சிந்தனையாளன் மாக்கியவெல்லி/டிட்டஸ் லீவியசின் முதற் பத்துப் புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி


நூல் சுருக்கம் : 2
டிட்டஸ் லீவியசின் முதல் பத்துப்
புத்தகங்களைப் பற்றிய ஆராய்ச்சி
(Discourses On The First Ten Books Of Titus Livius)

மாக்கியவெல்லியின் முன்னுரை
ழங்காலத்து அற்புதச் சிற்பங்களைக் காணும்போது அவற்றைப் பெரிதும் போற்றி நம் வீடுகளில் அலங்காரமாக வைத்துக் கொள்ள விரும்புகிறோம். அந்தச் சிற்பங்களைப் பெறவோ, அவை போல் உருவாக்கவோ நாம் அவற்றை வைத்திருப்போருக்கோ, செய்வோருக்கோ பெரும் விலை கொடுக்கிறோம். ஆனால், தங்கள் தங்கள் நாட்டுக்காகத் தங்களையே தியாகம் செய்த பழங்காலத்து மன்னர்களைப் பற்றியும், படைத் தலைவர்களைப் பற்றியும் மக்களைப் பற்றியும் சரித்திரத்தில் படிக்கும்போது, அவர்களின் ஞானத்தையும் அறநெறியையும் கண்டு ஆச்சரியப்படுகிறோமே தவிர அவற்றைப் பின்பற்ற எண்ணுவதில்லை. பழைய அறநெறியின் அடையாளமே இல்லாதபடிக்கு நாம் அதைப் புறக்கணித்து வருவதைக் கண்டு வருந்தாமலிருக்க முடியவில்லை.

அந்தக் காலத்து மருத்துவர்களின் அனுபவங்களின் அடிப்படையில் எழுந்ததே இன்றைய மருத்துவ விஞ்ஞானம். அதுபோலவே, இன்றைய சட்டங்களெல்லாம் அந்த முன்னோர்களுடைய நியாய ஆலோசகர்களின் முடிவுகளைக் கொண்டு இன்றைய புதிய நியாய சாஸ்திரிகள் வகுத்தவை தாம்! இருப்பினும் ஒரு குடியரசை நிறுவவோ, அரசுகளை நிலைபெறச் செய்யவோ, சாம்ராஜ்யத்தையாளவோ, படை நடத்தவோ, போர்புரியவோ, சாம்ராஜ்யத்தை விரிவுப்படுத்தவோ, நீதியை நிலைநாட்டவோ, எந்த மன்னனும் அல்லது குடியரசுவாதியும் அல்லது படைத்தலைவனும், அல்லது குடிமகனும் முன்னையுதாரணங்களைப் பின்பற்றுவதில்லை. உலகத்தைச் சுருங்கச் செய்துவிட்ட நமது கல்வியின் தீமைகளினால் உண்டாகிய பலவீனம் காரணமாக இந்தப் புறக்கணிப்பு ஏற்பட்டது என்பதைக் காட்டிலும், அகங்காரமான சோம்பேறித்தனத்தின் தீயபயன்களினாலும், உண்மையான சரித்திர அறிவு இன்மையாலும், அதைப் பெற வேண்டுமென்ற ஆர்வம் இல்லாமையாலும் ஏற்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

மனித இனத்தை இந்தப் பிழைபாட்டிலிருந்து விடுவிப்பதற்காக, முற்காலத்து நடந்தவற்றையும் தற்காலத்து நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டுப் பார்த்து, சரியான தெளிவு பெறத் தேவையான விஷயங்களையெல்லாம் எழுதுவது நல்லதென்று எண்ணினேன்.

மற்றவர்களைப் போல நான் ஆர்ப்பாட்டமான வசனங்களையும், அலங்காரமான வார்த்தைகளையும் போட்டு எழுதவில்லை. விஷயத்தின் முக்கியத்துவத்துக்கும் கருத்தின் உண்மைக்குமே என் நூலில் இடமிருக்க வேண்டுமென்று எண்ணினேன்.

மலையின் மேல் இருப்பவனால்தான் கீழேயுள்ள சமவெளிப் பிரதேசத்தை முழுதும் காண முடியும் கீழேயிருப்பவனால்தான் மலையின் உயரத்தையும் பெருமையையும் அளவிட முடியும். அதுபோல மக்களின் இயல்பை நன்றாயறிய ஒருவன் மன்னனாயிருக்க வேண்டும் மன்னனின் இயல்பை நன்கு புரிந்து கொள்ள விரும்புபவன் மக்களில் ஒருவனாயிருக்க வேண்டும். ஆகவே மன்னர்களின் நடத்தையைப் பற்றி ஆராயவும், வழிகாட்டவும், எளியவனும் தாழ்ந்தவனுமாகிய நான் முற்படுவது தன் மூப்பான காரியம் என்று கருதப்படாதென நம்புகிறேன்.

என் குறிப்புகளைப் படிப்பவர்கள், வரலாறு படித்ததன் பயனை அடையலாம்.

நகரங்கள் ஏற்பட்ட கதை :

ரோமாபுரியின் ஆரம்பத்தைப் பற்றியும், அதன் நீதிமான்களைப் பற்றியும் நிர்வாகத்தைப் பற்றியும் படித்தவர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக அங்கு நிலைத்து நின்று வரும் நீதி நெறியைக் கண்டு வியப்படையமாட்டார்கள்.

எல்லா நகரங்களுமே அந்தந்த நாட்டு மக்களாலோ அல்லது அன்னியர்களாலோ உண்டாக்கப்பட்டவையாகவே இருக்கும். தனித்தனிக் கூட்டங்களாகப் பிரிந்து வாழ்ந்த நாட்டு மக்கள், வெளிப் பகைவர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும்போது எதிர்த்து நிற்க மாட்டாமையாலும், தேவைப்பட்ட நேரத்தில் ஒன்று சேர முடியாமையை எண்ணியும், இப்படிப்பட்ட ஆபத்துக்களைத் தவிர்ப்பதற்காக நகரங்களை நிர்மாணித்தார்கள். ஏதன்ஸ் மாநகரும் வேனிஸ் மாநகரும் இவ்வாறு ஏற்பட்டவையே. தனித்தனியே பிரிந்து வாழ்ந்த நாட்டு மக்களை ஒன்று திரட்டித் தீசியஸ் என்பவன் கட்டிய நகரம் ஏதன்ஸ், ரோமானிய சாம்ராஜ்யம் வீழ்ச்சியடைந்தபின் இத்தாலியை நாசப்படுத்திய துஷ்டர்களிடமிருந்தும், போரிலிருந்தும் தப்பிப்பதற்காக அட்ரியாட்டிக் கடலின் முன் பகுதியில் இருந்த சிறு தீவுகளில் குடியேறி வாழ்ந்த அகதிகளால் நிர்மாணிக்கப்பட்டது வேனிஸ் நகரம். இந்த அகதிகளை எந்த அரசனும் ஆளவில்லை. தங்களுக்குச் சிறந்ததென்று தோன்றிய சட்டங்களை ஏற்படுத்திக் கொண்டு தங்கள் புதிய ராஜ்யத்தில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள். இத்தாலியைச் சூறையிட்டவர்களிடமிருந்து தப்பி இவர்கள் நெடுங்காலம் அமைதியாக வாழ்ந்தார்கள்.

ஒரு ராஜ்யத்தில் மக்கள் தொகை அதிகமாகி விட்டால், அந்த ராஜ்யத்தின் அரசனோ குடிமக்களோ வேறு ஒரு நகரத்தை உண்டாக்குவதுமுண்டு. அன்னியர்களால் இப்படித்தான் நகரங்கள் உண்டாக்கப்படுகின்றன. ரோமானியர்கள் இப்படிப் பல நகரங்களைத் தங்கள் சாம்ராஜ்யத்தில் ஏற்படுத்தியிருக்கிறார்கள். மன்னர்கள் தாம் வாழுவதற்காக என்றும். தங்கள் கீர்த்தியின் சின்னங்களாகவும் பல நகரங்களை ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

நகரங்களை நிர்மாணிப்பவர்கள் மோசசைப் போல் தாங்கள் வசப்படுத்திய நகர்களில் குடியேறுவதுமுண்டு; ஏனியசைப் போல் புதிய நகரங்களைக் கட்டுவதுமுண்டு. செழிப்பற்ற நிலத்தில் தங்கள் நகரங்களை ஏற்படுத்திக் கொண்டவர்கள், சோம்பலற்றுச் சுறுசுறுப்பாகவும், ஒற்றுமையாகவும், வறுமையைத் தவிர்க்கப் போராடும் தன்மையும் உடையவர்களாகி விடுகிறார்கள். வளமான நாட்டில் வாழ்பவர்களின் சோம்பலைக் குறைத்து உழைப்பைப் பெருக்குவதற்குச் சட்டங்கள் தாம் கட்டாயப்படுத்த வேண்டும்.

அலெக்ஸாண்டர் தன் வெற்றிச் சின்னமாக ஒரு நகரை நிர்மாணிக்க முற்பட்ட பொழுது, அவனுடைய சிற்பி டினோக்கிரேட்ஸ் என்பவன் ஆதோஸ் மலையின் மீது பலம் பொருந்தியதாகவும் பார்ப்பவர்கள் வியந்து பாராட்டும் படியாக மனித உருவமுடையதாகவும் கட்டிக் கொடுப்பதாகக் கூறினான். அலெக்ஸாண்டர், டினோக்கிரேட்ஸை நோக்கி, “மக்கள் எதைக் கொண்டு வாழ்வார்கள்?” என்று கேட்டபோது சிற்பி விழித்தான். அதன் பிறகு தன் வெற்றிச் சின்னமான அலெக்ஸாண்டிரியா நகரை நைல் நதிக்கும் கடலுக்கும் அருகாமையில் உள்ள வளம் நிறைந்த பிரதேசத்தில் நிர்மாணித்தான்.

ரோமாபுரியை உண்டாக்கியவன் ஏனியஸ் என்றால் அது அன்னியரால் உண்டாக்கப்பட்டதாகிறது. ஆனால் ரோமுவஸ் தான் அதை உருவாக்கியவன் என்றால் தன் நாட்டவர்களாலேயே ஆக்கப்பட்டதாகிறது. எப்படியானாலும் ரோமாபுரி ஆரம்ப காலத்திலிருந்தே உரிமையும், சுதந்திரமும் உடையதாகவேயிருந்து வந்திருக்கிறது.

ரோமுலஸ், நூமா போன்றவர்களின் கடுமையான சட்டங்கள் அங்கு வாழ்ந்தவர்களை வீண். கஷ்ட நஷ்டங்களுக்கு ஆளாக்கிவந்ததால் தான், நிலவளமோ, நீர்வளமோ, வெற்றிகளோ, சாம்ராஜ்யத்தின் பெருகிப் பரந்த நிலையோ பல நூற்றாண்டு காலமாக அவர்களைக் கெடுக்க முடியாமல் இருந்தது; மற்ற எந்தக் குடியரசிலும் காணாத ஆசார ஒழுக்கங்களையும் அவர்கள் நிலை நிறுத்தி வந்தார்கள்.

அரசாங்கம் அல்லது தனிப்பட்ட மனிதர்களின் சாதனைகளினால் ரோமாபுரி பெரும் பயன்களை அடைந்தது. பீட்டடஸ், லீவியஸ் அவற்றை நினைவில் வைத்துக் காப்பாற்றியிருக்கிறார். அவற்றில் வெளிப்படையான விஷயங்களை விட்டு விட்டு அரசாங்கத்தின் குறிப்பிடத் தகுந்த உள்ளந்தரங்கமான நடவடிக்கைகளைப் பற்றி ஆராய்ந்து அவற்றின் பயனை எடுத்துக் காட்ட முயல்கிறேன்.

குடியரசு தோன்றிய கதை :

தோற்றத்திலேயே அன்னிய ஆதிக்கத்திற்கு உட்பட்ட நகரங்களைப் பற்றி இப்போது பேசப் போவதில்லை. தடியரசு அல்லது தலைமைத் தூய ஆதிக்கத்திற்கு உட்பட்டு சுதந்திரமாகத் தன்னுடைய சட்டங்களைக் கொண்டு தன்னை யாண்டு கொண்ட நகரங்களைப் பற்றி மட்டுமே பேசுவோம். ஒரே சட்டத்தின் மூலம் தேவையான நீதி முறைகள் அனைத்தையும் வழங்கக்கூடிய ஞானமுள்ள சட்டம் செய்பவனை ஆரம்பத்திலேயே பெற்ற நகரங்கள் அதிர்ஷ்டமுடையவை.

நெடுநாளைக்கு மாற்றப் படாமல் இருக்கக் கூடிய நிலைத்த சட்டங்களைப் பெற்ற நாடு இன்பபூமியாக இருக்கும். அப்படியில்லாமல் நீதி முறைகளை அடிக்கடி சீர்திருத்தவேண்டிய நிலையில் உள்ள நாடு, மிகுந்த துன்பத்தில் உழலும். நல்ல அரசியலமைப்பைப் பெறாத குடியரசு சரியான வளர்ச்சியும் நல்ல நிலைமையும் அற்றதாகும். முழுமையான அரசியலமைப்பை ஆரம்பகாலத்தில் பெறாதிருந்தாலும் கூட நல்ல அடிப்படையில் துலங்கிய குடியரசுகள் நாளடைவில் முன்னேற்றமடையக் கூடும். அரசியலமைப்பில் மாற்றம் ஏற்படவேண்டிய இன்றியமையாமையைத் தெளிவாக்கினால் அன்றிப் பெரும்பான்மையினர் இந்தச் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ள முன் வருவதில்லை. ஆகையால், இந்தச் சீர்திருத்தங்கள் ஆபத்தில்லாமல் நிறைவேறுவதில்லை. அரசியலமைப்பை பூரணத்துவப் படுத்தக்கூடிய இந்த ஆபத்தான முயற்சியில் அந்தக் குடியரசே எளிதாக அழிக்கப்பட்டுவிடவும் கூடும்.

