணிகளாக வைத்திருக்கவே செய்வான்.

ஆனால், ஏற்கனவே ஒரு பழைய ராஜ்யத்தையுடைய அரசன் ஒரு புதிய ராஜ்யத்தை ஆக்கிரமித்துக் கொண்டால், அந்த மக்களை நிராயுதபாணிகளாக்கிவிடுவான். அந்த மக்களின் ஆயுதங்கள் அனைத்தையும் தன் சொந்தப் படைகளின் உடைமையாக்கி விடுவது நல்லது.

சில அரசர்கள் எதிர்ப்பிலேயே உயர்ந்து ஓங்குகிறார்கள். அதற்காக அவர்கள், பகைவர்களை உண்டாக்கிக் கொண்டு போராடிப் பல வெற்றிகள் பெற்றுப் பெரும் கீர்த்தியடைவதுண்டு.

அரசர்கள், அதிலும் புதிதாக அரசரானவர்கள், ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த காலத்தில் தங்கள் நம்பிக்கைக்குரியவர்களாய் இருந்தவர்களைக் காட்டிலும் சந்தேகத்திற்கு உரியவர்களாய் இருந்தவர்கள் மிக உண்மையும் பயனும் உடையவர்களாய் இருந்திருப்பதைக் கண்டிருக்கிறார்கள்.

சில குடிமக்கள் தங்கள் ராஜ்ய ஆட்சி பிடிக்காமல் இரகசியமாக வேறோர் அரசனைக் கூட்டிவந்து தங்கள் நாட்டரசனாய் ஆக்குவதுண்டு. இப்படி அரசரானவர்கள் நெடு நாள் நிலைத்திருக்கமாட்டார்கள். ஏனெனில், தங்கள் நிலைமையில் திருப்தி காணாதவர்களைத் திருப்திப்படுத்துவதென்பது இயலாத காரியம். தங்கள் நிலைமையில் திருப்தியடையக் கூடியவர்களை முதலில் பகைவர்களாய்ப் பெற்றாலும் கூடப் பிறகு நண்பர்களாக்கிக் கொள்வது எளிது.

சில மன்னர்கள் தங்கள் ராஜ்யங்களைப் பத்திரமாகக் காப்பாற்றுவதற்காகவும் பகைவர்களைத் தடுத்து நிறுத்துவதற்காகவும் திடீர்த் தாக்குதலுக்குத் தற்காத்துக் கொள்ளவும் கோட்டைகளைக் கட்டிக் கொள்வதுண்டு. இது பழைய முறை என்பதற்காக வேண்டுமானால் ஏற்றுக் கொள்ளலாம்.

கோட்டைகள் காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தாற்போல் பயனுள்ளவையாகவும் பயனற்றவையாகவும் இருக்கலாம். சுருக்கமாக இப்படிச் சொல்லலாம். அன்னியரைக் காட்டிலும் தன் மக்களுக்கு அதிகமாகப் பயப்படுகிற அரசனுக்குக் கோட்டைகள் இன்றியமையாதவை. ஆனால் தன் மக்களைக் காட்டிலும் அன்னியருக்கு அதிகமாகப் பயப்படுகிறவனுக்குக் கோட்டைகள் அவசியமில்லை.

உண்மையான-மிகச் சிறந்த கோட்டை மக்களின் அன்பின் அடிப்படையில் எழுப்பப்படுவதேயாகும். ஏனென்றால் எத்தனை கற்கோட்டைகள் வைத்திருந்தாலும் மக்கள் வெறுப்புக்காளான அரசனை அவை காப்பாற்ற முடியாது.

கீர்த்தியடைய வழி :

செயற்கருஞ்செயல்களையும், தன் பராக்கிரமத்தைக் காட்டிக் கொள்வதும் போல, அரசனை மதிப்படையச் செய்வது வேறில்லை. நிர்வாகத்திலும் உயரிய தன்மையை வெளிப்படுத்தக் கூடிய செயல்கள் சிலவற்றைச் செய்வது அவனுக்குப் பெரிதும் பயனளிக்கும். யாராவது ஒருவர் ஏதாவது ஒரு அசாதாரணமான காரியத்தைச் செய்தால், அப்பொழுது அவற்றின் நன்மை தீமைக்குத் தகுந்தபடி பாராட்டி வெகுமதியளித்தலும் அல்லது தண்டித்தலும் வேண்டும். இச்செயல்கள் பற்றி எங்கும் பேசும்படியாக இருக்க வேண்டும். அரசனும் தான் மிகப்பெரியவனாகவும் மிகத் திறமையுள்ளவனாகவும் புகழ் பெற்று இருப்பதற்குரிய செயல்களில் ஈடுபட வேண்டும்.

