சிரிக்க சிந்திக்க சிறுவர் கதைகள்/001-010

1. தீர்மானம்

ஒருவருக்கு ஒருவர் ஒத்துப் போகாத தந்தையும் மகனும் இருந்தனர். ஒரு நாள் தந்தை விருந்துக்கு ஒருவரை அழைத்திருந்தார். எனவே விருந்தினர்காகக் கறிவாங்கி வரும்படி மகனைப் பக்கத்துப் பட்டணத்திற்கு அனுப்பி வைத்தார். கறியினை வாங்கி வரும்போது பட்டணத்து வாயிலில் தன்னை நோக்கி ஒருவர் நடந்து வருவதைக் கவனித்தான் மகன். எதிரும் புதிருமாக வந்த அவர்கள் இருவரும் ஒருவர்க்கொருவர் வழிவிட்டு விலகாமல் அந்தக் குறுகிய வாசலில் நெடுநேரம் நின்றனர்.

பட்டணம் சென்று நெடுநேரமாகியும் திரும்பி வராத மகனைத் தேடித் தந்தை வந்தார். மகனைப் பட்டணத்து வாயிலில் கண்டார் தந்தை. கண்டதும் சொன்னார். “கறியை எடுத்துக் கொண்டு நீ வீட்டிற்குபோய் விருந்தினரோடு இரு. உனக்குப் பதிலாக இந்த மனிதனை நான் இங்கு எதிர்த்து நிற்கிறேன்”.

2. திடீர்ப் பணக்காரன்

வறியவன் ஒருவன் பணம் படைத்தவன் ஆனான். வந்த வாழ்வில் முந்தியதை மறந்தான். ஒரு நாள் காலைத் தன் வீட்டைச் சுற்றியிருந்த தோட்டத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு, வீட்டிற்குள் சலிப்போடு நுழைந்தான். சலிப்புக்குக் காரணம் கேட்டாள் மனைவி. “தோட்டத்திலுள்ள மலர்களைப் பார்வையிடும்போது, செம் மலரிலிருந்து ஒரு பனித்துளிப்பட்டு நனைந்துவிட்டேன். பனிக் காய்ச்சல் வந்து விட்க்கூடாது உடனே மருத்துவரைக் கூப்பிடு” என்றான் அவன். “நாம் இருவரும் பிச்சைக்காரரர்களாய்ச் சந்தித்த அந்தக் கசப்பான நிகழ்ச்சியை நீங்கள் மறந்து வீட்டீர்களா? அன்றிரவு முழுவதும் கொட்டிய மழையில் ஒதுங்க இடமின்றி ஒரு மூங்கில் புதரில் நனைந்த வண்ணம் நின்று கொண்டிருந்தோம். அதைவிடவா இப்போது அதிகம் நனைந்துவிட்டீர்கள்? என்று கேட்டாளே ஒரு கேள்வி, அவன் மனத்தில்படும்படி.

3. ஒற்றை ஆடை அறிஞர்

அறிஞர் ஒருவர் உடுத்திக் கொள்ள ஆடை ஒன்றே ஒன்றினையே வைத்திருந்தார். அந்த ஆடையையும் துவைக்க நேர்ந்ததால், அம்மணமாகவே படுக்கையில் அவர் படுத்துக் கொள்வார். ஒருமுறை ஆடையை அவ்வாறே துவைத்து உலர வைத்துவிட்டுப் படுக்கைக்குச் சென்று அம்மணமாய் படுத்துக் கொண்டார். அந்த நேரம் பார்த்து அறிஞரைக் காண ஒருவர் வந்தார். அறிஞரைக்கானது அவருடைய மகனிடம் “அப்பா எங்கே! என்றார். “படுக்கையில்” என்றான் மகன் “உடம்புக்கென்ன? நலக்கேடா?” வந்தவர் கேட்டார். “உடுக்க ஒன்றுமில்லை என்று படுக்கையில் படுத்துக் கொண்டால், நலக்கேடு என்றா பொருள்?” வந்தவரிடம் விளக்கம் கேட்டான் மகன்.

