சிந்தனையாளன் மாக்கியவெல்லி/பேய் கட்டிக்கொண்ட மனைவி (சிறுகதை)

நூல் சுருக்கம் : 3

சிறுகதை

(மாக்கியவெல்லி எழுதிய கதை ஒன்றை இங்கே மொழி பெயர்த்துக் கொடுத்திருக்கிறோம். கட்டுக் கதைபோன்ற அமைப்புடன் நகைச்சுவை நிறைந்த கதை இது)

பேய் கட்டிக் கொண்ட மனைவி
Devil Takes a Wife

பிளாரென்டைன் நாட்டு வரலாற்றின் பழைய ஏடுகளைப் புரட்டிப் பார்த்தால், மிகவும் புனிதமான ஒரு மனிதரைப் பற்றிப் படிக்கலாம். அவருடைய வாழ்க்கை முறை, அந்தக் காலத்தில் இருந்த எல்லோராலும் போற்றப்படத்தக்க அளவு உயர்ந்ததாக இருந்தது.

அந்த மகான், பிரார்த்தனையில் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார். தம் பிரார்த்தனையின் மூலமாகக் கிடைத்த சக்தியைக் கொண்டு, ஞான திருஷ்டியால் நரகத்தில் நடப்பதைக் காணக்கூடியவராயிருந்தார். கடவுளின் அருளில்லாமலே இறந்துபோன கணக்கற்ற அழியுந்தன்மையுள்ள உயிர்கள் நரகத்திற்குப் போவதை அவர் கண்டார். அப்படி நரகத்திற்குப் போன உயிர்களிற் பெரும்பாலானவை, தாம் அவ்வாறு துன்பமடைவதற்கு மனைவி ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டது தவிர, வேறு எவ்விதமான காரணமும் சொல்லிக் குறைப்பட்டுக் கொள்ளவில்லை.

இந்தக் கருத்து, மீனோஸ் ராதா மந்தூஸ் ஆகிய நரகலோகத்து நீதிபதிகளை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. பெண்ணினத்தின் மீது சாட்டப்பட்ட இந்தப் பழிசொற்களை அவர்களால் உண்மையென்று நம்ப முடியவில்லை. ஆனால், பெண்ணினத்தின் மீது சொல்லப்பட்ட இந்த அவதூறு நாளுக்கு நாள் அதிகமாக இது பற்றிய சரியான முழு விவரங்களையும் அறிய நரகலோகத்து மாமன்னர் புளூட்டோவிடம் கூறியபோது. அவர் நரகலோகத்துச் சிற்றரசர்களையெல்லாம் கூட்டி ஒரு மந்திராலோசனைக் கூட்டம் நடத்துவதென்று திர்மானித்தார். அதன் பிறகு இந்த அவதூறு பொய்யானதாக இருந்தால் இதை ஒழித்துக் காட்டுவதற்கும், அல்லது இதுபற்றிய முழு உண்மையையும் கண்டுபிடிப்பதற்கும் தான் சிறந்ததாகக் கருதுகிற ஆலோசனையை ஏற்றுக் கொள்வதென்று எண்ணினார். ஏற்பாட்டின்படி ஆலோசனை சபை கூடியபோது புளூட்டோ இவ்வாறு பேசினார்.

“பேரன்புக்குரிய நரகலோக வாசிகளே! தேவலோக முறைப்படியும், தெய்வீகமாகவும் மாற்ற முடியாததாகவும் உள்ள நல்லதிர்ஷ்டத்தினாலும் நான் இந்த சாம்ராஜ்யத்திற்கு உரியவனாயிருக்கிறேன். இருந்த போதிலும், சக்திமிகுந்தவர்கள் எல்லாம், நீதிக்குக் கட்டுப்பட்டு நடக்கும் விஷயத்தில், தங்கள் பேரறிவைப் பெரிதும் பயன்படுத்துவதுண்டாகையாலும், மற்றவர்களுடைய நியாய முடிவுகளைப் பெரிதும் மதித்து உயர்வாகக் கருதுவதுண்டாகையாலும், நான் பொறுப்பேற்று ஆட்சி புரிந்து வருகின்ற இந்தப் பரமண்டல சாம்ராஜ்யத்திற்கே அவமானம் வரக்கூடிய ஒரு விஷயத்தில், உங்களுடைய ஆலோசனைகளைப் பெறுவதென்று முடிவு செய்துவிட்டேன். நம் இராஜ்யத்திற்கு வந்து சேருகின்ற ஒவ்வொரு மனிதனுடைய ஆவியும், தான் பாவியானதற்குக் காரணம் தன் மனைவியே என்று கூறுகின்றது. இது முற்றிலும் நம்பக்கூடாத காரியமாக நமக்குத் தோன்றுகிறது. இந்தச் சாட்சியத்தை வைத்து நாம் தீர்ப்புச் சொல்வதென்றால், நாம் பெரும் பேதைகளாய் அல்லது ஏமாளிகளாய் ஆகிவிடக் கூடுமோ என்று பயப்படவேண்டியிருக்கிறது. இந்த விஷயத்தில் நாம் ஒரு முடிவுக்கு வந்து தீர்ப்புச் சொல்லாவிட்டால், நீதியிடத்தில் நமக்குக் கண்டிப்பான தன்மையும் பற்றும் பிடிப்பும் இல்லையென்றாகிவிடும். இந்த விஷயத்தில் எமக்கு ஒரு வழியும் தோன்றாதிருப்பதால், உங்களுடைய அரிய ஆலோசனைகளைக் கேட்பதற்காகவே இந்த சபையைக் கூட்டியுள்ளோம். குற்றச்சாட்டிற்கிடமில்லாதபடி, அவதூறுக்காளாகாதபடி இந்த சாம்ராஜ்யம் முன்போலத் தொடர்ந்து சிறந்து நடைபெற ஆலோசனை கூற உதவுவீர்களென எதிர்பார்க்கிறேன்”,

