801. “சின்ன சின்ன செய்திகளில் காட்டப் பெறும் அக்கறையே பெரிய பெரிய சாதனைகளைச் செய்ய உதவி செய்யும்.”

802. “அதிகாரம் உடையவர்கள் நன்கொடை கேட்டால் கூட அது நிர்ப்பந்தான்.”

803. “தீமைகள் கொலுவிருந்து பாராட்டுக்கள் பெறும் யுகத்தில் நல்லன நிகழ்தல் அருமை.”

804. “மருந்தாகப் பயன்படும் கோபம், தீதன்று. வரவேற்கத்தக்கது.”

805. “ஒவ்வொருவரும் தம் ஆற்றல் முழுவதையும் உழைப்பாக மாற்றினால் வளம் பெருகும்."

806. “கூட்டுறவு, பொருளாதார வளர்ச்சி இயக்கம் மட்டும் அல்ல. அஃது ஒர் ஆன்மீக வளர்ச்சி இயக்கமும் ஆகும்.

807. “எங்கு, பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப் பெறவில்லையோ, அங்கு உழைப்பு முழுமையாகாது, காலக்கேடும் உழைப்புக் கேடும் இருக்கும்.”

808. “உழைப்பு, உழைப்புக்காகவே-வேலை, வேலைக்காகவே என்று செய்தலே ஒழுக்கம்.”

809. “ஒழுக்கத்தின் தாய் நல்ல உழைப்பு.”

810. “அழுக்காறு, ஆணவப் போட்டிகள் ஆக்கத்தைக் கெடுக்கும்.”

811. “நிலம் உழைப்புக்கேற்ற பயனை ஒளிக்காமல் வழங்குகிறது.”

812. “பயன்படுத்தாத நிலை பாழ். பயன்படாத மனிதனும் பாழ்.”

813. “அர்ப்பணிப்பு நிலையில் வாழும் தாவர இனங்கள் போற்றுதலுக்குரியன.”

814. “வேளாண்மையில் நமது முன்னோர் பின் பற்றிய முறைகள் தீமை பயவாது, நலம் செய்தன: அதாவது இயற்கை உரங்கள் எதிர் விளைவுகளை உண்டாக்காது.”

815. “பணம்-ஊக்கத்திலும் பண்பாட்டுக்குரிய அற ஊக்கம் உயர்ந்தது.”

816. “உற்பத்தி நுகர்வுக்கே இலாபத்திற்கு அல்ல.”

817. “நோயின்றி வாழ, காய்கனிகளே சிறந்த உணவு.”

818. “மண்ணில் குறை இல்லை! எந்த மண்ணையும் மனிதன் பயன்பாட்டுக்குக் கொண்டு வரலாம்.”

819. “மண்ணில் விளையும் பொருள்களில் மனிதனுக்குப் பயன்படாத கழிவுகளையே மண் விரும்புகிறது. கழிவுப் பொருள்களையும் ஆக்கமாக மாற்றும் ஆற்றல் மண்ணுக்கு இருக்கிறது.”

820. “மனிதரில் கடையாய மனிதரை மேம்பாடுறச் செய்தலிலேயே ஞானியின் அருமை வெளிப்படும்.”

821. “நிலம் சமூகத்திலிருந்து குறைவாகப் பெற்றுக் கொள்கிறது. நிறைய திருப்பிக் கொடுக்கிறது. இதுவே நியதி. மனிதன் சமூகத்திலிருந்து நிறைய எடுத்துக் கொள்ளவே விரும்புகிறான்.”

822. “பேணப்படுபவள் பெண்; மற்றவர்களைப் பேணிப் பாதுகாப்பவள் பெண்.”

823. மனிதன் எளிதில் மறக்க மறுக்கிறான், ஆனால் பல நன்மைகளை மறந்து விடுகிறான். நன்றல்லாததை மறக்க மறுக்கிறான்.”

824. “பெண்களுக்கே, பெண்ணைப் பெருமைப் படுத்தத் தெரியவில்லை.”

825. “பெண்கள், தம் இனப்பகை உடையவர்கள்.”

826. “மாப்பிள்ளைக்கு (ஆணுக்கு) வாய்க்கும் மாமியார் நல்லவள்! ஆனால் பெண்ணுக்கு அப்படிப் பட்ட மாமியார் வாய்ப்பது அரிது.”

827. “மனிதன் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடாது. காரண, காரியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும்.”

828. “மனிதன் தன்னுடைய பெரிய தவறுகளைக் கூட நியாயப்படுத்துகிறான். மற்றவர்களுடைய சிறிய பிழையைக்கூட பெரிதுபடுத்துகிறான்.”

829. “ஜனநாயகம் வெற்றி பெற அரசியல் வாதிக்குக் கொள்கை, கோட்பாடு உறுதி ஆகியன தேவை.”