தன் அருகாமையில் உள்ள இரண்டு அரசர்களுக்கிடையே போர் ஏற்படும் காலத்தில் அவன் நடுநிலை வகிக்கவே கூடாது. ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்து கொள்ள வேண்டும். இரண்டு பேரில் ஒருவர் வெற்றியடைந்தால் வெற்றியடைந்தவனுக்கே இந்த அரசன் பயப்பட வேண்டும்.

இல்லாவிட்டால் பயப்பட வேண்டியதில்லை. யாராவது ஒருவர்பக்கம் சேர்ந்து தானும் போரில் இறங்க வேண்டும். அவ்வாறு இறங்காவிட்டால், வெற்றி பெற்றவனுக்குத்தான் இரையாக நேரிடும். அந்தச் சமயத்தில் தனக்கு உதவி செய்ய ஆளில்லாது திண்டாட வேண்டி நேரிடும். ஏனெனில் நடுநிலை வகித்தவன் சந்தேகத்திற்குரியவனாகையால் வெற்றி பெற்றவன் அவனை நண்பனாகக் கருதமாட்டான். தோல்வியுற்றவனோ, தனக்கு உதவி செய்யாதவனைக் காக்க முன் வரமாட்டான்.

நட்பாக இல்லாத ஒருவன் தான் இந்த அரசன் நடுநிலை வகிக்க வேண்டுமென்று விரும்புவான். நட்புடைய அரசனோ, தனக்கு உதவியாக இவன் படையெடுத்து வர வேண்டுமென்றுதான் விரும்புவான். இது உலகத்தியற்கை ஒருமனம் இல்லாத அரசர்கள்தாம். ஆபத்திலிருந்து விலகி நிற்கவேண்டுமென்ற எண்ணத்துடன் நடுநிலைமைக் கொள்கையைக் கடைப்பிடிப்பார்கள். பெரும்பாலும் அதனால் அழிவையே காண்பார்கள். ஆனால், பொருதுகின்ற இருவரில் ஒருவர் பக்கம், வெளிப்படையாகச் சேர்ந்து கொள்ளும் பொழுது, அப்படித்தான் சேர்ந்த பக்கந்தான் வெற்றி பெற்றாலும், அவன் தன்னைக்காட்டிலும் வல்லமை மிகுந்தவனாயிருந்தாலும், தான் அவனைச் சார்ந்திருக்க வேண்டியிருந்தாலும், அவன் தனக்குக் கடமைப்பட்டவனாக இருப்பான்; நட்பும் உறுதிப்படும். ஆனால், தான் சேர்ந்து கொண்ட பக்கந்தான் தோல்வியுற்றாலும் கூட, அவன் அவனால் முடிந்த வரையிலும் தனக்கு உதவி செய்வதையும் தன்னைக் காப்பாற்றுவதையும் கடமையாகக் கொண்டு செயலாற்றுவதைக் காணலாம். மீண்டும் ஒருவனுடைய கூட்டுறவினால் உயர்வதற்கு முடியும்: வழியுண்டு. இந்த விஷயத்தில் வெற்றி பெற்றவனுக்கு அஞ்சத் தேவையில்லை. ஏனெனில் தான் அழிவை அடையும்போது தன்னுடன் இன்னொருவன் துணையோடேயே ஆழிவதால், அவன் தன்னைக் காப்பாற்றக் கடமைப்பட்டவனாகிறான். பெரும்பாலும், உதவியைப் பெற்றவன் வெற்றி பெறாமற் போகமாட்டான்.

இங்கே இன்னொரு விஷயம் கவனிக்கப்பட வேண்டும். தன்னைக் காட்டிலும் அதிக வல்லமையுள்ளவன் ஒருவன் மற்றொருவனை அடித்து வீழ்த்துவதற்குத் தான் துணை போகவே கூடாது: இன்றியமையாத தேவையிருந்தாலொழிய!