நரகலோகத்துச் சிற்றரசர்கள் எல்லோரும் இந்த விஷயம் அதிமுக்கியத்துவமும் ஆவசியகமும் நிறைந்ததென்றும், உண்மையை வெட்ட வெளிச்சமாக்க வேண்டுமென்றும் முடிவு செய்தார்கள். ஆனால் அதை எவ்வாறு செய்வது என்ற பிரச்சினையில் அவர்கள் ஒரேமாதிரியான கருத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால், ஒரு சிலர் தங்களில் ஒருவர் மனித உருவமெடுத்துக்கொண்டு பூமிக்குப்போய் உண்மையை நேரில் அறிந்து வரும்படி அனுப்பப்படவேண்டுமென்று எண்ணினார்கள். வேறு சிலர், தங்களில் பலபேர் அவ்வாறு அனுப்பப்படவேண்டுமென்று கருதினார்கள். மற்றும் சிலரோ, இந்தத் தொந்தரவே தேவையில்லையென்றும், நரகலோகத்துக்கு வந்துசேருகிற சில பாபாத்மாக்களை அச்சுறுத்தி உண்மையைக் கக்கவைத்து விடலாமென்றும் நினைத்தார்கள். ஆனால் பெரும்பான்மையினர், ஒரே ஒருவர் மட்டும் பூமிக்கு அனுப்பப்பட்டால் போதுமென்ற கருத்தை ஆதரித்ததால், எல்லோரும் அந்த முடிவை ஏற்றுக்கொண்டார்கள். யாரும் இந்தக் காரியத்தைச் செய்யத் தாமாக முன்வராததினால் திருவுளச் சீட்டுப் போட்டுப் பார்ப்பதென்று முடிவு செய்தார்கள். இந்தத் துரதிர்ஷ்டம் தலைமைப் பேய்த் தூதரான பெல்பாகருக்கு ஏற்பட்டது. பெல்பாகர் நரகலோகத்தில் வந்து விழுவதற்கு முன்னால் தேவலோகத்தில் தலைமைத் தேவதூதராக இருந்தார். இப்போது தலைமைப்பேய்த் தூதராக இருந்து வருகிறார்.

பெல்பாகருக்கு இந்த வேலையை ஏற்றுக்கொள்ள விருப்பமில்லையென்றாலும், நரகலோக அதிபதியான புளூட்டோவின் அதிகாரத்திற்கடங்கி நடக்க வேண்டிய கட்டாயத்திற்காக ஆலோசனை சபையின் முடிவுப்படி நடக்க ஒப்புக் கொண்டார். சபையினர் பூலோகம் செல்பவரை கீழ்க்கண்ட ஏற்பாட்டின்படி அனுப்புவதென்று முடிவு செய்தார்கள்.

பூலோகம் செல்லுபவர் மனித உருவம் எடுத்துக்கொண்டு போய் அங்கு ஒரு மனைவியைத் திருமணம் புரிந்துகொண்டு பத்து ஆண்டுகள், வாழவேண்டும். முடிவில், செத்துப் போவதுபோல் நடித்து நரகலோகத்துக்குத் திரும்பி வந்து குடும்பபாரத்தில் ஏற்பட்ட நன்மை தீமைகளைத் தன் மேலதிகாரிகளுக்குத் தெரியப்படுத்த வேண்டும். பத்து ஆண்டுகளும் அவர் செலவுக்காக ரொக்கமாக ஓர் இலட்சம் டூச்சாட்டு நாணயங்கள் எடுத்துச்செல்ல அனுமதிக்கப்படுவார். இது தவிர அந்தக் குறிப்பிட்ட பத்தாண்டுக் காலத்திற்குள் அவர் மனிதர்கள் அனுபவிக்கக் கூடிய நோய்கள், சிறைச்சாலை வாசம், வறுமைத்துயர் ஆகிய துன்பங்களையும் அனுபவிக்கக் கட்டுப்பட்டவராவார். வேண்டுமானால், தந்திரமாகவோ அல்லது மற்றவர்களை ஏமாற்றியோ அவர் இவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.

இந்த ஏற்பாட்டின்படி பேய்த்தலைவர் பெல்பாகர் பணத்துடன் பூலோகத்துக்குப் புறப்பட்டார்.

பெல்பாகர், தன் பூதகணங்களைத் தனக்குக் குதிரைகளும், வேலையாட்களும் ஏற்பாடு செய்து தரும்படி உத்தரவிட்டு, பெருத்த ஆடம்பரத்துடன் பிளாரென்ஸ் பட்டணத்திற்குள் நுழைந்தார். எத்தனையோ ஊர்கள் பூலோகத்தில் இருக்கும் போது அவர் பிளாரென்ஸ் பட்டணத்தை ஏன் தேர்ந்தெடுத்தார் என்றால், அங்குதான் தம் பணத்தைக் கெட்டிக்காரத்தனமாகச் செலவழிக்க முடியும் என்று அவருக்குத் தோன்றியது. காஸ்டிலி தேசத்து ரோடரிக் பிரபு என்ற பெயருடன் அவர் ஒகின் சாந்திப் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்துக் கொண்டார். தம்மைப் பற்றி மற்றவர்கள் துருவி, ஆராய்ந்து விடாமலிருப்பதற்காக, தாம் அண்மைக் காலத்தில் ஸ்பெயின் தேசத்தை விட்டுப் புறப்பட்டு சிரியாவுக்குப் போய், அலெப்போல் பட்டணத்தில் பணம் சம்பாதித்து வந்ததாக எல்லோரிடமும் கூறினார். நல்லவர்கள் கூட்டுறவில் வாழ வேண்டுமென்பதற்காகவும், தம் மனத்திற்குப் பிடித்திருந்தது என்பதற்காகவும் இத்தாலி நாட்டிற்கு வந்து அங்கேயே ஒரு நல்ல பெண்ணைத் திருமணம் புரிந்து கொண்டு வாழ்க்கை நடத்த எண்ணியிருப்பதாகவும், கூறினார். ரோடரிக் பிரபு முப்பதே வயதுள்ள அழகான ஓர் இளைஞராகத் தோற்றமளித்தார். சீக்கிரத்தில் தாம் பெரிய பணக்காரர் என்று மற்றவர்கள் கருதும்படி பகட்டாக நடந்து கொண்டார். தாம் தாராள மனப்பான்மையும் தரும குணமும் உடையவராகக் காட்டிக் கொண்டார்.