சில அரசியல் நூலாசிரியர்கள் மூன்று விதமான அரசாங்கங்களைப் பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அவை, முடியாட்சி, மேன்மக்களாட்சி, பொதுக் குடியாட்சி என்பனவாகும். புத்திசாலிகள் என்று பெரும்பாலோரால் கருதப்படுகிற வேறு சில ஆசிரியர்கள், நல்ல அரசு மூன்று, தீய அரசு மூன்று என ஆறுவகை அரசுகளைப் பற்றிப் பேசுகிறார்கள். நல்லவை மூன்று நாம் மேலே குறிப்பிட்டிருப்பவை. தீயவை மூன்று என்பன, அவற்றில் இருந்து திரிந்து மாறுபட்டவை - அவற்றையே ஒத்த அவற்றில் இருந்தே பிறந்த தீய பயனுடையவையாம். எனவே அவற்றிற்கிடையேயுள்ள வேறுபாட்டையுணர்வது எளிது.

இம்முறையில் பார்த்தால் முடியாட்சி கொடுங்கோலாட்சியாகிறது; மேன்மக்களாட்சி ஒரு சில பேர்வழிகளின் ஆட்சியாகிறது; பொதுக் குடியாட்சி கட்டுப்பாடற்ற தனிமையடைகிறது. நல்ல ஆட்சிகள் மூன்றும் இப்படி மாறு படாமல் தவிர்ப்பதற்கு வழி எதுவும் இல்லை. ஏனெனில் இரண்டு வகைகளுக்கும் உள்ள ஒப்பான தோற்றமும் தொடர்பான நிலையும் மிக நெருக்கமானவை.

உலகந் தோன்றிய காலத்தில் இருந்த மனிதர்களின் எண்ணிக்கை சிறிதே, அவர்கள் மிருகங்களைப் போல் தனித் தனியே பிரிந்து வாழ்ந்தார்கள். மனித இனம் பெருகியபோது தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, அவர்கள் ஒன்று சேரவேண்டிய, அவசியம் ஏற்பட்டது. அப்படி ஒன்று சேர்ந்தவர்கள் தங்களைக் கட்டுப்பாடாக நடத்த வலிவும் வீரமுமுடைய ஒருவனைத் தலைவனாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். பிறகு தங்களிலே, நல்லவர்களையும் கெட்டவர்களையும் பிரித்து அறியத் தலைப்பட்டார்கள்; நீதி முறைகளை ஏற்படுத்தித் தங்களுக்கு விரோதிகளானவர்களுக்குத் தண்டனைகளையும் உண்டாக்கினார்கள். இதுதான் நீதி பிறந்த கதை.

தேர்ந்தெடுக்கும் முறை நின்று அரசுரிமை பரம்பரைப் பாத்தியதை யாக்கப்பட்ட காலத்தில், மன்னனுக்குப் பின் மன்னனாக அவன் மகன் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளாமல், வகை வகையான இன்பங்களை அனுபவிக்கப் பிறந்தவன் தான் என்று எண்ணிக்கொள்ள ஆரம்பித்தான்.

இந்நிலையில் அந்த மன்னன் குடிமக்களின் வெறுப்புக்குரியவனானான். வெறுப்புக்காளானவன் அச்சமடைந்தான், அச்சத்தின் காரணமாக எச்சரிப்புடையவனாகவும் கொடுமைகள் புரிபவனாகவும் மாறினான். இவ்வாறுதான் கொடுங்கோலாட்சி பிறந்தது.

மன்னன் என்ற பெயரையே வெறுக்கத் தொடங்கிய மக்கள், தங்களுக்குள் ஒரு புதிய அரசாங்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். கொடுங்கோன்மையின் தன்மைகளை நன்றாக நினைவில் வைத்துக் கொண்டு, கண்டிப்பான முறையில் அந்த ஆட்சியை நடத்தினார்கள். இந்த ஆட்சி நல்லெண்ணமுடைய மேன்மக்களால் நடத்தப் பெற்று வந்தது. நாளடைவில், ஆட்சித்தலைவர்களாயிருந்தவர்கள் பொது நலத்தை மறக்கத் தொடங்கிவிட்டார்கள். இவ்வாறாக மேன்மக்கள் ஆட்சி, தன்னலம் பிடித்த ஒருசிலராட்சியாக மாறியது. கொடுங்கோலாட்சியைப் போலவே இந்த ஆட்சியும் விளங்கவே வெறுப்படைந்த மக்கள், ஆளுவோரை எதிர்த்துப் போராடிப் பொதுக்குடியாட்சியை நிறுவினார்கள். மறுபடியும் ஒரு மன்னன் கையிலோ, ஒரு சில பேர்வழிகளின் கையிலோ ஆட்சி சிக்காத முறையில் பொதுக்குடியாட்சி மிகவும் எச்சரிக்கையாக நடத்தப்பட்டு வந்தது. ஆனால், மற்ற அரசுகளைப் போலவே இதுவும் நிலைத்து நீடிக்க வழியில்லாமல் போய்விட்டது. ஏனெனில் பொதுக் குடியாட்சியை நிறுவியவர்கள் தலைமுறை இருக்கும் வரை தான் அது ஒழுங்காக நடக்க முடிந்தது. அதற்குப் பிறகு அந்த ஆட்சியில், கட்டுப்பாடற்ற தன்மை மிகுந்து பொதுநலத்திற்கும் தனியார் நலத்திற்கும் கேடு விளைக்கும் படியாக ஆட்சியின் நிலைமை மாறிவிட்டது. இப்படிப்பட்ட குழப்படியான நிலையைக் காட்டிலும் ஓர் அரசன் ஆளுவதே சிறந்ததென்று தோன்றியது. இவ்வாறு மன்னன் ஆட்சி ஏற்பட்டு அது மீண்டும் கொடுங்கோலாட்சியாகியது. இப்படியே மாறி மாறி ஆறுவித ஆட்சி முறைகளும் வட்டமிட்டுக் கொண்டு வரலாயின.

நான் எல்லா அரசாங்கங்களும் குறைபாடுள்ளன என்று கூறுகிறேன். ஏனெனில் நல்லன என்று நாம் கூறிய அந்த மூன்று ஆட்சிகளும் குறுகிய கால அளவே நிலைத்து நிற்கக் கூடியன; தீய ஆட்சிகளோ, வெளிப்படையாகவே தீமை பயப்பன.

இந்த ஆட்சி முறைகள் ஒவ்வொன்றிலும் உள்ள தீமைகளை நன்குணர்ந்து எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து ஓர் ஒப்பற்ற அரசாங்கத்தைக் கூர்மையான அறிவுள்ள சட்டஞ் செய்பவர்கள் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.

இந்த விஷயத்தில் ஸ்பார்டா அரசாங்கத்தை ஏற்படுத்திய லைக்கர்கஸ் பெரும் பாராட்டுக்குரியவன். அரசனுக்கும், பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் அவரவருக்குரிய உரிமைகளையும் கடமைகளையும் அவன் ஏற்படுத்திய அரசியலமைப்பு வரையறுத்து வழங்குவதாயிருந்தது. அதனால் அந்த அரசு எண்ணூறு ஆண்டு காலம் வரை நிலைத்து நிற்க முடிந்தது. சோலோன் என்பவன் ஏதேனியர்களுக்காக வகுத்த அரசியலமைப்பின்படி ஏற்படுத்திய பொதுக் குடியாட்சியோ சிறிதே காலத்தில் முடிவடைந்துவிட்டது. சோலோன் தான் சாகுமுன்னாலேயே கொடுங்கோலரசு உதயமாகிவிட்டதைக் காணும்படி நேர்ந்துவிட்டது.

ரோமாபுரியில் லைக்கர்கஸ்ஸைப் போல் கூரிய அறிவுள்ள சட்ட அமைப்பாளன் இருந்ததில்லை. என்றாலும் ஆட்சிக் குழுவிற்கும் மக்களுக்கும் இடையேயிருந்த ஒற்றுமையின்மை, நீதிமுறைகளால் முடியாத ஓர் அசாதாரணமான வாய்ப்பையுண்டாக்கி ரோம சாம்ராஜ்யத்தை நீடித்து நிலைக்கச் செய்தது, ஆகவே, முதல்தரமான இன்பத்தைக் காணாவிட்டாலும் ரோமாபுரி இரண்டாந்தரமான மகிழ்ச்சியையாவது காண முடிந்தது. ரோமுலஸ் முதலிய அரசர்கள், சுதந்திரமுள்ள மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நல்ல நீதி முறைகளைக் கொண்டுதான் அரசாண்டார்கள். ஆனால், குடியரசு அல்லாத முடியரசை நிலைநிறுத்த அவர்கள் நோக்கம் கொண்டிருந்தார்கள். இந்த மன்னர் ஆட்சியிலிருந்து விடுதலைபெற்ற மக்கள், மன்னர்களை வெளியேற்றிவிட்டு, அவர்கள் இருந்த இடத்தில் இரண்டு தலைமை அதிகாரிகளை ஏற்றிவைத்தார்கள்.

இதனால் ரோமாபுரியில் அரசன் என்ற பெயர் ஒழிந்ததே தவிர ஆதிபத்திய முறை மாறவில்லை. தலைமையதிகாரிகளும் ஆட்சிக்குழுவினரும் அடங்கிய அரசாங்கத்தில் முடியாட்சி முறையும், மேன்மக்களாட்சி முறையும் இருந்ததே தவிர பொதுமக்கள், அதிகாரம் செல்லுபடியாகவில்லை. நாளடைவில் உயர்குலத்தவர்கள் அல்லது பிரபுக்களின் இறுமாப்பு, பொதுமக்களை அவர்களுக்கெதிராகக் கிளர்ந்தெழச் செய்தது. பிரபுக்கள் தங்கள் அதிகாரம் முழுவதையும் இழந்துவிடாமலிருக்கப் பொதுமக்களுக்கும் ஒரு பங்கு கொடுக்க வேண்டியதாயிற்று. இவ்வாறுதான் மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கும் முறை ஏற்பட்டது. மூன்று வித ஆட்சிகளின் கூறுகளும் அடங்கிய அந்தக் குடியரசு வலுப்பெற்றது. மூன்று சக்திகளும் கலந்து ரோமாபுரியின் அரசியலமைப்பை முழுமையடையச் செய்தன.

இவ்வகையில்தான் ரோமாபுரி அதிர்ஷ்டவசமாக நிலைத்த அரசாங்கத்தைப் பெற்றது என்று கூறினோம்.

குடியரசு மேலும் வலுப்பட்ட விதம் :

ஓர் அரசை ஏற்படுத்தி அதற்குரிய நீதி முறைகளை வகுக்க விரும்புகின்ற எவரும், எல்லா மனிதர்களும் தீயவர்கள் என்றும், அவர்கள் சமயம் வாய்க்கும் போது தங்கள் தீயகுணத்தை வெளிப்படுத்தத் தயாராக இருக்கக் கூடியவர்கள் என்றும் மனத்தில் கொள்ளவேண்டும். மனிதர்களுடைய தீய குணங்கள் சிலகாலம் மறைந்திருக்கிறதென்றால், அதற்கு ஏதாவது விவரந் தெரியாத காரண மிருக்க வேண்டும். அது வெளிப்படுவதற்குச் சரியான சமயம் நேரவில்லை என்று நாம் எண்ணிக்கொள்ள வேண்டும். ஆனால், உண்மையின் தலைவன் என்று சொல்லப்படுகின்ற காலம், அவர்களுடைய தீய குணத்தை வெளிப்படுத்தாமல் விட்டு விடுவதில்லை. இந்தக் கருத்தைத்தான் பொது அமைப்புக்களைப் பற்றி எழுதுகின்றவர்கள் பலர் எடுத்துக் காட்டியிருக்கிறார்கள். இந்தக் கருத்தை வலியுறுத்தும் எடுத்துக்காட்டுக்கள் சரித்திரத்தில் நிறைய இருக்கின்றன.

தார்க்குவின்களை வெளியேற்றிய பிறகு ரோமாபுரியில் பிரபுக்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே அதிக ஒற்றுமை நிலவியது. தார்க்குவின்கள் இறந்த பிறகு பிரபுக்கள் அமைத்த ஆட்சி அதே மாதிரியான ஒழுங்கீனமுடையதாயிருந்தது. அதனால் ஏற்பட்ட பல தொந்தரவுகள், கஷ்டங்கள், ஆபத்துக்களின் காரணமாகத்தான் மக்கள் பிரதிநிதிகள் ஏற்பட்டார்கள். இந்த மக்கள் பிரதிநிதிகள் குடிமக்களுக்கும் ஆட்சிக் குழுவினருக்கும் இடையில் ஆற்றல் மிகுந்த ஒரு தடைச்சுவராக இருந்தார்கள். ஆட்சிக்குழுவினரின் இறுமாப்புக்குச் சரியான அணைபோட்டார்கள் இவர்கள்.

ரோமானியக் குடியரசு உரிமையும் வலிமையும் பெற்ற விதம்:

தார்க்குவின்கள் இறந்ததிலிருந்து மக்கள் பிரதிநிதிகள் உண்டாக்கப்பட்டது வரையுள்ள இடைக்காலத்தில் ரோமர்களின் குடியரசு குழப்ப நிலையும் ஒழுங்கீனமும் என்று சொல்பவர்களுடைய கருத்தை நான் மறுத்துக் கூறுகிறேன். நல்லதிர்ஷ்டமும் இராணுவக் கட்டுப்பாடும் மட்டும் இல்லாவிட்டால் குடியரசுகளினிடையில் மிகக் கேவலமான நிலைக்கு ரோமாபுரிக் குடியரசு போயிருக்கும் என்பதையும் மறுக்கிறேன்.