நான் சற்று முன் சொன்னபடி தான் அவனைச் சார்ந்திருக்கவேண்டிய நிலை ஏற்படும். ஆகையால் அரசர் கூடுமானவரையிலும் பிறர் விருப்பப்படி நடக்கும் நிலைமைக்கு ஆட்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது முக்கியம்.

எந்த ராஜ்யமும் தான் எப்போதும் பாதுகாப்பான கொள்கையைப் பின்பற்றலாம் என்றோ, அல்லது எப்போதும் ஐயத்திற்கிடமான நிலையில் இருக்கவேண்டுமென்றோ எண்ணக்கூடாது. இது அந்தந்த நிகழ்ச்சிகளைப் பொறுத்தது. ஒருவன் ஒரு கஷ்டத்தைத் தீர்க்க வேண்டுமென்றால், இன்னொரு கஷ்டத்தில் மாட்டிக்கொள்ளும்படியும் நேரிடலாம். ஆனால் அந்தக் கஷ்டங்களின் தன்மையை அறிந்து துன்பம் குறைவாயுள்ளதை நல்லதாக எண்ணிக் கொள்வதே புத்திசாலித்தனம்.

கீர்த்தியடைய விரும்புகின்ற அரசன் தகுதி உடையவர்களை விரும்புபவனாக்கி காட்டிக் கொள்ள வேண்டும். திறமையுடையவர்களுக்கும் ஒவ்வொரு கலையிலும் மேம்பாடடைந்தவர்களுக்கும் சிறப்புச் செய்ய வேண்டும். தன் குடிமக்கள் தங்கள் உழவு. வாணிகம் முதலிய வாழ்க்கைத் துறைகளில் நன்றாக ஈடுபடும்படி. உற்சாகமளிக்க வேண்டும். ராஜ்யத்திற்கு நலமளிக்கக் கூடிய காரியங்களைச் செய்தவர்களுக்குப் பரிசுகள் வழங்க வேண்டும். ஆண்டுதோறும் இடையிடையே திருவிழாக்கள் நடத்தி அந்த விழாக்களில் மக்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

அமைச்சர்கள் :

ஓர் அரசன் தன் அமைச்சர்களைத் தேர்ந்தெடுப்பது முக்கியத்துவமில்லாத காரியமல்ல. அவர்கள், அரசனின் புத்திசாலித்தனத்திற்கேற்ப நல்லவர்களாகவோ கெட்டவர்களாகவோ இருக்கிறார்கள். அந்த அமைச்சர்களைப் பார்த்தே அரசனுடைய குணத்தையும் புத்திசாலித்தனத்தையும் எடைபோட்டுக் கொள்ளலாம்.

உலகத்தில் மூன்று விதமான மூளைகள்
இருக்கின்றன. ஒன்று தானாக விஷ்யங்களை
யூகித்தறிந்து கொள்கிறது. இது நல்ல மூளை.
இரண்டாவது, மற்றவர்கள் எடுத்துச் சொல்லிய
பிறகு தெரிந்து கொள்கிறது. இதுவும் நல்ல
மூளைதான்.


ஆனால் மூன்றாவதோ தானாகவும் அறிந்து கொள்வதில்லை; பிறர் விளக்கியும் அறிந்து கொள்வதில்லை. இது பயனற்றது. இதில் முதல் இரண்டு வகை மூளைகளையுடையவர்களைத் தான் அரசன் தன் அமைச்சர்களாக நியமிக்க வேண்டும்.

ஓர் அமைச்சன் தன் அரசனைக் காட்டிலும் தன்னையே உயர்வாக மதித்தும். எந்தக் காரியத்தையும் தன் இலாபத்திற்காகவே செய்தும் வரக்கூடியவனாக இருந்தால் அவனை நம்பியிருக்கவே முடியாது.

பொதுவாக ஓர் அரசன் தன் அமைச்சர்களுக்கு கௌரவங்களும், பொறுப்புள்ள வேலைகளும், செல்வமும் செல்வாக்கும் நிறைய அளித்து அவர்கள் அதற்கு மேற்பட்ட ஆசைகொள்ளாதிருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். தன் பதவியில் மாறுபாடு ஏற்பட்டுவிடக் கூடாதே என்று அமைச்சன் பயந்து கொண்டிருக்கும்படியும் செய்ய வேண்டும்.

இப்படிப்பட்ட உறவு நிலை அரசனுக்கும் அமைச்சனுக்கும் இடையில் இருந்தால் அவர்கள் ஒருவரையொருவர் நம்பியிருக்க முடியும். இல்லா விட்டால், இருவரில் ஒருவருக்குத் தீமையே உண்டாகும்.