ஏராளமான பெண்களையும் குறைவான சொத்துக்களையும் பெற்றிருந்த பல உயர் குலத்தினர், தங்கள் பெண்களில் ஒருத்தியை அவருக்கு மணம் புரிந்து கொடுக்க முன் வந்தார்கள். அப்பெண்கள் எல்லோரிலும் மிக அழகுடையவளும், அமெரிகோ டொனாட்டி என்பவரின் மகளும், “யோக்கிய வதி” (ஹானெஸ்டா) என்ற பெயருடையவளுமான ஒரு பெண்ணைத் தமக்கு மனைவியாகத் தேர்ந்தெடுத்தார் ரோடரிக் பிரபு. அவருடைய வருங்கால மாமனார் பிளாரென்ஸ் பட்டணத்திலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த உயர் குலத்தைச் சேர்ந்தவர். ஆனால் ஏழு பிள்ளைகளைப் பெற்ற அவர், தம் உயர்குலத்திற்குத் தகுந்தபடி ஆடம்பரமாகத் தொடர்ந்து வாழ்க்கை நடத்தி வந்தபடியால் வறுமைக்காளாகிவிட்டார்.

ரோடரிக் பிரபு தம் திருமணத்தை மிகச் சிறப்பாகவும். அலங்காரமாகவும் நடத்தினார். அப்படிப்பட்ட ஆடம்பரமான திருமண விழாவிற்குத் தேவையான எதுவும் கைவிடப்படவில்லை! நரகலோகத்தாரின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு மனித ஆசைகளுக்கு ஆட்பட்டவராக இருந்தார் ரோடரிக் பிரபு. அதனால் மற்றவர்கள் தன்னைப் புகழ்ந்து பாராட்டும் வண்ணம் பெருமையான சடங்குகளையெல்லாம் உடனடியாகச் செய்யத் தொடங்கினார். இதற்கெல்லாம் செலவழித்த பணம் கொஞ்ச நஞ்சமல்ல! அதுவும் தவிர, தம் அருமை மனைவி யோக்கியவதியுடன் (ஹானெஸ்டாவுடன்) மண வாழ்க்கை நடத்தத் தொடங்கிச் சில நாட்கள் ஆவதற்கு முன்னாலேயே அவர் அவள்மீது மாபெருங் காதல் கொண்டுவிட்டார். அவள் எப்போதாவது துன்பமாகவோ கவலையுடனோ இருப்பதைக் கண்டால் அவருக்கு உள்ளம் பொறுக்காது.

குலப் பெருமையோடும் அழகோடும் சீமாட்டி ஹானெஸ்டா, லூசியருக்குக் கூட இல்லாத அகங்காரத்துடனும் ரோடரிக் பிரபுவின் வீட்டில் காலடி எடுத்து வைத்தாள். அவர்கள் இரண்டு பேருடைய அகங்காரத்தையும் நேரில் கண்ட ரோடரிக் தன் மனைவியின் இறுமாப்புத்தான் உயர்ந்தது என்று சொன்னார். தன் கணவருக்குத் தன்மேல் இருந்த காதலைக் கண்டறிந்த பிறகு, அவளுடைய கர்வம் மேலும் பெரிதாகியது. எல்லா விஷயத்திலும் தன் விருப்பப்படி கணவரை ஆட்டி வைக்கலாம் என்று கண்ட பிறகு அவள் இரக்கமில்லாமலும், மரியாதையில்லாமலும் அவரைப் பல வகையிலும் ஏவத்தொடங்கிவிட்டாள். அவர் ஏதாவது மறுத்துரைத்தால் மிகக் கீழ்த்தரமான வார்த்தைகளால் அவள் சீறிக் கடிந்துரைக்கச் சிறிதும் தயங்கவில்லை. இதெல்லாம் ரோடரிக் பிரபுவிற்கு அளவற்ற வேதனையையளித்தது. இருந்தும் அவருடைய மாமனாரும் அவளுடைய சகோதரர்களும், உறவினரும், திருமண ஒப்பந்தமும் அவரைப் பொறுமை கொள்ளச் செய்தன. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் அவளிடம் கொண்டிருந்த காதல் அவரைப் பெரும் பொறுமைக்காரராகச் செய்தது.

