சிந்தனை துளிகள்/1101-1200
1101. “சட்டத்தை எளிதில் விமர்சனம் செய்யலாம்; ஆனால் ஏற்று ஒழுகுதல் கடினம்.”
1102. “சட்டங்கன் நன்மையை வளர்க்கும் தன்மை உடையன அல்ல; தீமையை தடுக்கும் நோக்க முடையனவேயாம்.”
1103. “பூட்டுக்களை நம்புகிறவர்கள். மற்றவர்கள் யோக்கியத் தன்மையை நம்புவதாக நடிப்பது ஏன்?”
1104. “அன்பும், அறனும் கலவாத வாழ்க்கையில் பிறக்கும் குழந்தைகளை வளர்க்க, சிறந்த பள்ளிகளும்-ஊரும் தேவை.”?
1105. “ஆசைப்படுகின்றனர்! ஆனால், ஆளுமைக்கு அஞ்சுகின்றனர்.”
1106. “உழைத்து வாழாத வாழ்க்கை, விபசாரம்.”
1107. “உடல் உறுப்புக்களில் ஒன்று குறைந்தாலும் சங்கடப்படுபவர்கள், திருந்த வேலை செய்கிறார்கள் இல்லையே!”
1108. “பொருளாதார ஆதிபத்தியப் போட்டிகள் உலகந் தழுவியதாக வளர்ந்து வருகின்றது.”
1109. “சார்ந்தே வாழ்பவர்கள், நடுநிலையாளர்களை வாழ அனுமதிக்க வேண்டும்.”
1110. “இந்திய அரசியல் வாதிகள் ஆதாயம் தேடும் மனப்போக்கு, சோரம் போகும் நிலை ஆகியவற்றின் காரணமாக இந்தியாவிற்கு ஜனாதிபதி ஆட்சி முறை தேவையாகிவிடும்.”
1111. “சாதாரண பயன்படாத குடிசையைக் கூட யாரும் இழக்கத் தயாராக இல்லை.”
1112. “பொறிகளை, இன்ப நுகர்வில் பக்குவப்படுத்துவது கலை.”
1113. “எவ்வளவு திறமையாகக் காரியம் செய் தாலும் தொடர்ச்சி இல்லையானால் பயன் இல்லை.”
1114. “காலமறிந்து செய்யாத கடமைகள் உரிய பயனை தாரா.”
1115. “ஒரு கருத்தில் ஊன்றாதவர்கள் சுற்றிச் சுற்றி வருவர்.”
1116. “இறைவன் வாழ்த்துப் பொருள் அல்ல. வாழ்வுப் பொருள்.”
1117. “இன்று வாழ்கின்றவர்கள், வரலாற்றுப் போக்கில் வந்தமைந்த வாழ்க்கை. அமைப்புக்களை அடுத்த தலைமுறையினருக்கு அப்படியே விட்டு வைத்தல் கடனாகும்.”
1118. “சைவத்திற்கு சிறப்பு சேர்க்க நால்வர் வழிபாடு தேவை.”
1119. “பகைமை பாராட்டாமல் வாழ்தல் ஒரு சிறந்த பண்பு.”
1120. “தலைமைக்கு ஆசைப்படாது மற்றவர்க்குத் தலைமையை விட்டுத்தரும் தைரியசாலிகள் ஆயிரம் ஆண்டுக்கு ஒரு தடவைதான் பிறக்கின்றனர்.”
1121. “அன்றாடம் கணக்குப் பார்க்காதவன் ஆக்கம் பெற இயலாது.”
1122. “காலம் என்ற களத்தின் அருமையை இன்னமும் பலர் அறியாதது, இந்திய சமூக வாழ்க்கையின் தீமைகளுள் ஒன்று.”
1123. “அடையவேண்டும் என்ற முனைப்புடன் கூடியதே முயற்சி.”
1124. “காரியத் தேவைகள், மனிதனை நிர்வான நிலைக்குத் தள்ளிவிடுகின்றன.”
1125. “மமதையின் முன்னால் சிறு தவறுகளும் பெரியனவாகத் தோன்றும்.”
1126. “நாம் ஆக்கி வைத்தால் போதாது. ஊட்டி விடவேண்டும் என்றும் சிலர் எதிர்பார்க்கிறார்கள்.”