ரோமாபுரியின் ஆட்சிக் குழுவினருக்கும் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட போராட்டங்களைக் கண்டிப்பவர்கள், அதனால் விளைந்த கூச்சலையும் குழப்பத்தையும் எண்ணுகிறார்களே தவிர, அதனால் விளைந்த நல்ல பலனை நினைத்துப்பார்க்கவில்லை. ஆட்சிக் குழுவினரும் பொதுமக்களும் இரண்டு கட்சியினர் என்று அவர்கள் கருதுவதில்லை. விடுதலை வேட்கையைத்தான் எல்லா நீதி முறைகளும் ஆதரிக்கின்றன என்பதையும் குறைகூறுபவர்கள் உணர்வதில்லை. மக்கள் நன்னடத்தை உடையவர்களாயிருக்க வேண்டுமானால் நல்ல கல்வி கற்றவராயிருக்கவேண்டும். நல்ல கல்வி நல்ல நீதி முறையிருந்தால்தான் கிடைக்கும். நல்ல நீதிமுறை, பலரால் பழிக்கப்படும் இப்படிப்பட்ட கலகங்களால் தான் கிடைக்கும். கலகம் பிறந்தால் தான் நியாயம் பிறக்கும்.

குடிமக்களின் இந்தக் கலகங்களை எண்ணிப் பார்த்தால், அவற்றால் எவ்விதத் தீமையும் விளையவில்லை என்பதும் பொது மக்கள் உரிமைபெற வகை செய்யும் நீதி முறைகள் தாம் அவற்றால் தோன்றியிருக்கின்றன என்பதும் தெளிவாகும்.

மக்கள் கூச்சல் எழுப்புவதும், வீடுகளை மூடிவிட்டு வீதியில் குழப்பமான நிலையில் ஓடுவதும், ஆகிய காரியங்கள் பற்றிப் படிப்பதற்கும் பயங்கரமாகத்தான் தோன்றும். ஆனால் சுதந்திரமுள்ள ஒவ்வோர் அரசும், குடிமக்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று நான் கூறுவேன். எல்லாவற்றிற்கும் மேலாக அந்தக் குடியரசு முக்கியமான சமயங்களில் இதே பொதுமக்களின் உதவியை நாடவேண்டியும் வரும். “மக்கள் அறியாமையுள்ளவர்களாய் இருந்தாலும் உண்மையை மதிக்கத் தெரிந்தவர்கள். தங்கள் நம்பிக்கைக்குரிய ஒருவனால் அது வெளிப்படுத்தப்படும்போது அவர்கள் அதற்கு ஆட்படத் தயாராயிருக்கிறார்கள்” என்று சிசரோ கூறுகிறான்.

மக்கள் பிரதிநிதிகள் ஏற்பட்டது. பொது நிர்வாகத்தில் மக்களுக்குப் பங்கேற்படுத்திக் கொடுத்தது மட்டுமல்லாமல் ரோமானியர்கள் விடுதலைக்கு உறுதியான பாதுகாப்பளிப்பதாகவும் ஆகியது.

உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பைட யாரிடம் ஒப்படைப்பது?:

குடியரசுக்கு விவேகமான அரசியலமைப்புக்களை யளித்த சட்டஞ் செய்பவர்கள் எல்லோரும், விடுதலையைப் பாதுகாப்பதற்கு வேண்டிய முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதை வற்புறுத்திக் கூறியிருக்கிறார்கள். ஒவ்வொரு குடியரகம் பொதுமக்களும் பிரபுக்களும் அடங்கியதாக இருப்பதால், இவர்களில் யார் வசம் விடுதலையைப் பாதுகாக்கும் பொறுப்பைத் தருவது என்ற கேள்வி எழுகிறது.

பிரபுக்கள் மற்றவர்களை அடக்கியாள வேண்டுமென்ற பேராசையுள்ளவர்கள். பொதுமக்களோ, தாங்கள் அடக்கப் படக்கூடாதென்ற விருப்பம் மட்டுமேயுள்ளவர்கள்; விடுதலையுரிமையைச் சுதந்திரமாக அனுபவித்து வாழவேண்டுமென்ற ஆசையுள்ளவர்கள். ஆகவே விடுதலையுரிமையைப் பாதுகாக்கும். பொறுப்பை அவர்கள் கையில் விட்டால், மற்றவர்கள் உரிமையில் தலையிட வேண்டுமென்ற எண்ணம் கொள்ளாமல், அதை இயல்பாகவே கவனமாகப் பாதுகாத்து வருவார்கள். தாங்களே முழுதும் அந்த உரிமையை வசப்படுத்திக்கொள்ள இயலாத அவர்கள் மற்றவர்கள் அவ்வாறு செய்யாமலும் பார்த்துக் கொள்வார்கள்.

உரிமையைப் பாதுகாக்கும் பொறுப்பைப் பிரபுக்கள் வசம் ஒப்படைத்தால் இருவிதமான நன்மைகள் உண்டென்று சொல்லப்படுகிறது. முதலாவது, அந்தப் பிரபுக்களுடைய அதிகார ஆசையை இதனால் தணிக்க முடியும். இரண்டாவதாக, பொதுமக்கள் கையில் அதிகாரம் இருப்பதால், தொல்லைகளையும் குழப்பங்களையும் உண்டாக்கக் கூடிய இடைவிடாத உணர்ச்சி அவர்களிடம் இல்லாதபடி செய்யப் பிரபுக்களால் முடியும்!

தங்களிடம் இல்லாத அதிகாரத்தைத் தேடிக்கொள்ள முயலுகின்றவர்களா, அல்லது ஏற்கனவே தங்களிடம் உள்ள அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள விரும்புகின்றவர்களா, இவர்களில் யார் குறைந்த ஆபத்தானவர்கள் என்று பார்க்க வேண்டும். கையில் அதிகாரமுள்ளவர்களால் தான் பெரும் தொல்லைகள் அடிக்கடி ஏற்படுகின்றன. தங்கள் அதிகாரத்தை இழந்து விடுவோமோ என்ற அச்சமும் அவநம்பிக்கையும் இருப்பதன் காரணமாக அவர்கள் மேன்மேலும் அதைத் தேடிக் கொள்ள முயலுகிறார்கள். இன்னும் மோசமானதென்னவென்றால், பிரபுக்களும் பணக்காரர்களும் தங்கள் அகங்காரத்தினாலும் இறுமாப்பினாலும், உயர்ந்த குடிப்பிறப்போ, செல்வமோ இல்லாதவர்களுடைய நெஞ்சிலே, அவற்றைப் பெற வேண்டுமென்ற எண்ணத்தை மட்டுமல்லாமல், அவற்றைஅந்தச் செல்வங்களையும் மரியாதைகளையும் மிக மோசமான நிலையில் அனுபவித்து வரும் அவர்களிடமிருந்து அதைப் பறித்துக்கொண்டு பழிவாங்கிவிட வேண்டுமென்ற விருப்பத்தையும் தூண்டி விடுவதுதான்!

குடியரசில் உரிமையை நிலைநிறுத்தக் குற்றஞ் சாட்டும் வாய்ப்பு இருக்கவேண்டியது இன்றியமையாதது :

பீட்டஸ் லீவியஸ் கொரியோலானசைப் பற்றிக் கூறுகிற நிகழ்ச்சியொன்று நமக்கு ஓர் உண்மையைப் புலப்படுத்துகிறது. ரோமாபுரியில் பஞ்சம் வந்தபோது சிசிலித்தீவிலிருந்து தான்யங்கள் கொண்டுவர ஆட்சிக் குழு ஏற்பாடு செய்திருந்தது. அப்போது கொரியோலானஸ், குடிமக்கள் பிரதிநிதிகளை ஏற்படுத்தியதன் மூலம் அடைந்திருக்கிற அதிகாரத்தைப் பறிப்பதற்கு இது நல்ல சந்தர்ப்பம் என்று ஆட்சிக் குழுவினருக்குக் கூறினான். உணவுப் பொருள் கிடைக்காவிட்டால் - அது வழங்கப்படாவிட்டால், அவர்கள் வழிக்கு வருவார்கள் என்றான். இதைக் கேள்விப்பட்ட மக்கள் கொதித்தெழுந்தார்கள். மக்கள் பிரதிநிதிகள் அவனைத் தங்கள் முன்னிலையில் வந்து குற்றத்திற்குப் பதில் கூறவேண்டும் என்று அவனை அழைத்திராவிட்டால், அவன் படுகொலை செய்யப்பட்டிருப்பான் என்பதோடு பெருங் குழப்பம் உண்டாகியிருக்கும். மக்களுடைய வெறுப்பை வெளிப்படுத்துவதற்கு இப்படிப்பட்ட சட்டரீதியான ஒரு சந்தர்ப்பம் கொடுக்கப்படாவிட்டால் அவர்கள் சட்டத்தை மீறத்தொடங்குவதோடு பலவிதக் குழப்பங்களும், தொல்லைகளும் உண்டாகும். குடியரசும் நிலைகுலைந்து போய் விடும். ஏனெனில் இந்தக் கொடுமை தனிப்பட்டவர்களாலோ, அன்னியப் படைகளினாலோ செய்யப் பட்டதில்லை; பொது சக்தியான ஆட்சிக்குழுவினால் விளைந்ததுவேயாகும்.

வதந்தியினால் வரும் கேடு :

குடியரசிலும், மற்ற எந்த அரசிலும், மிகவும் அருவருக்கத் தகுந்த நிகழ்ச்சி வதந்தி கிளப்பி விடுவதுதான். அவைகளைக் காலா காலத்தில் அடக்குவதற்குக் கையாள வேண்டிய முறைகளையெல்லாம் ஒன்று பாக்கிவிடாமல் செய்ய வேண்டியது. அந்த அரசின் கடமையாகும். சட்டரீதியாகக் குற்றஞ்சாட்டக் கூடிய முறையை ஏற்படுத்துவதைக் காட்டிலும், வதந்திகளை நிறுத்துவதற்குச் சரியான வழி வேறு எதுவும் இல்லை. வதந்திகள் ஒரு குடியரசை எவ்வளவு பாழ்படுத்த முடியுமோ, அவ்வளவு இந்த முறை நலங்கொடுக்கும் என்பது திண்ணம்.

வதந்தி கிளப்பி விடுவதற்கும் குற்றஞ்சாட்டுவதற்கும் ஒரு பெரிய வேற்றுமை இருக்கிறது. வதந்திக்கு எவ்விதமான சாட்சியமோ சான்றோ தேவையில்லை; அதை மெய்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை; நேருக்கு நேர் எதிர்த்து நின்று பழி சுமத்த வேண்டியதுமில்லை! ஆகவே ஒவ்வொரு மனிதனும் மற்றொரு மனிதனால் வதந்தியை ஏற்றுக் கொள்ளும்படி செய்யப்பட முடியும். ஆனால், குற்றஞ் சாட்டுவது என்ற முறை ஏற்பட்டால், யாரும் யார் மீதும் தக்க சான்றில்லாமல் எதுவும் செய்யாது. குற்றச்சாட்டுகள், நீதிபதிகளின் முன்னாலோ, முடி அல்லது ஒரு சட்ட சபையின் முன்னாலோ அல்லது பொது மக்கள் முன்னிலையிலோ கொண்டு வந்து தான் செய்யப்பட வேண்டும். வதந்தியோ பொது இடங்களில் மட்டுமல்லாமல் தனி வீடுகளிலுங் கூடக் கூறப்படுகின்றன. குற்றஞ்சாட்டக் கூடிய முறையில்லாத இடங்களில்தான் வதந்தியைப் பரப்பும்முறை பெரிதும் கையாளப்படுகிறது. குற்றஞ்சாட்டும் முறையை அனுமதிக்காத அரசியலமைப்புக்களைக் கொண்ட நகர அரசுகளில்தான். வதந்தி கிளப்பி விடும் முறை கையாளப்படுகிறது.

ஒரு குடியரசுக்குச் சட்டம். வகுப்பவன், ஒவ்வொரு குடிமகனும் மற்றொருவன் மேல் எவ்விதமான பயமோ, சந்தேகமோ இல்லாத முறையில் குற்றஞ்சாட்டக் கூடிய உரிமையை அந்தச் சட்டத்தின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும். வதந்தி கிளப்புபவர்களுக்குக் கொடிய தண்டனை வழங்க வேண்டும். இந்த முறை சரியாக நிலை பெறாத இடங்களில் எப்பொழுதும் ஒழுங்கற்ற நிலையே இருந்து கொண்டிருக்கும். ஏனெனில் இந்த வதந்திகள் யார்மீது கிளப்பி விடப்பட்டனவோ அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை; அவர்களுக்கு இதனால் மன அரிப்புத் தான் ஏற்படும். இந்த மன அரிப்பின் காரணமாக அவர்கள் தங்களை வலுப்படுத்திக்கொள்ள நினைப்பார்கள். தங்கள்மீது ஏற்பட்டுள்ள வதந்திகளை வெறுப்பார்களே தவிர அவற்றிற்குச் சிறிதும் அஞ்சமாட்டார்கள்.

ஆட்சி, தனி மனிதனிடத்தில் இருக்க வேண்டும் :

ஒரு புதிய குடியரசை அமைப்பதோ அல்லது பழைய அமைப்பை முற்றிலும் சீர்திருத்துவதோ ஒரே ஒரு மனிதனுடைய செயலாக இருக்க வேண்டும். ஓர் அரசியலமைப்பை ஏற்படுத்தியவன், தானே அதை நடைமுறையில் கொண்டு வருவது இன்றியமையாதது. அப்பொழுதுதான் அது நல்ல அமைப்பையும் நிர்வாகத்தையும் பெற்றதாகவும் தன் சொந்த நலத்தினும் பொது மக்கள் நலத்தை முன்னேற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டவனும், தன் வாரிசுகளைக் காட்டிலும் தன் தேசத்தையே பெரிதாகக் கருதுபவனும் ஆகிய ஒரு விவேகமுள்ள சட்டம் வகுப்பவன் எல்லாவிதமான அதிகாரங்களையும் தன் ஒருவனிடத்திலேயே வைத்திருப்பது அவசியம். இம்மாதிரியாக ஒருவன் ஓரரசையோ, குடியரசையோ நிலை பெறச் செய்வதற்கு - என்று செய்த எவ்விதமான அசாதாரணமான காரியத்தையும், புத்தியுள்ள எந்த மனிதனும் மறுத்துரைக்க முன் வரமாட்டான். அவன் செய்த காரியத்திற்காகச் சட்டம் அவனைக் குற்றம் சுமத்துமானால், அந்தக் காரியத்தால் ஏற்பட்ட நல்ல பலன் அவனை அந்தக் குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கும்.