மனைவி புதிது புதிதாக, நவநாகரிகமான உடைகளை அணிவதற்காக அவர் ஏராளமான பொருள் செலவு செய்ய வேண்டியிருந்தது. அவளுடன் சச்சரவில்லாமல் இருப்பதற்காகத் தன் மாமனாரின் மற்ற பெண்களுக்கும் திருமணம் செய்ய ஏற்படும் செலவுகளுக்காக அவர் ஏராளமாகப் பொருள் உதவ வேண்டியிருந்தது. மேலும் அவளுடன் ஒற்றுமையாக இருப்பதற்காக, அவளுடைய சகோதரர்களில் ஒருவனைத் தன் செலவில் முதல் போட்டுத் துணி வியாபாரம் செய்யக் கிழக்கத்திய நாடுகளுக்கும், இன்னொருவனைப் பட்டு வியாபாரம் செய்ய மேற்கத்திய நாடுகளுக்கும், மற்றொருவனைப் பிளாரென்ஸ் பட்டணத்திலேயே தங்க வியாபாரம் செய்வதற்கும் அனுப்ப வேண்டியதாயிருந்தது. இந்தத் தொழில்களுக்காக அவருடைய பொருளிற் பெரும் பகுதி கரைந்துவிட்டது.

திருநாள் காலத்திலும் செயின்ட்ஜான் தினத்திலும் நகர் முழுவதும் தொன்றுதொட்ட வழக்கப்படி விழாக் கொண்டாடியது. பணக்காரர்களும், உயர் குலத்தின்ரும் ஆடம்பரமான விருந்துகள் நடத்தி ஒருவரையொருவர் சிறப்பித்துக் கொண்டார்கள். சீமாட்டி ஹானெஸ்டாவும், மற்ற பெண்களால் தாழ்த்தியாகக் கருதப்பட விரும்பாமல் மற்ற எல்லோரைக் காட்டிலும் மிக உயர்ந்த ஆடம்பரத்துடன் விருந்து வைக்கும்படி ரோடெரிக்கைக் கேட்டுக்கொண்டாள். இந்தச் செலவுகளையும் அவர் முன் கூறிய அதே காரணங்களுக்காகப் பொறுத்துக் கொண்டார். இந்தக் கட்டுப்பாடில்லாத பொறுக்க முடியாத செலவுகளினாலும், இறுமாப்பாக மனைவி நடந்து கொண்டதாலும் அவருக்கு எல்லையில்லாத கவலை ஏற்பட்டது. அந்த வீட்டில் எஜமானியம்மாளுக்கு அடங்கி நடக்காத வேலைக்காரர்கள் யாரும் இல்லை. ஆகவே ரோடெரிக் பிரபு தமக்கென ஒரு நம்பகமாக ஆளை வைத்துக் கொள்ள முடியாமல் பெரிதாகத் திண்டாடினார். மற்றவர்களைப் பற்றி ஏன் சொல்ல வேண்டும்? நரகத்திலிருந்து அவர் தம்முடன் அழைத்து வந்த வேலைக்காரர்களோ, இங்கே அந்தப் பெண்மணியின் ஆணைகளுக்குக் கட்டுப்பட்டு அடிமைகளாய் திரிவதைவிட நரகத்து நெருப்புக் குழிக்கே திரும்பிப் போய்விடலாமென்று நினைத்தார்கள்.

கலக்கமும், குழப்பமும் சூழ்ந்த இந்த நிலையில், ரோடரிக் பிரபு தம் கையிருப்பு ரொக்க முழுவதையும் அதிகச் செலவு செய்துவிட்டார். அதற்குமேல் கிழக்கு நாடுகளிலிருந்தும் மேற்கத்திய நாடுகளிலிருந்தும் வர வேண்டிய வியாபார முதலீட்டை எதிர்பார்த்துக் காத்திருந்தார். அவர் இன்னும் கெளரவமாகவே மதிக்கப்பட்டபடியால், தம் வீட்டுச் செலவுகளுக்காக அவர் பலபேரிடம் பற்றுச் சீட்டுக் கொடுத்துக் கடன் வாங்கினார். உண்டியல் கடன் பத்திரங்கள் பலவற்றில் கையெழுத்துப் போட்டுப் பணம் வாங்கினார். அவர் ஒரே ஒரு பொருளையே ஈடு வைத்து அதன் மேல் பல தடவை பலபேரிடம் பணம் வாங்குவதை அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்கள் சீக்கிரம் கண்டுபிடித்து விட்டார்கள். அவருடைய நிலைமை இந்த மாதிரி மோசமாக இருக்கும்போதே, கீழ்த்திசையிலிருந்தும் செய்திகள் கிடைத்தன. சீமாட்டி ஹானெஸ்டாவின் சகோதரர்களில் ஒருவன், தான் வியாபாரம் செய்யக் கொண்டு போன பணம் முழுவதையும் சூதாடித் தோற்றுவிட்டான்! மற்றொருவன் ஒரு கப்பல் நிறைய இன்சூர் பண்ணாமல் சரக்கேற்றிக் கொண்டு வந்து, அந்தக் கப்பலோடு கடலில் மூழ்கிப் போய்விட்டான். இந்தச் செய்தி நகரில் பரவிய உடனே, ரோடெரிக்கின் கடன்காரர்கள் ஒன்றாகக் கூடி அவர் திவாலாகிவிட்டதாக முடிவு செய்தார்கள். இருந்தாலும் அவரிடமிருந்து இன்னும் பாக்கி வசூல் பண்ணாததால் தங்கள் சந்தேகங்களை வெளிக்காட்டிக் கொள்ள முடியாமல், அவரையும் அவருடைய நடவடிக்கைகளையும், இரகசியமாய்க் கவனித்து வருவதென்று தீர்மானித்தார்கள். இதனால் ரோடெரிக் பிரபு இரகசியமாக அந்த ஊரை விட்டுத் தப்பியோடவும் முடியாமல் இருந்தது. கடைசியில் அவர் என்ன நேர்ந்தாலும், தப்பியோடி விடுவதென்று முடிவுக்கு வந்தார்.