1127. “சிந்தையில் அகந்தை உடையவர்கள் எளிதில் அணுகமாட்டார்கள்.”
1128. “முந்திரிப் பழத்தில் கொட்டை வெளியே துருத்திக் கொண்டிருப்பதால் பழத்திற்குச் சுவை குறைவு.”
1129. “மரியாதை’ என்ற பெயரால் விளையும் மனச்சங்கடங்களே மிகுதி.”
1130. “மன எழுச்சியுடன் பேசுபவர்கள் நிலைத்து நிற்கமாட்டார்கள்.”
1131. “சொன்னதைச் சொன்னபடி நிறைவேற்று பவர்களே உழைப்பாளிகள்.”
1132. ஒழுங்குமுறை ஆக்கத்திற்கு அடிப்படை.”
1133. “பிரசவ வேதனை இல்லாமல் தாய் இல்லை. அதுபோல துன்பப்பாடு இல்லாமல் இன்பம் இல்லை.”
1134. பெரிய வேலைகள் நடைபெறத் தடையாயிருப்பவை, சின்ன சின்ன வேலைகள் முறையாகச் செய்யப் பெறாமையே!”
1135. தாயிடம் அன்பு பாராட்டுவதே ஒரு கலை தான்.”
1136. “கொள்கைப் பிடிவாதம் வாழ்க்கையை வறட்சித் தன்மையுடையதாக்கிவிடும்.”
1137. “இல்லாமையால் உலகு அடையும் துன்பத்தை விட ஆசையால் படும் துன்பமே மிகுதி.”
1138. “உயிருடன் கொண்டு செல்லும் அறிவு, பண்புகளில் உள்ள ஆர்வத்தைவிட உடற்சார்பான ஆசைகளே உலகத்தை ஆட்டிப்படைக்கின்றன.”
1139. வேலையில் ஈடுபாடு, குறிக்கோள் இருந்தாலே வரும்.”
1140. ஒரு காலத்தில் நன்மையாகக் கருதப் பெறுவது நிலைத்த நன்மையாகி விடுவதில்லை.”
1141. “எனக்கு நண்பராக இருந்தால் போதாது. எனது பகைவருக்கு விரோதியாகவும் இருத்தல் வேண்டும் என்று எதிர்பார்ப்பது விரும்பத்தக்க தல்ல.”
1142. “உணர்ச்சி நிறைந்த வேகத்தில் இருக்கும் பொழுது அறநெறி உபதேசம் பயன்படாது. அந்த நிலையில் மருந்தென உணர்ச்சிக்கு இரை போடுதல் பயன்தரும். ஆனால் ஆபத்தான பரிசோதனை.”
1143. “உடற்பயிற்சி காரணமாகவே பலர் வேலை செய்ய நினைக்கின்றனர். இவர்களுக்கு உழைப்பு நோக்கம் அல்ல.”
1144. “எதையும் பின் தொடர்ச்சியாகக் கவனிக்கத் தவறினால் கெடும்.”
1145. “நிறுவனங்கள், இயக்கநிலை எய்துதல் வேண்டும்.”
1146. “உடல் ஓயாது இயங்குகிறது. அதுபோல வாழ்க்கை ஓயாது இயங்குதல் வேண்டும்.”
1147. இயற்கை அமைத்துத் தரும் கனிகளிலும் மனிதன் சமைக்கும் உணவு நல்லன அல்ல.”
1148. “உண்மையாக நடத்தல் என்பது அகமும் புறமும் ஒத்து நடத்தல் என்பதே!”
1149. “இந்திய சமூகப் பிரிவினைகள், தீமைகள் நீங்கியே யாகவேண்டும்.”
1150. “குறிக்கோளை அடையும் வாழ்க்கைக்குத் துன்பத்தைத் துணையாகக் கொள்ளும் துணிவு தேவை.”
1151. “நமது மக்களாட்சிமுறை மனு எழுதும் பழக்கத்தையே கற்றுத் தந்துள்ளது.”
1152. “உளம் நிறை ஈடுபாடே உழைப்புக்கு ஊற்று.”