ஒரு நீதி முறையை ஏற்படுத்தி ஆட்சி நடத்தியவன், தன் அதிகாரத்தைத் தன் வாரிசுகளிடமோ, அல்லது தான் தேர்ந்தெடுக்கக் கூடிய ஒருவனிடமோ விட்டுச் செல்வது புத்திசாலித்தனமான காரியமல்ல. ஏனெனில், மனிதத்தன்மை நன்மையைக் காட்டிலும் தீமையின் பக்கமே சாயும் இயல்புடையது. அவன் பொது நன்மைக்காகவே பயன்படுத்தி வந்த அதிகாரத்தை அவனுடைய பின் வாரிசாக வரக் கூடியவன் தீய காரியங்களுக்காகப் பயன்படுத்தக் கூடும். தவிரவும் ஓர் அரசாங்கத்தைத் தனி மனிதனே இயக்குவது நல்லது என்றாலும், அதை நடத்தும் பொறுப்பு முழுவதும் தனியொருவனிடத்திலேயே இருக்குமானால், அந்த அரசு நெடுநாளைக்கு நிலைத்திராது என்பது உண்மை. ஆகவே அதன் பொறுப்பைப் பலரிடத்திலே ஒப்படைப்பதுதான் நல்லது. எந்த நிர்வாகமும் பலரால் நடத்தப்படக் கூடியது அல்ல. ஏனென்றால் அவர்களுடைய கருத்து வேற்றுமைகள் எது சிறந்த முறை என்பதை ஒப்புக்கொள்ளத் தடையாக இருக்கின்றன. இருப்பினும் இந்தத் தடையின் காரணத்தைச் சரியாகப் புரிந்து கொண்டவுடன், ஆட்சிப் பொறுப்பைக் கைவிட்டு விடுவதற்கு அவர்கள் உடனடியாக ஒப்புக்கொண்டுவிட மாட்டார்கள். இப்படிப்பட்ட பல விஷயங்களையும் யோசித்துத்தான் அரசுகளை ஏற்படுத்தியவர்கள் அதிகாரம் முழுவதையும் தம்மிடமே வைத்திருந்தார்கள்.

கீர்த்திக்கு வழி :

பாராட்டுக்குரிய எல்லா மனிதர்களிலும் மதங்களை ஏற்படுத்தியவர்களே முதன்மையாகப் பாராட்டப்படுகிறார்கள். அடுத்தப்படியாக குடியரசு அல்லது சாம்ராஜ்யங்களை யுண்டாக்கியவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கும் பின்னால், தங்கள் சாம்ராஜ்யத்தை அல்லது தேசத்தை விஸ்தரித்த வீரர்கள் வருகிறார்கள். இவர்களோடு இலக்கியம் படைத்தவர்களையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், அவர்கள் வேறு துறையினராய்ப் போய்விட்டபடியால் இந்தப் பட்டியலில் சேர்க்க வேண்டியதில்லை. மதங்களை அழித்தவர்களும், அரசுகளை நிலை குலையச் செய்தவர்களும், நேர்மைக்குப் பகையாய் உள்ளவர்களும் வெறுத்துப் பழித்துச் சபிக்கப்படுகிறார்கள். அடி முட்டாள்களாகவோ, அதி புத்திசாலிகளாகவோ, பெருங்கொடுமைக்காரர்களாகவோ, மிக நல்லவர்களாகவோ யாரும் இல்லாதபடியால், இந்த இருவகைப் பட்டவர்களிலே யாரும் இல்லாதபடியால், போற்றப்பட வேண்டியவர்களைப் போற்றுவாருமில்லை, தூற்றப்பட வேண்டியவர்களைத் தூற்றுவாரும் இல்லை.

பெரும்பாலும் எல்லா மனிதர்களும் மாயமான நல்ல தன்மையையும் மாயமான கீர்த்தியையும் கண்டு ஏமாந்து அறியாமையுற்று அவமதிப்புக்குரியவற்றைப் போற்றிப் புகழத் தாமாகவே முன்வந்து விடுகிறார்கள்.

பரம்பரை வாரிசுரிமைப்படி ஆட்சிக்கு வந்த மன்னர்கள் அனைவருமே, ஒருவரிருவரைத் தவிரக் கெட்டவர்களாகவே யிருந்திருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட சக்கரவர்த்திகள் எல்லாருமே நல்லவர்களாகவேயிருந்திருக்கிறார்கள். பரம்பரை வாரிசுரிமை ஆட்சிக்கு ஆட்பட்ட தேசங்கள், சாம்ராஜ்யங்கள் அழிந்தே போயிருக்கின்றன.

நல்ல பேரரசர்களின் ஆட்சிக் காலத்திலே இருந்த மன்னன் மக்களிடையிலே தானும் பாதுகாப்பாக இருப்பான். ஏனெனில், மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள். உலகில் நீதியும் சமாதானமும் நிலைத்திருக்கும். ஆட்சிக் குழுவினருக்கு மதிப்பும், நீதிபதிகளுக்கு மரியாதையும் கிடைக்கும், பணக்காரர்களும் தங்கள் செல்வங்களை அனுபவித்துக் கொண்டு சுகபோகங்களில் இன்பமாக இருப்பார்கள். எங்கும் இன்பமும் வளமும் நிறைந்திருக்கும். நல்ல பேரரசர்களின் ஆட்சி பொற்காலமாயிருக்கும். குடிமக்கள் பாதுகாப்பாகவும் இன்பமாகவும் இருப்பதால், தங்கள் அரசனிடம் அன்பும், மதிப்பும், மரியாதையும் உடையவர்களாயிருப்பார்கள். ஆனால், தீய மாமன்னர்களின் ஆட்சியிலோ, குழப்பமும், கலகமும், பகைமையும் குரோதமும் தாண்டவமாடக் காணலாம். ஓர் அரசன் உலகத்தின் நல்லெண்ணத்திற்கும், கீர்த்திக்கும் பாத்திரனாக வேண்டுமென்றால், நிலை குலைந்த ஒரு நகரத்துக்கோ நாட்டுக்கோ அவன் அதிபதியாயிருக்க வேண்டும். அதை அவன் முழுதும் அழிக்கக் கூடாது. திரும்பவும் நல்ல நிலைக்குக் கொண்டுவரப் பாடுபட வேண்டும். ஓர் அரசன் கீர்த்தியடைய இதைக் காட்டிலும் அருமையான சந்தர்ப்பத்தை ஆண்டவன் கூடக் கொடுக்க முடியாது.

மதமும் அரசியலும்:

ரோமானிய சரித்திரத்தை ஊன்றிப் படித்தால் படைகளை நடத்துவதற்கும், மக்களை நல்லொழுக்கமுள்ளவர்களாக வைத்திருப்பதற்கும் மதம் எவ்வளவு தூரம் உதவி புரிந்திருக்கிறது என்பது தெரியவரும். மதம் இருக்கக் கூடிய தேசத்திலே தான் இராணுவமும் ஒழுங்கும் இருக்கும்படி செய்வது எளிதாகும். இராணுவம் மட்டும் இருந்து மதம் இல்லாத தேசத்திலே ஒழுங்கு இருப்பது அரிது. ரோமுலஸ், ஆட்சிக் குழுவையும் வேறு தேசிய இராணுவ அமைப்புக்களையும் தெய்வீக சக்தி எதுவும் இல்லாமலே நடத்த முடிந்தது. ஆனால் நூமாவுக்கு அவை அதிகம் தேவைப்பட்டன. நூமா தெய்வீக சக்தியைக் கையாளாமல் இருந்திருந்தால், அவனுடைய அருமையான நீதிமுறைகள் எல்லாம் புறக்கணிக்கப்பட்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. அவன் தான் நினைத்ததையெல்லாம் நிறைவேற்றுவதற்காகத் தான் வன தேவதையொன்றுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகக் கூறி வந்தான். ரோமானியர்கள் நூமாவின் ஆலோசனைகளையெல்லாம் ஏற்றுக்கொண்டார்கள்.

பிளாரன்ஸ் தேசத்து மக்கள் அறியாமை மிகுந்தவர்களல்ல. இருந்தாலும், ஜீரோலாமோ சாவனரோலா தான் கடவுளுடன் பேசியதாக அவர்களை நம்பச் செய்தான். இது உண்மையா பொய்யா என்பதைப் பற்றி நான் இப்போது பேசப் போவதில்லை. ஆனால், ஏராளமானவர்கள் அதை நம்பினார்கள். அவர்கள் நம்புதற்குரிய அதியற்புதமான அசாதாரண நிகழ்ச்சிகள் எதையும் அவர்கள் காணாவிட்டாலும் கூட, அவனுடைய வாழ்க்கைத் தூய்மையையும், உபதேசமொழிகளையும், அவன் பேச எடுத்துக்கொண்ட விஷயங்களையும் கண்ட மக்கள் அவனை நம்பத் தயங்கவில்லை. எல்லோரும் பிறப்பதும் இறப்பதும் ஒரே மாதிரிதான். ஆகவே யாவரும் ஒருவரைபோல் ஒருவர் இருக்கிறோம் என்பதிலும் ஐயமில்லை. எனவே மற்றவர்களால் செய்யப்பட்ட இது போன்ற காரியத்தை நம்மால் செய்ய முடியுமா என்று யாரும் பயப்படத் தேவையில்லை.

விடுதலையுற்ற அரசின் எதிரிகள் :

நெடு நாளாக அடைத்தே வைக்கப்பட்டிருந்த காட்டு மிருகம் ஒன்று, கூட்டைத் திறந்து விட்டவுடன் வெளியே பாய்ந்தோடி, தனக்கு உணவும் உறையுளும் தேடிக்கொள்ள வகையற்றதாய்த் திரியும்போது, அதைப் பிடித்துக் கட்டி வைப்பதற்குக் காத்திருக்கும் முதல் ஆளிடம் மீண்டும் அகப்பட்டுக் கொள்வது போன்ற நிலையில்தான், சந்தர்ப்ப வசமாக ஓர் அரசனின் ஆட்சிக் கொடுமையிலிருந்து விடுதலையுற்ற மக்கள் இருக்கிறார்கள்.

பொதுக் காரியம் எதுவென்றோ, பகைமை எது அல்லது பாதுகாப்பு எதுவென்றோ அறியாதவர்களாகவும் மன்னர்களைத் தாங்கள் தெரிந்து கொள்ளாமலும் அவர்களால் தாங்கள் தெரிந்து கொள்ளப் படாமலும் இருந்து. இந்த நிலையில், முன்னைய ஆட்சியைக் காட்டிலும் மோசமான ஆட்சிக்கு வெகு எளிதில் உட்படக் கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இத்துடன் இன்னொரு கஷ்டமும் இருக்கிறது. விடுதலையடைகிற ராஜ்யம் நண்பர்களைப் பெறுவதில்லை; பகைவர்களையே பெறுகிறது. கொடுங் கோலாட்சியில் நன்மையடைந்தவர்களும், மன்னனின் நிதிப் பணத்தில் உண்டு கொழுத்தவர்களும், ஆட்சி மாறியவுடன் அப்படிப் பட்ட வசதிகளையெல்லாம் இழந்து விடுகின்றபடியால், அதன் பகைவராக மாறுகிறார்கள். முந்திய அதிகாரங்களையும் நன்மைகளையும் திரும்பப் பெறுவதற்காக அந்த மனிதர்கள் மீண்டும் கொடுங்கோலாட்சியைக் கொண்டுவர முயற்சி செய்கிறார்கள். இதனால்தான் விடுதலையடைகிற ஓர் அரசு நண்பர்களைப் பெறுவதில்லை; பெரும் பகைவர்களையே பெறுகிறது என்று கொள்கிறோம். இந்தப் பகைவர்களைக் கொன்றொழிப்பதைத் தவிர, அந்த நாடு தன் விடுதலையைக் காப்பாற்றிக் கொள்ள வேறு வழி எதுவும் இல்லை.

பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு

- திருக்குறள்

பழமைப் போர்வையில் புதுமையைப் புகுத்த வேண்டும் :

ஒரு ராஜ்யத்தின் அரசாங்கத்தைச் சீர்திருத்த முயல்கிறவன் அதன் பழைய நடவடிக்கைகளின் வெளித் தோற்றம் மாறாதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியும். உண்மையில் மகத்தான மாறுதல் ஏற்பட்டிருந்தாலும் வெளிக்கு மாறாததுபோல் தோன்றச் செய்ய வேண்டும். இந்த இரகசியத்தை ரோமானியர்கள் நன்றாக உணர்ந்திருந்தார்கள் என்று தெரிகிறது. அவர்கள் ஆட்சியைக் கைப்பற்றி இரண்டு தலைமையதிகாரிகளை அரசனுக்குப் பதிலாக நியமித்த அவர்கள், அவர்களுடைய உத்தியோகஸ்தர்களைப் பனிரெண்டு பேருக்கதிகமாக நியமிக்கவில்லை. ஏனெனில் அரசன் பனிரெண்டு உத்தியோகஸ்தர்களையே வைத்திருந்தான். தவிரவும் ரோமானியர்கள் ஆண்டுதோறும் பலி கொடுக்கும் திருநாள் ஒன்றை நடத்தி வந்தார்கள். இதை அரசனே நேரில் சென்று நடத்தி வைப்பது வழக்கமாக இருந்து வந்தது. அரசனில்லாததால் தங்கள் பரம்பரைப் பழக்கவழக்கங்கள் மாறிவிட்டதாக மக்கள் குறைப்பட்டுக் கொள்ளக் கூடாதென்று எண்ணிய அரசியல்வாதிகள், இந்தச் சடங்கைச் செய்வதற்காகப் பலியரசன் என்ற பெயரில் ஒரு விசேஷத் தலைவனை உண்டாக்கினார்கள். அவனுக்குத் தங்கள் மதகுருவிற்கு அடுத்த இடத்தில் வைத்துப் போற்றினார்கள். புதிய சீர்திருத்தங்களை மேற்கொள்ள விரும்புகிறவர்கள் இந்தமுறையைக் கையாள வேண்டியது இன்றியமையாதது. ஆனால், பழங்காலத்து ஆசிரியர்கள் கொடுங்கோலர்கள் என்று குறிப்பிட்டபடி சர்வாதிகாரமாக, நடக்க எண்ணுபவர்கள் எல்லாவற்றையும் அடியோடு மாற்றித்தான் ஆக வேண்டும்.