ஒருநாள் காலை அவர் குதிரையொன்றின்மீது ஏறிக்கொண்டு தம் மாளிகையருகில் இருந்த பிராட்டோ வாசல் வழியாக நகரை விட்டு வெளியேறினார். இந்தச் செய்தியை அறிந்தவுடன், கடன்காரர்கள் ஒரேயடியாகக் கூச்சலிட்டு, வழக்கறிஞர்கள் மூலமாக நியாயாதிபதிகளிடம் முறையிட்டுக் கொண்டார்கள். அதோடு மட்டுமல்லாமல், பொதுமக்கள் எதிர்ப்பையும் கிளப்பி விட்டு, ரோடெரிக் பிரபுவை விரட்டிக் கொண்டு வந்தார்கள். ரோடெரிக் பிரபு ஊரை விட்டு ஒரு மைல் தூரம் கூடப் போயிருக்கமாட்டார். அதற்குள் பின்னால் ஏற்பட்ட கூச்சலையும் கூக்குரலையும் கேட்டு நிலைமையைப் புரிந்துகொண்டார். அவர்களிடமிருந்து தப்ப இரகசியமாகச் சென்றால்தான் முடியும் என்று வீதிப் பாதையை விட்டு விலகி வயல் வெளிகளுக்குள்ளே புகுந்து செல்லத் தொடங்கினார். ஆனால், வழியில் பல குழிகளையும் வரப்புக்களையும் கடக்க வேண்டியிருந்ததால் அந்தப் பாதையில் குதிரையேறிச் செல்வது கடிதாக இருந்தது. எனவே, அவர் கால்நடையாகக் கிளம்பினார். வயல் வயலாகக் கடந்து, கடைசியில் பெரிட்டோலா என்ற ஊர்ப் பக்கம் ஜீயான் மாட்டியோ என்ற ஒரு தொழிலாளியின் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அப்போது அதிர்ஷ்டவசமாக அந்தத் தொழிலாளியே தன் மாடுகளுக்குத் தீனி எடுத்துக்கொண்டு வந்து கொண்டிருந்தான். ரோடெரிக் பிரபு அந்த மனிதனிடம் அடைக்கலம் புகுந்தார். தன்னைப் பிடித்துச் சிறையிலடைத்துக் கொல்வதற்காக விரட்டிக் கொண்டு வரும் பகைவர்களிடமிருந்து தன்னைக் காப்பாற்றும் படியும், அவ்வாறு செய்தால், அவனைத் தான் பணக்காரனாக்கி விடுவதாகவும், அதற்குரிய அத்தாட்சிகளைத் தான் போகுமுன் காட்டிவிட்டுப் போவதாகவும், அல்லது செய்யத் தவறினால் அவனே தன்னைத் தன் பகைவரிடம் காட்டிக் கொடுத்து விடலாமென்றும் உறுதி கூறி வேண்டிக் கொண்டார். ஜீயான் மாட்டியோ சாதாரண விவசாயியாக இருந்தபோதிலும் தைரியமுள்ளவன். அவன் அவரைக் காப்பாற்றுவதாக உறுதி கூறினான். அவன் ரோடெரிக் பிரபுவை ஒரு குப்பை மேட்டுக்குள்ளே தள்ளி அவர்மீது குப்பைகளைக் கொட்டி மூடினான்.

ரோடெரிக் இவ்வாறு மூடி மறைக்கப்பட்ட நேரத்தில், அவரை விரட்டிக்கொண்டு வந்தவர்கள் அங்கு வந்து சேர்ந்தார்கள். அவர்கள் விவசாயியை எவ்வளவோ அச்சுறுத்திக் கேட்டபோதிலும், அவன் அவரைப் பார்த்தானா பார்க்கவில்லையா என்ற விஷயத்தையே தெரிந்துகொள்ள முடியவில்லை. அன்றும் மறுநாளும் தேடியலைந்து விட்டுப் பயனில்லாமல் அலுத்துப்போய் அவர்கள் பிளாரென்சு பட்டணத்திற்குத் திரும்பிவிட்டார்கள். அவர்கள் போன பிறகு, குப்பைக் குழியிலிருந்து ரோடெரிக் பிரபுவை வெளிப்படுத்தி, அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும்படிக் கேட்டுக் கொண்டான் விவசாயி.

“அன்புள்ள சகோதரனே! நான் உனக்கு மிகவும் கடமைப்பட்டவன். நான் உன்னைப் பூரணத் திருப்தியடையச் செய்ய விரும்புகிறேன். நான் இந்த விஷயத்தில் ஆற்றல் உடையவன் என்பதை நீ நம்புவதற்காக நான் யார் என்பதை உனக்குத் தெரிவிக்கிறேன். நான் ஒரு பேய்த் தலைவன்!” என்று சொல்லி அவர், தன்னைப் பற்றியும், நரகலோகத்தில் தனக்கு இடப்பட்ட கட்டளைகளைப் பற்றியும், தான் கட்டிக்கொண்ட மனைவியைப் பற்றியும் சொல்லி, அந்த விவசாயியைப் பணக்காரானாக்கும் வழியையும் சொன்னார். அவனைப் பணக்காரனாக்க ரோடெரிக் பிரபு சொன்ன வழி இதுதான்! யாராவது ஒரு பெண்ணுக்குப் பேய் பிடித்திருக்கிறதென்று கேள்விப்பட்டால், ரோடெரிக் தான் அவள் உடலில் புகுந்திருக்கிறார். என்பதை விவசாயி தெரிந்து கொள்ள வேண்டும். அவன் பேயோட்ட வந்தாலொழிய அவர் அந்தப் பெண்ணை விட்டுப் போகமாட்டார். அந்தப் பேய் பிடித்த பெண்ணின் குடும்பத்தாரிடமிருந்து விவசாயி தான் விரும்பிய தொகையைக் கேட்டுப் பெற்றுக்கொள்ள வேண்டியது. அவர்கள் இந்த ஒப்பந்தத்தைச் செய்து முடித்துக்கொண்ட பின் ரோடெரிக் பிரபு அங்கிருந்து மறைந்துவிட்டார்.