முகஸ்துதி:

முகஸ்துதி மனிதர்களை அறிவிழக்கச் செய்து விடுகிறது. இந்த முகஸ்துதியிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக சிலர் அலட்சியவாதிகளாக நடந்து கொள்கிறார்கள். இப்படி நடந்து கொள்பவர்களிடம் எல்லோரும் உண்மையையே பேசவேண்டுமென்பதை அறிந்து கொள்ள வாய்ட்பேற்படுகிறது. ஆனால் எல்லோரும் உண்மையையே பேசினாலும் அவர்களுடைய தகுதிகளை உணர முடியாது.

விவேகியான ஓர் அரசன் வேறொரு வழியைக் கையாளுகிறான். தன் ஆலோசனை சபையில் அறிவாளிகளைச் சேர்த்து அவர்களை மட்டுமே தன்னிடம் உண்மைகளைப் பேசும்படி செய்கிறான். ஆனால், அவர்களும் தான் கேட்கும் விஷயங்களைப்பற்றி மட்டுமே பேச உரிமை கொடுக்கிறான். அப்படி அவர்கள் கூறிய விஷயங்களையும் அப்படியே ஏற்றுக்கொண்டு விடாமல் தன் போக்கில் ஆராய்ந்து முடிவு செய்து கொள்கிறான். தன் முடிவில் அவன் உறுதியாகவும் நிற்கிறான். இப்படியில்லாமல், முகஸ்துதிக்கேற்ப முன்யோசனையில்லாமல் நடப்பவனும், வெவ்வேறுவிதமான கருத்துக்களுக்கேற்ப மாறி மாறி நடப்பவனும் மதிக்கப்படமாட்டான்.

ஓர் அரசன் தான் விரும்புகிறபோது ஆலோசனை சபையைக் கூட்ட வேண்டுமேயில்லாமல், தான் கேட்காமலே தனக்கு யோசனை செய்ய முற்படுவதைத் தடுக்க வேண்டும். ஆனால், கேள்விகள் கேட்பதில் மிகப் பெரியவனாகவும் சொல்லப்படும் உண்மைகளை ஊன்றிக் கவனிக்கும் பொறுமையுடையவனாகவும் அவன் இருக்க வேண்டும். ஓர் அரசன் அறிவுள்ளவன் என்பதை அவன் இயல்பைக் கொண்டு பார்க்கவேண்டியதில்லை என்றும், அவனுடைய ஆலோசனையாளர்களைக் கொண்டே தீர்மானித்துவிடலாம் என்றும் நினைப்பவர்கள் ஏமாற்றமடைகிறார்கள்.

தானே புத்திசாலியாக இல்லாத அரசன், சரியான யோசனைகளை அறிந்து கொள்ளக் கூடியவனாக. இருக்கமாட்டான். சொல்லப்படும் ஆலோசனைகளை ஒன்று சேர்த்து ஒரு முடிவுக்கு வர அவனால் முடியாது. அப்படிப்பட்டவனிடம் ஆலோசனையாளர்கள் தங்கள் நன்மைகளைச் சாதித்துக் கொள்ளும் நோக்கத்தோடு தான் நடந்து கொள்வார்கள். அவர்களைப் புரிந்து கொள்ளவோ திருந்தவோ முடியாதவனாக அவன் இருப்பான். எவ்வளவு புத்திசாலித்தனமான யோசனையாகயிருந்தாலும், அது யாரிடமிருந்து வந்தாலும், அரசனும் புத்திசாலியாக இருந்தால்தான் ஒப்பேறும். ஆகவே, புத்திசாலித்தனமான யோசனைகளைக் கொண்டு அரசனைப் புத்திசாலியாக மதிக்க முடியாது.

எப்பொருள் பார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு.

- திருக்குறள்


தன்கையே தனக்குதவி :

இதுவரை குறிப்பிட்ட விஷயங்களை நல்லறிவோடு பின்பற்றி வந்தால், எந்தப் புதிய அரசனும், நீண்ட நாளாக அரசராயிருந்து வருகிறவர்களைக் காட்டிலும் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும், வசதியாகவும் தன் நிலையைக் காப்பாற்றிக் கொள்ளலாம். பரம்பரையரசனைக் காட்டிலும் புதிய அரசன் தான் என்னென்ன செய்கிறான் எப்படியெப்படி செய்கிறான் என்று அதிகமாகக் கவனிக்கப்படுகிறான்.