830. “பெண் பெருமைக்குரிய பிறப்பு.”

831. “எதிர்பார்த்துச் செய்தல் என்பதே சிறந்த செயற்பாடு.”

832. “வைதீகப் பூசனையை விட, ஆயிரம் மடங்கு பயனுடையது அன்புவழிபாடு.”

833. “செய்தித் தாள்கள் தரும் செய்திக்ளைக் கொண்டு நன்மை, தீமைகளை முடிவு செய்ய இயலாது; கூடாது.”

834. “குடியாட்சியின் சிறப்பு, குடிமக்களுக்கும் அரசாங்கத்திற்கும் உள்ள நெருக்கமான உறவுகளைப் பொறுத்ததேயாம்.”

835. “அரசாங்கத்தின் நிதியைப் போற்றத் தெரியவிட்டால் வலிமையான அரசாங்கம் அமையாது.”

836. “நன்மைகளே கூட பிறிதொரு காலத்தில் தீமையாக மாறி விடுவதுண்டு. விழிப்பு தேவை.”

837. “கூட்டுறவு இயக்கங்கள், பஞ்சாயத்துக்கள் நாட்டை உயிர்ப்பு நிலையில் வைத்துக் கொள்ள உதவி செய்வன.”

838. “விவசாயிகளுக்குக் கடன் வஜா! மறுபுறம் கள்ளுக்கடை வசூல்!”

851. “எளியர், உயர்வு பாராட்டுதலும், மிக உயர்வுடையோர் தம்மை எளியராக்கிக் கொள்ளுதலும் உலகத்தில் காணப்பெறும் காட்சி.”

852. “உறவை வளர்த்துப் பேணுதல் பெருவாழ் வினைத் தரும்.”

853. “புகழில் மயங்காத மானிடர் இல்லை. புகழ்வதில் தாராளமாக நடந்து கொள்வது உயர்வதற்கு வழி”

854. “உடலோடு முரண்பட்டு விளையாடினால் நோயினால் தண்டித்து விடுகிறது.”

855. “இழிவாக எண்ணி அலட்சியம் செய்தால், எதிர்விளையாக அறிவைத் தருகிறது, உடல்.”

856. “ஒவ்வொரு செயலுக்கும் அதற்குரிய பயனைக் கணக்கிடல் உழைப்பினை ஊக்குவிக்கும்”

857. “இந்திய வாழ்க்கையமைப்பில் ஏற்பட்டுள்ள சாதிப் பிரிவினைகள் எளிதில் நீங்காது. பிரிவினை வழிப்பட்ட பகையைத் தணித்தாலே போதும்.”

858. “இன்று பரஸ்பர நம்பிக்கையற்றவர்களே கூட்டாளிகள்.”

859. “அவரவர் வினைவழி அவரவர்” என்ற விதி இம்மியும் பிறழாமல் நிகழ்வதை எஸ்.டி.எஸ்-எம்.ஜி.ஆர். மோதலில் உய்த்துணர முடிகிறது.

860. “தகுதி உடையவர்களைவிடத் தகுதியில்லாதவர்களே உயர விரும்புகின்றனர்.”

861. “ஒவ்வொரு பழக்கமாக நற்பழக்கங்கள் வாழ்க்கையில் உறுதிப்பட்டால்கூட எளிதில் வெற்றி பெறலாம்.”

862. “பொது மக்கள் ஏமாளிகளாக இருக்கும் வரை ஆட்சியாளர்கள் யோக்கியர்களாக மாட்டார்கள்.”

863. “பணத்தின் மதிப்பு, அல்லது விலை ஒரே மாதிரியாக இருக்கும் என்று கருதித் திட்டமிடுதல் கூடாது. பண வீக்கம் கவனத்தில் இருக்கவேண்டும்.

864. “உற்பத்தியாளனாக மாறினால் ஒழிய வாழ்க்கைத் தரம் நிலைத்து நிற்காது.”

865. “ஒருவரை மறைத்து ஒருவர் சொல்லும் சொற்களைக் கேளாதொழிக!

866. “தற்சலுகையற்ற சுயமதிப்பீட்டிலும் சிறந்த ஆசிரியன் இல்லை.”

867. “உணர்வு பூர்வமான செயல்முறைப்பட்ட சமூக வாழ்வு தோன்றினால் சமுதாயம் நன்றாக அமையும்.”

868. “ஆரவார அரசியலில் உள்ள கவர்ச்சி ஆக்கப் பணிகளுக்கு இருப்பதில்லை.”

869. “விநாடிகளைக் கணக்கிட்டுக் காரியங்கள் செய்தலே வாழும் முறை.”

870. “அன்றாட வாழ்க்கையில் திருக்கோயிலையும் சமூகத்தையும் இணைத்து வாழ்தலே சிறந்த வாழ்வு.”