பிளாரென்ஸ் பட்டணம் முழுவதும், அம்புரூ லோஜியோவின் மகள் ஒருத்திக்குப் பேய் பிடித்திருக்கும் செய்தி பரவ அதிக நாட்கள் ஆகவில்லை. அவர்கள் பேயோட்டுவதற்கு வழக்கமாகக் கையாளுகின்ற முறைகளையெல்லாம் தவறாமல் கையாண்டார்கள். பேய் பிடித்த பெண்ணின் தலையில் புனித ஞானி செனோபியசின் மண்டையைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஞானி ஜான்லால் பெர்ட்டின் மேலங்கியைக் கொண்டு வந்து வைத்தார்கள்; இவற்றையெல்லாம் கண்டு ரோடெரிக் வெறும் பரிகாசச் சிரிப்புத் தான் சிரித்தார். அந்தப் பெண்ணுக்குப் பெரும் மனோவேதனையால் இந்த மாற்றம் ஏற்படவில்லை. பேய்தான் பிடித்திருக்கிறது என்பதை மெய்ப்பிப்பதற்காக அவர் லத்தின் மொழியில் பேசினார். தத்துவ விசாரணைகள் செய்தார். பல பேர்களுடைய பாப காரியங்களை வெளிப்படுத்தினார். ஒரு சன்னியாசியின் பெயரைக் குறிப்பிட்டு அவர் சீடன் வேடத்தில் நான்கு வருடங்களாகத் தம் அறையில் ஒரு பெண்ணை வைத்திருப்பதையும் அம்பலப்படுத்தினார். இந்த மாதிரியான ஊழல் உண்மைகள் ஒவ்வொருவரையும் வியப்பிலாழ்த்தின.

அம்புரூலோஜியோ தம் குமாரியைக் குணப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையையே இழந்துவிட்டார். இந்தச் சமயத்தில் விவசாயி ஜியான்மாட்டியோ அங்கு வந்தான். பெர்ட்டோலாவில் ஒரு நிலம் வாங்குவதற்காகத் தனக்கு 500 பிளாரின் பணம் தந்தால், அந்தப் பெண்ணைக் குணப்படுத்துவதாக அவன் உறுதி கூறினான். அம்புரூலோஜியோ ஒப்புக்கொண்டார்.

ஜீயான் மாட்டியோ, முதலில் தந்திரமாகச் சில மந்திரங்களையும் சடங்குகளையும் செய்து காட்டினான். பிறகு மெல்ல அந்தப் பேய் பிடித்த பெண்ணின் காதில் வாயை வைத்து, “பூதகனத் தலைவரே! தங்கள் வாக்குறுதியைக் காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நான் இங்கு வந்தேன்” என்று சொன்னான். “நல்லது, ஆனால், இந்தப் பணத்தால் நீ பெரிய பணக்காரனாகிவிட முடியாது. ஆகவே, நான் இந்தப் பெண்ணை விட்டு நீங்கியபின் நேப்பிள்ஸ் மன்னர் சார்லஸ் பெருமானின் குமாரியைப் போய்ப் பிடித்துக் கொள்கிறேன். நீ வரும் வரை நான் அவளை விட்டு அகலமாட்டேன். அங்கே நீ பெருத்த வெகுமதி பெற்றுப் பெரும் பணக்காரனாகி விடலாம். அதன் பிறகு நீ என்னைத் தொந்தரவு செய்ய வேண்டியதில்லை” என்று சொன்ன ரோடெரிக் பிரபு அந்தப் பெண்ணை விட்டு நீங்கிச் சென்றார். பிளாரென்ஸ் பட்டணம் முழுவதும் வியப்பில் ஆழ்ந்தது.

நேப்பிள்ஸ் மன்னர் சார்லஸின் குமாரிக்குப் பேய் பிடித்தது. அந்தத் துன்பத்தைப் பற்றிய செய்தி வெகு சிக்கிரத்தில் இத்தாலி தேசம் முழுவதும் பரவியது. பேய் ஓட்டும் வழி எதுவுமே பயன்படவில்லை. கடைசியில் விவசாயி ஜீயான்மாட்டியோவைப் பற்றிக் கேள்விப்பட்ட மன்னர், பிளாரென்சு பட்டனத்துக்கு ஆளனுப்பினார். அவன் நேப்பிள்ஸ் நகருக்குச் சென்றான். வழக்கம்போல் இரண்டொரு மந்திரங்களை உச்சரித்துச் சடங்குகளைச் செய்து அவன் அந்தப் பெண்ணைக் குணப்படுத்தினான். ஆனால் இளவரசியை விட்டு பேயான ரோடெரிக் பிரபு நீங்குமுன்னால் அவர் அவனிடம், “ஜீயான்மாட்டியோ! நான் கொடுத்த வாக்குறுதியை இப்போது காப்பாற்றிவிட்டேன். நீ பணக்காரனாகிவிட்டாய். ஆகவே நம் ஒப்பந்தம் இன்றோடு தீர்ந்துவிட்டது. இனிமேல் என்னைச் சந்தித்தால் அது உனக்கு நல்லதல்ல. மீறி என் விஷயத்தில் நீ தலையிட்டால், இப்போது உனக்கு நன்மை செய்த நான் பின்னால் தீமை செய்வேன் எச்சரிக்கை!” என்று சொன்னார்.

