சிலப்பதிகாரக் காட்சிகள்/கோவலனும் கண்ணகியும்

8. கோவலனும் கண்ணகியும்

அடிகள் அறிவுரை

மாதவர் இருக்கையில் தங்கிய கவுந்தியடிகள் கோவலனின் வருத்தத்தை அகற்ற எண்ணினார். அவர் அவனை அன்புடன் பார்த்து, நீ சென்ற, பிறப்பில் நல்வினையை மிகுதியாகச் செய்தாய்; ஆயினும் சிறிதளவு தீவினையைச் செய்தனை: அதனாற்றான் பெற்றோரையும் மற்றோரையும் விட்டுக் காதலியுடன் வந்து துன்புறுகின்றனை. அருந்தவத்தோர் செய்யும் நல்ல உபதேச மொழி களைக் கேளாமல் தீய செயல்களில் ஈடுபடுபவர் பலராவார். அவர் அத்தீச்செயலால் துன்பத்தை அநுபவிக்கும் பொழுது செயலற்று வருந்துகின்றனர். கற்க வேண்டியவற்றைக் கற்று, அவற்றின் பயனை உணர்ந்த பெரியோர், தீவினைப் பயனாகிய துன்பத்தை அநுபவிக்கும் பொழுது, அதற்காக வருந்தார், இது நாம் செய்த தீவினையால் வந்தது’ என்று எண்ணிக் கொள்வார் இத்துன்பம் யாரை விட்டது.

“இராமன் பட்ட பாட்டை நீ அறிவாயா?” அவன் சீதைக்காக வில்லை வளைத்த துன்பம், பின்னர் அவளைப் பிரிந்ததால் வந்த துன்பம் முதலியவற்றை நீ அறிவாய் அல்லவா! நீ நளன் வரலாற்றை அறிவாய அல்லவா? அவன் சூதாடியது-தன மனைவியுடன் காடு சென்றது-அவளை நள் இருளில் விட்டுப் பிரிந்தது-விஷத்தால் உடல் கரிந்து விகாரத் தோற்றத்தில் இருந்தது முதலியன துன்புறு செயல்கள் அல்லவா? இவை யாவும் தீவினை வசத்தால் வந்தனவாகும். இராமனும் நளனும் தம் நாடு நீங்கிப் புதிய இடங்கள் பலவற்றுக்கும் சென்று சொல்லொணாத் துன்பம் உற்றனர். அவர்களைப்போல நீயும், உற்றார் உறவினரை விட்டுப் புதிய இடத்திற்கு வந்தனை; ஆயினும் நீ இவர்களைப்போல மனைவியை விட்டு பிரியவில்லை என்பதை நினைவிற்கொள். நீ அந்த முறையில் பாக்கியவானே ஆவாய், நீ இனி வருந்தாதே; பாண்டியனது கூடல் நகரத்தில் தங்கி வாணிகம் செய்து வாழ்வு பெறுவாயாக, என்று வாழ்த்தினார்.

மாடலன் வாழ்த்துரை

இவ்வாறு கோவலன் மாதவர் ஆசிரமத்தில் தங்கி இருக்கையில் மாடலன் என்ற மறையவன் அங்கு வந்தான். அவன் பொதிய மலையை வலம் கொண்டு குமரித்துறையில் நீராடி மதுரையை அடைந்தான். கோவலன் அவனை வணங்கினான்: அம்மறையவன் பூம்புகாரைச் சேர்ந்தவன். அம் மறையவன் கோவலனை ஆசீர்வதித்தான்; ஆசீர்வதித்து அவனை அன்புடன் நோக்கி, “உனக்கு மாதவியிடம் பிறந்த பெண் குழந்தைக்கு மணிமேகலா தெய்வத்தின் பெயரை இட்ட அறிஞனே, நீ வாழ்வாயாக!” நீ இப்பிறவியில் செய்த அரிய செயல்கள் பல. மணிமேகலைக்குப் பெயர் வைத்துக் கொண்டாடிய அன்று மறையவர்க்குப் பொன் தானம் செய்தனை. அம்மறையவருள் ஒருவன் முதியவன். அவன் தள்ளாடிச் சென்று கொண்டிருந்தான்; அப்பொழுது மதயானை ஒன்று பாய்ந்து வந்து அவனைத் தூக்கிச் சென்றது மறையவன் அலறினான். நீ அவனது ஆபத்தான நிலையைக் கண்டு, உடனே பாய்ந்து யானையை அடக்கி அதன் மீது ஏறி அமர்ந்தனை, அமர்ந்து மறையவனை யானைக் கையிலிருந்து காப்பாற்றினை, அச்செயல் செயற்கரும் செயல் ஆகும்.