1153. “கார்ல் மார்க்ஸ் மதத்தை எதிர்க்கும் பொழுது, அந்த இடத்தில் ஒரு புதிய மதத்தை வாழ்க்கை முறையை அறிமுகப்படுத்தினார். அதனால் ஒரளவு வெற்றி பெற்றார். ஆனால், பெரியார் எதிர்ப்பை மட்டுமே செய்தார். அதனால் நிலைத்து நிற்கவில்லை. அவர் பாசறையில் வளர்ந்தவர்களேகூட கடவுள் வழிபாட்டுக்கு வந்துவிட்டனர். அது மட்டுமல்ல. மதத்தை எதிர்த்துப் பேசுதல் அறியாமையின் செயல் என்று எண்ணுகின்றனர்.
1154. “சமயம், சமூகம், இரண்டும் இணைந்த நோக்கங்களே! இந்த இணைப்பு பராமரிக்கப் பெற்றாலே சமுதாயம் வளரும்”
1155. “இந்திய அரசியல் படுமோசமான நிலைக்குப்போய்க் கொண்டிருக்கிறது. வெறி நாய் நிலைக்கு வந்துவிட்டது.
1156. “எந்த ஒன்றிலும் இறுகப் பற்றிய சார்பு வந்துவிட்டால் நீதி புலப்படாது.”
1157. “உலக மானிட சாதி ‘சுதந்திர’ வரலாற்றை உணர்ந்தாலே சுதந்தரத்தை இழக்கத் துணியமாட்டார்கள்.”
1158. “செயலற்றவர்கள், செயலுள்ளவர்கள் மீது அழுக்காறு கொள்ளுதல் தவிர்க்க இயலாதது, கவலற்க.”
1159. “ஆளுமை என்பது ஒரு கலை. அதை நாள்தோறும் பயிலுதல் வேண்டும்.”
1160. “செயற்பாட்டுக்குரிய ஆயத்த நிலையில் இருக்கப் பழகியவர்கள் சிறந்த ஆளுமையைப் பெறுவார்கள்.”
1161. “அறிவியல், பொருளியல், ஆட்சியியல், அருளியல் அனைத்தும் வீட்டு வாசற்படிக்கு வந்தாலும் ஏற்க முன்வரா சில அபூர்வப் பிறவிகள் உண்டு.”
1162. “காமம்-அறிவார்ந்த இன்பம் வரவேற்கத்தக்கது. காமம் களியாட்டமாயின் தரம் குறையும்.”
1163. “ஒரு குழந்தைக்கும் பெற்றோராதல் பெறற் கரிய பேறு.”
1164. “மனவெழுச்சி அடங்கிய நிலையே பூசகர் ஆதலுக்குத் தகுதி.”
1165. “துழ்நிலைகளை எதிர்த்துப் போராடுவதே உய்திக்கு வழி.”
1166. “உலகந்தழிஇய ஒட்பம் பெறுதலே இன்று முதற்கடமை.(ஒட்பம்-மேன்மை)
1167. “நன்மைகளுக்கெல்லாம் நன்மை அழுக்கா றின்மையே.”
1168. “காமம்’-உயிர்களுக்கு விருப்பம் நிறைந்த வாழ்க்கையைத் தூண்டுவது.”
1169. “துய்த்தல் பாபம் இல்லை. துய்க்கும் பாங்கியல் தான் புண்ணிய, பாபம் கருக் கொள்கிறது.”
1170. “செய்யும் செயல்கள் பயன் தருவதில்லை. நோக்கங்களே பயனைத் தரவல்லன.”
1171. “வன்தன்மை’ - கொள்ளுதல் வாழ்க்கை வெற்றிகளைக் கெடுக்கும்.”
1172. “திருத்தமுறச் செய்பவர்கள் கிடைக்காது போனால் நாமே செய்துவிடுவது நல்லது.”
1173. “யார் இறந்தால் என்ன? சச்சரவு நிற்குமா?”
1174. “குடும்ப உறவுகள் செழித்து வளர்வதே நாகரிகத்தின் அடிப்படை,”
1175. உயிர்கள் மன விகாரமின்றிச் செழித்து வளர்தலே நாகரிகத்தின் அடிப்படை.”