புதிய அரசன் முழுக்க முழுக்கக் கெட்டவனாயிருக்க வேண்டும்.

புத்தம் புதிதாக ஒரு ராஜ்யத்திற்கு அல்லது நகரத்திற்கு அரசனாக வருகிறவன். முக்கியமாக அவனுடைய அதிகாரத்தின் அடிப்படை பலமற்ற நிலையில் இருக்கும் சமயத்தில் அவன் ஒரு குடியரசையோ அல்லது முடியரசையோ ஏற்படுத்த விரும்பாத நிலையில் அவன் அந்த அரசாங்கத்தை முற்றிலும் புதிய முறையில் நடத்துவது சிறந்த வழியாகும். அதாவது, அவன் புதிய பட்டங்களும், புதிய அதிகாரங்களும் கூடிய புதிய ஆட்சித்தலைவர்களை நியமிக்க வேண்டும். புதிய மனிதர்களை உண்டாக்க வேண்டும். ஏழைகளைப் பணக்காரர் ஆக்க வேண்டும். பணக்காரர்களை மொட்டையடிக்க வேண்டும். இதுவும் தவிரப் பழைய நகரங்களை அழித்துப் புத்தம் புதிய நகரங்களை உண்டாக்கவேண்டும். ஓரிடத்தில் இருக்கும் குடிமக்களை மற்றோரிடத்திற்குக் குடியேறச் செய்யவேண்டும். தன் ஆட்சிக்குட்பட்ட, பட்டம், பதவி, செல்வம், மரியாதை, இடம், ஊர், மக்கள் ஆகிய எதுவும் மாறுபடாமல் இருக்கும்படி விடக்கூடாது. அலெக்ஸாண்டரின் தந்தை பிலிப் இப்படித்தான் சாதாரணச் சிற்றரசனாக இருந்து கிரேக்க தேசத்துப் பேரரசனாக மாறினான். அவன் தன் குடிமக்களை ஆட்டு மந்தைகளை நடத்திச் செல்வது போல் ஓர் ஊரிலிருந்து மற்றோர் ஊருக்கு விரட்டிக்கொண்டு சென்றான் என்று சரித்திர ஆசிரியர்கள் கூறுகிறார்கள். உண்மையில் இது நாகரிகத்திற்குப் புறம்பான பெருங்கொடுமையான செயல்தான். இருப்பினும் மனிதத் தன்மையுள்ள முதல் வழியைக் கடைப்பிடிக்க விரும்பாத எவனும், தன் அதிகாரத்தை நிலை நிறுத்திக் கொள்ள விரும்பினால், இந்தக் கொடிய நடைமுறையைத்தான் கையாள வேண்டும். ஆனால், பொதுவாக மனிதர்கள் இரண்டுக்கும் இடையேயுள்ள முறையையே மோசமான வழியையே பின்பற்றுகிறார்கள். ஏனெனில், முழுக்க முழுக்க நல்லவராயிருக்கவோ அல்லது முழுக்க முழுக்கக் கெட்டவராயிருக்கவோ அவர்களுக்குத் தெரிவதில்லை.

நன்றி கெட்டவர் யார்?

நன்றி கெட்டவர்கள் என்று சொல்லப்பட வேண்டியவர்கள் ஒரு தேசத்து மக்களா அல்லது அரசனா என்று அறிந்து கொள்வதற்கு முன் நன்றி கெட்ட தனம் எப்படியுண்டாகிறது என்று தெரிந்துகொள்ள வேண்டும். லோபித்தனத்தினால் அல்லது பயத்தினால்தான் நன்றிகெட்டதனம் உண்டாகிறது. ஒரு தேசத்து மக்களோ அல்லது மன்னனோ ஒரு படைத்தலைவனை வெளி தேசத்தின்மீது படையெடுத்து வரும்படி அனுப்புகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவன் தன் வெற்றிகளினால் பெருங் கீர்த்தியடைந்து திரும்பி வந்தால் மன்னனோ அல்லது மக்களோ, அவனுக்கு வெகுமதியளித்துச் சிறப்பிக்க வேண்டும். ஆனால், தங்கள் லோபகுணத்தினால் அவனுக்கு வெகுமதியளிக்காமல் பெருந்தீமையிழைத்து அவகிர்த்தியைத் தேடிக் கொள்கிறார்கள், இதற்கு டாசிட்டஸ் கீழ்க்கண்டவாறு காரணம் கூறுகிறான். “மனிதர்கள் நன்றியற்றவராக நன்மை செய்வதைக் காட்டிலும் நன்றிக் கேடாகத் தீமை செய்யவே தயாராயிருக்கிறார்கள். ஏனெனில், நன்றி காட்டுவது பெருஞ் சுமையாகவும், கேடிழைப்பது இன்பந் தருவதாகவும் இருக்கிறது”. சரித்திரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் ஏராளம். ஒரு படைத் தலைவன் அடைந்த பெரு வெற்றியே அவனுக்குக் கசப்புத் தரக் கூடியதாகி விடக் கூடும். அவன் அடைந்த வெற்றிக்குக் காரணம் அவன் திறமையல்ல என்றும், எதிரியின் கோழைத்தனம் அல்லது கூடச் சென்ற துணைப்படைத் தலைவர்களின் உழைப்பாக இருக்கும் என்று கூறி அவனைச் செல்வாக்கிழக்கச் செய்துவிடுவார்கள்! சில சமயம் கொன்றுவிடவும் செய்வார்கள்.

அச்சமும் ஐயப்பாடும் அரசர்களுக்கு ஏற்படுவது இயல்பு. அவற்றை எதிர்த்துத் தங்களைக் காப்பாற்றிக்கொள்ள அவர்களால் இயலாது. ஓர் அரசன் எப்படித் தவறு செய்யாமல் இருக்க முடியாதோ அப்படியே ஒரு தேசத்து மக்களும் இருக்க முடியாது என்று கூறுவதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

முடிவாக, இந்தத் தவற்றுக்கு லோபித்தனம் காரணமாக மக்கள் ஆளாவதே கிடையாது. அச்சத்தின் காரணமாக அரசர்களைப் போல அவர்கள் இதற்கு ஆளாவதும் அதிகமில்லை. ஏனெனில் அவர்கள் அச்சமடையக் காரணமும் அதிகமில்லை.

ஆபத்துக் காலத்துச் சலுகை :

ரோமாபுரியின் ஆட்சிப் பீடத்தில் மீண்டும் பழைய மன்னர்களான டார்க்குவின்களை அமர்த்துவதற்காகப் போர் சென்னாதாக்கிய போது, ரோமானியக் குடியரசுக்கு ஆபத்து வந்துவிட்டது. யுத்தத்தில் இறங்குவதைக் காட்டிலும், பழைய அரசர்களையே திரும்பவும் குடிமக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களா என்ற சந்தேகம் ஆட்சிக் குழுவினருக்கு ஏற்பட்டது. இந்தச் சந்தேக நிலையை நீக்கித் தங்கள் நிலையை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உப்பு வரி போன்ற சில வரிகளை அவர்கள் நீக்கிவிட்டார்கள். பஞ்சம், போர் முதலிய கொடுமைகளைப் பொறுத்துக்கொண்டு மக்களும் எதிரிகளை எதிர்த்துப் போராட உதவியாயிருந்தார்கள். ஆனால், இதே உதாரணத்தை எல்லா அரசுகளும் பின்பற்றி விடக் கூடாது. ஏனெனில் இப்படிப்பட்ட சலுகைகளுக்கு ஆட்சியாளர்கள் தாம் காரணம் என்று மக்கள் நினைக்கமாட்டார்கள். தங்கள் பகைவர்கள் தாம் காரணம் என்றுதான் எண்ணுவார்கள். போர் முடிந்ததும் மீண்டும் அந்த வரிகள் குட்டி போட்டுக் கொண்டு வந்துவிடும் என்பதை அவர்கள் அறியாதவர்கள் அல்ல. ஆனால், ரோமாபுரியில் மட்டும் இந்தக் கொள்கை வெற்றி பெற்றதே என்றால் அங்கு அந்தச் சமயத்தில் ஆட்சி புதிது. வேறு பல சட்டங்கள் தங்கள் நன்மைக்காக உருவாக்கப்பட்டதை மக்கள் அறிந்திருந்தார்கள். பகைவர்கள் வந்து விட்டதால் வரிவிலக்கு அளிக்கப்பட்டது என்று நினைக்காமல்.- தங்கள் ஆதரவைப் பெறுவதற்காக ஆட்சிக் குழுவினர் செய்த ஏற்பாடு என்று அவர்கள் கருதினார்கள்.

எந்தக் குடியரசுத் தலைவனோ, அல்லது அரசனோ. ஆபத்துக் காலத்தில் மக்களுக்குச் சலுகையளிப்பதன் மூலம் அவர்கள் நல்லெண்ணத்தைப் பெறலாம் என்று எண்ணினால் அவன் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டவனாகிறான் என்பதில் ஐயமில்லை. மக்களின் நல்லெண்ணத்தைப் பெறாமற் போவது மட்டுமல்லாமல் அவன் தனக்கே குழி தோண்டிக்கொண்டவனும் ஆவான்.

தீயசக்திகளை எதிர்க்கக் கூடாது:

ஒரு குடியரசுக்கு உள்ளாக ஒரு தீயசக்தி எழுந்தாலோ அல்லது வெளியிலிருந்து கொண்டு அந்த தீயசக்தி அச்சுறுத்திக் கொண்டு இருந்தாலோ, அதைச் சூழ்நிலைக்குத் தகுந்தபடி நடந்து படிப்படியாக வலுவிழக்கச் செய்ய வேண்டுமேயல்லாமல் அடியோடு நிர்மூலப்படுத்த முயலக்கூடாது. அதை வேரோடழித்துவிட முயல்கிறவன் அதனுடைய வேகத்தை அதிகரிக்க உதவுபவனாகவே ஆகிறான். இப்படிப்பட்ட தீய சக்திகள் வெளிக் காரணங்களைக் காட்டிலும் பெரும்பாலும் ஒரு குடியரசின் உட்காரணங்களிலிருந்தே எழுகின்றன. அது பெரும்பாலும் ஒரு குடிமகனிடம் அவனிடம் இருக்கவேண்டியதற்குமேல் அதிகமான அதிகாரம் தேடிக்கொள்ள அனுமதித்து விடுவதன் பலனாக ஏற்படுகிறது; அல்லது சுதந்திரத்தின் உயிர்நாடியான நீதி முறையில் மாறுதல்கள் அனுமதிக்கப்படுவதால் உண்டாகிறது. அதன் பிறகு இந்த ஆபத்து, திருத்தப்பட முடியாத அளவுக்கு மோசமாக வளர்ந்துவிடுகிறது. எந்த விஷயத்தையும் ஆரம்பத்தில் ஆதரிப்பது மனிதர்களின் இயல்பாக இருப்பதால் இந்தத் தீய சக்திகளை அவற்றின் அடிப்படை வேர்க்கொள்ளும்போதே கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமாயிருக்கிறது. அதிலும் இப்படிப்பட்ட செயல்கள் ஏதோ சிறிது தகுதியுடையதாகத் தோன்றும் பொழுதும், இளைஞர்களால் செய்யப்படும் பொழுதும் இந்த ஆதரவு வெகு விரைவில் கொடுக்கப்படுகிறது. ஒரு குடியரசில் அசாதாரணமான தகுதிகள் வாய்ந்த ஒரு மேற்குலத்து இளைஞன் தலைதூக்குவதைக் கண்டால், குடிமக்கள் எல்லோருடைய கணகளும் அவன் பக்கம் திரும்புகின்றன. விளைவைப் பற்றி எண்ணிப் பாராமல் எல்லோரும் அவனுக்கு மதிப்பளிக்க முந்துகிறார்கள். இந்த மாதிரியாக வெகு விரைவில் அவன் உயர்ந்த நிலைக்கு வந்து விடுகிறான். குடிமக்கள் தங்கள் தவறுதலை உணர்கின்ற காலத்தில் அவனை அடக்கக்கூடிய வழிவகையற்றவர்களாகி விடுகிறார்கள்.

இப்படிப்பட்ட தீயசக்திகளை விலக்குவதற்குக் கையாளக் கூடிய புத்திசாலித்தனமானவழி அவற்றைக் கடுமையாக எதிர்ப்பதல்ல காலத்திற்கேற்றபடி நடந்து, அவற்றைத் தாமாகவே அழியச் செய்ய வேண்டும். அல்லது அவற்றின் தீயவிளைவுகளை நீண்டகாலங் கடந்து நிகழும்படியாவது விட்டுவிடவேண்டும். இப்படிப்பட்ட தீயசக்திகளை ஒழிக்க விரும்புகின்ற அரசர்கள் அல்லது அதிகாரிகள் எல்லாவிஷயங்களையும் நன்றாக ஆராய்ந்து பார்த்து அவற்றைத் தாக்குகின்ற காரியத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டும். நெருப்பை ஊதியணைத்து விடலாம் என்று அவர்கள் நம்பிவிடக் கூடாது. அந்தத் தீய சக்தியின் அளவையும் ஆற்றலையும் நன்றாக உணர்ந்து, அதை எதிர்க்கப்போதுமான பலம் தங்களிடம் இருக்கிறதென்று கருதினால், விளைவைப்பற்றி எண்ணாமல் அவர்கள் தாக்க வேண்டும், இல்லாவிட்டால் அந்த முயற்சியையே கைவிட்டு விட வேண்டும்.