விவசாயி ஜீயான்மாட்டியோ, பிளாரென்சு பட்டணத்திற்குப் பெரிய பணக்காரனாகத் திரும்பி வந்தான். (மன்னன் அவனுக்கு ஐம்பதினாயிரம் டூக்காட்டு பணம் கொடுத்தனுப்பினார்) அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு அவன் அமைதியாகவும் இன்பமாகவும் வாழலாமென்று எண்ணியிருந்தான். ரோடெரிக் பிரபு தனக்குத் தீமை செய்ய நினைக்கக் கூடும் என்று அவனால் நம்பக் கூடவில்லை. ஆனால், பிரெஞ்சு மன்னர் எட்டாவது லூயிஸ் மகளுக்குப் பேய் பிடித்திருக்கிறது என்ற செய்தி கேட்டு அவன் கவலைக்குள்ளானான். பிரெஞ்சு மன்னரின் அதிகார பலத்தையும், ரோடெரிக்கின் வார்த்தைகளையும் ஒன்று சேர்த்து நினைத்துப் பார்த்தபோது அவனுக்கு மன நிம்மதியே போய்விட்டது. தம் குமாரியை எவ்விதத்திலும் குணப்படுத்த முடியாத மன்னர், விவசாயி ஜீயான்மாட்டியோவைப் பற்றிக் கேள்விப்பட்டு அவனுக்கு ஓர் ஆளனுப்பினார். ஆனால், அவன் வர மறுத்துவிட்டதைக் கண்ட மன்னர், ஊர்ப் பெரிய மனிதர்களிடம் சொல்ல வேண்டி வந்தது. அவர்கள் மன்னர் ஆணையை மதித்து நடக்கவேண்டுமென்று அவனைக் கட்டாயப்படுத்தினார்கள். மனத்துயரத்தோடு அவன் பாரிஸ் நகருக்கு வந்து சேர்ந்தான். முதலில் மன்னர் பிரானிடம் சென்று தான், பேய் பிடித்த பெண்கள் சிலரைக் குணப்படுத்தியிருந்தாலும், எல்லாப்பேய்களையும் தன்னால் விரட்ட முடியாதென்றும், சில பேய்கள், எவ்வளவு மந்திரஞ் சொன்னாலும், பயமுறுத்தினாலும் அஞ்சுவதில்லையென்றும் கூறினான். இருந்தாலும் தான் முயன்று பார்ப்பதாகவும், முடியாவிட்டால் மன்னித்துக் கொள்ளும்படியும் கூறினான். ஆனால், மன்னர் பெரும் சீற்றத்துடன், தம் குமாரியை குணப்படுத்தாவிட்டால் அவனைத் தூக்கிலிட்டு விடுவதாகக் கூறிவிட்டார். விவசாயி ஜீயான் மாட்டியோவை இது பெருஞ் சங்கடத்திற்குள்ளாக்கியது. இருந்தாலும் அவன் தன் மனதைத் திடப்படுத்திக்கொண்டு, அந்த அரசகுமாரி தன்னருகில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டவுடன், மெல்ல அவள் காதருகில் சென்று ரோடெரிக்கிடம் தன் நிலையை எடுத்துக சொல்லித் தன்னைக் காப்பாற்றும்படி மிகவும் தயவாகக் கேட்டுக் கொண்டான்.

“ஆ! கீழ்த்தரமான துரோகியே! என் முன்னால் வர உனக்கு என்ன துணிச்சல்? என்னை வைத்து மகாப் பெரிய பணக்காரனாகிவிட முடிவு செய்துவிட்டாயா? கொடுக்கவும் கெடுக்கவும் என்னால் முடியும் என்பதை நீயும் மற்றவர்களும் அறியச் செய்கிறேன். பார்!” என்று சீ றினார் பேய்த் தலைவர் ரோடெரிக் பிரபு.

விவசாயி ஜீயான்மாட்டியோ அரசரிடம் திரும்பி வந்து, “மன்னர் பிரானே! இது மகாக் கொடிய பிசாசு! இதை என்னால் விரட்ட முடியாது. நான் முன் சொன்னதுபோல் இது எதற்கும் கட்டுப்படாதது. இருந்தாலும் இன்னொரு முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால், அதிலும் முடியாவிட்டால், தாங்கள் என் மீது இரக்கங் காட்டி நடந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். நம் சீமாட்டிச் சதுக்கத்தில் ஒரு மேடையமைக்க வேண்டும். இந்த நகரத்தில் உள்ள பிரபுக்களும் மத போதகர்களும் அமரும்படியான அளவு அது பெரியதாக இருக்கவேண்டும். அந்த மேடையில் பொன்னாலிழைத்த பட்டுத் திரையொன்றைத் தொங்கவிட வேண்டும். அதன் நடுவில் ஒரு பீடம் அமைக்கப்பட வேண்டும். அடுத்த ஞாயிற்றுக் கிழமை காலையில் மதபோதகர், சிற்றரசர்கள், பிரபுக்கள் எல்லோரையும் தாங்கள் மேடைக்கு அழைத்து வந்து வழக்கம் போன்ற ராஜாங்க ஆடம்பரங்களுடன் அமரச் செய்ய வேண்டும். பொதுப் பிரார்த்தனை செய்து முடித்தபின், பேய்பிடித்த இளவரசியை அங்கு அழைத்து வரவேண்டும். இதற்கிடையில் சதுக்கத்தின் ஒரு மூலையில் குறைந்தது இருபது பேராவது இருந்து, கொம்புகளையும், பேரிகைகளையும், பிறவாத்தியங்களையும் தயாராக வைத்துக் கொண்டிருக்க வேண்டும். நான் என் தொப்பியைத் தூக்கிச் சைகை காட்டியவுடன் அவர்கள் வாத்தியங்களை முழக்கிக் கொண்டே மேடையை நோக்கி வரவேண்டும். இந்த ஏற்பாட்டுடன், வேறு சில இரகசியமான முறைகளைக் கொண்டு அந்தப் பேயை விரட்டி விடலாம் என்று எண்ணுகிறேன்” என்றான்.