1176. “சுழலும் இராட்டையாகிவிட்டது இன்றைய மானுட வாழ்க்கை.”
1177. “கட்சி ஜனநாயகம் இல்லையானால் ஆட்சியில் அமர்பவர்கள் கெட்டுப் போவார்கள்.”
1178. “உணர்வு பூர்வமாக ஒன்றைச் செய்ய முன்வராதவர்களிடம் பணியை ஒப்படைப்பது தவறு.”
1179. “இன்றைய இளைஞர்கள் ஆசைப்படுகின்றனர். ஆனால் அறிவறிந்த ஆள்வினையில் விருப்பமில்லை.”
1180. “உழைப்பால் ஆள உலகத்தில் உழைப்பினை விலையாகத் தராமல் வாழ நினைப்பது குற்றம்.”
1181. “குறைவாகச் செய்தாலும் முறையும் ஒழுங்கும் தழுவிய செயல்முறை தேவை.”
1182. “பணம் தேவையிருக்கிறது. பனம் வரும் வாயிலும் இருக்கிறது. ஆனால், எடுப்பாரைத்தான் காணோம்.”
1183. “பயிற்சி பெறாத உழைப்பாளிகள் செய்வார்கள். ஆனால் போதிய பயன் இருக்காது.”
1184. “கூட்டத்தைக் குறை! உழைப்பின் தரத்தை உயர்த்துக.”
1185. “விதிமுறைகள், சென்ற காலப் படிப்பினைகள் ஈன்ற குழந்தைகளேயாம்.”
1186. “தற்காப்பு உணர்வு” முனைப்பாக இருப்பவர்கள் கலந்து பேச மறுப்பார்கள்.”
1187. “எந்த ஒன்றையும் தீர ஆய்வு செய்யாமல்-செய்வது இழப்பை தரும்.”
1188. “நிர்வாகப் போக்கில் ஆய்வு செய்வது-வளர்ச்சிக்குத் துணை செய்ய இந்த ஆய்வுக்கு ‘நம்பிக்கை’ என்ற தத்துவம் தடையாக அமைதல் கூடாது.”
1189. “ஒரு பணியில் ஒருவரை தொடர்ந்து ஈடுபடுத்துதல்-கேட்டுக்கு வழி வகுக்கும்.”
1190. “தடை இல்லாத வண்டியும் ஆய்வு இல்லாத நிர்வாகமும் விபத்துக்களைத் தோற்று விக்கும்.”
1191. “ஆசை-ஆத்திரம் தகுதிகளின் அடிப்படையில் தோன்றுவதில்லை.”
1192. “இனம் - மொழியின் அடிப்படையில் தோன்றி நிலவும் வழக்கு-இது உலக வழக்கு சாதி மத அடிப்படையில், இனம் இருத்தல் இயலாது, கூடாது”
1193. “சாதி’ பிறப்பின்பாற்பட்டது. இது அயல் வழக்கு: தமிழ் வழக்கன்று. நீதிக்கும் வளர்ச்சிக்கும் புறம்பானது.”
1194. “குலம்’ வழி வழி வரும் மரபு. இது ஏற்புடையது. மரபு வழியும் சூழ்நிலையின் தாக்கமும் தவிர்க்க இயலாதன.”
1195. மதம்-மடம் ஆகிய அமைப்புக்கள் அப்பட்டமான சாதியமைப்புக்களே! இங்கெல்லாம் புதுமையை எதிர்பார்த்தல் இயலாது.
I196. “மேய்ப்பார் இல்லாத மாடுபோல கண்காணிப்பு இல்லாத நிர்வாகக் கெடும்.”
1197. “ஒருவரிடமே பல காலத்துக்கு ஒரே பணி இருப்பது நற்பழக்கத்தைத் தூண்டுவதில்லை.”
1198. “தெளிவாகக் கருத்துப் பரிமாற்றம் இல்லையானால் காரியக் கேடுவரும்.”
1199. “படித்தவர்களிடம் உள்ள தீயப் பண்புகள் அகன்றாலே-சமுதாயம் உருப்பட்டுவிடும்.”
1200. “மற்றவர்களின் பக்தி நம்முடைய பெட்டியைத் தீண்ட அனுமதிக்கக்கூடாது.”