குடியரசு, சமயத்தில் சர்வாதிகாரத்திற்கு இடங்கொடுப்பதாய் இருக்கவேண்டும் :

ரோமாபுரியை ஆண்ட முதல் கொடுங்கோலரசன் சர்வாதிகாரி என்ற பெயரில் ஆண்டதன் காரணமாக, யதேச்சாதிகார ஆட்சிக்கு வழிகோலும் முறையில் ரோமானியர்கள் சர்வாதிகாரர்களை உற்பத்தி செய்ததாகச் சொல்லிக் குற்றஞ்சாட்டுகின்ற பல ஆசிரியர்கள் இருக்கிறார்கள். சீசர்கூட இந்தப்பட்டப் பெயருக்குத் தகுந்தாற்போல் நடக்க வேண்டும் என்பதற்காகவே எதேச்சாதிகாரமாக நடந்து கொண்டான் என்று கூறுகிறார்கள், ரோமாபுரியின் ஆட்சிப் பீடத்திற்குச் சர்வாதிகாரி என்ற பட்டம் இல்லாவிட்டால் வேறொரு பட்டம் இருக்கப்போகிறது என்பதில் சந்தேகமில்லை. ஓர் ஆதிக்க சக்தி எந்தப் பெயரையும் தனக்குச் சூட்டிக்கொள்ள முடியும். ஆனால், எந்த ஒரு பெயரும் அந்த சக்தியைக் கொடுத்துவிட முடியாது. பொது நீதி முறைப்படி உண்டாக்கப்பட்ட சர்வாதிகாரம் எப்பொழுதும் ரோமாபுரிக்கு நன்மையையே ஏற்படுத்தியிருக்கிறது. முறைப்படி ஏற்படுத்தப்பட்ட எந்தச் சர்வாதிகாரியும் ரோமாபுரிக் குடியரசுக்குப் பயன் கொடுக்கத் தவறியதே கிடையாது.

இதற்குக் காரணம் தெளிவானது. ஒரு குடிமகன் அசாதாரணமான அதிகாரமுடையவனாவதற்கு முன்னால் பல காரியங்கள் நடக்க வேண்டியிருக்கின்றன.

சர்வாதிகாரியாக வரக்கூடியவன் பெரும் பணக்காரனாக இருக்கவேண்டும். பக்கத் துணையாகவும் அனுசரணையாகவும் இருக்கக்கூடிய பலர்தன் கட்சியைச் சேர்ந்தவர்களாயிருக்க வேண்டும். நீதிமுறைகள் கண்காணிக்கப்படுகிற நாட்டில் இது நடைபெறாத காரியம். அப்படியே அவன் கட்சி சேர்த்துக் கொண்டவனாயிருந்தால், பொதுமக்கள் அவனை ஓர் ஆபத்தான ஆசாமியாகக் கருதுவார்கள். ஆகையால் அவர்களுடைய ஆதரவு அவனுக்குக் கிடைக்காது. மேலும் சர்வாதிகாரிகள் குறிப்பிட்ட கால வரையறையளவே நியமிக்கப்படுவார்கள். அந்தக் குறிப்பிட்ட கால அளவிற்கே அவர்கள் அதிகாரம் செல்லுபடியாகும். ஆபத்துக் காலத்தில் நியமிக்கப்படுகிற சர்வாதிகாரி, அவசரத்தை முன்னிட்டு யாருடைய யோசனையையும் கேளாமல் தனக்குச் சரியென்று தோன்றுகிறபடி எதுவும் செய்யலாம். எவருடைய முறையீட்டையும் கேட்காமல் அவர்களைத் தண்டிக்கலாம். இப்படிப்பட்ட காரியங்களைச் செய்யலாமே தவிர, அரசாங்கத்தில் எவ்விதமான மாறுதலையும் செய்யவோ, ஆட்சிக்குழு அல்லது மக்களின் அதிகாரத்தைக் குறைக்கவோ, இருக்கின்ற அமைப்புக்களை ஒழித்துக் கட்டிவிட்டுப் புதிய அமைப்புக்களை உண்டு பண்ணவோ, ஒரு சர்வாதிகாரியால் முடியாது. குறிப்பிட்ட கால அளவுக்கு வரையறுக்கப்பட்ட அதிகார எல்லைக்குள் நின்று செயலாற்றும்படி நியமிக்கப்பட்ட சர்வாதிகாரிகளால் ரோமாபுரிக் குடியரசு நன்மையடைந்ததே தவிர எவ்விதமான தீமையும் அடையவில்லை.

வேனில் குடியரசில், குடிமக்களில் ஒரு சிலர், அவசரமான காரியங்களில் பெரிய ஆலோசனை சபையைக் கலக்காமலே முடிவு செய்யும் அதிகாரம் உடையவர்களாய் இருந்தார்கள். இப்படிப்பட்ட ஏதாவதொரு முறையில்லை யானால் நீதிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றுகின்ற எந்தக் குடியரசும் அழிந்துவிடும். அப்படி அது அழியாமல் காப்பாற்ற சட்டத்தைச் சட்டை செய்யாமலாவது இருக்கவேண்டும். எல்லாவற்றிற்கும், எந்தவிதமான அவசர நிலைமைக்கும் பொருந்தக்கூடிய நீதி முறையில்லாத எந்தக் குடியரசும் பூரணமானதல்ல. முடிவாகச் சொன்னால், ஆபத்தான அல்லது இக்கட்டான சமயத்தில் சர்வாதிகாரம் அல்லது அதைப்போன்ற ஏதாவது ஓர் அதிகாரத்திற்கு உட்படாத எந்தக் குடியரசும் பொதுவாக அழிந்துவிடும் என்றே கூறவேண்டும்.

உயர்பதவியிலிருந்தவன் கீழான பதவியையும் ஏற்கவேண்டும்:

ரோமாபுரிக் குடியரசின் தலைமை அதிகாரியாய் இருந்த குவின்டஸ் பேபியஸ் சேனைத் தலைவனாக மாறினான். ஒரு மகத்தான போரில் தன் தேசத்திற்கு வெற்றியைத் தேடிக் கொடுத்துத் தன் உயிரையும் இழந்தான். ரோமானியர்கள் கீர்த்தியிலும் புகழிலும் பெரு நாட்டமுடையவர்களாயிருந்த போதிலும், தங்கள் அதிகாரத்திற்குட்பட்டிருந்தவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடப்பதை அவமானமாகக் கருதவில்லை என்பது இதிலிருந்து நமக்குத் தெரிகிறது. இந்த வழக்கம் நம்முடைய காலத்துப் பழக்கத்திற்கும் விதிமுறைக்கும், கருத்துக்கும் முற்றிலும் மாறானது. வேனிசில் பெரும்பதவியில் இருந்த ஒருவன் கீழ்ப்பதவியை ஏற்கும்படி சொல்லப்படுவதே அவனை அவமானப்படுத்துவதாகும் என்று கருதப்பட்டு வந்திருக்கிறது. தனிப்பட்ட மனிதனைப் பொறுத்தவரையில் இந்தப் பெருமை பாராட்டுவதில் அர்த்த முண்டு. ஆனால் பொதுமக்களைப் பொறுத்தவரையில் இது முற்றிலும் பயனற்றதேயாகும். வேனிசையும் மற்ற புதிய அரசுகளையும் போல, ரோமாபுரியிலும் ஒரு முறை ஆட்சித் தலைமைப் பீடத்தில் இருந்தவன் அதற்குக் கீழ்ப்பட்ட பதவியொன்றை ஏற்றுக்கொள்ள முடியாதென்று மறுத்தால், அதனால், பல குழறுபடிகள் பெரிதும் பொது உரிமையைப் பாதிக்கக் கூடிய வகையில் நடந்திருக்கும்.

நிலவரம்புச் சட்டம்:

மனிதர்கள் தேவைக்காகப் போராடுகின்ற நிலை போன பிறகு தங்கள் பேராசைக்காகப் போராடத் தொடங்குகிறார்கள். அந்தப் பேராசை மிகவும் ஆற்றல் வாய்ந்ததாக இருக்கிறது. அவர்கள் எவ்வளவு உயரத்திற்குப் போன பிறகும் கூட அது அவர்கள் இதயத்தை விட்டுப்போவதில்லை. இதற்குக் காரணம் என்னவென்றால் இயற்கை, மனிதர்களை எல்லாவற்றிற்கும் ஆசைப்படக் கூடியவர்களாகவும், ஆனால், அவற்றையெல்லாம் அடைய முடியாதவர்களாகவும் படைத்திருக்கிறது. தேடுகின்ற சக்தியைக் காட்டிலும் எப்பொழுதும் ஆசை பெரிதாயிருக்கிறது. தாங்கள் அடைந்திருப்பது போதாது என்றும் அதனால் மனக்குறையும் ஏற்படுகிறது. இதனால் அவர்களின் செல்வ நிலையில் மாறுதல் ஏற்படுகிறது. சிலர் தாங்கள் வைத்திருப்பதைக் காட்டிலும் அதிகமாகப் பெற விரும்புகிறார்கள். அதேசமயம் மற்றவர்கள் தாங்கள் வைத்திருப்பதை இழக்கப் பயப்படுகிறார்கள். இதன்பயனாகப் பகைமையும் போரும் உண்டாகின்றன. இதனால் ஒரு நாடு அழிந்து மற்றொரு நாடு ஏற்றம் பெறுகிறது. இவற்றையெல்லாம் நான் ஏன் குறிப்பிடுகிறேனென்றால் ரோமானிய மக்கள் பிரபுக்களை எதிர்த்துத் தங்கள் பிரதிநிதிகளை ஏற்படுத்தியதோடு மனத்திருப்தி அடையவில்லை; இந்த நிலைக்கு வந்த பிறகு அவர்கள் பேராசை வயப்பட்டுப் போராடத் துவங்கினார்கள். பிரபுக்கள் பெரிதாக மதிக்கின்ற அவர்களுடைய உடைமைகளையும் செல்வாக்கையும் பங்கு போட்டுக்கொள்ள மக்கள் விரும்பினார்கள். இதன் காரணமாக எழுந்த நிலவரம்புச் சட்டத்தை முன்னிட்டு உன்மத்தமான போராட்டம் எழுந்தது. இறுதியில் ரோமானியக் குடியரசின் அழிவுக்குக் காரணமாக இருந்தது இந்த நிலவரம்புச் சட்டமேயாகும்.

இந்தச் சட்டத்தின்படி ஒரு குடிமகன் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நிலம் வைத்திருக்கக் கூடாது. பகைவரிடமிருந்து பெறும் நிலத்தைக் குடிமக்கள் எல்லோருமே பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று ஏற்பட்டது. இது இருவகையிலும் பிரபுக்களைப் பாதித்தது. பிரபுக்கள் அனைவரிடமும் அதிகமான நிலமிருந்தது. குறிப்பிட்ட அளவுக்குமேல் இருந்த நிலங்களை அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. இரண்டாவதாகப் பகைவரின் நிலங்களைக் கொண்டு தங்கள் செல்வத்தை உயர்த்திக் கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் இழக்கவேண்டியிருந்தது. இதனால் தான் அவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்த்தார்கள் இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமுன் பிரபுக்கள் மிகவும் பொறுமை காட்டினார்கள். ஒரு படைப்பிரிவையோ, அல்லது மக்கள் பிரதிநிதி ஒருவனையோ கொண்டு இந்தச் சட்டத்தை எதிர்க்கும்படிச் செய்து பார்த்தார்கள்.

ரோமானியர்கள் தங்கள் படை பட்டாளங்களை இத்தாலியின் எல்லைவரைக்கும் அதற்கப்பாலும் கூட அனுப்பிவைத்தார்கள். ஆனால், பகைவரிடமிருந்து பெற்ற நிலங்கள் தங்கள் கண்ணுக்கெட்டாத தூரத்தில், ரோமில் இருந்து வெகுதொலைவில் இருந்தன. எளிதாக விவசாயம் செய்யக்கூடாத நிலையில் இருந்த அவை பெரிதும் விரும்பப்படாதனவாகப் போயின. பகைவர்களை அந்தப் பிரதேசங்களிலிருந்து விரட்டியடித்தபின், புதுக் குடியேறிகளை அங்கு அனுப்பினர். இப்படிப்பட்ட நிலையில் நிலவரம்புச் சட்டம் நெடுநாள் வரையில் தூங்கிக் கொண்டிருந்தது.

ஆனால் கிராச்சி என்பவன் காலத்தில் அவன் அந்தச் சட்டத்திற்கு மீண்டும் உயிர்கொடுத்தான். இதனால் ரோமானியக் குடியரசு அடியோடு அழிய நேர்ந்தது. ஏனெனில் இதற்கிடையில் நீதி முறைக்கு எதிரியானவர்களின் தொகை இரட்டிப்பாகியிருந்தது. நிலவரம்புச் சட்டம் உயிர்ப்பிக்கப் பட்ட செயல், ஆட்சிக் குழுவிற்கும் மக்களுக்கும் இடையே மனக்கசப்பை வளர்த்தது. இந்த வெறுப்பு கட்டுப்பாடற்ற கொடுமையான இரத்தப் போராட்டத்தில் வந்து முற்றியது.

இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், பெரும்பாலான மக்கள் கௌரவத்தைக் காட்டிலும் தங்கள் சொத்துக்களையே பெரிதாக மதிக்கிறார்கள் என்பது தான். ரோமானியப் பிரபுக்கள் தங்கள், அதிகாரத்தையும், மரியாதையையும் மக்களுக்கு விட்டுக் கொடுக்க அதிகமான வருத்தமடையவில்லை. ஆனால், சொத்துப் பிரச்சனை வந்த மாத்திரத்தில் அசையாத பிடிவாத குணத்தோடு அதை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

அரசு நடத்த மனவுறுதி வேண்டும்:

ரோமாபுரியில் கொள்ளை நோய் பரவியிருந்த சமயத்தில், அதைத் தாக்குவதற்கு இதுதான் தக்க சமயமென்று எண்ணிய வோல்சியர்களும், ஈக்குவேனியர்களும் பெரும்படை திரட்டிக் கொண்டு, ரோமாபுரி ராஜ்யத்தைச் சேர்ந்த லத்தின்காரர்களையும் ஹெர்னீசியர்களையும் கொன்று கொள்ளையிட ஆரம்பித்தார்கள். அவர்கள் ரோமானியர்களைத் தங்கள் உதவிக்கு வரும்படிக் கேட்டுக் கொண்டார்கள். ஆனால், கொள்ளை நோய்க்கு ஆளாகியிருந்த ரோமானியர் தாங்கள் உதவிக்கு வரக்கூடிய நிலையில் இல்லாததால் அவர்கள் தாங்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவேண்டியது தான் என்று கூறிவிட்டார்கள். ரோமானிய ஆட்சிக்குழுவின் புத்திசாலித் தனத்தையும் நல்லெண்ணத்தையும் நாம் இந்த நிகழ்ச்சியில் இருந்து அறிகிறோம்.

வேறு சமயங்களில் பகைவர் படையெடுத்தபோது அந்த மக்கள் போராடக் கூடாதென்று தடுத்த அதே ஆட்சிக்குழுவினர் இப்போது சந்தர்ப்பத்தையொட்டி அவர்களே தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டனர். அவர்கள் அவ்வாறு கூறாவிட்டாலும் அந்த மக்கள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளத் தாங்களே போராடித் தீரவேண்டிய நிலையில் தான் இருந்தார்கள். இதிலே கவனிக்க வேண்டியதென்ன வென்றால், ரோமானியர் உதவி செய்யக்கூடாத நிலையில் இருந்தபோதிலும், தங்கள் அனுமதியின் பேரில் அந்த லத்தீன் காரர்களும், ஹெர்னீசியர்களும் போருக்குச் சென்றனர் என்று பேர் பண்ணியதுதான். அவர்கள் அவ்வாறு அனுமதித்ததாகக் காட்டிக்கொள்ளாவிட்டால் ஒருமுறை அவர்கள் உத்தரவின்றி ஒரு காரியத்தைச் செய்த மக்கள் அதையே வாடிக்கையாகக் கொண்டு விடுவார்கள். எல்லாச் சமயத்திலும் அவர்கள் தம் விருப்பப்படி நடக்காமல் செய்வதற்கு இந்தச் சூழ்ச்சி அல்லது ராஜதந்திரம் பயன்பட்டது.

வாலென்டினோ கோமகன் பாஎன்சா, போலோகனா ஆகியவற்றை அடிப்படுத்திவிட்டு ரோமாபுரிக்குத் திரும்பும் வழியில் துஸ்கானி வழியாக கடந்து செல்ல வேண்டியிருந்த எல்லையில் தன் படையுடன் செல்ல அனுமதி கேட்டுப் பிளாரென்சுக்கு ஆளனுப்பினான். பிளாரென்சு அதிகாரிகள் ஓர் ஆலோசனை சபை கூட்டினார்கள். அனுமதி கொடுக்கலாமென்று யாரும் யோசனை கூறவில்லை. கோமகனோ பெரும் படையுடன் வந்திருந்தான். பிளாரென்ஸ் காரர்களிடமோ போதிய படை கிடையாது. இந்தச் சந்தர்ப்பத்தில், அவர்கள் கோமகனுக்கு அனுமதி கொடுத்திருந்தால் அவர்களுக்குப் பெருமையாக இருந்திருக்கும். கோமகன் பலவந்தமாக அதைக் கடந்து சென்றதால் அவர்களுக்குப் பெருத்த அவமானந்தான் மிஞ்சியது.

நம்பிக்கையும் உறுதியும் இல்லாத குடியரசுகள், புத்திசாலித்தனமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது கிடையாது. அவற்றின் பலவீனம்தான் அவற்றைச் சரியான முடிவுக்கு வராமல் தடை செய்கின்றன.

சலுகை காட்டுவது போல் சுமையை ஏற்றும் முன்யோசனைக்காரர்கள் :

ரோமானிய படைவீரர்கள், தங்கள் வாழ்க்கைச் செலவுகளைத் தாங்களே தேடிக் கொண்டிருந்தார்கள். ஆனால், இப்படிப்பட்ட நிலையில் போரை நீடித்த நாள் நடத்துவதென்பதோ தூரப் பிரதேசங்களுக்குப் படை நடத்திக் செல்லுவதென்பதோ முடியாத காரியம் என்பதையுணர்ந்த ஆட்சிக் குழுவினர், படை வீரர்களுக்குப் பொதுப் பணத்தில் இருந்து சம்பளம் கொடுப்பதென்று முடிவு செய்தார்கள். தேவையை உத்தேசித்துச் செய்த இந்தக் காரியம் அவர்களுக்குக் கீர்த்தி தரும்படியான முறையில் அவர்கள் செய்தார்கள். இந்தச் சலுகையைக் கேட்ட மக்கள் இதனால் தங்களுக்கு ஏதோ எதிர்பாராத பெரிய இலாபம் வரப் போவதாக எண்ணிப் பெருமகிழ்ச்சியில் ஆழ்ந்தார்கள். இதனால், மக்களின் மேல் பெருஞ்சுமை ஏற்றப்படுகிறதென்று மக்கள் பிரதிநிதிகள் எவ்வளவு எடுத்துச் சொல்லியும், ஆட்சிக் குழுவின் முடிவை மக்கள் ஏற்றுக் கொண்டதைப் பிரதிநிதிகளால் தடுத்துவிட முடியவில்லை. பின்னால், ஆட்சிக் குழுவின் வரிகளை அதிகப்படுத்திய போது இந்தச் சுமை மேலும் அதிகரித்தது. முன்யோசனையுள்ளவர்கள் தங்கள் செயலின் மூலம் சந்தர்ப்பங்களைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளுபவர்கள் என்பது இதில் இருந்து தெரிகிறது. தேவையை முன்னிட்டு ஒரு குறிப்பிட்ட முறையைக் கையாள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டாலும் தங்கள் தாராள மனப்பான்மையால் அதைச் செய்ததுபோல் காட்டிக் கொள்வார்கள் அறிவாளிகள்.

பொதுமக்களின் புத்திசாலித்தனம்! :

வெயின்டி நகரைக் கைப்பற்றிய பிறகு ரோமானிய மக்கள், ரோமாபுரியில் வாழ்பவர்களிலே சரிபாதிப் பேர் அங்கு போய்க் குடியேறி வாழ்ந்தால் நல்லது என்று எண்ணினார்கள். வெயின்டி நகரில் நிறைய நிலபுலங்களும், வீடுகளும் இருந்ததோடு ரோமாபுரிக்கு அருகிலேயே இருந்ததும் அவர்களுடைய இந்த ஆசைக்குச் சரியான தூண்டுகோலாயின. இது. பயனற்ற வேலையாகவும், ஆபத்து நிறைந்ததாகவும், விவேகிகளான ஆட்சிக் குழுவினருக்கு நன்றாகப் புலப்பட்டது. செத்தாலும் இந்தக் காரியத்திற்கு அனுமதி கொடுக்க முடியாதென்று அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயம் விவாதிக்கப்பட்ட போது, மக்கள் ஆட்சிக் குழுவினரின் மீது பெருங்கோபம் கொண்டார்கள். ஆட்சிக் குழுவினர் மட்டும், மிக மேலானவர்களாக மதிக்கப்பட்ட வயது முதிர்ந்த சில பெருமக்களின் பின்னால் சென்று மறைந்து கொள்ளாமல் இருந்திருந்தால், குத்துப்பழி வெட்டுப்பழி நிகழ்ந்திருக்கும்; இரத்தம் சிந்தப்பட்டிருக்கும்.

இதிலிருந்து நாம் இரண்டு விஷயங்களையறிந்து கொள்ளுகின்றோம். மக்கள் பொதுவாக ஒரு கற்பிதமான நன்மையை நம்பி ஏமாந்து தங்கள் அழிவைத் தாங்களாகவே தேடிக் கொள்ளுகிறார்கள் என்பது ஒன்று. அவர்களுக்கு நம்பிக்கையான சிலர் எது நல்லது எது கெட்டது என்று விளக்கிக்கொள்ளாமல் மட்டும் இருந்துவிட்டால், அவர்கள் குடியரசையே குட்டிச்சுவராக அடித்து விடுவார்கள். மக்களுக்கு நம்பிக்கையானவர்கள் யாருமே இல்லாவிட்டால், ஏற்கனவே சில நிகழ்ச்சிகளால் அல்லது சில மனிதர்களால் ஏமாற்றப்பட்ட அவர்கள், நிச்சயமாக ராஜ்யத்தை அழிவு நோக்கி நடத்திச் செல்வார்கள்.

வெளிப்படைக்குப் பயனுள்ளதாகவும் தைரியமளிப்பதாகவும் உள்ள எந்த வழியிலும் அவை உள்ளந்தரங்கமாக மிகுந்த நஷ்டமும் அழிவும் விளைப்பனவாக இருந்தாலும் மக்களைச் செலுத்துவது எளிது. ஆனால், அந்த வழி ஆரம்பத்திலேயே சந்தேகத்திற்கிடமளிப்பதாயிருந்தாலும், நஷ்டமடையச் செய்யக் கூடியதாகத் தோன்றினாலும், அதன் அடித்தளத்தில் குடியரசுக்கு நன்மையும் லாபமும் மறைந்திருந்தாலும் மக்களை அந்த வழிக்குத் திருப்புவது முடியாத காரியம். மக்கள் அப்படிப்பட்டவர்கள்; அவர்கள் வெளிப்படைத் தோற்றங்களுக்கே பெரிதும் மதிப்பளிப்பவர்கள்.

உடன்படிக்கைகள் :

குடியரசுகளும், அரசர்களும் தத்தமக்கிடையே ஒப்பந்தங்கள் செய்து கொள்வதும் அல்லது குடியரசு ஒன்றும் ஓர் அரசனும் தமக்கிடையே ஒப்பந்தம் செய்து கொள்வதும் நாள் தோறும் நடைபெறுவதைக் காண்கிறோம். ஒரு குடியரசு நிலையான நம்பிக்கைக்குரியதா அல்லது ஓர் அரசன் நம்பிக்கைக்குரியவனா என்பதை ஆராய்ந்து பார்ப்பது நல்லதென்று எண்ணுகிறேன். பல சந்தர்ப்பங்களில் இரு பக்கமும் சரிசமமாகவே இருக்கின்றன. ஆனால் வேறு சில சந்தர்ப்பங்களில் வித்தியாசம் இல்லாமல் இல்லை. ஆக்கிரமிப்பின் காரணமாக ஏற்பட்ட ஒப்பந்தங்கள் அரசனாலும் கடைப்பிடிக்கப் படுவதில்லை. தங்கள் ராஜ்யத்தை இழக்கக் கூடிய எந்தத் தரப்பாரும் அதைக் காப்பாற்றுவதற்காகத் தங்கள் உறுதியை மீறி நன்றி கெட்டதனமாகவும் குறை கூறத் தகுந்த முறையிலும் நடந்து கொள்ளுவார்கள். அச்சமுற்ற நிலையில் உள்ள எந்தத் தரப்பினரும் நம்பிக்கைக்கு அருகதையற்றவராகவே யிருப்பார்கள். இந்த விஷயங்களையெல்லாம் சீர்தூக்கிப் பார்க்கும் போது, பயங்கரமான கட்டங்களில் ஓர் அரசனைக் காட்டிலும் குடியரசிலேயே நிலையான தன்மை மிகுதியாகக் காணப்படும் என்று நினைக்கிறேன். அரசர்களைப் போலவே ஒரே மாதிரியான உணர்ச்சிகளும், நோக்கங்களும், குடியரசுகளுக்கும் உண்டாகுமானாலும், அவற்றின் நடைமுறைகள் மிக மெதுவாக நடப்பதாலும் எதற்கும் தீர்மானம் போட்டு வேலை செய்ய வேண்டியிருப்பதால் அதிகக் காலம் பிடிக்குமாதலாலும் அவை நம்பிக்கை தவறி நடப்பது கிடையாது.

பலாபலன்களைக் கருதிப் பல நேச உடன்படிக்கைகள் உடைபட்டிருக்கின்றன. இந்த விஷயத்தில் அரசர்களைக் காட்டிலும், உடன்படிக்கைகளின்படி நடப்பதில் குடியரசுகள் மிகக் கவனம் காட்டி வருகின்றன. அரசர்கள் மிகச் சாதாரணமான ஒரு பலனை முன்னிட்டுக் கூட ஒப்பந்தங்களை மீறத் துணிந்து விடுவார்கள். குடியரசுகளோ பெரும்பலன் கிடைத்த போதிலும் கூட உடன்படிக்கைகளை மீறத் தவறி விடுகின்றன. குடியரசுகள் எவ்வளவு பலன் கிடைத்தாலும் தங்கள் கண்ணியத்தை இழக்கத் துணிவதில்லை.

ஆள்வோரிடம் தாழ்வு மனப்பான்மை கூடாது :

தாழ்வு மனப்பான்மை என்பது பயனற்றது என்பது மட்டுமல்ல; உண்மையில் துன்பந் தருவதுமாகும். அதுவும், பொறாமையினாலோ வேறு காரணங்களினாலோ நம்மீது வெறுப்புடைய தலைக்கனம் பிடித்தவர்களிடம் தாழ்ந்து போவதென்பது பெருந் துன்பந்தருவதாகும். இதற்குச் சரித்திராசிரியர்கள் பல சான்றுகளைக் காட்டுகின்றார்கள்.