4. வறிய விருந்தினன்

வறியவன் ஒருவன், பணம் படைத்த உறவினர்கள் வீட்டில் விருந்தொன்றுக்கு அழைக்கப்பட்டான். விருந்திற்கு அணிந்து செல்ல அழகிய உயர்ந்த ஆடையில்லாததால் பஞ்சில் நெய்ந்த மெல்லிய ஆடையொன்றை அணிந்து சென்றான். தன் ஆடையைக் கண்டு பிறர் எள்ளி நகைப்பர் என்றெண்ணிய விசிறியொன்றைக் கையிலெடுத்து விசிறிய வண்ணம் “இயல்பாகவே கோடை வெப்பம் என்றால் எனக்கு மிகுந்த வெறுப்பு, எனவே வாட்டும் குளிர்காலத்தில் கூட விசிறியால் விசிறிக்கொள்வேன்” என்றான்.

வறியவனின் இந்தப் போலி நாடகத்தை வெளிப்படுத்த திட்டமிட்டான். விருந்து கொடுத்தவன். விருந்தின் முடிவில் எல்லோரும் உறங்கப் படுக்கைகள் பாதுகாப்பான உள் அறைகளில் அணியமாயின. இந்த வறியவனுக்கு மட்டும் வீட்டின் முகப்பிலுள்ள குளத்தின் அருகில் திறந்தவெளித் திண்ணையொன்றில் மெல்லிய படுக்கை விரிக்கப்பட்டு அதில் புல்லினால் செய்த தலையணை வைக்கப்-

பட்டது. பின்னர் போர்த்திக் கொள்ளப் போர்வையேதுமின்றி வறியவனைப் படுக்கச் செய்தான். பக்கத்தில் நின்று நடக்கப் போகும் வேடிக்கையைக் காணத் துடித்துக் கொண்டிருந்தான் விருந்து கொடுத்தவன்.

குளிர்தாங்க மாட்டாமல் நள்ளிரவில் படுக்கையிலிருந்து எழுந்தான் வறியவன். படுக்கை விரிப்பையெடுத்துப் போர்த்திக் கொண்டு தப்பிச் செல்ல முனைந்தான். பரபரப்பில் படுக்கை விரிப்புத் தட்டி அருகிலிருந்த குளத்தில் விழுந்து விட்டான்.

இந்த வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த விருந்து கொடுத்தவன் “என்ன நடந்தது?” என்று ஒன்றுமறியாதவன் போல் கேட்டான். "வெப்பத்தின் மீது எனக்குள்ள வெறுப்புத்தான்; வேறொன்றுமில்லை. திறந்தவெளித் திண்ணையில் தான் எனக்கு நீங்கள் படுக்கைப் போட்டீர்கள் என்றாலும் உங்கள் குளத்தில் குளித்துவிட்டுத்தான் தூங்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம் என்று பக்குவமாக விடையளித்தான் வறியவன்.

5. விண்ணகப் படிக்கட்டுகள்

மாமனாருடன் மருமகன்கள் உணவு உண்ணும்போதெல்லாம் அவனுக்கு ஒரு ஒதுக்குப்புறமான இருக்கையே கிடைத்தது. இதனால் அவமானமுற்ற அவன் மனைவி. ஒருநாள் மதிப்புமிக்க இருக்கையில் கெளரவமான ஆசனத்தில் எல்லோருக்கும் முன்னதாக ஓடிச் சென்று அமரும்படி தன் கணவனுக்கு ஆய்வுரை கூறினாள். ஆனால் அந்த ஆய்வுரையை அவன் முற்றுமாகப் புரிந்து கொள்ளவில்லை. 

பின்னர் ஒருமுறை அவன் தன் மனைவியுடன் தன் மாமனார் இல்லம் சென்றபோது, விருந்தினர்கள் இருக்கையில் அமரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர். உடனே அந்த இளைஞனின் மனைவி, அவனைத் தலைமை இருக்கைகுச் சென்று அமரும்படி சைகை செய்தாள். அவள் கணவனோ இருக்கைகளின் உயரத்தில் வேறுபாடு இருப்பதைக் கண்டான். அத்துடன் ஏணிப்படி ஒன்று உணவுக் கூடத்தில் இருப்பதைக் கவனித்தான். ஒரே ஓட்டமாக ஓடி அந்த ஏணிப்படிகளில் விரைந்து ஏறி பாதிப் படிகளைக் கடந்தான். இதனைக் கண்ட அவன் மனைவி அவனை முறைத்துப் சினத்துடன் பார்த்தாள். ஆனால் அவள் பார்வையின் பொருள் புரியாதபடி, “எவ்வளவு உயரம் ஏற வேண்டும் என்று நீ விரும்புகிறாய்; விண்ணகத்தை எட்டிப் பிடிக்கும் மட்டுமா?” என்று அவன் உரத்த குரலில் கேட்டான். செய்வதறியாது, திகைத்தாள் அவன் மனைவி.