ஒரு புதிய அரசன் மக்கள் இதயத்தைக் கவர்ந்துவிட்டால் அவர்கள் அவனுக்குப் பெரிதும் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். பழைய இரத்த வாரிசுகளைக் காட்டிலும் அவனைப் போற்றுவார்கள். ஏனெனில் மக்கள் தாங்கள் வாழும் தற்காலத்தைப் பற்றியே அதிகம் கவலைப்படுவார்களே தவிர இறந்தொழிந்து சாவதைப்பற்றி எண்ணிப் பார்ப்பதில்லை. மற்ற விஷயங்களில் குறைபாடில்லாமல் இருந்தால் மக்களே அரசனுக்குப் பாதுகாப்பாக இருப்பார்கள். ஒரு புதிய அரசை ஏற்படுத்தி அதற்கு நல்ல நீதி முறையையும், நல்ல படையமைப்பையும் நல்ல நட்புறவுகளையும் ஏற்படுத்திய அரசன் இரட்டிப்பு கீர்த்தியடைகிறான். மன்னனாகவே பிறந்து மதியில்லாமல் தன் அரசுரிமையை இழந்தவன் இரட்டிப்பு நிந்தனைக்காளாகிறான்.

பல ஆண்டுகளாகத் தங்கள் உடைமையாக இருந்த ராஜ்யத்தை இழக்கும்படி நேர்ந்தால் அதற்காக அரசர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை - நோவது அர்த்தமற்றது. தங்கள் அசட்டுத்தனத்திற்குத்தான் வருந்த வேண்டும். ஒரு சில அரசர்கள் ஆபத்துக் காலத்தில் நாட்டைக் காப்பதற்குப் பதிலாக நாட்டை விட்டுவிட்டு ஓடுவதற்கே நினைத்திருக்கிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களின் அகந்தையைக் கண்டு கோபமுற்ற மக்கள் அவர்களை எதிர்த்து நின்று விரட்டிவிட்டுத் தங்களைத் திரும்பவும் அழைத்து அரசுகட்டிலில் ஏற்றுவார்கள் என்று எதிர்பார்த்தார்கள். மற்றவர்களுக்குத் தேவையிருக்கும் வரையில் இந்த - நடவடிக்கை நல்லது தான். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகளையெல்லாம் கைவிட்டு ஓடுவதுபோல் அதிமோசமான காரியம் வேறு எதுவும் இல்லை. மற்றவர்கள் தூக்கிநிறுத்துவார்கள் என்பதற்காக ஒருவன் வீழ்ச்சியடைவது விரும்பத்தக்கதில்லை. ஓர் அரசன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வழி இதுவல்ல. ஏனெனில், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளாமல், ஒரு கோழையைப் போல் மற்றவர்களால் காப்பாற்றப் படுகிற இழிவான வழி இது. தன்னைத் தானே நம்பித் தன் சொந்தத் திறமையை நம்பித் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முற்படுவதே நல்லது, உறுதியானது, நிலையானது!

காலகாறிதல் :