லத்தீன்காரர்கள் தங்களைத் தாக்குவதாக கான்மைட்டுகள் ரோமானியரிடம் முறையிட்ட போது. லத்தீன்காரர்களுக்கு எரிச்சலூட்ட விரும்பாத ரோமானியர்கள், தொடர்ந்து போரிடுவதை நிறுத்தும்படி சொல்லித் தாழ்ந்து போனார்கள். இந்த நடவடிக்கை, அவர்கள் விரும்பியபடி லத்தீன்காரர்களுக்கு எரிச்சலூட்டவில்லை என்பதோடு, அவர்களை நேரடியாக ரோமானியரோடு பகைமை பாராட்டக் கூடிய தைரியத்தையும் அளித்தது. ரோமானியர்கள் தெள்ளத் தெளிவாக இப்படித் தாழ்ந்து போனதுதான் லத்தீன்காரர்களின் இறுமாப்பை அதிகரிக்கச் செய்தது. ஆகவே எந்த அரசனும் தன் அந்தஸ்தை இழக்கும்படியான காரியம் எதையும் செய்யக்கூடாது. அந்தஸ்தை நிலைநிறுத்திக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் ஒழிய, தன்னிச்சையாகக் கூட எதையும் விட்டுக்கொடுக்க முன் வரக்கூடாது. விட்டுக்கொடுக்க நேர்ந்தாலும் பலாத்காரத்தின் பேரில் விட்டுக் கொடுக்கலாமே தவிர பலாத்காரத்திற்கு அஞ்சி விட்டுக் கொடுக்கவே கூடாது. அவன் போரைத் தவிர்ப்பதற்காக - அச்சத்தின் காரணமாகத் தாழ்ந்து போவானேயானால், அந்தப் போரிலிருந்து தப்புவான் என்பது அரிதே! கோழைத்தனமுடையவனிடம் இருந்து ஒன்றைப் பெற்றவன், அத்துடன் திருப்தியடையப் போவதில்லை. அரசனிடம் அவன் வைத்திருந்த மதிப்புக் குறையக் குறைய எதிரியின் அகந்தை ஓங்கிக் கொண்டு போகும். மேலும், அரசன் தளர்ந்தவனாகவோ கோழையாகவோ காணப்பட்டால் உடனிருக்கும் அவன் நண்பர்களின் உற்சாகமும் குறைந்து போகும். ஆனால், தன் படை சிறிதாயினும் பகையை எதிர்த்துப்போராடத் துணிச்சலுடன் கிளம்புகிற அரசனுக்குப் பகைவனும் மதிப்பும் மரியாதையும் காட்டுவான். அக்கம் பக்கத்து அரசர்களும் அவன் வீரத்தைப் பாராட்டி அவனுக்கு ஒத்தாசைக்கு வர முற்படுவார்கள்.

ஒரே ஒரு பகைவன் எதிர்க்கும்போது மட்டும் தான் மேற்கூறிய கருத்தைக் கைக்கொள்ள வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட பல பகைவர்கள் சூழ்ந்தெதிர்க்க முனைகிற காலத்தில் அவர்களில் ஒருவர் இருவரைத் தன் வசப்படுத்திக் கொள்ளவோ, தன் பகைக் கும்பலிலிருந்து விட்டுப் பிரிந்து செல்லும்படிச் செய்யவோ, ஏதாவது சிலவற்றை இழக்க முனைவதுதான் ஒரு புத்திசாலித்தனமான அரசனின் செயலாக இருக்க முடியும்.

எண்ணித் துணிக கருமம் :

எவ்விதமான ஆலோசனையிலும் முக்கியமான பிரச்சனையில் உடனடியாக ஒரு முடிவுக்கு வருவது நல்லது. எப்பொழுதும் தீர்மானமற்ற நிலையிலும் நிலையற்ற தன்மையிலும் இருப்பது நல்லதல்ல.

லத்தின்காரர்கள் ரோமானியரிடமிருந்து பிரிந்து விடுவது பற்றி ஆலோசனை செய்து கொண்டிருந்தார்கள். ரோமானியர்களும் அவர்களுடைய பிரச்சனையைத் தீர்த்து அவர்களுடன் நட்புப் பாராட்ட விரும்பினார்கள். அதற்காக லத்தின் மக்களில் எட்டுப் பேரை ரோமாபுரியில் நடக்கும் ஓர் ஆலோசனைக் கூட்டத்திற்கு வரும்படி அழைத்திருந்தார்கள். ரோமானியர்களின் இந்த நல்லெண்ணத்தைப் பற்றி அறிந்த லத்தின்காரர்கள், இதுவரை தாங்கள் அவர்கள் கசப்படையும்படிச் செய்த பலகாரியங்களையும் மனத்தில் வைத்துக்கொண்டு, யாராரை அனுப்புவது என்னென்ன பேசும்படி அவர்களிடம் சொல்லியனுப்புவது என்று ஆராய்ந்தார்கள். அப்போது, பிரேட்டர் அன்னியஸ் என்பவன் கூறிய வார்த்தைகள் இவை:

“நாம் அவர்களிடம் என்ன பேச வேண்டும் என்பதைக் காட்டிலும் நாம் என்ன செய்ய வேண்டும் என்று யோசிப்ப்தே நம்முடைய நன்மைக்குப் பெரும் முக்கியத்துவமுடையது என்று நான் கருதுகிறேன். இந்த விஷய்த்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டால், நம் செயல்களுக்குத் தகுந்தாற்போல் நம் வார்த்தைகளை அமைத்துக் கொள்ளலாம்”

இது உண்மைதான்! ஒருவிதமான தீர்மானமுமற்ற சந்தேகமான இரண்டுங்கெட்டான் நிலையில் ஒருவன் எவ்வளவு பேசினாலும் தன் நிலையை விளக்கிச் சொன்னவனாக மாட்டான். தீர்மானமாக ஒரு காரியத்தை முடிவு செய்துவிட்டால், அப்புறம் அவன் அதற்குத் தகுந்தாற்போல் பேசிக் கொள்ளலாம்.

தாமதமான காலந் தாழ்ந்த யோசனைகளால் எதுவும் பயனில்லை. அது தீமை பயக்கக் கூடியது. பல வீ ன முள்ளவர்களோ, படைபலமற்றவர்களோ, தைரியமற்றவர்களோ தாம் தாமதங் காட்டுவார்கள். நல்ல குடிமக்கள் எந்த விஷயத்திலும் விரைவான ஒரு முடிவுக்கு வந்து விடுவார்கள்.

எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவ மென்ப திழுக்கு

-திருக்குறள்

அடுத்துக் கெடுப்பதால் ஆட்சியைக் கைப்பற்றலாம் :

ரோமானியக் குடியரசில் மக்களுக்கும் பிரபுக்களுக்கும் இடையே பெரும் பிளவு ஏற்பட்டிருந்தது. இந்தச் சந்தர்ப்பத்தையொட்டி, ரோமாபுரியின் மீது படையெடுத்தால் எளிதாக ரோமாபுரி ராஜ்யத்தை அடியோடு அழித்து விடலாமென்று லெயண்டியர்கள் துஸ்காளியரின் பக்க பலத்தோடு படையெடுத்துச் சென்றார்கள். ஆனால், லெயண்டியர்கள் படையெடுத்து வந்ததைக் கண்ட ரோமானியர்கள், தங்களுக்குள் இருந்த வேற்றுமைகளை மறந்துவிட்டு ஒன்று சேர்ந்து பகைவர்களைத் தாக்கித் தோற்கடித்துத் துரத்திவிட்டார்கள்.

எந்த வழியைக் கையாண்டால் வெற்றி பெறலாம் என்று தெரியாமல் மனிதர்கள் தங்களைத் தாங்களே எவ்வாறு ஏமாற்றிக் கொள்ளுகிறார்கள் என்பதைத்தான் இந்த நிகழ்ச்சி எடுத்துக் காட்டுகிறது.

ரோமாபுரி பிளவு பட்டிருக்கும் சமயத்தில் லெயண்டியர்கள் படையெடுத்துச் சென்றால் வென்றுவிடலாம் என்று எண்ணி ஏமாந்தார்கள். அவர்கள் இந்தச் சமயத்தில் படையெடுத்துச் சென்றிருக்க வேண்டியதேயில்லை. அவர்கள் சமாதான முறையிலேயே பிரிந்து போயிருக்கும் மக்களின் நம்பிக்கையைப் பெற்று நடு நின்று தீர்ப்புச் சொல்லுபவர்களைப் போல் உள்ளே நுழைந்திருக்கலாம். அல்லது படையெடுத்துச் சென்றே பல்வீனமுள்ள கட்சியாருக்காகப் போராடுவதாகப் பாவனை செய்து ஒரு கட்சியையொழித்து, மற்றொரு கட்சியைத் தங்கள் அடிமைகளாக்கி இருக்கலாம். அந்த நாட்டையும் தங்கள் ஆட்சிக்குட்படுத்தியிருக்கலாம்.

அறிவினனாக நடப்பதும் சில சமயம் பெரிய புத்திசாலித் தனமாகும்.

ஜூனியஸ் புரூட்டஸ் அறிவீனன் போல், கபடநாடகமாடியதைப் போல், வேறு யாரும் அத்தனை புத்திசாலித்தனமாக நடந்துகொண்டிருக்க முடியாது. அவனுடைய இந்தக் கள்ள நாடகத்துக்கு டீட்டஸ் லீவியஸ் ஒரே ஒரு காரணம் தான் சொல்லுகிறான். அதாவது, அவன் தன் பிதிரார்ஜித சொத்துக்களைக் காப்பாற்றுவதற்காகவும், தான் பெரும் பாதுகாப்புடன் வாழ்வதற்காகவும் இந்த நாடகமாடினான் என்று சொல்லுகிறான். இருப்பினும் நாம் அவனுடைய நடத்தையை நன்றாகக் கவனித்தால் இதற்கு வேறொரு காரணமும் இருப்பது புலப்படும். இவ்வாறு தன்னைப் பற்றி மற்றவர்கள் கவனிக்காதபடி செய்து கொண்டு, அவன் அரசர்களை அழித்துத் தன் நாட்டை விடுதலை செய்யக்கூடிய சிறந்த வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டு இருந்திருக்கக்கூடும் என்பதுதான் அது.

தங்கள் அரசனை வெறுக்கக் கூடிய எவரும் புரூட்டஸின் உதாரணத்திலிருந்து ஒரு பாடத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் அவர்கள் தங்கள் பலத்தை அளந்துகொள்ள வேண்டும். அரசனுடைய பகைவர்களாகத் தங்களை அறிவிக்கப் போதுமான பலம் இருப்பதாகத் தெரிந்தால் அவர்கள் அவனுக்கு எதிராகப் போர் தொடுப்பது கண்ணியமானதும் ஆபத்துக் குறைந்ததுமான வழியாகும். அரசனை எதிர்த்து நேரடிப் போர் நடத்தக்கூடிய நிலையில் அவர்கள் இல்லையென்றால், அவனுடைய நட்பைப் பெறத்தக்க உபாயங்களை எல்லாம் கையாள வேண்டும். அவனுக்குப் பிடித்தமான விஷயங்கள் தங்களுக்குப் பிடிப்பது போலவும் அவனுக்கு மகிழ்ச்சி தரத்தக்க விஷயங்களில் தாங்களும் சந்தோஷம் காண்பது போலவும் காட்டிக்கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட பழக்கம் எவ்விதமான ஆபத்துமற்ற மன நிம்மதியை உறுதிப்படுத்துவதோடு, அரசனுடைய சொத்துச் சுதந்திரங்களைப் பங்கு போட்டுக் கொண்டு அனுபவிக்கும் வாய்ப்பையும் அதே சமயத்தில் குரோதத்தைத் திர்த்துக் கொள்ளக் கூடிய வசதியையும் உண்டாக்கும். ஓர் அரசனிடம் பழகுபவர்கள் அவனுடைய அழிவிலே தாங்களும் சம்பந்தப்படும்படியாக மிக நெருங்கியிருக்கக் கூடாதென்றும், அவன் அழியக்கூடிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தித் தன் சொத்துச் சுகங்களைப் பெருக்கிக் கொள்வதை விட்டு அவனை விட்டு வெகுதூரத்தில் இருந்துவிடக் கூடாதென்றும் சிலர் சொல்லுவார்கள். இந்த நடுத்தரமான வழி சிறந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அது நடைபெறக் கூடியதல்ல. அரசர்களை விட்டு முற்றும் விலகியிருப்பதோ அல்லது மிக நெருங்கியிருப்பதோ ஆகிய இரண்டில் ஒன்றுதான் கையாள முடிந்த வழிகள். மற்ற எந்த வழியைப் பின்பற்றுகிறவர்களும், அவர்கள் எவ்வளவு மேன்மையுடையவர்களாயிருந்த போதிலும் தம்மைத் தாமே நிலையான ஆபத்துக்கு ஆளாக்கிக் கொள்பவர்கள் ஆகிறார்கள். “நான் எதற்கும் கவலைப்படவில்லை. பெருமையும், இலாபமும் அடைய நான் விரும்பவில்லை. அமைதியாக எவ்விதமான தொந்தரவுமின்றி வாழ விரும்புகிறேன்” என்று எவரும் கூறித் தப்பித்துக்கொள்ள முடியாது. சூழ்நிலைக்கு ஆட்பட்ட மனிதர்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் விருப்பப்படுகின்ற முறையில் நடத்தமுடியாது. அவர்கள் உண்மையாகவே எவ்விதமான பேராசையுமின்றித் தங்கள் வாழ்க்கையை வகுத்துக் கொள்ள முயன்றாலும் அவர்கள் நம்பப்படமாட்டார்கள். அந்த நிம்மதியான வாழ்க்கையில் அவர்கள் ஒட்டிக்கொள்ள முயன்றாலும் மற்றவர்கள் விட்டு வைக்கமாட்டார்கள்.

சமயத்தில் புரூட்டசைப் போலக் கபட நாடகம் ஆடுவது புத்திசாலித்தனமானது. தங்கள் மனச்சாட்சிக்கு விரோதமாய் அரசனை மகிழ்விப்பதற்காக அவனைப் புகழ்ந்தும், உடன் பேசியும், பார்த்தும், காரியங்களை நடத்தியும் தங்கள் எண்ணத்திற்கு மாறுபட்ட முறையில் நடந்தால் போதுமானது.

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க
இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்.

-திருக்குறள்