6. பிழைப்புக்கு ஒருவழி தேடு

பிறர் தன்னை வாயாரப் புகழ்வதைக் கேட்க விரும்பினான் ஒருமனிதன். அவனின் இந்த இயல்பை அறிந்த ஒரு மனிதன் அவனைப்பற்றி அவன் முன்னிலையில் புகழ்ந்து பேசினான். அவன் சொன்னான், “வாழ்நாளெல்லாம் செல்வச் செழிப்புடன் நீ வாழ்வாய் என்பதை உன் கண்கள் சொல்கின்றன” என்றான். இதனைக் கேட்டுக் கிறுகிறுத்துப் போன அந்த புகழ் விரும்பி அந்த மனிதனைப் பல நாள்கள் தன் வீட்டில் விருந்தினனாக வைத்து ஓம்பிப், பின் விலையேறப் பெற்ற பொருள்களைப் பரிசாகக் கொடுத்தான். பிரிந்து செல்லும்போது அந்த மனிதன் புகழ் விரும்பியிடம் “நீங்கள் ஒரு தொழில் புரிய வேண்டும். ஓரிணைக் கண்களைக் கொண்டு ஒரு மனிதனின் எதிர்காலம் முழுமையையும் கணித்து விடமுடியாது” என்றான் அந்த மனிதன்.

7. நாமெல்லாம் ஒன்று

ஒருமுறை அறிஞர் ஒருவர் “இயற்கைப் படைப்புகள் அனைத்தும் ஒன்றே” என்ற மெய்மை விளக்கம் தந்து கொண்டிருந்தார். இதனைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு படித்த மேதை “பகுத்தறிவு கொண்ட ஒரு மனிதன் கடற்பூதங்களையும்; புலிகளையும் அடக்கியாள முடியுமா?


நாமெல்லாம் ஒன்று என்பதால் ஒருவன் புலியின்மீது சவாரி செய்யுமுடியுமா?” என்று கேட்டான்.

இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த ‘செந்தேள்’ பலமாகச் சிரித்தார். “புலியின் முதுகில் மேலேறிச் செல்வது, இரண்டு உடல்களுக்கிடையே வேறுபாடு உண்டு என்பதைக் காட்டுகிறது. ஆனால் ஒரு மனிதன் புலியால் விழுங்கப்பட்டுவிட்டால் அவர்கள் இருவரும் ஒன்றே” என்றார். இதனைக் கேட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

8. குடியை மட்டுப்படுத்தல்

‘நான்மாடத்தைச் சார்ந்த ‘சிற்றரசு’ மதுவை நேசித்தான். சாத்தூரில் அவன் கல்வி அதிகாரியாக நியமிக்கப்பட்டபோது, அவன் தனது மிதமிஞ்சிய குடிப்பழக்-

கத்தால், கிடைத்த பதவியை இழந்துவிடுவான் என்று அவன் தந்தை உணர்ந்தார். எனவே அத்தகைய மிதமிஞ்சிய குடியைத் தவிர்க்கும்படி மகனுக்கு அறிவுரை வழங்கி ஒரு மடல் எழுதினார்.

அறிவுரையின் விளைவாக மகன் சிற்றரசு, தன் முதல் மாத ஊதியத்தில் பெரிய அளவிலான தங்கக் கோப்பை ஒன்றினைச் செய்தான். அக்கோப்பையில் “தந்தையின் மொழிகளை மறவாதே. ஒரு முறைக்கு மூன்று கோப்பைக்குமேல் அருந்தாதே” என்று பொறித்து வைத்தான். இச்சொற்றொடர் பின்னர் அப்பகுதி மக்களிடையே பொதுமொழியாப் பழமொழியாய் மாறியது.