தன் பண்பாட்டிலோ வேறு விதத்திலோ எவ்விதமான மாறுபாடும் அடையாத ஓர் அரசன் இன்று அதிர்ஷ்டத்துடன் சிறப்பாயிருக்கிறான். நாளை அழிந்து போகிறான். இதற்குக் காரணம் என்னவென்றால், அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பியிருக்கக் கூடியவன் அதிர்ஷ்டம் மாறும்போது தானும் வீழ்ந்து விடுகிறான் என்பதே. அது போலவே காலத்திற்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றவன் இன்பமாகவும் காலப் போக்கிற்கு மாறாக நடந்து கொள்கிறவன் துன்பப்பட்டுக் கொண்டும் இருக்கிறான் என்றே நான் எண்ணுகிறேன். செல்வமும் கீர்த்தியும் அடையும் விஷயத்தில் மனிதர்கள் வெவ்வேறு விதமான வழிகளைக் கையாளுகிறார்கள். ஒருவன் மிகுந்த முன்னெச்சரிக்கையோடு நடக்கிறான்: மற்றொருவன் மும்முரமான வேகத்தோடு நடந்து கொள்கிறான். ஒருவன் மூர்க்கமாக நடந்து கொள்கிறான்; மற்றொருவன் தந்திரமாக நடந்து கொள்கிறான். ஒருவன் பொறுமையைக் கையாளுகிறான்; ஒருவன் அதற்கு மாறுபாடான முறையைக் கையாளுகிறான். இப்படிப் பல்வேறுபட்ட வழிகளில் செல்பவரும் தத்தம் குறிக்கோள் நிறைவேறக் காணமுடியும். முன்னெச்சரிக்கையுள்ள இரண்டு மனிதர்களில் ஒருவன் தன் குறிக்கோளில் வெற்றியடைவதையும் மற்றொருவன் தோல்வியடைவதையும் காண்கிறோம். அதுபோலவே முன்னெச்சரிக்கையுள்ளவன் ஒருவனும், அவசரக்காரன் ஒருவனும் வெவ்வேறு காலத்தில் தங்கள் குறிக்கோளில் வெற்றியடைவதையும் காண்கிறோம். இப்படியெல்லாம், நிகழ்வதற்குக் காலமும் சூழ்நிலையும் காரணம் என்றுதான் சொல்ல வேண்டும். காலத்திற்குத் தகுந்தபடி தன் செயல்முறையை வகுத்துக் கொள்ளாதவன் தோல்வியடைகிறான். எவ்வளவு முன்னெச்சரிக்கையுடைய வனாயிருந்தாலும் தகுந்த காலம் வரும்போது சட்டென்று விரைந்து செய்து முடித்தால் ஒழிய வெற்றி பெற முடியாது. காலத்திற்கும் சூழ்நிலைக்கும் தகுந்தபடி தன் திட்டங்களையும் செயல்முறைகளையும் வகுத்துக் கொள் கிறவனிடம் அதிர்ஷ்டம் என்றும் மாறாமல் நிலைத்து நிற்கும்.

(ஞாலம் கருதினும் கைகூடும் காலம்
கருதி இடத்தாற் செயின்

-திருக்குறள்)

இத்தாலி பரதேசிகளிடமிருந்து விடுதலை பெற யோசனை:

அரசே. இதுவரை இருந்த இத்தாலியர்கள் யாரும், தாங்கள் செய்யக்கூடும் என்று நம்புகிற அளவு பெருங்காரியத்தைச் செய்ததில்லை. இதுவரை நடந்த கலகங்களிலும், போர் நடவடிக்கைகளிலும் இத்தாலியின் இராணுவத் திறமை அடியோடு ஒழிந்து போனது போன்றே தோன்றுகிறது. அதற்குக் காரணம், பழைய முறைகள் நல்லவையல்ல என்பதே. புதிய முறைகளைக் கண்டுபிடிப்பது எப்படி என்று அறிந்தவர்கள் இதுவரை தோன்றியதில்லை. புதிதாகத் தோன்றிய ஒருவர் புதிய நீதிமுறைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதைப் போல் சிறப்பானது வேறு ஒன்றும் இல்லை.

இந்த நாட்டினரிடத்திலே பெரும் பண்புகள் இருக்கின்றன. ஆனால், தலைமை ஏற்று நடத்தியவர்களின் தலையிலேதான் எதுவும் இருந்ததில்லை. போட்டிகளிலும் தனி மனிதர்கள் நேருக்கு நேர் நின்று போராடும் நிகழ்ச்சிகளிலும் இத்தாலியர்கள் எவ்வளவு பலமும், புத்திசாலித்தனமும், சாமர்த்தியமும் காட்டுகிறார்கள். ஆனால், படையென்று வரும்பொழுது அவர்கள் எவ்வளவு மோசமாகத் தோன்றுகிறார்கள். இதற்குக் காரணம் தலைவர்களிடம் உள்ள பலவீனம்தான். தாங்கள் சரியாகக் கீழ்ப்படியப்படவில்லை என்று அறிந்தும் அந்த நிலைக்கு அவர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள முயன்றதில்லை. இதனால்தான் கடந்த இருபதாண்டுகளில் எந்தச் சண்டையிலும் இத்தாலியப் படைகள் தோல்வியையே தழுவி வந்திருக்கின்றன.