“மற்றொரு நாள் கீழ் மகன் ஒருவன் பத்தினி ஒருத்தி மீது பொய்ப்பழி கூறினான். அதனை நம்பிய அவள் கணவன் அவளை வெறுத்தான். இங்ஙனம் கணவன்-மனைவியர்க்குள் குழப்பம் உண்டாக்கிய அக்கீழ் மகனை ஒரு பூதம் பற்றித் துன்புறுத்தத் தொடங்கியது. அது கண்ட நீ அவன் படும் துன்ப நிலையைக் காணப்பொறாமல், அப் பூதத்தை நோக்கி ‘என்னைப் பற்றிக் கொண்டு அவனை விடுக’ என்றனை. அப்பொழுது அப்பூதம் கோவல, நீ நல்லவன். இவன் தீயவன். இவனைப்புடைத்து உண்பதே நல்லது. நீ கவலைப்படாதே’ என்று கூறிக் கொன்றது. அது கண்ட நீ மனம் வருந்திச் சென்று அக்கொடியவனுடைய உற்றார் உறவினர்க்கு வேண்டிய அளவு பொருள் ஈந்து பல ஆண்டுகள் காப்பாற்றினை.

“நான் அறிந்த அளவில், நீ இப் பிறவியில் நல்லறமே செய்தனை. அங்ஙனம் இருந்தும், நீ இவ்வாறு மனைவியுடன் வந்து துன்புறுவதற்கு முற்பிறப்பில் செய்த தீவினையே காரணமாக இருத்தல் வேண்டும்,” என்றான்.

கோவலன் கண்ட கனவு

கோவலன் அவனை நோக்கி, “மறையவனே, இன்று வைகறையில் ஒரு கனவு கண்டேன். ஆதலின் விரைந்து பலிக்கக்கூடும். இந்நகரத்தில் ஒரு கீழ் மகனால் எனது கூறை கொள்ளப்பட்டது; கண்ணகி நடுங்கித் துயர் உற்றாள்; நான் கிடா மீது ஏறினேன்; என் காதலியுடன் பற்றற்றோர் பெறும் பேற்றைப் பெற்றேன். மாதவி மணிமேகலையைப் புத்தபகவானிடம் ஒப்புவித்தாள். இந் நிகழ்ச்சிகள் பலிக்கக்கூடும்” என்றான்.

மாதரி இல்லம்

அப்பொழுது கவுந்தியடிகளும் மறையவனும், “நீங்கள் இருவரும் தவசிகள் இருக்கும் இடத்தில் இருத்தல் நன்றன்று? நகருக்குட் புகுந்து தங்குதலே நல்லது” என்றனர். அவ்வமயம் அங்கு மாதரி என்ற இடைக்குல முதியாள் வந்தாள். வந்து கவுந்தி அடிகளைப் பணிந்தாள். உடனே ‘அடிகள் அவளை அன்புடன் நோக்கி, “நீ குற்றமற்ற முதியவள் உன்னிடம் என் மக்கள் அனைய இவ்விருவரையும் ஒப்படைக்கின்றேன். இவர்கள் பூம்புகார் வணிகப் பெருமக்கள் மரபினர். ஊழ்வலியால் இங்கு வாணிகம் செய்து பிழைக்க வந்துளர். இரண்டொரு நாள் வரை நின் பாதுகாவலில் இருப்பர்; பின்னர் வேறு இடம் பார்த்துச் செல்வர். அதுவரை இவ்விளை யாளைப் பாதுகாத்தல் நினது கடமையாகும்,” என்றார். மாதரி அதற்கு இசைந்து கோவலனையும் கண்ணகியையும் அழைத்துச் சென்றாள்.

பிரியா விடை

மறுநாள் கண்ணகி தன் கையால் புதிய மட் கலங்களில் சமையல் செய்தாள்; அன்று கோவவன் மிக்க மகிழ்ச்சியுடன் உண்டான்; சிறந்த பத்தினியாகிய அவளை மனம் வருந்தவிட்டு மாதவியுடன் வாழ்ந்ததை எண்ணி வருந்தினான்; வருந்தி, அவளது அன்பிற்கு உள்ளம் உருகி,


“குடிமுதல் சுற்றமும் குற்றினை யோரும்
அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி
நாணமும் மடனும் நல்லோர் ஏத்தும்
பேணிய கற்பும் பெருந்துணை யாக
என்னோடு போந்தீங்கு என்துயர் சளைந்த
பொன்னே!கொடியே! புனைபூங் கோதாய்!
நாணின் பாவாய்! நீள் நில விளக்கே!
கற்பின் கொழுந்தே; பொற்பின் செல்வி!"

என்று அவளைப் பலவாறு பாராட்டினான்; பின்னர் அவளது சிலம்புகளில் ஒன்றைப் பெற்று, அவளிடம் பிரியாவிடை பெற்றுச் சென்றான்.