9. உள்ளுணர்வினால்
உண்டாகும் உவகை

பாண்டியனார் ஓர் அறிஞர். மாலைநேரங்களில் 'மணி என்பவரின் இல்லம் சென்று அவர்களுக்குப் பாடங்கள் கற்பித்து வந்தார். இவர் கவிதையெழுதுவதிலும் நாட்டம் மிக்கவர். ஒருநாள் இரவு திருமணி அவர்களின் இல்லத்தில் இரவு உணவருந்திவிட்டுத் தன் வீடு திரும்பினார் அறிஞர். முன்னிரவு நேரம் அது. முழுநிலவு வானில் பவனி வந்து கொண்டிருந்தது நிலவைக் கண்டார். கவிபாடும் ஆவல் கொண்ட அறிஞர். உணர்ச்சி பொங்கப் பாடினார்.

“கையில் தவழும் அமுதக் கலசத்திற்கு நிகர் ஏதுமில்லை; ஏனெனில் ஆண்டொன்றிற்கு எத்தனை முறைகள் அழகு நிலவை நம் தலைக்குமேல காண முடியும்?” என்ற கவிதையை வடித்தார். கட்டுக்கடங்கா மகிழ்ச்சி கண்டார்; ஓடிச் சென்று தன் வீட்டுக் கதவைத் “பட பட” வென்று தட்டினார். தனது வீட்டு முதலாளியை எழுந்து வரும்படி அபயக்குரல் எழுப்பினார். அறிஞர் போட்டக் கூச்சலில் வீட்டிலுள்ள அனைவரும் திருடோ தீவிபத்தோ ஏற்பட்டிருக்கிறது என எண்ணி அலறியடித்து பரபரப்பாக எழுந்து வந்தனர். அறிஞர் எதற்காக அலறினார் என்பதைப் புரிந்து கொண்ட வீட்டு முதலாளி, “நன்று அப்படியானால் நாம் மதுஅருந்தலாம்; வாருங்கள்” என்று அறிஞரை உள்ளே உணவுக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.

10. தள்ளுதல் முன்னொரு காலத்தில்

சேர மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மனிதன் சிறந்த நீச்சல் வீரனாய்ப் புகழ் பெற்று விளங்கினான். ஒருநாள் அவன் மனைவி ஒரு வயதே நிரம்பிய குழந்தையொன்றினை நீரில் மிதக்க விட்டுக் கொண்டிருப்பதை அவ்வழியாய்ச் சென்ற ஒருவன் கண்டு, ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?” என்று கேட்ட போது, அவள் பெருமையுடன், “நன்று; அவன் தந்தையைப் போலவே இவனும் சிறந்த நீச்சல் வீரனாக வேண்டாமா?” என்று கேட்டாள். வந்தவர் வாய்பொத்தி அமைதியாகச் சென்றார்.

11. ஃ என்று அடையாளமிட்ட இடம்

ஒருமுறை வீரன் ஒருவன் ஆற்றைக் கடக்கப் படகில் சென்றான் செல்லும் வழியில் அவன் உடைவாள் நழுவி நீரில் விழுந்தது. விரைந்து அந்த வீரன் வாள் விழுந்த இடத்தைப் படகில் ஃ என்று அடையாளமிட்டான். படகு கரை சேர்ந்தது. வீரன் உடனே படகில் ஃ அடையாளிட்ட இடத்துக்கு நேராக நீரில் இறங்கி வாளினைத் தேடினான்.

12. முரண்பட்ட இரண்டு தவறுகள்

பயனற்ற மகன் ஒருவன் தன் தந்தையின் விருப்பத்திற்கு மாறாகவே எப்போதும் செயல்பட்டு வந்தான். இதனை உணர்ந்த அவனின் தந்தை சாக்காட்டுப் படுக்கையில் இருக்கும்போது, தன் விருப்பத்திற்கு மாறாகத்தான், மகன் செயல்படுவான் என்று எண்ணி மகனிடம், “மகனே, நான் இறந்ததும் ஏதாவது ஓர் நீர் நிலையில் என் உடலை அடக்கம் (புதைத்து) செய்துவிடு” என்று வேண்டிக் கொண்டான்.

தன்னைத் தரையில்தான் தன் மகன் புதைப்பான் என்று மனத்தில் நினைத்துக் கொண்டார். ஆனால் அந்த உதவாக்கரை மகனோ, வாழும் போதுதான் நான் என் தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றத் தவறிவிட்டேன், அவர் இறந்த பிறகாவது நான் அவர் விருப்பத்தை நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணி, அவர் இறந்ததும், தங்கள் சொந்த மண்ணில் ஒரு சிறிய குளத்தினை உருவாக்கி அதனுள் தன் தந்தையின் பிணத்தைப் போட்டுவிட்டான்.