871. “உயிர்ப்பும் உணர்வும் செயலில் கலக்குமானால் வெற்றி உறுதி.”

872. “திட்டமிடும் பொழுதே எதிர்கால வரலாற்றுப் போக்கை உய்த்துணர்ந்து திட்டமிடல் நல்லது.”

873. “தன் காரிய நோக்குடைய சுயநலமிகள், அடுத்தவர் வீட்டை இடித்துத் தன் வீட்டைக் கட்டுவர்.”

874. “நடைமுறைச் சில்லறைச் செலவுகளில் கவனம் மூலதனத்தைக் காப்பாற்ற உதவும்.”

875. “கண்ணுக்கும் கருத்துக்கும் வராது மறைந்து கொண்டிருக்கும் பணிகளைத் தேடிச் செய்வதேபணி.”

876. “உன்னிடமுள்ள பணிகளில் நீ செய்ய வேண்டிய நிலையானதைத் தேர்ந்தெடுத்து உடன் செய்.”

877. “பிறர் சொல்வதைக் கேட்டுச் சிந்திக்காதவர்கள் மூர்க்கர்களாகவே இருப்பர்.”

878. “நமக்கு வாய்ப்புக் கொடுக்காமலே நம்மீது பழி சுமத்துபவர்கள் உண்டு. விழிப்பாக இரு.”

879. “நமது செயற்பாட்டில் - மற்றவர்கள் உணர்வு பூர்வமாக ஈடுபாடு கொள்ளச் செய்வதிலேயே வெற்றி இருக்கிறது.”

880. “நல்லவர்கள் வல்லவர்களாக இருந்தால் தான், காரியம் நிகழும்.”

881. “சாதாரணமாக மக்கள் எளிதில் உண்மை நிலைக்கு வருவதில்லை.”

882. “சுவை, உண்ணும் கிளர்ச்சியைத் தருகிறது. ஆனால், நன்மை பயப்பதில்லை.”

883. “புலால் உணவைத் தவிர்க்கக் கூடிய வழிபிரான்னிகளை விருப்புடன் வளர்த்தலேயாம்.”

884. “ஊக்கத்துடன் செய்யப் பெறாத வேலை, அரை வேலை.”

த-7

885. “ஏழைகள், எளிதில் எதையும் விற்பர்.”

886. “இன்றைய ஆசிரியர்களுக்குப் பொறுப்பு உணர்வு வந்துவிட்டால் நாட்டின் முன்னேற்றம் உறுதி.”

887. “ஜனநாயக அமைப்பு என்பது கலந்து பேசுவது என்பது. ஆனால், அந்த அமைப்பிற்க்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமலேயே பலர் உள்ளனர்.”

888. “இனியன பேசுதல் எல்லாவற்றையும் கூட்டுவிக்கும்.”

889. “காலத்தை ஒழுங்குப்படுத்தி - காலத்திற்குரிய பணிகளையும் ஒழுங்குப்படுத்தினால் நிறையப் பணிகளைச் செய்யலாம்.”

890. “படைப்பாற்றல் உடைய கல்வியே கல்வி.”

891. “கற்றுக் கொண்டே இருப்பது அறி ஆற்றினைத் துார்க்காமல் தந்து கொண்டிருக்கும்.”

892. “தொழிற் புரட்சி ஏற்படும் நாடே வளரும் - வாழும்.”

893. “புகழ்ந்தே காரியம் சாதித்துக் கொள்ளும் மக்கள் புத்திசாலிகள்.”

894. “தற்காலிகத் தேவைகளை ஒத்திப் போட்டால் நீண்ட காலத் தேவைகளை அடையலாம்.”

895. “செல்வத்தை முதலீடாக்கும் முயற்சியே முயற்சி.”

896. “சமூகத்தில் தாய்க்கு இருக்கும் பொறுப்பு உணர்வு, தந்தைக்கு வருவதில்லை."

897. “அசட்டுத் துணிச்சல் - அவலத்தையே தரும். அறிவாராய்ந்த துணிவு வெற்றிகளைக் குவிக்கும்.”

898. “பிறருக்குக் கொடுக்காதே எனக்குக் கொடு என்பவன், தேவைக்குக் கேட்கவில்லை, அடுத்தவனுக்குக் கிடைக்கக் கூடாது என்பதற்காகவே கேட்கிறான்.”

899. “விருப்பத்துடன் உழைத்தலே உயர் வாழ்வுக்கு அடித்தளம்.”

900. “சமுதாய மாற்றங்கள் நிகழ்த்தும் ஆற்றலே பயனுடைய ஆற்றல்.”

"https://ta.wikisource.org/w/index.php?title=சிந்தனை_துளிகள்/801-900&oldid=1055649" இலிருந்து மீள்விக்கப்பட்டது