ஆகவே, ஒளி பொருந்திய தங்கள் ஆஸ்தானம், தங்கள் நாடுகளை ஈடேற்றிய அந்தப் பெரிய மனிதர்களின் வழியைப் பின்பற்ற விரும்பினால், முதற்காரியமாக தங்களுக்கென்று சொந்தமான ஒரு படையமைப்பை ஏற்படுத்த வேண்டும். அந்தச் சொந்தப் படைவீரர்களைக் காட்டிலும் உண்மையும் சிறப்பும் பொருந்திய வீரர்களை வேறு எங்கும் காணமுடியாது. அவர்கள் ஒவ்வொருவரும் தனித்தனியே மிக நல்லவர்களாயிருந்தாலும் கூடத் தங்கள் அரசன் தலைமையில் இயங்கும்போது, அவனால் சிறப்பாகவும் ஆதரவாகவும் நடத்தப்படும்போது ஒற்றுமையாகவும் நன்றாகவும் இயங்குவார்கள்.

அந்நியரிடமிருந்து நம் நாட்டைப் பாதுகாக்க இப்படிப்பட்ட பராக்கிரமமுள்ள இத்தாலியப் படையை உண்டாக்க வேண்டியது இன்றியமையாதது. சுவிஸ் தேசத்துக் காலாட் படைகளும், ஸ்பானியக் காலாட்படைகளும் பயங்கரமானவை என்றாலும் அவ்வவ்வற்றிற்குரிய குறைபாடுகள் இல்லாமல் இல்லை.

ஸ்பானியர்களின் காலாட்படை குதிரைப் படைகளை எதிர்த்து நிற்க முடியாது. பிரெஞ்சுவின் தேசத்தாரின் படைகளோ, தமக்குச் சமமான பலமுள்ள படைகளை எதிர்த்து நிற்க முடியாது. பிரெஞ்சு குதிரைப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல் ஸ்பானியப் படைகள் திணறியதையும் ஸ்பானியக் காலாட்படையால் ஸ்விஸ் படைகள் வீழ்த்தப்பட்டதையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம். இன்னும் பல நிகழ்ச்சிகளையும் கண்டிருக்கிறோம். ஆகவே, குதிரைப் படைகளை எதிர்த்து நிற்கக் கூடியதும், காலாட்படைகளுக்குப் பயப்படாததுமான ஒரு புதிய படையமைப்பை உண்டாக்க வேண்டும். இப்படிப் புதிதாக உண்டாக்கப்படுகின்ற படை புதிய அரசனுக்குப் பெருமையையும் புகழையும் தேடித் தரும். கடைசியாக இத்தாலி தன்னை விடுவிக்கக் கூடிய ஒருவரைக் கண்டுபிடித்துவிட்ட இந்தச் சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விடக்கூடாது. அன்னியர் படையெடுப்பால் அவதிப்பட்ட மக்கள், பழிவாங்கத் துடித்துக் கொண்டிருக்கும் மக்கள், இப்படிப்பட்ட விடுதலை வீரனிடம் எவ்வளவு அன்பு பாராட்டுவார்கள். எவ்வளவு உண்மையாக இருப்பார்கள், எவ்வளவு நன்றிக் கண்ணீர் வடிப்பார்கள் என்று என்னால் விவரிக்க முடியாது. அவனுக்கெதிராக எந்தக் கதவு மூடியிருக்கும்? யார் அவனுக்குக் கீழ்ப்படிய மறுப்பார்கள்? எந்தப் பொறாமை அவனை எதிர்த்து நிற்க முடியும்? மிலேச்சர்களுடைய ஆதிக்கம் ஒவ்வொருவருடைய மூக்குத் துவாரத்தையும் கொத்திக்கொண்டிருக்கிறது. ஆகவே, ஒளி பொருந்திய தங்கள் ஆஸ்தானம் ஆண்மையோடும், நியாயத்திற்காகப் போராடுகிறோம் என்ற நம்பிக்கையோடும் இந்தக் காரியத்தை மேற்கொண்டு நமது வெற்றிக் கொடியின் கீழே நம் தந்தையர் நாடு தலை நிமிர்ந்து நிற்கச் செயலாற்ற முனைவீர்களாக!

“இத்தாலியர்களின் முன்னைப் பெருமை இறந்துவிடவில்லை. இன்னும் இதயத்தைத் தூண்டிக்கொண்டுதான் இருக்கிறது!” என்ற பெட்ரார்ச்சின் மொழி நிறைவேற்றப்படுமாக!

மாக் - 5