அவன் கூறிய எல்லா ஏற்பாடுகளையும் செய்யும்படியாக உடனே மன்னர் பிரான் கட்டளையிட்டார். ஞாயிற்றுக் கிழமை காலை பொழுது விடிந்ததும் மேடை முழுவதும் அதிகாரிகளும், சதுக்க முழுவதும் பொதுமக்களும் வந்து நிறைந்துவிட்டார்கள். பொதுப் பிரார்த்தனை நடைபெற்று முடிந்தவுடன், இரண்டு மதகுருமார்களும் பல பிரபுக்களும் சேர்ந்து பேய்பிடித்த இளவரசியை மேடைக்கு அழைத்து வந்தார்கள். அவ்வளவு பிரும்மாண்டமான ஏற்பாடுகளையும், நிறைந்திருந்த மக்கள் கூட்டத்தையும் கண்ட ரோடெரிக் பிரபு, “இந்தக் கோழைப் பயல் என்னதான் நினைத்திருக்கிறான்?” இந்தக் காட்சியைக் கொண்டு என்னைப் பயமுறுத்தி விடலாமென்று எண்ணுகிறானா? நான் சொர்க்கலோகத்து ஆடம்பரங்களையும் நரகலோகத்துப் பயங்கரங்களையும் கண்டு பழகிப் போனவன் என்பது இந்தப் பயலுக்குத் தெரியாதா? இருக்கட்டும், இவனைச் சரியானபடி தண்டிக்க வேண்டும்!” என்று தமக்குள் நினைத்துக்கொண்டார்.

விவசாயி ஜீயான்மாட்டியோ, அவர் அருகில் வந்து போய் விடும்படிக் கெஞ்சினான். ஆனால், அவர் “நீ எனன் நினைத்துக் கொண்டாய். இந்த நாடகத்தைக் கொண்டு என்ன செய்ய நினைத்திருக்கிறாய்? இதன் மூலமாக என்னிடமிருந்தும், அரசரின் கோபத்திற்கும் தப்பி விடலாமென்று மனப்பால் குடிக்கிறாயா? அற்ப நாயே! எப்படியும் உன்னைத் தூக்குமரத்தில் ஏற்றுகிறேன் பார்!” என்று ரோடெரிக் பிரபு கூறினார்.

ஒருவர் கெஞ்சிப் பணிய ஒருவர் மிஞ்சிப் பழிக்க இவ்வாறு நேரம் போய்க் கொண்டிருந்தது. இனிக் காலத்தை வீணே கடத்தக் கூடாதென்று எண்ணிய ஜீயான் மாட்டியோ தன் தொப்பியை ஆட்டிச் சைகை காட்டினான். உடனே ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வாத்தியக் குழுவினர் விண்ணதிர இசை முழக்கிக் கொண்டு மேடையை நோக்கி நெருங்கி வரத் தொடங்கினார்கள். திடீரென்று எழுந்த அந்தப் பெரும் முழக்கத்தைக் கண்டு, என்ன ஏதென்று புரியாமல் திகைத்துப் போன ரோடெரிக் பிரபு, விவசாயியை நோக்கி, “என்ன நடக்கிறது?” என்று கேட்டார்.

“ஐயோ! என் அன்பிற்குரிய ரோடெரிக்! உங்கள் மனைவி உங்களைத் தேடிக்கொண்டு வருகிறாள்!” என்று அனுதாபப்படும் பாவனையில் சற்றுப் பலமாகவே கூறினான் விவசாயி ஜீயான் மாட்டியோ. தன் மனைவியின் பெயரைக் கேட்டவுடனே ரோடெரிக்கிடம் ஏற்பட்ட அந்தத் திடீர் மாறுதல் பெரிதும் வியப்படையக் கூடியதாயிருந்தது. அவர் பெரும் பீதியும் குழப்பமுமடைந்து, உண்மையில் தம் மனைவி அங்கு வரக் கூடுமா. இந்தச் செய்தி நம்பக் கூடியதுதானா என்றெல்லாம் எண்ணிப் பார்க்காமல், பதில் கூடச் சொல்லாமல், தாம் பிடித்திருந்த பெண்ணை விட்டுவிட்டுப் பறந்தோடிவிட்டார்.

மறுபடியும் திருமண நுகத்தடியில் சிக்கிக் கட்டுப்பட்டு அதற்குரிய வேதனைகளையும், துயரங்களையும், ஆபத்துக்களையும் அனுபவிப்பதைவிட உடனடியாக நரகத்திற்குத் திரும்பித் தம் நடவடிக்கைகளைப் பற்றித் தெரிவிப்பதென்ற முடிவுக்கு வந்தார். ஆகவே, பெல்பாகப் நரகத்திற்குத் திரும்பிச் சென்று தம் மனைவி தமக்குக் கொண்டு வந்து சேர்த்த கேடுகளைப் பற்றிய விவரங்களை அங்குள்ளவர்களுக்குத் தெரிவித்தார். அந்த நரகவாசியைக் காட்டிலும், அதைப் பற்றி நன்றாக அறிந்திருந்த விவசாயி ஜீயான்மாட்டியோ, ஆனந்தத்துடன் தன் வீட்டிற்குத் திரும்பிச் சென்றான்.